Home Historical Novel Mannan Magal Part 2 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

93
0
Mannan Magal part 2 Ch 19 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 19 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 பிரும்ம மாராயனின் கேள்வி

Mannan Magal Part 2 Ch 19 | Mannan Magal | TamilNovel.in

விக்ரமச் சோழியவரையனான அரையன் ராஜராஜன் படைத்தளத்தின் மேற்குக் கோடியிலே, முத்துத்தேவன் கூடாரத்தின் முகப்பிலே, சுக்குநூறாக வெடித்துக் கொண் டிருந்த இதயத்துடன், சுவர்க்கத்திலிருந்து உதிர்த்துவிட்ட அப்சரஸ் மங்கையைப் போல இணையற்ற எழிலுடன் பொழுது போவது தெரியாமலே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள் செங்கமலச் செல்வி. தன் நெஞ்சிலே நிலையாக நின்றுவிட்ட கரிகாலன் வேண்டுமென்றே மரணத்தை நாடிச் செல்கிறானே என்ற எண்ணம் அவள் உணர்ச்சிகளை உருக்கி உருக்கிக் கண்ணீராக வடித்துக் கொண்டிருந்ததால் தூரத்தே ஆங்காங்கு கூடார முகப்புகளில் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தங்கள் கூட, நீர்த்திரையிட்ட அவள் கண்களுக்கு மங்கலாகவே தெரிந்தன. சற்று நேரத்திற்கொரு முறை சென்ற காவற் படை வீரர்களின் உருவங்கள் கூட அவள் கண்களில் திரண்டு நின்ற கண்ணீர் காரணமாக அநாவசியமாக அகலப்பட்டும் நீண்டும் பல பிசாசுகளைப் போலத் தோற்ற மளித்தன. எதிரே பல கோபுரங்களுடன் எழுந்து நின்ற சக்கரக் கோட்டமும், அவள் விழிகளின் நீரிலே அலைந்து அலைந்து கலைந்தே உருக்குலைந்தே தெரிந்தது; பிரபஞ்சமே மங்கி அலைந்து உருக்குலைந்து விட்டதாகவே தோன்றியது செங்கமலச் செல்விக்கு, அந்தச் சந்தர்ப்பத்தில்.

கடைசியாக, அவன் தன்னிடம் விடைபெற்றுச் சென்ற தோரணையை நினைத்ததும், அவள் கண்ணீர் வடித்தாள். அவன் ஆணையிட்ட சமயத்தில் திடமாகக் கணீரென்று கேட்ட குரல், அவன் சென்று வெகு நேரமாகியும் அவள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் தோள் மீது அவன் கையை வைத்தபோதும், கன்னத்தை ஆசையுடன் வருடியபோதும் தன் உடலில் அதிக வேகத்தில் பாய்ந்து சென்ற இன்ப அலைகளை நினைத்து அப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தாள் அவள். அந்த ஸ்பரிச வேதனையை நினைத்ததால், அவள் உள்ளத்திலே சொல்லவொண்ணா வெட்கமும் ஏற்பட்டு, துக்கமும் இன்பமும் கலந்து அழகிய களையொன்று முகத்திலே படர்ந்தது. அந்த ஸ்பரிசம் அவளைப் பழைய நினைவுகள் பலவற்றுக்கும் இழுத்துச் செல்லவே ஏதேதோ உணர்ச்சிகளுக்கு இலக்காகிய செங்கமலச் செல்வி, பதுமை போல் முத்துத்தேவன் கூடாரத்தின் முகப்பிலேயே நின்றாள். காட்டில் கரிகாலனுக்குப் பின்புறத்தில் இணைந்து நின்று, அவனுக்குத் தான் வில்வித்தை கற்பித்தது, வெண்ணிலாவில் நீரோடைக்கருகே வெட்கத்தையெல்லாம் விட்டு, தான் அவனைத் தழுவி நின்றது ஆகியவற்றை நினைக்க நினைக்க அவள் உலகத்தின் ஸ்மரணையை அடியோடு மறந்தாள். தன்னையும் கரிகாலனையும் தவிர வேறு சிருஷ்டியே உலகத்தில் கிடையாது என்ற பிரமையிலேயே திளைத்தாள். குறுக்கே எழுந்தது நிரஞ்சனாதேவியின் எழிலுருவம்.

