Home Mannan Magal Mannan Magal Part 2 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

91
0
Mannan Magal part 2 Ch 31 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 31 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 அவன் கண்கள்

Mannan Magal Part 2 Ch 31 | Mannan Magal | TamilNovel.in

அதோ, அவன் கண்களைப் பாருங்கள்!” உள்ளூர உணர்ச்சிகள் பெரும் அலைகளாக எழுந்துகொண்டிருந் தாலும், அவற்றைச் சிறிதும் வெளியில் காட்டாத வறட்டுக் குரலில் சிறிது இரைந்தே இந்த வார்த்தைகளை உதிர்த்தான் இராஜேந்திர சோழதேவன். அந்த முத்தாணி மண்டபம் கூட இராஜேந்திரனுக்குத் துணை புரிவதைப் போல நாலா பக்கங்களிலிருந்தும் அதோ அவன் கண்களைப் பாருங்கள்’ என்று எதிரொலி செய்தது! கரிகாலன் பிறப்பைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் காட்டிக் கொடுக்கும் அந்தக் கண்களின் அத்தாட்சியிலிருந்து, அந்த வம்சத்தார் யாருமே தப்ப முடியாதென்பதை அறிந்து கொண்ட துறவியார் திக்பிரமையடைந்ததன்றி, அந்தச் சமயத்தில் உண்மையாகவே உலகத்தைப் பெரிதும் வெறுத்து உண்மைத் துறவியாகி ஆசனத்தில் சாய்ந்துவிட்டார். அந்த வார்த்தைகளை அர்த்தபுஷ்டியுடன் உதிர்த்த இராஜேந்திரன் குரல் சிறிதும் உணர்ச்சியைக் காட்டாவிட்டாலும், முகத்தில் படர்ந்த கோபச்சாயை கொஞ்சம் அதிகப்பட, அவனும் ஆசனத்தில் ஒருமுறை அசைந்தான்.

இந்த நிலையிலே அசையாதிருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருத்தி மணிமேகலை; மற்றொருவன், எத்தகைய சந்தர்ப்பத்திலும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் மறைத்துப் பொய்யை மெய்யைப் போல் சொல்லும் ஆற்றலைப் படைத்த கரிகாலன். மன்னன் தன்னையும் நடுத்தர வயதுள்ள அந்த மாதையும் மட்டும் முத்தாணி மண்டபத்தில் நிறுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு விடையளித்து விட்டதையும், பிறகு நிதானமாகச் சம்பாஷணை தொடங்கியதையும், இரண்டு மூன்று கேள்வி பதில்கள் முடியுமுன்பாகவே கோபச் சாயை மன்னன் முகத்தில் படர்ந்ததையும் கண்ட கரிகாலன், தன்னைப் பற்றிய பேருண்மையைக் கண்டுபிடிக்க இராஜேந்திரன் முயலுகிறான் என்பதையும் நொடிப்பொழுதில் ஊகித்துவிட்டவனாக, முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் செய்தான். கும்பகோணம் மடாலயத்தில் தஞ்சைத் துறவியார் பச்சைக்கல் மோதிரத்தைத் துடைத்து ஆராய்ந்த சமயத்தில், சாளரத்தின் வழியாக அந்த மோதிரத்தையும் கரிகாலன் கண்களையும் கண்டமாத்திரத்தில், அவன் மகனா இவன்!’ என்று சைவத்துறவியார் வியந்து பார்த்த அதே முகம்! அதே கண்கள் ! இரண்டிலும் இந்தப் பழைய விஷமப் பார்வையே படர்ந்து கிடந்தது! அந்த மாதரசிக்கும் தனக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பதையும், அந்த உறவைப் பட்டவர்த்தனமாக்கவே மன்னன் முயலுகிறான் என்பதையும், அதற்கெல்லாம் சிறிதும் மசியாமல் அம் மாதரசி மண்டலாதிபதியான சோழச் சக்கரவர்த்தியைத் திரணமாக மதித்து உட்கார்ந்திருப்பதையும் கண்ட கரிகாலன், அவளுக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்திலிருந்து அவளை எப்படியும் விடுவிப்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டவனாய், மன்னன் கேள்வியைக் குறுக்கே • மறித்து, “மன்னர் மன்னவா! என் கண்களில் அவர்கள் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊர் பேர் தெரியாத ஒருவன் கண்கள் இவை. நாகையிலிருந்து எனது குருநாதர் உபதேசித்தபடி உயரிய துறவறத்தைப் பூணாமல், புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்டுப் போர்களில் கலந்து உயிர் வதைக்கு உடந்தையாயிருக்க உட்பட்ட ஒரு பாவியின் கண்கள் இவை. இந்தக் கண்களைப் பார்க்கும்படி அந்தப் புண்ணியவதியை ஏன் வற்புறுத்துகிறீர்கள்?” என்று கேட்டான், பணிவும் விஷமமும் நிரம்பிய குரலில்.

