Home Historical Novel Mannan Magal Part 2 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

96
0
Mannan Magal part 2 Ch 22 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 22 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 பொய்யும் மெய்யும்

Mannan Magal Part 2 Ch 22 | Mannan Magal | TamilNovel.in

நாகப்பட்டிணத்துச் சூடாமணி விஹாரத்திலிருந்து கிளம்பிய பிறகு, வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ திருப்பங்ளை அடைந்து, எத்தனை எத்தனையோ ஆபத்துக் களில் சிக்கி, அத்தனையையும் தன் ஆராய்ச்சித் திறமையாலும் அறிவின் பலத்தினாலும் அறுத்துக்கொண்டு வெற்றியுடன் தப்பிய கரிகாலன், அன்று அந்த நாகர்களின் மாளிகையில் மனத்தில் அச்சமே பெரிதும் மேலோங்க நின்றான். உயிரைப் பற்றி அவன் சிறிதுகூடக் கவலையோ அச்சமோ படவில்லை. தன் உள்ளக் கருத்துக்களை அக்கக்காக அலசிப் பார்க்கவல்ல பெரிய அறிவாளியும், எப்படியாவது சோழர் படையெடுப்பை முறியடித்துவிடு வதில் ஊக்கமுள்ளவனுமான பிரதாபருத்திரன் வீசிய ஆராய்ச்சி வலையில் தான் அயர்ந்து மறந்து சிக்கி விட்டால், சோழர் படையெடுப்பின் கதி அதோகதியாகி விடுமே என்ற நினைப்பே அவன் இதயத்தில் விவரிக்க வொண்ணாத கிலியைக் கிளப்பியிருந்தது. சக்கரக் கோட்டத்துத் தலைவனான பிரதாபருத்திரன் இராஜராஜன் காலத்திலேயே சோழப் படைகளில் சேவை செய் தவனாகையால் சோழர் போர் முறைகளை நன்றாக அறிந் திருப்பானென்பதையும், அவனிடம் அரையன் ராஜராஜன் படை அணிவகுப்பு முறையைச் சொல்லிவிட்டால் சோழர் படைகளைப் பூர்ணமாக முறியடிக்காவிட்டாலும், சக்கரக் கோட்டத்தைத் தாண்டிச் செல்லாத நிலைமைக்குக் கொண்டு வந்துவிடுவானென்பதையும் ஊகித்துக்கொண்ட கரிகாலன், நாகர்கள் தளபதியின் கண்களில் எப்படி மண் தூவலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவும் செய்தான். பிரதாபருத்திரன் கேள்விகளுக்கு உடனுக்குடனே பதில் சொல்லி ஏமாற்ற முயன்றால் நாகர்கள் தளபதி, தன்னை நம்பமாட்டானென்பதிலும், அப்படி நம்பாவிட்டால் அவன் ஏற்கெனவே சொல்லியபடி தன்னையும் தன் சகாக்களையும் தூக்கில் போடத் தயங்கமாட்டான் என்பதிலும் கரிகாலனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. தன் உயிரைப்பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை யென்றாலும், தன் சகாக்களின் உயிரைப் பற்றிக் கவலை இருந்ததால், தன்னை நம்பிக் கோட்டைக்குள் நுழைந்திருக்கும் அவர்களைக் காப்பாற்றுவது தன் கடமை என்று கருதினான். தன் உயிரைக்கூட அந்தச் சந்தர்ப்பத்தில் விட அவனுக்கு இஷ்டமில்லைதான். ‘என் பிறப்பைச் சூழ்ந் திருக்கும் மர்மத்தை அறியாமல் நான் சாகலாமா? அந்த மர்மம் இந்தப் பிரதாபருத்திரனுக்கு ஓரளவு தெரிந் திருக்கும் போலிருக்கிறதே’ என்று நினைத்துக்கொண்டான்.

