Home Historical Novel Mannan Magal Part 2 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

142
0
Mannan Magal part 2 Ch 26 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 26 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 ஒரு குழல் இரு ஓலைகள்

Mannan Magal Part 2 Ch 26 | Mannan Magal | TamilNovel.in

காலக் காற்றிலே மாத ஏடுகள் அறு பறந்து சென்றன. சோழ சாம்ராஜ்யத்தின் வடக்குத் திசையிலே அரையன் ராஜராஜனும் கரிகாலனும் கலந்து முழக்கிய வெற்றி முரசொலியின் எதிரொலி, தொலை தூரத்திலிருந்த காஞ்சி மாநகரத்திலும் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், அந்த மாநகரம் அத்தனை வெற்றிகளையும் தானே சம்பாதித்து விட்டதாக எண்ணி, தன் உப்பரிகைகளின் பெருங்கிரீடங்களையும், கோபுரங்களின் பெரிய கோபுரங் களையும் வானவெளியில் உயர்த்திக்கொண்டு இறுமாப்புடன் காட்சி அளித்தது. அந்த உப்பரிகைகளுக்கும் கோபுரங்களுக்கும் வெற்றி முடி சூட்ட இயற்கை அன்னை ஏவிவிட்ட வெண்ணிற மேகங்கள் அவற்றை மெள்ள மெள்ள வளைக்கத் தொடங்கின.

ஏழு எட்டாவது நூற்றாண்டுகளில் பல்லவர்கள் பராமரிப்பிலே சிற்ப ஆடைகளையும் வெற்றி ஆபரணங் களையும் தரித்த அந்தக் காஞ்சிமாநகர், அதைவிடப் பெரிய பேரரசாக விரிந்த சோழ சாம்ராஜ்ய சாகரத்தினிடையில் சகல கலைகளுக்கும் இருப்பிடமாகக் கீர்த்தியையும் பொலிவையும் பெற்று விளங்கியதால், மக்கள் நாவிலே பல்லவ காஞ்சி என்ற பெயர் மறைந்து, சோழ காஞ்சி என்ற பெயர் உலாவலாயிற்று. இப்படிப் பாமரரும், புலவரும், புரவலரும் போற்றிப் புகழ்ந்த அந்தக் காஞ்சி மாநகர், தைத்திங்கள் உதயமான அந்தக் காலை நேரத்தில் இணையற்ற எழிலுடன் விளங்கிக்கொண்டிருந்தது.

