Home Historical Novel Mannan Magal Part 2 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

137
0
Mannan Magal part 2 Ch 33 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 33 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 அவள் கதை

Mannan Magal Part 2 Ch 33 | Mannan Magal | TamilNovel.in

“மகனே கேள்! சோழ ராஜகுல வம்சத்தின் இந்த அற்புதக் கதையைக் கேள். வீரத்தாலும் தியாகத்தாலும் வளர்ந்த இந்தப் பேரரசின் சில தலைமுறைகளைப் பற்றிய கதையைச் சொல்கிறேன் – கவனமாகக் கேள். விஜயாலய சோழதேவரும் ஆதித்தரும் ஸ்தாபித்த சோழ ராஜ்யத்தைப் பாய் வேய்ந்து, ஈழத்தின் மீது படையெடுத்த பராந்தகர் பெரிதும் விஸ்தரித்தார். ஆனால், அவருக்குப் பிறந்த ராஜாதித்தனும் அவனுக்குப் பின்னால் வந்தவர்களும் ஆற்றல் படைத்தவர்களாயில்லாமையால் சோழர்கள் ராஜ்ய விளக்கு முப்பத்தாறு ஆண்டுகள் மங்கிக் கிடந்தது. அதன் திரியைத் தூண்டிவிடப் பிறந்தார் இராஜராஜ சோழதேவர். அவர் முடிசூடிய பின்பு சோழர் பேரரசு பெரிதும் விரிந்தது. புலிக்கொடி தட்சிண பாரதத்தில் எங்கும் பறந்தது. ஆனால், அவர் முடிசூடு முன்பாகவே நடந்தது ஒரு கதை. வாலிப வயதிலேயே பிறநாடு செல்ல ஆவல் படைத்த இராஜராஜ சோழதேவர் பலமுறை ஈழ நாட்டுக்குச் சென்றார். அப்படியொரு முறை சென்றபோது ஈழ மன்னர் பரம்பரையின் தூரக்கிளையொன்றில் பிறந்த மானவதியென்ற பேரழகியைக் கண்டு மையல் கொண்டார். பராந்தகர் காலத்துக்குப் பின்பே சோழர்களுடன் பெரும் பகை கொண்ட ஈழ மன்னர் குலத்தார், இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாது போகவே, ரகசியமாகவே இருவரும் மணம் புரிந்துகொண்டனர். சிலநாள் ரகசியமாக அந்தப் பெண்மணியுடன் ஈழத்திலேயே காலம் கழித்து வந்த இராஜராஜ சோழ தேவருக்கு, சோழ நாட்டிலிருந்து அவசர அழைப்பு வரவே, அவர் மானவதியை அந்த மரகதத் தீவில் விட்டுத் திரும்பினார்.

இங்கோ அவருக்கு அரியணை காத்திருந்தது. முடி சூடியபின் அரசாங்க அலுவல்கள் ஏராளமாக அவரை வளைத்துக்கொண்டன. அவற்றை ஒருவிதமாகத் தீர்த்துக் கட்டிய பின்பு, தமது மனையாளை அழைத்துவர ரகசியமாக ஈழமேகிய இராஜராஜர், அவள் தாம் மறைத்துவைத்த இடத்திலிருந்து மறைந்துவிட்டதை அறிந்தார். ஈழ மன்னர் குல வட்டாரங்களிலிருந்து, அவள் இறந்துவிட்டதாகவும் தெரிய வந்தது. மனம் உடைந்து நாடு திரும்பி வந்த இராஜ ராஜருக்கு, மந்திரிமார்கள் புதியதொரு விவாகத்தையும் செய்து வைத்தார்கள். புது மகிஷிக்கு இராஜேந்திர தேவர் பிறந்தார். இராஜேந்திர தேவருக்கு வாலிப வயதாகி, அவருக்கு இளவரசு பட்டம் சூட்ட இராஜராஜர் முனை கையில், அவருடைய முதல் மனைவி உயிரோடிருப்பதாகவும் அவளுக்கொரு குழந்தையும் இருப்பதாகவும், பட்டம் அதற்கே உரியதென்றும், ஈழத்து மன்னன் ஓலையனுப்பினான். சோழப் பேரரசரான இராஜராஜர் கலங்கினார். சோழ நாட்டைக் கேவலப்படுத்தவும், சமயம் பார்த்துத் தன் வசப்படுத்தவுமே, கர்ப்பமாயிருந்தமான வதியை ஈழ மன்னன் மறைத்து வைத்து, இளவரசுப் பட்ட சமயத்தில் தகராறைக் கிளப்புகிறானென்று அரசனும் முதன் மந்திரியும் உணர்ந்து கலங்கினர்.

