Home Historical Novel Mannan Magal Part 2 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

107
0
Mannan Magal part 2 Ch 24 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 24 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 என் அன்னை எங்கே?

Mannan Magal Part 2 Ch 24 | Mannan Magal | TamilNovel.in

இறக்கும் தறுவாயில் நாகர்கள் தலைவன், எத்தனையோ வருஷங்களாகப் புதைந்து கிடந்த மாபெரும் மர்மத்தை உடைத்துவிட்டு, சக்கரக் கோட்டத்தின் வீழ்ச்சிக்குப் பழி வாங்குவதற்காகச் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கே அடிகோலிவிட்டானே என்ற நினைப்பால், எந்தச் சந்தர்ப்பத்திலும் கவலையைக் காட்டாத அரையன் ராஜராஜன் முகத்திலும் சொல்லவொண்ணாக் கவலை படர்ந்து நின்றது. அத்துடன் அந்த மர்மத்தைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகக் கரிகாலனிடமிருந்து கிளம்பிய பார்வையும், அந்தக் கவலையை ஆயிரம் மடங்கு அதிகமாக்கிவிடவே, பெரும் குழப்பத்துக்கும் உள்ளானான், சோழர்களின் பிரதான படைத்தலைவன். பிரமிப்பும், குழப்பமும், பரிதாபமும் கலந்து திரும்பிய கரிகாலன் கண்களில் கேள்விகளும் ஏராளமாகத் தொக்கி நின்றதையும், அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அடுத்த சில விநாடிகளில் தான் பதில் சொல்ல நேரிடுமென்பதையும் உணர்ந்த அரையன் ராஜராஜனுக்கு உலகமே சுழல்வது போலிருந்தது அந்தத் தருணத்தில். ‘எந்த ரகசியத்தைப் பாதுகாக்க ஆயுளெல்லாம் சிரமப்பட்டேனோ, எந்த ஒரு ரகசியம் வெளியானால் சோழ நாட்டின் எதிரிகளுக்குப் பெரும் குதூகலம் உண்டாகுமோ, அந்த ரகசியம் சோழப் பேரரசுக்கு மாபெரும் கீர்த்தியை அளிக்கவல்ல இந்தப் படையெடுப்பின் போது, அதுவும் மாசுணர்களின் மாபெரும் தோல்வியின் போதுதானா ஏற்பட வேண்டும்?’ என்று உள்ளூர ஓடிய எண்ணங்களால் கவலை தோய்ந்த மூச்சும் விட்டான் அரையன் ராஜராஜன்.

பிரதாபருத்திரன் சயன அறையிலே நடந்த நாடக மனைத்தையும் பிரும்ம மாராயரும் கவனிக்கத்தான் செய்தார். மரணப்பெருமூச்சுடன் ஏதோ சில வார்த்தைகளைப் பிரதாபருத்திரன் கரிகாலன் காதில் முணுமுணுத்தது, அந்த முணுமுணுப்புக்குப் பின் வெற்றி முழங்கிய பார்வையை அவன் அரையன் ராஜராஜன் மீது திருப்பிவிட்டுத் தலையைச் சாய்த்தது. அதற்குப்பிறகு ஏதோ பெரிய விஷயத்தைப் புரிந்து கொண்டவன் போலக் கரிகாலன் சோழர் படைத்தலைவனைப் பார்த்தது, அந்தப் பார்வையின் விளைவாக அரையன் ராஜராஜன் ஆழ்ந்த கவலையால் பீடிக்கப்பட்டது, அத்தனை விவரங்களும் பிரும்ம மாராயரின் கண்களில் ஒன்றுகூட விடாமல் பட்டாலும், பிரதாபருத்திரன் அப்பேர்ப்பட்ட என்ன மர்மத்தைச் சொல்லியிருப்பான் என்பதைப் புரிந்து கொள்ளச் சக்தியற்றவராய் அரையன் ராஜராஜனை நோக்கி, “படைத்தலைவர் ஏதோ கவலையில் ஆழ்ந்திருப்ப தாகத் தோன்றுகிறது” என்று புதிதாக ஜோஸ்யம் சொல்பவர் போல் பேசினார்.

