Home Historical Novel Mannan Magal Part 2 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

89
0
Mannan Magal part 2 Ch 23 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 23 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

Mannan Magal Part 2 Ch 23 | Mannan Magal | TamilNovel.in

முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து, ஆழ்கடலின் பேரலைகளைப்போல திரண்டு எழுந்து, சக்கரக் கோட்டத் தின்மீது மோதி, அதை மூழ்கடித்துவிட நெருங்கிய சோழப் பெரும் படையை எதிர்க்க ஆயத்தமாகக் கோட்டைக்குள்ளே நின்ற பிரதாபருத்திரனுக்கு, இரண்டு பெரிய ஏமாற்றங்கள் காத்துக் கொண்டிருந்தன. அரையன் ராஜராஜன் கிழக்கு வாசலிலும் பிரும்மமாராயர் மேற்கு வாசலிலும் தாக்குவார்கள் என்று கரிகாலன் சொன்ன பொய்யால் ஏற்பட்ட ஏமாற்றம் ஒன்று; கோட்டை வாயில்களை நெருங்கியதும் அரையன் ராஜராஜன் திடீரெனப் போர்முறையை மாற்றிவிட்டது மற்றொன்று. இந்த இரண்டாவது ஏமாற்றத்திற்கான அறிகுறிகள் சோழப் படைகள் வாயிலை நெருங்கியதுமே ஏற்பட்டதைக் கண்ட பிரதாபருத்திரன், சற்றுப் பிரமித்தே போனான்.

சோழப் படைகள் கிழக்கு, தெற்கு வாசல்களில் திடீரென உட்புகும், அவற்றில் ஒரு பகுதியை உள்ளே விட்டு மீதியைக் கதவை மூடித் தேக்கிடலாம் என்ற எண்ணத்தில் கதவுக்குப் பக்கவாட்டில் மட்டுமின்றி தளத்தின் மேலேயிருந்து சுழற் கட்டைகளைத் திருப்பிக் கதவுகளை மூடவும் வீரர்களை நிறுத்திருந்தான் பிரதாப ருத்திரன். ஆனால் அரையன் ராஜராஜன் போர்த் திட்டத்தில் ஏற்படுத்திய மாறுதலும், அவன் கையாண்ட வேறு சில முறைகளும் பிரதாபருத்திரனின் திட்டங்களை அடியோடு குலைத்தெறிந்து விட்டன.

கரிகாலன் செங்கமலச் செல்வியிடம் சொல்லிவிட்டுப் போனபடிதான், அரையன் ராஜராஜனும் படைகளை அணிவகுத்துச் சக்கரக் கோட்டத்தின் பெரும் வாயில்களை அணுகினான். ஆனால், அந்த வாயில்களைத் தான் அணுகுவதற்கும் அந்த வாயில்கள் ஏதோ தன் படைகளை எதிர்பார்த்தவைபோல் திறந்ததற்கும் நேரம் சரியாக இருந்ததைப் பார்த்து ஒருவிநாடி தன் புரவியைச் சட்டென்று நிறுத்தி, மற்றப் படைகளையும் உட்புகாதிருக்க தன் வாளை உயர்த்திச் சமிக்ஞை செய்தான். எத்தனையோ போர்களைக் கண்டவனும், ஜெயசிம்ம சாளுக்கியன் போன்ற பெரிய தந்திரசாலிகளையே முறியடித்திருப்பவனும், வெகு சூட்சும புத்தியை உடைய வனுமான அரையன் ராஜராஜனுக்கு அந்தக் கதவுகள் அத்தனை ஏற்பாட்டுடன் சரியான சமயத்தில் திறந்தது பெரும் சந்தேகத்தை அளித்தது. கரிகாலன் உள்ளேயிருந்து அந்தக் கதவுகளைத் திருட்டுத்தனமாகத் திறந்திருந்தால், கதவுகள் மிக அவசரமாகவும் வேகமாகவும் திறக்கப் பட்டிருக்குமென்பதையும், ஏதோ அரசர்கள் வரவேற்புக் காகத் திறக்கப்படும் கதவுகளைப்போல் அத்தனை நிதானமாக, ஒழுங்காகத் திறக்கப்பட மாட்டாவென் பதையும் உணர்ந்து கொண்ட அரையன் ராஜராஜன், இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறதென்ற முடிவுக்கு வந்ததும், அவன் உத்தரவுகளும் மின்னல் வேகத்தில் பறந்தன.

