Home Historical Novel Mannan Magal Part 2 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

79
0
Mannan Magal part 2 Ch 4 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 4 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 பாழடைந்த கோட்டை

Mannan Magal Part 2 Ch 4 | Mannan Magal | TamilNovel.in

இரண்டு நாள்களாகப் படாத பாடெல்லாம் பட்டு, மற்றப் படைத்தலைவர்களையெல்லாம் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு, எப்படியாவது கரிகாலன் திட்டத்தை உடைத்து வேங்கிமீது போர்ப்பறையைக் கொட்டிவிடுவதென்ற திட சித்தத்துடன் மந்திராலோசனை மண்டபத்தில் திடும் பிரவேசமாக நுழைந்த பிரும்ம மாராயன், அங்கு தனக்கு ஒரு பேரிடி காத்திருக்குமென்றோ, கடந்த இரண்டு நாள்களில் தனக்குத் தெரியாமலே ஏற்பட்ட முடிவுகள் தன் பதவிக்கே பெரும் யமனாக வந்து வாய்த்திருக்கு மென்றோ அறியாததால், வந்தியத்தேவரின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அடியோடு நிலை கலங்கிப் போனான். போரில் பெரிய பெரிய ஈட்டிகள் வந்து பாய்ந்த சமயங்களில், ஆடாமல் அசையாமல் இரும்புச் சுவர் போல் நிற்கக்கூடிய அவனது பிரும்மாண்டமான சரீரம்கூட ஒருகணம் லேசாக ஆடியது. அந்தணனான பிரும்ம மாராயனை மட்டுமென்ன, வந்தியத்தேவரின் சொற்கள் பிரும்ம மாராயன் கட்சியை ஆதரித்து, அவனுடன் கடுவேகமாக உள்ளே நுழைந்த மற்றப் படைத் தலைவர்களிடையேயும் குழப்பத்தையும் கலவரத்தையும் விளைவித்தன. அவர் பேசியதைக் கேட்ட படைத்தலைவர்கள், ‘ஒன்று வந்தியத்தேவர் சுயபுத்தியை இழந்திருக்க வேண்டும்; அல்லது கரிகாலன் பெரிய மந்திரவாதியாயிருக்க வேண்டும். இல்லாவிடில் அந்த வார்த்தைகள் வந்தியத்தேவரிடமிருந்து வெளிவர முடியுமா?” என்று திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துப் பிரமித்து நின்றுவிட்டார்கள்.

இராஜராஜ சோழதேவன் காலத்திலிருந்தே எத்தனையோ போர்களையும், படைத்தலைவர்களையும், படைத்தலைவர்களின் பதற்றங்களையும் பார்த்திருந்த வல்லவரையரான வந்தியத்தேவர் முகத்தில் ஆரம்பத்திலிருந்த புன்னகை, படைத்தலைவர்கள் காட்டிய அத்தனை பதற்றத்துக்குப் பிறகும் சிறிதுகூட மறையவில்லை. பிரும்ம மாராயன் வாயுவேகத்தில் உள்ளே நுழைந்து, “வேங்கி நாட்டுச் சோழ தூதன் என்ற முறையில் நான் பேச வந்திருக்கிறேன்…” என்று பேச்சைத் துவக்கியபோது, பக்கத்தே அமர்ந்திருந்த அரையன் ராஜராஜனைப் பார்த்து எத்தகையை புன்னகையை முகத்தில் படரவிட்டுக் கொண்டாரோ, அதே மந்தகாசத்துடனே பிரும்ம மாராயனுடைய இரண்டாவது கேள்விக்கும் பதில் சொன்னார். மேற்கொண்டு நடந்த சம்பாஷணை பூராவிலும், அந்த மந்திராலோசனை மண்டபத்திலிருந்த அநேகர் நிதானத்தை இழந்தாலும், வந்தியத்தேவரின் அடக்கமோ, நிதானமோ சற்றும் குலையவே இல்லை.

