Home Historical Novel Mannan Magal Part 2 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

103
0
Mannan Magal part 2 Ch 30 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 30 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 பட்டணப் பிரவேசம்

Mannan Magal Part 2 Ch 30 | Mannan Magal | TamilNovel.in

சுயநிலை, சூழ்நிலை இரண்டையும் அறவே மறந்து துறவியார் கூவிவிட்டதைக் கண்டதும் சோழப் பேரரசனான இராஜேந்திரன் முகத்தில் ஒரு விநாடி புன்முறுவலொன்று தோன்றி மறைந்தது. மறுவிநாடி அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளும் மதுரமாகவே இருந்தாலும், மன்னன் தம்மை ஆழம் பார்க்கிறானென்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்து கொண்டார் துறவியார் – யாரையும் ஊடுருவிப் பார்க்கவல்ல கூரிய புத்தியுடைய இராஜேந்திரனிடம். எக்கச் சக்கமாக எதையாவது பேசிவிட்டால் கரிகாலன் பிறப்பு மர்மம் அடியோடு உடைபட்டுப் போகுமென்பதைத் துறவியார் உணர்ந்து கொண்டாரதலால், கொந்தளித்த தமது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் கேள்விகளுக்குப் பதிலளிக்கலானார்.

“துறவியாரே! யார் முட்டாள். யார் பாவி?” என்று கேட்டான் இராஜேந்திரன், ஏதும் அறியாதவன் போல்.

“உன்னுடைய படைத்தலைவன் தான் இராஜேந்திரா!” என்றார் துறவியார், பதற்றத்தை வெளியில் காட்டாமலே.

“யார் அரையன் ராஜராஜனுக்கா இந்த வசைபாடல்?” என்று மன்னன் மீண்டும் கேள்வியைத் திருப்பினான்.

“ஆம்.”

“சோழர்களின் பிரதான படைத்தலைவனுக்கு உசிதமான அடைமொழிகள் அல்லவே அவை?”

“விஷயத்தைப் புரிந்துகொள்ளாமல் ஓலை எழுதும் யாருக்கும் தகுந்த அடைமொழிகள் தான் அவை. இத்தகைய ஓலையை எழுதுபவன் சோழர்களின் படைத் தலைவனாயிருந்தாலும், அவனுக்கும் பொருந்தும் இந்த அடைமொழிகள்.”

இதைக் கேட்ட இராஜேந்திரன் முகத்தில் புன்முறுவல் லேசாகப் படர்ந்தது. துறவியார் தன்னிடம் மீள முடியாமல் சிக்கிக்கொண்டு விட்டாரென்பதைத் தீர்மானித்துக் கொண்ட மன்னன், “துறவியாரே! அரையன் ராஜராஜன் எந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை? யார் குடியைக் கெடுத்தான்? என்ன குற்றம்தான் அவன் செய்து விட்டான்?” என்று வினவினான்.

அரசன் முகத்தில் தோன்றிய புன்முறுவலையோ, அவன் வார்த்தைகளில் கண்ட சூழ்நிலையையோ கவனிக்கத் தவறாத துறவியார், ‘இராஜேந்திரா! இந்தத் துறவியைப் பற்றி உன்னுடைய மதிப்பீடு இவ்வளவுதானா?” என்று உள்ளூர நகைத்துக் கொண்டாலும், அதை வெளியில் காட்டாதவராய் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார்: “இராஜேந்திரா! உணர்ச்சிமிகுதியால் கூறி விட்டேன். ஆனால் குற்றம் யார் செய்தாலும் குற்றம் தானே?” என்றார்.

“உண்மைதான் துறவியாரே! அரையன் ராஜராஜன் என்ன குற்றம் செய்தானென்றுதான் கேட்கிறேன்” என்று மன்னன் சற்று அழுத்தமாகவே கேட்டான்.