சோழர்களின் பிரதான படைத்தலைவன், அவர் கேள்விக்கு எந்தவிதப் பதிலையும் சொல்லாமல், தனக்குச் சற்றுத் தூரத்தில் நின்றிருந்த உபதளபதியை அழைத்து, ‘சக்கரக் கோட்டத்துத் தலைவனுக்கு ஒரு சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளுடன் தகனம் நடக்கட்டும்; நானும் கரிகாலனும் என் மகளும் தங்குவதற்குப் பக்கத்து மாளிகையைச் சுத்தம் செய். பிரும்ம மாராயரும் இதர உபதளபதிகளும் கோட்டையின் தெற்கு வாசலை அணைத்து நிற்கும் பாசறைகளில் தங்குவார்கள்” என்று படபடவென உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, “கரிகாலா! என்னுடன் வா!” என்று கூறி, அந்த அறையை விட்டு விடுவிடுவென்று வெளியே நடந்தான். அரையன் ராஜராஜன் ஆணையிட்டுச் சென்ற வேகத்தைக் கண்ட பிரும்ம மாராயர், அத்தனை படபடப்புக்குக் காரணம் பிரதாப ருத்திரன் வார்த்தைகளே என்பதை உணர்ந்து கொண்டார். ஆகையால், சற்று நேரம் பிரமித்து நின்றாலும் கடைசியாகச் சமாளித்துக்கொண்டு அறையைவிட்டு வெளி யேறினார்.

கரிகாலன் மட்டும் பிரதாபருத்திரன் மலரணைக்குப் பக்கத்தில் பிரமித்து நின்றுகொண்டிருந்தான். அவன் மனத்திலே பிறப்பு மர்மத்தை அறிந்ததாலுண்டான மகிழ்ச்சியும், அதன் விளைவாக அரையன் ராஜராஜன் பேச்சிலே ஏற்பட்ட மாறுதலால் உண்டான வருத்தமும் கலந்து அலைமோதி நின்றன. பிறப்பு மர்மத்தை அறியும் எண்ணத்துடன் சூடாமணி விஹாரத்திலிருந்து புறப்பட்டு எந்தெந்த இடத்திற்கோ சென்று, கடைசியாக இந்த யுத்தச் சூழ்நிலையில் எதிர்பாராத ஒருவன் மூலமாகத் தன் பிறப்பு மர்மத்தை உடைத்த விதியின் விசித்திர விளையாட்டை எண்ணி வியந்தது அவன் உள்ளம். அந்த வியப்பு, அந்த உண்மையை அறிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளை வாக ஏற்பட்ட பிரமிப்பு, இரண்டையும் பிரதிபலித்து நின்ற அவன் முகத்தைப் பார்த்துத் தானோ என்னவோ சவமாகக் கிடந்த பிரதாபருத்திரன் கடையிதழ்களில் ஒரு வெற்றிச் சிரிப்பு நிலைத்துக் கிடந்தது. கரிகாலன் உயிரற்ற எதிரியின் சடலத்தைக் கூர்ந்து கவனித்தான். பிருதாப ருத்திரன் ஏதோ முழு அமைதியுடன் உறங்குவதாக அவனுக்குப் பட்டதேயொழிய மரணக் களை எதுவுமே அந்த முகத்தில் இல்லை. தோல்வியிலும் பெரும் காரியத்தைச் சாத்தித்து விட்டதற்கான வெற்றிக்களையே கம்பீரமான அந்த முகத்தில் தெரிந்தது. கட்டுப்படுத்திய பிரமாணத்தை உடைத்துவிட்டதில் பெரும் பெருமையே அடைந்தவனாகத் தோன்றினான் அந்த மாவீரன், உயிரற்ற அந்த நிலையிலும்.

கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றி அந்தச் சவம்கூட ஆயிரம் கதைகளைச் சொல்வதுபோல் தோன்றியது கரிகாலனுக்கு! பிரதாபருத்திரன் விளக்கிய மர்மத்தால் தன் வாழ்வு எந்த நிலைக்கு உயர்ந்துவிட்டதென்பதைக் கரிகாலன் சந்தேகமற உணர்ந்து கொண்டானானாலும், அந்த உயர்ந்த நிலைக்குத் தன்னை அழைத்துச் செல்லப் பெரும் சாட்சியங்கள் தேவையென்பதையும் அறிந்து கொண்டானாகையால், தன் குழப்பமான நிலையிலிருந்து தன்னைச் சற்றே விடுவித்துக் கொண்டு, அறையை விட்டு வெளியே சென்றான்.

பிரதாபருத்திரன் மாளிகையில் பல கட்டுகளைக் கடந்து வாயிலை அணுகிய கரிகாலன், தனக்காகக் காத்தி ராமல் சோழர்களின் படைத்தலைவன் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டதும், அவன் சென்ற திக்கை விசாரித்துக் கொண்டு அந்த மார்க்கத்தில் வேகமாக நடந்து சென்றான். கோட்டையின் கிழக்கு வாயிலை நோக்கி நிதானமாக நடந்து சென்று கொண்டிருந்த அரையன் ராஜராஜனைத் தூரத்திலிருந்து கவனித்த கரிகாலன், வெகு சீக்கிரத்தில் அவனை அணுகி ஏதும் பேசாமலே பின்னால் நடந்தான். சுமார் ஒரு ஜாமத்திற்கு மேல் இருவரும் கோட்டைப் பகுதிகளைச் சுற்றினார்கள். கிழக்கு, தெற்கு, மேற்கு வாயில்களில் எங்கெங்கு எந்தெந்தப் படைகள் தங்க வேண்டியது, படைகளின் எப்பிரிவுகள் கோட்டைக்கு வெளியேயிருந்த கூடாரங்களில் தங்கவேண்டியது என்பதையெல்லாம் நிர்ணயித்து, ஆங்காங்கிருந்த உபதளபதிகளுக்கு உத்தரவுகள் போட்டுக் கொண்டே வந்தான் அரையன் ராஜராஜன்.

எத்தனையோ எண்ணங்கள் உள்ளத்தில் ஊசலாடிய அந்த நிலையிலும், அரையன் ராஜராஜனிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றனவென்பதைக் கரிகாலன் கண்டான். போர் முறையை எத்தனை சாமர்த்தியமாக மாற்றியமைத்துச் சோழர் படைத்தலைவன் சக்கரக் கோட்டத்தில் வெற்றி கண்டான் என்பதைத் தன்னை விடுதலை செய்ய வந்த உபதளபதிகளிடமிருந்து ஏற்கெனவே அறிந்து கொண்டு, அதனால் அரையன் ராஜராஜனிடம் பெரும் மதிப்புக் கொண்டிருந்த கரிகாலனுக்குப் போருக்குப்பின் அவன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் ஆச்சரியத்தை விளை வித்தன. சக்கரக் கோட்டத்தின் கோட்டையைச் சுத்தம் செய்யவும், சிக்கிய எதிரிகளைக் காவல் புரியவும், எதிரிப் படையினர் தாங்கள் அயர்ந்திருக்கும்போது கலகம் செய்யாதிருக்கவும் அரையன் ராஜராஜன் செய்த ஏற்பாடு களைக் கவனித்த கரிகாலன், போரின் வெற்றியைவிட வெற்றியைக் காப்பாற்றுவதற்கு எத்தனை எத்தனை ஏற்பாடுகள் தேவை என்பதைத் தெரிந்து கொண்டான். அந்த அறிவு அவனுக்கு அரையன் ராஜராஜனிடம் மேலும் மேலும் பக்தியை உண்டாக்கவே, எத்தனையோ சாத்திரங்களைத் தான் கற்றிருந்தாலும், தான் கற்றது கைம் மண்ணளவே என்பதைப் புரிந்து கொண்ட கரிகாலன், அடுத்த ஜாமம் முழுவதும் அரையன் ராஜராஜனுடன் மௌனமாகவே சுற்றினான்.