‘இடம் இரண்டு, தெற்றிகள் மூன்று, அரண்கள் நான்கு, தருக்கள் ஐந்து, புட்கள் ஆறு, நதிகள் ஏழு, பொதுக்கள் எட்டு, பொய்கைகள் ஒன்பது, சிலைகள் பத்து, மன்றங்கள் பதினொன்று’ என்ற புராணங்கள் விளக்கம் கூறியபின் தோன்றிய இரு வல்லரசுகளின் ஆதிக்கத்தில் அத்தனை செல்வங்களையும் ஆயிரம் மடங்கு அதிகமாகப் பெற்றுச் சிவ காஞ்சி என்றும், புத்த காஞ்சி என்றும், வைணவ காஞ்சி என்றும் ஜைன காஞ்சி என்றும் நான்கு காஞ்சிகளை உள்ளடக்கியதால், நான்கு பெரும் கலாசாரங்களையும் தன் கர்ப்பத்தில் சிறைப்படுத்திய அந்தக் காஞ்சி மாநகரத்திலே, அந்தக் காலை நேரத்திலே வேத கோஷங்களும் ஜைன புத்த மடாலயத் துதிகளும் பெரிதாக எழுந்து ஆகாயத்தைப் பரிசுத்தப்படுத்துவன போல் எங்கும் பறந்து கொண்டிருந்தது. நகரத்தை வளைத்து நின்ற பெரிய கோட்டைச் சுவரைச் சூழ்ந்து புறாக்களும், சுறாக்களும் சீறி எழுந்ததால் பார்க்கப் பயம் விளைவிக்கும் பேரகழியில் கிளம்பிய சிற்றலைகள் ராஜேந்திர சோழ தேவனைத் தாக்க முயலும் சிற்றரசர்களைப்போலக் கோட்டையின் பெரும் சுவர்களைப் பயனின்றித் தாக்கிக் கொண்டிருந்தன. அவை அப்படித் தாக்கிக்கொண்டிருந்ததால் எழும்பிய ‘களுக் களுக்’ என்ற சப்தத்தை அடக்குபவர்களைப் போல கோட்டைச் சுவர்களின் மீது நாலா பக்கத்திலும் வேலும் கையுமாக உலாவிக்கொண்டிருந்த ஏராளமான வீரர்கள் ‘பராக்’ கோஷங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘கணிகண்ணன் போகின்றான், காமருபூங் கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டாம், செந்நாப்புலவன் யானும் போகிறேன். நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று திருமழிசைப்பிரான் கூறியதும் அவர் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமானும்’ மீண்டும் அவர் கோரிக்கைக்கிணங்கி, போக்கொழிந்து பள்ளி கொண்ட திருவெஃகாவின் உயர்ந்த கோபுரத்திற்குச் சற்றுத் தள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த வேகவதி நதியும், முன்பொரு காலத்தில் தன்னை அணைபோட்டுத் தடுத்த அதே பெரு மானுக்காகப் பயந்தது போல் மெள்ளப் பிரவாகித்துக் கொண்டிருந்தாலும், இராஜேந்திர சோழதேவன் அடைந்திருந்த பெருவெற்றிகளின் காரணமாகச் சற்றுக் கர்வத்துடனேயே கரைகளைத் தாக்கிக்கொண்டிருந்தது. வேகவதியின் கரைகளிலே இருந்த தோட்டங்களில் அன்று காலை மலர்ந்திருந்த மல்லிகைகளும் முல்லைகளும் சற்று நேரத்திற்கெல்லாம் தாங்கள் அலங்கரிக்க விருந்த மங்கையர்களின் சிங்காரக் கொண்டையை எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தன.

கண் சுற்றிய இடங்களெல்லாம் கோபுரங்கள் பெரு வாரியாக எழுந்திருந்ததால், அவற்றையெல்லாம் ஊடுருவ முடியாத கதிரவன், அன்று காலை நேரத்தில் வீசிய இளம் கிரணங்கள் ஒவ்வொரு பக்கத்திலே கோபுரங்களில் பெரும் நிழல்களைப் பாய்ச்சியிருந்ததன் காரணமாக அந்த காஞ்சி மாநகர், அன்று அரண்மனையிலே தங்கியிருந்த ராஜேந்திர சோழ மன்னன் மனம் போலவே மிகக் குளிர்ந்து கிடந்தது. அந்தக் குளிர்ச்சிக்கு உதவிபுரிந்த தைத் திங்களின் காலைப் பனி, கோபுரங்களின் மீது மட்டுமன்றி உப்பரிகைகள் மீதும் முத்து முத்தாய்ப் பதிந்து, காலைச் சூரிய ரச்மிகளைப் பல கூறுகளாகப் பிரித்து, நானாவித வர்ண ஜாலங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

