Home Historical Novel Mannan Magal Part 2 Ch 35 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 35 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

89
0
Mannan Magal part 2 Ch 35 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 35 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 35 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 35 மன்னர் கட்டளை

Mannan Magal Part 2 Ch 35 | Mannan Magal | TamilNovel.in

அஞ்சாமல் எவரையும் ஏறெடுத்து நோக்கும் திறன் வாய்ந்த நிரஞ்சனாதேவியின் அஞ்சன விழிகள், அன்று அச்சத்தால் சற்றே சலித்தன. அச்சத்துடன் ஆவலும் கலந்து கொள்ளவே, பயமும் நாணமும் கலந்த பார்வையொன்றை அவன்மீது படரவிட்டாள் மன்னன் மகள். அப்படிப் படர விட்டதால் உள்ளத்தே எழுந்த பலதரப்பட்ட எண்ணங்கள் அந்தப் பாவையின் இதயத்தில் எத்தனை எத்தனையோ உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டதால், அவள் பூவுடல் பஞ்சணையில் ஒருமுறை லேசாக அசைந்தது. கரிகாலன் அதே வசந்த மண்டபத்தில் தன்னைச் சந்தித்த ஒவ்வொரு சமயத்திலும் அவனுடைய சொரூபம் எந்தெந்த விதமாக மாறுபட்டு எந்த நிலையில் அன்று அவன் தன்முன் நிற்கிறானென்பதைச் சிந்தித்துப் பார்த்தாள் அவள். முதலில் சாளுக்கிய வீரர்களுக்குப் பயந்து தஞ்சமென்று ஓடிவந்த கரிகாலன்; பிறகு ‘வஞ்சகன் நீ’ என்று தன்னா லேயே வெறுக்கப்பட்டு விரட்டப்பட்ட கரிகாலன்; கடைசி யாக சோழ நாட்டுக்காக வடநாட்டிலே வெஞ்சமர் புரிந்து பெரும் புகழ் படைத்த இராஜேந்திர தேவனிடம் அரச மரியாதைகளைப் பெற்று, சக்கரவர்த்திக்குச் சமானமாக மக்களால் மதிக்கப்படும் மாவீரனான கரிகாலன் – ஆகிய இந்த மூன்றுவிதக் கரிகாலன்களைப் பற்றி எண்ணிப் பார்த்த அந்த ஏந்திழை, முயற்சியுள்ள ஒரு மனிதன் ஒரு வருஷ காலத்திற்குள் எந்தப் பதவியிலிருந்து எந்தப் பதவி வரை எட்டலாம் என்று உள்ளுக்குள்ளேயே பெரிதும் வியந்து கொண்டாள். சில சமயங்களில் தனக்கு உற்ற காதலனாகவும், பல சமயங்களில் ஜெயசிம்ம சாளுக் கியனின் ஒற்றனாகவும் காட்சியளித்தாலும், உண்மையில் தனக்கும் தன் தம்பிக்கும் வாழ்வளிப்பது ஒன்றையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்தானென்பதையும், அதைத் தான் புரிந்துகொள்ள முடியாமல் சந்தேகப் பேய்க்கு அடிமையான தன் பேதைமையையும் நினைத்துப் பார்த்த நிரஞ்சனாதேவி, உள்ளே எழுந்த வருத்தத்துக்கு அடையாளமாகப் பெருமூச்சொன்றும் விட்டாள்.

உள்ள நிலையைக் கொண்டே எதையும் ஊகிக்கும் கூரிய அறிவு படைத்த கரிகாலன், அவள் கண்களில் முதலிலே தெரிந்த சலனத்துக்கும், பின்னர் அவள் அழகிய உடல் பஞ்சணையில் நெளிந்ததற்கும், கடைசியாக எழுந்த பெருமூச்சுக்கும் காரணத்தை அரைக்கணத்தில் உணர்ந்து கொண்டானாதலால் அவள் எணணங்களுக்கும் இதய வேதனைகளுக்கும் விடுதலையளிக்கும் நோக்கத்துடன், ‘அரசகுமாரி!” என்று மீண்டும் ஒருமுறை அழைத்தான்.

