Home Historical Novel Mannan Magal Part 2 Ch 36 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 36 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

115
0
Mannan Magal part 2 Ch 36 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 36 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 36 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 கடல் காற்று

Mannan Magal Part 2 Ch 36 | Mannan Magal | TamilNovel.in

கடலிலிருந்து எழுந்து வந்த வசந்த காலத்தின் இன்பமான காலைக்காற்று, சூடாமணி விஹாரத்தின் நடு மண்டபத்திலிருந்து புத்தர்பிரான் சிலையின் கழுத்தை அலங்கரித்து நின்ற மலர் மாலையை மெள்ள அசைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உதிர்ந்த ஓரிரு புஷ்பங்கள் போதிசத்துவரின் காலடியிலே வணங்கிக் கிடந்த மஹா வீரனின் தலைமீது உதிர்ந்தன. புத்தர்பிரானின் இருபுறத் திலுமிருந்த தூங்கா விளக்குகளின் ஒளிகூட அந்த வீரனின் கன்னங்களிலே பாய்ந்து அவற்றுக்கு மெருகூட்டியதன்றி, நெற்றிப் பிரதேசத்திலும் விழுந்து சிந்தையிலே அவனுக் கிருந்த சலனத்தை அறுக்க, போதிசத்துவர் அளித்த ஞான ஒளியெனப் படர்ந்து நின்றது. நீண்ட நேரம் தலை வணங்கிக் கிடந்த அந்த வீரனின் உதடுகள், “புத்தம் சரணம் கச்சாமி” என்ற மந்திரங்களைச் சற்று உரக்கவே உச்சரித்ததால், அந்த மண்டபத்தின் பெரும் சுவர்களும், உயரத்தே வளைந்து கிடந்த கூரையின் ஓட்டுக் கற்களும் அந்த மந்திரங்களைத் திரும்பத் திரும்ப எதிரொலி செய்து, அந்தச் சூடாமணி விஹாரத்தில் எங்கும் சாந்தியை நிலவச் செய்ய முயன்று கொண்டிருந்தன.

ஆனால் தலைவணங்கிக் கிடந்த அந்த வாலிபன் மட்டும், மனத்திலே, சிறிதும் சாந்தி பெறாததால், மீண்டும் மீண்டும் அந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு மீளாத் தியானத்திலேயே கிடந்தான். அப்படிப் புத்தரின் கருணையை நாடி அவர் திருவடிகளில் சரணடைந்து கிடந்த அந்த வீரனை, அவனுக்குப் பின்னால் நின்று அருட் கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்த சூடாமணி விஹாரத்தின் தலைமைப் பிக்ஷ மெள்ளத் தமது வலக்கரத்தால் தொட்டு, “கரிகாலா! எழுந்திரு! போதிசத்து வரின் அருள் உனக்குக் கிடைத்துவிட்டது” என்று சற்றே அசைத்து எழுப்பினார்.

நித்திரையிலிருந்து விழித்தவன் போல் நிஷ்டை யிலிருந்து விழித்த கரிகாலன், மெள்ளத் தன் தலையைத் திருப்பி சூடாமணி விஹாரத் தலைவரை நோக்கி, “அருள் கிடைத்தது உண்மைதானா தந்தையே?” என்று வினவினான்.

சூடாமணி விஹாரத் தலைவர் சாந்தம் நிலவும் தமது விழிகளைச் சற்று அமைதியாகவே விரித்து, இதயத்தில் எழுந்த ஆச்சரியத்தை முகத்திலும் காட்டி, “என்ன சந்தேகம் கரிகாலா? என் வார்த்தையிலும் உனக்குச் சந்தேகமா?” என்று வினவினார்.

“இல்லை தந்தையே!” என்றான் கரிகாலன், புத்தர் பிரான் திருவடிகளை விட்டு எழுந்திருந்து, இரண்டடி பின்னுக்கு நகர்ந்து, தனது குருநாதரை ஏறிட்டு நோக்கிக் கொண்டே.

