Home Historical Novel Mannan Magal Part 2 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

92
0
Mannan Magal part 2 Ch 32 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 32 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 மகனே நீ மண்டலாதிபதி

Mannan Magal Part 2 Ch 32 | Mannan Magal | TamilNovel.in

அரண்மனையிலிருந்து கிளம்பிய அத்தனை குறுகிய சுரங்க வழி அப்படி அந்த இடத்தில் திடீரென முடியு மென்பதையோ, முடிந்த இடம் அத்தனை பெரிய புத்த விஹாரமாக விரியுமென்பதையோ, சொப்பனத்திலும் நினைக்காத கரிகாலன், எதிரேயிருந்த புத்தர் பிரான் சிலை மீதே கண்களை நாட்டி எண்ணங்களைப் பல இடங்களில் சுழலவிட்டுக் கொண்டிருந்தான். காவியங்களை நிரம்பப் படித்திருந்த கரிகாலன் பிற்காலத்தில் இந்த இடங்களை நினைத்துப் பார்த்தபோது, முடிந்தது சுரங்க வழியல்ல வென்றும், தன் வாழ்க்கையின் மர்மமே என்றும், விரிந்தது புத்த விஹாரமல்ல வென்றும், தன் பிறப்பைப் பற்றிய உண்மையேயென்றும், காவிய ரீதியில் உவமைகளை அமைத்து அமைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அந்த இரவில் போதிசத்துவரின் அருள் விழிகளுக்கு முன்பாக அவர் அருகே பளிச்சிட்ட சிறு விளக்கின் ஒளிச்சுடரின் வெளிச்சத்தில் நின்றபோது, காவியங்களோ உவமைகளோ அவன் கருத்துக்குச் சிறிதும் எட்டவில்லை.

போதிசத்துவரின் புண்ணிய விழிகளில் தன் விழிகளை ஊன்றி அவருடைய மகாசக்தியில் கலந்துவிட்டவனைப் போல் நின்றிருந்த தன் மகனைக் கண்ட மணிமேகலை, அவன் எண்ணங்களைச் சிறிதும் கலைக்காத முறையில் அடிமேலடி வைத்து மெள்ளப் பதுமையென நடந்து, அவனுக்குப் பின்புறத்தே நின்று குனிந்து, அவனை நீண்ட நேரம் நோக்கினாள். தலையிலே சுருட்டையாயிருந்த மயிர்கள், அவசியமான வளைவுகளுடன் ஆண் மகனுக்குரிய பலத்துடன் ஓடிய நீண்ட வலுவான முதுகுப்புறம், உறுதியாகக் கீழே நின்ற கால்கள், திண்மையான தோள்கள், இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்த மணிமேகலையின் கண்களில் அன்பு நீர் மெள்ளத் திரண்டது. ஐந்து வயதில் அனுப்பிய தன் குழந்தையை வாலிபப் பருவத்தில் பார்த்த அந்தத் தாயின் உடலில் ரத்தத்தின் பாசம் குப்ரெனப் பாய்ந்ததால் நரம்புகள் உணர்ச்சி மிகுதியால் ஒருமுறை அவளைச் சிறிது ஆட்டின. எத்தனையோ துன்பங்களை வாழ்க்கையில் தாங்கி நின்ற அந்த இதயம், படபடவென்று அடித்துக்கொண்டது. அவளது கரங்கள் அவன் தோள் மீது மெள்ள அமர்ந்தன.

உலகத்திலேயே இரண்டு கைகளுக்குத்தான் அமரசக்தி உண்டு என்பதைக் கரிகாலன் படித்திருந்தான். ஒன்று, பத்து மாத காலம் தாங்கிய தாயின் ரத்தமோடும் கை. இன்னொன்று கட்டி வாழும் மனையாளின் கை. ஆண்மகன் நோயுற்ற காலங்களில் இந்தக் கைகள் பட்ட மாத்திரத்தில் பெரும் சாந்தியுண்டு என்பதை அவன் சாஸ்திர வாயிலாக அறிந்திருந்தான். ஆனால் அந்தக் கைகளின் அமரத்துவம் சாந்தி தரும் தன்மை எத்தனை பெரிது என்பதை, அன்று, அந்தச் சுரங்க முடிவிலே விரிந்த புத்த விஹாரத்தில்தான் அறிந்தான் கரிகாலன். மணிமேகலையின் கைகள் தோள்களில் பட்ட மாத்திரத்திலேயே, அவன் உடல் பூராவும் ஆனந்த வெள்ளம் பாய்ந்து நின்றது.