தன் உபதளபதிகளில் மூவரை அழைத்து, சோழர் படைத்தலைவன் கிழக்கு வாயிற்கதவு மூட ஆரம்பிக்கும் வரையில் தாக்க ஆரம்பிக்க வேண்டாமென்றும், மூடத் தொடங்கியதும் திடீரென உட்புகுமாறும் செய்தி சொல்லி பிரும்ம மாராயரிடம் ஓர் உபதளபதியை அனுப்பினான். இன்னொரு உபதளபதியை அனுப்பி மேற்கு வாயில் படை களுக்குத் தலைமை தாங்கி நின்ற செங்கமலச் செல்வியை உடனே அவ்வாயிலைத் தாக்கிக் கதவுகளைப் பத்துப் பதினைந்து யானைகளைக் கொண்டு நொறுக்கி உட்புகு மாறு ஆக்ஞாபித்துவிட்டு மற்றொரு உபதளபதியை நோக்கி மூன்று கோட்டைக் கதவுகளுக்கும் மேலே தெரிந்த சுழல் சக்கரங்களைக் காட்டி அந்தச் சக்கரங்களை இயக்க வரும் வீரர்களை அம்பெறிந்து கொன்றுவிடுமாறும் உத்தர விட்டான்.

அரையன் ராஜராஜன் உத்தரவுகள் கண நேரத்தில் நிறைவேற்றப்பட்டன. மூன்று பிரிவுகளிலுள்ள வில்லவர், கோட்டை வாயில்கள் மீதுள்ள சுழற் சக்கரங்களுக்கு அம்புகளைக் குறி வைத்து நின்றார்கள். தன் தந்தையைப் போலவே தங்கக் கவசத்தை அணிந்து, அந்தப் போர் உடைகளிலும் பூரண அழகு பொலிவுற்று விளங்க வீர லக்ஷ்மியைப் போல் புரவி மீது வீற்றிருந்த செங்கமலச் செல்வி, பின்னாலிருந்து யானைப் படையிலிருந்து பத்து யானைகளைக் கொண்டு மேல் வாயிற் கதவுகளைத் தாக்கும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிட்டாள். துதிக் கையில் நீண்ட மரங்களைக் கொண்டு யானைகள் மேற்கு வாயிற் கதவுகளைப் பேரிடியாக இடிப்பதை உள்ளிருந்து கேட்ட பிரதாபருத்திரன் பிரமித்துப் போனான். தாக்குதல், திறந்திருந்த மற்ற இரண்டு வாயில்களிலுமிருந்து வராமல், மேற்கு வாயிலிலிருந்து வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்தது, பிரதாபருத்திரனுக்கு. மிகத் தந்திரசாலியான எதிரியால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த பிரதாப ருத்திரன், கோட்டைத் தளத்தின் மேற்குப் புறத்திலிருந்த வீரர்களை அம்பெய்து யானைகளை விரட்டுமாறு பணித்ததன்றி, மற்ற இரு வாயில்களையும் மூடுமாறும் உத்தரவிட்டான்.

அந்தப் போர் நிலையில் எந்தத் தளபதியும் இடக்கூடிய உத்தரவுகள் அவைதான். ஆனால் அந்த உத்தரவுகளை நிறைவேற்றுவதில் நூற்றுக்கணக்கான தன் வீரர்கள் பலி யாவார்கள் என்பதையோ, அந்தப் பலியும் வீண் பலியாகும் என்பதையோ பிரதாபருத்திரன் எதிர்பார்க்க வில்லை. இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பதை அறியலாமென்றாலோ அதை விளக்கக் கரிகாலனும் அருகில் இல்லை. அவனையும் அவன் சகாக்களையும் சிறையிலடைத்துவிட்டே பிரதாபருத்திரன் யுத்தத்துக்குக் கிளம்பியிருந்தான். இப்படிப் பல வகையிலும் கை யொடிந்து நின்ற பிரதாபருத்திரன், திடீரெனத் தன் படைகளின் மீது மோதிய மற்றுமொரு பேராபத்தையும் சமாளிக்க வேண்டியதாயிற்று.

