Home Historical Novel Mannan Magal Part 2 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

93
0
Mannan Magal part 2 Ch 27 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 27 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 27 துறவிக்கு வேந்தன் துரும்பு

Mannan Magal Part 2 Ch 27 | Mannan Magal | TamilNovel.in

சோழப் பேரரசின் மாமன்னன் தம்மை வரவேற்ற தோரணை, அவன் முகத்திலே துளிர்த்த உணர்ச்சிகள், கையிலே அவன் ஏந்தி நின்ற ஓலை – இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்த தஞ்சை மடாலயத் துறவி பிரும்மானந்தர் உள்ள நிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டாராதலால், தமது கண்களை மஞ்சத்தில் கிடந்த ஓலைமீதும், இராஜேந்திரனுக்குச் சற்று அப்பால் முகத்தில் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்த பேரமைச்சர்மீதும் ஒரு விநாடி ஓடவிட்டார். அதுவரை பிரும்மானந்தருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தாலும், அதைப் பேரமைச்சரின் கிலி பிடித்த முகம் அறவே போக் கடித்துவிட்டதால், தமக்கு வரும் ஓலையின் மர்மத்தை அறியாமல் அறுமாத காலம் பொறுத்துக் கொண்டிருந்த இராஜேந்திரன் பொறுமையை அடியோடு இழந்துவிட்டா னென்பதையும், அந்த ஓலை சம்பந்தமாக இருவருக்கும் பெரும் விவாதமும் நடந்திருக்கிறதென்பதையும் ஊகித்துக் கொண்டார் தஞ்சைத் துறவியார்.

உள்ளே ஓடிய எண்ணங்களைச் சிறிதும் வெளியில் காட்டாமல், புன்னகை தாண்டவமாடிய முகத்துடன், தமது இரு கைகளையும் உயரத்தூக்கி, “தைத் திங்கள் உதயமான இந்த நன்னாளன்று, சோழப் பேரரசனுக்குச் சர்வ மங்களங்களும் உண்டாக்க புத்தர் பிரான் அருள் புரியட்டும். இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி பாரெங்கும் பரவட்டும். இன்னும் இரண்டு மாதங்களில் புனித கங்கையின் கரையில் நாட்டப்படும் புலிக்கொடி, பிறகு இமயத்தின் சிகரத்திலும் பறக்கட்டும்!” என்று ஆசி கூறினார்.

வேல் போன்ற தன் கண்களைத் தஞ்சைத் துறவியார் மீது சில விநாடிகள் நாட்டிய சோழவேந்தனின் கடையிதழ்களில் இருந்த புன்சிரிப்பு சிறிது நேரத்தில் நன்றாக விகசித்தது. வெளியே பெரு மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்ட வேந்தன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களில் சோகமும் விஷமுங் கலந்து நின்றன. “சோழப் பேரரசின் விஸ்தாரத்துக்காகத் தங்கள் ஆசிகளை ஏற்கிறேன் துறவியாரே! ஆனால், தங்கள் இஷ்டப்படி இமயத்தில் புலிக்கொடி பறக்க வேண்டுமானால் இந்த ஆசிகள் மட்டும் போதாது…” என்று பேசிய வேந்தன், பேச்சை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினான்.

அரசன் எண்ணங்கள் எந்தத் திக்கில் ஓடுகின்றன என்பதைப் புரிந்துகொண்ட தஞ்சைத் துறவியார், ஏதும் அறியாதது போலவே கேட்டார், “ஆசிகள் போதாதா? வேறென்ன வேண்டும் மன்னவா?” என்று.

“நம்பிக்கை” என்று பதிலிறுத்தான் அரசன்.

“நம்பிக்கையா! யார் நம்பிக்கை?” என்று வினவினார் துறவியார்.

“சுற்றியிருப்பவர்கள் நம்பிக்கை” என்று பதில் கூறிய மன்னன் வார்த்தைகளைச் சற்று அழுத்தியே சொன்னான்.

“சொல்வது புரியவில்லை மன்னவா!”

“ஏன் புரியவில்லை? பெரிய சாம்ராஜ்யங்கள் நம்பிக்கையாலும் உறுதியாலும் ஸ்தாபிக்கப்படுகின்றன, பிரும்மானந்தரே! பூரண நம்பிக்கையை மன்னரிடம் வைத்துள்ள படைத்தலைவர்கள், மந்திராலோசனை செய்பவர்கள், இவர்களால்தான் சாம்ராஜ்யங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன.”