அன்னத்தைப் பழிக்கும் நடையுடன் நிரஞ்சனாதேவி அவன் கனவுலகத்தில் குறுக்கே நடந்து வந்தாள். சதா சாந்தத்தைப் பொழியும் அவள் அமுத விழிகள் செங்கமலச் செல்வியை நோக்கி நகைத்தன. கருத்தின் சொப்பனத்திலே எழுந்த அந்தக் கனவு மங்கையை, ‘அட பாவி! உனக் காகத்தானே அவர் உயிரைத் துறக்கக் கோட்டைக்குள் செல்கிறார்!’ என்று செங்கமலச் செல்வி மனமாரச் சபிக்கவும் செய்தாள். இந்தச் சிங்காரியை மட்டும் அவர் சந்திக்காதிருந்தால் நிச்சயம் அவர் என்னைக் காதலிப்பார். அப்படிக் காதலித்திருந்தால், இத்தனை பெரிய தியாகத்தை அவர் செய்ய வேண்டியிருக்காது. அவர் உடலில் ஓர் ஊசி பாய்வதைக்கூட நான் அநுமதிக்கமாட்டேனே! என் உயிரையே கொடுப்பேனே!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

நிரஞ்சனாதேவியைக் கரிகாலன் காதலிக்கிறானென் பதைத் தெரிந்து கொண்டிருந்த செங்கமலச் செல்விக்கு, நிரஞ்சனாதேவியின் போக்கு மட்டும் பெரும் புதிராயிருந்தது. எந்த மந்திராலோசனையிலும் வேங்கி நாட்டு இளவரசி கரிகாலனின் யோசனையை எதிர்த்தே பேசி வந்திருப்பதையும் சதா அவனிடம் வெறுப்பைக் காட்டி வந்திருப்பதையும் கண்ட செல்வி, ‘இவள் அவரை ஏன் வெறுக்கிறாள்? உண்மையாகவே வெறுக்கிறாளா? வேண்டி யவனிடம் போலி வெறுப்பைக் காட்டும் பெண்ணின் நடிப்பா அது? என்று பல கேள்விகளைக் கேட்டு, அவை எதற்கும் விடை காணாது தவித்தாள். இருந்தபோதிலும் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்திருந்தது அரையன் ராஜராஜன் மகளுக்கு. கரிகாலன் நிரஞ்சனாதேவியைக் காதலிக்கிறானென்றும், அதற்காகவே அவன் ஏதோ திட்டங்களை வகுத்துக்கொண்டு, பெரிய பெரிய ஆபத்துக் களில் தலையை நுழைத்துக் கொள்கிறானென்றும், செல்வி சந்தேகமற நம்பினாள். அன்று அவன் சக்கரக் கோட் டத்தின் கோட்டைக்குள் துணிந்து நுழைவதும்கூட, மன்னன் மகளின் நன்மையைக் கருதித்தான் என்று நினைத்தாள். சக்கரக் கோட்டத்துக்குள் கரிகாலன் நுழைவதற்கும் மன்னன் மகளின் அரசியல் அபிலாஷைகளுக்கும் சம்பந்தமிருந்ததோ இல்லையோ, அத்தகைய சம்பந்தத்தைத் தன் சித்தத்திலே சிருஷ்டித்துக் கொண்டாள் செங்கமலச் செல்வி, அன்று அந்தக் கூடாரத்தின் முகப்பிலே.
இப்படிப் பலப்பல எண்ணங்கள் உள்ளத்திலே சுழல நின்ற அந்தச் சித்தினிப் பெண், நீண்ட நேரத்துக்குப் பின் சற்றே சுய உணர்வைப் பெற்று அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்த்தாள். அரையன் ராஜராஜன் மகள் நின்றிருந்ததால் உட்காரத் தைரியமில்லாத இரண்டு காவல் வீரர்கள் மட்டும் சற்று ஒதுங்கி, பயபக்தியுடன் நின்றிருந்தார்கள். தன் கண்களில் வடியும் நீரை அவர்கள் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக வேறுபுறம் திரும்பி, கண்ணைச் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்ட செங்கமலச் செல்வி, “யாரங்கே! கூடாரத்தைக் காவல் புரியுங்கள். நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு நடக்க முற்பட்டாள்.