தன்னைப் பார்த்து வந்தியத்தேவரும் அரையன் ராஜ ராஜனும் புன்முறுவல் செய்ததைச் சகிக்க முடியாத உஷ்ண சித்தத்துடன், “இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று, இரண்டாம் முறையாக இரைந்தான் பிரும்ம மாராயன்.

வந்தியத்தேவரின் குரல் மிக அடக்கமாகவே ஒலித்தது. ஆனால், அதில் ஓரளவு எச்சரிக்கையும் கண்டிப்பும் கலந்தேயிருந்தன. “சிரிப்புக்கு மட்டுமென்ன பிரும்ம மாராயரே, இதில் பதற்றத்துக்கும் இடமில்லை!” என்றார் வந்தியத்தேவர்.

“சில சந்தர்ப்பங்கள் எந்த மனிதனையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும்” என்று மீண்டும் படபடப்புடன் பேசிய பிரும்ம மாராயன், தன்னுடன் வந்த மற்ற படைத்தலைவர்கள் மீதும் தனது கண்களை ஓட்டித் தன் பக்கமும் பல மானதுதானென்பதை வந்தியத்தேவருக்குவலியுறுத்தினான்.

பிரும்ம மாராயனுடைய கண்ணோட்டத்தை மின்னல் வேகத்தில் கவனித்த வந்தியத்தேவர், மீண்டும் சாதாரணமாகவே பதில் சொல்லத் தொடங்கி, “பிரும்ம மாராயரே! இங்கு நாம் ஒருவர் மீது ஒருவர் கட்சி கட்ட வரவில்லை. இராஜேந்திர சோழதேவரின் பரந்த சாம்ராஜ்யத்தை மேலும் பரப்ப மந்திராலோசனை செய்யக் கூடியிருக்கிறோம். இங்கு யார் எதைச் சொல்கிறார்களென்பது முக்கியமல்ல. சொல்லப்படும் விஷயம் எது, அதனால் போர்நிலை எத்தனை தூரம் பாதிக்கப்படுகிறது என்பது தான் முக்கியம். உமது யோசனை தமிழ்ப் பேரரசின் விஸ்தரிப்புக்குத்துணை செய்யக்கூடியதா யிருந்தால், இத்தனை படைத்தலைவர்களின் ஆதரவு உமக்குத் தேவையில்லை. உமது யோசனையே உமக்குச் சரியான துணையாக நிற்கும்” என்று ஏதோ ஒரு சிறு குழந்தைக்குப் புத்திமதி சொல்வது போல் பேசினார்.

வந்தியத்தேவரின் அடக்கமும் பேச்சும் பிரும்ம மாராயனுடைய எரிந்த சித்தத்தில் எண்ணெயை வார்க்கவே, அவன் கடும் கோபத்துடன் கேட்டான். “இங்கு எதைப்பற்றி யோசனை செய்கிறோம்? வேங்கிப் போரைப் பற்றித்தானே?” என்று.

“இல்லை; தமிழ்ப் பேரரசைக் கங்கை வரையில் விஸ்தரிப்பதைப் பற்றி” என்றார் வந்தியத்தேவர்.

“கங்கை செல்ல வேங்கியைத் தாண்டித்தானே செல்ல வேண்டும்?” பிரும்ம மாராயன் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, வெகு சாமர்த்தியமாகத் தான் எதையோ கேட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டான்.

கல்லுப் பிள்ளையார் மாதிரி எதற்கும் அசையாமல் உட்கார்ந்திருந்த வந்தியத்தேவர், ஆமென்பதற்குத் தலையை மட்டும் ஆட்டினார்.

“வேங்கியைத் தாண்டிச் செல்வதானால், வேங்கியுடன் போரிடாமல் எப்படிச் செல்ல முடியும்?” என்று கேட்டான் பிரும்ம மாராயன் மறுபடியும்.

“வழியைத்தான் கரிகாலன் சொல்லிவிட்டானே!”