மகனுடைய தலையை மெல்லத் தன்னுடைய மார்பில் சார்த்திக்கொண்ட மணிமேகலை, குனிந்து அவனை உச்சி மோந்தாள். அவள் கரங்கள் அவன் உடலைச் சுற்றி ஐந்து வயதுக் குழந்தையை அணைப்பது போல் அணைத்தன. கண்கள் நீரை அவன் தலையில் உதிர்த்தன.
தலையில் தாய் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் சுடச்சுட இறங்கியதாலோ அல்லது புத்தியிலிருந்து இருளை நீக்க அந்தப் புனித நீருக்கிருந்த சக்தியாலோ தெரியாது, கரிகாலன் மெள்ள வாய்விட்டு, “அம்மா” என்று தடுமாற்றத்துடன் அழைத்தான்.

‘அம்மா!’ அந்தச் சொற்களைக் கேட்க எத்தனை வருஷங்களாகத் துடித்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை. மூன்றே எழுத்துக்கள்தான்! ஆனால் அவற்றில் அத்தனை பெரிய அமுத வெள்ளமா தோய்ந்து கிடக்க முடியும்! பிரணவ சப்தத்திலும் மூன்றே எழுத்துக்கள்தான் இருக்கின்றன. ‘அ, உ, ம்’ என்ற இந்த எழுத்துக்கள் தான் காலத்துக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ‘ஓம்’ என்ற பிரணவ சப்தமாக மாறியிருக்கின்றன. அலையெழும் கடலின் இரைச்சலில், சூறாவளியின் கூச்சலில் பிரணவ சப்தத்தைக் கேட்கிறோம். ஆனால் அதைவிடச் சிறந்த மந்திரச் சொல்லான ‘அம்மா!’ எனும் மூன்று எழுத்துக் களில் அடிக்கும் தென்றலில்தான் எத்தனை இனிமை என்று மணிமேகலை அந்தச் சமயத்தில் நினைத்தாள்.

கரிகாலனை அந்த வாலிப வயதுக்குள் எத்தனையோ பேர் ‘மகனே’ என்று அழைத்திருக்கிறார்கள். சூடாமணி விஹாரத் தலைவர் அழைத்திருக்கிறார்; தஞ்சைத் துறவியார் அழைத்திருக்கிறார்; சிற்சில சமயங்களில் அரையன் ராஜராஜனும் அழைத்திருக்கிறான். ஆனால், அந்த அழைப்பு வேறு; தாயின் கர்ப்பத்திலிருந்து கிளம்பும் அந்த ஆசைக் குரல் வேறு. அது எத்தனை இனிமையாக ஒலிக்க முடியும் என்பதை அன்றுதான் அறிந்தான் கரிகாலன்.

“அம்மா!” என்று கூறிய கரிகாலன், குனிந்து அவள் புனித பாதங்களைத் தன் கரங்களால் தொட்டான். அவனைச் சரேலென எழுப்பி மீண்டும் அணைத்துக் கொண்ட மணிமேகலை, “கண்ணே, நான் யாரென்பதை எப்படி அறிந்தாய்? இங்கு வருமுன்பே தஞ்சைத் துறவியார் கூறிவிட்டாரா?” என்றாள்.

“இல்லையம்மா!” என்றான் கரிகாலன், அவள் அணைப்பை விட்டு அகல முடியாதபடியால், தலையை உயரத் தூக்கி அவள் மலர் முகத்தைப் பார்த்தபடி.

“பின் எப்படித் தெரிந்து கொண்டாய்?” என்றாள் அவள் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து குரலில் தொனிக்க.

“அம்மா, பிறர் சொல்லித் தெரிய வேண்டிய உறவா இது? சூரியனுக்கும் தாமரைக்கும் உள்ள உறவை பிறரா சொல்லிக் கொடுக்கிறார்கள்? சந்திரனுக்கும் ஆம்பலுக்கும் உள்ள உறவை விளக்க ஆசிரியர் ஒருவர் தேவையா? மாட்டுக்கும் கன்றுக்கும் உறவை விளக்க உபாத்தியாயரை அமர்த்துகிறார்களா? இயற்கையே இந்த உறவைக் கற்பிக்கிறது. உங்களை முத்தாணி மண்டபத்தில் கண்டதுமே தெரிந்து கொண்டேனே உங்களுக்குத்தான் தெரியவில்லை நான் யாரென்று” என்றான் கரிகாலன்.

