Home Historical Novel Mannan Magal Part 2 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

116
0
Mannan Magal part 2 Ch 20 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 20 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 பிரதாபருத்திரன்

Mannan Magal Part 2 Ch 20 | Mannan Magal | TamilNovel.in

தனது கழுத்தையும் மார்பையும் தடவி நின்ற நாகர்களின் வாள்களைச் சிறிதும் பதற்றமில்லாமல் மிக அமைதியுடன் நோக்கிய கரிகாலன், தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட தலைவன் முகத்துக்காகத் தன் கண்களைச் சற்றே உயர்த்தி, “படைத்தலைவரே! இந்த உத்தரவை உடனே நிறைவேற்ற வேண்டாம்; சற்றுத் தாமதியுங்கள்” என்று நாகர்கள் பேசிவந்த பிராகிருதம் கலந்த ஆந்திர பாஷையில் கூறினான்.

அவன் பார்த்த தோரணையும், அதைவிட அவன் பேசிய தங்கள் சுய பாஷையும் சக்கரக் கோட்டத்தின் மேற்குப்புறக் காவலனைத் திக்பிரமையடையச் செய்யவே, “நீ யார்? எங்கள் பாஷை உனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினான் அவன்.

கரிகாலன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. மொழிகளின் மகிமையை அவன் நன்றாக அறிந்திருந்தான். மனிதனுடைய ரத்தத்தில் கலந்திருக்கும் மகாசக்திகளுக்குள் மொழி ஒன்றென்பதையும், அந்தந்த நாட்டவரிடம் பிற னொருவன் அந்தந்த நாட்டு மொழிகளில் பேசும்பொழுது பேசுபவனிடம் அவர்களுக்கு இணையற்ற அன்பு உண்டா கிறதென்பதையும் கரிகாலன் அறிந்திருந்தானாகையால், நாகர்களின் மொழியிலேயே மேலும் பேச ஆரம்பித்தான். பாரதத்தின் பிரதான மொழிகளையெல்லாமே சூடாமணி விஹாரத் தலைவரிடம் பயின்றிருந்த அவனுக்கு, நாகர்கள் மொழியில் பேசுவது அவ்வளவு பெரிய காரியமாகவும் படவில்லை. ஆகவே, மிகச் சரளமாகச் சம்பாஷணையைத் தொடர்ந்து, “வீரர்கள் தலைவரே! நீங்கள் கேட்பது மிகவும் விந்தையாயிருக்கிறது. ஒட்டர நாடும் மாசுணி தேசமும் அக்கம் பக்கத்திலிருக்கும் போது ஒருவர் பாஷை இன்னொருவருக்குத் தெரிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கிறது?” என்றான்.

மேற்குப்புறத் தலைவன் மிகுந்த சந்தேகத்துடன் கரிகாலனை நோக்கி, “நீ ஒட்டர நாட்டவனா?” என்று கேட்டான்.

“ஏன்? ஒருவேளை சோழ நாட்டவனென்று நினைக் கிறீர்களா? உங்களுக்கிருக்கும் பயத்தில் சோழர்கள் ஒற்றன் என்றுகூட என்னை நினைப்பீர்கள் போலிருக்கிறது” என்று சொல்லிச் சற்றுப் பெரிதாகவே நகைத்தான் கரிகாலன்.

அந்த நகைப்பு மற்றவர்களுக்கு எப்படியிருந்தாலும், சற்றுத் தூரத்திலிருந்த முத்துத்தேவனுக்குக் குலை நடுக்கமெடுக்கச் செய்தது. சக்கரக் கோட்டத்து மேற்குப் புறத் தலைவனுக்கு அச்சமேதும் இவ்லையென்றாலும் அது அவனைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியதால், அவன் என்ன பதில் சொல்லுவதென்று அறியாமல், சற்று நேரம் இப்படியும் அப்படியும் உலாவியதன்றி, பொதி மாடுகளுடன் நின்றுகொண்டிருந்த முத்துத்தேவன் முதலிய இதர வீரர்களையும் உற்றுப் பார்த்தான். என்ன பார்த்தும் ஏதும் விளங்கவில்லை அந்த வீரனுக்கு. அவன் உள்ளத்திலே எழுந்த குழப்பம் முகத்திலும் சுடர்விட்டுப் பிரகா சித்தது. கடைசியாக அவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போலக் கரிகாலனுக்கு வெகு அருகில் வந்து, “உன் பெயரென்ன?” என்று வினவினான்.