அவன் உத்தரவுப்படி யானைகள் மீது அம்பு எய்ய முயன்ற வீரர்கள், கோட்டைத் தளத் துவாரங்களுக்கு அருகில் தோன்றிய உடனேயே, அவர்களுக்காகக் குறி பார்த்திருந்த சோழ நாட்டு வில்லவர்களின் அம்புகள் அந்தத் துவாரங்களில் பாய்ந்தன. மூன்று வாயிற் கதவுகளையும் இயக்கி மூடச் சுழற் சக்கரங்களுக்கு அருகில் கோட்டை மீது தோன்றிய வீரர்கள், சோழ வில்லவர் அம்புகள் பாய்ந்து ‘ஹா ஹா’ வென்று பயங்கர மரணக் கூச்சலிட்டுச் சாய்ந்தார்கள். அந்த மரணக் கூச்சலே அடுத்து எழுந்த பெரும் போர்க் கூச்சலுக்கு காரண மாயிற்று.

மேற்கு வாயிலில் யானைகள் உக்கிரமாக மரங்களால் கதவுகளைத் தாக்கின; மத்தகங்களால் இடித்தன. அத்துடன் ரதங்கள் முகப்பிலும் பெரும் வாரைகளை இணைத்துப் புரவிகளை வெகு வேகத்தில் விட்டுக் கதவுகளை நொறுக்க உத்தரவிட்டாள் செங்கமலச்செல்வி. அந்த மோதல்களால் கதவின் பாகங்கள் சரசரவென்று நொறுங்கிய சப்தமும், அதே. காலத்தில் மற்ற இரு வாயிற் கதவுகள் பக்கவாட்டிலிருந்த வீரர்களால் மூடத் தொடங்கிய ‘கிரீச் கிரீச்’ சென்ற பெரும் ஒலியும், அவை மூடத்தொடங்கியதும் அரையன் ராஜராஜன் சைகை செய்ய, பெரும் கோஷத்துடன் சூறாவளியால் உந்தப் பட்ட கடலைப்போல் உள்ளே பாய்ந்த சோழப் படை களின் பேரரவமும், எல்லாமாகச் சேர்ந்து பிரளய சப்தத் தால் ஏற்படும் பெரும் பயங்கரத்தைச் சிருஷ்டித்தன.

மூடத்தொடங்கிய கதவுகள் கால்வாசி மூடுவதற் குள்ளாகவே, வெள்ளம்போல் சோழப் படைகள் உட் புகுந்துவிட்டதாலும், கதவுக்குப் பக்கத்திலிருந்த வீரர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டதாலும் கோட்டைக் குள்ளே திடீரெனக் கடும் போர் மூண்டது. புரவிகள் மோதின; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன; வாள்கள் சுழன்றன.

போர் அரக்கனின் தாண்டவம் பயங்கரச் சொரூபத்தை அடைந்தது. சோழ வீரர்கள் திடீரென உட் புகுந்ததால், தாக்குதலின் முதற்பயனை அவர்களே அடைந்தார்கள். அவர்கள் வாளுக்கு இரையான மாசுணி வீரர்களின் தலைகள் கீழே புரண்டு எதிரிகளின் கால்களில் மிதியுண்டு கண்களும் வாய்களும் சிதைந்து, ரத்தமும் சதையும் பிய்ந்து கோர சொரூபங்களாகக் காட்சியளித்தன. தலையிழந்த முண்டங்களோ இருதயம் நிற்பதற்கு முன்பாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்து தடால் தடாலென விழுந்தன. அவற்றின் மார்மீதும் வயிற்றின் மீதும் புரவிகள் குளம்புகளை அழுத்தி ஏறி ஓடின.

