Home Historical Novel Mannan Magal Part 2 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

92
0
Mannan Magal part 2 Ch 21 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 21 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 பிரதாபருத்திரன்

Mannan Magal Part 2 Ch 21 | Mannan Magal | TamilNovel.in

உலகம் மிகப்பெரிது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையில் மிகச் சிறியது. ஏனென்றால் நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத இடங்களுக்குப் போகிறோம். மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம். சொப்பனத்திலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம். ஆகவே, ஆண்டவன் படைப்பில் இந்தப் பரந்த உலகம் மிகச் சிறிய கிரகம்தான். அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில் எடுத்து வீசப்படும் நாம் இந்தக் கிரகத்தின் எந்தப் பாகத்தையும் அடைகிறோம். எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில் அகப்பட்டுக் கொள்கிறோம். அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது ஆயுளில் அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம். அன்று சக்கரக் கோட்டத்தில் பிரதாபருத்திரன் மாளிகையில் அந்த உணர்ச்சியையும் அதில் விதி புகுந்து விளையாடிய விளையாட்டையும் பிற்காலத்திலே நினைத்துப் பார்த்த கரிகாலன், மனித எண்ணங்களுக்கு எத்தனை சுலபத்தில் ஏமாற்றமும் கிடைக்கிறது என்பதை எண்ணி எண்ணிப் பல முறை வியந்திருக்கிறான்.

பிற்காலத்தில் அவன் சக்கரக் கோட்டச் சம்பவங்களை எண்ணி வியந்தது உண்மையானாலும், அன்று அந்த மாளிகையில் பிரதாபருத்திரன் இரைந்து கூறியதுமன்றித் தன்னை உற்றும் பார்த்தபோது இணையற்ற அச்சமே ஓங்கி நின்றது. உன்னை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன் என்று பிரதாபருத்திரன் கூறியபோதே சற்றுக் கலங்கிய கரிகாலன், சக்கரக் கோட்டத்தின் தலைவன் நாகாசனத்திலிருந்து இறங்கி ஓடிவந்து தன் முகத்தைக் கூர்ந்து கவனித்ததும் எப்படியும் தப்பிக்க முடியாத பேராபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தான். தன்னை உற்றுப் பார்த்த பிறகு, அவன்தான் சந்தேகமில்லை. அதே முகம், அதே கண்கள், அதே சாயல்” என்று பிரதாபருத்திரன் இடியென இரைந்து வார்த்தைகளை உதிர்த்ததும், அவன் என்ன சொல்லுகிறான், எதற்காகத் தன்னை ஊன்றி ஊன்றிக் கவனிக்கிறான் என்பதை அறியமுடியாமல் திணறிய கரிகாலன், எதிரே ருத்திராகாரமாக நின்ற பிரதாபருத்திரனின் கோப விழிகளை ஏறெடுத்துப் பார்த்தான். அந்தப் பார்வை பிரதாபருத்திரனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அவன் மீண்டும், “அதே முகம், அதே கண்கள், அதே சாயல், சந்தேகமில்லை. ஆனால்….” என்று எதோ பேசிக்கொண்டே போய், இடையே வார்த்தைகளை அறுத்து, ஆனால் இவன் வயது…சீ…சீ, என்ன தவறு செய்துவிட்டேன்” என்று தன்னைத்தானே நொந்து கொண்டு, மறுபடியும் விடுவிடு வென்று நடந்து சென்று நாகாசனத்தில் அமர்ந்தான். நீண்ட நேரம் அந்த மண்டபத்தில் மௌனமே தாண்டவ மாடியது. பிரதாபருத்திரனின் படைத்தலைவர்களும் இதர வீரர்களும் கூடச் சிறிது நேரத்திற்கு முன்பாகத் தங்கள் தலைவன் நடந்துகொண்ட விசித்திர முறையை நினைத்துத் திக்பிரமையடைந்து நின்றார்கள். பிரதாப ருத்திரனுக்கு அடுத்தபடியாகக் கோட்டையில் அதிகாரம் வகித்து வந்த உபதளபதியும் ஆச்சரியம் கலந்த தன் பார்வையைப் பிரதாபருத்திரன் மீது நிலைநாட்டினான். வீரர்கள் இந்த நிகழ்ச்சியின் காரணங்களையோ சக்கரக் கோட்டத்துத் தலைவன் சிந்தனையில் எழுந்த எண்ணங்களையோ, சிறிதும் அறியமாட்டாதவர்களாய், ‘தலைவனுக்கு இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது? ஏன் இப்படித் திணறுகிறார்?’ என்ற கேள்விகள் பார்வையில் தொனிக்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