சூடாமணி விஹாரத் தலைவர் அருகில் வந்த கரிகாலன் தலையிலே தமது திருக்கரத்தை வைத்துத் தடவி, அதில் கிடந்த ஒரு புஷ்பத்தை எடுத்துக் கரிகாலனிடம் காட்டி, “கரிகாலா! நீ போதிசத்துவரின் திருவடிகளில் கிடந்தபோது, இது அவர் மலர் மாலையிலிருந்து உன் தலையில் உதிர்ந்தது. இன்னொரு புஷ்பங்கூட உதிர்ந்ததைப் பார்த்தேன். அவர் தூவிய மலர்கள் உன்னைப் பாவனமாக்கியிருக்கின்றன கரிகாலா!” என்று விளக்கினார்.

“தந்தையே! தங்கள் வார்த்தைகளில் எனக்குச் சந்தேக மிருக்கவில்லை. ஆனால் அருள் கிடைத்தவன் மனத்தில் சாந்தியிருக்க வேண்டுமே அதில்லையே! என் மனம் எதிரேயுள்ள கடலலைகளைப் போல் கொந்தளிக்கின்றதே!” என்றான் கரிகாலன்.

“குழந்தாய்! கொந்தளிப்பை அடக்குவது உன் கடமை. மனக்குதிரையை அடக்குபவனே உண்மையான சாரதி என மஹாபாரதமே கூறுகிறது. மனித வாழ்வாகிற கடலிலே ஆசையே ஜலம்; அதைப் பெரும் அலைகளாக எழுப்புபவை சந்தர்ப்பங்கள். அந்தச் சந்தர்ப்பங்களை வெற்றி கொண்டு மரக்கலத்தைச் செலுத்துபவனே மாலுமி. அத்தகைய மாலுமியாக நீ திகழ வேண்டும் கரிகாலா!” என்று வார்த்தைகளை மிக அழுத்தமாக உச்சரித்துச் சாந்தமாகப் பேசினார், சூடாமணி விஹாரத் தலைவர்.

“தந்தையே! சந்தர்ப்பங்களை எப்படி வெற்றி கொள்வேன்? இங்கிருந்து கிளம்பிய நாள்களாக என் வாழ்வில் எத்தனை திருப்பங்கள்! எத்தனை பேர்வழிகள் வந்து என் பாதையில் குறுக்கிட்டிருக்கிறார்கள். அநாதை என்று புறப்பட்டவன், சோழ அரசகுல வம்சத்து மகனானேன். சதியில் சிக்கினேன். இரு மாதர்களின் காதலில் கட்டுண்டேன். ஒருத்தியை மணந்தேன். மற் றொருத்தியைக் கைவிட்டேன். தாயைப் பார்த்தேன். அவளைத் தாயென்று வெளிப்படையாகச் சொல்லும் உரிமையிழந்தேன். இப்பொழுது பிறந்த நாட்டை விட்டு என்னைக் கடத்திச் செல்ல எதிரே கடலில் மரக்கலங்கள் சித்தமாக நிற்கின்றன; இதென்ன வாழ்க்கை தந்தையே!” என்று மனம் நெகிழ்ந்ததால், குரலும் தழுதழுக்க கேட்டான் கரிகாலன்.

“வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது கடமையல்ல குழந்தாய். அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்தச் சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது நமது கடமை. இரு மாதர் உன்னைக் காதலித்தது உன் தவறல்ல; ஒருத்திமீது நாட்டம் கொண்டதும் உன் தவறல்ல; விதிப்புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார் யார் எங்கு மோதிக்கொள்கிறார்களோ யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? செங்கமலச் செல்வியைப் பற்றிக் கவலைப்படாதே கரிகாலா! அவள் அரையன் ராஜராஜனைப் போல் மிகுந்த உறுதியுடையவள். உன் உள்ளத்தை உணர்ந்தவள். ஆதலால் அவள் உன் பிரிவிலே சாந்தி பெறுவாள். காலம் எதையும் ஆற்றிவிடும். உன் அன்னையைப் பற்றி என்ன கவலை? அவள் ஏற்கெனவே நீ செல்லப்போகும் மரக்கலத்தில் இருக்கிறாள்.”

கரிகாலன் விழிகள் நன்றியறிதலுடன் சூடாமணி விஹாரத் தலைவரை நோக்கின. “என்ன? என் அன்னை வந்துவிட்டாளா? கூரத்திலிருந்தா? எப்பொழுது?” என்று மிதமிஞ்சிய ஆசையால் விடுவிடுவென்று வினவினான்.