பதில் சொல்ல நா எழாததால், அரசகுமாரி ஒரு ‘ஹும்’ மாத்திரம் கொட்டிவிட்டுத் தலையையும் தொங்கப் போட்டுக் கொண்டாள்.

“சில நாள்களாகவே அரசகுமாரி மௌன நிலையை அடைந்திருப்பதைப் போல் தோன்றுகிறது?” என்று கூறிக்கொண்டே, வாயிற்படியிலிருந்து கட்டிலை நோக்கி வந்தான் கரிகாலன்.

தாழ்ந்த நிலத்தை நோக்கிக் கிடந்த வேங்கி நாட்டு மன்னன் மகளின் மணிவிழிகள் தரையில் உறுதியுடன் பாவி வந்த அந்த வீரனின் கால்களைக் கவனித்தன. அப்படி அவன் எடுத்து வைத்த நான்கு அடிகளில் உண்டான சப்தங்கூட அவள் உடலிலிருந்த உணர்ச்சி வெள்ளத்தில் கலந்து, இதயத்திலே சென்று பட்பட்’ என்று தாக்குவது போன்ற பிரமை உண்டாகவே, உடல் ஒருமுறை லேசாக நடுங்கவும் செய்தது. அந்த நடுக்கத்தைக் கவனித்த கரிகாலன் இதழ்களில் லேசாகப் புன்முறுவல் படர்ந்தது. “நடுக்கத்திற்கு இனி அவசியமில்லை அரசகுமாரி! தங்கள் எதிரிகள் அழிந்தார்கள். வேங்கி விடுதலை பெற்றது. தங்கள் தம்பியும் வேங்கி நாட்டு அரியணையில் நாளைக்கு அமரப் போகிறார்” என்று ஆறுதல் சொல்லும் முறையில் பேசினான் அவன்.

இந்தப் பேச்சு அவளை நிமிர்ந்து உட்கார வைத்தது. தலையைக் குனிந்துகொண்டே சொன்னாள் அவள், “நடுக்கத்திற்குப் பயம் மட்டும் காரணமல்ல படைத் தலைவரே! நன்றியும் சில வேளைகளில் காரணமாயிருக்கும்” என்று.

கரிகாலன் முகத்தில் புன்முறுவல் மறைந்து, வருத் தத்தின் சாயை சற்றே படர்ந்தது. “நன்றி எதற்கு அரச குமாரி?” என்று வினவினான்.

“ஒரு கோழையை வீரனாக்கியதற்கு; இந்த நாட்டை மாற்றானிடமிருந்து மீட்டதற்கு” என்றாள் மன்னன் மகள்.

“வேங்கி நாட்டு மன்னன் என்றும் கோழையா யிருந்ததில்லை” என்று அழுத்தமாகப் பதில் சொன்னான் கரிகாலன்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினாள் மன்னன் மகள், தன் தம்பியைப் பற்றிக் கரிகாலன் சொன்ன சொற்களைக் கேட்டதால். இருந்தாலும் அதைப்பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள மனம் ஆசைப்பட்டதால், சம்பாஷணைத் திரியைத் தூண்டிய அவள், “யாரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள்? ஜெயசிம்ம சாளுக்கியனைப் பற்றியா?” என்று கேட்டாள்.

“இல்லை. ராஜராஜ நரேந்திரனைப் பற்றி.”

“ஒரு வருஷத்திற்கு முன் அவன் வாளைப் பிடிக்கவும் அஞ்சினான்.”

“அப்பொழுது அவரைச் சுற்றி வஞ்சியர் கூட்டமிருந்தது, வஞ்சகர் கூட்டமிருந்தது. ஆனால், வெஞ்சமர் விளைவிக்கும் வீரர்கள் கூட்டமில்லை. எந்த உறுதியும் சூழ்நிலையால் குலையும் அரசகுமாரி! ஏன்? நல்லவன் என்று முதலில் என்னைப்பற்றி உறுதி கொண்ட நீங்களே, பின்னால் என்னை மாற்றானின் கையாள் என்று கருதவில்லையா?”