“இந்த ஓலையை அவன் எழுதியதே குற்றம். அதுவும் ஒரு சாதாரண வீரனுக்கு அரச மரியாதைகளை அளிக்கும் படி எழுதியது பெருங்குற்றம். இதோ இந்த வரிகளைப் பார். ‘மன்னர் பிரானே! இந்த வேண்டுகோள் தங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், கரிகாலனை மன்னனுக்குரிய மரியாதைகளுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.’ இப்படி அவன் சக்கரவர்த்தியாகிய உனக்கு எழுதலாமா? சாதாரணப் படைத்தலைவனை மன்னர் மரியாதைகளுடன் வரவேற்பது வழக்கத்துக்கு விரோதமல்லவா?” என்று கூறி, ஓலையிலிருந்த வரிகளையும் கையால் சுட்டிக் காட்டினார் துறவியார்.

பதிலுக்கு இராஜேந்திரன் சிரித்தான். “அதனாலென்ன துறவியாரே! கரிகாலன் மன்னர் குலத்தைச் சேர்ந்தவன். அதற்குரிய மரியாதைகளை அவனுக்கு அளிப்பதில் தவறென்ன?”

“இராஜேந்திரா! உன் ஊகத்தினால் அவன் மன்னர் மரபைச் சேர்ந்தவனாக இருக்கலாம். ஆனால், அதற்குச் சரியான அத்தாட்சிகள் இன்னும் கிடைக்கவில்லை. மக்களுக்கு அவனைப்பற்றி எதுவும் தெரியாது.”

“தெரியாவிட்டாலென்ன?”

“மக்கள் பேசுவார்கள்.”

“பேசினாலென்ன?”

“பேச்சு மாற்றார் காதில் விழும்.”

“விழுந்தாலென்ன?”

கடைசிக் கேள்வியைக் கேட்டதும், மேற்கொண்டு என்ன பதிலைச் சொல்வதென்று அறியாமல் திகைத்த துறவியார் பெருமூச்சு விட்டார். துறவியார் ஏதோ தீவிரமான ரகசியத்தை மறைக்கிறார் என்பதையும், என்ன வற்புறுத்தினாலும் மர்மம் அவரிடமிருந்து பெயராதென் பதையும் அறிந்து கொண்ட இராஜேந்திரனும், அதற்கு மேல் அவரை வற்புறுத்தாமல் பேச்சை வேறு திசைகளில் திருப்பினான்.

“கரிகாலன் மன்னனுக்குரிய மரியாதைகளுடன் இராஜேந்திரனால் வரவேற்கப்பட்டான் என்றால் கரிகாலன் எந்த மன்னர் மரபைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழும். அவன் சோழ மரபு என்றால் யார் மகன் என்ற கேள்வியும் எழும். கேள்வி எழுந்தால்?” முடிவைப் பற்றி நினைக்கவும் அஞ்சினார் துறவியார். ஆகவே, அதைப் பற்றி உள்ளூரப் பலவாறாகச் சிந்தித்தாலும், வெளியில் வேறு அரசாங்க விஷயங்களைப் பற்றி மன்னனுடன் விவாதித்துவிட்டு, வெளியே சென்ற துறவியார் அடுத்த இரண்டு நாள்களில் அந்த ஊரிலிருந்த பெரிய புத்த மடாலயத்துக்கும், அரண்மனைக்குமாக அலைந்து கொண்டிருந்தார்.

