Home Historical Novel Mannan Magal Part 2 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

82
0
Mannan Magal part 2 Ch 18 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 18 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 போவது என் உயிர்

Mannan Magal Part 2 Ch 18 | Mannan Magal | TamilNovel.in

இரவின் மூன்றாவது ஜாமத்தின் ஆரம்பத்திலே பிறைச்சந்திரனும் மறைந்துவிட்டதால் ஏற்பட்ட பயங்கர இருளிலே, அந்தத் தீப்பந்தம் மட்டும் ஏதோ மந்திரத்தால் உந்தப்பட்ட பெரிய கொள்ளிவாய்ப் பிசாசைப்போல மெள்ள மெள்ள ஊர்ந்து, காட்டின் முகப்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தத்துக்குப் பயந்துதானோ அல்லது சற்று முன்பாகக் கரிகாலன் தன் வீரர்களுக்கு இட்ட ஆணையைக் கேட்டு அஞ்சியோ தெரியாது, இரவில் சப்திக்கும் ஆந்தைகளும் மரப்பல்லிகளும் கூடத் தங்கள் குரல்களைக் காட்டாமல் ஒதுங்கிக் கிடந்ததால், எங்கும் கிலியைத் தரக்கூடிய பேரமைதி நிலவிக் கிடந்தது. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு மெல்ல மெல்லக் கிளம்பிய காலடிச் சப்தத்தை, காட்டை அணைத்து ஓடிய இந்திராவதிப் பிரவாகத்தின் சலசலப்புச் சத்தம் அழுத்திவிடவே, காட்டுக்குச் சற்றுத் தொலைவிலேயிருந்த படைகளுக்கு மரங்களுக்கிடையே பூரண அமைதி நிலவியிருந்ததாகத் தோன்றியது. ஆகவே, காவலுக்காக இரவில் நடமாடிய போர் வீரர்கள் கூட அந்தப் பிராந்தியத்தில் தலைகாட்டாமல் எட்டவே போய்க் கொண்டிருந்தார்கள்.

ஆராய்ச்சித் திறனை அளவற்றுப் பெற்றிருந்த கரிகாலன் இந்த நிலையை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு ஏற்கெனவே வந்திருந்ததால், மற்ற வீரர்களின் தலையீடு இருக்குமென்ற பயம் சிறிதும் இல்லாமலே தன் திட்டத்தை வகுத்திருந்தான். உணவுப் பொருள்களைக் காட்டின் முகப்பில் பார்த்த விநாடியிலேயே, கோட்டையிலுள்ள படைகளுக்கு அவ்வப்பொழுது தானியம் அனுப்பப்படுகிறதென்பதையும் அது காரண மாகவே முற்றுகையைப் பற்றிக் கோட்டையிலுள்ளவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதையும் தீர்மானித்துக் கொண்ட கரிகாலன், சோழர்களுடைய பெரும் படைகளுக்கிடையே உணவுப் பொருள்களை எடுத்துச் செல்பவன் சாமானிய மனிதனாக இருக்கமாட்டான் என்பதையும் நிச்சயம் செய்துகொண்டான். கோட்டையின் அமைப்பையும் காட்டின் இருப்பிடத்தையும் கண்டதும், அதன் மூலமாக உணவுப் பொருள்களைக் கொண்டு வருவது எத்தனை சுலபம், முற்றுகையிட்டுள்ள படைகளின் கண்களில் மண்ணைத் தூவுவது எத்தனை எளிது என்பதையும் கண்டுகொண்டான் கரிகாலன். காட்டை அடுத்து ஓடும் இந்திராவதியின் பிரவாகச் சத்தம் காட்டில் ஏற்படும் மனிதர்களின் நடமாட்ட சத்தத்தையும் அடக்கி விடும் என்பதையும், பந்தங்கள் ஏதாவது அங்கு உலாவினாலும் எட்ட இருக்கும் படைகளுக்கு ஏதோ காவல் வீரர்களின் நடமாட்டம் அங்கு ஏற்பட்டிருப்பதாகப் புலப் படுமேயொழிய வேறு சந்தேகம் ஏற்படக் காரணமில்லை யென்பதையும் கரிகாலன் நன்றாகப் புரிந்து கொண்டான். படைகளின் இந்த அசிரத்தைக்கு இடையே புகக்கூடிய எதிரி பெரும் சாமர்த்தியமுள்ளவனாகத்தான் இருக்க முடியுமென்பதையும் பௌத்த மடாலயச் சீடன் திட்டமாகத் தெரிந்துகொண்டிருந்ததால், அத்தகைய பேர் வழியை ரகசியமாக வளைத்து மர்மத்தை அறிவதால் பெரும் பலனுண்டு என்ற முடிவுக்கு வந்து, அரையன் ராஜராஜனுக்கோ, இதர படைத் தலைவர்களுக்கோ தெரியாமலேயே காரியத்தை முடிக்க முனைந்தான்.