மாற்றானால் எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்ட பிரதாபருத்திரனும் தன் பெரும் வாளைச் சுழற்றிக் கொண்டு கிழக்கு வாயிலில் அரையன் ராஜராஜனைத் தேடிச் சென்றான். அங்கு தமது பெரும் சரீரத்துடனும், ரத்தம் தோய்ந்த வாளுடனும் பிரும்ம மாராயர் அவனுக் காகக் காத்துக்கொண்டிருந்ததைக் கண்டதும், உண்மை முழுவதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது பிரதாப ருத்திரனுக்கு. கரிகாலன் தன்னை நன்றாக ஏமாற்றி விட்டான்பதையும் அதனால் விளைந்த அனர்த்தமே அந்தச் சிக்கல் என்பதையும் உணர்ந்துகொண்ட பிரதாப ருத்திரன் கோபம் மேலிட்டாலும், அதனால் பயனேது மில்லையென்பதை உணர்ந்து மிக நிதானமாகவே தன் படைகளை நடத்தினான். பிரதாபருத்திரனைத் தூரத்தி லிருந்தே பார்த்த பிரும்ம மாராயருக்கோ உற்சாகம் தாங்க முடியவில்லை.

போரிலே இணையற்ற பராக்கிரமத்தைக் காட்ட வல்லவராகையால், ராஜராஜ பிரும்ம மகராஜ் என்று மிக மரியாதையுடன் சோழ மண்டலம் முழுவதும் அழைக்கப்பட்டு வந்த பிரும்ம மாராயர், அன்று பெரும் பிரும்ம ராட்சசனைப் போல் தோன்றினார். அந்தண குலத்தில் பிறந்தவரானாலும் போர் வெறியை அதிகமாக உடைய பிரும்ம மாராயர் தமது பெரும் குதிரையை நாலா பக்கத்திலும் சுழலவிட்டு, எல்லா வாள்களையும் விட அகலமும் கனமும் நீளமுமுள்ள தமது வாளைச் சுழற்றிச் சுழற்றி அருகே நெருங்கியவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திக் கொண்டு பிரதாபருத்திரனை நோக்கி வந்தார். வாளினால் மட்டும் போரில் அவருக்குத் திருப்தி ஏற்படுவதில்லையென்பதும், வேலெறிவதில் மிகுந்த ஆசையுடையவ ரென்பதும் மிகப் பிரசித்தியென்பதைப் பிரதாபருத்திரனும் அறிந்திருந்தானாகையால், அவனும் மிகுந்த எச்சரிக்கை யுடன் போரிட்டான். புரவியின் பக்கவாட்டிலிருந்த தோற் பட்டையிலிருந்து பிரும்ம மாராயர் ஈட்டிகளிலொன்றை எடுத்துப் பயங்கரமாக வீசியபோதும், தலைகுனிந்து தப்பிக் கொண்ட பிரதாபருத்திரன், தனது வாளையும் சுழற்றிச் சுழற்றிச் சோழ வீரர்களை வெட்டிக் குவித்துக்கொண்டு பிரும்ம மாராயரை நோக்கிச் சென்றான். அவன் கூச்ச லைக் கேட்ட அவன் வீரர்களும், மிக உக்கிரமாகப் போரிட்டு அலை அலையாக பிரும்ம மாராயர் படைப் பிரிவின் மீது மோதினார்கள்.

போர் உக்கிரமாவதைக் கண்ட பிரும்ம மாராயர், ராட்சத சிரிப்பொன்றை வெளியிட்டார். அவர் முகத்திலே தெளித்துக் கிடந்த மாற்றார்கள் ரத்தமும், அவர் இரும்புக் கவசத்திலும் காலிலும் ஒட்டிக்கொண்டிருந்த சிறு சதைப் பற்றுகளும், வாளை அவ்வப்பொழுது துடைத்துத் திரட்டி அவர் வீசியெறிந்த சதையும் ரத்தமும் இணைந்து சிறுசிறு பிண்டங்களும் எல்லாமுமாகச் சேர்ந்து, வருகிறவன் மனிதனா அல்லது பிசாசா என்று சந்தேகமுறச் செய்தன.