தன்னையே கரிகாலன் மடக்கிவிட்டதைக் கண்ட அரசகுமாரி, பஞ்சணையிலிருந்து மெள்ள எழுந்து பதிலேதும் சொல்லாமல் சாளரத்தை நோக்கிச் சென்றாள். கரிகாலன் அவளைத் தொடரவில்லை. நின்ற இடத்திலிருந்து, பஞ்சணைக்கருகிலிருந்தே பேசினான்: “அரச குமாரி! தங்களை வருத்த வேண்டுமென்று நான் பேசவில்லை. உதாரணத்துக்காகச் சொன்னேன். தங்கள் தம்பி இன்று பல போர்களைக் கண்ட மகாவீரர். அவரிடம் நீங்கள் அந்தச் சலனமுள்ள கண்களை இனி என்றுமே பார்க்க முடியாது. ஒரு வருஷத்திற்கு முன் அவர் வாளைப் பிடிக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால் இன்று அந்தக் கரம் வாளைப் பிடித்து இந்த வேங்கி நாட்டை மாற்றாரிடமிருந்து காக்கும் பெரும் வலிமை பெற்றிருக்கிறது. இதெல்லாம் எங்கிருந்து வந்தது?” என்று பேசிக்கொண்டே போனவனை, “தங்களிடமிருந்து…” என்ற அரசகுமாரியின் சொல் சட்டென்று இடைமறித்தது.

“என்னிடமிருந்து மன்னர் வாள் பயிற்சி பெற்றிருக்க லாம், போர்ப்பயிற்சி கற்றிருக்கலாம். ஆனால் அவை அவருக்குப் படிந்தது என்னால் மட்டுமல்ல அரசகுமாரி.”

“பின் யாரால்?”

“எதனால் என்று கேளுங்கள்?”

“ஹும்… எதனால்?”

அவருடைய உடலிலே ஓடும் பரம்பரை ரத்தத்தால். வீரனான மன்னன் விமலாதித்தனுக்குப் பிறந்தவன் கோழையாயிருக்க முடியாது. இயற்கையில் ராஜராஜ நரேந்திரர் பெருவீரர். செயற்கை அவருக்குக் கோழைச் சாம்பலைப் பூசியது. அதை அகற்ற என் கை உதவியது. அவ்வளவுதான் அரசகுமாரி! இயற்கையில் இல்லாத வீரத்தை யாருக்கும் ஊட்ட முடியாது. வாளை இரும்பி லிருந்துதான் உற்பத்தி செய்ய முடியும். மேகம்தான் நீரைக் கொடுக்க முடியும். இயற்கையின் கர்ப்பத்திலிருக்கும் அம்சங்களைத்தான் மனித முயற்சி திரட்டி வளர்க்க முடியும்” என்றான் கரிகாலன்.

நிரஞ்சனாதேவி சாளரத்தின் பக்கத்திலிருந்து நீண்ட நேரம் திரும்பவுமில்லை; பேசவுமில்லை. சற்று நேரம் அவளையே கவனித்துக் கொண்டிருந்த கரிகாலன், “அரசகுமாரி” என்று மீண்டும் அழைத்தான்.

“ஹூம்.”

“நான் வந்த காரியம்…”

“சொல்லுங்கள். எதையும் கேட்கச் சித்தமாயிருக்கிறேன். வேங்கி அரச குடும்பம் நன்றி கெட்ட குடும்பமல்ல.”

“எதைச் சொன்னாலும் கேட்பீர்களா?”

அவள் இதயம் பட்பட்டென அடித்துக்கொண்டது. அவன் எதைக் கேட்கப் போகிறான் என்பதை நினைத்ததால் உண்டான நாணத்தால் அவள் உடல் சிலிர்த்தது. “சொல்லுங்கள்” என்று இனிய குரலில் ஏதோ வீணையை மீட்டுவது போல் பேசினாள் அவள்.

“அரசகுமாரி!”

“ஏன்?”

“ஒரு வரம் வேண்டும்.”

“கேளுங்கள்.”

“என் வாள் உங்களுக்கு அடிமையென்று ஒரு சமயத்தில் ஆணை வைத்தேன்.”

“ஆம்.”
“அந்த ஆணையிலிருந்து விடுதலை வேண்டும்.”

