Home Historical Novel Mannan Magal Part 2 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

108
0
Mannan Magal part 2 Ch 34 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 34 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 இமைப்பொழுதில் மறைந்த இடைக்காலம்

Mannan Magal Part 2 Ch 34 | Mannan Magal | TamilNovel.in

நிலவரைக் கூடத்தின் போதிசத்துவருக்கு முன்பாக முதன்முதலாகத் தன் தாயை இன்னாரென்று அறிந்ததால் உண்டான மகிழ்ச்சி வெள்ளத்தின் காரணமாக, அடுத்த ஒன்றரை மாத காலம் ஓடியதே தெரியவில்லை கரிகாலனுக்கு. கரிகாலன் மனம் எத்தனை மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததோ அத்தனை துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது, சோழ மண்டலாதிபதியான இராஜேந்திரன் மனம். கரிகாலன் இன்னாரென்று அறியச் சக்கரவர்த்தி செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. அரையன் ராஜராஜன் கரிகாலனைப் பற்றி எழுதிய ஓலைகளிலெல்லாம் ராஜ முத்திரையைப் பொறித்ததாலும், தஞ்சைத் துறவியார் மணிமேகலையைத் தனிமையில் கூரத்தில் சந்தித்துப் பேசியதாலும், அவளுக்கும் கரிகாலனுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பதை ஊகித்துக் கொண்ட இராஜேந்திரன், அந்த மர்மத்தை உடைக்க மணிமேகலையைக் காஞ்சி மாநகரத்துக்கு வரவழைத்தது பெரும் வியர்த்தமாகப் போய்விட்டது. முத்தாணி மண்டபத்தில் கரிகாலனைத் தனக்குத் தெரியாதென்று ஒரேயடியாகச் சாதித்துவிட்ட மணிமேகலை, மகனைச் சந்தித்த இரண்டாவது நாளே கூரத்துக்குப் போய்விட்டாளாதலால் அவளை உபயோகித்து எந்தவித ரகசியத்தையும் தெரிந்துகொள்ள ஏதுமில்லாமல் போய்விட்டது சோழப் பேரரசனுக்கு.

அடுத்தபடியாகத் தஞ்சைத் துறவியாரிடமிருந்து உண்மையைக் கறக்கலாமென்று இராஜேந்திரன் செய்த முயற்சியும் வீணாகவே, உண்மை அடியோடு தெரியாமல் அவன் பெரும் குழப்பத்துக்கு உள்ளானான். சோழ ராவம்சத்தின் ஏதோ ஒரு கிளைக்குத் தன்னால், பெரும் அநீதி ஏற்பட்டிருக்கிறதென்பதை இராஜேந்திரன் உணர்ந்து கொண்டானேயொழிய, அது என்ன அநீதி, அந்த அநீதியை இழைத்தவர் யார் என்ற விவரங்கள் அறியாமல் துன்பக் கடலில் ஆழ்ந்தான் இராஜேந்திரன். உண்மையைக் கரிகாலனிடமிருந்து அறிய, அவனைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டு, பல கோணங்களில் அவன் வாழ்வை ஆராய்ந்து எண்ணற்ற கேள்விகளையும் கேட்ட சோழப் பேரரசன், கரிகாலனுடைய பேச்சுத் திறமையை வியக்க முடிந்ததே தவிர, அவன் வாழ்வு ரகசியத்தை அறிய முடியவில்லை.

இராஜேந்திரன் எதைக் கேட்டாலும் ஆச்சரியரேகையே படர்ந்து நின்றது, கரிகாலன் முகத்தில் மன்னர் தம் தனியறையில் அவனைத் தன்னந்தனியே வரவழைத்து, “கரிகாலா! நீ சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. உனது பிறப்பைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று வினவிய போது, “இருக்கலாம் மன்னவா! ஆனால் பெரிய ராஜ வம்சங்களில் கிளைகள் பல உண்டு. அவற்றுக்கு உபகிளைகளும் உண்டு. அதில் எந்தக் கிளையோ நான்? எந்தக் கிளையாயிருந்தாலென்ன? மன்னரான தாங்கள் மக்களுக்குச் செய்யும் சேவையில், சோழப் பேரரசை விஸ்தரிக்கும் பணியில் நானும் ஈடுபட்டிருக்கிறேன். இதுவே மனத்துக்குச் சாந்தியளிக்கக் கூடியதல்லவா? மற்றதைப் பற்றி நாம் கவலைப்படுவானேன்? ஆனால், ஒரு கவலை மட்டும் எனக்குண்டு” என்றான்.