கரிகாலன் – இராஜேந்திரன் சந்திப்பைப் பற்றித் திகில் பட்டுக்கொண்டிருந்த தஞ்சைத் துறவியார், மடாலயத்தில் சில நாழிகைகளும், அரண்மனையில் சில நாழிகைகளுமாகக் காலம் கழித்துக் கொண்டிருந்தாலும், அவர் மனம் மட்டும் சிங்களத்துக்கும், வங்கத்துக்கும், தஞ்சைக்குமாகப் பறந்து கொண்டு, பழைய விஷயங்களையும் புதுப் பிரச்சினைகளையும் இணைத்து இணைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. துறவியாரின் இந்தத் திண்டாட்டத்தைக் கண்டு நகைப்பது போலக் காஞ்சி மாநகரம் பெரும் கொண்டாட்டத்துக்கும் குதூகலத்துக்கும் இருப்பிடமாகிக் கொண்டிருந்தது. சோழப் பேரமைச்சர் முற்பிறப்பில் மயனாக இருந்திருக்க வேண்டும். காஞ்சி மாநகரத்தை ஏதோ மந்திரக்கோலால் மாற்றிவிட்டவர் போல, அதற்கு ஒரு புதுக் கோலத்தையே போட்டுக் கொண்டிருந்தார். நாற்புறக் கோட்டை வாசல்களிலும் பெரும் புலிக் கொடிகள் பறந்தன. அந்த மாநகரத்தின் பெரும் மூலை களில் நின்றுகொண்டிருந்த பிரும்மாண்டமான கோயில் ரதங்கள், பற்பல விதமான வண்ணச் சித்திரங்களைத் தாங்கி நின்ற சீலைகளை அணிந்தன. தெருக்களெங்கும் நடப்பட்ட பெரும் பந்தங்கள் முதல் நாளிரவன்றே காஞ்சி மாநகரை ஜாஜ்வல்யமாகப் பிரகாசிக்கச் செய்துகொண் டிருந்தன. நூற்றுக்கணக்கான அரண்மனை யானைகளுக்கு அம்பாரிகள் அணிவித்து முகப் பட்டயங்களைக் கட்டி அழகு செய்யப்பட்டிருந்தாலும், பெருவிழாக்களின் போது இரு புறங்களிலும் இவற்றுக்குத் தொங்கவிடப்படும் பெரு மணிகளும் ஊசலாடியதாலும் மணியோசை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அரசகுல மக்கள் ஏறிச்செல்லும் புரவிகளுக்குப் பொன் சேணங்கள் அணிவிக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகிஷிகள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக முத்துச் சிவிகையும், ரத்தினச் சிவிகையும், சுத்தம் செய்யப்பட்டன. கரிகாலனுக்கு அணிவிக்க வேண்டிய இரத்தினாபரணங்கள் எவையென்பதைப் பேரமைச்சர் தீர்மானித்ததன்றி, அது சம்பந்தமாக அரசரையும் கலந்துகொண்டார். கோயில்களிலெல்லாம் அபிஷேக ஆராதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரம் வீரர்கள் புடைசூழ நகரப் பிரதானி மட்டுமே கரிகாலனை எதிர்கொண்டால் போது மென்று பேரமைச்சர் அபிப்பிராயப்பட்டார். ஆனால் மன்னன் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், ‘கரிகாலனை நானே எதிர்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானமாக அறிவித்து விட்டான். இந்த விவரத்தைப் பேரமைச்சரே மறுநாள் துறவியாரிடம் கூறினார்.

முதல்நாளும் மறுநாளும் பல அலுவல்களில் ஈடு பட்டிருந்த துறவியார், அவ்வப்பொழுது பேரமைச்சரைச் சந்தித்து, யார் யாருக்கு அழைப்புப் போகிறது, யார் யார் எங்கு தங்குவார்கள் என்ற தகவல்களைச் சேகரித்துக்’ கொண்டிருந்தார். அப்படி வந்த ஒரு சமயத்தில், பேரமைச்சர் பெருங் குழப்பத்தில் இருந்ததைக் கண்ட துறவியார் பேரமைச்சரின் இஷ்ட விரோதமாகக் காரியங்கள் நடக்கின்றனவென்பதை அறிந்துகொண்டாலும் அதை வெளியில் காட்டாமல், “பேரமைச்சர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. இருக்காதா? அத்தனை ஏற்பாடுகளுக்கும் தாங்கள் ஒருவர் தானே பொறுப்பாளி” என்று பாதி சிலாகிப்பது போலும், பாதி அநுதாப்படுவது போலவும் பேசினார்.

“வேலையின் அதிகத்தினால் குழம்பவில்லை துறவி யாரே! சம்பிரதாய விரோதங்கள் ஏற்படும்போதுதான் குழப்பமடைகிறேன்” என்று பேரமைச்சர் பதில் கூறினார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“என்ன சம்பிரதாய விரோதம்” என்று துறவியார் ஆவலுடன் விசாரித்தார்.