இராஜேந்திர சோழன் கரிகாலனை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் மணிமேகலையின் பக்கமே திரும்பி, “அம்மணி, நன்றாகப் பாருங்கள்! அதோ அந்தக் கண்கள்! அவை யாரையும் உங்களுக்கு நினைப்பூட்டவில்லையா?” என்று வினவினான்.

மணிமேகலை மீண்டும் தன் கண்களை உயர்த்திக் கரிகாலன் கண்களை நோக்கினாள். சந்தித்த நான்கு கண்களும் சிறிது நேரம் உறவாடின. ஆனால் அந்தக் கண்கள் பதிந்து நின்ற முகங்களில் மட்டும், எந்தவிதச் சலனமும் இல்லை. திரும்பி மன்னனைப் பார்த்த மணிமேகலையின் முகத்தில் சாந்தியே நிலவி நின்றது. “அழகான கண்கள் மன்னவா! ஆனால் அவற்றை எந்த உத்தேசத்துடன் பார்க்கச் சொல்கிறீர்கள்? எனக்கு விளங்க வில்லையே!” என்றாள்.

“இந்தக் கண்கள் உங்களுக்கு யாரையும் நினைப்பூட்ட வில்லையா? நன்றாக யோசித்துச் சொல்லுங்கள் அம்மணி” என்று இராஜேந்திரன் மீண்டும் கேட்டான். இம்முறை அவன் சொற்களில் சிறிது கண்டிப்பும் இருந்தது.

“இல்லை, யாரையும் நினைப்பூட்டவில்லை” என்று திடமாகப் பதில் சொன்னாள் மணிமேகலை.

“என் மூத்த மகனைப் பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை, அந்தப் பாக்கியம் எனக்கில்லை. நான் கூரத்தில் ஒரு காட்டில் தன்னந்தனியே வசிக்கிறேன். உலகத்துடன் உறவை விட்டு நீண்ட நாளாகிறது.”

“உறவை விடக் காரணம்?”

“அது சொந்தக் காரணம் மன்னவா!”

“காரணத்தைச் சொல்ல முடியுமா?”

“முடியாது.”

“ஏன்?”

“சொல்ல வேண்டாமென்று என் கணவர் உத்தரவு. அதை மீற வைக்கச் சோழ நாட்டுச் சக்கரவர்த்தியல்ல ஆண்டவனே வந்தாலும் முடியாது.”

உறுதியுடனும் தன்னைப் பார்த்து மிகுந்த அசட்டை யுடனும் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்ட சோழப் பேரரசனின் அழகிய வதனத்திலே கோபத்திற்குப் பதில் ஆச்சரிய ரேகையே நன்றாகப் படர்ந்தது. எப்பேர்ப்பட்ட கற்புக்கரசிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்ததால் பெருமிதத்தோடு உவகையும் கொண்ட இராஜேந்திரனின் வாயிலிருந்து அடுத்து உதிர்ந்த வார்த்தைகளில் கருணையும் அன்பும் பொங்கி வழிந்தன.