“எதைப் பற்றிக் கவலை?”

“வேங்கியைப் பற்றி.”

“வேங்கியைப் பற்றி என்ன கரிகாலா?” என்று வினவினான் இராஜேந்திரன்.

“வேங்கி நாட்டில் நானிருக்கையில் நிரஞ்சனாதேவிக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன். அதுவும் சோழ நாட்டின் நன்மையை முன்னிட்டு…” என்று கரிகாலன் பேச்சைத் துவக்கினான்.

“என்ன வாக்குறுதி?” என்று சோழ மண்டலாதிபதி விசாரித்தான்.

“தங்கள் சகோதரி குந்தவையின் மகன் ராஜராஜ நரேந்திரனை வீரனாக்குவதாக வாக்களித்தேன். ஜெயசிம்ம சாளுக்கியன் ராஜராஜ நரேந்திரனைப் பலவீனனாக்கி, வேங்கியைத் தன் கைவசப்படுத்தி, தன் மருமகன் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை மன்னனாக்கத் திட்ட மிட்டான். அதற்கு நானே இடம் கொடுத்தேன். வேங்கியி லிருந்து விமலாதித்தன் மகளையும் ராஜராஜ நரேந்திர னையும் அப்புறப்படுத்தினேன்; எதற்கென்று மன்னருக்குத் தெரிந்திருக்கும்.”

“தெரியாது, சொல்.”

“தங்கள் கொடி புலிக்கொடி அல்லவா?”

“ஆம்.”
“புலி பதுங்கித்தானே பாயும்?”

“ஆம்.”

“பதுங்கட்டும் என்றுதான் நிரஞ்சனாதேவியைத் தங்களிடமும், ராஜராஜ நரேந்திரனை அரையன் ராஜராஜ னிடமும் ஒப்படைத்தேன். இப்பொழுது ராஜராஜ நரேந்திரன் பயங்கொள்ளியல்ல! பல போர்களைக் கண்ட மாவீரன். அவன் கைகள் வலுவிழந்த கைகளல்ல, வலுவுள்ள கரங்கள். தங்கள் மகள் அங்கம்மா தேவிக்குப் பொருத்தமான கணவன்.”

இதைக் கேட்ட இராஜேந்திர சோழதேவன் தீர்க்கா லோசனையில் இறங்கினான். ஆனால், தொடர்ந்து பேசிய கரிகாலன், “யோசிப்பதற்கு எதுவும் இல்லை மன்னவா! யோசிக்க வேண்டியதையெல்லாம் நானே யோசித்து விட்டேன். முடிவு செய்ய வேண்டியதையெல்லாம் நானே முடிவு செய்துவிட்டேன். என் திட்டங்களுக்குத் தங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் புலி பதுங்கியாகி விட்டது. இனிப் பாயும் நாள் வந்துவிட்டது. தங்களுக்கு இன்னும் இரண்டொரு நாளைக்குள் அரையன் ராஜராஜனிடமிருந்து ஓலை வரும். தாங்கள் கோதாவரிக் கரையில் அவரைச் சந்திக்க நேரிடும். நான், தாங்கள் கிளம்பிய இரண்டாம் நாள் புறப்பட்டுக் கிருஷ்ணா நதியை ஒரு வாரத்தில் அடைவேன். தாங்கள் கோதாவரியிலிருந்து தங்கள் மருமகனுடன் திரும்புவதற்குள் வேங்கி நாட்டு அரியணையைக் காலியாக்கி வைத்திருப்பேன். தங்கள் கையாலேயே தங்கள் மருமகனுக்கு முடிசூட்டலாம்” என்று விளக்கினான்.

