Home Historical Novel Mannan Magal Part 2 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

78
0
Mannan Magal part 2 Ch 2 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 2 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 ஆறு சுவர்கள்

Mannan Magal Part 2 Ch 2 | Mannan Magal | TamilNovel.in

சோழப் பேரரசின் பிரதான படைத்தலைவனான அரையன் ராஜராஜனுடைய போர்த் திட்டத்துக்குப் பழுது சொல்வதே பெரும் பிழை. அப்படிப் பழுது சொன்னது மல்லாமல், அதற்கு மாற்றுத் திட்டமொன்று சொல்ல முன்வருவதென்றால் அது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். அந்த மாற்றுத் திட்டமும் ஏற்கெனவே அரையன் ராஜராஜன் செய்துள்ள சகல போர் ஏற்பாடுகளையும் தவிடு பொடியாக்கக் கூடிய வகையில் அமைந்திருந்த தென்றால், அதை மற்றத் தலைவர்கள் எப்படித்தான் சகிக்க முடியும்? ஆகவே அவர்களில் பலர் வீராவேசத் துடன் சபையில் எழுந்ததிலோ, கரிகாலனை ஒழித்துவிடக் கத்திகளை உருவியதிலோ விந்தை என்ன இருக்கிறது?

உயிருக்கே ஆபத்து நேரக்கூடிய அந்தப் பயங்கரமான சந்தர்ப்பத்தில் கரிகாலனைத் தவிர வேறு ஒருவனாயிருந்தால் அடியோடு நடுநடுங்கி மாற்றுத் திட்டம் சொன்னது பிசகென்று மன்னிப்புக் கேட்டிருப்பான். அல்லது தன் திட்டத்தில் தானே ஏதாவது குறைகளைக் கண்டுபிடித்து உயிர் பிழைக்க வழி தேடியிருப்பான். ஆனால் சூடாமணி விஹாரத்திலிருந்து புறப்பட்ட நாளாய்ப் பலமுறை உயிரைப் பணயம் வைத்த கரிகாலன் திடநெஞ்சு, இரண்டு வகைகளையும் கடைப்பிடிக்க மறுத்ததால், அவன் இருந்த இடத்தை விட்டுச் சிறிதும் நகராமலும், படைத்தலைவர்களின் உருவிய வாள்களையோ, உரத்த குரல்களையோ, உக்கிர விழிகளையோ, லட்சியம் செய்யாமலும் நின்றான். அவர்கள் ஆத்திரத்தைக் கண்ட அவன் கடை இதழ்களில், இளநகையொன்றும் அரும்பி நின்றது.
கரிகாலனுடைய நெஞ்சுறுதியையும், அத்தனை படைத் தலைவர்களின் எதிர்ப்பையும், அவன் பொருட்படுத்தாமல், நின்ற தோரணையையும் கண்ட வந்தியத்தேவர், அத்தகைய வாலிபனை இழப்பது சரியல்லவென்ற நோக்கத்தாலும், அவனிடம் உண்டான பெருங்கருணையாலும் குறுக்கிட்டு, “ஒரு வாலிபனை வெட்டத் தமிழ் நாட்டின் வாள்கள் இத்தனை தேவையா?” என்று மிக அடக்கமாக வினவினார். ஆனால் வந்தியத்தேவரின் அடக்கம் எத்தன்மையதென்பதை அந்தப் படைத்தலை வர்கள் அத்தனைபேரும் அறிந்திருந்தார்கள். அடக்கமும் குழைவும் கலந்து இன்பமாக ஒலிக்கும் வந்தியத்தேவரின் குரலில், எப்பொழுதும் ஊடுருவி நிற்கும் கண்டிப்பும் கட்டளையிடும் தோரணையும் அந்தச் சந்தர்ப்பத்திலும் நிறைந்திருந்ததைக் கண்ட படைத்தலைவர்கள் ஓரளவு அடங்கினாலும், அவர்கள் கோபம் முழுவதும் தணியாத தால், சிறிது முணுமுணுப்பு சபையில் கேட்கத்தான் செய்தது. தேவரின் கேள்வி அவர்கள் வாள்களை உறை களில் நுழையச் செய்ததேயொழியக் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளங்களுக்கு எந்தவிதச் சாந்தியையும் அளிக்காததால், அவர்கள் கண்கள் அரையன் ராஜராஜனை நோக்கித் திரும்பின.