அவன் பேசும் அழகைக் கண்டு வியந்த மணிமேகலை, அவன் தலையை ஆசையுடன் கோதிவிட்டாள். பிறகு மெள்ளத் துன்பச் சிரிப்பு சிரித்துவிட்டுச் சொன்னாள்: “கண்மணி! இயற்கை கற்பிக்கும் உறவு இது என்றாயே, அந்த இயற்கை மகனுக்கு மட்டுந்தான் கற்பிக்குமா?” என்று.

“அப்படியானால்?”
“உன்னை எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? ஐந்து வயதில் என் கரங்களால் தூக்கி அரையன் ராஜராஜனிடம் உன்னை ஒப்படைத்த நாள் முதல் உன் வளர்ச்சியின் ஒவ்வோர் அம்சத்தையும் என் மனம் உணர்ந்திருக்கிறதடா மகனே. நீ வளர்ந்த இடம், முறை அனைத்தையும் நான் அறிவேன். உன்னைப் பார்க்க எத்தனை நாள் துடித்திருப்பேன்! தூங்காமல் எத்தனை நாள் அழுதிருப்பேன்! என் கண்ணீர் முழுதும் கலந்து ஓடுமானால், இந்த நகரின் வேகவதி ஆறு, அதற்கருகில் சிறு வாய்க்காலாகத் தெரியுமடா மகனே!” என்று தடுமாறித் தடுமாறிக் கூறினாள். அப்பொழுதும் அவள் கண்கள் நீரை உகுத்தன.

அந்த நீரைக் கரிகாலன் வலதுகரத்தால் துடைத்து விட்டு, “அம்மா, தெரிந்துமா மன்னன் முன்பாக என்னை யாரென்று தெரியாதென்று சொன்னீர்கள்?” என்று கேட்டான்.

நாக்குழறச் சொன்னாள் அவள்: ஆமடா மகனே! தெரிந்துதான் எந்தத் தாயும் சொல்லக்கூடாத அந்த வார்த்தைகளைச் சொன்னேன்.”

“ஏன் அம்மா? ஏன் அப்படிச் சொன்னீர்கள்?”

“நீ யாரென்பது இராஜேந்திர சோழதேவனுக்குத் தெரியக்கூடாதடா மகனே!”

“ஏன் தெரியக்கூடாது அம்மா? இராஜேந்திர சோழ தேவன், தாய்க்கும் மகனுக்கும் இடையே நிற்கும் பொல்லா இதயம் வாய்ந்த கொடியவனா?”

“இல்லை மகனே! அவன் கொடியவனல்ல. இராஜேந்திர தேவனைப்போல் அறவழியில் செல்லக்கூடிய மண்டலாதிபதிகளைச் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவன் தயாளம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. அவன் கொடியவனாய் இருந்தால் அஞ்ச மாட்டேன். அவன் நேர்மையைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.”

“நேர்மையைக் கண்டு அஞ்சுகிறீர்களா? விந்தையா யிருக்கிறதே தாயே?”

“விந்தையும் விசித்திரமும் வாய்ந்த வாழ்வுதாண்டா உன் வாழ்வும் என் வாழ்வும்.”

“விளங்கவில்லையே எனக்கு!”