“கங்கன்.” சட்டென்று வந்தது கரிகாலன் பதில்.

“உன் தொழில்?” இந்தக் கேள்வியும் மிகத் துரிமாகவே எழுந்தது மேற்குப்புறக் காவலனிடமிருந்து.

“போர் வீரன்; தற்சமயம் ஒட்டர நாட்டுப் படையின் ஒரு பிரிவுக்குத் தலைவன்.”

“நீ படைத்தலைவனா?”

“ஏன் என்னைப் பார்த்தால் அப்படித் தெரிய வில்லையா? இதோ இதைப் பாருங்கள்!” என்று கூறிய கரிகாலன் தனது வாள் கட்டப்பட்டிருந்த கச்சையிலிருந்த பதக்கத்தை எடுத்து நீட்டினான்.

விளக்குகளின் வெளிச்சத்தில் அதை நன்றாக ஆராய்ந்த மேற்குப் புறக் காவலன், “ஒட்டர நாட்டு ராஜ முத்திரைதான்; சந்தேகமில்லை” என்று அந்தப் பதக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த பிம்பத்தையும் வார்த்தைகளையும் பார்த்துத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆனால் அவன் உள்ளத்தே ஒலித்த அந்தச் சொற்களை முகபாவத்திலிருந்தே ஊகித்துக்கொண்ட கரிகாலன், “வீரர்கள் தலைவனே! சந்தேகத்திற்கு இடமில்லை. அது எங்கள் அரசர் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் அத்தாட்சிப் பதக்கம்தான். முதல் பக்கத்தில் பொறிக்கப் பட்டிருப்பது இந்திரதத்த மன்னனின் திருஉருவம். பின்பக்கமிருக்கும் சிம்ம பிம்பத்திற்கு அடியிலிருப்பது சமஸ்கிருத லிபி. மன்னர் விருதுகளின் ஆரம்பச் சொல் பொறிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய அலுவலாக வெளி நாட்டுக்குச் செல்லும் தூதுவர்களுக்கு மட்டுமே இதை அளிப்பது எங்கள் நாட்டு வழக்கம்” என்று விவரித்தான்.

பெருங் குழப்பத்திலிருந்த மேற்குப்புறக் காவலன் தலையை அசைத்துவிட்டு, “அத்தாட்சிகள் உனக்குச் சாதகமாக இருக்கின்றன கங்கா! ஆனால், உன்னை நம்ப என்னவோ என் மனம் மறுக்கிறது” என்றான்.

“வீரர்கள் தலைவனே! மனம் ஒரு குரங்கு. அதை அடக்கி ஆள்வது மனிதன் கடமை என்று விவேகிகள் கூறுகிறார்கள்.”

“இருக்கலாம். ஆனால் எதிரிகள் கோட்டையைச் சூழ்ந் திருக்கும் இந்தச் சமயத்தில், விவேகத்துடன் எச்சரிக்கை யையும் இணைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.”

“எச்சரிக்கை கண்டிப்பாய் தேவைதான். ஆனால், நான் வந்துள்ள காரியத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது தங்கள் உத்தரவு.”

“என் உத்தரவா?”

“ஆமாம்; என்னைச் சிறை செய்ய உத்தரவிட்டிருக் கிறீர்களே அது.”

மேற்குப்புறக் காவலனின் இதழ்களில் இகழ்ச்சி நகை அரும்பியது. “தங்களைச் சிறை செய்யக்கூடாதா? விருந்து வைக்கட்டுமா?” என்று கேட்டான் காவலன்.