உண்மை மன்னவா! இந்த அம்சங்களில் நமது சாம் ராஜ்யத்தில் எது குறைவாயிருக்கிறது? மன்னனைத் தெய்வ மென்று மதிக்கும் மந்திரிகள் இல்லையா? சக்கரவர்த்திக்காக உயிரையே போரில் தியாகம் செய்யத் துடிக்கும் சேனாதிபதிகள் இல்லையா?”

“இருக்கிறார்கள் துறவியாரே! படைத்தலைவர்களைப் பற்றியோ, அவர்கள் ஆற்றலைப் பற்றியோ நான் பேச வில்லை, நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறேன்.”

“படைத்தலைவர்களின் ராஜபக்திக்கு நம்பிக்கைதானே அஸ்திவாரம்?” என்று கேட்டார் பிரும்மானந்தர்.

இராஜேந்திரன் அவரை நன்றாக உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னான், “அப்படித்தான் நானும் நினைத்தேன் துறவியாரே! ஆனால் இரண்டும் வேறுபட்டவை என்பதைச் சமீப காலத்தில்தானே அறிந்தேன்” என்று.

பிரும்மானந்தர் அச்சம் சிறிதுமில்லாத கண்களை அரசன் மீது ஓட்டினார். பிறகு துக்கம் கலந்த பெருமூச்சொன்றை விட்டார். “இது நியாயமல்ல இராஜேந்திரா?” என்ற சொற்களும், அந்தப் பெருமூச்சொன்றைத் தொடர்ந்து வெளிவந்தன.

அரசன் கண்களில் விஷமமும் கோபமும் கலந்து தாண்டவமாடின. “எது நியாயமல்ல துறவியாரே? ஒரு படைத்தலைவன அரசனுக்கெதிராகச் சதி செய்கிறானென்பது நியாயமல்ல என்கிறீரா? அல்லது அதை அரசன் ஆறுமாத காலம் பொறுத்தது நியாயமல்ல என்கிறீரா? அந்தச் சதியில் துறவியான நீரும் கலந்து கொண்டது நியாயமல்ல என்கிறீரா? எதை நியாயமல்ல என்று கூறுகிறீர்?” என்று உஷ்ணம் பரிபூர்ணமாகத் தொனித்த குரலில் கேட்டான் இராஜேந்திரன்.

அரசனுடைய சொல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலாக இதயத்தைத் தாக்கியதால் மனம் புண்பட்டதோடு சினமும் கொண்ட துறவியார், சீற்றத்தால் ஓரளவு சிவந்துவிட்ட கண்களால் அரசனை ஏறெடுத்துப் பார்த்து, “மன்னவா! வார்த்தைகளை அளந்து பேசு, அதுவும் யாரைப் பற்றிப் பேசுகிறாய், யாரிடம் பேசுகிறாய் என்பதை நினைத்துப் பேசு” என்று அரசனுக்குச் சிறிதும் குறையாத உஷ்ணத்துடன் எச்சரித்தார்.

இராஜேந்திரனின் கண்கள் ஆச்சரியத்தால் சற்றே மலர்ந்தன. ஆச்சரியம் மட்டுமல்லாமல் சீற்றமும் தலை ‘தூக்கிய குரலில், “துறவியாரே! நீர் இருக்கும் இடத்தை அறியாமல் பேசுகிறீர். இது சோழ சாம்ராஜ்யம், நினைப்பிருக்கட்டும்” என்றான் மன்னன்.

“இருக்கும் இடத்தை அறிந்துதான் பேசுகிறேன் மன்னவா? ஆனால் நான் உன் பிரஜை அல்ல” என்றார் துறவியார்.

“என் பிரஜை அல்லவா?”

“அல்ல. நான் சோழ சாம்ராஜயத்தைச் சேர்ந்தவன் அல்ல.”

“பின் எந்த சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்?”

“எந்தப் பேரரசு அழிந்தாலும், பிரளயமே வந்தாலும் அழியாத புத்தர் பிரானின் அன்பு சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவன். உன்க்குத் தேயைாயிருக்கும் ஆயுதங்களும் படைகளும் எங்களுக்குத் தேவையில்லை இராஜேந்திரா! எங்களுக்கு அன்புதான் அஸ்திரம். அஹிம்சைதான் சாம்ராஜ்யம்” என்று படபடப்புடன் கூறினார் துறவியும்.

