Home Historical Novel Mannan Magal Part 2 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

101
0
Mannan Magal part 2 Ch 28 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 28 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 மணிமேகலை

Mannan Magal Part 2 Ch 28 | Mannan Magal | TamilNovel.in

அரசியல் தொல்லைகளிலிருந்து அவ்வப்பொழுது விடுபட்டுச் சிற்சில நாள்கள் ஓய்வெடுத்துக் கொண்டு உல்லாசமாகப் பொழுது போக்குவதற்காகப் பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட மாளிகைகளையே பெரும்பாலும் உடைய, கூரம் நகரத்தை அடுத்த அந்த அடர்த்தியான தோப்பிலே தன்னந்தனியே நின்ற அந்த மாளிகையிலே, துறவிகளைவிட ஒருபடி அதிகமாகவே உலக பந்தங்களிலிருந்து விடுபட்டுத் தனி வாழ்க்கை நடத்தி வந்த அந்த மாதரசி, துறவியார் தந்த தகவலைக் கேட்டதும் துன்பச் சூழலில் பூராவாகச் சிக்கிக்கொண்டதால், அவள் கண்களிலிருந்து அருவிகளைப் போல் நீர் சுரந்து பிரவகித்தது. கைகளிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு அவள் விக்கி விக்கி வெகுநேரம் அழுவதைக் கண்ட பிரும்மானந்தர் மனமும் பாகாக உருகியதால், அவளைச் சாந்தப்படுத்த முயன்று, “அழவேண்டிய அவசியமில்லை மகளே! நீ எந்த வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதை எண்ணிப்பார். அந்த வம்சத்தில் மனமகிழ்ச்சிக்கு இடம் கொடுத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை யோசித்துப் பார்” என்று தைரியமூட்டினார்.

துறவியாரின் சொற்கள் அவளுக்கு ஓரளவு அறுதலை அளித்ததால், மெள்ள மெள்ள அவள் தன் துக்கத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தாள். முகத்திலிருந்த கைகளை நீக்கிக் கடைசியாகப் புடைவைத் தலைப்பால் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, அந்த மாதரசி துறவியார்மீது மீண்டும் தன் அழகிய விழிகளை நாட்டினாள். அவள் பார்வையில் தோய்ந்து கிடந்த சோகத்தின் ஆழத்தைக் கவனித்த பிரும்மானந்தரும், துன்பம் கலந்த பெருமூச்சொன்றை விட்டு, “மகளே! சிலர் துன்பப்படுவதற்கென்றே பிறக்கிறார்கள். அதுவும் தியாகிகளுக்குத் துன்ப வழியைத் தவிர வேறு வழியில்லை. இது வாழ்க்கையின் நியதி. இதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்று அவளைத் தேற்ற முயன்றார்.

“என் துன்பத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை துறவியாரே! மக்களுக்கு எதிரிகளால் ஏற்படக்கூடிய துன்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். தாய்மையின் உணர்ச்சிகளையெல்லாம் உள்ளடக்கி இதயத்தில் நான் பூட்டி வைத்திருக்கும் இந்த ரகசியம் என்னுடன் மாண்டுவிடும்; பிறகு சோழ சாம்ராஜ்யம் சௌக்கியப் பட்டுவிடும் என்று நம்பியிருந்தேனே! அந்த நம்பிக்கையிலெல்லாம் மண் விழுந்துவிட்டதே. கரிகாலன் பிறப்பின் ரகசியத்தை உணர்ந்து கொண்டு விட்டதாகச் சொல்கிறீரே!” என்றாள் அவள், ஆசனத்தில் பதுமைபோல் உட்கார்ந்தபடியே.

“ஆம் மகளே! உன் மகன், தான் யார் என்பதை உணர்ந்துகொண்டு விட்டான். உணர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன” என்றார் துறவியார்.

“ஆறு மாதங்களா! அறிந்துமா என்னைவிட்டு விலகி நிற்கிறான் என் மகன்!” ஆச்சரியம் பெரிதும் துளிர்விட்ட குரலில் கேட்டாள் அவள்.