“அம்மணி! தங்கள் புரவியிருக்கிறதே” என்று குதிரையை அவிழ்த்துக் கொண்டு அவளருகே கொண்டு நிறுத்தினான் காவலரில் ஒருவன். அவள் புரவியில் ஏறவில்லை! சேணத்தை வாங்கிப் புரவியின் முதுகிலேயே எறிந்துவிட்டு மெள்ள நடந்து சென்றாள். அவளை அழுத்திக் கொண்டிருந்த துன்பச் சுமையை உணர்ந்து கொண்டது போல அந்தப் புரவியும் அவளுக்குப் பின்னால் மெதுவாக நடந்தது. முத்துத்தேவன் கூடாரத்தி லிருந்து அரையன் ராஜராஜன் பாசறை நீண்ட தூரமிருந் தாலும், புரவியில் ஏறாமலே சைனியங்கள் நடுவே கால் நடையாகவே சென்ற செங்கமலச் செல்வி மூன்றாம் ஜாமத்தின் முடிவில் தந்தையின் இருப்பிடத்தை அடைந்தாள்.

மூன்றாம் ஜாமம் அஸ்தமிக்கும் சமயமாயிருந்துங்கூட அரையன் ராஜராஜன் தூக்கம் சிறிதுமில்லாமல் தன் பாசறையின் வாயிலிலே சிங்கநடை போட்டுக் கொண் டிருந்தான். புரவி பின்தொடர அவனை அணுகிய செங்கமலச் செல்வி துக்கம் நிரம்பிய தன் விழிகளை அவனை நோக்கி உயர்த்தி, “இன்னும் தூங்கவில்லையா அப்பா?” என்று வினவினாள்.

அரையன் ராஜராஜனின் ஈட்டி விழிகள் அவளை ஊடுருவி நோக்கின. பிறகு கேள்வியும் உஷ்ணமாக வெளி வந்தது. “அவன் எங்கே?” என்று கேட்டான் அரையன் ராஜராஜன்.

“யாரைக் கேட்கிறீர்கள்?” என்று ஏதுமறியாதவள் போல் வினவினாள் செங்கமலச் செல்வி.

“கரிகாலனை.”

“இங்கில்லை.”

“அது தெரிகிறது. கூடாரத்தில் தானே இருக்கிறான்? கூப்பிட்டனுப்பு. அவனுடன் உடனே நான் பேச வேண்டும்.”

செங்கமலச் செல்வியின் வருத்தம் தோய்ந்த விழிகள் மீண்டும் தந்தையின் முகத்தில் நிலைத்தன. “நீங்கள் அவரைப் பார்க்க முடியாது” என்றாள் செல்வி.

“ஏன்? உபதளபதி எனக்குப் பேட்டி தரமாட்டாரோ? உன்னை நள்ளிரவில் தன் கூடாரத்துக்குக் கூப்பிட்டனுப்ப அவனுக்கு என்ன துணிச்சல்?” என்ற அரையன் ராஜராஜன் குரல், கோபத்தால் சற்று நடுங்கவும் செய்தது.