துறவியின் சொற்களால் அரசன் கோபம்தான் தணிந் தானோ அல்லது உள்ளூர அதை மறைத்தானோ சொல்ல முடியாது. துறவியின் பேச்சைக் கேட்டதும் அரசன் முகத்தில் சினம் மறைந்து, மீண்டும் புன்னகை தவழ்ந்தது.

“அப்படியானால் துறவியாரே! இந்தச் சோழ சாம் ராஜயத்துக்கு ஏன் வந்தீர்” என்று கேட்டான் மன்னவன்.

“இந்தச் சாம்ராஜ்யத்தில் அந்தச் சாம்ராஜ்யத்தைப் பரப்ப” என்று கோபம் சற்றே தணிந்த குரலில் பதில் சொன்னார் துறவியார்.

“அந்த சாம்ராஜ்யத்தை என் சாம்ராஜ்யத்தில் பரப்பத்தான் அரையன் ராஜராஜனுடன் ரகசியக் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருக்கிறீரோ?” என்று விசாரித்தான் மன்னவன்.

அரசனின் சாந்தம் கலந்த சொற்களில் ஆபத்தின் அம்சம் துளிர்ப்பதைக் கண்ட தஞ்சைத் துறவியார், சற்று எச்சரிக்கையுடனேயே பதில் சொல்லத் தொடங்கி, “ஆம் மன்னவா! அதற்காகத்தான்” என்றார்.

“ஏன், அரையன் ராஜராஜன் புத்த மதத்தைத் தழுவ இசைந்துவிட்டானா?”

“புத்த மதம் என்பது தனி மதமல்ல மன்னா! அது ஒரு கொள்கை. மக்கள் இருக்கவேண்டிய சூழ்நிலையை அது சிருஷ்டிக்கிறது. எங்கெல்லாம் அஹிம்சையும், சாந்தமும் சந்துஷ்டியும் நிலவுகின்றனவோ அங்கெல்லாம் புத்த மதம் உலவுகிறது” என்றார் துறவியார், கண்களை அந்த முத்தாணி மண்டபத்தின் மேல்புறத்துக்காக உயர்த்தி, அங்கிருந்த சித்தார்த்தன் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே.

“அந்தச் சாந்தமும் சந்துஷ்டியும் இப்பொழுது அரையன் ராஜராஜனுக்கு ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது?” என்று அரசன் ஏளனமாகக் கேட்டான்.

துறவி பெருமூச்செறிந்துகொண்டே சொன்னார், “இல்லை மன்னவா! அவன் மனத்தில் சாந்தியுமில்லை, சந்துஷ்டியும் இல்லை. மற்றவர்களுக்குச் சாந்தியும் சந்துஷ்டியும் விளைவிக்கவே அவன் ஜீவிக்கிறான். உன் சாம்ராஜ்யத்தில் அன்பையும் க்ஷேமத்தையும் நிலவ விடுவதே அவன் வாழ்வின் லட்சியம். அவனிடம் அவநம்பிக்கை கொள்ளாதே. உன் நன்மைக்கே அவன் உயிர் வாழ்கிறான்” என்று.

“அதற்காகத்தான் இந்த ரகசிய ஓலையை உமக்கு அனுப்புகிறானோ” என்று வேந்தன் வினவினான்.

“ஆமாம்.”

“அப்படியானால் இந்த ஓலையில் என்னதான் எழுதியிருக்கிறது?”

“சொல்ல முடியாத நிலையிலிருக்கிறேன் இராஜேந்திரா!”

“அப்படியானால் இதை உடைத்தே பார்க்கிறேன்” என்று இராஜேந்திரன் கையிலிருந்த ஓலையின் முத்திரைகளை உடைக்க ஆரம்பித்தான்.

அடுத்த விநாடி துறவியின் குரல் மிகக் கடுமையாக ஒலித்தது அந்த முத்தாணி மண்டபத்தில். “முத்திரைகளை உடைக்காதே இராஜேந்திரா. உன்மீது ஆணை! உன் குலத்தின் மீது ஆணை! எந்தப் புலிக்கொடி உன் வெற்றிக் கெல்லாம் அடையாளமாக விளங்குகிறதோ அதன்மீது ஆணை. உனக்கு இந்தப் பேரரசைக் கொடுத்த உன் தந்தையின் மீது ஆணை” என்று கூறினார் துறவியார்.