இளவரசுப் பட்டம் கட்டவேண்டிய இராஜேந்திரரை என்ன செய்வதென்றும் திகைத்தார் இராஜராஜர். இப்படித் திகைத்துக் கொண்டிருந்த ஒரு நாளிரவு இராஜராஜருக்கு ஒரு ஈழத்தான் ரகசிய ஓலையொன்றைக் கொண்டு வந்தான். அதைப் படித்த இராஜராஜர் திடீரென ரகசியமாக யாருக்கும் சொல்லாமல் தொண்டி மாநகரை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு சிறு குடிசையில் இராஜராஜருடைய முதற் செல்வனுடன் மானவதி நின்றிருந்தாள். கிழிந்த உடையில் திருட்டுத்தனமாக ஈழத்துப் படகோட்டிகளின் உதவியால் சோழ நாடு வந்த அந்த அரச மகளின் கோலத்தைக் கண்ட இராஜராஜர் கண்ணீர் விட்டார். ‘மானவதி! நீ இறந்துவிட்டாயென்றல்லவா நினைத்தேன்’ என்று கதறினார்.

தியாகமே உருவான அவள் தேற்றினாள். ‘உங்கள் நாட்டை அபகரிக்க ஈழ ராஜகுலத்தார் செய்த சூழ்ச்சி அது. கர்ப்பமாயிருந்த என்னைச் சிறையிலடைத்து வைத்தார்கள். இந்தச் செல்வன் சிறிது வளர்ந்ததும் சோழ நாட்டுக்கு அரியணைக்கு உரிமை கொண்டாடினார்கள். ஆனால், நானும் இவனும் சிறையிலிருந்த சில நண்பர்கள் உதவியால் தப்பி இங்கு வந்தோம். இதோ உங்கள் செல்வன்’ என்று வாலிப வயதுடன் பக்கத்தில் நின்றிருந்த மைந்தனை இராஜராஜர் கையில் பிடித்துக் கொடுத்தாள் மானவதி!” என்று கதையைச் சொல்லிய மணிமேகலை, ஆயாசத்தால் பெருமூச்செறிந்தாள்.

அந்தக் கதையைக் கேட்கக் கேட்க ஆச்சரியத்தில் மூழ்கிய கரிகாலன், “பிறகு?” என்று கதையைச் சொல்லத் தாயை மேலும் முடுக்கினான்.

கதையைத் தொடர்ந்தாள் அவள்: “பிறகுதான் ஒரு மகா தியாகியின் கதை ஆரம்பமாகிறது. மகனே! எந்தக் காரணத்தைக் கொண்டும் சோழப் பேரரசின் விஸ்தரிப்பைத் தடுக்கக்கூடாது என்று மானவதி கூறிவிட்டாள். தானும் தனது மகனும் இறந்துவிட்டதாகப் புத்த பிக்ஷக்களைக் கொண்டு நாடெங்கும் வதந்தியையும் கிளப்பிவிட்டாள். இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் கட்டிக் கொள்ளட்டுமென்று திட்டமாகச் சொல்லி விட்டாள். தான் தனித்துக் கூரத்து மாளிகையில் அஞ்ஞாத வாசம் புகவும் சமமதித்தாள். அந்த அநீதியைச் செய்ய இராஜராஜருக்கு இஷ்டமில்லைதான். ஆனால் சோழப் பேரரசின் நலனை முன்னிட்டு அதற்கு இசைந்தார். மானவதி உலகத்தின் கண்களிலிருந்து மறைந்து வாழ்ந்தாள். அவள் செல்வன், அவர்தான் உன் தந்தை மகேந்திர தேவர், சோழர்கள் படையில் சாதாரண வீரனாகச் சேர்ந்தார். மகேந்திரதேவர் தமது பிறப்பு ரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாதென்று அவரிடமும் பிரமாணம் வாங்கிக்கொண்டு மானவதி சில வருஷங்களில் உலகை விட்டு மறைந்தாள்.