“தாங்கள் விருந்து வைக்க வேண்டியதில்லை தலைவரே. தங்களுக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து வைக்கத்தான் நானும் என் சகாக்களும் எங்கள் உயிரைப் பேராபத்துக்குள்ளாக்கிப் பொதிகளைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறோம். பொதிகளைச் சுமந்து வந்திருக்கும் இன்னும் இரு கூட்டங்கள் காட்டுக்குள் நிற்கின்றன. அவர்கள் மீது சோழப்படை வீரர்கள் பாயு முன்பாகத் தயவுசெய்து அவர்களை இங்கு வரவழைக்கக் கோட்டை மீதிருந்து பந்தத்தை இருமுறை ஆட்டி உதவுங்கள். அதன் பிறகு, எங்களைச் சிறை செய்து கொட்டடியில் அடைத்து நாகர்களுக்கு இயற்கையாக வுள்ள நன்றியறிதலைத் தெரிவிக்கலாம்” என்று கரிகாலன் வாயிலிருந்து வார்த்தைகள் படபடவென உதிர்ந்தன. அவன் முகத்திலே விவரிக்க இயலாத கோபம் தாண்டவ மாடியதையும், சொற்களில் இணையற்ற உஷ்ணம் கலந்திருந்ததையும் கண்ட மேற்குப்புறக் காவலன் இதயத்தில் கூடச் சிறிது அச்சம் உதயமாயிற்று.

அந்த அச்சத்தை நன்றாக மேலும் விசிறத் தொடங்கிய கரிகாலன், “தலைவரே! நான் சொல்லியதை மட்டும் நீர் செய்யத் தவறினால், நாளைக்கு இந்தக் கோட்டைக்குள் நீர் தூக்கிலாடுவது நிச்சயம். கோட்டைத் தலைவரான பிரதாபருத்திரன் உங்களை லேசில் விடமாட்டான். உயிரைத் திருணமாக மதித்து, சோழர்கள் படைப் பிராந்தியத்திலே நுழைந்து உங்களுக்கு உணவுப்பொருள் கொண்டுவரும் என்னை நீங்கள் சிறை செய்ததே முதல் குற்றம். பொதி மாடுகளை உக்கிராணத்துக்கு ஓட்டாமல், இங்கு நிறுத்தி வைத்துக்கொண்டு வீண் தர்க்கத்தில் ஈடுபடுவது இரண்டாவது குற்றம். மீதிப் பொதி மாடுகளையும் என் வீரர்களையும் இங்கு வரவழைக்காமல் காலதாமதம் செய்வது மூன்றாவது குற்றம். மூன்று குற்றங்களுக்கும் நீங்கள் நாளை கோட்டைக் காவலனிடம் என்ன சமாதானம் கூறப்போகிறீர்கள்? ‘ஜெயவர்மன் வரவில்லை, வேறொருவன் வந்தான். ஆகையால் சந்தேகப்பட்டேன்’ என்று கூறுவீரா? அத்தாட்சிப் பதக்கமிருப்பவனை உள்ளே விடும்படிதானே உமக்கு உத்தரவு? அதன்படி ஏன் நடக்கவில்லையென்றால் பதில் என்ன சொல்லப் போகிறீர்?” என்றான்.

மேற்குப்புறக் காவலன் இந்தப் பேச்சைக் கேட்டுப் பாதி அச்சமும் பாதி கோபமும் கொண்டு, என்ன செய்வ தென்று அறியாமல் திணறினான். கரிகாலன் பேச்சில் நியாயம் நிரம்ப இருந்ததை அவன் கண்டான். குரலில் திடம் இருந்ததையும் அவன் கவனித்தான். இருந்த போதிலும் அவனிடம் பூரண நம்பிக்கை மட்டும் ஏற்பட வில்லை நாகர்கள் தலைவனுக்கு. ஏதேதோ யோசித்துப் பார்த்த அந்தத் தலைவனுக்குக் கரிகாலன் யோசனையின் படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போகவே, கோட்டை மீதிருந்து பந்தத்தை மீண்டும் இருமுறை அசைக்கும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான். மேற்குப்புறக் காவலனின் அநுமதியின்மீது கோட்டைச் சுவரின் மீதிருந்து மற்றப் பொதிக் கூட்டங்களின் வரவைக் கவனித்துக் கொண்டிருந்த கரிகாலன், கண்களை நாலா பக்கங்களிலும் ஓட்டி, கோட்டையின் அமைப்பையும் நன்றாக பார்த்துக் கொண்டான்.