சாந்தம் நிறைந்த புன்முறுவலொன்று சூடாமணி விஹாரத் தலைவர் உதடுகளில் தவழ்ந்தது. “ஆமாம் கரிகாலா! உன் அன்னையை யாருமறியாமல் வர வழைத்து, புத்த சன்யாசிகள் உடையில் உன் மரக்கலத்துக்கு அனுப்பிவிட்டேன். அவளுடன் நிரஞ்சனாதேவியும் உனக்காக அதோ கடலில் ஆடி நிற்கும் மரக்கலத்தில் காத்திருக்கிறாள். உன் அன்னையை உன்னுடன் வெளிநாடு அனுப்புவதாகக் காஞ்சியின் நிலவறைக்கூடத்தில் சொன்னேனே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். உனக்காக வெளியே கடலில் நாகப்பட்டிணத்துக்குப் போட்டியாக இன்னொரு நகரமே உதயமாகி விட்டது போல் நூறு மரக்கலங்கள் நிற்கின்றன. கடற்கரையில், அரையன் ராஜராஜன் முதலிய படைத்தலைவர்கள் உன்னைக் கடாரத்தீவுக்கு வழியனுப்பக் காத்துக்கொண் டிருக்கிறார்கள். போ கரிகாலா! போ! தமிழகத்துக்குப் புறம்பேயும் உன் புகழ் பரவப் போகிறது. அரச வம்சத்தில்

‘பிறந்த உன் பெயர் அரசு மரபுக் குறிப்புகளில் மறையலாம். சரித்திரத்திலும் மறையலாம். ஆனால் மக்கள் மனத்திலிருந்து மறையாது. உன்னுடன் வசித்த புத்த பிக்ஷக்கள் உன்னை மறக்கமாட்டார்கள். வையகம் வாழத் தன் வாழ்வைத் துறந்த புத்தர் பிரானின் கொள்கைகளைக் கடாரத் தீவிலும் பரப்பப் போய் வா!” என்று, அவன் கடமையின் திசையைச் சுட்டிக்காட்டினார் சூடாமணி விஹாரத் தலைவர். அவர் கூறியதை ஆமோதிப்பவன் போல், வெளியில் துந்துபி வாத்தியங்களும் பேரிகைகளும் முழங்கின.

கரிகாலன் தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கி விட்டு, அவருடன் விஹாரத்துக்கு வெளியே வந்தான். சோழ நாட்டின் மாபெரும் படைத்தலைவனைக் கண்டதும், மீண்டும் துந்துபிகள் முழங்கின. எதிரே கடலில் இருந்த மரக்கலங்களில் இருந்த புலிக்கொடிகள், கரிகாலனை ‘வா! வா!’ என்று அழைப்பன போல் அசைந்தன. ‘பிறந்த மண்ணின் மீதுள்ள ஆசையை விடு கரிகாலா! இதோ நான் உனக்கு இடம் தருகிறேன்’ என்று சொல்வன போல், கடல் அலைகள் பெரிதாக கர்ஜித்தன.

அமைதியுடனும் சாந்தியுடனும் சைன்னியங்களின் கூட்டத்திடையே நடந்து சென்று அரையன் ராஜராஜன் நின்றிருந்த இடத்துக்கு வந்து, அவன் கால்களில் வணங்கினான். தன் வளர்ப்புப் பிள்ளையைப் பயணக் கோலத்தில் கண்ட அரையன் ராஜராஜன் கண்களில் நீர் சுரந்தது. வாய் பேச மறுத்தது. ஆகவே கரிகாலனை இரு கைகளாலும் தடவிக் கொடுத்தான். அரையன் ராஜ ராஜனுக்கு அருகே நின்றிருந்த செங்கமலச் செல்வி அன்று பூரணப் போர் உடை அணிந்து கம்பீரமாகக் காட்சி யளித்தாள். கங்கைப் போரிலே அவள் கன்னத்திலே ஏற்பட்ட சிறு காயத்தின் தழும்புகூட அன்று அவள் அழகை அதிகப்படுத்திக் காட்டியதே தவிரச் சிறிதும் குறைக்கவில்லை. கரிகாலன், அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “செல்வி!” என்றான்.

ஏதும் பேசும் வகையில்லாததால், அவள் அழகாகப் புன்முறுவல் செய்து, “கடல் கடந்தும் சோழ நாட்டுப் புகழைப் பரப்புங்கள் படைத்தலைவரே. சென்று வாருங்கள்” என்று தைரியமாகவே பேசினாள்.

