Home Historical Novel Mannan Magal Part 2 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

100
0
Mannan Magal part 2 Ch 29 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 29 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 29 மன்னன் விளக்கமும் துறவியின் கலக்கமும்

Mannan Magal Part 2 Ch 29 | Mannan Magal | TamilNovel.in

இராஜேந்திர சோழதேவனும் கரிகாலனும் சந்தித்தால் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி அடிக்கடி எண்ணி யதன் விளைவாகக் கவலையால் பெரிதும் பீடிக்கப்பட்ட மனத்துடன் காஞ்சிமாநகரை மறுநாளே அடைந்த தஞ்சைத் துறவியார் பிரும்மானந்தர், அங்கு நடந்துகொண்டிருந்த ஏற்பாடுகளைக் கண்டு சொல்லொண்ணா வியப்பும் கலவரமும் அடைந்து பேரமைச்சர் மாளிகையை நோக்கி வெகு வேகமாக நடந்தார். நகரத்தின் தெருக்களில் தாம் கண்ட கோலாகலத்திற்கும் துரிதத்திற்கும் சிறிதும் குறையாத சூழ்நிலையைப் பேரமைச்சர் மாளிகையிலும் கண்ட பிரும்மானந்தர், விஷயம் விபரீத நிலைக்குச் செல்லுகிறதென்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டாரானாலும் அதற்கு வித்து எந்த இடத்தில் என்பதை உணர்ந்து கொள்ளப் பேரமைச்சரின் அந்தரங்க அறையை நாடிச் சென்றார். பிரும்மானந்தர் உள்ளே நுழைந்த சமயத்தில் தீவிர யோசனையுடன் ஓலையில் ஏதேதோ எழுத்தாணியால் துரிதமாக எழுதிக்கொண்டிருந்த பேரமைச்சர் ஓலையிலிருந்து கண்களை அகற்றாமலும், வந்தவர் யாரென்று பார்க்கத் தலையைச் சிறிதுகூடத் தூக்காமலும் கருமமே கண்ணாயிருந்தார். அவர் எதிரே அவர் கட்டளைக்காகக் காத்து நின்ற வீரர் இருவர்கூட அசை வற்று அவரையே பார்த்துக்கொண்டு நின்றதைக் கண்ட பிரும்மானந்தர், முக்கியமான ஏதோ கட்டளைகளைப் பேரமைச்சர் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டாலும் அந்தக் கட்டளைகள் யாதாயிருக்குமென்பதைப் பூரணமாக அறியாததாலும், அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை உள்ளூரப் பொங்கி எழுந்ததாலும், தம் வருகையைப் பேரமைச்சருக்கு உணர்த்த இஷ்டப்பட்டு ஒருமுறை தொண்டையைப் பலமாகக் கனைத்தார். அந்தக் கனைப்பினால் சிந்தனை கலைந்த பேரமைச்சர் எழுதுவதைச் சற்றே நிறுத்திக் கண்களை உயரத் தூக்கி, வந்திருப்பவர் யாரென்று கவனித் ததும், “அடடா! துறவியாரா! கவனிக்கவில்லை; மன்னிக்க வேண்டும். இப்படி அமருங்கள்” என்று பரபரப்புடன் ஓர் ஆசனத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஆசனத்தில் அமர்ந்துகொண்ட பிரும்மானந்தர் பேரமைச்சர் கையிலிருந்த எழுத்தாணி மீதும் அவர் மடியி லிருந்த பலகைமீது கிடந்த ஓலை மீதும் கண்ணை ஒட்டி, “அமைச்சுத் தொழில் விடியற்காலையிலேயே தொடங்கி விட்டது போலிருக்கிறதே!” என்று வினவினார்.

துறவியாரின் கண்கள் சென்றவிடங்களைப் பேரமைச் சரின் கண்களும் கவனிக்கத்தான் செய்தன. இருந்த போதிலும் அதைக் கவனிக்காதது போலவே பேசத் தொடங்கிய பேரமைச்சர், “அமைச்சுத் தொழிலுக்கு காலையேது, மாலையேது, இரவுதானேது? அரசன் கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியது அமைச்சன் பொறுப்பு” என்றார்.

“உண்மைதான் பேரமைச்சரே! பேரரசன் இடும் கட்டளை; அதுவும் ஒரு மன்னன் விஜயத்தையொட்டி இடும் கட்டளை. அதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கும் போது காலையென்றும் மாலையென்றும் பார்த்தால் முடியாதுதான்” என்று ஒப்புக்கொண்டது போல் தலையாட்டிய துறவியாரை, ஆச்சரியம் ததும்பும் கண்களுடன் நோக்கிய பேரமைச்சர், “மன்னர் விஜயமா? எந்த மன்னர் விஜயம் செய்யப்போகிறார்?” என்று வினவினார்.