பிரதாபருத்திரன் மனமும் அப்பொழுது அதிதுரிதமாக வேலை செய்துகொண்டுதானிருந்தது. தன் எதிரே நிற்பவன் யாரென்பதைச் சந்தேகமற ஊகித்துவிட்ட பிரதாப ருத்திரன், அந்த ஊகத்தினால் எத்தனை நன்மைகள் சக்கரக் கோட்டத்துக்கு விளையலாம் என்பதை எண்ணி மகிழ்ச்சியாய் பெருமூச்சு விட்டான். அந்த மகிழ்ச்சிப் பெரு மூச்சுகூட அந்தச் சூழ்நிலைக்குப் பயங்கரத்தையே அளித்தது. பிரதாபருத்திரன்தான் பெருமூச்சு விடுகிறானா, அல்லது அந்த மண்டபத்தின் தூண்களைச் சுற்றிக் கொண்டு பயங்கரமாகத் தலைகளை நீட்டிக் கொண்டிருந்த சித்திரச் சிற்பங்களின் சீறலா அது என்று சந்தேக முண்டாக்கும் வகையில் தாக்கி எதிரொலி செய்தது அவன் பெருமூச்சு. சோழர்கள் மீது தான் அடையக்கூடிய வெற்றி, எதிரே ஏது மறியாதது போல நிற்கும் சிறுவன் மசிவதில் தான் இருக்கிறதென்பதைத் திண்ணமாகத் தெரிந்து கொண்ட பிரதாபருத்திரன் மிக அன்புடன் கரிகாலனை நோக்கினான். அவன் பேச்சும் தேன் பாகாகத் தான் உருகி வந்தது. ஆனால் அந்தத் தேனில் விஷம் பரிபூரணமாகக் கலந்திருப்பதைக் கண்ட கரிகாலன் மிகுந்த எச்சரிக்கையுடன் சம்பாஷணையில் இறங்கினான்.

ஆரம்பத்தில் சம்பிரதாயமாகவே எழுந்தன பிரதாப ருத்திரன் கேள்வி. “கங்கா! சோழர் படையில் என்ன பதவி வகிக்கிறாய்?” என்று கேட்டான் பிரதாபருத்திரன்.

அந்தக் கேள்வியை அடியோடு மறுப்பதில் பயனில்லை என்பதையும், தன் உண்மைச் சொரூபத்தை பிரதாபருத்திரன் பெரிதும் ஊகித்துவிட்டானென்பதையும் அறிந்துகொண்ட கரிகாலன், தன் வழக்கப்படி உண்மையையும் பொய்யையும் கலந்து கலந்து பதில் சொல்லத் தொடங்கி, சக்கரக் கோட்டத்துத் தலைவன் கேள்வியால் திடீரென அதிர்ச்சியடைந்தவன் போல் பாசாங்கு செய்து “என்ன கேட்டீர்கள் மன்னவா?” என்று பதிலுக்கு வினவினான்.

சிறிதும் குழப்பமில்லாத திட்டமான குரலில் மீண்டும் எழுந்தது பிரதாபருத்திரன் கேள்வி: “சோழர் படையில் என்ன பதவி வகிக்கிறாய்?”

“உபதளபதியாயிருக்கிறேன்” என்று தயக்கமில்லாமலே பதில் சொன்னான் கரிகாலன்.

கரிகாலன் முகத்தைவிட்டுக் கண்களை அகற்றாமலே மேற்கொண்டு கேள்விகளைத் தொடர்ந்தான் பிரதாப ருத்திரன். “உன் கீழ் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்?”

“ஆயிரம் வீரர்கள்.”

“அவர்களை எந்தப் பக்கத்தில் நிறுத்தியிருக்கிறாய்?”

“மேற்குத் திசையிலுள்ள காட்டுக்கருகில்.”

இந்தப் பதில் பிரதாபருத்திரனுக்குச் சிறிது மகிழ்ச்சியை அளித்ததால், அவன் இதழ்களில் புன்முறுவல் லேசாக அரும்பிற்று. கரிகாலன் உண்மை பேச ஆரம்பித்து விட்டானென்பதை அறிந்துகொண்டதற்கு அறிகுறியாக இதழ்களில் தோன்றிய இந்தப் புன்னகை பிரதாபருத்திரன் முகம் பூராவுக்கும் ஒரு தனிச் சோபையை அளித்தது. அந்தப் புன்னகையின் உட்பொருளைப் புரிந்து கொண்ட கரிகாலனும் தன் கைச்சரக்குப் பலிக்க ஆரம்பித்து விட்டதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தானானாலும், அதை வெளியில் காட்டாமலே மிகப் பணிவுடன் பதில்களை சொல்லலானான்.