“கரிகாலன்! இந்தச் சிறுவன்! இவன் எத்தனை போர்களைக் கண்டிருக்கிறான்? என்ன அநுபவம் இருக்கிறது இவனுக்கு?”

“அநுபவம் அத்தனையில்லை; ஆனால் அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது.”

“அப்படியானால், அவன் யோசனைப்படி போரை நிறுத்தப் போகிறீர்களா?”

“அப்படித்தான் உத்தேசம்.”

“இதற்கு அரசர் சம்மதம் வேண்டாமா?”

“வேண்டும்.”

“பெற்றுவிட்டீர்களா?”

“இல்லை; பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை யிருக்கிறது.”

“நம்பிக்கைக்கு ஆதாரம்?”

“கரிகாலனின் மாசற்ற திட்டம்.”

“அந்தத் திட்டத்திற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வேங்கி நாட்டிலுள்ள சோழதூதன் என்ற முறையில், இத்திட்டத்தை எதிர்க்க எனக்கு அதிகார மிருக்கிறது.”

இந்தக் கட்டத்தில்தான் வந்தியத்தேவரும், அரையன் ராஜராஜனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று இடியென வார்த்தைகளை உதிர்த்தான் பிரும்ம மாராயன்.

“தாங்கள் இனி வேங்கி நாட்டுச் சோழ தூதர் என்ற முறையில் பேச முடியாது” என்று மெல்லச் சொன்னார் வந்தியத்தேவர்.

“ஏன் அந்தப் பதவியைக் கரிகாலருக்கு அளித்து விட்டீர்களோ?” என்று சொல்லி ஏளன நகை நகைத்த பிரும்ம மாராயன் முகம், அடுத்த விநாடி வந்தியத்தேவரிடமிருந்து உதிர்ந்த வார்த்தைகளால் செவ்வானம் போல் சிவந்துவிட்டது.

“ஆம். தங்களுக்குப் பதில் கரிகாலனையே வேங்கி நாட்டுச் சோழ தூதராக நியமித்திருக்கிறோம். இதில் ஏளனத்துக்கு இடமில்லை பிரும்ம மாராயரே” என்றார் வந்தியத்தேவர்.

அந்தப் பதில், பெரும் சூறாவளியால் சலனப்பட்டு அலைமோதிக் கொண்டிருந்த நீரை, ஏதோ மாயக் காற்று உறைய வைப்பதுபோல், அந்த மந்திராலோசனை மண்டபத்தின் சூழ்நிலையை அடியோடு உறைய வைத்து விட்டதால், பிரும்ம மாராயன் மட்டுமின்றி, மற்றப் படைத் தலைவர்களும் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள். அளவுக்கு அதிகமாக நீண்ட அந்த மௌன நிலையைப் பிரும்ம மாராயனே துண்டித்து, “வந்தியத்தேவரே! தாங்கள் மன்னர்பிரான் உறவினராயிருக்கலாம். ஆனால், தமிழ் நாட்டு மரபினர் முறைக்கு விரோதமாக எதையும் செய்ய முடியாது. தூதர்களை நியமிக்கும் உரிமை அரசர் ஒருவருக்குத்தான் உண்டு. தூதர்களை மாற்றும் உரிமையும் அவருக்குத்தான் இருக்கிறது. ஆகவே, வேங்கி நாட்டில் நான் வகிக்கும் பதவியிலிருந்து என்னை நீக்க உங்களுக்கு ஏது அதிகாரம்? எங்கிருந்து கிடைத்தது?” என்று துணி வுடனே கேட்டான்.

“அரசரிடமிருந்து கிடைத்தது பிரும்ம மாராயரே! இதோ இந்த ஓலையைப் பாரும்; யாரையும் அகற்றவோ நியமிக்கவோ எனக்குப் பூரண உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறிய வந்தியத்தேவர் மடியிலிருந்த ஓர் ஓலையை எடுத்து பிரம்ம மாராயனிடம் நீட்டியதோடல்லாமல், “இதை உமது சகாக்களிடமும் காட்டும்” என்று, மற்றப் படைத்தலைவர்களைப் பார்த்துக் கேலியாகவும் . கண்களை ஓட்டினார்.