“மன்னனை எதிர்கொள்வதானாலும் நகரப் பிரதானி தான் எதிர்கொள்வது வழக்கம்.”

“ஆமாம். சந்தேகமென்ன?”

“சந்தேகமென்னவா? இப்பொழுது சக்கரவர்த்தி தாமே கரிகாலனை எதிர்கொள்ளப் போவதாக அறிவிக்கிறார்.”

துறவியார் ஒருகணம் திகைப்புக் கொண்டாரானாலும் அதைச் சமாளித்துக்கொண்டு, “அப்படியா! அதை நீங்கள் எதிர்க்கவில்லையா?” என்று வினவினார்.

“எதிர்த்தேன். கேட்கவில்லை” என்று துக்கத்தால் பெருமூச்சு விட்டார் பேரமைச்சர்.

“நான் மன்னனிடம் சொல்லட்டுமா?” என்று தமக்கு மன்னனிடம் இருக்கும் பெரும் சலுகையைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் துறவியார்.

“பயனில்லை துறவியாரே! இந்த விஷயத்தில் சக்கர வர்த்தி பிடிவாதமாயிருக்கிறார். இதில் மட்டுமல்ல, கரிகாலனுக்கு அவர் அணிவிக்க உத்தேசித்திருக்கும் ஆபரணம் எது தெரியுமா?”

“எது?”

“செங்கதிர் மாலை.”

“என்ன, செங்கதிர் மாலையா! பெரும் போரிட்டு சேரனிடமிருந்து கைப்பற்றிய அந்த இரத்தின மாலையா? அது சக்கரவர்த்தியின் சொந்தப் பொக்கிஷத்தைச் சேர்ந்ததாயிற்றே. தவிர, கண்டுபிடித்து அனுப்பியவனும் கரிகாலன் என்று வந்தியத்தேவரே அறிவித்திருக்கிறாரே.”

பேரமைச்சர் பதிலேதும் சொல்லாமல் துறவியாரை ஊன்றிப் பார்த்தார்.

“துறவியாரே! நான் ராஜராஜ சோழன் காலத்திலிருந்து அமைச்சனாயிருக்கிறேன்” என்று சற்றுக் கடுமையாகவும் வார்த்தைகளைச் சொன்னார்.

“யார் இல்லையென்று சொன்னது?” என்று துறவியார் பணிவாகக் கேட்டார்.

“இல்லையென்று யாரும் சொல்லவில்லை, துறவியாரே! ஆனால் ஒன்றுமறியாத குழந்தையென்று நினைத்து நீர் என்னிடம் பேச வேண்டாம். இந்த ஏற்பாடுகள் எல்லாமே ஏதோ காரணத்துடன் நடக்கிறது. அந்தக் காரணம் உமக்குத் தெரியும். எனக்குத் திட்டமாகத் தெரியாவிட்டாலும், என்னாலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது. அகையால்தான் அதிக எதிர்ப்பை இதில் நான் காட்ட முடியவில்லை. ஆனால் என்னையும் திகைக்க வைக்கும் உத்தரவுகளைச் சக்கரவர்த்தி பிறப்பிக்கிறார். என்ன செய்வதென்று எனக்கே புரியவில்லை” என்றார் பேரமைச்சர் குரலில் கவலை பாய.

“என்ன உத்தரவுகள் அவை?” என்று துறவியார் வினவினார்.

“வரவேற்பு, அரண்மனையின் பொது மண்டபத்தில் இல்லை.”

“பின்பு?”

அரசரின் சொந்த முத்தாணி மண்டபத்தில்.”

‘அப்படியா?”

“ஆமாம். அதுவும் அங்கு அரசர் நடு பீடத்தில் அமருவார். அவருக்குச் சமமாக உட்கார நான்கு ஆசனங்கள் போடப்படும்.”

“நான்கு பேர்கள் யார்?”

“மகிஷிகள் இருவர்.”

“அது சரி.”