துறவியார் ஏளன நகையொன்றை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “பேரமைச்சரே! நான் துறவியாயிருந்தாலும் அரசியல் விஷயங்களை அறியாதவனல்ல.”

“அறியாதவர் என்று யார் சொன்னது” என்றார் பேரமைச்சர் பணிவு நிரம்பிய குரலில்.

அப்படிக் குறிப்பாகச் சொல்லவில்லை. ஆனால், உமது பேச்சின் உள்ளர்த்தம் அதுதான்.”

“நீர் சொல்வது விளங்கவில்லை துறவியாரே!”

“மன்னர் விஜயமா? என்று ஆச்சரியத்துடன் கேட்டது நீர்தானே?”

“ஆமாம்.”

“மன்னர் விஜயத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது யார்? கோட்டை வாசல்களில் பெரும் புலிக்கொடிகளைப் பறக்கவிட்டது யார்? தெருக்களில் மகர தோரணங்களுக்கான கால்கள் ஏன் நடப்படுகின்றன? தெருக்களில் செல்லும் குதிரை வீரர்களையும் பார்த்தேன். குதிரைகளின் நெற்றிகளில் வெற்றிப் பட்டயங்களைக் கட்டுவானேன்? இதெல்லாம் யார் ஏற்பாடு? மன்னர் விஜயம் செய்யும் காலத்தில் மட்டுமே இந்த ஏற்பாடுகள் உண்டு என்பது எனக்குத் தெரியாதா பேரமைச்சரே!” என்றார் துறவியார், விடுவிடுவென்று உணர்ச்சி பூரணமாகக் குரலில் பொங்க.
பேரமைச்சர் உடனே பதில் ஏதும் சொல்லாமல், தலையை நீண்ட நேரம் தொங்கப் போட்டுக்கொண்டார். பேச்சு ஏதாவது தொடங்குவதானாலும் அது பேரமைச் சரிடமிருந்தே தொடங்கட்டும் என்று துறவியாரும் காத்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு பெருமூச் சொன்றை விட்டுத் தலையை தூக்கிய பேரமைச்சர், துறவியாரை நோக்கி, “துறவியாரே! இது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. மன்னர் யாரும் விஜயம் செய்ய வில்லையென்பது உண்மை. ஆனால் ஒரு படைத் தலை வனுக்கு, அதுவும் ஊர் பேர் தெரியாத ஒரு சிறுவனுக்கு இத்தனை ஏற்பாடுகளைச் செய்யும்படி சக்கரவர்த்தி ஏன் கட்டளையிட்டார் என்பது எனக்கே புரியவில்லை! என்றார்.

துறவியாரின் முகத்தில் மெள்ள மெள்ளக் கவலைக்குறி படரலாயிற்று. அந்தக் கவலை குரலிலும் நன்றாகப் பிரதி பலிக்கக் கேட்டார் துறவியார், “என்ன பேரமைச்சரே, சக்கரவர்த்தி உத்தரவா?” என்று.

“ஆமாம்” என்று சொல்லித் தலையையும் அசைத்தார் பேரமைச்சர்.

“கரிகாலனை ஒரு மன்னனுக்குச் சமானமாக எதிர் கொள்ள உத்தரவிட்டானா இராஜேந்திரன்?”

“இல்லை துறவியாரே! மன்னனுக்குச் சமானமாக அல்ல. தாமே இந்த மாநகரத்துக்கு வந்தால் எத்தகைய வரவேற்பு அளிப்பது சம்பிரதாயமோ அத்தனை சம்பிரதாயத்தையும் கடைப்பிடிக்கும்படி சக்கரவர்த்தி உத்தர விட்டிருக்கிறார்.”

துறவியார் மறுபடியும் ஆலோசனையில் இறங்கினார். அவர் உள்ளத்தே அவர் ஆயுளில் அதுவரை அனுபவிக்காத கிலி எழுந்து நின்றது. இராஜேந்திரன் உள்ளத்திலே பெரும் சந்தேகம் எழுந்துவிட்டது. கரிகாலன் யார் என்பது ஒரு வேளை அவனுக்குத் தெரிந்துவிட்டதோ?’ என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு துறவியார் பேரமைச்சரை நோக்கி, “சம்பிரதாயத்துக்கு விரோதமான வரவேற்புக்கு நீங்களும் ஒப்புக்கொண்டீர்களா?” என்று கேட்டார்.