இவர் போர் முறைக்கு முற்றிலும் மாறாக இருந்தது அரையன் ராஜராஜனின் போர்முறை. அவன் புரவி, வீரர்களின் கூட்டங்களுக்கிடையே அம்புபோல் பாய்ந்து சென்றது. அவன் கரத்திலிருந்த நீண்ட மென்மையான வாள், மின்னல் வேகத்தில் ஏதோ நெளிந்து வரும் சர்ப்பம் போல் கனவேகத்தில் சுழன்றது. அது பட்ட இடங்களிலெல்லாம் வீரர்கள் பட்டென்று சாய்ந்தனர். வாளைச் சுழற்றிவதிலும் கலை இருக்கிறது. அதிலும் மென்மையான ஒரு தன்மை இருக்கிறது என்பதை அரையன் ராஜராஜன் நிரூபித்தான், அன்றையப் போரிலே. வாள் தடால் தடா லென்று பாய்வதைவிட எப்படி வாழைப்பழத்தில் செருகு வதுபோல, அதை மனித உடலில் செருகி ஆவியைக் குடிக்கச் செய்யலாம் என்பதைக் காட்டினான் அரையன் ராஜராஜன். அவன் நுழைந்த தெற்கு வாசலில் இருந்த மாசுணி வீரர்களின் அணிவகுப்பு கண்ணிமைக்கும் நேரத்தில் கலைக்கப்பட்டது. உள்ளே நுழைந்த அவன் படைப் பிரிவு அவன் செய்த சைகையையொட்டித் திடீரென்று இரண்டாகப் பிரிந்து தெற்கு வாயிலின் மாசுணிப் படையை வளைத்துக் கொள்ளவே எதிரிகளின் நிலைமை மிக அபாயமான கதிக்கு வந்துவிட்டது.

பிரும்ம மாராயரின் படையுடன் போர் செய்து கொண்டே சற்றுப் பின்னால் திரும்பி நோக்கிய பிரதாப ருத்திரன், தான் பேராபத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தான். உள்ளே நுழைந்த சில விநாடிகளுக்குள்ளாகவே, அரையன் ராஜராஜன் படைப்பிரிவு நாகர்களில் பெருவாரியான பேர்களை வெட்டி வீழ்த்திவிட்டதையும், தன்னை நோக்கிப் பின்புறத்தில் அரையன் ராஜராஜன் நெருங்கு வதையும் கண்டான். பிரும்ம மாராயருக்கும் அரையன் ராஜராஜனுக்கும் இடையில் தான் சிக்கிவிட்டால் தனக்குக் கதிமோட்சம் கிடையாதென்பதையும் புரிந்து கொண்ட பிரதாபருத்திரன் திடீரெனத் தன் படைகளைச் சிறிது பின்னுக்கு நகரும்படிச் செய்து, ஒரே முகமாக எதிரிகளைச் சமாளிக்க எண்ணி, அதற்கேற்பத் தன் வாளை உயர்த்தி இருமுறை சைகை செய்தான். அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.

அவன் சைகை செய்து படைகளைப் பின்னுக்கு வாங்க முயன்ற தருணத்தில், மேற்கு வாசல் கதவுகளை உடைத்துக்கொண்டு செங்கமலச் செல்வி தனது ரதங் களுடனும் காலாட்படைகளுடனும் உள்ளே புகுந்தாள். சக்கரக் கோட்டத்தின் மேற்கு வாயில் வழியாக ரதங்கள் பாய்ந்து வந்தன. அவற்றுக்குப் பக்கவாட்டில் வந்த போர் யானைகள் பயங்கரமான கூச்சலிட்டுப் பலரை மிதித்தன. பலரை புரவிகளிலிருந்து தூக்கி ஆகாயத்தில் விட்டெறிந்தன. இன்னும் சிலரைப் பக்கவாட்டுச் சுவர்களில் மோதி, தலையை உடைத்தன. செங்கமலச் செல்வியிட மிருந்த வில்லவர்களும் ரதவீரர்களும் அரையன் ராஜராஜன் படைப் பிரிவோடு இணைந்தனர்.

இத்தனைக்கும் சளைக்காமலே பிரதாபருத்திரன் போரிட்டான். இந்த மாதிரிப் போர் முறை பலவற்றை ஆயுள் முழுவதும் கண்டுள்ள அரையன் ராஜராஜன், செங்கமலச் செல்வியின் படையைக் கோட்டைக்குள் நன்றாகப் புகவிட்டு எதிரி அணிவகுப்பை மீண்டும் உடைத்துவிடவே, பிரதாபருத்திரன் படைகள் கலைந்து சிறுசிறு கூட்டங்களாகப் பிரிந்து நின்றே போரிட்டன.