நான்காவது ஜாமம் முடிந்தது. இரவின் கோர இருளைக் கிழித்துக்கொண்டு பொழுதும் புலர்ந்தது. தன் வம்சம் அடைந்த வெற்றியைக் கண்டு குதூகலிப்பவன் போல் சூரியனும் உதயமாகித் தன் செங்கிரணங்களைச் சக்கரக் கோட்டத்தின் உப்பரிகைகள் மீது வீசினான். ஆம், இருள் கிழிந்தது. கரிகாலன் வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த மர்ம இருளும் கிழிந்தது! ஆனால் அந்த இருள் கிழிந்ததும், அரையன் ராஜராஜன் உள்ளத்திலே இருள் சூழ்ந்து விட்டதே! வாழ்க்கையே பூமியின் மண்ணைப்போல் தானா? ஓர் இடத்திலிருந்து மண்ணை வெட்டினால் இன்னோர் இடத்தில் தானே அதைப் போட வேண்டும்? விதிவசத்தில் பொருள்கள் அழிவதில்லை. ஓர் இடத்திலிருந்து அகன்றால், இன்னோர் இடத்தில் அவை குவியத் தான் செய்யும். அழிவு என்று நாம் கருதுவதற்கு நம் அறிவீனமே காரணம். ஆண்டவன் சிருஷ்டியில் எதுவுமே அழிவதில்லை. உணர்ச்சிகளுக்குக்கூட இந்த விதிதான். ஒருவன் மகிழ்ச்சி இன்னொருவனுக்குத் துன்பம். ஒருவன் வெற்றி இன்னொருவனுக்குத் தோல்வி. இந்த நியதியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை அரையன் ராஜராஜன் சந்தேகமற அன்று உணர்ந்தான்.

அந்த உணர்வால், அன்று முழுவதும் அவனுக்கு உணவுகூடச் சரியாகச் செல்லவில்லை. எந்தச் சோழ ராஜ்யத்திற்காகத் தன் வாழ்வின் அனைத்தையுமே அர்ப்பணித்துப் பல போர்களில் வெற்றி கண்டானோ, அந்தச் சாம்ராஜ்யமே படுகுழியில் விழும் ஸ்திதியிலிருப்பதை அறிந்த அரையன் ராஜராஜன், கரிகாலனை அன்று முழுவதும் காணவோ பேசவோ மறுத்தான். ஆனால் எத்தனை நேரம் அந்தச் சந்திப்பை ஒத்திப்போட முடியும்? அன்று மாலை நேரத்தில் கரிகாலன் எந்தவித அறிவிப்புமின்றி அவர் மாளிகை அறையிலேயே நுழைந்தான். சிந்தனையில் ஆழ்ந்திருந்த சோழர் படைத்தலைவனின் கண்களும் கரிகாலனை நோக்கி எழுந்தன.
அரையன் ராஜராஜனை அப்பொழுது நோக்கிய கரிகாலன் கண்களில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. சிறிதும் சலனமில்லாத கூரிய கண்கள் தன்மீது நிலைப்பதைக் கண்ட அரையன் ராஜராஜன், ‘கரிகாலன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திவிட்டான்’ என்று உணர்ந்து கொண்டு, ‘இத்தகைய ஒரு சிறுவனுக்கு எதிரில் நான் உணர்ச்சிகளைச் சிதறவிடுவதா?’ என்ற எண்ணத்தினால், கம்பீரத்துடனும் உறுதியுடனும் கரிகாலனை ஏறிட்டுப் பார்த்து, “என்ன கரிகாலா , என்ன விசேஷம்?” என்று ஏதுமறியாதவனைப்போல் விசாரித்தான்.