“மேற்குத் திசையிலுள்ள காட்டுக்கருகிலா?” என்று அலட்சியமான குரலில் பிரதாபருத்திரன் மீண்டுமொரு கேள்வியை வீசினான். அந்த அலட்சியம் போலியென்பதையும், தன்னைச் சோதிப்பதற்கு அது ஒரு போர்வை யென்பதையும் அறிந்து கொண்ட கரிகாலனும், சற்று எச்சரிக்கையுடனேயே பதில் சொல்லத் தொடங்கி, “ஆமாம் மன்னவா! அதனால்தான் தங்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது” என்றான்.

அந்தப் பதிலில் தொக்கி நின்ற பொருளைக் கவனித்த பிரதாபருத்திரன் லேசாகச் சிரித்துவிட்டு, “ஆம் கங்கா! உண்மைதான். என்னைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது அதனால்தான். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் உண்மையாகப் பதில் சொல்லிக்கொண்டு வா. அந்தப் பாக்கியம் பன்மடங்கு அதிகமாகும்படி செய்கிறேன். முதன் முதலாக வேங்கி நாட்டு நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது இராஜராஜ நரேந்திரன் எங்கிருக்கிறான்?” என்று வினவினான்.

இந்தக் கேள்வி கரிகாலனை ஓரளவுக்குத் திடுக்கிட வைத்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலே “தங்கள் வாயிலிலேயே தற்சமயம் இருக்கிறார்” என்றான்.

“அரையன் ராஜராஜன் படையிலா?”

“ஆமாம்.”

“எதற்காக இந்தப் படையுடன் வந்திருக்கிறான்?”

“அவர் சகோதரியின் விருப்பம் அது.”

“யார், நிரஞ்சனாதேவியா சோழர்கள் படையில் தம்பியைப் பணி செய்யத் தூண்டினாள்?”

ஆம் அரசே! ஒரு காலத்தில் அவர் பெரிய வீரராகி, மீண்டும் வேங்கி நாட்டை ஆளவேண்டுமென்பது அரச குமாரியின் கனவு.”

“அது எப்படிப் பலிக்கும்?”

“ஏன் பலிக்காது?”

தெளிவாக மெள்ள, ஆனால் வெகு உறுதியாக வெளி வந்தது பிரதாபருத்திரன் பதில். ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரித்தான் சக்கரக் கோட்டத்துத் தலைவன். “பலிக்காதபடிதான் செய்துவிட்டாயே கரிகாலா!” என்ற பிரதாபருத்திரன், அடுத்த விநாடி இடியிடியென மண்டபமே அதிரும்படியாகச் சிரித்தான்.

மண்டபத்தின் விமானத்திலிருந்து எழுந்த சிரிப் பொலியின் எதிரொலி பளிச்பளிச்சென்று கரிகாலன் தலைமீது விழுவது போன்ற பிரமையைச் சிருஷ்டிக்கவே, மெய்மறந்து ஒருவிநாடி சிலையென நின்றான் கரிகாலன். அவன் பிரமையை விலக்க விவரித்தான் பிரதாபருத்திரன். “கரிகாலா! உன்னைக் கண்டதுமே உன்னை இன்னாரென்று தீர்மானித்துவிட்டேன். சுயநன்மையையும் சோழ நாட்டு நலனையும் உத்தேசித்து நீ நிரஞ்சனாதேவிக்குத் துரோகம் செய்ததும்; வேங்கி நாட்டு அரியணையை ஜெயசிம்ம சாளுக்கியன் மருமகனான விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனுக்கு விற்றுவிட்டதும், அக்கம் பக்கத்து அரசுகளில் பிரதி தினம் பேசப்பட்டு வருகிறது. லாபம் மட்டும் இருக்கும் பட்சத்தில், நீ யாரையும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டாய் என்று ராஜதந்திரிகள் கூறுகிறார்கள். ஒற்றர்கள் மூலம் கிடைத்திருக்கும் செய்தியும் அதுதான். ஆகையினால் தான், உன்னுடன் இன்று தனிமையில் நானும் பேச எண்ணினேன்” என்றான்.