சோழப் பேரரசனின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. இத்தனை முன் யோசனையும், போர்த்திட்டம் வகுக்கும் நுண்ணறிவும், தன் தந்தைக்கும் தனக்கும் மட்டுமே உண்டென்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்த இராஜேந்திரனுக்கு, ஊர் பேர் தெரியாத அந்த வாலிபனின் பேச்சும் போக்கும் பெரும் விசித்திரமாயிருந்தது. இவன் என் தந்தையின் நெருங்கிய உறவினன்! சந்தேகமில்லை’ என்று பலமுறை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆனால் என்ன உறவு என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தான்.

இந்தச் சம்பாஷணை நடந்த தினத்துக்கு அடுத்த சில நாள்கள், இராஜேந்திர தேவன் இது சம்பந்தமாக வந்தியத் தேவரைக் கலந்து பேசினான். கரிகாலனுக்குப் பெரிய விருந்துகள் வைத்தான். பட்டணப் பிரவேசத் தினத்தன்று போடத் திட்டமிட்டு, கரிகாலன் கண்களைக் கண்ட குழப்பத்தில் போடாமல் விட்டுப்போன செங்கதிர் மாலையை, மந்திரிப் பிரதானிகள் அறிய அவன் கழுத்தில் போட்டான். எந்த மாலையைப் பெறுவதற்காக இராஜேந்திரன் சேரனுடன் பெரும் போரை நடத்தினானோ, அதே செங்கதிர் மாலையை மன்னன் கரிகாலனுக்குப் பரிசாக அளிப்பதைப் பார்த்துப் பேரமைச்சர்கூட வியப்புக்கு உள்ளாகி, ‘இவனுக்கும் அரச குலத்துக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது’ என்று தீர்மானித் தாரேயொழிய, அது என்ன சம்பந்தம் என்பதை அறிய இயலாதவரானார்.

இந்தச் சம்பவங்கள் கரிகாலனுடன் ஒரே அரண்மனை யில் இருந்த நிரஞ்சனாதேவிக்கும் பெரும் ஆச்சரியத்தை விளைவித்தாலும், அவள் கரிகாலனைச் சந்தித்த சமயங்களில் கூட அவனை ஏறெடுத்துப் பார்க்காமலேயே போய்க் கொண்டிருந்தாள். தன் சகோதரனையும் தன்னையும் சோழப் பேரரசின் நன்மைக்காகக் கரிகாலன் நாட்டை விட்டுக் கடத்திவிட்டான் என்ற நினைப்பில், அவனுடன் தீரா விரோதம் கொண்டிருந்த வேங்கி நாட்டு மன்னன் மகளுக்கு, அவனைப்பற்றிக் காஞ்சி மாநகரில் நடந்த கொண்டாட்டமெதுவும் பெரும் எரிச்சலையே தந்தது. முதன் முதலாக வேங்கித் தலைவரின் வசந்த மண்டபத்தில் சந்தித்த நாளன்று, அவன் மீது கொழுந்துவிட்ட காதல், அப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தாலும், அந்தப் பொறாமையென்னும் சருகுகளை விட்டு மூடப் பார்த்தாள் அவள். ஆனால் சருகுகள் பற்றத்தான் செய்தன. எரியும் வீட்டை அலட்சியம் செய்யும் வீட்டுக்காரனைப் போல பெண்ணுக்குள் இயற்கையான பிடிவாதத்தால் தன் உடல் பஸ்மீகரமானதைக் கூடக் கவனியாமல், கோபா வேசத்தில் மூழ்கியிருந்தாள் நிரஞ்சனாதேவி.