பதில் சொல்ல முடியாமல் தயங்கினான் கரிகாலன். அவள் புன்முறுவல் வேஷமென்பதையும், அவள் உள்ளம் வெடித்துக் கொண்டிருக்கிறதென்பதையும் உணர்ந்த கரிகாலன், மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்ததை அவளே தடுத்து, “பேசும் சமயம் போய்விட்டது தலைவரே! சென்று வாருங்கள், எனக்கு என் வாள் தான் இனி வாழ்வுக்குத்துணை. என் தந்தை இன்னும் சாளுக்கியர்களுடன் போரிடுவார். அவருக்கு மகனில்லை. நான் மகனாக இருப்பேன். அவர் பக்கத்தில் நின்று போராடு வேன். எனக்காகக் கவலைப்படாதீர்கள். நிம்மதியாகச் சென்று வாருங்கள்” என்று கூறிக் கடலை நோக்கிக் கையையும் காட்டினாள்.
கடைசியாக அந்தப் பேரழகியை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தலைகுனிந்த வண்ணம், அணிவகுத்து நின்ற படைகளின் ஊடே சென்ற கரிகாலன், சற்று தூரத்தில் நின்றிருந்த சைவத் துறவியாரிடம் சென்று, “ஜெயவர்மா! நீ குறுக்கே வந்திராவிட்டால், வாழ்வில் பல உண்மைகளை நான் அறிந்திருக்க மாட்டேன். இந்தப் பெயரும் பதவியுங்கூட இத்தனை சீக்கிரத்தில் எனக்கு வந்திருக்காது, அதற்கு இதோ பரிசு!” என்று கூறி, தன் கழுத்தில் இராஜேந்திர சோழதேவனால் போடப்பட்ட செங்கதிர் மாலையை எடுத்து அவரிடம் கொடுத்து, “சேர மன்னரிடம் இதைக் கொடு. எதை முன்னிட்டுத் துறவி வேஷம் போட்டாயோ அந்தப் பணி இத்துடன் பூர்த்தியாகிறது. சக்கரக் கோட்டத்தில் நீ உண்மை சொல்லி, சோழர் படைகளுக்கு பெரு வெற்றி அளித்ததற்காக இதை உனக்களிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடற்கரையை நோக்கி நகர்ந்தான்.

அவனைத் தொடர்ந்து போர் உடைகளை அணிந்த மாலுமிகள் சென்றார்கள். அவனையும் இன்னும் பல வீரர்களையும் ஏற்றிச் செல்ல, அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் கரையோரத்தில் இழுத்து விடப்பட்டிருந்தன. பல படகுகளுக்கு நடுவே நடப்பட்டிருந்த புலிக்கொடிக்குக் கீழே கரிகாலன் நின்றுகொண்டான். பேரிரைச்சலுடன் மாலுமிகள் படகைத் தள்ளினார்கள்.

நூறு படகுகள் நகர்ந்தன. கரையில் நின்றிருந்த படை வீரர்கள் செய்த வாழ்த்துக் கோஷம் வானைப் பிளந்தது.

சுமார் இரண்டு நாழிகைகளில் மரக்கலங்கள் புறப் பட்டதைப் பார்க்க விரும்பினவன் போல் ஆதவனும் கீழ்த்திசையில் எழுந்தான். அவன் வீசிய பொற்கிரணங்களில் மின்னி ஆடிக்கொண்டு நூறு மரக்கலங்கள் பாய் விரித்து நகர்ந்தன.

அந்த மரக்கலங்களையே பார்த்துக்கொண்டு கரையில் நின்றாள் செங்கமலச் செல்வி. அதுவரை உறுதியுடன் நின்ற அவள் உள்ளத்தின் கரை உடைந்து அதிலிருந்து பாய்ந்த உணர்ச்சிகள் கண்ணீராக வெளிவந்தன. அவள் குலுங்கிக் குலுங்கிக் குழந்தைபோல் அழுதாள். அரையன் ராஜராஜன் தன் குழந்தையை ஆதரவாக அணைத்துக் கொண்டு சொன்னான், “குழந்தாய் வருந்தாதே. தியாகத்தால்தான் பெரிய சாம்ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. அதோ, அந்த மரக்கலத்தில் போகின்றது, மூன்று தலை முறைகளைச் சோழ மண்டலத்துக்காகத் தியாகம் செய்த பெரிய குடும்பம். அதோ போகிறான் சோழ நலனுக்காக நாட்டையே துறந்த, மணிமகுடத்தையும் பேரரசையும் உதறிவிட்ட மகாபுருஷன். அந்தத் தியாக அக்கினியில் நீயும் குளித்துவிடு மகளே, உன் மனத்திற்குச் சாந்தி ஏற்படும்” என்று.