கரிகாலன் சிந்தனையில் எண்ணங்கள் எழுந்து புரண்டன. வேங்கி நாட்டு விவகாரங்களால் எத்தனை அபகீர்த்தி தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து ஒருவிநாடி ஏங்கினானாயினும், அந்த அபகீர்த்தியும் அந்தச் சமயத்தில் தனக்கு உதவுவதை நினைத்து வியந்தான். இப்படி ஓர் அபகீர்த்தி இல்லாவிடில், நானும் என் சகாக்களும் இத்தனை நேரம் தூக்கில் தொங்கலாடியிருப்போம். இவன் ஏதோ ஆசை காட்டி என்னிடமிருந்து அரையன் ராஜராஜன் அணிவகுப்பைப் பற்றித் தகவல் அறியப் பார்க்கிறான். சுயநலத்துக்காக நான் எதையும் செய்வேனென்பதிலும் இவனுக்குச் சந்தேகமில்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட கரிகாலன் கடைசி யாகப் பிரதாபருத்திரனை ஏறெடுத்து நோக்கி, “மன்னவா! நான் யாரென்பதையும், என் பெயர் என்ன என்பதையும் எப்படியோ ஊகித்துவிட்டீர்கள்….” என்று ஆரம்பித்தான்.

அவன் பேச்சை இடையில் வெட்டிய பிரதாப ருத்திரன், “இதில் அதிக ஊகத்திற்கு இடமில்லை கரிகாலா! வேங்கி நாட்டிலும் மேலைச் சாளுக்கிய எல்லையில் அரையன் ராஜராஜன் பாசறையிலும் நடந்த உன் லீலாவினோதங்களை உலகம் அறியும். வேங்கி நாட்டு மக்களே அதைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். போதாததற்குச் சேர நாட்டு ஒற்றன் ஜெயவர்மனும் உன்னைப்பற்றி அடிக்கடி கூறியிருக்கிறான்” என்றான்.

“என்ன கூறியிருக்கிறான் அரசே?” என்றான்.

“நீ பெரிய பொய்யன்; தந்திரசாலி; உன்னை நம்பக்கூடாது என்று.”

“ஓகோ!”

“அதுமட்டுமல்ல; உன் பெயரையும் அங்க அடை யாளங்களையும் சொல்லியிருக்கிறான்.”
“அப்படியா?”

“ஆமாம், காட்டுக்கு ஓரமாக உன் பாசறை இருப்பதும் அவனுக்குத் தெரியும். என்றாவது அவன் உன்னிடம் பிடிபடக் கூடும் என்று பயந்துகொண்டிருந்தான். அது நடந்துவிட்டது.”

கரிகாலன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான் “ஏன் மௌனம் சாதிக்கிறாய் கரிகாலா?” என்று பிரதாப ருத்திரன் வினவினான்.

“நான் பேச என்ன இருக்கிறது மன்னவா! எல்லா வற்றையும் நீங்களே சொல்கிறீர்களே!”

“இதையெல்லாம் நான் முன்பே அறிவேன் கரிகாலா! ஆனால் நான் அறியாத விஷயங்களும் இருக்கின்றன. உதாரணமாக, அரையன் ராஜராஜன் படை அணி வகுப்பைப் பற்றி எனக்குத் தெரியாது. அரையன் ராஜ ராஜன் படைப் போர்த் திட்டமும் எனக்குத் தெரியாது. அவற்றை உன்னிடமிருந்து அறிய இஷ்டப்படுகிறேன். சொன்னால்…”

“சொன்னால்?”

“உனக்குச் சக்கரக் கோட்டத்தில் பெரும் பதவி கிடைக்கும்.”

“என்ன பதவியளிப்பீர்கள்?”

“எனக்கு அடுத்தபடி உன்னை இக்கோட்டத்தின் காவலனாக நியமிப்பேன். நாகர்கள் உனக்குத் தலை வணங்குவார்கள். உன் பிற்காலம் பயனுள்ளதாக இருக்கும்.”

“அத்தனை பெரிய பதவியா?”

“ஆமாம் கரிகாலா! அத்தனை பெரிய பதவி இப்பொழுது உன் காலடியில் கிடக்கிறது!”

இதைக் கேட்ட கரிகாலன், ஏதோ யோசிப்பது போல் பாசாங்கு செய்தான். பிரதாபருத்திரன் அளிக்கும் பதவியை உடனே ஒப்புக்கொள்வது சந்தேகத்தை அளிக்கும் என்று நினைத்து, திருப்தியடையாதவன் போல் பேச ஆரம்பித்து, “மன்னவா! நான் பதவிக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ய முன்வரமாட்டேன். அத்தனை கயவனல்ல நான்” என்று மனவருத்தத்தை லேசாகக் காட்டினான்.