அரையன் ராஜராஜன் முகத்தில் எந்தவித உணர்ச்சியு மில்லை. அந்தச் சபையில் எந்தவிதக் குழப்பமும் நடக்காதது போலவே உட்கார்ந்திருந்தான் அவன். பிரும்ம மாராயனே அந்த அமைதியைக் கலைத்து, “தேவரே! அவன் சொன்னதைச் சரியாகக் காதில் வாங்கிக்கொண் டீர்களா?” என்று மிகக் கடுமையாகக் கேட்டான்.

“என் காதுக்கு இதுவரை ஏதும் பழுதில்லை” என்றார் வந்தியத்தேவர்.

“அப்படியானால் அவன் மாற்றுத் திட்டத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? அவன் திட்டப்படி வேங்கியுடன் போரை நிறுத்திவிட வேண்டியதுதானா?” என்று மீண்டும் வினவினான் பிரும்ம மாராயன்.

பிரும்ம மாராயர் ஆத்திரத்தையோ, கொலையை விரும்பித் துடித்த கண்களையோ சிறிதும் லட்சியம் செய்யாத கரிகாலனே அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கி, “பிரும்ம மாராயரே! வேங்கியுடன் போரை நான் அடியோடு நிறுத்தச் சொல்லவில்லையே. சிறிது காலத்துக்குத்தானே நிறுத்தச் சொன்னேன்” என்றான்.

இந்தச் சமயத்தில் குறுக்கிட்ட வந்தியத்தேவர், “கரிகாலா, இப்பொழுது ஜெயசிம்மனுடன் நாம் போரை நிறுத்த முடியாது. போர் துவக்க அரசர் ஆணையிட்டு விட்டார். அந்த ஆணையைப் பெற்றுத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் விஸ்தரிப்பு வேங்கிப் போரைத் துவங்குவதைப் பொறுத் திருக்கிறது. அதற்கான சகல ஏற்பாடுகளையும் சோழப் பேரரசின் பிரதானப் படைத்தலைவர், பல போர்களில் வெற்றி வாகை சூடிய விக்ரமச் சோழியவரையனான அரையன் ராஜராஜன் செய்து முடித்துவிட்டார். இப்போது நாம் போரை எப்படி நிறுத்த முடியும்?” என்று கேட்டார்.

“தேவரே! போரை நடத்துவதென்று முடிவு செய்து விட்டால், இந்த மந்திராலோசனையே தேவையில்லையே. நேராகப் படைகளைச் செலுத்தப் படைத்தலைவர்களுக்கு உத்தரவிட வேண்டியதுதானே?” என்றான் கரிகாலன்.

“மந்திராலோசனை சம்பிரதாயம்” என்று தொடங்கிய பிரும்ம மாராயனை, இடையில் வெட்டிய கரிகாலன், “கவைக்குதவாத சம்பிரதாயத்தைக் களைந்தெறிவது விவேகமல்லவா?” என்று கேட்டான்.

“சம்பிரதாயத்தைக் களைந்தெறிவதா?” என்று வியப்புடன் வினவினான் பிரும்ம மாரயான்.

“அநுபவத்திலிருந்து சம்பிரதாயம் ஏற்படுகிறது. அது சந்தர்ப்பத்துக்கு ஏற்று வரவில்லையென்றால் களைந்தெறிவதே மேல். காரியத்துக்கு உதவாத சம்பிரதாயம் அரிசியற்ற பதர் போன்றது; முளை விடாது; பலனும் அளிக்காது” என்றான் கரிகாலன்.

“உண்மைதான் கரிகாலா! சம்பிரதாயத்தை அனுஷ்டிப் பதில் பலன் இருக்கிறது. அதனால்தான் மந்திராலோசனை சபையைக் கூட்டினோம். அதில் அரசர் இட்ட உத்தரவை நாம் எப்படி மாற்ற முடியும்?” என்றார் வந்தியத்தேவர்.

“நாம் மாற்ற முடியாதுதான். அரசரே மாற்றலா மல்லவா? மந்திராலோசனை சபையில் ஏற்படும் முடிவுகளை ஏற்பது தமிழ்நாட்டு மன்னர் மரபின் வழக்கம் தானே?” என்று கரிகாலன் கேட்டான்.

“வழக்கம்தான் கரிகாலா! ஆனால் இதோ பார் ஐயாயிரம் யானைப் படைகள், பதினாயிரம் குதிரைப் படைகள், இருபதினாயிரம் காலாட் படைகள் போருக்குச் சித்தமாக நிற்கின்றன. நமது கப்பற் படையோ வங்கக் கடலில் உலாவிக் கொண்டிருக்கிறது. படைகளை வேங்கி மீது நடத்தச் சொல்லி அரசர் உத்தரவு கிடைத்துவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், வேங்கியுடன் போர் வேண்டாமென்றால் அரசர் சம்மதிப்பாரா?”,

“காரணம் காட்டினால் ஏன் சம்மதிக்கமாட்டார்?”