“ஒப்புக்கொள்ளவில்லை துறவியாரே!” திட்டமாக அறிவித்தார் பேரமைச்சர்.

“நீர் எதிர்த்துமா இராஜேந்திரன் கட்டாயப்படுத்தினான்?” என்று கேட்டார் துறவியார்.

“ஆமாம் துறவியாரே! சக்கரவர்த்தி திட்டமாகக் கட்டளையிட்டு விட்டார். மன்னர்களுக்குண்டான மரியாதைகளைப் படைத்தலைவர்களுக்கு அளிப்பது வழக்கமில்லையென்றேன்” என்று பேரமைச்சர் தயங்கினார்.

“அதற்கு மன்னன் என்ன சொன்னான்?”

“படைத்தலைவர்களால்தான் மன்னர்கள் பெருமை யடைகிறார்கள். ஆகவே, மன்னர்களுக்குண்டான மரியா தைகளை அவர்களும் பெறத் தகுந்தவர்கள் என்று சொன்னார்.”

“பிறகு?”

“பெரும் கொடிகளைக் கோட்டைச் சுவர்களில் நாட்டும் ஒரு வழக்கத்தையாவது கைவிடலாமென்று கூறினேன்.”

“உம்.”

“சக்கரவர்த்தி ஒப்புக்கொள்ளவில்லை. ‘எதையும் கைவிட வேண்டாம். நானே பட்டணப் பிரவேசம் செய்வதாக நினைத்துக்கொள்ளும்’ என்று சற்றுக் கோபத்துடனே சொன்னார் துறவியாரே! சக்கரவர்த்திக்கு இத்தனை கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை. தாங்கள் அன்று அந்த ஓலையைப் பெற்றுச் சென்றதிலிருந்து ஒரு நிலையில் இல்லை சக்கரவர்த்தி. அந்த இன்னொரு ஓலையைப் படிக்காமல் ஆசனத்தில் விட்டெறிந்து சென்றாரே நினைப்பிருக்கிறதா?” என்று பேரமைச்சர் கேட்டார்.

“ஆகா! நினைப்பிருக்கிறது” என்று பதில் சொன்னார் துறவியார், பிறகு என்ன நடந்தது என்பதை அறியும் ஆவலுடன்.

“அந்த ஓலையை எடுத்துச் சென்று அவரைப் படிக்கத் தூண்டினேன்.”

“படித்தாரா?”

“படித்தார். படித்ததும் அவர் முகத்திலே பெரும் மாறுபாடு ஏற்பட்டதைக் கவனித்தேன்.”

“மாறுபாடு என்றால்?”

“பெரும் குழப்பம்.”

“உம்.”

“அந்தக் குழப்பத்திற்குப் பின் தெளிவு. அரசர் கண்கள் திடீரென எதையோ அறிந்துவிட்டன போல் பிரகாசித்தன. பிறகுதான் இப்படி உத்தரவிட்டார். ஆமாம், துறவியாரே யார் இந்தக் கரிகாலன்?” என்று விசாரிக்கத் தொடங்கினார் பேரமைச்சர்.

அந்தக் கேள்விக்குத் துறவியார் பதிலேதும் சொல்லாமல், ஒரேயடியாக ஆசனத்தில் சாய்ந்து கொண்டு விட்டார். “முதலில் குழப்பம் பிறகு தெளிவு. அரசர் கண்கள் பிரகாசித்தன” என்று மீண்டும் மீண்டும் ஏதோ மந்திரத்தை உச்சரிப்பது போல் அவர் உதடுகள் அந்தச் சொற்களை உச்சரித்தன. மன்னன் முகத்தில் முதல் நாளன்று பேரமைச்சர் குழப்பத்தைக் கண்டாரோ இல்லையோ, அன்றைய தினம் பிரும்மானந்தரின் முகத்தில் பெரும் குழப்பத்தைக் கண்ட பேரமைச்சர் அதற்குக் காரணத்தை அறிந்துகொள்ள விரும்பி, “யார் இந்தக் கரிகாலன் துறவியாரே?” என்று மீண்டும் பழைய கேள்வியைக் கேட்டார்.

“எங்கள் மடாலயச் சிஷ்யன். சூடாமணி விஹாரத் தலைவரிடம் கல்வி பயின்றவன்” என்றார் துறவியார், ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக.