மெள்ள மெள்ள அழுகையை நிறுத்தி, அவள் கரிகாலன் செல்லும் மரக்கலத்தை நோக்கினாள். அத்துடன் நிலத்தைப் பார்த்துக்கொண்டே, “அவர் பேரரசை மட்டுமா தியாகம் செய்தார். என்னையும் தியாகம் செய்தாரே அப்பா! ஆனால் நான் எப்படி அவரைத் தியாகம் செய்வேன்?” என்று சொன்னாள் செங்கமலச் செல்வி.

“தியாகத்திற்கு எல்லை எதுவுமே கிடையாது, மகளே! பெற்ற மகளான உன் வாழ்வையே நான் தியாகம் செய்து, கரிகாலனைக் கடல் கடந்து அனுப்பவில்லையா? நான் இஷ்டப்பட்டிருந்தால், வேங்கிப் போரைத் தடுத்திருக்க முடியாதா? தடுத்திருந்தால் ராஜராஜ நரேந்திரன்தான் முடிசூடியிருப்பானா? அல்லது நிரஞ்சனாதேவிதான் கரிகாலனை வதுவை செய்து கெண்டிருப்பாளா? வா மகளே, சோழ நாடு நம்மை அழைக்கிறது. இன்னும் ஜெயசிம்மன் உயிரோடிருக்கிறான். வா, சாளுக்கியர் எல்லைக்குச் செல்வோம். நமக்குப் பாசறையிருக்கிறது” என்று கூறிவிட்டுப் பக்கத்திலிருந்த புரவி மீது ஏறினான். தந்தையின் வார்த்தைகளால் ஓரளவு சாந்தியே ஏற்பட்டது அந்த வீரமகளின் உள்ளத்துக்கு. தன் வாளை ஆசையுடன் ஒருமுறை தடவிக் கொடுத்துக் கொண்டாள்.

வங்கக் கடலில், வசந்தத்தின் காற்றில், நிலவு பாய்ச்சிய இன்ப ஒளியில் பாய்விரித்து ஓடிய மரக்கலத்தின் உள்ளறைப் பஞ்சணையில் நிரஞ்சனாதேவி இணையற்ற அலங்காரத்துடன் தேவகன்னிகைபோல் படுத்துக் கிடந்தாள். அந்த பஞ்சணை முகப்பிலே ஆழ்ந்த யோசனையிலே உட்கார்ந்திருந்தான் கரிகாலன். அமுத கலசங்கள் அருகிலிருக்க அமுதத்தைப் பருகாத அறிவிலியொருவன் இருப்பானா என்று ஏளனம் செய்வது போல் கடலலைகள் அந்த மரக்கலத்தின் பக்கவாட்டுகளில் தாக்கிக் ‘களுக்’ ‘களுக்’கென்று நகைத்தன.

ஆனால் அவன் அசையவில்லை. யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான். நிரஞ்சனாதேவி வெட்கம் தழுவும் விழிகளைக் கரிகாலனின் குழந்தை முகத்தின் மீது ஆசையுடன் நாட்டிக் கொண்டு, பஞ்சணையில் சிறிது ஒருக்களித்து உடலோடு உடல் உராய, அவன் கையைத் தன் மலர்க்கரத்தால் பற்றி, “என்ன ஆழ்ந்த யோசனை?” என்று வினவினாள்.
பிறந்த மண்ணை விட்டுப் போகிறோம் நிரஞ்சனா!” என்றான் கரிகாலன் பெருமூச்சு விட்டுக்கொண்டே.

“புத்த விஹாரத்தில் துறவிகளோடு துறவியாய் வாழ்ந்த உங்களுக்கு இன்னும் மண்ணாசை விடவில்லையா?” என்று அவள் மெள்ளச் சிரித்தாள்.