“சொல்கிறேன் கேள். நீங்களும் கேளுங்கள்” என்று கரிகாலனையும் படைத்தலைவர்களையும் நோக்கி உரைத்த வந்தியத்தேவர், இராஜேந்திர சோழ தேவனது பெரும் திட்டத்தை மேலும் விளக்கலானார்: “வேங்கியை ஒடுக்க இராஜேந்திர சோழதேவர் இப்பொழுது முற்படும் காரணம் தன் மருமகனான ராஜராஜ நரேந்திரனின் அரியணையைத் திடப்படுத்துவதற்காக அல்ல; தென்னவர் பெருமையை வடநாட்டிலும் நிலைநிறுத்த இப்பொழுது வேங்கியுடன் துவக்கப்படும் போர் பின்னால், சிறுகச் சிறுக வடக்கேயும் பரவி, பகீரதன் கொண்டுவந்த அந்தக் கங்கா நதிக்கரைக்கும் செல்லும். தமிழர் கொடி இன்னும் சில வருஷங்களில் கங்கைக் கரையில் பறக்கும். அந்தக் கங்கையின் நீரால் இராஜேந்திர சோழதேவர் மகுடாபிஷேகம் செய்துகொள்வார். அந்த வெற்றியைச் சம்பாதிக்க உறுதி கொண்டுள்ள அரசர், சோழ மண்டலத்திலுள்ள ஓர் ஊருக்கு ஏற்கெனவே கங்கை கோண்ட சோழபுரம் என்ற பெயரையும் சூட்டிவிட்டார். அவர் உறுதியை யாரும் குலைக்க முடியாது. அவர் ஆணைப்படி மாபெரும் நிலப்படை இங்கு அரையன் ராஜராஜன் தலைமையில் நிற்கிறது. பெரும் கடற்படை கிருஷ்ணா நதியின் முகத் துவாரத்திலிருந்து சற்றுத் தள்ளி உலாவுகிறது. கப்பற் படை கடல் வழியாகவும் தரைப்படை கரையோரமாகவும் சென்று இரு கரங்களைப் போல் வங்கத்தின் மென்னியைப் பிடிக்கும். இப்படித் திட்டமிட்டிருக்கிறார் மன்னர்.”

வந்தியத்தேவர் பேசுவதை ஏதோ மந்திரத்தைக் கேட்கும் சர்ப்பங்கள் போல் உணர்ச்சி பொங்கக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் படைத்தலைவர்களின் முகங்களில் போர் வெறி நிரம்பி நின்றது. ஆனால் அந்தத் திட்டத்தைக் கேட்கக் கேட்கக் கரிகாலன் முகத்தில் மட்டும் பலமான சிந்தனைக்குறி எழுந்து நின்றது. எந்தத் திட்டமும் நிறை வேற வேண்டுமானால் போர்த்தந்திரமும் அவசிய மென்பதை உணர்ந்த படைத்தலைவர்களின் உணர்ச்சிக் கடலில் மீண்டும் கொந்தளிப்பை உண்டுபண்ணப் பேச முற்பட்டு, “தேவரே, திட்டம் மகத்தானது. தமிழர்களுக்குப் பெருமையையும் அளிக்கக்கூடியது. ஆனால் மன்னர் பெருமானுடைய மெய்க்கீர்த்திகளுக்கு இழிவு வராமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றான்.

“மன்னர் மெய்க்கீர்த்திக்கு இழுக்கா!” – அதுவரை பேசாத அரையன் ராஜராஜன் பேசினான். அவன் கண்கள் கரிகாலனை ஏறெடுத்து நோக்கின.

“ஆம் தந்தையே! திருமன்னிவளர இருநில மடந்தையும் போர்ச் சயப்பாவையும் சீர்த்தனிச் செல்வியும் – தன் பெருந் தேவியராகி இன்புற…” என்று இராஜேந்திர சோழதேவர் மெய்க்கீர்திகளைக் கரிகாலன் உச்சரித்தவுடன் வந்தியத் தேவர் உட்பட எல்லாப் படைத்தலைவர்களும் எழுந்து நின்று, மன்னர் விருதுகளை அவனுடன் சேர்ந்து உச்சரித்துச் சிரம் தாழ்த்தினார்கள். கரிகாலன் மேலும் சொன்னான்: “போர்ச்சயப்பாவை, சீர்த்தனிச் செல்வி அதாவது போர்களில் ஜெயலக்ஷ்மியும், நாட்டில் தன லக்ஷ்மியும் மன்னர் பிரானை அடைந்திருக்கிறார்களென்றால், அவர் இதுவரை கண்ட வெற்றிகள் தான் அதற்குக் காரணம். ஆனால், அதே போர்ச்சயப்பாவை, நமது அசட்டையால் அரசரை விட்டு அகன்றால் சாம்ராஜ்யத்தின் கதிதான் என்ன? அரசர் மெய்க்கீர்த்திதான் நிலைக்குமா? நிலைக்காது தந்தையே, நிலைக்காது. கங்கைக் கரையில் கொடி நாட்டும் திட்டத்துக்கு வேங்கி பூர்வாங்கமென்றால், அத்துடன் தற்சமயம் போரிடுவது கூடவே கூடாது.”