“ஆறு மாதங்கள் ஆகின்றன மகளே! ஆனால் உன் இருப்பிடம் அவனுக்குத் தெரியாது. பிறப்பு மர்மத்தை நாகர்கள் தலைவன் உடைத்துவிட்டான் சக்கரக் கோட்டத்திலே. ஆனால், உன் இருப்பிடத்தைக் கூறுமுன்பு அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்துவிட்டது” என்று துறவியார் விளக்கினார்.

“பிரதாபருத்திரனா ரகசியத்தைச் சொன்னான்?”

“ஆம் மகளே!”

“அவன் என் கணவருக்குச் செய்து கொடுத்த பிரமாணம்?”

“உடைத்துவிட்டான். பிரமாணத்தை உடைத்து விட்டான். ரகசியத்தை உடைத்துவிட்டான். ஏன்? சோழ சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே உடைத்துவிட்டான். உயிரோடு சாதிக்க முடியாததை இறப்பில் சாதித்து விட்டான் பிரதாபருத்திரன்:

மஞ்சத்திலே உட்கார்ந்திருந்த மாதரசி நீண்ட நேரம் மௌனமாயிருந்தாள். பிறகு கேட்டாள், “பிறப்பின் ரகசியத்தை அறிந்த என் மகன் என்ன செய்தான்?” என்று.

துறவியார் முகத்திலே பெருமை படர்ந்தது. “உன் மணி வயிற்றில் பிறந்தவன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். தகப்பனுக்கு அசல் பிள்ளையம்மா அவன்! சாம்ராஜ்யத்தைக் கேட்கவில்லை; பதவிகளைக் கேட்க வில்லை” என்று பேசிப் பாதியில் நிறுத்திய துறவியாரை நோக்கிய அந்த மாதரசி, “பின் எதைக் கேட்டான் துறவி யாரே?” என்று ஆசையுடன் கேட்டாள்.

துறவியார் ஏதோ பெரும் குற்றம் செய்தவரைப் போல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னார், “உன்னைப் பார்க்க வேண்டுமென்று கேட்டான் மகளே!” என்று.

அந்த மாதரசியின் கமல விழிகளில் தாய்மை தூண்டிய இரண்டு நீர்த்துளிகள் மீண்டும் தோன்றின. “என்னைப் பார்க்க வேண்டுமென்று கேட்டானா குழந்தை?” என்றாள் நாத் தழுதழுக்க.

துறவியாருக்கும் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்ததால் பதில் சொல்லாமல், ‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினார்.

பெருமையும் துக்கமும் கலந்த குரலில் அவள் மீண்டும் கேட்டாள்: “அரையன் ராஜராஜன் என்ன பதில் சொன்னார்?”

“உன் அனுமதி பெற்று, உன்னிடம் அழைத்து வருவதாகச் சொன்னான்.”

“அதற்கு என்ன பதில் சொன்னான் குழந்தை.”

“உன் உதிரத்தில் பிறந்தவன் சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னான்.”

“அதாவது?”

“காத்திருக்கச் சம்மதித்தான். நீ அநுமதி கொடுத்தால் உன்னைப் பார்ப்பதாகச் சொன்னான். கங்கைப் போர் முடிந்ததும், உன்னைத் தேடி வருவானென்று நினைத்தேன்.” என்று எதையோ சொல்ல முடியாமல் தயங்கினார் துறவியார்.

துறவியாரை அவள் உற்று நோக்கினாள். “நினைத்தேன் என்றால்…?” என்று ஒரு கேள்வியையும் வீசினாள். பதிலுக்குப் பெரும் வெடியை எடுத்து வீசிய துறவியார், “அதுவரை அவன் அங்கிருக்கப் போவதில்லை மகளே! அவன் இன்னும் இரண்டு நாளைக்குள் காஞ்சிமா நகருக்குள் வருகிறான்” என்றார்.