அவன் அவளை நோக்கித் திரும்பினான். மோகனா காரமாகக் கிடந்த அவள் உருவத்தின் அழகுப் பிம்பங்கள் அவனை வாவாவென்று அழைத்தன. பல நாள்களுக்கு முன்பு வசந்த மண்டபத்தின் பஞ்சணையில் படுத்துக் கிடந்த நிலையில் அன்று அவள் இல்லை. முன்போ, அவள் மூடிக்கிடந்த புஷ்பம், இதழ்களை விரிக்காத மொட்டு, ஒடுங்கி ஒருக்களித்து மாரன் வில்லைப் போல் வளைந்து கிடந்தாள். இன்றோ அவள் விகசித்த செந்தாமரை; மாரன் விளையாட்டுக்கான மலர்ச்சோலை. நன்றாக, அலட்சியமாக, பக்கத்திலிருப்பவனுக்குத் தான் சொந்தம் என்ற நினைப்பில், எழில்கள் நன்றாகப் புலப்படும்படியாகக் கிடந்தாள். ஆசை அவள் நாணத்தை அறுத்திருந்தது. அவள் பார்வை அவன் சிந்தனையை அடியோடு கலைத்துவிட்டது.

சொந்த மாளிகையில் கண்ட அந்தக் காமன் கரும்பு வில்லின் கனிரசங்கள் இனி தனக்குச் சொந்தம் என்ற நினைப்பு, மண்ணாசையை வெட்டிப் பெண்ணாசைக்கு இழுத்தது அந்த வீரனை. அந்த ஆசை ஒலிக்கு அவள் சிரித்துச் சுருதி கூட்டினாள். அவன் கையைப் பிடித்த அவள் கரத்துக்குத்தான் என்ன துணிச்சல்! ஆசை வெட்கமறியாது என்பது உண்மைதானா? இதை நினைத்து உணர்ச்சிகளால் நெகிழ்ந்த நிரஞ்சனாதேவி அவனைப் பார்க்கவும் வெட்கினாள்.
அந்த வெட்கம் அவளுக்கு இன்னும் அதிக அழகைக் கொடுத்தது. அவள் அசைவுகளால், அவள் மதுர உடல் அவன் உடலில் உராய்ந்து இன்ப அலைகளை அவன் உடலில் மட்டுமன்றி உள்ளத்திலும் பாய்ச்சியது.

அலைகள் பேரரவம் செய்தன. நிலைகுலைந்த கரிகாலனுக்கு, நிரஞ்சனாதேவியின் தலையிலிருந்த ஜாதி மல்லிகைப் புஷ்பங்களின் வாசனையை எடுத்து வந்து கொடுத்ததுமன்றி ‘இதென்ன புஷ்பம்! அதோ அவள் உடலிலே எத்தனை புஷ்பங்கள் கரிகாலா!’ என்று கடற்காற்று அவன் காதிலே ஊதியும் சென்றது.

அவன் அவளை நெருங்கினான். அவள் மோகனப் புன்முறுவல் செய்தாள். அடுத்த விநாடி அவன் வலியக் கரங்களிலே அவள் சிறைப்பட்டுக் கிடந்தாள். முகந்தான் குழந்தை முகம் இவருக்கு. மற்றபடி?” என்று நினைத்த அவள் மேலே நினைக்கவும் முடியாமல் வெட்கி நின்றாள். அவள் மட்டுமா வெட்கினாள்! வானத்தில் ஓடிய மதியும் வெட்கி தன் முகத்தை ஒருமுறை மேகக் கூட்டத்தில் புதைத்துக் கொண்டது.

தமிழ் நாட்டின் கரை, தூரத்தே மறைந்து கொண்டே நின்றது. மரக்கலத்தின் உள்ளே இருந்த அறையிலும் எத்தனை உணர்ச்சிக் கரைகள் உடைந்தன! வரையறைகள் அறுந்தன!

கரையும் வரையறையும் இயற்கையின் சிருஷ்டிகள். ஆனால், அவற்றைக் கடப்பதும் உடைப்பதும் மனிதனின் முயற்சி; இது மனிதன் உதயமான நாளாய் இருந்து வரும் இயற்கையின் நியதி.

இரண்டாம் பாகம் முற்றும்

Previous articleMannan Magal Part 2 Ch 35 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch1 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here