போர் அரை ஜாம நேரம்தான் நடந்தது. ஆனால் எத்தனை உக்கிரமான போர்! நாகர்கள்தான் எத்தனை வீராவேசத்துடன் போர் புரிந்தார்கள்! அந்தப் பிரும்ம மாராயரென்ன அந்தணனா! அரக்கனா! அதென்ன கோரச் சிரிப்பு! கோரச் கூச்சல்! அவர் கையிலிருந்தது வாளா, அல்லது கும்பகர்ணன் தண்டாயுதமா!

சக்கரக் கோட்டத்தின் போர் பிரமிக்கும்படியான போர்! சோழர்கள் போர்த் தந்திரம், வீரம், இத்தனைக்கும் பெரும் சோதனையாக வந்த போர்! அந்தச் சோதனையில் சோழர்கள் அடைந்த வெற்றி, சரித்திரத்திலும் பொறிக்கப் பட்டிருப்பதில் விந்தையென்ன இருக்கிறது!

அரை ஜாமத்தில் ஒரு மாபெரும் கோட்டையின் வீழ்ச்சியென்றால், அது சாமானிய சாதனையா? ஒட்டர நாட்டின் பேரரணாக நின்ற நாகர்களின் வீழ்ச்சியென்றால் அது சாமானிய வெற்றியா? அந்தப் பெரு வெற்றியை அன்று ஸ்தாபித்தான் விக்கிரமச் சோழிய வரையனான அரையன் ராஜராஜன். வீரர்களின் சேதம் அதிகமில்லாமலும் எதிரிகளையும் அவசியமான அளவுக்கு மேல் நாசம் செய்யாமலும் படைகளைத் திறமையுடன் அணிவகுத்து நடத்தியதால், அன்று கங்கைப்பயணத்தைத் தடுத்து நின்ற முக்கியமான பெரும் சுவரை இடித்துத் தள்ளிவிட்டான், சோழர்களின் மாபெரும் தலைவன்.

போர் முடிவதற்கும், இரவின் மூன்றாம் ஜாமம் தொடங்குவதற்கும் சரியாயிருந்தது. போரை நிறுத்திக் கடைசியாகக் கத்தியை உறைக்குள் போட்ட சோழர் படைத்தலைவன், காயமடைந்த வீரர்களைப் பாசறைக்குக் கொண்டு போய்ச் சிகிச்சை செய்யவும், தோல்வியடைந்த எதிரி வீரர்களைக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டான். இந்த வெற்றிக்குக் காரண புருஷர்களில் முக்கியஸ்தனான கரிகாலனையும் அவன் சகாக்களையும் விடுவித்து அழைத்து வருமாறும் கூறினான். எதிரிகளுக்கும் கருணை காட்டும் பெரும் வள்ளல் என்ற பிரசித்தி பெற்ற விக்கிரமச் சோழியவரையன் இந்த உத்தரவுகளை இட்டதோடு நிற்காமல் போரில் பெரும் காயமுற்று வீழ்ந்த பிரதாப ருத்திரனை அவனது மாளிகைக்குக் கொண்டு போய்த் தனது சொந்த வைத்தியரைக் கொண்டே சிகிச்சையும் செய்யலானான்.

அந்தப் பயங்கர இரவின் நான்காவது ஜாமத்தில் சில சோழ வீரர்களின் காவற் கோஷங்களைத் தவிர வேறெவ் விதக் கூச்சல்களுமில்லாமல் மீண்டும் அமைதியைப் பெற்றது சக்கரக் கோட்டம். காலையில் வந்து கவிந்து கொள்ளும் கழுகுக் கூட்டங்களிலிருந்து கோட்டையைக் காப்பாற்ற, பிணங்கள் வாரியெடுக்கப்பட்டு வண்டிகளில் போட்டுக் கோட்டைக்கு வெளியே மேற்றிசையிலிருந்த காட்டு முகப்பில் குவிக்கப்பட்டன. முதல் இரண்டு ஜாமங் களில் மூடிக்கிடந்த கோட்டையின் பெரும் கதவுகள் நாள் காவது ஜாமத்தில் திறந்தே கிடந்தன. அந்த வாயில் களுக்குள்ளே நுழைந்த ‘உஸ்’ என்ற தென்றல், பெரும் தொந்தரவு ஒரு வழியாகத் தீர்ந்ததற்காக ஆயாசப் பெரு மூச்சு விடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