சித்திரகூட மலையை அணைத்து இந்திராவதியின் கரையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோட்டைக்கு மூன்று வாயில்களிருப்பதையும், வடக்குப்புறத்தில் அரசமகளிர் நீராடுவதற்கான திட்டி வாசல் மண்டபமொன்றைத் தவிர வேறு பெரிய வாயிலொன்றும் இல்லையென்பதையும் கண்ட கரிகாலன், பின்புறத்தில் இந்திராவதியின் வெள்ளப் பெருக்கையும் சித்திரகூட மலையையுமே பாதுகாப்புக்கு இவர்கள் நம்பியிருக்கிறார்கள்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். அவர்கள் அப்படி நம்பியதிலும் தலறில்லையென்றே பட்டது கரிகாலனுக்கு. சக்கரக் கோட்டக் கோட்டைக்குப் பின்புறமிருந்த மலைச்சரிவில் மரங்கள் இல்லை. வெறும் பாறையும் கூழாங்கற்களுமே இருந்தன. அந்தச் சரிவில் குதிரைப் படையோ யானைப்படையோ, ஏன் காலாட் படையாயிருந்தாலுங்கூட இறங்குவது அசாத்தியம். இறங்குவது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் படைகள் ஏறிச் சென்று தப்புவது கஷ்டம்.

இந்த நிலையை நன்றாகப் பார்த்து அறிந்துகொண்ட கரிகாலன், ‘நாகர் படை சக்கரக் கோட்டத்தை விட்டு வெளிக் கிளம்ப வேண்டுமானால் பின்புறமாகத் தப்பி ஓட முடியாது. முன்புறத்திலுள்ள மூன்று வாயில்கள் வழியாகத்தான் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறுவதானால் சோழப் படைகளின் வாயில் நுழைந்துதானாக வேண்டும். வேறு வழியில்லை, நான் இட்ட திட்டம் சரிதான்’ என்று தீர்மானித்துக் கொண் டான். அவன் கண்கள் மற்ற மூன்று வாயில்களின் அமைப்பையும் நகரத்தின் பொதுத் தோற்றத்தையும் கூட ஆராய்ந்தன. கோட்டைத் தலைவன் மாளிகை நகரத்தின் நடு மத்தியில் பிரும்மாண்டமாக எழுந்து நின்றது. அந்த மாளிகையைச் சுற்றிச் சக்கரம் சக்கரமாக அமைந்திருந்த வீடுகள், அந்தக் கோட்டைக்குச் சக்கரக் கோட்டம் என்று பெயர் அமைந்தது எத்தனை பொருத்தம் என்பதை நிரூபித்தன. மேற்கு, தெற்கு, கிழக்கு வாசல்களையொட்டி வரிசை வரிசையாக இருந்த வீடுகளின் அமைப்பையும், அவற்றின் வாயில்களின் அடையாளத்துக்காகச் செருகப்பட்டிருந்த ஆயுதங்களையும் கவனித்த கரிகாலன், அவை படைவீடுகளென்பதையும், அந்தப் படை வீடுகளிலேயே ஆயுதக் கிடங்குகளும் கலந்திருக்கின்றனவென்றும் ஊகித்துக் கொண்டிருந்தான், அப்படிக் கோட்டையின் மேலே நின்று அவன் ஊரைக் கவனித்து எடை போட்டு முடிப்பதற்கும், பொதி மாடுகளும் அவற்றை ஓட்டி வந்தவர்களும் உள்ளே நுழைவதற்கும் பொழுது சரியாயிருந்தது. சீக்கிரம் பொழுது விடியும் என்பதற்கு அறிகுறியாக வானத்திலே வெள்ளியும் முளைத்தது.

வெள்ளி முளைத்துவிட்டதைக் கண்ட கரிகாலன், மேற்குப்புறக் காவலனை நோக்கி, “தலைவரே! அதோ சுக்கிரோதயம் ஆகிவிட்டது. சீக்கிரம் கோட்டைக் கதவைத் தாளிடச் சொல்லுங்கள்” என்றான்.