“வேறு எதற்கு ஆசைப்படுகிறாய்? சொல், பெரும் படைகளை விலைக்கு வாங்கவல்ல நாகரத்தினங்கள் வேண்டுமா? பொற்காசுகள் கோடிக்கணக்கில் வேண்டுமா?” என்று ஆசை காட்டினான் பிரதாபருத்திரன்.

“அவையும் வேண்டியதுதான். அத்துடன்”

“என்ன?”

“என் பிறப்பு மர்மம்.”

பிரதாபருத்திரன் சற்றே யோசித்தான்; பிறகு சொன்னான்: “பிறப்பு மர்மத்தைச் சொல்ல என் நண்பனுக்குக் கொடுத்த பிரமாணத்தை உடைக்க வேண்டும்.” என்று.
“தர்மம் அதற்கு இடம் கொடுக்கிறது மன்னவா!”

“தர்மத்தைப் பற்றித் தெரியுமோ உனக்கு?”

“தர்க்க சாஸ்திரத்தை நன்றாகப் படித்திருக்கிறேன்.”

“அந்த சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?”

“பெரிய நன்மைகளைப் புரிய, சிறிய பாவங்களைச் செய்யலாம் என்று கூறுகிறது. இந்தக் கோட்டையைப் பாதுகாப்பது தங்கள் தர்மம். அதற்காகப் பிரமாணத்தை உடைப்பது தவறாகாது.”

“அப்படிப் பிரமாணத்தை மீறுவதானால், அரையன் ராஜராஜன் படைகளை உடைக்க வழி சொல்கிறாயா?”

“சொல்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு!”

கரிகாலனை ஒருகணம் கூர்ந்து கவனித்தான் பிரதாப ருத்திரன். பலர் சந்தேகங்களை உடைத்தெறியும் அந்தக் குழந்தை முகம், யாரையும் மயக்கும் அந்த விஷமப் புன்முறுவல், அவன் சந்தேகங்களையும் உடைத்தெறியவே அவன் சொன்னான்: “கரிகாலா! அந்தப் பிரமாணம் எத்தன்மையதென்பதை நீ அறியமாட்டாய். அதை மீறுவதும் அவ்வளவு சுலபமல்ல. மீறினால் என் வம்சத்தையே அது பாதிக்கலாம். இருப்பினும் மீறுகிறேன். நாகர்களின் நன்மையை முன்னிட்டு என்னையும் என் வம்சத்தையும் தியாகம் செய்கிறேன். இந்தப் போரில் அரையன் ராஜராஜன் படைகள் முறியடிக்கப்பட்டால், உனக்கு இந்நாட்டில் பெரும் பதவி தருவதுமல்லாமல், சோழ நாட்டையே ஒரு கலக்கு கலக்கவல்ல உன் பிறப்பு மர்மத்தைக் கூறுகிறேன். இப்பொழுது சொல், அரையன் ராஜராஜன் படைகளின் அணிவகுப்பு எப்படியிருக்கிறது?”

கரிகாலன் ஏதோ யோசிப்பது போலும், தகவலைக் கூற இஷ்டமில்லாதது போலும் சிறிது நேரம் பாசாங்கு செய்துவிட்டுத் தான் செங்கமலச் செல்வியிடம் சொல்லி விட்டு வந்த அணிவகுப்பு முறையை நேர்விரோதமாக மாற்றிச் சொல்லத் தொடங்கினான். அந்தப் பேச்சைப் பிரதாபருத்திரன் நம்புவதற்காக ஓரளவு உண்மையையும் கலந்து கொண்டான். “மன்னவா! அரையன் ராஜராஜன் படை மூன்று பிரிவாக பிரிந்து நிற்கிறது. உங்களுக்கு நேர் எதிரில் பிரும்ம மாராயன் குதிரைப் படைகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கிழக்குக் கதவுக்கெதிரில் அரையன் ராஜராஜன் தன் படைப் பிரிவை நிறுத்தியிருக்கிறான். மற்றப் படைகள் செங்கமலச் செல்வியின் தலைமையிலும், ராஜ ராஜ நரேந்திரன் தலைமையிலும் காட்டு முகப்பில், அதாவது மேற்குப் பகுதியில் நிற்கின்றன” என்று விவரித்துச் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

பிரதாபருத்திரன் வியப்பினால் விழிகளைக் கரிகாலன் மீது நாட்டி, “இதென்ன விசித்திரமாயிருக்கிறதே! பிரதான படைத்தலைவன் பக்கவாட்டிலும், அவனுக்கு அடுத்தவன் நேர் எதிரிலுமா அணிவகுத்து நிற்பார்கள்! சோழ நாட்டுப் போர் முறைக்கே இது முரணாயிற்றே?” என்று கேட்டான்.