பிறகுதான் மானவதியின் செல்வரை நான் மணந்தேன். நான் பரம ஏழை. என்னை எப்படி அவ்வளவு பெரிய வீரர் மணக்க முற்பட்டாரென்று எனக்கே ஆச்சரியமாயிருந்தது. மணந்த நாங்களிருவரும் இணை பிரியாமல் வாழ்ந்தோம். அந்த இன்ப இணைப்பிலே நீ பிறந்தாய் கரிகாலா. கரிகாலன் என்ற பெயரை அவரே உனக்கு வைத்தார். பிறகு எந்த ஈழத்திலிருந்து வந்தாரோ அந்த ஈழத்துப் போரிலேயே உன் தந்தை மாண்டார்” என்று பேசிய மணிமேகலை உணர்ச்சிப் பெருக்கால், இரண்டு துளிக் கண்ணீரை விட்டுச் சிறிது கதையை நிறுத்தினாள். சற்று நிதானித்துவிட்டு மறுபடியும் சொன்னாள்: “ஈழத்துப் போர்ப் பாசறையில் மரணப் படுக்கையிலிருந்த அவர், அப்பொழுது உதவிப் படைத் தலைவனாயிருந்த அரையன் ராஜராஜனையும், போரில் காயமுற்றோருக்கு உதவப் போயிருந்த இரண்டு புத்த பிக்ஷுக்களையும் தம்மிடம் வரவழைத்தார். வரவழைத்துத் தம் வாழ்க்கை வரலாற்றைக் கூறினார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்று பிரமாணமும் வாங்கிக்கொண்டார். அந்தப் பிரமாணம் வாங்கும் சமயத்தில் படையிலிருந்த பிரதாபருத்திரனும் உள்ளே நுழைந்தான். ஆகவே அவனும் பிரமாணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்படிப் பிரமாணம் செய்தபின் எப்படியாவது தன் மகனைப் பெரிய வீரனாக வளர்க்கும் படி அரையன் ராஜராஜனிடம் வேண்டிக்கொண்டு, நான் உன்னுடன் சூடாமணி விஹாரத்துக்கு அனுப்பி வைத்தேனே, அந்தப் பச்சைக்கல் மோதிரத்தையும் கொடுத்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். அந்தப் பச்சைக்கல் மோதிரம் இராஜராஜர் மானவதிக்குக் கொடுத்து, மானவதி தேவி உன் தந்தைக்கு அளித்தது. உன் தந்தை அரசகுல அடை யாளமாக உனக்கு வைத்துச் சென்ற செல்வம் அது.”