கோட்டைக்குள் வந்த ஆரம்பத்தில் தலைவன் உள்ளத்தில் துளிர்த்த சந்தேகம் நேரம் ஏற ஏறக் குறைந்து கொண்டே வந்தது. சிறை செய்ய உத்தரவிட்டபோதும் அதற்குப் பிறகும் கரிகாலன் சிறிதும் கலவரப்படாமல் நடந்துகொண்டதாலும், பொதிகளும் ஏராளமாக உள்ளே வந்ததாலும் திருப்தியடைந்த காவலன், ‘சீக்கிரம் கோட்டைக் கதவை மூடச் சொல்லுங்கள்’ என்று கரிகாலன் எச்சரித்ததைக் கேட்டதும், அவனிடம் ஓரளவு நம்பிக்கையும் கொண்டான். ஆகவே, பொதிமாடுகளின் கூட்டம் கோட்டைக்குள் நுழைந்து கதவு மூடப்பட்டதும், அவன் கரிகாலனை நோக்கிப் பேசிய பேச்சில் பழைய தோரணை மறைந்துவிட்டதல்லாமல் சிறிது மரியாதையும் கலந்து நின்றது. “ஒட்டர நாட்டுப் படைத்தலைவரே, தாங்கள் சக்கரக் கோட்டப் படைகளுக்குச் செய்துள்ள மகத்தான உதவிக்கு எங்கள் தலைவர் சார்பில் நன்றி செலுத்துகிறேன். இருப்பினும் நான் என் கடமையைச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஜெயவர்மன் தலைமையில் வரும் பொதிகளை மட்டுமே அனுமதிக்க எனக்கு உத்தரவிருக்கிறது. உங்களை எனக்குத் தெரியாது. ஆகவே, கோட்டைத் தலைவரான பிருதாபருத்ர பூபதியை நாளைக்குச் சந்திக்கும் வரை தாங்களும் சகாக்களும் காவலில் இருந்துதானாக வேண்டும்” என்றான் மேற்குப் புறக் காவலன்.

“அதற்கென்ன ஆகட்டும்! தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்ற கரிகாலன் பதில், மேற்குப்புறக் காவலனுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தையும் நீக்கி விடவே, அவன் கரிகாலனையும் அவன் சகாக்களையும் சற்றுச் சௌகரியமான இடத்திலேயே காவலில் வைத்தான்.

உறக்கம் இடத்தைப் பொறுத்ததாக மட்டும் இருந்தால் கரிகாலனுடைய சகாக்கள் இரவு முழுவதும் தூக்கம் விழித்ததற்குக் காலையில் நீண்ட நேரம் நன்றாக உறங்கி யிருப்பார்கள். உறக்கம் மன நிம்மதியைப் பொறுத்த தல்லவா? நிம்மதியிழந்து கிடந்த முத்துத்தேவனுக்கும் அவனுடன் வந்திருந்த சுமார் தொண்ணூறு வீரர்களுக்கும் உறக்கம் சற்றும் பிடிக்காததால், சிறைக்கூடத்தில் அவர்கள் உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அந்த நிலையிலும் கரிகாலன் படுத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கியது தான், முத்துத்தேவனுக்குப் பெரும் விந்தையாகவும் மற்றவருக்குப் பெரும் எரிச்சலாகவும் இருந்தது.

காவற்கூடத்தை அணுகிய உடனேயே, அறைக்குள் நுழைந்து கத்தியைக் கழற்றி ஒரு மூலையில் சாத்திவிட்டுத் தரையில் படுத்துத் தூங்குவதற்காகக் காலை நீட்டிக் கையை உயர்த்திச் சோம்பல் முறித்த கரிகாலனை நோக்கிக் கேட்டான் முத்துத்தேவன், “ஏன் தூங்கப் போகிறீர்களா?” என்று,

“ஆம் முத்து, இரவு முழுவதும் உறக்கமே இல்லையே.”
“உறக்கம் வருமா உங்களுக்கு?”

“ஏன் வராது?”

“நாம் இருக்கும் இடம் பகைவர் கோட்டை.”

“இருப்பினும் நாம் மனிதர்கள்தானே? இயற்கையை விட்டு மாறுபட முடியுமா? உறக்கம் இயற்கை அளிக்கும் அமைதி. அதை ஏன் விட வேண்டும்?”

“விளையாட்டுக்கு இது சமயமல்ல தலைவரே.”

“ஆம். அதனால்தான் தூங்கப் போகிறேன்.”