“அம்மணி! உங்களைப் போன்ற தவச்செல்விகளால் இந்தத் தமிழ்நாடு சிறப்படைகிறது. அதைக் கண்டு மன்னனான நானும் பெருமையடைகிறேன். உண்மையறிந்து மன்னன் வாழ வேண்டும் என்ற தமிழ்ப் பண்பாட்டின் முறைப்படிதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். எந்த மன்னாதி மன்னனுக்கும் வணங்காத என் தலை தங்களைப் போன்ற கற்புக்கரசிகளின் கால்களில் தாழ்வதைப் பெருமையாகக் கொள்ளும். நீங்கள் எனக்கு வயதில் சிறியவர்கள் போல் தோன்றுகிறது. இருந்தாலும் உறுதியில் உங்களுக்கு நானும் இணையில்லை. இந்த மண்டபத்தில் யாருமே இணையில்லை. ஆகவே, தாயே பணிவுடன் கேட்கிறேன். சொல்லுங்கள் என் தந்தையை யாவது பார்த்திருக்கிறீர் களல்லவா என்று மெல்லக் கேட்டான் இராஜேந்திரன்.

மணிமேகலை துயரம் தோய்ந்த இராஜேந்திரன் அழகிய வதனத்தை நோக்கினாள். அதுவரை உணர்ச்சிகளைக் காட்டாத அவன் கண்களிலும் இரண்டு துளி நீர் எழுந்து நின்றது. “மன்னர் பெருமானே! நீயே இந்தச் சோழ மண்டலத்தை ஆளத் தகுந்தவன். துளிகூடச் சந்தேகமில்லை. உன் பண்பும் உன் பணிவும் உன் வீரத்துக்குச் சிறிதும் சளைத்தவையல்ல. ஆகையால் நீ உயர்ந்தவன். இப்படி நீ என்று அழைக்கிறேனே என்று நினைக்காதே உன்னைவிட நான் வயதில் சற்றுப் பெரியவள். உன்னை ஏகவசனத்தில் அழைக்கும் உரிமையும் எனக்கு உண்டு. அது என்ன உரிமை என்று மட்டும் கேட்காதே. கற்புக்கரசி என்று நீ என்னை அழைத்தாய். அது உண்மையென்று நீ நம்பினால் என்னை உன் அன்னையாக மதித்து நட. நான் சொல்லும் வார்த்தைகளுக்குத் தடை சொல்லாதே. மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காதே” என்றாள் உணர்ச்சியால் குழைந்துபோன குரலில்.

அடுத்த விநாடி அந்த மண்டபத்தில் மௌனம் சிறிது நேரம் நிலவியது. அந்த மௌனத்தைக் கரிகாலனே கலைத்தான். “மன்னவா! இந்த அம்மணியின் சொல்லைத் தாங்கள் எப்படி மீற முடியும்? மண்டலத்தையே ஆள்பவரானாலும், கற்புடைய மாதருக்குக் கீழ்ப்படிவது தானே மாநிலத்தின் வழக்கு? என்னுடைய கண்களைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? சோழ மண்டலத்தில் எத்தனையோ அநாதைகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்களையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் மன்னருக்கு ஒரு ஜென்மம் போதாது; பல ஜென்மங்கள் வேண்டியிருக்கும்” என்றான் கரிகாலன்.

மன்னன் முகத்தில் கவலையும் துக்கமும் சிறிது தோல்விக் குறியுங்கூடத் துலங்கின. ஆகவே கரிகாலனைப் பார்த்துச் சொன்னான், “கரிகாலா! உன் கண்கள் அநாதையின் கண்கள் அல்ல” என்று.

“வேறு யார் கண்கள் மன்னவா?”

கரிகாலன் தன்னைப் பார்த்து நகைக்கிறானென்பதை இராஜேந்திரன் உணர்ந்துகொண்டாலும், அதைச் சிறிதும் வெளிக்காட்டாமலும், தன் நினைவு அறுபடாமலும் தொடர்ச்சியாகப் பேசினான்: “உன் கண்கள் அநாதையின் கண்களல்ல கரிகாலா! அவை அரச வம்சத்தின் கண்கள். அதுவும் சோழ சாம்ராஜ்யத்தின் கண்கள்! பார்த்த உடனேயே நான் புரிந்து கொண்டேன். பார்க்கும் யாரும் புரிந்து கொள்ளாமலிருக்க முடியாது. இந்தக் கண்களை உடையவனின் பூர்வீகத்தை இந்தப் பூமண்டலத்தில் யாருமே மறைக்க முடியாது. அரையன் ராஜராஜன் தன் ஓலைகளில் சோழர் குல ராஜமுத்திரையைப் பொறித்து, உன்னைப்பற்றி இந்தத் தஞ்சைத் துறவியாருக்கும் எழுதிய போதே உண்மையை ஓரளவு ஊகித்தேன். உன்னைப் பார்த்ததும் உண்மை ஊர்ஜிதமாகிவிட்டது. அதை என் நீதி சபை முன் உறுதி செய்ய அத்தாட்சிகள் தேவை. அந்த அத்தாட்சிகளை இந்த அம்மணியும், துறவியாரும், அரையன் ராஜராஜனும் தர முடியும். ஏன் தர மறுக்கிறார்கள்?” என்று வினவினான்.