மணிமேகலை மீண்டும் கதையை நிறுத்தினாள். துக்கத்தினால் ஏற்பட்ட பெருமூச்சொன்றும் அவளிடமிருந்து வெளிவந்தது. அதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்ணீரை விடாத கரிகாலன் கண்களிலும் நீர் துளிர்த்தது. அவன் கண்களைத் துடைத்துவிட்டுச் சொன்னாள் அவள்: “மகனே! அவர் மரணத்திற்குச் சில வருஷங்களுக்கு முன்புதான் என்னிடம் உண்மையைச் சொன்னார், ‘உங்களுக்குரிய இடத்தில் இராஜேந்திரன் ஏன் ஆள வேண்டும்?’ என்று மண்ணாசையால் கேட்டேன். பெண்ணே! பெரும் தியாகத்தால்தான் பேரரசுகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. அரசாள்வதைவிடத் தியாகம் பெரிது. நான் ஆண்டாலென்ன? என் தம்பி ஆண்டாலென்ன? சோழ மண்டல விஸ்தரிப்புத்தான் முக்கியம். இதை மறக்காதே!’ என்று பதில் சொன்னார் உன் தந்தை. அவர் பேசும் உறுதியை நீ கண்டதில்லையடா என் கண்ணே! ஒருமுறை அவர் சொல்வதைக் கேட்டால், யாரும் அவரை மறுத்துப் பேச முடியாது. எல்லாம் ராஜ தோரணைதான். அவர் உறுதியை நானும் கடைப் பிடித்தேன். உன்னை யாரென்று சொல்வதில்லையென்று நீ பிறந்த உடனேயே நான் செய்து கொடுத்த பிரமாணத்தை இன்றளவும் காப்பாற்றிவிட்டேன். நீ என்னிட மிருந்தால் உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து, ஐந்து வயதில் அரையன் ராஜராஜன் மூலம் உன்னைச் சூடாமணி விஹாரத்துக்கு அனுப்பினேன்.

ஆனால் வைக்கோலால் மூடி நெருப்பை அணைக்க முடியுமா? நீ இருப்பது மெள்ள எதிரிகளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. சேரனும் பாண்டியனும் ஏதோ சந்தேகப்படுவதாகச் சூடாமணி விஹாரத் தலைவர் அறிவிக்கிறார் மகனே! வேங்கியில் நீ கையாண்ட தந்திரங்கள், சக்கரக் கோட்டத்திலும் இதர இடங்களிலும் நீ காட்டியிருக்கும் இணையற்ற வீரம், உன் புகழை உச்சநிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. இனி.” என்று விசனத்தால் அழுதாள் மணிமேகலை.

அடுத்த விநாடி அவள் உடலே நடுங்கும்படியான வார்த்தைகளைச் சொன்னார் சூடாமணி விஹாரத் தலைவர். “இனி இவன் இந்நாட்டிலிருக்கக் கூடாது” என்று கடும் சொற்களை மிக நிதானமாக உதிர்த்தார்.

கரிகாலன் தன் கோப விழிகளை அவர்மீது நாட்டி, “தந்தையே! என் நாட்டில் நான் இருக்கக்கூடாதா?” என்று உணர்ச்சி மிகுதியால் சீறினான்.

சூடாமணி விஹாரத் தலைவரின் பரிதாப விழிகள் அவனையும் மணிமேகலையையும் மாறி மாறிப் பார்த்தன. பிறகு கருணை பொங்கி வழியும் குரலில் அவர் சொன்னார்: “கரிகாலா! உன் பிறப்பு மர்மத்தை இனி அதிக நாள் மறைக்க முடியாது. உண்மை வெளிப் பட்டாலோ உள்நாட்டுச் சண்டை ஏற்படும். பிறகு சோழ சாம்ராஜ்யத்தில் நாசம். இவற்றுக்காகவா உன் தந்தை மகேந்திரவர்மன் முடியுரிமை துறந்தான்? இதற்கா உன் தந்தையின் தாய், அந்தத் தியாகி, வாழ்நாளை அஞ்ஞாத வாசத்தில் கழித்தாள்? நன்றாகச் சிந்தித்துப் பார். இரு தலைமுறைகளின் தியாகத்தைக் கரிகாலன் உடைத்துச் சோழப் பேரரசை நாசம் செய்தான் என்ற அபகீர்த்தி உனக்கு வேண்டுமா என்பதை யோசித்துப் பார்.”

சூடாமணி விஹாரத் தலைவரின் வார்த்தைகளுக்கு நீண்ட நேரம் பதில் சொல்லாத கரிகாலன், தன் தாயிடமிருந்து எழுந்து, நீண்ட நேரம் புத்தர்பிரானை நோக்கிக் கொண்டே நின்றான். பிறகு மணிமேகலையைப் பார்த்து, “அம்மா! உன் எண்ணமும் இதுதானா?” என்று கேட்டான்.