நீரில் திடீரெனக் கல்லைத் தூக்கிப் போட்டால் தடாகத்தில் ஏற்படும் கலக்கத்திற்குச் சமமான கலக்கத்தை அந்தக் கோரிக்கையால் அடைந்த அரசகுமாரி, சாளரத்தி லிருந்து திடீரென அவனை நோக்கித் திரும்பினாள். காதல் மொழிகளை அவனிடமிருந்து எதிர்பார்த்த உள்ளம் சுக்குநூறாக உடைந்ததன் காரணமாக, இதய தாபத்தால் அழகிய இதயப் பிரதேசம் எழுந்து தாழப் பெருமூச்சு விட்டாள். “எதற்கு இந்த விடுதலை?” என்று கேட்டாள், உணர்ச்சிகள் நிலைகுலைந்தே உதிர்ந்தன.

“ஆணையிட்ட வேலை முடிந்துவிட்டது. தவிர.” என்று தயங்கினான் கரிகாலன்.

“தவிர?”

“ஆணையை எப்பொழுதும் நிறைவேற்ற இயலாது.”

“ஏன்?”

“இந்த நாட்டிலிருந்து நான் வெளியேறப் போகிறேன்.”

அவள் ஏதும் புரியாமல் விழித்தாள். பிறகு தவறாக அர்த்தம் செய்துகொண்டு பேசினாள். ஆம்! ஆம்! வேங்கி நாட்டில் தங்களுக்கு என்ன வேலை? சோழ நாட்டின் மாபெரும் படைத்தலைவருக்கு இந்தச் சிற்றரசு ஏற்ற தில்லைதான்” என்று உள்ளத்தே எழுந்த குமுறலால் நின்ற இடத்தில் சிறிது அசையவும் செய்தாள்.
கரிகாலன் அந்த அசைவைக் கவனித்தான். அவள் சொற்களில் கண்ட தவற்றையும் கவனித்தான். அதைத் திருத்த உறுதியுடன் கூறினான், “வேங்கி நாட்டிலிருந்து மட்டுமல்ல அரசகுமாரி, சோழ நாட்டிலிருந்தும் போகிறேன்! நான் பிறந்த மண்ணை விட்டே போகிறேன். பாரத நாட்டு எல்லையை விட்டே போகிறேன்” என்று.

அவள் அவனை நெருங்கி வந்தாள். அவன் வாயிற் படிக்காகத் திரும்பி அவளுக்குத் தன் முதுகைக் காட்டிக்கொண்டே இரண்டடி எடுத்து வைத்தான். “நில்லுங்கள்!” என்று அவள் இட்ட உத்தரவு சட்டென்று அவன் கால்களைப் பிடித்திழுத்து நிறுத்தியது. இரண்டு விநாடிகள் சென்றன. கொழுகொம்பு மீது பூங்கொடி யொன்று தழுவிச் செல்வது போல் தன் தோள் மீது அவள் கரம் நெளிவதைக் கண்ட கரிகாலன் கற்சிலையென நின்றான். அவன் கன்னத்தோடு இழைந்தது ஒரு கன்னம். அந்தப் பக்கத்திலிருந்து மெள்ள எழுந்தன இசைச் சொற்கள்.

“நீங்கள் எங்கும் போகக்கூடாது.”

“அது என் இஷ்டமல்ல.”

“என் இஷ்டம்.”

“நம் இருவர் இஷ்டமல்ல; விதியின் இஷ்டம்.”

“அதை நாம் வலிமையால் வெல்வோம்.”

“வெல்ல நான் வேறு நாடு செல்ல வேண்டும்.”
“எங்கு?”

“கடாரத்திற்கு.”

“என்ன கடல் கடந்தா?”

ஆம்.”

“ஏன்?”

“பிறந்த மண்ணிலிருக்க முடியாத துர்ப்பாக்கியன் நான்.”

இதைச் சொன்ன போது, கரிகாலன் உடல் சிறிதே ஆடியதை உணர்ந்தாள், பின்னால் நின்ற வேங்கி நாட்டுப் பைங்கிளி. அவன் இதயத்திலே மாபெரும் சுமை இருப்பதை அறிந்த மன்னன் மகள், அவனைத் தன் இரு கரங்களாலும் ஆதரவாகத் தழுவினாள். அப்படியானால் உங்களுடன் நானும் வருவேன்” என்று கீதம் போலப் பேசினாள், அவன் காதுக்கருகே.