இப்படி திட்டமாகக் கருத்தைச் சொன்ன கரிகாலனை நோக்கி, மறுபடியும் கேட்டான் அரையன் ராஜராஜன்: “ஏன் கூடாது? அதனால் வரக்கூடிய தீங்கு என்ன?” என்று.

“நிரம்ப இருக்கிறது தந்தையே. நான் போரில் அநுபவமில்லாதவன். ஆனால் நாட்டு வரலாற்றைச் சூடாமணி விஹாரத் தலைவரிடம் நன்றாகப் படித்திருக்கிறேன். கங்கை நதிக்குப் படைகளை அழைத்துச் செல்வது சாமானிய விஷயமல்ல. வடக்கே நம்மை எதிர்க்க இருக்கும் அரசர் யார் யார் என்பதை எண்ணிப் பாருங்கள். வேங்கியிலிருந்து வரிசையாகச் சுவர் கட்டியது போல ஒன்றின் பின் ஒன்றாக ஆறு பெரிய அரசுகள் நிற்கின்றன. அவற்றை ஆளும் மன்னர்களும் போரில் மிக வல்லவர்கள். வேங்கியை அடுத்து மாசுணி தேசத்தில் நாகர் படை. இருக்கிறது. அதை அடுத்து ஒட்டர நாட்டு இந்திரதத்தன் இருக்கிறான். அவனையும் தாண்டினால் தண்டபுத்தியைச் சேர்ந்த தர்மபாலன். பிறகு தெற்கு லாட நாட்டு ரணசூரன். அடுத்தபடி வங்காள நாட்டுக் கோவிந்தசந்திரன். கடைசி யாக உத்தரலாட நாட்டின் மாபெரும் மன்னன் மஹி பாலன். இத்தனை மன்னர்களையும் நாம் பொருது வெற்றி காண வேண்டும். இந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றைத் தாக்குவதிலும் ஒவ்வொரு கஷ்டமிருக்கிறது. மாசுணி தேசத்தில் இந்திராவதி ஆற்றின் கரையிலிருக்கும் சக்கரக் கோட்டம் சாமானியமான கோட்டையல்லவென்று கேள்வி. இதையெல்லாம் யோசியுங்கள். அத்துடன் படை செல்ல வேண்டிய தூரம், கடக்க வேண்டிய நதிகள், சமாளிக்க வேண்டிய சேனை எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள்” என்று கரிகாலன் படையெடுப்பில் உள்ள கஷ்டங்களை விளக்கினான்.

அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க வந்தியத்தேவர் ஆச்சரியத்தில் அயர்ந்து உட்கார்ந்துவிட்டார். அரையன் ராஜராஜன் கூட அவன் சரித்திர அறிவைக் கண்டு பிரமித்துப் போனான். பிரும்ம மாராயன் மட்டும் எதற்கும் மசியாமல் வழக்கம்போல் மூர்க்கத்தனமாகக் கேட்டான்: “அப்படியானால் படையெடுப்பை அடியோடு கைவிட்டு விட வேண்டியதுதானா?” என்று.

கரிகாலன் பிரும்ம மாராயனை நோக்கி நன்றாகத் திரும்பினான். அவன் கூரிய விழிகள் அவனை நிர்ப்பயமாக நோக்கின. சொற்களும் திடமாகவே அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன: “படையெடுப்பைக் கைவிட வேண்டிய அவசியமில்லை. சில மாதங்களுக்குத்தான் தாமதிக்கச் சொல்கிறேன். முதலில் நாம் செய்ய வேண்டியது மித்திரபேதம். ஜெயசிம்மனைக் கூட்டாளிகளிடமிருந்து பிரிக்க வேண்டும். அர்த்தசாஸ்திரியான சாணக்கியரே மித்திரபேதத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றான் கரிகாலன்.

“மித்திரபேதம் எப்படி முடியும்?” என்று வந்தியத்தேவர் கேட்டார்.