அவள் மெள்ள மெள்ள வாடுவதைக் கண்ட வந்தியத் தேவர் மட்டும், காரணத்தை நன்றாக அறிந்திருந்தாலும், ஏதும் செய்ய சக்தியற்றவரானார். எதையும் நொடிப் பொழுதில் அறிந்து கொள்ளக்கூடிய வந்தியத்தேவர், கரிகாலன் மீது அவளுக்கிருந்த அபாரமான காதலை உணர்ந்தே இருந்தார். கங்கைப் படையெடுப்புக்குச் சாளுக்கியர் எல்லையிலிருந்து படைகள் புறப்பட்ட நாளன்று, கரிகாலனுக்குத் திலகமிடத் தயங்கியதை அன்றும் நினைத்துப் பார்த்த வந்தியத்தேவர், “பெண் களுக்கு ஒருவனிடம் காதல் பிறந்துவிட்டால், அவர்களும் துன்பப்பட்டு, பிறரையும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டுமா?” என்று தமக்குத்தாமே சொல்லி வியந்து கொண்டிருந்தார். என்ன வியந்தும் கரிகாலனுக்கும் நிரஞ்சனாதேவிக்கு மிடையிலிருந்த பெரும் சுவரை இடிக்க அவர் என்ன முயன்றும், பலன் சிறிதும் ஏற்படாது போயிற்று! ஆனால் அந்தச் சுவர் ஒருநாள் கண்டிப்பாய் இடியுமென்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்டிருந்த வந்தியத்தேவர், அந்த இடைக்கால ஊடலை வேடிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த ஊடலைத் தவிர்க்க வந்தவன் போல், அரையன் ராஜராஜனிடமிருந்து ஒரு தூதுவன் ஓலையுடன் வந்தான்.

ஓலையில் இரண்டே வரிகள் எழுதியிருந்தான் அரையன் ராஜராஜன். “மஹிபாலன் முறியடிக்கப்பட்டான். கங்கைக்கரையில் புலிக்கொடி நாட்டப்பட்டது. கங்கையின் புனித நீரை ஆயிரம் குடங்களில் எடுத்து வருகிறேன். மன்னர் பிரானை, கங்கை கொண்ட சோழ வேந்தனை, புண்ணிய நதியான கோதாவரி தீரத்தில் சந்திக்கிறேன்.” இவ்வளவுதானிருந்தன ஓலையில்.

முத்தாணி மண்டபத்திலே, சிற்றரசர்களும் தளபதிகளும் மந்திரிகளும் நிறைந்திருந்த மாபெரும் சபையிலே, ஓலையைப் பேரமைச்சர் படித்தார். செய்தியின் மகிழ்ச்சி தந்த அதிர்ச்சியால் சற்று நேரம் சபையில் மௌனமே நிலவியது. பெரும் சாதனையைத் தந்த ஆண்டவனை நோக்குவதுபோல் உயரக் கண்களைத் தூக்கினான் சோழச் சக்கரவர்த்தி. அவன் வெற்றிக்கு ஆசி கூறுவது போல் ஆலய மணிகள் ஒலித்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை முன்னிட்டு, காஞ்சி மாநகரத்திலே பேரிகைகள் பிரமாதமாகச் சப்தித்தன.

அடுத்த இரண்டு நாள்களில் படைகள் அணிவகுத்தன. பேரிகைகள் முழங்க, வாத்தியங்கள் கோஷிக்கத் தன் படைத்தலைவனைச் சந்திக்கக் கோதாவரி தீரத்துக்குப் பயணமானான் இராஜேந்திர சோழதேவன். அதற்கடுத்த இரண்டு நாள்களில், மற்றொரு படைப்பிரிவுடன் வேங்கியை நோக்கிச் சென்ற கரிகாலன், தன்னுடன் நிரஞ்சனாதேவியையும் அழைத்துச் சென்றான். முதலில் நிரஞ்சனாதேவி புறப்பட மறுத்தாள். ஆனால், அந்தப் புரத்தில் அரசர் ஆணைப்படி அவளைச் சந்தித்த கரிகாலன், “தேவி! புறப்படுவது தங்களிஷ்டமுமல்ல; என் இஷ்டமுமல்ல; சோழப் பேரரசர் ஆணை. நாட்டின் மிகப் பிரசித்தி பெற்ற சரித்திரக் கட்டத்தில் நாம் நிற்கிறோம். புறப்படுங்கள்” என்று கட்டளையிட்டான்.