ஆழ்வார்களின் பாடல்களும் நாயன்மார்களின் பதிகங் களும் கோயில்களில் வேத சுரத்தில் ஓதப்பட்டதாலும் வீதிகளில் சென்ற ஓதுவார் தேவாரங்களுக்குப் பண்ணிசைத்து வாத்தியங்களுடன் பாடிச் சென்றதாலும் ஏற்பட்ட ஒலிகளனைத்தும் கலந்து பெரிய பிரணவ சத்தம் போல் காஞ்சி மாநகரைச் சூழ்ந்துகொண்ட போதும், அரண்மனை ஸ்தூபியிலும் இதர உப்பரிகை மாடங்களிலும் இருந்த பட்சி ஜாலங்கள் தங்களுக்கும் ஈசன் ஒரு தனிச் சிறப்பை அளித்திருக்கிறான் என்பதைக் காட்ட நானாவித சப்தங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தன. காலை வேளையாதலால் தொழுக்களிலிருந்து மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்ட மாடுகளின் அம்மா, அம்மா எனும் இன்பச் சப்தங்களும், அரண்மனைக்குப் பக்கத்தி லிருந்த திருமஞ்சனத்தார் வேளத்தை அடுத்துக் கிடந்த சேனைக் கூட்டங்களிலிருந்து எழுந்த யானைகளின் பிளிறல்களும், குதிரைகளின் கனைப்புகளும், மாடப் பறவைகள் கிளப்பிய சப்தங்களுடன் பெரும் போட்டி யிட்டன.

இரவு முழுவதும் காவல் செய்த வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக, ராஜவீதிகளில் போய்க்கொண்டிருந்த வீரர்களின் புரவிகளின் காலடிச் சத்தமும், வேகவதியின் ராஜ ஸ்நான கட்டத்துக்கு விரைந்துகொண்டிருந்த அரண்மனை ஸ்திரிகளின் சிவிகை ஆட்கள் போட்ட ‘ஹும்’ கார ஒலியும் எல்லாமாகச் சேர்ந்து, அந்த மாநகரத்திற்கு இயற்கையாகவுள்ள கம்பீரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.

எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு கிடந்தது. எங்கும் வீரர்களின் வெற்றிக் கோஷங்கள் வானைப் பிளந்தன. சோழர்களின் புலிக்கொடிகள் பல உப்பரிகைகளிலிருந்து ஆகாயத்திலே கம்பீரமாகப் பறந்துகொண்டு, சோழர்களின் ஆதிக்கத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. புலிக்கு அடங்கும் காலம் தனக்கு வந்துவிட்டதே என்ற வருத்தத்தினால் போலும், சிவகாஞ்சியிலிருந்த கைலாச நாதர் கோயிலிலும் இதர ஸ்தூபிகளிலும் காணப்பட்ட பல்லவ சிற்பச் சிங்கங்கள் பேச்சு மூச்சின்றி மௌனமாகக் கிடந்தன. புத்த காஞ்சியில் பல்லவ அரண் மனையின் உச்சி உப்பரிகையில் கைலாசநாதர் கோபுரச் சிங்கங்களை நோக்கி நகையாடும் முறையில், மிகப்பெரிய புலிக்கொடியொன்று காற்றில் படபடத்துக் காலைக் கதிரவன் ஒளியில் பளபளத்துக் கொண்டிருந்தது.

புலிக்கொடியின் ஆதிக்கம் தென்னாடெங்கும் பரவிய தன்றி, வடநாட்டையும் ஊடுருவிச் சென்றுகொண்டுதா னிருந்தது. ஏற்கெனவே கரிகாலன் கூறிய அறு சுவர்களில் நான்கு சுவர்கள் சரிந்துதான் போயின. சக்கரக் கோட்டம் சரிந்ததும், ஒட்டரனான இந்திரதத்தனும், தண்ட புத்தியின் தர்மபாலனும், தெற்கு லாடத்தின் ரணசூரனும், அரையன் ராஜராஜன் படை பலத்துக்கும் கரிகாலன் போர்த் தந்திரத் துக்கும் எதிரே நிற்கமாட்டாமல் சரிந்தே போனார்கள். இன்னும் இரண்டே சுவர்கள்! வங்காளத்தின் கோவிந்த சந்திரன், உத்திரலாடத்தின் மஹிபாலன்! இந்த இரண்டு அரசுகளும் சரிந்துவிட்டால் புலிக்கொடி கங்கையின் கரையில் நாட்டப்படும்! அதை அறிந்துதானிருந்தான் பரகேசரிவர்மனான இராஜேந்திர சோழதேவனும். இருப்பினும், சாம்ராஜ்ய வெற்றியிலே மகிழ வேண்டிய அந்த மாபெரும் மன்னன் மனத்திலே மட்டும் அன்று மகிழ்ச்சி சிறிதும் இல்லை. ஏதோ பெரிய சுமை ஒன்று அந்த மாமன்னன் மனத்தை அழுத்திக் கொண்டிருந்ததை, தைத்திங்கள் உதயமான அந்தப் புனித காலை நேரத்தில் சோழப் பேரமைச்சர் கண்டார்.