அவன் வீரர்களுக்கு இட்ட உத்தரவு திட்டமாயிருந்தது. “நடுவே தெரியும் ஒற்றையடிப் பாதைக்குப் பக்கத்திலுள்ள மரங்களின் கிளைகளில் மரத்தோடு மரமாக ஒட்டிப் படுத்திருங்கள். நான் குரல் கொடுத்தால் வருகிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நோக்கி வேல்களை எறிய ஆயத்தமாக இருங்கள்” என்று உத்தரவிட்ட கரிகாலன், அவர்கள் பதுங்கிய பின்பு தானும் ஒரு மரத்தடிக்குப் பின்பாக மறைந்து நின்றுகொண்டான். காட்டின் முகப்பை நோக்கி ஊர்ந்து வந்த பந்தத்தை அந்த நிலையிலிருந்து அவன் நன்றாகக் கவனிக்க முடிந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் மெள்ள மெள்ள வந்துகொண்டிருந்தவர்களின் காலடிச் சத்தத்திலிருந்து, அவர்கள் மொத்தம் நாலைந்து பேருக்கு மேல் இருக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தான். கரிகாலன் அப்படி நாலைந்து பேரே வருவதானால் அவர்கள் முன்னால் வந்து நிலைமையை அராய்பவர் களாகத்தான் இருக்க வேண்டுமென்றும், அவர்களுக்குப் பின்னால் உணவுப் பொருள்களைச் சுமந்து வருபவர்கள் வேறு இருக்க வேண்டுமென்றும் கரிகாலன் தீர்மானித் தான். வருவது வேவுப் படையாயிருந்தால், அதைச் சிறிது சத்தம் செய்யவிட்டாலும் பின்னாலிருப்பவர்கள் எச்சரிக்கையடைந்து ஓடிவிடுவார்களென்பதை உணர்ந்த கரிகாலன், அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்காமலிருக்கத் தனது வில்லில் அம்பைப் பொருத்தி நாணை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

பந்தம் மெள்ள மெள்ள நகர்ந்து கரிகாலன் மறைந்திருந்த மரத்தடிக்கருகில் வந்ததும் சற்று நின்றது. பந்தத்தை ஏந்தி வந்தவன் முகத்தை நன்றாக மூடி முக்காடிட்டிருந்ததால் பந்தத்தின் பிரகாசத்திலும் அவன் முகத்தைப் பார்க்கக் கரிகாலனுக்கு வாய்ப்பில்லாமல் போனாலும், அவன் நின்ற தோரணையும், தலையை ஒரு முறை ஆட்டி எதிரேயிருந்த கோட்டையை நோக்கிய மாதிரியும், அவனை எங்கோ பார்த்திருக்கும் உணர்ச்சியை ஊட்டின. இருந்தாலும் அதைப்பற்றி அதிகமாக அக்கறை செலுத்தாத கரிகாலன், வந்திருந்தவனின் நடவடிக்கையை மட்டும் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு தன் மறைவிடத்திலேயே நின்றான். பந்தத்தை ஏந்தி வந்தவனும், சிறிது நேரம் கோட்டையையும் தூரத்தே இருந்த சோழர்கள் படையையும் ஒரு விநாடி நோக்கிவிட்டுப் பின்னால் இருந்தவர்களுக்கு, ‘அபாயமில்லை வரலாம்’ என்பதற்கறி குறியாகக் கையால் சைகை செய்யச் சற்றுத் தூரத்தே காட்டுக்குள் நின்றிருந்த மற்ற நால்வரும் அவனிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

“பொதிகளை இக்கரைக்குக் கொண்டு வரலாமா?” என்று கேட்டான் ஒருவன்.