“ஏன் முடியாது. நமக்கு நேர் எதிரில் இருப்பவர் ஐவர். மாசுணி மன்னன், கலிங்கன், ஒட்டர மன்னன், இந்திர தத்தன், சாளுக்கிய ஜெயசிம்மன். இவர்களில் மற்ற நால்வரையும் பிணைக்கும் கயிறு அறுந்துவிட்டால், மற்ற நான்கு மணிகளும் சிதறிப் போகும்.” என்றான் கரிகாலன்.

“ஜெயசிம்மனை அவர்களிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியும்?” என்று அரையன் ராஜராஜன் குரல் இடையே புகுந்தது.

“தந்தையே! அநுமதி தந்தால் நான் பிரித்துவிடுகிறேன்” என்றான் கரிகாலன்.

படைத்தலைவர்கள் வாய்விட்டுப் பெரிதாக நகைத் தார்கள். சிரிப்புடன் சிரிப்பாக, “நமக்கொரு சாணக்கியன் கிடைத்துவிட்டான்!” என்று பிரும்ம மாராயன் ஏளனமாகக் கூவினான்.

கரிகாலன் அவன் மீது அலட்சியமான பார்வை யொன்றை வீசிவிட்டு, பிரும்ம மாராயனை நோக்கி, “வேங்கி நாட்டுச் சோழத் தூதரே! சாணக்கியனைப் பார்த்தும் சிலர் இப்படித்தான் நகைத்தார்கள். நந்தர்கள் சத்திரத்தில் அவன் அவமானப்பட்டுச் சினந்தெழுந்து சாம் ராஜ்யத்தையே அழித்துவிடுவதாகச் சபதம் செய்தபோது, அதை யார் நம்பியிருக்க முடியும்? ஆனால், நாட்டு வரலாறு கூறும் கதை வேறு அல்லவா?” என்று சொல்லி விட்டு, வந்தியத்தேவரைப் பார்த்து, “தேவரே! நீங்களும் தந்தையாரும் பல போர்களைக் கண்டவர்கள்; ராஜ தந்திரத்தில் இணையற்றவர்கள்; நான் சொல்வதில் தவறிருக்கிறதா பாருங்கள். அதிகப் படைச் சேதமின்றி, கங்கையில் தமிழ்க்கொடி நாட்டவே நான் வழி சொல்கிறேன். அரசர் உத்தரவைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசர் பிரதிநிதியும், அத்தை புருஷருமான தாங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னால் அரசர் கண்டிப்பாகச் சம்மதிப்பார்” என்று, தன் கட்சியை வலியுறுத்தியும் பேசினான்.

வந்தியத்தேவரை நோக்கிப் படைத்தலைவர்கள் கண்கள் திரும்பின. ஆனால், வந்தியத்தேவர் அன்று முடிவு கூறவில்லை. அவர் முகத்தில் தீவிரமான யோசனை படர்ந்து நின்றது. அரையன் ராஜராஜனுடன் கலந்து கொண்டு, இரண்டு நாள்களில் முடிவு கூறுவதாகச் சொல்லி, மந்திராலோசனைச் சபையைக் கலைத்தார். அன்றிரவை அரையன் ராஜராஜன் மட்டுமின்றி, வந்தியத் தேவரும் இதரப் படைத்தலைவர்களும் நிம்மதியின்றியே கழித்தார்கள்.

படைகளின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த. கூடாரத்திலிருந்த கரிகாலன் மனமும் நிம்மதியிழந்துதான் கிடந்தது. அவன் ஏதோ தனக்குத்தானே பேசிக்கொள்வதையும், கூடாரத்துக்கு வெளியே வேங்கி நாட்டை நோக்கிக் கைகாட்டி எதையோ நினைத்துத் தலையசைப்பதையும், அதே கூடாரத்திலிருந்த மற்றொரு படைத்தலைவனும் கண்டு, ‘ஒருவேளை இவனுக்குப் புத்தி பிசகியிருக்குமோ?’ என்று நினைத்தான். அந்த நினைப்பை உறுதி செய்யும் வகையில் கரிகாலன் அவனை வெளியே அழைத்துத் தூரக் கிழக்கில் கையைக் காட்டி ஒரு கேள்வியும் கேட்டான். அந்தக் கேள்வி காதில் விழுந்ததுதான் தாமதம், கூட இருந்த படைத்தலைவன், ‘சரி, இவனுக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டது’ என்று தன் முதல் அபிப்பிராயத்தை ஊர்ஜிதம் செய்துகொண்டான்.

Previous articleMannan Magal Part 2 Ch 1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here