“அதுவும் தெரியும். அவன் அரையன் ராஜராஜன் வளர்ப்பு மகனென்பதும் தெரியும். அதெல்லாம் பழங்கதை புதுக்கதை ஏதாவது சொல்லத் தங்களால் முடியுமா?” என்று கேட்டார்.

“நான் இங்கு கதை சொல்ல வரவில்லை பேரமைச்சரே!” என்று எரிந்து விழுந்த பிரும்மானந்தர், “அரசருக்கு அன்று வந்த ஓலை தங்களிடம் இருக்கிறதா?” என்று வினவினார்.

“இல்லை. அரசரிடமே இருக்கிறது” என்றார் பேரமைச்சர்.

துறவியார் சட்டென ஆசனத்திலிருந்து எழுந்து, “அப்படியானால் நான் அரசரைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பேரமைச்சரின் அறையை விட்டுக் கிளம்பி வெளிவந்து அரசர் மாளிகையை நோக்கி நடந்தார். சக்கரவர்த்தியால் பெரிதும் மதிக்கப்பட்ட துறவியார், எந்த இடைஞ்சலுமில்லாமல் மன்னன் மாளிகையை அடைந்து, மன்னன் இருக்குமிடத்தைப் பற்றி விசாரித்தார். சக்கரவர்த்தி அன்று தாம் சந்தித்த முத்தாணி மண்டபத்திலேயே இருப்பதை அறிந்து, அங்கு விரைந்த துறவியார், முதல் நாளைப் போலவே அரசன் அரியணையில் அமர்ந்திருப்பதையும் ஆழ்ந்த யோசனையிலிருந்ததையும் கண்டார்.

தூரத்தேயிருந்த முத்தாணி மண்டப வாயில்களில் காவல் புரிந்த வீரர்கள் கூடச் சுவரை ஒட்டிப் பயபக்தியுடன் நின்றிருந்ததால், அவர்கள் இருப்பதும் துறவியின் கண்களுக்குப் புலப்படவில்லை. ‘ஹோ’வென்று விரிந்து கிடந்த அந்தப் பெரும் மண்டபத்தின் நடுவே, தலையை மார்புக்காகத் தாழ்த்தி உட்கார்ந்திருந்த மன்னனைக் கண்ட துறவியார் நிஷ்டையைக் குலைக்க இஷ்டப்பட்டு, “இராஜேந்திரா! ஏன் தனித்து உட்கார்ந்திருக்கிறாய்?” என்று குழையும் குரலில் விசாரித்தார்.

சிந்தனையிலிருந்த இராஜேந்திரன் சிரத்தைத் தூக்கித் துறவியாரை நோக்கினான். “ஓ துறவியாரா? அமருங்கள்” என்று சொல்லிப் பக்கத்தேயிருந்த ஆசனத்தையும் காட்டினான். அரசன் குரல் வரண்டு கிடந்ததைத் துறவியார் கவனித்தார். அதன் காரணத்தை அவர் ஓரளவு அறிந்து கொண்டும் இருந்தாராதலால், “மன்னவா! கவலை வாய்ப்பட்டிருக்கிறாய் போலிருக்கிறது?” என்று மெல்லக் கேட்டார்.

“அரசு ஒரு சுமை; அதைத் தாங்க வேண்டியவனுக்குக் கவலை இயற்கை” என்றான் இராஜேந்திரன்.

“இந்தப் பெரும் சுமை இன்று நேற்று ஏற்பட்டதல்லவே இராஜேந்திரா! இத்தனை நாளாக உன் முகத்தில் நான் கவலையைக் கண்டதில்லையே!” என்று துறவியார் விசனம் ததும்பக் கூறினார்.

“உண்மைதான் துறவியாரே! இத்தனை நாள் சுமையை நான் வகிக்கவில்லை. எனக்காக உம்மைப் போன்ற பெரியோர்கள் வகித்தார்கள். ஆகவே, சுமை என் தோள்களில் பாரத்துடன் இறங்கவில்லை” என்று மன்னன் துறவியாரை உற்று நோக்கினான்.

துறவியார் சங்கடத்தால் ஆசனத்தில் அசைந்தார். “புரியவில்லை மன்னவா?” என்று கூறினார்.

“இதில் புரியாததற்கு என்ன இருக்கிறது துறவியாரே. புத்த மடாலயங்கள், சைவ, வைணவ மடாலயங்கள் எல்லாமே சோழ மண்டலத்தில் உண்டு. பலதரப்பட்ட மதங்களின் சின்னங்களான இந்த மடாலயங்கள் மன்னர்கள் நம்பிக்கைக்கும், மன்னர்கள் மடாலயங்கள் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்தார்கள். அந்தப் பரஸ்பர நம்பிக்கையாலும் மக்கள் வீரத்தாலும் வளர்ந்தது சோழ நாடு” என்று விவரித்தான் இராஜேந்திரன்.