ஓலையை வாங்கிப் படித்து முடித்த பிரும்ம மாராயன், மேற்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் மந்திரத்தால் இயக்கப்பட்ட சிலைபோல் நின்றான். அவனிடமிருந்து ஓலையை வாங்கிப் படித்த சகாக்களின் முகத்திலும் ஈயாடவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு அவர்கள் முகத்தில் தோன்றிய குறி, ‘எதற்காக இந்தப் பிரும்ம மாராயருடன் சேர்ந்தோம்’ என்ற சொற்களைப் பறையறிவித்துக் கொண்டிருந்தது.

“ஓலையைப் படித்து முடித்தாகிவிட்டதா?” என்று வந்தியத்தேவர் மீண்டும் கேட்டார்.

“ஆகிவிட்டது. இம்முறை பிரும்ம மாராயன் குரலில் பணிவும் துக்கமும் நிரம்பிக் கிடந்தன.

சோழர்கள் சேவையிலேயே காலத்தைச் செலவிட்ட அந்தப் படைத்தலைவன் முகத்தில் தோன்றிய துக்கத்தையும் தழுதழுத்த குரலையும் கேட்ட வந்தியத்தேவரின் கருணை இதயம் கரையவே, அவர் பிரும்ம மாராயனுக்குச் சமாதானமூட்டும் முறையில் பேச முற்பட்டு, பிரும்ம மாராயரே, தவறாக விஷயங்களை அர்த்தம் செய்து மனங்கலங்காதீர்கள். தங்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் வெகு நாள்களாக இருந்து வருகிறது. அரையன் ராஜராஜனுக்கு அடுத்தபடியாகத் தலைமை வகிக்கக்கூடிய சோழநாட்டுப் படைத்தலைவர் தங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. தங்களை இதுவரை வேங்கியை விட்டு அகற்றாத காரணம் தங்களைப் போல் அனுபவம் வாய்ந்த தூதர் யாரும் கிடைக்கவில்லை என்பதுதான்…” என்றார்.

“இப்பொழுது அநுபவசாலி கிடைத்துவிட்டாராக்கும்” என்று, பிரும்ம மாராயன் தன் சுபாவத்தை விடாமல் குறுக்கே பாய்ந்தான்.

“முன்பேதான் சொன்னேனே; அநுபவசாலி கிடைக்கா விட்டாலும் அறிவாளி கிடைத்திருக்கிறான். பிரும்ம மாராயரே! வேங்கியை விரோதித்துக்கொண்டு கங்கைக் கரைக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பதைக் கரிகாலன் எடுத்துக் காட்டினானே, அதற்கு நாம் யாராவது மறுப்புச் சொல்ல முடிந்ததா? இல்லை; அப்படி மாற்றுத் திட்டம் கிடைக்காதபோது நல்ல திட்டத்தை ஒப்புக் கொள்வது நமது கடமையல்லவா? கரிகாலன் வாதத்தில் சரக்கிருக்கிறது என்பதைப் போரில் நம் எல்லோரையும் விட அநுபவமுள்ள அரையன் ராஜராஜன் ஒப்புக்கொள்கிறார். ஆகவே, அதை நாம் எதிர்த்துப் பிடிவாதம் பிடிப்பதில் பயனென்ன இருக்கிறது? காரியம் வெற்றிகரமாக நிறைவேற, கரிகாலன் திட்டத்தை நாங்கள் ஒப்புக் கொண்டோம். அதை நிறைவேற்றி வைக்க அவனுக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுப்பதென்றும் தீர்மானித்தோம்.” என்று சொல்லிய வந்தியத்தேவர், அரையன் ராஜ ராஜனைத் திரும்பிப் பார்த்தார்.