“சற்றுப் பொறு. அதோ வரும் காவல் வீரர்கள் இந்தப் பகுதியைக் கடந்து செல்லட்டும்” என்றான் பந்தத்தைக் கொண்டு வந்தவன்.

“ஏன்? அந்தக் காவற் படை போனால், இன்னொன்று வராதா?” என்று வினவினான் மூன்றாமவன்.

“முட்டாள்! அதோ பார், சோழர் பெரும் படையை. அதைச் சுற்றிக் காவல் புரிவது அவ்வளவு எளிதா? இந்த நான்கு வீரர்கள் அதில் கால்பாகத்தைச் சுற்றுவதற்குக் குறைந்தபட்சம் கால் ஜாமமாவது ஆகும். இன்னொரு காவல் கோஷ்டி இப்பொழுது வராது. சோழர் படைக் காவல் முறைகளை நான் நன்றாக அறிவேன் கலங்காதே!” என்றான் பந்தத்தைப் பிடித்திருந்தவன்.
அவன் மெல்லத்தான் பேசினான்; ஆனால் குரல் மிகப் பரிச்சயமாயிருந்தது கரிகாலனுக்கு. பந்தத்தை ஏந்தி வந்தவன் குறிப்பிட்ட நான்கு காவல் வீரர்களும் தாண்டும் வரையில்தான் கரிகாலனும் பொறுத்திருந்தான். அந்த வீரர்கள் தூரத்திலிருந்த மூலையைத் திரும்பியதும், காட்டுக்குள் திரும்ப முற்பட்டு பந்தமேந்தி திடீரென அசைவற்று நின்று, எதையோ உற்றுக் கேட்டான். பிறகு, “இங்கே யாரோ அசைந்தார்கள், யாரது?” என்று கிலியுடன் கேள்வியும் கேட்டான்.

அந்தக் கேள்வியைத் தொடர்ந்து மெள்ள ஒரு நகைப் பொலியும் கேட்கவே, பந்தத்தைப் பிடித்திருந்தவனின் பயம் பன்மடங்கு அதிகமாகப் பெருகி, “யாரது? யார் சிரிப்பது?” என்று சற்றே நடுக்கம் கொடுத்த குரலில் விசாரித்தான்.

“நான்தான்!” இருளைக் கிழித்துக்கொண்டு நிதானமாக, ஆனால் மிகத் திட்டமாக எழுந்தது கரிகாலன் குரல். மரத்தடியில் யாரோ ஒளிந்திருப்பார்களென்பது திட்டமாகத் தெரிந்ததும், அந்த ஐவர் கூட்டம் சிதறியோடப் பார்த்தது. ஆனால் கரிகாலனின் அடுத்த சொற்கள் அவர்களை ஸ்தம்பிக்கச் செய்தன. “பந்தமேந்தியவனே! ஒரு அடி நகர்ந்தாலும் பிணமாகிவிடுவாய். என் கையிலிருக்கும் வாளி உன் இதயத்துக்காகக் குறி வைக்கப்பட்டிருக்கின்றது. சுற்றிலும் மரங்களில் என் வீரர்கள் இருக்கிறார்கள். உன் சகாக்கள் மீது அவர்கள் வேல்கள் குறி பார்த்து நிற்கின்றன. உயிரின் மீது ஆசையிருந்தால் யாரும் நகர வேண்டாம். பந்தத்தைக் கீழே எறிந்து இருளில் ஓடிவிடலாம் என்றும் மனப்பால் குடிக்காதே. பந்தம் அசையுமுன்பே என் வாளியும் என் வீரர்களின் வேல்களும் உங்கள் இதயங்களில் பாய்ந்துவிடும்” என்று சொல்லிக்கொண்டே, மறை விடத்திலிருந்து நாணில் பூட்டிய வாளியுடன் வெளியே வந்தான் கரிகாலன். அடுத்த விநாடி மரத்திலிருந்த இருபது வீர்களும் அச்சிறு கூட்டத்தை வேல்களுடன் சூழ்ந்து கொண்டார்கள்.