உணர்ச்சி வசப்பட்டிருந்த செங்கமலச் செல்வி இதழ் களில் துக்கம் கலந்த புன்முறுவலொன்று உதயமாயிற்று. “அவரைக் கோபித்துப் பயனில்லை அப்பா! உங்கள் காரிய மாகத்தான் அவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். அதுவும், அவர் கூடாரத்துக்கல்ல, முத்துத்தேவன் கூடாரத்தில் தான் அவர் என்னைச் சந்தித்தார்” என்று பேசிய செங்கமலச் செல்வி, வார்த்தைகளைச் சிறிது தேக்கினாள்.

மேற்கொண்டு தந்தையிடமிருந்து கேள்வி பிறக்கட்டும் என்றே அவள் தன் வார்த்தைகளுக்குத் தேக்கம் கொடுத்தாள். ஆனால், அரையன் ராஜராஜன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவள் மேற்கொண்டு பேசுவதற்காகக் கனைத்துக் கொண்டு நின்றாள். தந்தைக்குக் கோபம் வந்து விட்டால், பேச்சு அடைபட்டு விடுமென்பதை அறிந்திருந்த செங்கமலச் செல்வி மீண்டும் பேசத் துவங்கி, “அப்பா, நீங்கள் ஏதோ தவறாக நினைக்கிறீர்கள். அவர் அங்கு என்னை வரச்சொன்னது உங்கள் – நன்மையை உத்தேசித்துத்தான்” என்றாள்.

“என் நன்மையை உத்தேசித்து உன்னை வரச் சொன்னானா?” இதைச் சொன்ன அரையன் ராஜராஜன் குரலில் ஏளனம் கலந்திருந்தது.

“ஆமாம் அப்பா! உங்களைக்கூட வரச் சொல்லி யிருக்கலாம். ஆனால் காரியம் கெட்டிருக்கும். அவர் திட்டத்திற்கு நீங்கள் ஒருகாலும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டீர்கள்” என்றாள் செல்வி.

“அந்தத் திட்டம் என்னவென்றுதான் பார்ப்போமே” என்று செல்விக்கு சொல்லிய அரையன் ராஜராஜன், “டேய் யாரங்கே! கரிகாலனை நான் கூப்பிடுவதாகத் தெரிவி” என்று சற்று எட்ட நின்று காவல் புரிந்திருந்த வீரனிடம் கூறினான். அவன் புறப்பட முயன்றவுடன், அவனை, “டேய் நில்!” என்று தடுத்த செங்கலச் செல்வி, தந்தையை நோக்கி, “அவரை நீங்கள் கூப்பிட்டு அனுப்பு வதில் பயனில்லை” என்று, சற்று அழுத்தியே சொன்னாள்.

அரையன் ராஜராஜன் முகத்திலிருந்த கோபம் குறைந்து, சந்தேகமும் ஆச்சரியமும் குடிகொள்ளவே, “ஏன் பயனில்லை?” என்று வினவினான்.

“அவர்தான் இல்லையென்று சொன்னேனே.”

“பின் எங்கிருக்கிறான்?”

“அதோ அந்தக் கோட்டைக்குள்ளே!” என்று சக்கரக் கோட்டத்தின் கோட்டைக்காகக் கையைச் சுட்டிக் காட்டினாள் செங்கமலச் செல்வி.