நாகாசனத்தில் அமர்ந்தபின்பு, வெகுநேரம் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்த பிரதாபருத்திரன் மனத்தில், ஏதோ உண்மை உதயமாகவே அவன் தனக்குத்தானே லேசாகச் சிரித்துக் கொண்டு, “ஆம்; அப்படியும் இருக்கலாம்” என்று முணு முணுத்துவிட்டுக் கரிகாலனை நோக்கித் தலை உயர்த்தி, “உன் பெயர் என்ன?” என்று சாவதானமாகவே கேட்டான்.

பிரதாபருத்திரன் தன்னை நோக்கிக் கூச்சலிட்ட போது குழப்பத்தில் சிக்கிக்கொண்ட கரிகாலனும் சக்கரக் கோட்டத்துத் தலைவன் நாகாசனத்தில் அமர்ந்து சிந்தனையில் இறங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சுயநிலையை அடைந்துவிட்டானாகையால், உறுதியான குரலிலேயே பதிலிறுத்தான் “கங்கன்” என்று.

மீண்டும் பெருங்குழப்பத்தையும் அச்சத்தையும் விளை விக்கும்படியான முறையில் எழுந்தது பிரதாபருத்திரனின் அடுத்த பேச்சு. கடை இதழில் இகழ்ச்சிப் புன்னகை அரும்பச் சொன்னான் சக்கரக் கோட்டத் தலைவன், “அதல்ல உண்மைப் பெயர்” என்று.

மனிதர்களை மிகத் திறமையுடன் ஊடுருவிப் பார்க்க வல்ல ஒரு பெரிய அறிவாளியிடம் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த கரிகாலன், அந்தச் சமயத்தில் சற்றுத் தளர்ந்தால் உண்மை வெளிப்பட்டுப் போகுமென்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டானாகையால், சிறிதும் சலனமின்றியே சம்பாஷணையைத் தொடர்ந்து, “அரசே! நான் சொன்னது உண்மைப் பெயரல்ல என்பது தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான், உறுதி சிறிதும் தளராத குரலில்.

அடுத்தபடி பேசிய பிரதாபருத்திரன் சொற்களில் சற்று நஞ்சும் கலந்திருந்தது. அவன் கரிகாலன் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “நீ ஒட்டர நாட்டைச் சேர்ந்தவன் என்று எனது கோட்டையின் மேற்குப்புறக் காவலன் சொன்னானே, அதுவும் உண்மைதானா?” என்று வினவினான்.

பிரதாபருத்திரன் தன்னைப் பற்றிய உண்மையை எப்படியோ ஊகித்துக்கொண்டு விட்டானென்பதை, அவன் கேள்வியிலிருந்தும் அவன் பேசிய தோரணையிலிருந்தும் தெரிந்துகொண்ட கரிகாலன் மனத்தில் மீண்டும் ஓரளவு அச்சம் உதயமானாலும் அதை வெளியில் காட்டாமலே, தற்சமயம் நான் ஒட்டர நாட்டைச் சேர்ந்தவன் தான். நான் பேசும் பாஷையும் அதுதான். வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள்” என்றான்.