கரிகாலன் உத்தரவுப்படி அடுத்த விநாடியில் பந்த மேந்தியின் கரத்திலிருந்த பந்தம் அகற்றப்பட்டது. தன் வீரனொருவன் பந்தத்தை உயர்த்திப் பிடிக்க, பந்த மேந்தியின் முகத்திரையை விலக்கிய கரிகாலன் ஒருகணம் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். “யார், நீயா?” என்று ஆச்சரியத்தால் இரண்டு சொற்களையும் உதிர்த்தான். அவன் எதிரே சைவத்துறவியார் நின்று கொண்டிருந்தார். சேரநாட்டு ஒற்றனான ஜெயவர்மன், மீண்டும் பழைய வேடத்தையே புனைந்திருந்தான். முதன் முதலில் கும்பகோணம் காவிரிக் கரையருகிலே கண்ட அதே கோலம். முகத்தை அலங்கரித்த பொய்த் தாடி மீசை! நெற்றியிலே பெருமளவு திருநீறு! கையிலே அதே காவிப்பை! உடலிலே காவி உடை. துறவியாரின் அந்தக் கோலம் ஒரு விநாடி பழைய நினைவுகளை, முக்கியமாகக் குடமூக்கின் கன்னிக் காவிரியாளின் கரையோரக் காட்சி களைக் கரிகாலன் கருத்திலே கிளப்பிவிட்டன. படித்துறை களில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் இன்பக் காட்சி, காவிரிப் பிரவாகத்திலே மிதந்து வந்த மலர்களின் சுந்தரத் தோற்றம் எல்லாம் அவன் கண்முன்பே எழுந்தன.

அந்தக் கனவில் ஒருவிநாடி திளைத்த கரிகாலன், சரேலென்று அந்த உணர்ச்சிகளை உதறிவிட்டு சைவத் துறவியாரை நோக்கி, “ஸ்வாமி! மீண்டும் பழைய ஆசிரமத் திற்குப் போய்விட்டீர்கள் போலிருக்கிறது. சரி அடியேன் பாசறைக்கு விஜயம் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, “முத்து! இவர்களை என் பாசறைக்குக் கொண்டு வா” என்றவன் ஏதோ யோசித்துவிட்டு, “வேண்டாம்! உன் இருப்பிடம் அருகில் தானே இருக்கிறது. அங்கேயே செல்வோம்” என்று உத்தரவிட்டு முன்னால் நடந்தான்.

காட்டுக்குச் சற்று தூரத்திலிருந்த முத்துத்தேவன் கூடாரத்தில், சைவத்துறவியாரும் கரிகாலனும் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். துறவியார் ஏதோ பேச வாயெடுத்து, “அன்று வேங்கியில் உன்னிஷ்டப்படியே நடந்தேன்…” என்று இழுத்தார்.

“என்னிஷ்டப்படி நடக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும் ஸ்வாமி?” என்று சொல்லிச் சிரித்த கரிகாலன், “துறவியாரே, இரவு ஏறிக்கொண்டிருக்கிறது. பேச நேரம் அதிகமில்லை. உணவுப் பொருளோ கோட்டைக்குள் போய்ச் சேர வேண்டும்” என்று பேச்சைச் சற்று நிறுத்தினான்.

“உணவுப் பொருளா? என்ன உணவுப் பொருள்?” என்றார் துறவியார் ஏதுமறியாதவர் போல்.

“ஸ்வாமி தாங்கள் காட்டுக்குள் சீடர்களுடன் வந்தது தவம் செய்வதற்காக அல்லவென்பதை நான் அறிவேன். ஆகவே, தாமதம் செய்யாமல் சொல்லுங்கள், ஆற்றங் கரைக்கு அக்கரையிலிருக்கும் உணவுப் பொருள்களை கோட்டைக்குள் எப்படிச் சேர்ப்பது?”

“எனக்கெப்படித் தெரியும்?”

“தெரியாமலா உணவுப் பொதிகளைக் கொண்டு வந்தீர்?”
“உணவுப் பொதிகளா? எங்கிருந்து?”

“ஒட்டர நாட்டிலிருந்து, இந்திரதத்தன் உதவியால்.”

விவரிக்க இயலாத ஆச்சரிய ரேகை துறவியாரின் முகத்தில் படர்ந்தது. அதுவும் தெரியுமா உனக்கு?” என்று வினவினார்.

“இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? மாசுணி தேசத்தை அடுத்திருப்பது ஒட்டர நாடு. அதன் மன்னன் இந்திர தத்தன் சோழர் படைகளின் தாக்குதலிலிருந்து தப்ப எதையும் செய்வான். சக்கரக் கோட்டம் எத்தனை நாள் சோழர் படைகளை இந்திராவதி நதி தீரத்தில் தடுத்து நிறுத்துமோ, அத்தனையும் அவனுக்கு லாபம்தானே! அதெல்லாம் புரிகிறது, துறவியாரே! ஆனால் நீர் எதற்காக இந்த ஆபத்தான வேலையில் புகுந்தீர் என்பதுதான் புரியவில்லை” என்றான் கரிகாலன்.

“என் கடமையை முன்னிட்டு” என்றார் துறவியார்.

“என்ன கடமை?”

“உன்னை எப்படியாவது முறியடிக்கும் கடமை.”

“என் மீது உமக்கேன் அத்தனை துவேஷம்?”

“செங்கதிர் மாலையை நீ என்னிடமிருந்து பறித்தது தான் காரணம் கரிகாலா! அதை எப்படியாவது கொண்டு வருவதாக சேரமானிடம் சபதம் செய்திருக்கிறேன். அதை நீ என்னிடம் ஒப்படைக்கும் வரை, நீ எங்கு சென்றாலும் உன்னைத் தொடருவேன். உன் படைகளை முறியடித்து நீ நாகர்கள் கையில் சிக்கும் பட்சத்தில், உன்னைச் சித்திரவதை செய்து மாலையை மீட்கத் திட்டமிட்டேன்” என்றார் துறவியார்.

கரிகாலன் துறவியாரைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். பிறகு கேட்டான், “ஜெயவர்மா! எப்படியும் அந்த மாலையை உன்னிடம் திருப்பித் தருவதாகச் சொன்னேனே, என்னிடம் நம்பிக்கையில்லையா உனக்கு?”

“உன்னை எப்படி நம்புவது? உன்னை நம்பிய வேங்கி நாட்டு மன்னன் மகளையே ஏமாற்றி, அவள் தம்பியின் நாட்டை வாங்கி எதிரியிடம் அளித்துவிட்டாயே!”

கரிகாலன் சற்று நேரம் ஏதோ சிந்தித்துவிட்டு, “சரி ஜெயவர்மா! அந்தப் பழங்கதை எதற்கு? இந்த உணவுப் பொருள்களை எப்படிக் கோட்டைக்குள் கொண்டு போகிறாய்? அதைச் சொல்” என்றான்.
“சொல்லாவிட்டால்!” என்று ஜெயவர்மன் வினவினான்.

“காட்டில் மரங்கள் நிரம்ப இருக்கின்றன. அவற்றுக்குப் பலமான கிளைகளும் உண்டு.”

“இருந்தாலென்ன?”

“நீங்கள் ஐவரும் அதில் தொங்கலாடுவீர்கள்.”

“உயிரைத்தானே கொண்டு போவாய்? கொண்டு போ, முற்றுகையை எப்படி உடைப்பாய்?”
“உங்கள் ஐந்துபேர் சவங்களைக் கோட்டை மதில் களுக்கு அருகே எறிய ஏற்பாடுகள் செய்வேன். கோட்டைப் பொந்துகளிலிருந்து கீழே பார்க்கும் வீரர்கள், உங்கள் சவங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். இனி உணவுப் பொருள்கள் வராதென்பதைக் கோட்டைத் தளபதி உணர்வான். அது அவன் உரத்தை உடைக்கும். சில நாள்களில் கோட்டையிலுள்ள மக்களின் உறுதியும் குலையும். அந்த நேரத்தில் சோழர்கள் படை கோட்டையைத் தாக்கும்” என்று தன் திட்டத்தை விவரித்தான் கரிகாலன்.

“உணவுப் பொருள்கள் உள்ளே செல்லும் முறையை நான் சொல்லிவிட்டால்?” என்று மீண்டும் வினவினான் ஜெயவர்மன்.

“முதலில் உங்கள் ஐவர் உயிரும் தப்பும்; கோட்டையி லுள்ள மக்களும் தப்புவார்கள்” என்று கூறினான் கரிகாலன்.