ஈரப்பசை அடியோடு இல்லாத வரட்டுச் சொற்கள் கரிகாலன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. “விசேஷத்தை நீங்களே அறிவீர்கள் தந்தையே!” என்றான் கரிகாலன்.

இந்தப் பதில் அரையன் ராஜராஜனுடைய உறுதியை இன்னும் அதிகமாக இறுக்கவே, அவன் ஆசனத்தை விட்டு எழுந்து, எதிரே இருந்த சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எதையோ எட்டிப் பார்த்துக்கொண்டே, “ஆம் கரிகாலா! அறிவேன்” என்று சொன்னான்.

“அறிந்தால், அதைப்பற்றி எனக்கு விளக்கம் தர வேண்டியது தங்கள் கடமையில்லையா?” என்று கேட்டான் கரிகாலன்.

அரையன் ராஜராஜன் ஏதோ மின்னலால் தாக்கப் பட்டவன்போல் சட்டென்று திரும்பினான். “இல்லை, அது என் கடமையில்லை” என்று திட்டமாகவும் கூறினான்.

கரிகாலன் புருவங்கள் ஆச்சரியத்தால் சற்றே உயர்ந்தன. “என்ன உங்கள் கடமையில்லையா? நீங்கள் என் வளர்ப்புத் தந்தைதானே?” என்று கரிகாலன் வினவினான்.

“ஆம்!” உடனே வந்தது அரையன் ராஜராஜன் பதில்.

“என் தாய் தந்தையர் உங்களிடம்தானே என்னை ஒப்படைத்தார்கள்?”

“ஆமாம்.”

“என் வாழ்வின் பிற்காலம், என் அந்தஸ்து, நலம் எல்லாவற்றையும் தங்களிடம்தானே ஒப்படைத்தார்கள்?”

“ஆமாம்.”

“அப்படியானால், என் நலத்தைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க உங்களுக்கு உரிமையளித்தது யார்? என்னை ஏன் சூடாமணி விஹாரத்துக்கு அனுப்பி வைத்தீர்கள்? என் பிறப்பின் உண்மையை ஏன் ஒளித்தீர்கள்? இதனால் உங்களுக்கு ஏற்பட்ட லாபமென்ன? உயர்ந்த குடியில் பிறந்தும் உத்தமமான தாய்தந்தையர் வயிற்றில் ஜனித்தும் நான் அநாதையாக, புத்த பிக்ஷக்களிடம் துறவிகளோடு துறவியாக வாழும் நிலையை ஏற்படுத்தி வைத்தீர்களே, அது எந்த நியாயத்தில் சேர்ந்தது?” என்று படபடப்புடன் கேட்டான் கரிகாலன்.

“அரசியல் நியாயத்தில் சேர்ந்தது.”

“எனக்கு விளங்கவில்லை தந்தையே.”

“விளங்காதிருக்கும் வரையில் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது மகனே! ஏன் சோழ நாட்டுக்கே நல்லது. எந்த ரகசியத்தை என் இதயத்திலே பூட்டிவைத்தே நான் இறக்க நினைத்தேனோ அந்த ரகசியத்தை, இன்று பிரதாபருத்திரன் வெளிப்படுத்திவிட்டான். அதை அறிந்து கொண்டதோடு திருப்தியடைந்துவிடு. மேற்கொண்டு எந்தக் கேள்வியையும் கேட்காதே” என்று திட்டமாய்ப் பதில் கூறினான் அரையன் ராஜராஜன்.