மணிமேகலை சிறிதும் அசையாமல் உறுதியுடன் மன்னனைப் பார்த்தாள்.

அவளிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியா தென்பதைத் தீர்மானித்துக் கொண்ட இராஜேந்திர சோழ தேவன் மேலும் கரிகாலனைப் பார்த்துச் சொன்னான்: “கரிகாலா! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மகன் நினைவே வருகிறது எனக்கு. என் மகன் எப்படி இருப்பான் தெரியுமா? உறையூருக்கு வந்து பார், தெரியும்!”

“கண்டிப்பாய் வருகிறேன் மன்னவா! படைத்தலை வனுக்கு இளவரசன் அன்பு கிடைப்பது பிற்காலத்தில் பலனளிக்குமல்லவா?” என்றான் கரிகாலன், இராஜேந்திர சோழனைச் சரியாக அர்த்தம் செய்துகொள்ளாதவன் போல்.

“அதற்குச் சொல்லவில்லை கரிகாலா! உன் கண் களுக்கும் அவன் கண்களுக்கும் வித்தியாசம் சிறிதுமில்லை. சொல்வது புரிகிறதா?”

“புரியாமலென்ன? நானும் அரச வம்சத்தைச் சேர்ந்தவனென்று கூறுகிறீர்கள். அரச வம்சங்களில் கிளைகள் பல இருப்பது சகஜம்தானே மன்னவா? அதில் ஒரு தூரத்துக் கிளையில் என் தந்தை பிறந்திருக்கலாம். அந்தச் சாயை எனக்கிருக்கலாம். இதில் என்ன வியப்பு இருக்க முடியும்?” என்றான் கரிகாலன்.

“தூரத்துக் கிளையாயிருக்க முடியாது கரிகாலா! அருகேயுள்ள கிளை, அதுவும் மிக அருகேயுள்ளது! இல்லாவிடில், இந்தத் தமிழ் மண்டலத்தையே ஒரு காலத்தில் மயக்கிய அந்தக் கண்கள் உனக்கு இருக்க முடியாது. அந்தக் கண்கள் நாட்டில் இருவருக்குத்தான் உண்டென்று நினைத்தேன். ஒன்று எனக்கு; இரண்டாவது என் மூத்த மகனுக்கு; மூன்றாவது பேர்வழியும் இருக் கிறான் கரிகாலா! அது நீதான். அந்தக் கண்கள்…”

மேகங்கள் கவிந்துவிட்டன, இடி இடிக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் துறவியார்.

இடி மெல்ல இறங்கியது. மதிப்பும் மகிழ்ச்சியும் துயரமும் கலந்த குரலில் சொன்னான் இராஜேந்திர சோழதேவன், “அந்தக் கண்களைக் கண்டு படைகள் பணிந்தன; மங்கையர் மயங்கினர்; அறிவாளிகள் வியந்தனர். கரிகாலா! அந்தக் கண்கள் என் தந்தை இராஜராஜ சோழதேவனின் கன்கள்!”