‘’அதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஆசனத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அரையன் ராஜராஜன், தன் கூரிய விழிகளைப் பிரும்ம மாராயன் மீது நாட்டினான்.” பிரும்ம மாராயரே, இந்த நடவடிக்கையை எடுக்கு முன்பாக இரண்டு நாள்கள் தீவிரமாகச் சிந்தனை செய்தோம். வேறு வழி புலப்படவில்லை. எந்தவிதமாகப் பார்த்தாலும் கரிகாலன் கூறியதைவிடச் சிறந்த வழி சிந்தனைக்கு எட்ட வில்லை. நாம் ஜெயசிம்மன்மீது இப்பொழுது நேராகப் படையெடுத்தால், அவனை முறியடித்து விடலாமென்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால், அந்த முயற்சியில் நமது படையில் பாதி அழிந்துவிடும். கலிங்கன், ஒட்டரன், ஜெயசிம்மன் இம் மூன்று பேர்களையும் நாம் ஏககாலத்தில் எதிர்க்க வேண்டியிருக்கிறது. உமக்கும் போர் அநுபவமிருக்கிறது. நன்றாக யோசித்துப் பாரும்” என்று கூறினான்.

பிரும்ம மாராயன் இயற்கையாகக் கெட்ட குணமுடை யவனல்ல. ராஜபக்தியில் வந்தியத்தேவருக்கோ அரையன் ராஜராஜனுக்கோ வேறு யாருக்கோ சற்றும் குறைந்தவனும் அல்ல. சீற்றமும், கரிகாலன் மீது வேங்கி நாட்டில் ஏற்பட்ட சந்தேகமும் அவன் மூளையைப் பெரிதும் குழப்பியிருந்தன. ஒரு சிறுவனுக்காகத் தன்னைப் பதவியிலிருந்தே நீக்குகிறார்கள் என்ற எண்ணமும் அவன் இதயத்தைப் பிளந்து அறிவையும் கோபத்துக்கு அடகு வைத்திருந்தது. இந்த உணர்ச்சிகளை வந்தியத்தேவர் தெரிவித்த தகவலும் அரையன் ராஜராஜனின் சொற்களும் ஓரளவு உடைத்தெறியவே நிதானமாக உள்ள நிலையைச் சிந்தித்த பிரும்ம மாராயன் புத்திக்கும் மெள்ள மெள்ள நியாயம் எது என்பது புலனாயிற்று. ஆகவே, கடைசியாகத் தாராள புத்தியுடன் பேசத் தொடங்கி, “படைத்தலைவரே! கஷ்டங்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவற்றைச் சமாளிக்க இந்தச் சிறுவனால் முடியுமா? யார் கண்ணிலும் மண்ணைத் தூவவல்ல ஜெயசிம்மனை ஏமாற்றி, நம்முடன் சமாதானத்துக்கு இழுக்க இவனால் முடியுமா? முசங்கிப் போரை ஜெயசிம்மன் மறப்பானா? அதில் அவன் தங்களிடம் முறியடிப்பட்டு, இன்னும் ஒரு வருடம்கூட ஆக வில்லையே!” என்றான்.

அரையன் ராஜராஜன் கண்கள் கரிகாலனை நோக்கித் திரும்பின. அப்படித் திரும்பியதன் பொருளைப் புரிந்து கொண்ட கரிகாலன், “பிரும்ம மாராயரே! ஏமாற்றுவது என்பது குறுக்கு வழி. அதை எந்த அறிவாளியும் செய்ய முடியும். நேர்மையான பாதைதான் கஷ்டமானது” என்று கூறினான்.

“நீ ஜெயசிம்மனை ஏமாற்றிவிடுவாயா?”

“ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“நம்பிக்கைக்குச் சான்று?”