அதுவரை எத்தனையோ உணர்ச்சிகளை வசப்படுத்திக் கொண்டு பெரிய ராணிபோல் ஆசனத்தில் வீற்றிருந்த அவள், திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து, “என்ன! கரிகாலன் காஞ்சிக்கு வருகிறானா? எதற்குத் துறவியாரே எதற்கு?” என்று துடிதுடித்துக் கேட்டாள்.

“சோழ மன்னனைச் சந்திப்பதற்கு” என்றார் துறவியும் குரலில் ஓரளவு கவலை பாய.

“என்ன! கரிகாலன் இராஜேந்திரனைச் சந்திப்பதா? இது நடவாத காரியம்” என்றாள் அவள், ஏதோ ஆக்ஞை இடுபவள் போல்.

“நடவாத காரியமாவது! இது கண்டிப்பாக நடக்கப் போகிற காரியம். இதை நீயும் தடுக்க முடியாது நானும் தடுக்க முடியாது” என்றார் துறவி.

“ஏன் தடுக்க முடியாது?” என்று கேட்டாள்.

“இதோ பார்” என்று மடியிலிருந்த ஓலைச் சுருளை எடுத்து அவளிடம் நீட்டினார் பிரும்மானந்தர்.

நடுங்கும் கைகளுடன் ஓலையை வாங்கிக்கொண்ட அவள் அறையின் ஒரு கோடிக்குச் சென்று அங்கிருந்த தூங்காவிளக்கில் அதை வரிவரியாகப் படித்தாள். பிறகு ஓலையைத் திருப்பி, அதில் பொறிக்கப்பட்டிருந்த முத்திரை களைக் கவனித்தாள். அவள் கண்களிலே துக்கமும் ஆனந்தமும் கவலையும் கலந்து தாண்டவமாடின. துறவியார் ஏற்கெனவே உடைத்திருந்தாலும், மீதியிருந்த முத்திரைச் சின்னங்களைக் கண்டதும், “இந்த முத்திரைகள்…?” என்று கேட்டாள்.

“உங்கள் ராஜவம்ச முத்திரைகள்” என்றார் துறவியார்.

“இந்தக் கையெழுத்து?”

“உன் மகனுடையது.”

“மணி மணியாக எழுதுகிறான் துறவியாரே!”

“அவனுக்குப் பயிற்சி சூடாமணி விஹாரத்தில் என்பது நினைவிருக்கட்டும்.”

“வாளைப் பிடிக்கும் கைகளுக்கு.”

“கையெழுத்து தலையெழுத்தாகத்தான் இருக்கும். ஆனால் உன் மகன் சாஸ்திரம் படித்தவன் மகளே! சூடாமணி விஹாரத் தலைவர், ஒரு பேரரசனுக்கு வேண்டிய சகல வித்தைகளையும் கற்பித்திருக்கிறார். அவன் வாள் பிடிக்கும் முறையை நீ பார்த்ததில்லையே?”

விளக்கின் அருகில் ஓலையைக் கையில் பிடித்துப் படித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்த அந்த மாதரசி, தன்னை அடியோடு ஆகர்ஷித்து நின்ற அந்த ஓலையிலிருந்து கண்களை அகற்றி, முகத்தைத் தூக்கித் துறவியாரை நோக்கி, அந்தச் செல்லக் கைகளை ஐந்து வயதுக்குப் பிறகு எங்கு பார்த்தேன் பிரும்மானந்தரே?” என்றாள். அவள் குரல் உணர்ச்சி மிகுதியால் ஆடியது.

உள்ளத்தை அப்படியே நெகிழ்த்தும் அந்தக் குரலைக் கேட்ட பிரும்மானந்தரும் சோகானந்தராக மாறி, “மகளே! அந்தச் செல்லக் கைகள் இன்று இந்தச் சாம்ராஜ்யத்தை வடக்கே பெரிதும் விஸ்தரித்திருக்கிறது. உன் கணவனின் கரங்கள் சோழப் பேரரசைச் சிங்களத்தில் விஸ்தரித்தன. உன் மகன் கைகள் கங்கைக்குப் பாதை போட்டன. நீ கொடுத்து வைத்தவள். வீரன் மனைவியாகி, வீரனின் தாயுமாகித் தியாகத்தின் சிகரமாகவும் விளங்கும் தமிழ்த் தாய்மார்கள் எத்தனை பேர் இந்நாட்டிலிருக்கிறார்கள்? உன்னால் இந்நாடு பயனுற்றது, பெருமையும் பெற்றது” என்று உணர்ச்சி வெள்ளமாகப் பிரவாகித்த குரலில் சொன்னார்.