கூரத்திலிருந்து வரும் மணிமேகலை அம்மையார்.”

“என்ன?”

“ஆமாம்! அவருக்கருகே கரிகாலன்.”

அவ்வளவுதான்; துறவியார் மனோபலமெல்லாம் காற்றிலே பறந்தது. ஏதோ பெயருக்கு பெரும் பலசாலி போல ஆசனத்தில் அமர்ந்திருந்தாரே தவிர, தம் சக்தி யெல்லாவற்றையும் யாரோ அபகரித்துக் கொண்டு செல்லும் பிரமை ஏற்பட்டது அவருக்கு. அவர் மூளையில் ஏதேதோ நிகழ்ச்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன. பேரமைச்சர் முகத்தில் தெரிந்த குழப்பத்தை விடப் பெரும் குழப்பம் அவர் முகத்திலும் பரவியது. இந்த வரவேற்புக்கு நிரஞ்சனாதேவியும் வருகிறாளோ?” என்று கேட்டார்.

“வேங்கி நாட்டு இளவரசிக்கு மட்டுமல்ல. வந்தியத் தேவருக்கும் அழைப்புப் போயிருக்கிறது” என்று அறிவித் தார் பேரமைச்சர்.

“அவர்களுக்கு ஆசனங்கள்?”

“ஒரு படி கீழே போடச் சொல்லி உத்தரவு.

மன்னனுடைய உத்தேசத்தைப் பற்றி அதுவரை ஏதாவது சந்தேகமிருந்தால், அதைப் பேரமைச்சரின் கடைசிச் சொற்கள் அடியோடு உடைத்தெறிந்துவிட்டன. ஆகவே அடுத்த நாள் அணுகிவரும் அபாயத்தைத் தவிர்க்கப் பெரும் முயற்சியில் இறங்கினார். துறவியார் நாளின் பெரும் பாகத்தைப் பெரிய புத்த மடாலயத்திலேயே கழித்தார். புத்த பிட்சுக்களை அவ்வப்பொழுது ஏதேதோ அலுவலாக எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கொரு தரம் மடாலயத் தலைவரைச் சந்தித்து, நீண்ட நேரம் அந்தரங்க சம்பாஷணையில் இறங்கிக் கொண்டிருந்தார்.

துறவியாரின் இந்தக் கஷ்டங்களை அடியோடு உணராத காஞ்சி மாநகர், பெரும் விழாக்கோலம் பூண்டு நின்றது. காலையிலும் மாலையிலும் மக்கள் பெரும் கூட்டமாக வீதிகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். பௌர்ணமி தினத்தன்று காலையில் கலிங்கத்தையும் ஒட்டர நாட்டையும், மாசுணி தேசத்தையும் வெற்றி கொண்டு கங்கைக்குப் பாதை போடும் படைத்தலைவன் கரிகாலன் மன்னரால் வடக்கு வாசலில் எதிர்கொள்ளப் படுவான் என்று அடிக்கடி பறை சாற்றப்பட்டதால், அன்று விடியற்காலை முதலே ஜனசமுத்திரம் வடக்கு வாசலிலும், வடக்கு ராஜவீதியிலும் திரண்டு நின்றது. மற்ற ராஜ வீதிகளிலும் படைத்தலைவன் வலம் வருவதாக இருந்த படியால், அந்த இடங்களிலும் மக்கள் அலை அலையாகக் காலை முதலே மோதத் தொடங்கினார்கள். நகரெங்கும் தோரணங்கள் காற்றிலாடின. மாளிகைகளிலெல்லாம் இரண்டு நாள்களாக மங்கையர் தீட்டிய செம்மண்ணும் மஞ்சளும் காஞ்சி மங்கையின் சௌபாக்கியத்தை வலியுறுத்தின. அந்தச் சௌபாக்கியத்திற்கு இன்னுமதிக மெருகு கொடுக்க வருபவன் போல் எழுந்த கதிரவனும் அந்தக் காஞ்சி மாநகர் மீது தன் செவ்விய கிரணங்களை வீசினான். அவன் எழுந்ததைக் குறிக்கவே ஊதப்பட்ட துந்துபி வாத்தியங்களின் சப்தங்களோடு இணைபவன் போல இராஜேந்திர சோழதேவனும் அரண்மனைக் கெதிரே நின்ற தன் புரவியில் தாவி ஏறினார்.