பிரதாபருத்திரனின் கூரிய கண்கள் கரிகாலனை மீண்டும் ஆராய்ந்தன. அவன் உதடுகளில் ஏற்கெனவே இருந்த புன்னகை இன்னும் அதிகமாக விகசித்தது. லேசாகச் சிரித்துவிட்டுச் சொன்னான் பிரதாபருத்திரன், “இருக்கலாம்; தற்சமயம் ஒட்டர நாட்டுச் சேவையில் நீ அமர்ந்திருக்கலாம். அந்தப் பாஷையை அறிந்தும் இருக்கலாம். அதை அந்த நாட்டவரைப் போலவே பேசினாலும் பேசலாம். ஆனால் நீ சோழ நாட்டைச் சேர்ந்தவன். உன் முகத்தில் அது எழுதி ஒட்டியிருக்கிறது” என்று.

பிரதாபருத்திரன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் உதிர்ந்ததும், அந்த அவையிலேயே மிகுந்த பரபரப்பு உண்டாயிற்று. “சோழ நாட்டவன்! சோழ நாட்டவன்!” என்ற சொற்கள் மற்றவர்கள் வாயிலிருந்தும் உதிரவே, மண்டபத்தின் பெரும் சுவர்களும் “சோழ நாட்டவன்! சோழ நாட்டவன்!” என்று பயங்கரமாக எதிரொலி செய்தன.

படைத்தலைவர்களின் ஆச்சரியம் கலந்த கலவரச் சொற்களையும் சுவர்களில் அந்தச் சொற்கள் தாக்கி எதிரொலி செய்ததையும் கேட்ட கரிகாலனுக்கு, அந்த மண்டபமே தன் மீது குற்றம் சாட்டுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அடுத்தபடி என்ன நேரிடும் என்ற சந்தேகமும் மனத்தில் எழுந்து நிற்கவே பிரதாபருத்திரன் எத்தகைய கட்டளையை இடப்போகிறான் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கி நின்றான். சற்று யோசனைக்குப் பிறகு, பிரதாபருத்திரன் இட்ட கட்டளை கரிகாலனை மட்டு மின்றி, அந்த மண்டபத்திலிருந்த மற்ற படைத்தலைவர்களையும் சொல்லவொண்ணாத ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“இவனை அழைத்துச் சென்று உன் மாளிகையில் தங்கவை. ஓர் அரசனுக்குரிய மரியாதையுடன் இவனை நடத்து. இன்று என்னுடைய பள்ளியறையில் இவனைத் தனியாகச் சந்தித்துப் பேசுகிறேன்” என்று தன் உபதளபதிக்கு உத்தரவிட்ட பிரதாபருத்திரன், கரிகாலனை நோக்கிச் சிரித்துக்கொண்டே, “கங்கா, மாலை சந்திப்போம்” என்று கூறிவிட்டு, நாகாசனத்திலிருந்து எழுந்து காவலர் பின்தொடர மண்டபத்தின் பின்புறத் தூண்களுக்கிடையில், துரிதமாக நடந்து சென்றான்.

சக்கரக் கோட்டத்துத் தலைவன் மாளிகையின் உள் கட்டுக்குச் சென்று மறைந்து, மண்டபத்துக்கும் அடுத்த கட்டுக்குமிருந்த மணிக் கதவுகள் மூடப்பட்டதும், கோட்டையின் உபதளபதி கரிகாலனைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான். தலைவன் உத்தரவுப்படியே அன்று முழுவதும் அரச போகத்துடன் நடத்தப்பட்டான் கரிகாலன். உபதளபதியின் சிறந்த அறையொன்றில் தங்க வைக்கப்பட்ட கரிகாலனுக்குப் பணிவிடைகள் செய்ய இரு பணிப்பெண்கள் வந்து சேர்ந்தார்கள். வாயிலைக் காவல் புரிய இரு வீரர்கள் நியமிக்கப்பட்டார்கள். கரிகாலன் விருப்பப்படி முத்துத்தேவனும் அவன் அறைக்குக் கொண்டு வரப்பட்டான். இத்தனை உபசாரங்கள் நடந்தும், தான் ஒரு கைதியே என்பதை உணர்ந்து கொள்ள அதிக நேரமாகவில்லை கரிகாலனுக்கு. பகல் முழுவதும் பணிப்பெண்கள் இருவரும் அந்த அறையை விட்டு நகர மறுத்தார்கள். முத்துத்தேவனுடன் ஏதேதோ பேசத் திட்டம் போட்டிருந்தான் கரிகாலன். ஆனால் உபதளபதியின் ஏற்பாடுகளால் அந்தத் திட்டம் படுதூளாகப் போய் விடவே, முத்துத்தேவனிடம் எந்த விஷயத்தையும் சொல்லாமலேயே மாலையில் பிரதாபருத்திரனைச் சந்திக்கச் சென்றான்.