அவன் உள்ள நிலையைச் சரியாக ஊகித்து விட்டதைக் கண்டு கரிகாலன், “சாதாரணமாகப் படை அணிவகுப்பு மாறித்தானிருக்க வேண்டும். ஆனால், நான் புறப்படு முன்பு அவர்கள் செய்த மந்திராலோசனையில் முறையை மாற்றி விட்டார்கள். எதிர்பாராத விதமாகத் தங்களைத் தாக்கவே இந்த மாறுதல். அரையன் ராஜ ராஜனை எதிர்பார்த்து நீங்கள் தெற்கு வாயில் வழியாகப் புறப்படுவீர்கள். பிரும்ம மாராயர் தங்களைத் தடுத்துத் தாக்குவார். அதற்குள் அரையன் ராஜராஜன், கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசலை நோக்கிப் பின் புறமாகப் படைகளுடன் வருவான். இரு படைகளுக்கும் இடையே தங்கள் படை நொறுங்கிவிடும்” என்று விவரித்தான்.

உண்மைக்கு முழுதும் மாறுபட்ட இந்த அணி வகுப்பைப் பற்றிக் கரிகாலன் கூறிய தகவல்களைக் கேட்ட பிரதாபருத்திரன், அதைப் பெரும் உண்மையென்றே கருதினான். அதில் கண்ட போர்த்தந்திரம் பெரிய படைத் தலைவர்கள் கையாளும் முறைகளைப் பின்பற்றியிருந் தமையால் சந்தேகத்துக்குச் சிறிதும் இடமில்லாது போகவே, நாகாசனத்திலிருந்து எழுந்து, கரிகாலன் அருகில் வந்த பிரதாபருத்திரன், “கரிகாலா! இன்னுமொரு கேள்வி, யானைப் படைகள் என்னவாயின?” என்று வினவினான்.

“அவற்றைப் பின்னணிக்குக் கொண்டு போய் விட்டார்கள்.”

“ஏன்?”

“நான் யோசனை சொன்னேன்.”

“உன் யோசனையா அது?”

“ஆமாம், யானைப்படைகள் முன் நின்றால் விஷந் தீட்டிய உங்கள் வாளிகளும் வேல்களும் அவற்றின் மீது பாயும். அதனால் அவை மிரண்டு திரும்பி ஓடும். இது சோழர் படைகளுக்குப் பெருத்த சேதத்தை அளிக்கு மல்லவா? அதனால்தான், கடைசிக் கட்டத்தில் அவற்றை நிறுத்தி வைக்கும்படி ஏற்பாடு செய்தேன்.”

பிரதாபருத்திரன் மனத்தில் ஏதாவது சந்தேகமிருந்தால், இந்தப் பதில் அந்தச் சந்தேகத்தை அறவே உடைத்து விட்டது. யானைப் படைகள் பின்னணிக்கு அழைத்து செல்லப்படுவதாகக் கோட்டையிலிருந்து பார்த்த அவன் வீரர்கள் அவனுக்குத் தகவல் கொடுத்திருந்தார்கள். ஆகவே, கரிகாலன் சொன்னது அனைத்தும் உண்மையே என்று பிரதாபருத்திரன் நம்பிப் பூரண மகிழ்ச்சியுடன் கேட்டான்; “எந்தச் சமயத்தில் அவர்கள் கோட்டையைத் தாக்க உத்தேசம்?” என்று.

“நாளை நள்ளிரவில் கோட்டைக் கதவுகளைத் திருட்டுத்தனமாகத் திறந்துவிடுவதாகக் கூறியிருக்கிறேன்” என்றான் கரிகாலன்.