கலை எழில் கரை புரண்டு ஓடும்படியாகப் பல்லவர்கள் கட்டிய புத்த காஞ்சியின் அரண்மனையின் அந்தரங்க முத்தாணி மண்டபத்தில், பெரும் அரியணையிலே அமர்ந்திருந்த இராஜேந்திர சோழதேவன், தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். மிகவும் அழகான தோற்றமுடைய வனாதலால், இராஜேந்திர சோழன் என்ற இயற்பெயரோடு சுந்தரச்சோழன் என்ற காரணப்பெயரைப் பெற்ற அந்தச் சோழப்பேரரசனின் ஆறடி உயர சரீரம், பல்லவ சிம்மாசனத்திலே ஒருபுறமாகச் சாய்ந்து கிடந்தது. வயது சற்று ஏறியிருந்தாலும் அழகு சற்றும் குறையாத அவன் மதி வதனத்தில் துளிர்த்த கவலையை ஆற்ற இஷ்டப்பட்டன போல், அவன் முகத்தைச் சுற்றித் தவழ்ந்துகொண்டிருந்த சில சுருட்டை மயிர்கள் வேகவதியிலிருந்து புறப்பட்ட காற்றில் மெள்ள ஆடி அந்தச் சுந்தரவதனத்தை அடிக்கடி தடவிக் கொடுத்தன. நாள் தவறாமல் அரியணையில் உட்கார்ந்து மக்களுக்கு நீதி செலுத்த வேண்டியிருந்ததால், நாள் தவறாமல் பெருங் கிரீடத்தை தரித்ததன் காரணமாக நெற்றியின் உச்சியில் ஏற்பட்டிருந்த வில் போன்ற வடுக்கூட சக்கரவர்த்தியின் முகத்துக்கு அழகையே அளித்துக் கொண்டிருந்தது. சிம்மாசனத்தின் கைகளிலே துவண்டு கிடந்த அவன் மெல்லிய கைகளிலே ஓடிய நரம்புகள், அந்தக் கைகள் எந்த விநாடியிலும் இரும்பாகும் தன்மையைப் பெற்றவை என்பதைச் சந்தேகமற நிரூபித்தன. சிம்மாசனத்தின் முன்புறத்திலே ஊன்றியிருந்த கால்களில் தென்பட்ட தழும்புகள் சதா போர்க்கவசம் பூண்டு புரவியில் செல்லும் அவன் பழக்கத்துக்குச் சான்றாக நின்றன. உள்ளம் பெரும் கவலையால் பீடிக்கப்பட்ட அந்தச் சமயத்திலும், இரு வேல்களைப் போல் கூர்மையாகத் தெரிந்த அந்த மாமன்னனின் கண்ணின் கரு மணிகள், ‘இவரை யாரும் ஏமாற்ற முடியாது’ என்ற எச்சரிக்கையை விடுவித்துக் கொண்டிருந்தன. அவன் கடை இதழில் சதா தவழ்ந்து கொண்டிருந்த ஒரு புன் சிரிப்பு எத்தனை கவலையிருந்தாலும் அதை அசட்டை செய்யக்கூடிய மனோபாவத்தை வெளிப்படுத்தியது. அன்று காலையும் அந்தப் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் உள்ளேயுள்ள கவலையை அசட்டை செய்யும் மனோ பாவத்தின் அடையாளம் அன்று மட்டும் புலப்பட வில்லை, இராஜேந்திர சோழனின் எழில் முகத்திலே.