பிரதாபருத்திரனின் அந்தரங்க அறை மாலை நேரத்தில் ஏற்றப்பட்ட மணிவிளக்குகளால் ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த அறையே ஒரு பெரும் மண்டபம் போலிருந்ததையும் அந்த அறையிலிருந்த தூண்களில் மாசுணி தேசத்துப் படைகளின் வீரச் செயல்கள் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்ததையும் கரிகாலன் கண்டான். அந்தப் போர்ச்சித்திரங்களைச் சுற்றிப் பெரும் நாகங்கள் வரையப்பட்டிருந்தமையால், நாலா பக்கங்களிலும் பெரும் சர்ப்பங்கள் சீறி வருவதைப் போன்ற பிரமையை அந்த மண்டபம் ஏற்படுத்துவதையும் கண்ட கரிகாலன் இந்தச் சூநிலையில் சிக்கிக்கொள்ளும் எவனும் பயத்தாலேயே உண்மையை உளறிவிடுவான்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

அவன் அந்த மண்டபத்தைச் சுற்றிக் கண்களை ஓட்டிப் பிரமித்து நிற்பதைக் கண்ட பிரதாபருத்திரன், அவன் உட்காரத் தனக்கெதிரே இருந்த ஓர் ஆசனத்தைச் சுட்டிக் காட்டி, “உட்கார் கங்கா! நாகங்களைக் கண்டு பயப்படாதே!” என்று தைரியமும் சொன்னான். அந்தத் தருணத்தில் பிரதாபருத்திரன் தோற்றமே மாறியிருந்தது. பகலில் மண்டபத்தில் அணிந்திருந்த படைத்தலைவன் உடை அப்பொழுதில்லை. மாலை வேளை சந்தி செய்த பிறகு மன்னர்கள் அணியும் சாதாரண உடையையே அணிந்திருந்தான் பிரதாபருத்திரன். அவன் முகத்திலும் மண்டபத்தில் தெரிந்த கோபம், குழப்பம், இகழ்ச்சி ஏதுமில்லை; சாந்தம் நிலவிக் கிடந்தது. அன்பு ததும்பும் விழிகளைக் கரிகாலன் மீது நாட்டி, தேன் போன்ற மொழிகளை உதிர்க்கத் தொடங்கிய பிரதாபருத்திரன், “கங்கா! நீயாக உண்மைப் பெயரைச் சொல்லும் வரையில் உன்னைக் கங்கனென்றே அழைக்கிறேன். நன்றாக இளைப்பாறினாயா? பிரயாண அலுப்பு நீங்கியதா உனக்கு?” என்று கேட்டான்.

“அலுப்புத் தீர்ந்தது அரசே!” என்றான் கரிகாலன்.

“மகிழ்ச்சி கங்கா! உனக்கு நாகர்கள் சார்பாக நன்றி செலுத்துகிறேன்.”

“எதற்கு மன்னவா?”

“ஒட்டர நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் கொண்டு வந்ததற்காக.”

“இதில் நன்றி செலுத்த என்ன இருக்கிறது மன்னவா? இது என் கடமையல்லவா? ஒட்டர நாட்டு மன்னனிடம் சேவை புரிகிறேன்; கட்டளையை நிறைவேற்றுகிறேன்; அவ்வளவுதானே?”

“கட்டளைகளிலும் வித்தியாசமுண்டல்லவா? இது உன் உயிரையே குடிக்கக்கூடிய கட்டளை.”

“வீரர்கள் வாழ்வே அப்படிப்பட்டதுதானே?”