இரண்டு நாள்களும் அடிக்கடி தூதர்கள் வந்து கொண்டிருந்ததன் விளைவாகக் கரிகாலன் காஞ்சி மாநகரின் வடக்கு வாயிலை அடையும் நேரத்தை அரண்மனைக் கணிதர் திட்டமாகக் குறித்திருந்ததால், சோழர் புலிக்கொடி முன்பொரு குதிரையில் செல்ல, பின்பு மெல்ல நடந்தது இராஜேந்திரன் புரவி. அதனை அடுத்து நகர்ந்தது மந்திரி பிரதானிகளடங்கிய பெரும் ஊர்வலம். இந்த மாபெரும் ஊர்வலம் கதிரவன் கிளம்பிய இரண்டாவது நாழிகை முடிந்ததும், காஞ்சி மாநகரத்தின் வடக்கு வாயிலில் நின்றது. அதே விநாடியில் எதிரே வரும் படையின் சத்தமும் வீரர்கள் காதில் விழுந்ததால் பேரமைச்சர் செய்த சைகையையொட்டி துந்துபிகள் மீண்டும் முழங்கின.
பெரும் கறுப்புப் புரவியொன்றில் பூரண போர்க் கோலத்துடன் காஞ்சியின் வடக்கு வாயிலில் கரிகாலனைக் கண்டதும் திடீரென மேளங்கள் முழங்கின. பேரிகைகள் சப்தித்தன. கூட்டம் கூட்டமாக அணிவகுத்து வந்த இளமங்கையர் அந்த வெற்றி வீரனுக்கு மங்கள கீதங்களைப் பாடி ஆரத்திச் சுற்றினார்கள். கோயில் மணிகள் திடீரெனப் பீறிட்டெழுந்து, விடாமல் ‘கண கண’வென்று ஒலித்தன. அதிர்வேட்டுகள் ஆங்காங்கு போடப்பட்டதால் காஞ்சி மாநகரே அவ்வரவேற்பில் அதிர்ந்தது.

இத்தகைய வரவேற்பை எதிர்பார்க்காத கரிகாலன் ஒருவிநாடி திகைத்தானானாலும், மறுவிநாடி சமாளித்துக் கொண்டு, குதிரையிலிருந்து கீழே குதித்து ராஜநடை நடந்து மன்னன் புரவிக்கருகில் வந்து அவனை வணங்கினான். இராஜேந்திரன் ஒருகணம் கரிகாலன் கண்களைக் கூர்ந்து கவனித்துவிட்டு, வலதுகரத்தை அசைக்கவே, பேரமைச்சர் பெரும் குரலில் அவனை வரவேற்று முகமன் கூறினார். பிறகு மீண்டும் மன்னர் சைகைப்படி கரிகாலன் புரவியில் அமர்ந்து கொள்ள, ஊர்வலம் திரும்பி ராஜவீதிகளில் நுழைந்தது.

ராஜவீதிகளின் மாளிகையின் உப்பரிகைகளிலிருந்து மங்கையர் அந்த மாவீரன் மீது மலர்களைத் தூவினார்கள். அதுவரையில் அவனைப் பற்றிக் கதை கதையாகக் கேட் டிருந்த பாவலர்கள் அவன் மீது வெற்றிப் பாக்களைப் புனைந்து பாடினார்கள். வழிநெடுகப் பேரமைச்சர் ஒப்புக் கொண்ட இடங்களில் மட்டும் ஆரத்திகள் அனுமதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், காலையில் புறப்பட்ட ஊர்வலம் புத்த காஞ்சியிலிருந்த பல்லவ அரண்மனையை அடைய நடுப்பகலாயிற்று. அரண்மனை வாயிலில் சக்கரவர்த்தி குதித்ததும், அவரையும் கரிகாலனையும் பக்கத்தில் நிற்கவைத்து மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. மகிஷிகளுடனும் கரிகாலனுடனும் முக்கிய மந்திரிப் பிரதானிகளுடனும் உள்ளே நுழைந்த இராஜேந்திர சோழ தேவன், நேரே முத்தாணி மண்டபத்துக்குள் நுழைந்தான்.