“ஏற்கெனவே அவனிடமிருந்து நான் தப்பி வந்திருப்பது…”

“அரசருக்கு வந்தியத்தேவர் சமாதானம் சொல்ல அது போதாது கரிகாலா! வேறு சரியான அத்தாட்சி வேண்டும். ‘கரிகாலன் ஏற்கெனவே இதைச் செய்திருக்கிறான். ஆகையால் அவனை நம்பி இந்தப் பெரிய சாம்ராஜ்யப் பணியை அவனிடம் ஒப்படைத்தேன்’’ என்று, அவர் எடுத்துச் சொல்ல வசதி வேண்டும். இங்குள்ள மற்ற படைத்தலைவர்கள் சாதிக்க மடியாத எந்தக் காரியத்தை நீ சாதித்திருக்கிறாாய்? இத்தனை அனுபவசாலிகள் இருக்க உன்னை ஏன் அரையன் ராஜராஜரும் வந்தியத்தேவரும் ராஜதந்திரிகளே மேற்கொள்ள அஞ்சும் இந்த அலு வலுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்?”

பிரும்ம மாராயன் கேட்ட இந்தக் கேள்வி கரிகாலன் இதழ்களிடையே ஒரு விஷமப் புன்முறுவலைத் தவழ வைத்தது. மெள்ள உள்ளுக்குள்ளேயே நகைத்துக் கொண்ட கரிகாலன், பிரும்ம மாராயனை நோக்கி, “படைத்தலைவரே! அத்தாட்சி நான் காட்டுவேன். மற்ற வர்கள் செய்ய முடியாத எதை நான் செய்தேன் என்ப தையும் எடுத்துச் சொல்ல முடியும். ஆனால் தற்புகழ்ச்சியில் எனக்கிஷ்டமில்லை…” என்று இழுத்தான்.

வந்தியத்தேவரின் கண்களில் திடீரென ஒரு புத்தொளி பிறந்தது. “என்ன அத்தாட்சி கரிகாலா?” என்று வினவினார்.

“காட்ட உத்தரவா?” என்று பணிவுடன் வினவினான் கரிகாலன்.

“காட்டப்போகிறாயா!” என்றான் அரையன் ராஜராஜன், ஆச்சரியத்துடன்.

“எதை?” வந்தியத்தேவரின் குரலிலும் வியப்புக் கலந்திருந்தது.

“தங்கள் சாம்ராஜ்யப் படைகள் நீண்ட நாள்களாகக் கண்டுபிடிக்க முடியாத பொக்கிஷம்!” என்றான் கரிகாலன்.

வந்தியத்தேவரின் கண்களும் அரையன் ராஜராஜன் கண்களும் சந்தித்தன. சபையிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பரபரப்பை இன்னும் அதிகமாக்கும் எண்ணத்துடன், மடியிலிருந்த செங்கதிர் மாலையை எடுத்து அந்த மந்திராலோசனை மண்டபத்தின் நடுவே தன் கையால் தூக்கிப் பிடித்த கரிகாலன், “வந்தியத் தேவரே! எந்தச் செங்கதிர் மாலைத் திருட்டைக் கண்டு பிடிக்க உங்கள் படைகள் மாதக்கணக்கில் திரிந்தும் பயனில்லையோ, எந்தச் செங்கதிர் மாலை இராஜேந்திர தேவர் மெய்க்கீர்த்திகளில் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றதோ, எதைப் பறிக்கச் சேரமன்னன் தன் ஒற்றர்களை ஏவினானோ, அதே செங்கதிர் மாலை இதோ இருக்கிறது. இதை மன்னருக்கு என் காணிக்கையாகச் சமர்ப்பியுங்கள். இதுவே என் திறமைக்கும் அத்தாட்சியாகட்டும்!” என்று கூறி, மாலையை வந்தியத்தேவரிடம் ஒப்படைத்தான்.