மன்னன் வாயிலிருந்து ஏதாவது வார்த்தை உதிருமோ என்று நீண்ட நேரம் எதிர்பார்த்து ஏமாந்த பேரமைச்சர் அரசன் கவனத்தைத் திருப்பத்தாமே முதலில் பேசத் தொடங்கி, “மன்னவா” என்று மெல்ல அழைத்தார்.

ஒருக்களித்துச் சிம்மாசனத்தில் சாய்ந்து கிடந்த இராஜேந்திரன், சற்றுத் தலையைத் திருப்பி, பேரமைச்சர் மீது தன் கண்களை ஓடவிட்டான். வாய் எதுவும் பேசா விட்டாலும் ‘எதற்காக அழைக்கிறீர்கள்?’ என்ற கேள்வி மன்னன் பார்வையில் தொக்கி நிற்பதைக் கண்ட பேரமைச்சர், விஷயத்தை விளக்க முற்பட்டு, “அரையன் ராஜராஜனிடமிருந்து இன்றும் ஒரு தூதுவன் வந்திருக்கிறான்” என்றார்.

மன்னன் அதில் மகிழ்ச்சி கொள்ளுவதற்குப் பதிலாகச் சினமே கொண்டான் என்பதை அவன் முகம் லேசாகக் காட்டினாலும், அவன் வாயிலிருந்து வார்த்தைகள் மிக நிதானமாகவே உதிர்ந்தன.

“தூதுவன் வந்திருக்கிறானா?” என்று கேட்டான் மன்னன்.

“ஆம் அரசே” என்று மெள்ள நிமிராத தலையுடன் நிலத்தை நோக்கிக் கொண்டே பதில் சொன்னார் பேரமைச்சர்.

“ஒரே ஒரு வெள்ளிக் குழல்தானே வந்திருக்கிறது?”

“ஆமாம்.”

“அதில் கண்டிப்பாய் இரண்டு ஓலைகள் இருக்கும்.”

“ஆமாம்.”

“குழலை உடைத்துப் பார்த்தீரா?”

“பார்த்தேன்.”

“இரண்டு ஓலைகள்.”

“இருக்கின்றன.”

“ஒன்று…”

“தங்களுக்கு.”

“இன்னொன்று?” சினத்துடன் எழுந்தது சக்கரவர்த்தி யின் கேள்வி. பதில் சொல்லத் தயங்கினார் பேரமைச்சர். இராஜேந்திரன் பதிலைச் சொன்னான். “இன்னொரு ஓலை தஞ்சை புத்த மடாலயத் துறவி பிரும்மானந்தருக்கு” என்று.

“ஆமாம் மன்னவா.” பணிந்த குரலில் ஒப்புக் கொண்டார் பேரமைச்சரும்.

“அதில் பழைய சோழர் குல முத்திரை இருக்கிறதா?” என்று மீண்டும் வினவினான் மன்னன்.

“இருக்கிறது” என்பதற்கு அறிகுறியாகப் பேரமைச்சர் தலையை ஆட்டினார்.

“அதே கிரீடம்” என்று தொடர்ந்தான் மன்னன்.

“ஆமாம்.”

“என்ன ஆமாம்? எதைப் பார்த்தாலும் ஆமோதிக்கிறீரே பேரமைச்சரே!” என்று சொல்லிக்கொண்டே, ஆசனத்திலிருந்து கனவேகத்தில் எழுந்திருந்த இராஜேந்திர சோழதேவன், அரியாசனத்துக்கு எதிரே சற்று நேரம் உலாவினான். பிறகு சட்டென்று நின்று பேரமைச்சருக்கு அருகில் வந்து, “நீர் இந்தப் பேரரசில் எத்தனை நாளாக அமைச்சராக இருக்கிறீர்?” என்று கடினமான குரலில் கேட்டான்.