“பிறந்த மண்ணை விட்டா?” என்றான் கரிகாலன் திரும்பாமலே.

“ஆம், பிறந்த மண்ணை விட்டுப் புகுந்த மண்ணுக்குச் செல்லுவது பெண்கள் கடமையல்லவா?” என்று அவள் கூறினாள்.

அடுத்த விநாடி, அவள் கைகளைத் தன் உடலிலிருந்து அகற்றி, விலகி நின்ற கரிகாலன், அரசகுமாரி! கனவுலகில் இருக்கிறீர்களா?” என்று கோபத்துடன் பேசினான்.
கோபத்திலும் அவன் முகம் அழகாயிருந்ததை நிரஞ்சனாதேவி கவனித்துப் புன்முறுவலுடன் கூறினாள், “நனவுலகை விடக் கனவுலகில் இன்பம் இருக்குமானால், அதை நாடுவதுதான் முறை” என்று.

“இன்பத்துக்காக உள்ள நிலையைப் பலி கொடுப்பது விவேகமல்ல அரசகுமாரி” என்று கரிகாலன் விளக்கினான்.

“எது உள்ள நிலை?”

“நீங்கள் வேங்கி நாட்டு மன்னன் மகள், நானோ…”

“மன்னர்களைச் சிருஷ்டிக்கும் மாபெரும் வீரர்.”

“நான் ஊர் பேர் தெரியாத அநாதை.”

“அநாதை நீங்களல்ல. உங்களைப் போன்ற வீரர்களைப் பெறாத நாடுகளுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.” அவள் பிடிவாதத்தைக் கண்ட கரிகாலன், வெகுண்டு அவளை அணுகி, அவள் கையைப் பிடித்துப் பலமாக அழுத்திக்கொண்டே சொன்னான், “அரசகுமாரி! நீங்க ளிருக்கும் உயர்ந்த பீடத்திலிருந்து, என் சுயநலனுக்காக உங்களை ஒருநாளும் கீழே இறக்கமாட்டேன்” என்று.

“இறக்க வேண்டாம்; உயர்த்திவிடுங்கள்” என்றாள் நிரஞ்சனாதேவி.

“எங்கு?”

“உங்கள் மனப் பீடத்தில்.”

“வேண்டாம் இந்தப் பிடிவாதம், அரசகுமாரி. என் மனப்பீடத்தில் எப்பொழுதும் நீங்களிருக்கிறீர்கள். எந்த விநாடி உங்களைச் சந்தித்தேனோ, அந்த விநாடியிலிருந்து அந்த இடத்தை விட்டு நீங்கள் அகலவில்லை. இனி என்றுமே அகலமாட்டீர்கள். ஆனால் மன்னன் மகளான உங்களை, வசந்த மண்டபத்தில், இதோ இந்தப் பஞ்சணையில் புரண்ட உங்களை கண்காணாத நாட்டிற்கு, ரத்த வெள்ளம் பாயப்போகும் கோரப் போர் எழக்கூடிய தூரப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்ல நான் இஷ்டப்பட வில்லை” என்று, உணர்ச்சி ததும்பப் பேசினான் கரிகாலன்.

அவள் உள்ளம் நெகிழ்ந்தது, உறுதி குலைந்தது. கைத் தாமரைகளால் முகத் தாமரையை மூடினாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். குலுங்கி அழுது குறுகிவிட்ட அவளுடைய மென்மையான சரீரத்தை, இரண்டெட்டில் தாவிப் பிடித்துக்கொண்ட கரிகாலன், “நிரஞ்சனா! அழாதே. என்னால் தாங்க முடியவில்லை. உன்னைப் பிரிவதால் உண்டாகும் வேதனையை அதிகப்படுத்தாதே!” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் தேம்பினாள். அவன் கைகள் அவள் அழகிய உடலை வளைத்துச் சென்றன. அவள் முகம் விசாலமான அவள் மார்பில் புதைந்தது. அப்பொழுது அவள் தேம்பியது, அவன் இதயத்துக்கே தன் உள்ள ஆசைகளைச் செய்தியாகத் தொகுத்து அனுப்பியது போலிருந்தது. நீண்ட நேரம் அந்த நிலையில் நின்ற அவர்களை வாயிற்படியிலிருந்து கிளம்பிய ஒரு நகைப்பு தட்டியெழுப்பவே இருவரும் விலகி நின்று, வாசற்படியை நோக்கினர்.
அவர்கள் பார்த்ததும் நகைப்பைச் சற்று நிறுத்தி உள்ளே நுழைந்த ராஜராஜ நரேந்திரன், இது சக்கரக் கோட்டமல்ல படைத்தலைவரே!” என்று சொல்லி மீண்டும் ஒரு சிரிப்பை உதிர்த்தான்.