ஆம் மகனே! வேறு வழியில்லை” என்றாள் அவள், வறண்ட குரலில்.

கரிகாலனின் கண்கள் நிதானமாகச் சூடாமணி விஹாரத் தலைவரை ஆராய்ந்தன. கடைசியாக வந்த சொற்களில் உறுதி நிரம்பி நின்றது. “ஆகட்டும் தந்தையே! உங்கள் விருப்பப்படி பிறந்த மண்ணை விட்டுப் போகிறேன். ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்றான் கரிகாலன்.

“என்ன நிபந்தனைகள் மகனே?” என்று கேட்டார். சூடாமணி விஹாரத் தலைவர்.

“ஒன்று; என் தாய் என்னுடன் வந்துவிட வேண்டும்.”

“சரி.”
“இன்னொன்று, நான் நிரஞ்சனாதேவிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.”

“என்ன வாக்குறுதி கரிகாலா?”

“இரண்டு வாக்குறுதிகள் கொடுத்தேன் வேங்கி நாட்டு மன்னன் மகளுக்கு. ஒன்று, அவள் தம்பியை வீரனாக்கு கிறேன் என்று சொன்னேன். வீரனாக்கிவிட்டேன்! அரையன் ராஜராஜனுடைய மிகச்சிறந்த உபதலைவர்களில் இப்பொழுது அவனும் ஒருவன். வேங்கி நாட்டை இராஜராஜ நரேந்திரனிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறியிருக்கிறேன். அது இன்னமும் நடக்கவில்லை.”

“எப்பொழுது நடக்கும்?”

“இன்னும் இரண்டு மாதங்களில். என் திட்டப்படி எல்லாம் நடந்தால், அரையன் ராஜராஜன் இந்த மாதமே கங்கைக் கரையில் புலிக்கொடியை நாட்டுவார்; அடுத்த மாத ஆரம்பத்தில் அவர் கோதாவரி நதி தீரத்துக்கு வருவார். அங்கு இராஜேந்திர சோழதேவர் அவரைச் சந்திக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன்”

“எதற்காக இந்த ஏற்பாடு?”

“ஜெயசிம்ம சாளுக்கியனை முறியடிக்க. இராஜேந்திர சோழதேவர் படையின் ஒரு பகுதியுடன் கோதாவரி நதி தீரத்தில் அரையன் ராஜராஜனைச் சந்திப்பார். அவர் புறப்பட்ட சில நாள்களுக்கெல்லாம், நான் இங்கிருந்து படையின் மற்றொரு பிரிவுடன் புறப்பட்டுக் கிருஷ்ணா நதி தீரம் செல்வேன்.”

இதைக் கேட்ட சூடாமணி விஹாரத் தலைவரின் கண்களில் போர் வெறி தாண்டவமாடியது. “புரிந்தது கரிகாலா, புரிந்தது!” என்று, அங்கிருந்த சூழ்நிலையையும் அதுவரை மணிமேகலை சொன்ன சோகக் கதையையும் மறந்து ஆனந்தத்துடன் கூறினார்.

பீடத்திலிருந்து மணிமேகலை எழுந்து, அவரை ஆச்சரியத்துடன் நோக்கி, “எது புரிந்தது ஸ்வாமி?” என்று வினவினாள்.

“மகளே! நீ பாக்கியம் செய்தவள். மகா வீரனும் யுத்த தந்திரத்தில் இணையற்றவனுமான மகனைப் பெற்றிருக் கிறாய். அவன் தந்திரம் புரியவில்லையா உனக்கு! இராஜேந்திர சோழதேவன், கங்கையிலிருந்து திரும்பி வரும் தன் தளபதியைச் சந்திக்கக் கோதாவரிக் கரைக்குச் செல்வார். அவர்களை எதிர்கொள்ளும் பாவனையில் உன் மகன் ஒரு படையுடன் கிருஷ்ணா நதிக் கரைக்குச் செல்வான். வேங்கி நாடு கோதாவரிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடையிலிருக்கிறதல்லவா?” என்று குறிப்பிட்டு மணிமேகலையை உற்றுப் பார்த்தார் சூடாமணி விஹாரத் தலைவர்.

மணிமேகலையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. “புரிந்தது ஸ்வாமி! இராஜேந்திர சோழதேவர் படைக்கும் என் மகன் படைக்கும் இடையே வேங்கி நாடு சிக்கிக்கொள்ளும். ஆகவே இனி அதற்கும் சாளுக்கியர் களிடமிருந்து விடுதலை” என்றாள் மணிமேகலை, பெருமையும் ஆனந்தமும் கலந்த பார்வையைத் தன் மகன்மீது நாட்டிக்கொண்டே.
தன்னைப் பற்றித் தாயும் சூடாமணி விஹாரத் தலைவரும் பாடிய புகழ்ச்சிப் பாடல்களை விரும்பாத கரிகாலன், “அது கிடக்கட்டும் தந்தையே! இரண்டு நிபந்தனைகளும் தங்களுக்குச் சம்மதந்தானே?” என்று விசாரித்தான்.

சூடாமணி விஹாரத் தலைவர் பெருமையால் நன்றாக விகசித்த தமது கண்களைக் கரிகாலனை நோக்கி நாட்டினார். இரண்டும் சம்மதந்தான் கரிகாலா, வேங்கிப் போருக்குப் பிறகே நாட்டை விட்டுச் செல்லலாம். இராஜேந்திரன் கடல் கடந்து கடாரத் தீவின் மீதும் படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். அந்தப் படையெடுப் புக்கு உன்னைத் தளபதியாக்க அரையன் ராஜராஜனுக்கு எழுதி நானே ஏற்பாடு செய்கிறேன். சோழ சாம்ராஜ்யம் உன்னால் கடல் கடந்தும் விரியட்டும் மகனே! உங்கள் குலம் செய்த தவப்பயன் நீ. உன் தந்தை மகேந்திர தேவன் தியாகத்துக்கு உன் தியாகம் சிறிதும் குறைந்ததல்ல” என்று கூறிய சூடாமணி விஹாரத் தலைவர், மணிமேகலையை நோக்கித் திரும்பி, “மணிமேகலை! உன் மணி வயிறு பாக்கியம் செய்தது. சரித்திரத்தில் இணையற்ற தியாகத்தைச் செய்யும் தனயனைப் பெற்றாய். அரசர்கள் உலகத்தில் பல பேருண்டு! தியாகிகள் சிலபேர்தான். சரித்திரத்தில் இடம் பெற்றுப் பிரகாசிக்கும் மன்னர்கள் பலருண்டு. நாட்டுக்குச் சேவை செய்து மக்கள் கண்ணில் படாது மறைந்துபோகும் மகான்கள் சிலர்தானுண்டு. இராஜேந்திரனைப் போல் உன் மகன் சரித்திரத்தில் இடம் பெறாதிருக்கலாம். ஆனால் புத்தர் பிரான் அருளுக்கு அவன் பாத்திரமானவன். அந்த உலகத்தில் பூதப் பொருள்கள் எதற்கு?” என்று வாழ்த்தினார்.

மணிமேகலையும் கரிகாலனும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டனர். அவ்விருவரும் ஒருவரையொருவர் விழுங்கிவிடுவதைப் போல் பார்த்துக் கொண்டு நிற்பதைச் சூடாமணி விஹாரத் தலைவர் கவனித்துவிட்டு, போதிசத்துவரை நோக்கினார். தாயும் தனயனுங்கூடப் போதி சத்துவரின் அருள் விழிகளை நோக்கினார்கள். புத்தர்பிரானின் மந்தகாசம் அவர்கள் உள்ளங்களுக்குச் சாந்தியளித்தது. அவர் அருகேயிருந்த தீபமும் அவர்கள் தியாக வாழ்வுக்கு அமர ஒளியிட்டுச் சுடர்விட்டுப் பிரகாசித்தது.

Previous articleMannan Magal Part 2 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here