“நம்பிக்கை இப்பொழுது எங்கே போய்விட்டது மன்னவா?” என்று வினவினார் துறவியார்.

“எங்கே போய்விட்டது என்பது தெரியாது துறவி யாரே! போய்விட்டது என்பது எனக்குத் தெரியும்” என்றான் மன்னன்.

“எப்படித் தெரியும்?”

“அரசகுல ரகசியங்கள் மறைக்கப்படுகின்றன. என் சொந்தப் படைத்தலைவர்களால் மட்டுமல்ல, என் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற மடாலயத் தலைவர் களாலும்கூட!”

இனி மறைத்துப் பேசுவதால் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட துறவியார், பகிரங்கமாக விஷயத்துக்கு வந்து, கரிகாலனைப் பற்றித்தானே பேசுகிறாய் இராஜேந்திரா?” என்றார்.

“ஆமாம் துறவியாரே.”

“அதை அறிவது உனக்கு நன்மை பயக்காது.”

“என் நன்மையைப் பற்றி எனக்குக் கவலையில்லை.”

“வேறு எதைப் பற்றிக் கவலை?”

“உண்மையைப் பற்றி.”
“எது உண்மை?” –

“கரிகாலன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது” என்று சொன்ன இராஜேந்திரன், திடீரென்று ஆசனத்தை விட்டு எழுந்து, துறவிக்கு வெகு அருகில் வந்து, அவரை உற்று உற்று நோக்கினான். கூர்மையான அந்தக் கண்களைச் சந்திக்க முயன்ற துறவியாரின் கண்கள் நிலத்தில் பாய்ந்தன. மன்னன் சொற்கள் அவர் தலைமீது வெடிக்கத் தொடங்கின. “கரிகாலன் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. என்ன காரணத்தைக் கொண்டோ அவன் பிறப்பை நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் அவன் உண்மை ஸ்தானத்தை நான் மறைக்க விரும்பவில்லை. சக்கரவர்த்தி களுக்குரிய மரியாதைகளுடன் அவன் வரவேற்கப்படு வான். நாளை மறுநாள்’ இந்தக் காஞ்சி மாநகரிலேயே அவன் பட்டணப் பிரவேசம் நடக்கும். அவன் இந்த மாளிகையில் என்னுடன் தங்குவான். தனிமையில் அவனுடன் பேசுவேன். உண்மையை அறிவேன்” என்று பேசிக்கொண்டு போன இராஜேந்திரன் சட்டெனக் குரலைத் தாழ்த்தி, “அதுமட்டுமல்ல துறவியாரே?” என்றான்.

துறவியார் பேச நாவெழாமல் மெல்லத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தார். இராஜேந்திரன் விவரித்தான்: “நீர் நேற்றுக் கூரம் சென்றபோது, என் ஒற்றர்கள் உம்மைத் தொடர்ந்தார்கள். கூரத்தின் மாளிகையிலிருக்கும் அந்த மணிமேகலைக்கும் கரிகாலன் பட்டணப் பிரவேசத்தைப் பார்க்க அழைப்பு இன்று போகிறது. அவளும் இந்த அரண்மனைக்கு வருவாள். கரிகாலன் பிறப்பு ரகசியம் இன்னும் இரண்டே நாள்களில் இந்த அரண்மனையில் உடைபட்டுவிடும்…”

இராஜேந்திரன் பேச்சை சற்றே நிறுத்தினான். துறவியார் முகத்தில் பெரும் கிலி தாண்டவமாடியது. “வேண்டாம் இராஜேந்திரா! இந்த முயற்சியைக் கைவிட்டு விடு” என்று கெஞ்சினார்.

ஒரு விநாடி துறவியை உற்றுப் பார்த்த இராஜேந்திரன், “இந்த ஓலையில் கண்ட விஷயத்தைப் படியும்” என்று மடியிலிருந்த ஓர் ஓலையை நீட்டினான் துறவியாரிடம்.

அதைப் படித்த துறவியாரின் கோபம் எல்லை கடந்து போகவே, “அட முட்டாள்! பாவி; குடியைக் கெடுத்தாயே!” என்று தம்மையும் மறந்து கூவினார்.

Previous articleMannan Magal Part 2 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here