கரிகாலன் பதில் கூறவில்லை. கேள்விக்கு அறிகுறி யாகக் கண்களை உயர்த்தினான்.

“இது சக்கரக் கோட்டமல்ல கரிகாலரே! உமது தந்திரத்தால் இதை வெற்றி கொள்ள முடியாது. அக்காவின் உள்ளம் பெருங்கோட்டை, அதன் சுவர்கள் இரும்பு, அதை உடைக்க நீரல்ல, உம்மைவிடப் பெரிய வீராதி வீரர்கள் வந்தாலும் முடியாது. நீங்கள் கடாரத் தீவுக்கல்ல, உலகத்தின் எல்லைக்கே சென்றாலும் அந்தக் கோட்டை உங்களைத் தொடரும்” என்றான் ராஜராஜ நரேந்திரன்.

“என்ன சொல்கிறீர்கள் மன்னவா?” என்றான் கரிகாலன்.

“இன்று நான் மன்னனில்லை. நாளைக்குத்தான் முடிசூடும் விழா.’’

“சரி.”

“இன்று நான் உனது மாணவன்.”

‘’அதற்கு என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்?”

“எனக்கு வாள் பயிற்சி அளித்தீர்கள்; போர்ப்பயிற்சி அளித்தீர்கள்…”
“அதற்காக?”

“குருவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும். இதோ என் காணிக்கை” என்று சொல்லிக்கொண்டே, அவர்கள் அருகில் வந்த ராஜராஜ நரேந்திரன், தன் சகோதரியின் கையை எடுத்துக் கரிகாலன் கையில் இணைத்தான். எதிர்பாராத விதமாகத் தன் கையுடன் அரசகுமாரியின் கை இணைக்கப்பட்டதால் நிலைகுலைந்து போன கரிகாலன், கையை இழுத்துக்கொள்ள முயன்றதைக் கண்ட ராஜராஜ நரேந்திரன், “விடாதே அக்கா, கெட்டியாய்ப் பிடித்துக்கொள்” என்று சொல்லி, மீண்டும் நகைத்துவிட்டு வெளியே செல்ல முயன்றான். அவனை, “அரசே!” என்ற கரிகாலன் குரல் தடுத்து நிறுத்தியது.

திரும்பி நோக்கினான் ராஜராஜ நரேந்திரன். “இது முறையல்ல.” என்று ஏதோ சொல்லப்போன கரிகாலனை, அதிகாரத் தோரணையில் பார்த்த ராஜராஜ நரேந்திரன், “கரிகாலரே! என் சகோதரியின் உள்ளம் எனக்குத் தெரியும். ஆகையால் நீர் இந்தக் காணிக்கையை ஏற்கத்தான் வேண்டும். இன்று, இது எனது வேண்டுகோள். நாளைக்கு இதுவே கட்டளை. ஏன் தெரியுமா? நாளைக்கு நான் மன்னன்!” என்று கூறிவிட்டு, வெளியே நடந்தான்.

தனிமையில் விடப்பட்ட கரிகாலன் சங்கடத்தால் நகர முயன்றான். மன்னன் மகளின் கை அவனை இறுகப் பிடித்தது. அவனைப் பார்த்த விழிகளில், ஆசை பொங்கி வழிந்தது, என்ன செய்வேன் சுவாமி! மன்னர் கட்டளை!” என்று தலைகுனிந்து, வெட்கத்துடன் சொற்களைக் கொட்டி, ஆசை, வெட்கம், இன்பம் எல்லாம் கலந்த சிரிப்பையும் உதிர்த்தாள், விமலாதித்தன் மகளான நிரஞ்சனாதேவி.

Previous articleMannan Magal Part 2 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 36 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here