செங்கமலச் செல்வி சித்து வித்தையில் கைதேர்ந் திருந்தால் கூட, அத்தனை திக்பிரமை ஏற்படுத்தியிருக்க முடியாது அரையன் ராஜராஜனிடம். ஏதோ திடீரென மந்திரத்தால் கட்டுப்படுத்தப் பட்டவன் போல் அந்தப் புறமோ இந்தப்புறமோ அசையும் சக்தியற்று நின்றான் அரையன் ராஜராஜன். எத்தனையோ போர்களின் போக்கைப் பிரமிக்கத்தக்க வகையில் திடீரெனத் திருப்பி, சோழப் பேரரசுக்கு வெற்றிகளை வாங்கித் தந்திருந்த அரையன் ராஜராஜன், எதிரியின் கோட்டைக்குள்ளே தன் உபதளபதியென்ன, தானே கூடப் பிரவேசிப்பது அசாத்திய மென்று கருதியிருந்தானாகையால், கரிகாலன் அதற்குள் சென்றிருக்கிறானென்பதைக் கேட்டும் அந்தச் செய்தியைச் சிறிதும் நம்பமுடியாதவனாய், “செல்வி! உனக்கென்ன பைத்தியமா? அந்தக் கோட்டைக் காவலர்கள் என்ன கரிகாலன் கையாட்களா, கோட்டையைத் திறந்து விடுவதற்கு?” என்று கேட்டான்.

“தந்தையே! இந்த நிலையில் நான் உங்களுக்கு விவரத்தைச் சொன்னால் புரிந்துகொள்வது கஷ்டம். உங்கள் படைத்தலைவர்களை வரவழையுங்கள்; கலந்து பேசுவோம்” என்றாள் செல்வி.

“நான்காம் ஜாமம் எட்டிப் பார்க்கப் போகிறதே! இப்பொழுதா படைத்தலைவர்களை அழைக்க வேண்டும்? எதற்குச் செல்வி?” என்றான் அரையன் ராஜராஜன் அப்போதும் நம்பிக்கை உதயமாகாத குரலில்.

“நாளை மறுநாளைக்கு ஏற்படவிக்கும் போரைப் பற்றி விவாதிக்க.”

“யாருடன் போர்?”

“நாகர்களுடன்!”

“ஏன், கோட்டைக் கதவுகளைத் திந்துகொண்டு போருக்கு வரப் போகிறார்களா?”

“ஆமாம்.”

“யார் சொன்னது?”

“அவர்தான்.”

“கரிகாலனா?”

“ஆமாம்.”

“அவனுக்கு எப்படித் தெரியும்?”

“கோட்டைக் கதவுகளைத் திறக்க அவர்தான் ஏற்பாடு செய்யப் போகிறார்.”

கடைசியாகச் செங்கமலச் செல்வி எறிந்த இந்த வெடியால் ஏற்பட்ட அதிர்ச்சி பலமாயிருந்ததால், அரையன் ராஜராஜன் செல்வியின் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக்கொண்டு கூடாரத்துக்குள் சென்றான். அங்கு மெள்ள விஷயத்தை விளக்கவே, விவரிக்க இயலாத பிரமிப்பால் சுயநிலையை அறவே இழந்த அரையன் ராஜராஜன்,

“என்ன செல்வி! இது ஏதோ புராணங்களில் படிக்கும் சம்பவங்களைப் போலல்லவா இருக்கிறது? இத்தனை நாளாக நமது காவலையும் கடந்து கோட்டைக்கு உணவுப் பொருள்கள் செல்கின்றதா? அதைக் கரிகாலன் கண்டு பிடித்தானா? கண்டுபிடித்துவிட்டு, அவர்களைச் சிறையும். வைத்துவிட்டு, அவர்கள் வேஷத்தில் தன் வீரர்களுடன் இவன் கோட்டைக்குள் போயிருக்கிறானா” என்று ஆச்சரியத்தால் வார்த்தைகள் கூட ஓரிரு இடங்களில் தடுமாறப் பேசினான்.

“இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது அப்பா. அவரை உங்களுக்குத் தெரியாதா? அவர் பார்வையே தனிப் பார்வை. இந்திராவதியின் மேல்திசைக் காட்டுக்கருகில் காவல் குறைவாயிருந்ததை ஆரம்பம் முதல் அவர் விரும்பவில்லை. தானியங்கள் சிந்திக் கிடந்தது சதா எதையும் துழாவும் அவர் கண்களுக்குப் பட்டிருக்கிறது. அவருடைய துணிவைப் பற்றி….” என்ற தன் மகளின் பேச்சை இடைமறித்த அரையன் ராஜராஜன், “அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை மகளே! ஆனால் இந்தத் துணிகர வேலையைச் செய்யும் முன்பு, அவன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே” என்றான்.