“தங்கள் தந்தை காலத்திலிருந்து.” நிதானமாகவே பதில் சொன்னார், வயோதிகரான பேரமைச்சர்.

“சோழர் குல முத்திரையை, அதுவும் கிரீடத்தை, அரச குல மக்களுக்கு எழுதப்படாத ஓலைகளில் பொறிப்பதுண்டா?” என்று இராஜேந்திரன் கேட்டான், கோபம் மெள்ளத் துளிர்த்த குரலில்.

“உண்டு” என்றார் அமைச்சர், இயற்கையாக அவருக் கிருந்த அமைதியைக் கைவிடாமல்.

“எந்தச் சந்தர்ப்பங்களில் உண்டு?” என்று கேட்டான் இராஜேந்திரன்.
“அரசகுல மர்மங்களைப்பற்றி எழுதப்படும் ஓலை களில் பொறிப்பதுண்டு.”

சிறிது நேரம் சிந்தித்துவிட்டுக் கேட்டான் இராஜேந் திரன், “அப்படியானால் அரையன் ராஜராஜன் இந்தத் தஞ்சைத் துறவிக்கு எழுதும் ஓலைகளில், அரசகுல மர்மம் என்ன இருக்கிறது பேரமைச்சரே?” என்று.

“எனக்குத் தெரியாது மன்னவா?”

“தெரிந்து கொள்ள வேண்டியது உமது கடமை யல்லவா?”

“ஆமாம்.”

“அந்தக் கடமையை நிறைவேற்ற, என்ன செய்திருக் கிறீர்கள்?”

“எதுவும் செய்யவில்லை. அரையன் ராஜராஜன் திரும்பி வரட்டும் என்று பொறுத்திருக்க உத்தேசித்திருக்கிறேன்.”

இதைக் கேட்ட இராஜேந்திரன் மீண்டும் அரியணையில் அமர்ந்துகொண்டு, அவரைச் சற்று நேரம் உற்று நோக்கினான். “நீர் பொறுக்கலாம் அமைச்சரே, என்னால் பொறுக்க முடியாது. நானும் ஆறு மாத காலமாகப் பொறுத்திருக்கிறேன். ஒவ்வொரு குழலிலும் இரண்டு ஓலைகள் வருகின்றன. ஒன்று எனக்கு, இன்னொன்று தஞ்சைத் துறவியாருக்கு. இன்னொரு ஓலையைப் படிக்க வேண்டாம் என்று ஓலையில் வேண்டுகோள்! சாம்ராஜ் யாதிபதி பார்க்க உமக்கு?” என்று படபடப்புடன் பேசினான் இராஜேந்திரன்.
“அவசரப்படாதீர்கள் மன்னவா. காரணமில்லாமல் அரையன் ராஜராஜன் எதையும் செய்யமாட்டான். அவனிடம் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். பெரு வெற்றிகளைத் தங்களுக்குச் சம்பாதித்துத் தந்திருக்கும் அவனுக்குத் தாங்கள் செய்யும் கைம்மாறு இதுவல்ல. அரையன் ராஜராஜன் கங்கைப் படையெடுப்பிலிருந்து திரும்பட்டும். அவனே தங்களுக்குச் சகலத்தையும் சொல் வான்” என்று சமாதானப்படுத்த முயன்றார் பேரமைச்சர்.

இராஜேந்திர சோழதேவன் மனத்தில் சிறிதும் சாந்தி ஏற்படவே இல்லை. எதையோ சற்று யோசித்துவிட்டுக் கேட்டான், “அது சரி! அரையன் ராஜராஜன் கீர்த்தியை விட பன்மடங்கு அதிக கீர்த்தியைப் பெற்றுவிட்டானே, அந்த வாலிபன் யார்?”

“கரிகாலனைத்தானே குறிப்பிடுகிறீர்கள் மன்னவா?” என்று வினவினார் பேரமைச்சர்.