அரசன் முத்திரையின் ஒரு பகுதியை உடைத்தான். துறவியார் அவன் கையை வெடுக்கென்று பிடித்துக் கொண்டார். “கடைசி முறையாகச் சொல்கிறேன். எந்த மன்னுயிரையெல்லாம் உன்னுயிர் போல் பாவிக்கிறாயோ அந்த உன் மக்கள் மீது ஆணை, உடைக்காதே ஓலையை”. என்று உத்தரவிட்டார் துறவியார்.

பல ஆணைகளுக்கும் அசையாத இராஜேந்திரன், கடைசி ஆணையில் அசந்து போனான். “மக்கள் மீது ஆணை” என்று உதடுகள் துடிதுடித்துச் சொற்களை உதிர்த்தன. துறவியை ஒருகணம் முறைத்துப் பார்த்த இராஜேந்திரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஏதோ பேச வாயெடுத்த அவன் வாய் அடைத்துவிடவே, துறவியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டுப் பேசாமல் உள்ளறையை நோக்கி நடந்தான்.

என்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இராஜேந்திரன் நடை இன்று மிகவும் தளர்ந்து காணப்பட்டது. அதைக் கண்ட தஞ்சை மடாலயத் துறவியின் கண்களில்கூட நீர் கசிந்தது “உனக்கு இணையான மன்னன் உலகில் கிடையாது இராஜேந்திரா! உன் சாம்ராஜ்யம் செழிக்கத் தானே இத்தனை பாடுபடுகிறோம் இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திரு மன்னவா! உன்னையும் மக்களையும் பாதிக்க இருக்கும் சிக்கல்கள் அறுந்து போகும். இடையில் எது நேர்ந்தாலும் மன்னித்துவிடு என்னை” என்று வாய்விட்டே பேசினார். அதுவரை மௌனமாக நின்றிருந்த பேரமைச்சர். துறவியை அணுகி வணங்கிக் கொண்டே சொன்னார், “துறவிக்கு வேந்தன் துரும்பு என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறேன் சுவாமி! ஆனால் இன்றுதான் அதன் அர்த்தத்தை நேரில் கண்டேன்” என்று.

பேரமைச்சரை நோக்கித் திரும்பிய துறவி, “தவறு பேரமைச்சரே! பழமொழி தவறு; துறவிக்கு வேந்தன் துரும்பல்ல, அதுவும் இராஜேந்திர மன்னவன் கண்டிப்பாகத் துரும்பல்ல. அவன் குணக்குன்று. குணத்தினால் இமயத்தைவிட உயர்ந்து நிற்பவன். இல்லாவிடில் இந்த அற்பனை ஒரு விநாடியில் சீவிப்போட்டு ஓலையைப் படித்திருக்கலாமே. இவனைப் பெற்ற இராஜராஜன் சிறப்புற்றான். இவனைப் பெற்ற இந்த நாடும் சிறப்புப் பெற்றது. அவனல்ல துரும்பு. அவனிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறேனே நான்தான் துரும்பு” என்று நாத் தழுதழுக்கப் பேசினார்.

அவர் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து கொண்டிருந் டிருந்ததால், அரண்மனையில் இரண்டு மூன்று நாள்களாவது தங்கவேண்டும் என்று பேரமைச்சர் விடுத்த அழைப்பைக்கூட ஏற்க மறுத்தார். அரசன் சென்றதும், அவன் தன்னிடமளித்த ஓலையைத் திறந்து படித்த அவர் முகத்தில் பெரும் கவலை சூழ்ந்தது. பிறகு பேரமைச்சரை நோக்கித் திரும்பிய துறவியார், “பேரமைச்சரே! இப்பொழுது நிரஞ்சனாதேவி எங்கிருக்கிறாள்” என்று வினவினார்.

“கூரத்தில்” என்று பதில் கூறினார் பேரமைச்சர்.

துறவியின் முகத்தில் கிலி படர்ந்தது. “என்ன? கூரத்திலா?” என்று கேட்டார்.

“ஆமாம்” என்றார் பேரமைச்சர்.

“அங்கு இன்னும் யாரிருக்கிறார்கள்?”

“வந்தியத்தேவர் இருக்கிறார்.”

“வந்தியத்தேவரும் அங்குதானிருக்கிறாரா? வெகு அழகு!”

“ஏன் துறவியாரே, இதிலென்ன தவறு நடந்தது? கூரத்து மாளிகை ஒன்றுதான் காலியாக இருந்தது. வேங்கி நாட்டு மன்னன் மகளை அங்கு அனுப்பிவிட்டோம்.”