செல்வி கூடாரத்துக்குள்ளிருந்த பஞ்சணையில் உட்கார்ந்துகொண்டு, ஆயாசம் கலந்த பெருமூச்சொன்றை விட்டாள். “உங்களிடம் சொன்னால் நீங்கள் இந்த ஏற்பாட் டிற்கு ஒப்புக்கொள்ள மாட்டீர்களென்று அவருக்குத் தெரியும்” என்று சொன்னாள்.

அரையன் ராஜராஜன் புத்தி தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்ததால், அவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் நீண்ட நேரம் கூடாரத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அடுத்த நாளைக்கு மறுநாள் இரவு ஏற்படப் போகும் போரைப் பற்றித் தீவிரமாகச் சிந்தனையில் இறங்கியிருந்த படைத்தலைவன், கூடாரத்தின் சூழ்நிலையை அறவே மறந்தான். சக்கரக் கோட்டத்தின் மூன்று பெரிய வாயில்களைச் சமாளிக்கப் படைகளை எப்படி நிறுத்த வேண்டும் என்று யோசித்துக் கொண்டே, “முதலில் நமது யானைப் படை.” என்று சற்று இரைந்தே திட்டம் போட்டான். அவன் சிந்தனையைச் செங்கமலச் செல்வியின் சொற்கள் கலைத்தன. “யானைப்படை முதலில் கூடாது அப்பா!” என்றாள் செல்வி.

யோசனை அறுந்ததால், சட்டென்று அவளை நோக்கித் திரும்பிய அரையன் ராஜராஜன், “ஏன் கூடாது?” என்று வினவினான்.

“யானைப்படையைக் கடைசிக் கட்டத்தில் நிறுத்தச் சொன்னார்” என்றாள் செல்வி.

“யார் கரிகாலனா?”

“ஆம். யானைப்படை முகப்பிலிருந்து கோட்டைக் கதவுகளைத் தகர்க்கலாம். கோட்டைக் கதவுகளைத் தாமே திறந்துவிடுவதால், அவற்றை முகப்பில் நிறுத்திப் பயனில்லையாம். தெற்கு வாசலில் உங்கள் தலைமையிலும், கிழக்கு வாசலில் பிரம்ம மாராயர் தலைமையிலும் வேகமாக எதிரிகளைத் தாக்கவல்ல குதிரைப் படைகளை நிறுத்திக் கொண்டால் போதுமாம். மேற்கு வாசலில் காலாட்படைகளும், ரதங்களும் நிற்கட்டுமென்றார்.”

அணிவகுப்பையும் அவனே கூறிவிட்டானா?”

அரையன் ராஜராஜனைத் தவிர வேறு ஒரு படைத் தலைவனானால் இந்த ஏற்பாடுகளும் திட்டமும் அவனைக் கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கும். ஆனால், அறிவாளியான அரையன் ராஜராஜன் சிந்தனையிலே கரிகாலன் புத்தி தெளிவையும் திறமையையும் பற்றிய வியப்பே மேலோங்கி நின்றது. அத்துடன், கரிகாலன் மேற்கொண்டிருக்கும் மகத்தான தியாகமும் அவன் உள்ளத்தை உருக்கிக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்துடன், இத்தனையும் செய்பவன் தன் வளர்ப்புப் பிள்ளை என்பதால் சற்றே பெருமிதமும் கலந்துகொண்டதும், அந்தப் பெருமிதம் காரணமாகவும் கரிகாலனிடம் அவனுக்கு இயற்கையாயுள்ள வாஞ்சை காரணமாகவும், பெருந்தன்மையான வார்த்தைகள் அரையன் ராஜராஜ னிடமிருந்து வெளிவந்தன. “மகளே! கரிகாலன் திட்டப்படியே இந்தப் போரை நடத்துகிறேன். அவன் உயிருடன் கோட்டையிலிருந்து நம்மிடம் வந்து சேர ஆண்டவன் அருள் புரியட்டும்” என்றான் செல்வியை நோக்கி. அவள் இஷ்டப்படி, படைத்தலைவர்களைச் சில விநாடியில் தன் கூடாரத்தில் கூட்டி, துரிதமாக மந்திராலோசனையிலும் இறங்கினான்.