“விளங்க வைக்கத்தான் உன்னை இங்கு அழைத்து வரச் செய்தேன் மகனே. உன் பிறப்பின் பெரும் ரகசியத்தை, அதுவாக உடையுமுன்பு நானாகவே உனக்குச் சொல்லிவிடலாமென நிச்சயித்தேன். உன் தந்தை உயிருடனிருந்தால் நான் இப்பொழுது செய்யும் காரியத்திற்குக் கண்டிப்பாய் இணங்குவார் என்று என் மனம் சொல்லியதாலேயே உன்னை இங்கு சந்திக்கவும் பேசவும் தீர்மானித்தேன். அந்தத் தீர்மானத்தில் ஏதாவது முன்பு சலனமிருந்தாலும், இன்று பகல் முத்தாணி மண்டபத்தில் இராஜேந்திர சோழதேவன் கொண்ட சந்தேகத்துக்குப் பிறகு அந்தச் சலனம் தீர்ந்துவிட்டது” என்று சொல்லிப் பெருமூச்செறிந்த மணிமேகலை மெள்ளக் கரிகாலனை அழைத்துச் சென்று புத்தபிரான் காலடியிலிருந்த ஒரு சிறு பீடத்தில் தான் உட்கார்ந்துகொண்டு, மகனைத் தரையில் உட்கார வைத்தாள்.
அப்படி உட்கார வைத்துக்கொண்டு தன் முழந்தாளில் பதிந்த தலையின் மயிர்களைக் கோதிவிட்டுத் தன்னை ஆவலுடன் நோக்கிய கண்களைப் பார்த்து, “உண்மைதான் மகனே! அந்தக் கண்களை உடையவன் பிறப்பை யாரும் மறைக்க முடியாது. ஆகவே, இராஜேந்திர சோழ தேவனிட மிருந்து நீ எப்படி மறைக்க முடியும்?” என்றாள்.

கரிகாலன் கண்கள் தாயின் மலர் முகத்தில் பிரதி பலித்த துயரத்தைக் கண்டன.

மணிமேகலை சற்று நேரம் பேசாமலிருந்தாள். பிறகு சொன்னாள்: “மகனே, உன் கண்களில் தெரிவது சோழ இராஜகுல வம்சத்தைப் பற்றிய பெரிய ரகசியம்; இரண்டு தலைமுறைகளின் கதை. அந்தக் கதையை அறியச் சோழ மண்டலத்தின் பகைவர்கள் துடிக்கிறார்கள். அதை எங்களில் சிலபேர் இதயத்தில் வைத்துப் பூட்டிவிட்டோம்.”

கரிகாலன் தாயை நன்றாக ஏறெடுத்துப் பார்த்தான். “ஏன் பூட்டி வைக்க வேண்டும்?” என்று கேட்டான்.

“சோழ ராஜ்ய நன்மையை உத்தேசித்து; மக்களின் க்ஷேமத்தை முன்னிட்டு” என்றாள் மணிமேகலை.

“என் பிறப்பு மர்மம் வெளியானால் என்ன நடக்கும்? சோழ சாம்ராஜ்யம் அழிந்துவிடுமா?”

“ஆம் மகனே! சோழ நாடு பிளவுபடும். சாம்ராஜ்யம் சிதறிப் போகும். உள்நாட்டில் யுத்தமுண்டாகும்.”

“இதே வார்த்தைகளை என்னிடம் சூடாமணி விஹாரத் தலைவரும் சொன்னாரம்மா. என்னை வீரன் வாழ்க்கையை விட்டுத் துறவறத்துக்கு வரும்படியாகக்கூட அழைத்தார்” என்றான் கரிகாலன்.

இதைக் கேட்ட மணிமேகலை, அத்தனை துன்பத் திலும் மெள்ள நகைத்தாள். “ஏனம்மா சிரிக்கிறாய்?” என்றான் கரிகாலன் சந்தேகத்துடன்.

“சிரிக்காமல் என்ன செய்வேன் மகனே! உன் தந்தையை அறிந்த சூடாமணி விஹாரத் தலைவர், உன்னைத் துறவியாக்க முடியுமென்று நினைத்தாரே, அந்த விந்தையை நினைத்தால் யார்தான் சிரிக்காமலிருக்க முடியும்? மகேந்திரதேவருடைய மகன் ஒரு துறவியா! விந்தையிலும் விந்தை! துறவியாகும் மனப்பான்மை உங்கள் குலத்திலேயே கிடையாதடா என் கண்மணி.”

கரிகாலன் இதயம் பலமாக ஓடிக்கொண்டிருந்தது. “மகேந்திர தேவர்! அதுவா என் தந்தையின் பெயர்” என்று மெள்ள ஏதோ பலமாகச் சொல்லக்கூடாத மந்திரச் சொற்களை உச்சரிப்பவன் போல் சொன்னான்.