மந்திராலோசனையிலிருந்த அத்தனை படைத் தலைவர்களும் மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பங்களைப் போலானார்கள். பிரும்ம மாராயன் மனமோ வேங்கி நாட்டில் நடந்த பல சம்பவங்களில் சுழன்று சுழன்று, எது உண்மை எது பொய் என்பதை அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அன்று சைவத்துறவியான ஜெயவர்மன், தன் முன்பாகவே, ‘கரிகாலா! செங்கதிர் மாலையைக் கொடுத்துவிடு’ என்று கூறிய காட்சியும், பின்பு அவன் சிறைக்கம்பிகளை அறுத்துவிட்டு ஓடிவிட்ட சம்பவமும், ஒன்றன்பின் ஒன்றாகப் பிரும்ம மாராயன் மனக்கண் முன்னே எழுந்து நின்றாலும், அவன் ஏதும் பேசமாட்டாதவனாய்க் கல்லெனச் சமைந்து நின்றான். ஒருமுறை சுற்றுமுற்றும் கண்களை ஓட்டிய பிரும்ம மாராயன், தான் அதற்குமேல் எதைச் சொன்னாலும் அந்தச் சபையில் எடுபடாது என்பதைப் புரிந்துகொண்டவனாய், நீண்ட பெருமூச்சொன்றை விட்டான்.

பிரும்ம மாராயன் பேச்சினாலும் அவன் கிளப்பிய பிரச்சினைகளாலும் வந்தியத்தேவருக்கு ஏதாவது சந்தேகமிருந்தால், அந்தச் சந்தேகத்தைச் செங்கதிர் மாலை அடியோடு உடைத்துவிட்டது. கரிகாலன் புதுப்பதவியை அந்த மாலை நன்றாக ஊர்ஜிதம் செய்ததன்றி, அவன் புகழையும் அடுத்த நாளே படைவீரர்களிடையே பெரிதும் ஏற்றிவிட்டது. ஆனால் அந்தப் புகழை ஏற்றுக் களிக்கவோ, மன்னன் மகளைக் காணுவதில் காலதாமதம் செய்வதிலோ கருத்துக் கொள்ளாத கரிகாலன், அடுத்த நாள் மாலையே முத்துத்தேவனுடன் வேங்கி நாட்டுக்குப் பயணமானான்.

சிறு காவற் படையையாவது உடன் அழைத்துச் செல்லும்படி அரையன் ராஜராஜன் எத்தனை சொல்லியும் கேட்காமல், முத்துத்தேவனை மட்டும் துணை கொண்டு வேங்கியை நோக்கி விரைந்த கரிகாலன், இரண்டாவது நாள் கிருஷ்ணாவின் மேற்குக் கோடியிலிருந்த ஒரு சிறு கோட்டைக்கருகே வந்து சேர்ந்தான். “முத்து! இதென்ன கோட்டை தெரியுமா உனக்கு?” என்று கேட்டான்.

“தெரியும்; சாளுக்கியர்களின் பாழடைந்த கோட்டை இது. ஏதோ போருக்குக் காவல் வைத்திருக்கிறார்களே யொழிய, அநேகமாக வழிப்போக்கர் தங்குவதற்கே உபயோகப்படுகிறது. முசங்கிப் போரில் அரையன் ராஜராஜன் சாளுக்கியரை முறியடித்த பிறகு இந்தப் பிராந்தியத்திலுள்ள பல கோட்டைகள் இப்படிக் கேட்பாரற்றுக் கிடக்கின்றன” என்றான் முத்துத்தேவன்.

“அப்படியானால், இன்றிரவை இங்கேயே கழிப்போம்” என்று கூறிய கரிகாலன் கோட்டையை நோக்கி குதிரையைத் தட்டிவிட்டான். முத்துத்தேவன் ஊகம் சரியாகவே இருந்தது. கோட்டை கிட்டத்தட்ட சத்திரம் போல்தான் உபயோகப்பட்டிருந்தது. கோட்டைத் தலைவனோ அவ்விருவருக்கும் மாடியில் ஓர் அறையை ஒழித்துக் கொடுத்தான். கரிகாலன் காட்டிய சோழ நாட்டுப் பொற்காசுகள், கோட்டைத் தலைவனை அடிமையாக அடித்துவிட்டபடியால், இராப் போசனமும் பலமாகவே கிடைத்தது.