கரிகாலனின் இந்தச் சொற்களைக் கேட்டதும் சுளீரென்று அடிக்கப்பட்டவன் போல் ஆசனத்தில் சட்டென்று எழுந்து உட்கார்ந்த பிரதாபருத்திரன் மீண்டும் பெருமூச்சு விட்டு மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு, “ஆம் ஆம், உண்மைதான்” என்றான். பிறகு சில விநாடிகள் பேசாமலே இருந்தான் பிரதாபருத்திரன். அவன் உள்ளத்திலே எண்ண அலைகள் எழுந்து எழுந்து மோதிக் கொண்டிருந்ததை அவன் முகமே பிரதிபலித்தது. இப்படி இருவருக்கும் இடையே திடீரென எழுந்த மௌனத்தைக் கலைக்க எண்ணிய கரிகாலன், “அரசே! வீரர்கள் வாழ்வு அப்படித்தான் என்று நான் சொன்னதும், ஏன் அப்படித் தூக்கி வாரிப் போட்டது தங்களுக்கு?” என்று வினவினான்.

“காரணமிருக்கிறது. அதே சொற்களை வேறொருவன் சொன்னான் பல வருஷங்களுக்கு முன்பு. அதுவும் மிகவும் இக்கட்டான நிலையில் சொன்னான்” என்றான் பிரதாபருத்திரன்.

“யாரது அரசே!”
“சொல்ல முடியாது கங்கா.”

“ஏன்?”

“ஒரு பிரமாணம் என்னைக் கட்டுப்படுத்துகிறது.”

“யாருக்குப் பிரமாணம் செய்து கொடுத்தீர்கள்?”

“நீ கூறிய வார்த்தைகளைக் கூறினானே அவனுக்குத் தான். ஈழத்தில் நடந்த கதை அது. ஏன், சோழ நாட்டிலும் தான் நடந்தது. அந்தக் கதையை நீ நினைவுபடுத்தி விட்டாய். கங்கா, நீயென்ன, உன் முகம், குரல் அனைத்தும் நினைவுபடுத்திவிட்டன.” பிரதாபருத்திரன் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, “கங்கா!” என்றான்.

“ஏன் அரசே?”

“உன்னிடம் அந்த மோதிரம் இருக்கிறதா?”

“எந்த மோதிரம்?”

“அதுதான் பச்சைக்கல் மோதிரம்; அதன் உட்புறத்தில் சோழர்கள் கிரீட முத்திரை இருக்கும்.”

உலகமே சுழல்வது போலிருந்தது கரிகாலனுக்கு. அவன் உடல் ஒருமுறை லேசாக ஆடியது. உடல் பூராவும் பலப்பல உணர்ச்சிகள் பாய்ந்து சென்றன. நாகர்கள் நாகங்களைக் கட்டுவதில் கைதேர்ந்த மந்திரவாதிகள் என்பதைப் படித்திருந்தான் தத்துவ சாஸ்திரியான கரிகாலன். ஆனால், மனித ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவல்ல அத்தனை மந்திரவாதிகளாயிருக்க முடியும் என்பதைச் சொப்பனத்தில் கூட நினைக்காத கரிகாலன், பிரதாப ருத்திரன் கேட்ட கேள்வியால் அடியோடு நிலைகுலைந்து போய்த் தன் கச்சையிலிருந்த மோதிரத்தை எடுத்துச் சக்கரக் கோட்டத்துத் தலைவனிடம் நீட்டினான். அதை விளக்கில் நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த பிரதாப ருத்திரனும், “அதே மோதிரம்தான். சந்தேகமில்லை” என்று சற்று இரைந்தே சொல்லி, மோதிரத்தை மீண்டும் கரிகாலனிடம் திருப்பிக் கொடுத்தான்.