பெருமையுடன் தலையை அசைத்த அந்த மாதரசியை நோக்கிய துறவியார், “மணிமேகலை…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அந்தப் பெயரைக் கேட்ட அவள், திடீரென அவரை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து, “பிரும்மானந்தரே!” என்று எச்சரிக்கும் குரலில் அவர் பெயரையும் சொன்னாள்.

“ஏனம்மா?” என்று கேட்டார் அவர்.
“அந்தப் பெயரை மறுமுறை சொல்ல வேண்டாம்.”

“ஏன்?”

“அது மறைந்து ஆண்டுகள் இருபத்திரண்டு ஆகி விட்டன.”

“பெயர் மறையுமா மகளே?”

“அழிப்பவர் அழித்தால் அழியும்.”

“அழித்தது யார்?”

“அழிக்க யாருக்கு உரிமை உண்டோ அவர்கள் அழித்தார்கள்.”

அவள் இதயம் வெடிக்கத்தான் பேசினாள். அதை உணர்ந்து கொண்ட துறவியாரும், துன்பம் கலந்த புன்முறுவலொன்றை அவள் மீது வீசினார். “புரிந்து கொண்டேன் மகளே! கரிகாலன் கர்ப்பத்திலிருக்கையிலேயே உன் பெயரை மாற்றிவிட்டானா? எப்பேர்ப்பட்ட தியாகி அவன். அநுபவிக்க ஒரு குடும்பம்; அழிந்துபோக ஒரு குடும்பம்!” என்று பெருமூச்சு விட்டார் துறவியார்.

“அழிவும் ஆக்கமும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது என்று அவர் சொல்லுவார்?”

“சொல்லுவார் சொல்லுவார்! நன்றாகத்தான் சொன்னார் போ” என்று அலுத்துக் கொண்டார் துறவியார்.
அவள் முகத்தில் அலுப்பேதுமில்லை. அவர் எதுவும் காரணமில்லாமல் சொல்லமாட்டார் துறவியாரே. எங்கள் குடும்பம் மறைந்து, இராஜேந்திரன் குடும்பம் வாழ வேண்டுமென்பது அவர் பிரார்த்தனை” என்றாள் ஓரளவு மகிழ்ச்சியும் குரலில் பொங்க.

“தெய்வப் பிறவிகள் என்று சொல்கிறார்களே, அப்படிப்பட்ட பிறவிகள் உண்டோ என்று சந்தேகப்பட்டேன். கண்டிப்பாக இருக்கிறார்கள்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்ட துறவியார், “அது கிடக்கட்டும் மகளே! இன்னும் இரண்டு நாள்களில் இராஜேந்திரனைக் கரிகாலன் சந்திக்கப் போகிறானே, இந்தச் சங்கடத்திற் கென்ன செய்வது?” என்று கேட்டார்.

“சந்தித்தால் உண்மை வெளியாகிவிடுமே?” என்று அவளும் துன்பப் பெருமூச்சு விட்டாள்.

“அது வெளியாகாது மகளே!”

“கண்டிப்பாய் வெளியாகும்.”

“எப்படி?”

“அவன் கண்கள்.”

“யார் கண்கள்? கரிகாலன் கண்களா?”

“ஆம் பிரும்மானந்தரே! அவன் கண்கள் உண்மைக் கதையைச் சொல்லுமே. ஐந்து வயதிலேயே அவர் முகத்தை உரித்து வைத்திருந்ததே அவனுக்கு; இந்த வயதில் எப்படி மாறும்?”