“எப்படி?”

கரிகாலன் தன் மாற்றுத் திட்டத்தையும் விளக்கினான். அதைக் கேட்ட ஜெயவர்மன் சொல்லவொண்ணாத ஆச்சரியத்தில் மூழ்கி, “கரிகாலா! புத்தியற்றவனே! இது நடக்கக்கூடிய காரியமா? உனக்கு வாழ்க்கை அதற்குள் ளாகக் கசந்துவிட்டதா?” என்று கூவினான்.

“உயிர் நிலையற்றது ஜெயவர்மா! ஆனால் புகழ் சாசுவதமானது. ஒன்றை விரும்புபவன் இன்னொன்றின் மீது அதிகம் பற்றுதல் வைக்கக்கூடாது” என்றான் கரிகாலன்.

அவன் துணிவைக் கண்டு வியந்த ஜெயவர்மன் மெள்ள மெள்ள உணவுப் பொருள்கள் கோட்டைக்குள் செல்லும் முறையை விளக்கினான். அடுத்த கால்ஜாமத்திற்குள் கரிகாலன் ஏற்பாடுகளை மிகத் துரிதமாகச் செய்தான். ஜெயவர்மனையும் அவன் சகாக்களையும் காவலில் வைத்தான். செங்கமலச் செல்விக்குச் சொல்லியனுப்பி, அவளை வரவழைத்து ரகசியமாகச் செய்தியை அவளுக்குச் சொன்னான்.

அவன் சொன்ன செய்தியை சிங்கத்தின் வாய்க்குள் தானாகத் தலையிடத் தீர்மானித்த அவன் உறுதியைக் கண்ட செல்வி நடுங்கினாள். தன் அழகிய கரங்களை அவன் தோள் மீது வைத்து, “இது ரொம்ப அபாய மாயிற்றே!” என்று துக்கத்தால் தழுதழுத்த குரலில் கூறினாள்.

“செல்வி! அபாயம் எங்கில்லை? மனிதனைக் குவலயத்தில் சூழ்ந்திருப்பது பூராவும் அபாயம்தானே? பயப்படாதே. நாளைக்கு மறுநாள் இரவு இதே நேரத்தில் சக்கரக் கோட்டத்தின் கதவுகள் திறக்கும். என்னை நம்பு!” என்று கூறிவிட்டு, அவள் அழகிய கன்னத்தையும் ஆதர வாக வருடிக் கொடுத்தான்.

அந்த ஸ்பரிசத்தினால் ஏற்பட்ட உணர்ச்சியால் அவள் சற்றே அசைவற்று நின்றாள். சிலையென அவள் நின்ற தன்மையையோ, உணர்ச்சியால் அவள் உள்ளத்தே ஏற்பட்ட கொந்தளிப்பையோ கவனிக்காமலே, அவன் வெளியே சென்றான்.

செல்வியும் அந்தக் கூடாரத்தின் வாயிலிலே வந்து நின்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டின் முகப்பிலிருந்து ஒரு பந்தம் இருமுறை ஆடியது! கோட்டையின் மேற்கு வாசலிலிருந்து மற்றொரு பந்தம் பதிலுக்கு இருமுறை ஆடியது. சில விநாடிகளில் காட்டு முகப்பிலிருந்த பந்தம் அணைந்தது. பிசாசுகள் போல் இருபது முப்பது பேர் கோட்டையை நோக்கி மெல்ல மெல்லச் சென்று கொண்டிருந்தனர். கரிகாலன் தன் மரணத்தையே நாடிச் செல்கிறான் என்று நன்றாகப் புரிந்துவிட்டதால், ஏக்கம் கலந்த பெருமூச்சொன்று செண்பக மொட்டையும் பழிக்கும் செங்கமலச் செல்வியின் நாசியிலிருந்து வெளி வந்தது. அவள் கமலக் கண்களில் நீர்த்துளிகள் திரண் டெழுந்து அவள் கன்னங்களில் உருண்டோடின.

“போவது அவரல்ல, என் உயிரே போகின்றது அங்கே!” என்று அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே வார்த்தைகளை உதிர்த்தாள். அவள் இதயம் சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.

Previous articleMannan Magal Part 2 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here