துறவியின் கண்களில் கோபம் பலமாக வீசியது. “அனுப்பிவிட்டீரா! பேஷ்! கூரத்தில் நிரஞ்சனாதேவியும் வந்தியத்தேவரும், அதே ஊரில்” என்று ஏதோ சொல்லப் போனவர், மேலே பேச்சை ஓட்டாமல், “சரி சரி, இன்று பகல் இங்கேயே தங்குகிறேன். இன்றிரவு யாருக்கும் தெரியாமல் நான் கூரம் போக வேண்டும்” என்றார்.

“இரவிலா! ஏன்?”

“பகலில் செல்லக்கூடிய வேலையல்ல இது.”

பேரமைச்சர் துறவியார்மீது சந்தேகம் ததும்பிய கண்களை ஓட்டினார். துறவியார் பெரிதாக நகைத்தார்.

“ஏன் நகைக்கிறீர்?” என்று கேட்டார் பேரமைச்சர்.

“என் தலையெழுத்தை நினைத்து; துறவியாக வாழ வேண்டியவன் உலகச் சிக்கலில் திளைத்திருப்பதை நினைத்து.”

ஏதோ பெரும் அரசியல் ரகசியம், இராஜேந்திரன் அறியத்தகாத ரகசியம், துறவியாரின் இதயத்திலே பூட்டிக் கிடக்கிறதென்பதை உணர்ந்துகொண்டாலும் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை பேரமைச்சர். துறவிக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். அன்றிரவோடு இரவாகப் பயணம் செய்த பிரும்மானந்தர், கூரத்துக்கு நள்ளிரவில் வந்து, கூரத்தின் எல்லையிலேயே பல்லக்கை நிறுத்தி இறங்கிக்கொண்டு, திரும்பிச் செல்ல ஆள்களுக்கு உத்தரவு கொடுத்தார். பல்லக்கு கண்ணுக்கு மறைந்ததும் விடுவிடு என்று நடந்து சில தெருக்களைக் கடந்து கடைசியாக ஊரைவிட்டுத் தள்ளியிருந்த ஒரு தோப்புக்குள் காட்சியளித்த ஒரு சிறு மாளிகையை அணுகி இருமுறை மெல்லக் கதவைத் தட்டினார். உள்ளிருந்து விளக்குடன் வந்து கதவைத் திறந்த வேலைக்காரனிடம், பிரும்மானந்தர், தனது முஷ்டியைப் பிடித்துக் காட்டி ஏதோ சைகை செய்யவே, வேலையாள் பதிலேதும் சொல்லாமல் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். அந்த மாளிகையின் நடுக்கூடத்திலே இருந்த நடுத்தர வயதுள்ள ஒரு மாது துறவி யாரைக் கண்டதும் எழுந்திருந்து, “வாருங்கள்! வாருங்கள் ஏது இந்த நள்ளிரவில்?” என்று முகமன் கூறிக்கொண்டே, துறவியார் உட்காருவதற்கு ஓர் ஆசனத்தையும் சுட்டிக் காட்டினாள். ஆசனத்தில் அமர்ந்த துறவியும் வந்த சமாசாரத்தை விளக்க முற்பட்டு “ஆபத்து நெருங்குகிறது மகளே!” என்று சோகம் ததும்பிய குரலில் கூறினார்.

“உண்மையாகவா? என் மகனுக்கு…” என்று பதை பதைப்புடன் கேட்டாள் அவள்.

“அவனுக்கொன்றும் ஆபத்தில்லை மகளே! சோழ சாம்ராஜ்யத்தைத்தான் ஆபத்து நெருங்கி வருகிறது. எந்த ஆபத்தைத் தவிர்க்க நீ இந்த அஞ்ஞாத வாசத்தை ஏற்றுக் கொண்டாயோ, அந்த ஆபத்து மிகத் துரிதமாக நெருங்குகிறது” என்று தொடங்கிய துறவியார், நெருங்கி வரும் ஆபத்தைப்பற்றி விளக்க விளக்கப் பெரும் கிலி படர்ந்தது அந்த மாதரசியின் முகத்திலே. “இதற்காகவா நாங்கள் எங்கள் வாணாளையெல்லாம் வீணாளாக்கினோம் துறவி யாரே! இதற்கொரு வழியில்லையா?” என்று கதறினாள் அவள்.

Previous articleMannan Magal Part 2 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here