“ஆம் அமைச்சரே! சக்கரக் கோட்டத்தின் வெற்றிக்கு மட்டுமின்றி, மற்றும் பல வெற்றிகளுக்கும் அடிகோலியதாகக் கூறப்படும் அந்தக் கரிகாலன் யார்?” என்று விசாரித்தான் மன்னன்.

“முன்பே சொன்னேனே மன்னவா. அவன் தான் அரையன் ராஜராஜன் வளர்ப்பு மகன்” என்றார் பேரமைச்சர்.

“அது தெரியும் பேரமைச்சரே! அவன் யார்? எங்கிருந்து வந்தான்! அவனைப் பெற்றெடுத்தவர் யார்?”

“அவனுக்குப் பெற்றோர் யாருமில்லை. அவன் அநாதை. சூடாமணி விஹாரத்திலிருந்து வந்தான்.”

“அவனை அரையன் ராஜராஜனிடம் அனுப்பியது தஞ்சைத் துறவிதானே?”

“ஆமாம்.”

“இராஜேந்திரனின் கண்களில் ஒரு புத்தொளி துளிர்த்தது. அப்படியானால் இந்தத் தஞ்சைத் துறவிக்கும் கரிகாலனைப்பற்றி ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அதுவும் அரசகுல மர்மமாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த ஓலை சோழர்குலக் கிரீட முத்திரையுடன் பிரும்மானந்தருக்கு அனுப்பப்படுகிறது. இப்பொழுது விளங்குகிறதா பேரமைச்சரே?” என்றான் இராஜேந்திரன். “இருக்கலாம்” என்றார் பேரமைச்சர்.

“அந்த மர்மம் என்ன என்பதை இன்று பார்த்து விடுகிறேன். அரையன் ராஜராஜனிடமிருந்து வந்த ஓலைகள் எங்கே?”

“இதோ!” பேரமைச்சர், அரசன் நீட்டிய கைகளில் ஓலையைச் சமர்ப்பித்தார்.

இராஜேந்திரன் மீண்டும் ஆசனத்தை விட்டு எழுந்து ஓர் ஓலையை ஆசனத்திலேயே எறிந்தான். இன்னொரு ஓலையின் விலாசத்தைப் படித்து இதழ்களில் புன்முறுவல் தவழ அதன் முத்திரைகளை உடைக்கப் போனான். அடுத்தகணம் அந்தப் புன்முறுவல் மறைந்தது. “நில் இராஜேந்திரா!” என்று எழுந்த அதட்டலான குரல் சோழ சாம்ராஜ்யத்தின் ஏக சக்ராதிபதியான இராஜேந்திரனைக் கூட அசர வைத்தது. குரல் வந்த திசைக்காகத் திரும்பினான் இராஜேந்திரன். அச்சம் என்பதைக் கனவிலும் அறியாத அவன் கண்களில்கூடப் பயம் துளிர்த்தது. அரசகுலத்தையே அசட்டை செய்யும் பார்வையுடன் வாயிற் படியில் நின்றிருந்த தஞ்சை மடாலயத் துறவி பிரும்மா னந்தர் மன்னனை நோக்கி மிகுந்த கம்பீரத்துடன் நடந்து வந்தார்.

“வாரும். உமக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றான் மன்னவன். அவன் இதழ்களிலே என்றும் யாரும் காணாத குரூரப் புன்சிரிப்புக் காணப்பட்டது.

மிகுந்த அசட்டையுடனும் துணிவுடனும் உள்ளே நுழைந்த பிரும்மானந்தர், அரசர் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களையும், அவன் கடையிதழில் தெரிந்த குரூரச் சிரிப்பையும் கவனித்ததும், அவன் உள்ளே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை நொடிப்பொழுதில் ஊகித்து விட்டாராதலால் தமது வாழ்க்கையின் மிக ஆபத்தான கட்டத்தைத் தான் அணுகிவிட்டதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டிருந்தார்.

Previous articleMannan Magal Part 2 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here