கரிகாலன் செய்கையையும் திட்டத்தையும் கேட்ட படைத்தலைவர்கள், முதலில் திக்பிரமையடைந்தார்கள். பிறகு பதறிப் போனார்கள். “இதென்ன பைத்தியக்காரத் தனம்” என்று பிரும்ம மாராயர், தமது பெருங்குரலில் கூறினார்.

“பைத்தியக்காரத்தனமல்ல பிரும்ம மாராயரே! பெரும் யுத்த தந்திரம்” என்று அரையன் ராஜராஜன், தன் வளர்ப்பு மகனுக்காகப் பரிந்து பேசினான்.

“அவன் அகப்பட்டுக் கொண்டு உயிரை விட்டால்?” என்று இடிபோல் கர்ஜித்தார் பிரும்ம மாராயர்.

“பெரும் தியாகம்!” என்றான் அரையன் ராஜராஜன் அழுத்தமான குரலில். அத்துடன் சொன்னான், கரிகாலனை உமக்குத் தெரியும் பிரும்ம மாராயரே, அவன் எத்தனையோ சங்கடங்களில் சிக்கிக்கொண்டு தப்பியிருக்கிறான்.”

“அத்தனையும் பொய் சொல்லி.”

அந்தப் பொய்யை இங்கும் சொல்லலாம்.”
“பலிக்காது. இவன் சிக்கிக்கொள்வது நிச்சயம். கோட்டைக் காவலருக்கு முந்தி வந்தவனை அடையாளம் தெரியாதா?”

“தெரியும்.”

“தெரிந்தால் இவன் மீது சந்தேகப்பட மாட்டானா?”

பிரும்ம மாராயரின் கேள்வி நியாயமாகவே பட்டது அரையன் ராஜராஜனுக்கு. அது நியாயமானதுதானென்பது கோட்டைக்குள்ளும் நிரூபணமாகிக் கொண்டிருந்தது. கரிகாலன் பொதி மூட்டைகளுடன் கோட்டைக்குள் நுழைந்ததுமே, கோட்டையின் மேல்திசைக் காவலன் அவன்மீது சந்தேகம் கொண்டு, அவன் முக்காட்டைத் தன் ஈட்டியால் விலக்கினான். உள்ளிருந்த முகத்தைக் கண்டதும், கோபமும் வியப்பும் மேலிட்டவனாய், “யார் நீ? ஜெயவர்மன் எங்கே?” என்று கேட்டான். கரிகாலன் பதில் சொல்வதற்குள், துரிதமாக நிகழ்ச்சிகள் நடந்தேறின. “இதில் ஏதோ சூது இருக்கிறது” என்று கூறிக்கொண்டே காவலன், “டேய், இவனைச் சிறையிலிடுங்கள்; காலையில் கோட்டைத் தளபதியிடம் கொண்டு போவோம்” என்று தன் வீரர்களை நோக்கி உத்தரவும் இட்டான். அடுத்த விநாடி சுமார் இருபது வீரர்கள் கரிகாலனை வாளும் கையுமாகச் சூழ்ந்துகொண்டார்கள்.

Previous articleMannan Magal Part 2 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here