ஆனால் கரிகாலன் சிறிதும் தயங்காமல் கேட்டான்: “ஏன் கேட்கக் கூடாது? நீங்கள் ஏன் சொல்லக் கூடாது?” என்று.

“பெரும் பிரமாணம் என்னைக் கட்டுப்படுத்துகிறது.”

“பிரமாணம்! பிரமாணம்! எல்லோரிடமும் ஒரே பிரமாணம், அந்தப் பிரமாணத்திற்கு காரணம் யார்?”

அரையன் ராஜராஜன் பரிதாபம் துளிர்க்கும் விழிகளைக் கரிகாலன்மீது நாட்டினான். “சொல்லட்டுமா கரிகாலா?” என்ற வார்த்தைகள் மிக மெதுவாக வெளி வந்தன.

“சொல்லுங்கள்.”

சொன்னான் அரையன் ராஜராஜன். அவன் வாயிலிருந்து உதிர்ந்தவை சொற்களல்ல; பெரும் இடிகள் அவை. “உன் தந்தை, என்னையும் சிலரையும் பிரமாணத்திற்குக் கட்டுப்படுத்தியது உன் தந்தைதான்!” என்று அரையன் ராஜராஜன் பதிலைக் கேட்டுத் திக்பிரமையடைந்த கரிகாலன் நீண்ட நேரம் கற்சிலைபோல் நின்றான். பிறகு தடுமாறிய குரலில் வெளிவந்தன அவனிடமிருந்து சொற்கள், “என் தந்தை! என் தந்தை! அவரா என்னைப் படுகுழியில் தள்ளப் பார்த்தார்? அவரா என்னை அனாதையாக வாழவைக்க இஷ்டப்பட்டார்? அவரா என்னைத் துறவியாக்கத் திட்டம் போட்டார்! ஏன்? ஏன்?” என்ற வார்த்தைகள் பெரும் தடுமாற்றத்துடன் உதிர்ந்தன.

அரையன் ராஜராஜனும் துக்கப் பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னான்: “உன் தந்தை பெரிய தியாகி கரிகாலா! அவர் பெயர் சரித்திரத்தில் இடம் பெறாதிருக்கலாம். ஆனால், அவரது நண்பர்களின் இதயத்திலே அழியா இடம் பெற்றிருக்கிறது கரிகாலா! விதியின் விசித்திர வலை உன் குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு உட்பட்டவர் உன் தந்தைதான். அவருக்கு நாங்கள் கொடுத்த பிரமாணத்தை யாரும் உடைக்க முடியாது” என்று.

“அப்படியானால் எனக்கு கதிமோட்சமே இல்லையா?”

“இருக்கிறது.”

“யாரிடம்? எவர் மூலம்?”

“உன் தாய் மூலம்.”

“என்ன என் தாய் உயிரோடிருக்கிறாளா?” என்று வினவிய கரிகாலனுக்கு, மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் அவன் உடலில் சுழன்றன.

“இருக்கிறாள்” என்றான் அரையன் ராஜராஜன்.

“எங்கேயவள்? எங்கேயவள்? எங்கே என் அன்னை?”
என்று துடிக்கும் உதடுகளுடன் கேட்டான் கரிகாலன்.

“காஞ்சிக்கருகில்.”

“காஞ்சிக்கருகிலா?”

“ஒரு கிரமாத்தில்; தனி மாளிகையில்”

“சிறையிருக்கிறாளா?”

“இல்லை; சுதந்திரத்துடன் இருக்கிறாள்.”

“அவளிடம் இதோ போகிறேன் தந்தையே” என்று திரும்பிய கரிகாலனை, “நில் கரிகாலா! அவசரப்படாதே,

உன் தாயைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றான் அரையன் ராஜராஜன்.

வியப்பினால் விகசித்த விழிகளை அரையன் ராஜராஜன் மீது திருப்பிய கரிகாலன் கேட்டான், “என்ன தாயைப் பார்ப்பது மகனுக்கு எளிதல்லவா?” என்று.