அதுதான் உன் தந்தையின் பெயர் மகனே! அவரை விடப் பெரிய வாள்வீரர் இந்தச் சோழ மண்டலத்தில் கிடையாது. அவர் ” சற்றே தயங்கினாள் மணிமேகலை.

அவள் தயங்கிய அதே விநாடியில் விஹாரத்தின் வேறொரு பக்கத்திலிருந்து கதவொன்று திறந்தது. “தயங்காதே மகளே! உண்மையைச் சொல்லிவிடு; உண்மையை அறிவதற்காகவே உலகம் பூராவும் அலைந்து சோதனை செய்த போதிசத்துவரின் நிழலில் நீங்கள் நிற்கிறீர்கள். இங்கு சத்தியத்துக்குத்தான் இடம். வாழ்க்கையின் மறைவுகள், திரைகள் எல்லாம் கிழிக்கப்பட வேண்டிய இடம் இது. சொல்லிவிடு மணிமேகலை!” என்று கூறிக்கொண்டு, நாகப்பட்டணத்தின் சூடாமணி விஹாரத்தலைவர் உள்ளே நுழைந்து அவர்களுக்கருகில் வந்தார். அவரைக் கண்ட கரிகாலன் எழுந்து தலை வணங்கினான்.

அவனுக்கு ஆசி புரியும் முறையில் கைகளை உயர்த்திய சூடாமணி விஹாரத் தலைவர், “கரிகாலா! நீ நாகையை விட்டுப் புறப்பட்டது முதல் இன்றுவரை உன் நடவடிக்கைகளை நானறிவேன். தஞ்சைத் துறவியார் அவ்வப்பொழுது விஷயங்களை எனக்கு அறிவித்து வருகிறார். உனக்கு விமோசனம் பிறக்கும் காலம் வந்துவிட்டது. ஏன், உன் உறுதியால் நாட்டுக்கும் விமோசனம் பிறக்கும் காலம் சமீபித்துவிட்டது. ஆகையால்தான் உன் தாயும் நீயும் சந்திக்க நாங்கள் உடன்பட்டோம்” என்றார்.

“தாயும் சேயும் சந்திக்க நீங்கள் உடன்பட வேண்டுமா? தந்தையே! இயற்கைக்கு அணை போடப் புத்த மதம் இடங் கொடுக்கிறதா?” என்று கேட்டான் கரிகாலன் ஆத்திரம் தணிந்த குரலில்.

“ஆம் குழந்தாய்! அஹிம்சையை நிலைநிறுத்துவது புத்த மடாலயங்கள் கடமை. மக்கள் ரத்தம் அனாவசியமாகச் சிந்தப்படுவதைத் தடுக்க வேண்டியது எங்கள் கடமை. உன் பிறப்பின் மர்மம் இப்பொழுது வெளியானாலும், நீ யாரென்பதை உலகத்துக்கு அறிவிக்க முடியாது. அறிவிப்ப தில்லையெனப் பிரமாணம் செய்! இதோ புத்தர்பிரான் முன்பாகப் பிரமாணம் செய்.” என்று ஆணையிட்டார் சூடாமணி விஹாரத் தலைவர்.

“ஏன் அப்படிப் பிரமாணம் செய்ய வேண்டும் தந்தையே” என்று சீறிய கரிகாலன், தன் தாயையும் நோக்கினான்.

“மணிமேகலையின் உதிரத்தில் உதித்த நீ பிரமாணம் செய்ய மறுக்க முடியாது!”

“ஏன்?”

இந்தக் கேள்விகளுக்கு மணிமேகலை பதில் கூறினாள். “அது உன் தந்தையின் கட்டளை மகனே. உலகத்தார் உன் பிறவி மர்மத்தை அறியக்கூடாதென்று அவர் இறக்கும் தறுவாயில் ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தான் பிரமாணம் செய்தேன். அந்தப் பிரமாணம்…”

“அந்தப் பிரமாணம்?”