வேண்டா வெறுப்பாகப் புறப்பட்ட நிரஞ்சனா தேவிக்கு நாளாக ஆக, படைகள் செல்லும் திக்கைக் கவனிக்கக் கவனிக்க, கரிகாலனின் எண்ணம் என்ன என்பது மெள்ள மெள்ள விளங்கத் தொடங்கியது. அவளுக்கு மட்டுமல்ல, ஜெயசிம்ம சாளுக்கியனுக்கும், விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனுக்கும் கூட நன்றாக விளங்கிவிடவே, கரிகாலன் எதிர்பார்த்தபடி வேங்கிப் போர் மும்முரமாக நடைபெறவில்லை.

“சோழர் படைகளைக் கண்டதும், விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் ஓடிவிட்டான்” என்று சரித்திரமே சான்று கூறுகிறது. பெரும் போர்களைக் கண்டவனும் மிகத் தந்திர சாலியுமான ஜெயசிம்ம சாளுக்கியன், இராஜேந்திரன் படைகளுக்கும், கரிகாலன் படைகளுக்குமிடையே தன் படைகளைக் காவு கொடுக்க இஷ்டமில்லாமல், கரிகாலன் வருமுன்பாகப் படையின் பெரும் பகுதியை மேலைச் சாளுக்கிய எல்லைக்கு அழைத்துச் சென்றுவிட்டதால் வேங்கிக் கோட்டையின் கதவுகள் திறந்தே கிடந்தன!

ஒரு வருஷ காலத்துக்கு முன்பு, யாருமற்ற அநாதையாக, சாளுக்கிய வீரர்களால் திருடனாக மதித்துத் துரத்தப்பட்ட அதே நகரத்தில், சோழர்களின் மாபெரும் படைத்தலைவனாக தன் வரவை உத்தேசித்துப் பேரிகைகள் முழங்கப் படைகளுடனும் நிரஞ்சனா தேவியுடனும் நுழைந்தான் கரிகாலன். அடுத்த சில தினங்களில், இராஜேந்திரனது படையும் வேங்கிக்கு வரவே, ஜனசமுத் திரத்தில் மூழ்கிக் கிடந்தது வேங்கியின் தலைநகர். நிரஞ்சனாதேவியின் உள்ளத்தில் மகிழ்ச்சி மட்டுமல்ல, குற்றம் செய்துவிட்ட ஓர் உறுத்தலும் இருந்துகொண்டிருந்தது. பல நாள்களுக்கு முன்பு அநாதையாகச் சந்தித்த கரிகாலனை, அதே வசந்த மண்டபத்தின் அறையில் மீண்டும் சந்தித்த அவள் பேச நா எழாமல் தவித்தாள். பல நாள்களுக்கு முன்பு எந்தப் பஞ்சணையில் அவளைப் பார்த்துக் கரிகாலன் மலைத்து மனத்தைப் பறிகொடுத்தானோ, அதே பஞ்சணையில் அவளை மீண்டும் பார்த்தான் கரிகாலன். அவர்களிருவர் உள்ளங்களும் பின் நோக்கிப் பாய்ந்தன. இடைக்காலம் இமைப்பொழுதில் எங்கோ மறைந்தது. அன்றும் அந்தப் பழைய மையிருட்டுத் தான். ஆனால் அதில் வாழ்வின் விளக்கொளியும் சற்றே பளிச்சிட்டது.

“அரசகுமாரி!” என்று மெல்ல அழைத்தாள் அவன்.

ஆவல் மிதமிஞ்சிப் பிரவாகித்த அரசகுமாரியின் அழகிய விழிகள், அவனை நோக்கி எழுந்தன.

Previous articleMannan Magal Part 2 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 35 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here