“மகிழ்ச்சி கரிகாலா! அதே நள்ளிரவில் கோட்டைக் கதவுகளைத் திறக்கிறேன். ஆனால் அவர்கள் இஷ்டப்படி போர் செய்ய அல்ல; என் இஷ்டப்படி புரிய. கிழக்கு வாயிலில் அரையன் ராஜராஜனை என் படைகள் சந்திக்கும். தெற்கு வாயிலில், என் உபதளபதி பிரும்ம மாராயரைச் சந்திப்பார். மேற்குத்திசைக் கதவைத் திறக்கவே மாட்டோம். இந்த இரண்டு கதவுகளும் சற்று நேரம்தான் திறந்திருக்கும். அரையன் ராஜராஜனும் பிரும்ம மாராயரும படை முகப்பில் நின்று போர் புரிவார்கள். அவர்கள் கோட்டைக்குள் நுழைந்ததும், கதவுகள் எதிர்பாராத விதமாகச் சாத்தப்படும். சில வீரர்களும் அரையன் ராஜராஜனும் பிரும்ம மாராயரும் கோட்டைக்குள்ளே சிக்கிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் கதி அதோகதியாகிவிடும்” என்று தன் போர்த்திட்டத்தை விளக்கிய பிரதாபருத்திரன், தன் சாமர்த்தியத்தை எண்ணிப் பெரிதாக நகைத்தான்.

மறுநாள் அவன் ஏற்பாட்டின்படியே படைகள் கோட்டைக்குள் அணிவகுக்கப்பட்டன. வீரர்கள் ஆயிரக் கணக்கில் வாயில்களுக்கு அருகே கதவுப்பக்கங்களில் ஒதுங்கி நின்றார்கள். பூர்ண கவசமணிந்த பிரதாப ருத்திரனும் தன் பெரும் புரவி மீது கம்பீரமாக அமர்ந்து கோட்டை வாயிலை நெருங்கினான். அவன் வாயிலை அணுகுமுன்பாகவே அவனை நோக்கி ஓடி வந்த வீரன், “மன்னவா! சோழப் படைகள் நகர ஆரம்பித்துவிட்டன” என்று எச்சரிக்கை செய்தான். அதைக் கேட்ட பிரதாப ருத்திரன், வாளை ஆகாயத்தில் உயர்த்தி ஏதோ சமிக்ஞை செய்தான். ஆயிரக்கணக்கான வாள்கள் ஆகாயத்தில் எழுந்து ஒருமுறை ஆடித் தாழ்ந்தன! எங்கும் நிசப்தம்! கோட்டைக்கு வெளியே சோழப்படைகள் மெல்ல மெல்ல நகர்ந்து வந்தன. அந்தப் படைகளின் குதிரையின் குளம்புகள் தரையில் மாறிமாறிப் பதிந்ததால் ஏற்பட்ட சப்தம் மெல்ல மெல்ல கேட்டது. பெரிய கடல் மூன்று பிரிவாகப் பிரிந்து சக்கரக் கோட்டத்தின் மீது மோத வருவதாகத் தோன்றியது. ரகசியத் தாக்குதலால் பந்தங்கள் கூடக் கொளுத்தப்படவில்லை. பிசாசுகளின் சமூகமே திரண்டு நெருங்கி வருவது போன்ற பிரமையை அளித்துக் கொண்டே நகர்ந்தது. சோழர்களின் பெரும்படை. அடுத்த கணத்தில் நிகழப்போகும் பெரும்போரில் உயிர்களைப் பிடிப்பதற்காகக் காலதேவனே தன் பாசக் கயிற்றை வீசியது போல், நீண்ட கருமேகம் ஒன்று ஆகாயத்தின் குறுக்கே எழுந்தது. இந்தப் போர்த் தாண்டவத்தைப் பார்க்க அச்சப்பட்டன போல் மேற்றிசைக் காட்டிலிருந்த பறவை கள்கூட ‘கூ கூ’ என்று கூவின. வேகமாக அந்தப் பக்கத்தை நோக்கி நகர்ந்த சோழர் ரதங்களின் சக்கரங்கள் அந்தக் ‘கூ கூ’ ஓலத்துடன் தங்கள் கிரீச் கிரீச்’சென்ற அலறலையும் இணைத்துக் கோரமான சூழ்நிலையைச் சிருஷ்டித்தன.

சோழர் படைகள் மெள்ள மூன்று வாயில்களையும் நெருங்கின. அப்படைகளை விழுங்க முற்பட்ட வாஸ்து புருஷனின் பெரு வாய்களைப்போல் சக்கரக் கோட்டத்தின் கிழக்கு, தெற்கு வாயிற்கதவுகள் மெள்ள மெள்ளத் திறக்கத் தொடங்கின.

Previous articleMannan Magal Part 2 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here