மெள்ள இரவு ஏறியது. முத்துத்தேவன் களைப்பால் நன்றாக உறங்கினான். ஆனால் எண்ணங்கள் பல உள்ளே ஓடியதால் தூக்கம் வராத கரிகாலன், மாடித் தாழ்வாரத்தில் வந்து தூரத்தே தெரிந்த கிருஷ்ணா நதியை உற்று நோக்கினான். கிழக்கே வெகு வேகமாகப் பாய்ந்து சென்ற கிருஷ்ணாவின் பிரவாகம், அவன் சிந்தனையை வேங்கி நாட்டிலிருந்த சித்தினிப் பெண்ணிடம் இழுத்துச் சென்றது. நீண்டநேரம் கனவுலகில் சஞ்சரித்து இன்பத்தை நுகர்ந்து கொண்டிருந்த அவன் சிந்தனைக் கோட்டையைத் திடீரென்று மாடிப்படிக்குக் கீழே கேட்ட இருவர் குரல்கள் தகர்க்கவே, செவிகளைத் தீட்டிக்கொண்டு பேச்சைக் கேட்டான்.

“மேலே சோழர் படையைச் சேர்ந்த இருவர் வந்திருக் கிறார்களா?” என்றது ஒரு குரல். “ஆமாம்” என்றது மற்றொரு குரல்.

இரண்டாவது குரல் கோட்டைத் தலைவனுடையது என்பதைப் புரிந்துகொண்ட கரிகாலனுக்கு, முதல் குரலும் பழக்கமானதாகத் தெரிந்தாலும், யாருடைய குரல் என்று திட்டமாகத் தெரியவில்லை.

“ஒருவன் முகம் குழந்தை முகம் போலிருந்ததா?” என்று மேலும் கேட்டது முதல் குரல்.

“ஆம்” என்றது இரண்டாவது குரல்.

“அப்படியானால் வந்திருப்பவன் கரிகாலன்தான். நான் வீரர்களை அழைத்து வருகிறேன். அதுவரை நீ அவர்கள் அறையைக் காவல் புரிந்துகொண்டிரு. இன்றிரவே அவர்களைக் கைது செய்துவிட வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் அந்தச் சிறுபயல் தப்பிவிடுவான்” என்று கூறிய முதல் குரலைத் தொடர்ந்து, வேகமாகச் செல்லும் காலடிகள் கேட்டன.

கரிகாலன் ஓசைப்படாமல் அறைக்குள் திரும்பிவந்து, முத்துவை அசைத்து எழுப்பி, “முத்து! வாளை உருவிக் கொள்!” என்று எச்சரித்துவிட்டு, தானும் வாளை உருவிக் கொண்டு, அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கையும் ஊதி அணைத்துவிட்டான். விநாடிகள் நகர்ந்தன. நான்கைந்து வீரர்கள் படிகள் மீது ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. “முத்து! நீ வாயிற்படிக்கெதிரில் நில். உள்ளே முதலில் நுழைபவன் மீது உன் கத்தியை நீட்டு. ஆனால் அவனைக் கொல்லாதே” என்று காதோடு காதாகக் கூறிவிட்டு, வெகு வேகமாக நாலே அடியில் கதவுப்பக்கம் சென்று கதவின் மறைவில் நின்று, தன் வாளையும் ஆசையுடன் ஒரு முறை தடவிக் கொடுத்துக் கொண்டான். வீரர்களும் துரிதமாகப் படிகளைக் கடந்து கதவை அணுகினார்கள். முதலில் வந்தவன் மெள்ளக் கதவைத் திறந்தான்.

Previous articleMannan Magal Part 2 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here