மோதிரத்தை அவன் பரீட்சை செய்தாலும், தன் சாயலைக் கண்டே தன்னைச் சோழ நாட்டவனென்றும் ஊகித்தாலும், தன் பிறப்பு மர்மத்தை அவன் பூர்ணமாக அறிந்திருக்கிறானென்பதை உணர்ந்து கொண்ட கரிகால னுக்குப் பெரும் மேகத்திடையே சிறிய மின்னல் தோன்று வதுபோல், எதிரிக் கோட்டைக்குள்ளே, பேராபத்துக் கிடையே, ஒரு நன்மையும் பயக்குமென்ற உணர்வு ஏற்பட்டதும், மகிழ்ச்சி வெள்ளம் முகத்தில் தாண்டவமாடப் பிரதாபருத்திரனை நோக்கி, “என் தந்தையை உங்களுக்குத் தெரியுமா?” என்று திட்டமாகவே கேட்டான்.

“தெரியும்!” அதைவிடத் திட்டமாக வெளிவந்தது பிரதாபருத்திரன் குரல்.

“எப்படித் தெரியும்?”

“சோழச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழன் கீழ் இருவரும் படைத்தொழில் புரிந்தோம். ஈழத்துப் போரில் தோளுக்குத் தோள் நின்று போரிட்டோம்.”
“அவர் பெயர்?”

“சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். பிரமாணம் என்னைக் கட்டுப்படுத்துகிறது கங்கா! ஆனால், நான் எடுத்துக்கொண்ட பிரமாணத்தை உடைக்கவும் சித்தமாயிருக்கிறேன், ஒரு நிபந்தனையின் மேல்.”

“என்ன நிபந்தனை அரசே?”

“அரையன் ராஜராஜன் படைகளை எப்படி அணிவகுத்திருக்கிறான் என்று நீ சொன்னால்…” என்று நிபந்தனையைக் குறிப்பிட்டுச் சிறிது தயங்கவும் தயங்கி னான் பிரதாபருத்திரன்.

கரிகாலன் வழக்கமாகத் தன் தந்திரத்தைத் துவக்கி “அது எனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினான்.

“நீ அவன் படையைச் சேர்ந்தவன்” என்று நிதானமாக வெளிவந்தன பிரதாபருத்திரன் சொற்கள்.

“நானா?”

“ஆம். நீயும் உன்னுடன் உணவுப்பொருள் கொண்டு வந்திருப்பவர்களும். கங்கா! உணவுப் பொருள் இப்படி ரகசியமாக வருவது உனக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆகவே, ஜெயவர்மனை மடக்கிக் கோட்டைக்குள் வரும் முறையைத் தெரிந்து கொண்டு உள்ளே புகுந்துவிட்டாய். ஆம், உள்ளே புகுந்துவிட்டாய். ஆனால், வெளியே செல்ல முடியாது. நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ ஒழுங்காகப் பதில் சொன்னால், உன் பிறப்பு மர்மத்தை விளக்குவேன். இல்லையேல் இந்தச் சக்கரக் கோட்டத்தின் மத்தியிலிருக்கும் தூக்குமேடையில் உன்னையும் உன் சகாக்களையும் மாட்டித் தொங்கவிடுவேன். நீ எனது நண்பனின் புதல்வன் தான். ஆனால், இந்தக் கோட்டையைக் காத்து, சோழர்கள் கங்கைப் படையெடுப்பைத் தடை செய்ய உன்னையும் தியாகம் செய்வேன்” என்றான் பிரதாபருத்திரன்.

விதி இப்படித் திரும்பு மென்பதைச் சற்றும் எதிர் பார்க்காத கரிகாலன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். தூக்குமேடையைப் பற்றி அவன் கவலைப்பட வில்லை . அந்தப் பயங்கரம் மிகச் சகஜமாயிருந்தது அவனுக்கு. ஆனால் பிரதாபருத்திரன் அடுத்துக் கேட்ட கேள்வி? மிகப் பயங்கரம்! தூக்கில் தொங்கலாடுவதை விட எத்தனையோ மடங்கு பயங்கரம்! ஒவ்வொரு கேள்வியும் விஷம் தீட்டப்பட்ட பெரிய ஈட்டியைப் போல் பாய்ந்தது கரிகாலன் இதயத்திலே.

Previous articleMannan Magal Part 2 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here