இப்பொழுது விஹாரத் தலைவர் பதிலிறுத்தார். “பலரைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. நான், அரையன் ராஜராஜன், தஞ்சைத் துறவியார், பிரதாபருத்திரன் நால்வரும் உன் தந்தையின் மரணப்படுக்கையில், ஈழத்துப் போர்ப் பாசறையில் பிரமாணம் செய்து கொடுத்தோம். மகனே! அந்தப் பிரமாணத்தை பிரதாபருத்திரன் உடைத்தான். நீதான் சோழப் பேரரசின் அரியணையில் உண்மையாக உட்கார வேண்டியவன் என்பதை மரணத்தறுவாயில் உன்னிடம் கூறிவிட்டான். அதனால்தான் அதைப் பற்றிப் பேச நாங்களும் முற்பட்டோம். அரையன் ராஜராஜன் இதைப்பற்றிப் பல ஓலைகள் எனக்கும் தஞ்சைத் துறவி யாருக்கும் எழுதியிருக்கிறான். இப்பொழுது அவன் கங்கைக் கரையை நாடிச் செல்கிறானென்பது உண்மையேயானாலும் அவன் மனம் இந்த இடத்தைத்தான் நாடி நிற்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சோழ மண்டலத்தின் கதி உன் கரங்களில் இருக்கிறது மகனே! ஆகவே, போதிசத்துவரின் முன்பாகப் பிரமாணம் செய்” என்று புத்தர்பிரான் சிலையைத் தன் வலக்கரத்தால் சுட்டிக் காட்டினார்.

சிலைக்கருகில் கரிகாலன் சென்று அந்தச் சிலையின் பாதத்திலிருந்த மலரில் ஒன்றை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, சூடாமணி விஹாரத் தலைவர் கூறியபடி பிரமாண வார்த்தைகளை உச்சரித்தான். பிறகு தாயை நோக்கித் திரும்பி, “தாயே! உன் மீது ஆணை. நான் யாரென்பதை உலகத்துக்கு அறிவிப்பதில்லை. இப்பொழுது சொல்; நான் யார்?” என்று கேட்டான்.

அவன் சிலையருகில் சென்றபோது எழுந்திருந்த மணிமேகலை, மீண்டும் பீடத்தில் உட்கார்ந்துகொண்டு, மகனை அருகில் உட்காரும்படிச் செய்தாள். தன் விருப்பப் படி உட்கார்ந்த மகனை நோக்கி, “மகனே! இராஜேந்திரன் சந்தேகித்தபடி உனக்கிருப்பது இராஜராஜ சோழதேவரின் கண்கள்! இதே கண்களைத்தான் உன் தந்தையும் பெற்றிருந்தார். அவர்தான் ராஜராஜ சோழதேவரின் மூத்த மகன்! இன்று இராஜேந்திர சோழதேவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் அமர்ந்து இந்தப் பேரரசை ஆளவேண்டியவர் உன் தந்தை. அவர் இல்லாததால் இப்பொழுது இராஜேந்திர சோழதேவன் பீடத்தில் அமர வேண்டியவன் நீ. இந்த உண்மையைச் சோழ நாட்டு விரோதிகள் சிலர் அறிவார்கள். சேரனுக்கு இந்த உண்மை எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆனால், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல சரியான அத்தாட்சிகள் அவர்களிடம் சிக்க வில்லை. இருப்பினும் உன்னைக் காரணமாக வைத்துச் சோழ நாட்டை இரண்டு பிளவாக்கிப் போர் கிளப்பச் சதி செய்து வருகின்றார். உண்மையாகப் பட்டத்துக்கு வர வேண்டிய நீ இருப்பதை மக்கள் அறிந்தால் சோழ மண்டலம் இரண்டுபட்டுவிடும். மகனே! இதைத்தான் உன் தந்தை தவிர்க்க முயன்றார். நீ அநாதையல்லடா மகனே! இராஜராஜ சோழ சக்கரவர்த்தியின் மூத்த பிள்ளையின் மகன். இந்தச் சோழ மண்டலத்தின் உண்மைச் சக்கர வர்த்தி!” என்று மணிமேகலை தடுமாறிய குரலில், திடுக்கிடும் அந்தக் கதையை மெள்ள மெள்ளச் சொல்லத் தொடங்கினாள்.

மகேந்திரதேவனின் தியாகத்தின் கதை அது. நாட்டு நன்மைக்காகத் தன் ஜீவியத்தையே மறைத்த ஒரு மாவீரனின் விசித்திரக் கதை. அதை மெள்ள மெள்ள விவரிக்கத் தொடங்கிய தன் தாயை, இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கரிகாலன். கதையை அவள் தொடங்கினாள்.

Previous articleMannan Magal Part 2 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here