அதே சமயத்தில், பிரதாபருத்திரன் தனது மாளிகையிலே, மலர்ப் பஞ்சணையிலே, மார்பு எழுந்து எழுந்து தாழ, இதயத்தின் வெகு அருகே பாய்ந்திருந்த பிரும்ம மாராயரின் வேலின் காயம் குருதியை இடைவிடாது கிளப்பிக்கொண்டிருக்கப் படுத்துக்கொண்டிருந்தான். அவன் காயத்தைப் பரிசோதித்துக் கலுவத்தில் மருந்தை அரைத்துப் போட்ட வைத்தியர் ‘இனி பயனில்லை’ என்பதற்கு அறிகுறியாக உதட்டைப் பிதுக்கினார்.

அதை பிரதாபருத்திரனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த அரையன் ராஜராஜன், கரிகாலன், பிரும்ம மாராயர் ஆகியவர் மட்டுமல்ல, பிரதாபருத்திரனும் கவனித்தான். ஆனால், அந்த வீரன் முகத்தில் பயச்சாயை படருவதற்குப் பதிலாகப் புன்முறுவலே படர்ந்தது. பேசக் கஷ்டமாயிருந்ததால், கரிகாலனை அருகில் வரும்படி கையால் ஜாடை காட்டினான். அருகில் நெருங்கிய கரிகாலனைப் பஞ்சணையில் உட்கார வைத்துக்கொண்ட பிரதாப ருத்திரன் மெல்ல, உதடுகளைத் திறந்து, “என்னை வஞ்சித்து விட்டாயே கரிகாலா!” என்றான்.

மரணப் படுக்கையிலிருந்த அந்த மாவீரனுடைய நிலையைக் கண்டதும், கரிகாலன் இதயமும் கரைந்தது. “என்ன செய்வது மன்னவா? என் கடமை தங்களை வஞ்சிக்கத் தூண்டியது. சோழப் பேரரசின் பிற்காலம், பெருமை, விஸ்தரிப்பு, எல்லாமே அந்த வஞ்சனையின் அவசியத்தை வலியுறுத்தின” என்றான்.

“இருந்தாலும், நான் உன்னை வஞ்சிக்கப் போவ தில்லை; தலையைச் சாய்” என்று தீனக் குரலில் சொன்ன பிரதாபருத்திரன் உதடுகளுக்காகத் தலையைத் தாழ்த்தினான் கரிகாலன். அடுத்தகணம், பிரதாபருத்திரன் வெற்றிப் பார்வையொன்று அரையன் ராஜராஜன் மீது நிலைத்தது. அதைத் தொடர்ந்து, சில வார்த்தைகள் கரிகாலன் காதில் ஓதப்பட்டன.

அரையன் ராஜராஜன் உண்மையை உணர்ந்து திக் பிரமையடைந்தான். நாகர் படைத்தலைவன் தன் மரண நேரத்தில் சோழப்பேரரசைக் கலக்கவல்ல ஆலகால விஷத்தைக் கக்கிவிட்டானே என்ற நினைப்பு அரையன் ராஜராஜனை அசையவொட்டாமல் அடித்துவிட்டது. அப்படி நின்ற அரையன் ராஜராஜன்மீது பிரமிப்பும் குழப்பமும் கலந்து நின்ற கரிகாலன் பார்வையொன்று பதிந்தது. ‘சரி, குடி கெட்டுவிட்டது! பேரிடி சோழப் பேரரசின்மீது இறங்கி விட்டது!’ என்று தீர்மானித்து விட்டான் அரையன் ராஜராஜன்.

Previous articleMannan Magal Part 2 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here