இதைச் சொல்லிய இராஜேந்திர சோழதேவன், நீண்ட நேரம் உணர்ச்சிமிகுதியால் தன் ஆசனத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிறகு மெள்ளத் தலையை நிமிர்த்தி மணிமேகலையை நோக்கி, ‘அம்மணி! என் வம்சத்தில் பிறந்த இவனுக்கு உரிய ஸ்தானத்தை அளிக்க வேண்டியது என் கடமை. அதை நிறைவேற்ற உதவமாட்டீர்களா? யார் இவன்? எப்படி என் தந்தையின் சாயலைப் பெற்றான்? இவன் போர்த் தந்திரங்களும் அவர் முறைகளைப் போலவே அமைந்திருக்கின்றனவே அம்மணி” என்று கெஞ்சினான்.

மணிமேகலை சாந்தி சிறிதும் கலையாத குரலில் சொன்னாள்: “மன்னவா! அவன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் அவன் இருக்கிறான். ஆகையால் கவலைப் படாதே. அவன் பரம்பரையை அறிந்து புதிதாகச் செய்யக் கூடியது ஏதுமில்லை. என்னை நம்பு” என்று.

தன் முயற்சி தோல்வியடைந்து விட்டதைப் பூரணமாக உணர்ந்து கொண்டான் இராஜேந்திர சோழதேவன். ஆகவே மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து, மெள்ள உள்ளறைகளுக்காக நடந்து சென்றான். மணிமேகலையும் கரிகாலனை ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்காமலே அந்தப்புரத்தை நோக்கி நடந்தாள். அரண்மனையின் உப்பரிகை அறைகளில் ஒன்றில் கரிகாலன் தங்கினான்.

சக்கரவர்த்தியை நடத்துவது போலவே அவனை எல்லோரும் நடத்தினார்கள். ஆனால் கரிகாலன் மனம் மட்டும் போக போக்கியங்களை வெறுத்து எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது.

இரவு ஏறிவிட்டதற்கு அறிகுறியாக கோயில்களில் அர்த்தஜாம பூஜையின் மணிகளின் பேரரவம் கேட்டது. அந்த அரவமும் சற்று நேரத்திற்கெல்லாம் ஓய்ந்துபோகவே என்ன செய்வதென்றறியாமல் கண்களை மூடிய கரிகாலனை ஒரு கை மெள்ள அசைத்து எழுப்பியது.

கண் விழித்த கரிகாலனுக்கு எதிரே துறவியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன துறவியாரே! இந்த நள்ளிரவில்…” என்ற கரிகாலனைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்த துறவி யார் அவனை மெள்ளத் தமது பின்னால் அழைத்துச் சென்று அரண்மனையின் வேறோர் அறைக்குள் நழைந்தார். அங்கிருந்த ஏதோ ஒரு கல்லை மெள்ளப் பெயர்த்து, கீழே தெரிந்த படிகளில் தாமும் இறங்கி, கரிகாலனையும் இறங்கச் சொன்னார். இருவரும் அந்தச் சுரங்க வழியாக நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். சுரங்கம் முடிந்த இடத்தில், திடீரென இருள் விலகியது. மெல்லிய தீபமொன்று தூரத்தில் பளிச்சிட்டது. “போ! கரிகாலா! புத்தர் பிரான் அருள் உனக்குக் கிட்டப் போகிறது” என்று மெல்ல அவன் காதுக்கருகில் சொன் னார், தஞ்சைத் துறவியார். அடிமேலடி வைத்து நடந்தான் கரிகாலன். சுரங்க வழி மெல்ல விரிந்தது. மேலே சென்ற படிகள் பெரும் மண்டபத்தில் அவனைக் கொண்டு சேர்த்தன. அந்த மண்டபத்தின் கோடியில் பிரும்மாண்டமாக உட்கார்ந்திருந்த போதிசத்துவர் சிலையின் அருள்விழிகள் அவனை அருகே அழைத்தன. அருகில் சென்ற கரிகாலன் அந்தச் சிலையின் அழகைக் கண்டு பிரமித்து நீண்ட நேரம் நின்றான், மெய்மறந்த நிலையில். அந்தச் சிலைக்குச் சற்று அப்பாலிருந்த ஒரு கதவு திறந்ததையோ, திறந்த அந்தக் கதவின் வழியாக ஓர் உருவம் மெல்ல நடந்து தன் அருகில் வந்ததையோ, அவன் கவனிக்கவில்லை.

Previous articleMannan Magal Part 2 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here