“ஆம் கரிகாலா! உனக்கு எளிதல்ல அது. இத்தனை வருஷங்களாக உன்னைப் பார்க்க இஷ்டப்படாத உன் தாய், இப்பொழுது பார்க்க இஷ்டப்படுகிறாளா என்பதை அறிய வேண்டும்” என்ற அரையன் ராஜராஜன் சொற்கள் ஒவ்வொன்றும் கரிகாலன் இதயத்திலே பல வேல்களைப் போல் பாய்ந்தன. அந்தக் குழந்தை முகத்தின் கருவிழிகளில் துன்ப நீர் துளித்தது.

“என் தாய் என்னைப் பார்க்க இஷ்டப்படவில்லையா தந்தையே?” என்றான் குரல் தழுதழுக்க.

“இல்லை மகனே, இஷ்டப்படவில்லை.”

“ஏன் தந்தையே?”

“உன் தந்தையைப்போல், அவளும் ஒரு தியாகி மகனே. பெரும் தியாகிகளால் பெரிய அரசுகள் நிலைக்கின்றன. உன் பெற்றோர்கள் இதுவரை மாநிலம் கண்டிராத இணையற்ற தியாகிகள். மேற்கொண்டு என்னை எதுவும் கேட்காதே. கங்கைப் போர் முடியட்டும்! பிறகு உன் தாயிடம் உன்னை நானே அழைத்துச் செல்கிறேன். அதுவரை பொறுத்திரு” என்று கூறிய அரையன் ராஜராஜன், அத்துடன் அந்தச் சம்பாஷணை முடிந்துவிட்ட தென்பதற்கு அறிகுறியாக வேறு பக்கம் திரும்பினான்.

அங்கிருந்து ஏதோ சொப்பனத்தில் நடப்பவன் போல் தனது அறைக்கு நடந்து சென்ற கரிகாலன், பஞ்சணையிலே, உள்ளமெல்லாம் கவலை வாட்ட உடலெல்லாம் உணர்ச்சிகள் பாயப் படுத்துக் கிடந்தான். தாயைப் பற்றிய எண்ணங்களே அந்த இளைஞன் இதயத்திலே அலை பாய்ந்து நின்றன. “தாயே! என்னை ஏன் பார்க்க மறுக்கிறாய்? குழந்தைப் பருவத்திலே என்னை அணைத்த உன் கரங்கள் என்னைத் தொடத் துடிக்கவில்லையா?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். சிந்தனை எங்கெங்கோ சென்றது; அவன் நீண்ட நேரம் தன்னிலை மறந்தான்.

பின்னாலிருந்து அவன் உடலை வளைத்த இரு மலர்க் கரங்கள், இந்த உலகுக்குக் கொண்டு வந்தன. சற்றே திரும்பினான். அடுத்த விநாடி செங்கமலச் செல்வியின் பூவுடலின் திண்மைத் தளத்திலே புதைந்தது அவன் மலர் முகம். அவள் கன்னம் அவன் தலையிலே சாய்ந்து கிடந்தது. சற்றே அவிழ்ந்திருந்த அவளது கரிய கூந்தல், அவன் முகம் பதிந்திருந்த பஞ்சணைக்குப் பக்கவாட்டில் திரை போட்டது. அவள் கரங்கள் அவனை இறுக அணைத்தன. புயலில் அலைந்த மரக்கலம், ஏதோ கரையைக் கண்டுவிட்டதைப் போன்ற அமைதியில் பெரு மூச்சு விட்டான் கரிகாலன். அவள் உடலின் சுகந்தம், எழிலம்சங்களின் திண்மை, இரண்டுமாக இணைந்து அவனை இந்தத் துன்ப உலகத்திலிருந்து இன்பத்தை அள்ளிக் கொட்டும் ஏதோ ஒரு கனவுலகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தன.

Previous articleMannan Magal Part 2 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here