இப்படிச் சொல்லிய கரிகாலன் நன்றாகப் புரண்டு படுத்து அடுத்த விநாடி அயர்ந்து தூங்கிவிட்டான். தூக்கத்திலும் அவன் முகம் விகாரமின்றி அழகாயிருந்ததையும், கடை இதழில் வழக்கமான அந்த ஏளனப் புன்னகை அரும்பி நின்றதையும் கவனித்த முத்துத்தேவன், ‘இவர் கூப்பிட்ட மாத்திரத்தில், நள்ளிரவில், அரையன் ராஜ ராஜன் மகள் ஓடி வருகிறாளென்றால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

பொழுது புலர்ந்து வெகு நேரம் வரையில் அமைதியாகத் தூங்கிய கரிகாலனை மேற்குப்புறக் காவலனே வந்து எழுப்பினான். கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்த கரிகாலன் காவலனை நோக்கி, “ஓகோ! பொழுது புலர்ந்து இத்தனை நேரம் ஆகிவிட்டதா?” என்று சொல்லிக் கொண்டு வேண்டா வெறுப்பாக நிதானமாக எழுந்து உட்கார்ந்தான்.

மேற்குப்புறக் காவலனும் முத்துத்தேவனைப் போலவே ஆச்சரியத்தால் மூழ்கி, “என்ன! இத்தனை நேரம் தூங்கினீர் களா?” என்று கரிகாலனைக் கேட்டான்.

“ஆமாம் இரவு பூராவும் தூக்கமில்லை. தவிர இரண்டு நாள் பயணம் வேறு” என்று சொல்லிக்கொண்டே கரிகாலன் எழுந்திருந்து ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டான். கரிகாலன் மீது அதுவரை சந்தேகம் ஏதாவது மேற்குப்புறக் காவலனுக்கு இருந்ததென்றால், அது அன்று காலை அடியோடு போய்விட்டது. இவ்விதம் நிம்மதியாக உறங்கக்கூடியவன் ஒருகாலும் ஒற்றனாயிருக்கமாட்டான் என்ற முடிவுக்கு வந்த தலைவன், “ஒட்டர நாட்டுப் படைத் தலைவரே! உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் ஸ்நானத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். ஸ்நானத்தை முடித்து, காலை உணவு அருந்திச் சித்தமாயிருங்கள். நடுப்பகலுக்குச் சற்று முன்பாகக் கோட்டைத் தலைவர் உம்மைக் காண்பார்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

அவன் கூறியபடி சரியாக நடுப்பகலுக்கு நாலைந்து நாழிகைக்கு முன்பாகவே, பிரதாபருத்திரனை அவன் மாளிகையின் பெரு மண்டபத்தில் கரிகாலன் சந்தித்தான். நாலா பக்கங்களிலும் நாகர்கள் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்த மாபெரும் கற்றூண்களால் தாங்கப்பட்ட அந்த மணிமண்டபத்தின் நடுமத்தியில், நாகர்கள் இருவர் வெண் குடை பிடிக்க அரச கோலத்தில் அமர்ந்திருந்தான் பிரதாபருத்திரன். அவன் அரச கோலத்தையும் நாகாசனத் தையும் கண்ட கரிகாலன், ‘கோட்டைத் தலைவன் நாகர்களின் அரச வம்சத்தைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டும்’ என்று தீர்மானித்து, “அரசே!” என்று அழைத்தே தன் பேச்சைத் தொடங்கினான்.

சுமார் ஆறடி உயரத்துக்குக் குறைவில்லாமல், மிக ஒல்லியாய் ராஜகளை முகத்தில் சொட்ட, நாகாசனத்தில் உட்கார்ந்திருந்த பிரதாபருத்திரன் கண்கள் ஒரு விநாடி ஆச்சரியத்தால் மலர்ந்தன. மறுவிநாடி பெரும் சந்தேகச் சாயை அவன் முகத்தில் பரவலாயிற்று. “உன்னை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன், எந்த இடத்தில்?” என்று உக்கிரமாக வினவிய பிரதாபருத்திரன், சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் கிடுகிடுவென்று ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து கரிகாலனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். ஏதோ உண்மை புலப்பட்டுவிட்டது போன்ற பிரகாசமொன்றும் அவன் முகத்தில் திடீரென உதயமாயிற்று. அடுத்த விநாடி இடி போன்ற சொற்கள் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்து மண்டபத்தின் சுவர்களில் தாக்கி மிகப் பயங்கரமாக எதிரொலி செய்தன.

Previous articleMannan Magal Part 2 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here