கரிகாலன் சொர்க்கலோகத்தில் இருந்தானானாலும், கூரிய அவன் புத்திக்கு இது வெறும் வரவேற்பு அல்ல வென்பதும் ஏதோ பெரும் நாடகம் நடத்தப்படுகிறதென்பதும் தெள்ளெனத் தெரியவே, அவன் சக்கரவர்த்தியிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டான். வரவேற்பு முடியும் வரை சக்கரவர்த்தி எவ்வளவு மௌனமாயிருந்தாரோ, அத்தனை மௌனமாக அவனும் இருந்தான். அதைக் கண்ட தஞ்சைத் துறவியார் பெரும் ஆச்சரியத்துக் குள்ளானார் என்பது உண்மையானாலும், மணிமேகலை அன்று நடந்துகொண்ட முறைதான் அவரைப் பெரிதும் திகைக்க வைத்தது. இலக்கியத்தில் கண்ட மணிமேகலை துறவறம் பூண்டாளோ இல்லையோ, கூரத்தின் மணிமேகலை உண்மை துறவிதான்’ என்று உள்ளூர வியந்து கொண்டார் துறவியார்.

கற்சிலையென உட்கார்ந்திருந்தாள் மணிமேகலை. மந்திரிப் பிரதானிகள் முத்தாணி மண்டபத்திலிருந்து வெளியேறிய பின்பும், நிரஞ்சனாதேவியும் வந்தியத் தேவரும் வணக்கங்கள் கூறி விடைபெற்றுக்கொண்ட பின்பும், ஏன் மகிஷிகள் சென்றபின்பும்கூட மணிமேகலை யையும் கரிகாலனையும் முத்தாணி மண்டபத்திலேயே நிற்க வைத்தான் இராஜேந்திரன்.

சம்பிரதாயமாக ஏதேதோ பேசிய இராஜேந்திரன், கடைசியாக மணிமேகலையை நோக்கி, “அம்மணி! இதோ சோழ நாட்டின் மாவீரன் ஒருவன். இவனை உங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டான்.

மணிமேகலையின் கண்கள் கரிகாலனை ஏறெடுத்துப் பார்த்தன. பின்பு இராஜேந்திரனுக்காகத் திரும்பின.

“தெரியவில்லை மன்னவா!” என்றாள், எந்த உணர்ச்சியும் தொனிக்காத குரலில்.

“இதற்கு முன்பு பார்த்ததே இல்லையா?” என்று இராஜேந்திரன் மீண்டும் கேட்டான்.

“இல்லை ” என்றாள் அவள்.

இராஜேந்திரன் முகத்தில் கோபத்தின் சாயை மெள்ள மெள்ளப் படர்ந்தது. நன்றாக எடை போடப்பட்ட வார்த்தைகளை, ஒரே சீராக எழுந்த குரலில் உதிர்த்தான். நிதானமான அந்த வார்த்தைகள், அவற்றைப் பிரமாதமாக எதிரொலி செய்த அந்த முத்தாணி மண்டபத்தின் சுவர்கள் எல்லாமே பெரும் பயங்கரமான சூழ்நிலையைச் சிருஷ்டித்ததால், திக்குமுக்காடிப் போன துறவியாருக்கு உயிரே போய்விடும் போலிருந்தது. இரண்டு தலைமுறைகளாக மறைக்கப்பட்ட மாபெரும் ராஜ ரகசியம் அம்பலமாகும் நாழி நெருங்கிவிட்டதை உணர்ந்த பிரும்மானந்தர், சோக சொரூபியாக மாறினார். உலகமே சுழல்வது போலிருந்தது அவருக்கு.

Previous articleMannan Magal Part 2 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here