துறவியார் தீர்க்காலோசனையில் ஆழ்ந்தார். அவளைப் பிடித்திருந்த அந்த பயம் அவரையும் வாட்டியது. கடைசியாக அவர் பேச முற்பட்டபோது, ஆழ்ந்த கவலையும் அவர் முகத்தில் தெரிந்தது. “ஆம் ஆம்! கும்பகோண மடாலயத்தில் அவனைச் சந்தித்தபோதே அந்தப் பார்வையிருந்தது. எதற்காகச் சிருஷ்டிகர்த்தா அத்தனை அச்சாக அவனைச் சிருஷ்டிக்க வேண்டும்?” என்று சிருஷ்டிகர்த்தாவையே கடிந்துகொண்ட துறவியார், “இந்த அரையன் ராஜராஜனுக்குப் புத்தி எங்கே போயிற்று? எதற்காகக் கரிகாலனை இங்கே அனுப்புகிறான்?” என்று அவன் மீதும் எரிந்து விழுந்தார். மீண்டும் சற்று நேரம் யோசித்துவிட்டு, “மகளே, கவனமாய்க் கேள். சில நாள்களுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த மாளிகையை விட்டுக் கிளம்பாதே. நான் காஞ்சியிலே தங்கி, ஆபத்தை எத்தனை தூரம் தவிர்க்க முடியுமோ அத்தனை தூரம் தவிர்க்கிறேன். பிறகு புத்தர் பிரான் விட்ட வழி” என்று கூறினார்.

துறவியாரின் வார்த்தைகளில் ஒரு பகுதியை அவள் புரிந்துகொண்டாள். ஆனால் மாளிகையை விட்டு வெளியே கிளம்ப வேண்டாமென்ற அவர் உத்தரவுக்கு மட்டும் காரணத்தை அறியாததால் கேட்டாள், “ஏன் நான் வெளிக் கிளம்பக்கூடாது?” என்று.

“நிரஞ்சனாதேவியும் வந்தியத்தேவரும் இந்த ஊரில் தான் இருக்கிறார்கள்” என்றார் துறவியார்.

“வேங்கி நாட்டு மன்னன் மகளா? என் மகன் ஆசை கொண்டான் என்று எழுதியிருந்தீர்களே அவளா” என்று விசாரித்தாள் மணிமேகலை.

“ஆம்.”

“அப்படியானால் அவளைப் பார்க்க…”

“கரிகாலன் நிச்சயம் கூரத்துக்கு வருவான்.”

மணிமேகலையின் கண்கள் ஆனந்த பாஷ்யம் சொரிந்தன. “அப்பொழுது நானும் அவனை ஒருமுறை பார்க்கலாமா பிரும்மானந்தரே?” என்று கேட்டாள்.

பிரமிப்பினால் மலர்ந்த விழிகளை அவள் மீது நாட்டினார் பிரும்மானந்தர். சோழ சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து மெள்ள மெள்ள அணுகுவதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டார். அந்த ஆபத்து எத்தனை பெரிய இடிபோல் இறங்கக்கூடியது என்பதையும் உணர்ந்துகொண்டார். ஆனால், இத்தனை சீக்கிரம் அந்த இடி இறங்கும் என்று அவர் சொப்பனத்திலும் நினைக்கவில்லையாகையால், அன்றிலிருந்து இரண்டாவது நாள் சோழப் பேரரசுக்குப் பெரும் கண்டம் என்பதைத் தெரிந்து கொண்டு கவலைக் கடலில் அழுந்தினார்.

இராஜேந்திரனும் கரிகாலனும் சந்திப்பது இடிகளை உதிர்க்கவல்ல பெரிய மேகங்களின் சந்திப்புக்குச் சமானம் என்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டதால், என்ன செய்வதென்று அறியாமல் தவித்த தஞ்சைத் துறவியாருக்கு அடுத்த நாளே பெரும் அபாயம் காத்திருந்தது காஞ்சி மாநகரத்திலே.

Previous articleMannan Magal Part 2 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here