Home Historical Novel Mannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

97
0
Mannan Magal part 2 Ch 5 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free
Mannan Magal Part 2 Ch 5 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 துறவியாரின் தகவல்

Mannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

வெளியே பால் நிலவு படர்ந்து கிடந்தாலும், கோட்டையின் முன்னணிப் பகுதியிலிருந்த காரணத்தால், அதிகச் சாளரங்கள் வைக்கப்படாத அந்த அறையில் காரிருளே சூழ்ந்து கிடந்தது. அம்புகள் எய்வதற்காக மூலைகளை யொட்டி அமைக்கப்பட்டிருந்த ஓரிரு சாளரங்களும் சாத்தப்பட்டிருந்தமையால், அறைக்குள் வெளிச்சம் நுழைவது அடியோடு சாத்தியமில்லாமல் போய்விட்டது. கரிகாலனைக் கைது செய்யும் நோக்கத்துடனும், மிக எச்சரிக்கையுடனும் எதிரிகளிலொருவன் கதவைத் திறந்தபின்புகூட, அறையை அடுத்து நின்ற தாழ்வாரம் வெளியே இருந்த வெளிச்சத்தைப் பெரிதும் வடிகட்டி விட்டதால், மிக மங்கலான ஒளியே அறைக்குள் பாய்ந்தது. அப்படிப் பாய்ந்த ஒளியும் திறந்த கதவுக்கு நேரே விழுந்த படியால், கதவின் ஓரத்தில் மறைந்து நின்ற கரிகாலனையும் கதவின் எதிர்த் திக்குக்குச் சற்று அப்பால் நின்ற முத்துத் தேவனையும் பார்க்கவோ, அவர்கள் இருப்பிடத்தை ஊகிக்கவோ எதிரிகளால் முடியவில்லை.

அறையின் விளக்கு முன்னெச்சரிக்கையுடன் ஊதி விடப்பட்டிருந்த படியாலும், கதவு திறந்தபின்பும் உள்ளே இருள் சூழ்ந்தே நின்றபடியாலும், உள்ளிருந்த மனிதர்களின் நடமாட்டமும் ஏதும் கேட்காததாலும், வெளியேயிருந்து கதவைத் திறந்தவனும் மிக ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ளத் தொடங்கி, “அறையின் கதவை நன்றாகக் காவல் புரிந்து நில்லுங்கள்; யாராவது வெளியே ஓட முற்பட்டால் கருணையை மருந்துக்கும் காட்டாமல் வெட்டித் தள்ளுங்கள்” என்று உத்தரவிட்டு, அறையின் வாயிற்படியிலிருந்தபடியே, “கரிகாலா! வெளியே வந்துவிடு. இவ் விடத்தில் ஆறு வீரர்கள் இருக்கிறார்கள். கீழே இன்னும் பதின்மரை நிறுத்தியிருக்கிறேன். ஆகவே எதிர்ப்பினால் பயனில்லை. உன் குள்ள நரித் தந்திரம் பலிப்பதற்கு இங்கு வழியில்லை. உன் புரட்டு வார்த்தைகளைக் கேட்டு ஏமாறுவதற்கும் இங்கு யாருமில்லை. பேசாமல் வா” என்று அதிகாரத் தோரணையில் அழைத்தான்.

கரிகாலனோ முத்துத்தேவனோ வாயைத் திறக்காமல் நின்ற இடங்களிலேயே நின்றபடியால் பதிலேதும் கிடைக்காத எதிரிவீரன், “கரிகாலா! பிடிவாதம் செய்யாதே; வந்து விடு! உன்னைக் கொல்லச்சொல்லி எனக்கு உத்தரவில்லை. ஆனால் தப்ப முயன்றால், உன்னை உயிரோடு மன்னரிடம் கொண்டு போகாவிட்டாலும் உன் சடலத்தையாவது கொண்டு போய்ச் சேர்க்கத் தவறமாட்டேன். ஆகவே சரண் அடைந்துவிடு” என்று மீண்டும் கூறினான்.

அதற்கும் பதில் கிடைக்காமற் போகவே, எதிரி வீரன் தன்னுடன் வந்தவர்களை நோக்கி, “சரி, மயிலே மயிலே என்றால் இறகு போடாது போலிருக்கிறது. உங்களில் இருவர் போய்ப் பந்தங்களைக் கொளுத்திக்கொண்டு வாருங்கள். இருவர் என்னுடன் உள்ளே வாருங்கள்” என்று உத்தரவிட்டு உருவிய தன் வாளை நீட்டிய வண்ணம் அறைக்குள் அதிவேகமாக நுழைந்தான். அவன் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், கண்ணிமைக்கும் நேரத்தில் பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறின. உருவிய அவன் வாளை முத்துத்தேவன் வாள் ஒரு சுழற்றுச் சுழற்றிக் கீழே தாழ்த்திவிட்டு, அவன் மார்பைத் தடவி நின்றது. பின்புறத்திலிருந்த மற்றொரு வாளின் நுனி அவன் முதுகில் சற்றே அழுத்தியது. “துறவியாரே! வாளைக் கீழே போடுங்கள்; இல்லாவிடில் உங்கள் உடலில் எங்கள் இரு வாள்களும் நுழைந்துவிடும்” என்ற கரிகாலன் சொற்கள், மிக நிதானமாக, ஆனால் அழுத்தமாகவும் வெளிவந்தன.

மார்பில் ஒரு வாளும், முதுகில் ஒரு வாளும் தடவி நின்றதாலும், மனோதைரியத்தை விடாத சேர ஒற்றனான அந்தச் சைவத்துறவி, “கரிகாலா, நீ என்னைக் கொன்று பயனில்லை. மற்ற வீரர்கள் உன்னை வெட்டி எறிந்து விடுவார்கள். அந்தக் கதி இந்த இளவயதில் உனக்கு எதற்கு? நான் சொன்னபடி செய்தால் உனக்காக மன்னரிடம் நானே வாதாடுவேன். சொல்வதைக் கேள்; தைரியம் மனிதனுக்கு வேண்டியதுதான்; ஆனால் அசட்டுத் தைரியம் அனர்த்தத்திலேயே கொண்டுபோய் விடும்” என்றான்.

கரிகாலன் சைவத்துறவிக்குப் பதில் சொல்லாமல், முத்துத்தேவனிடமே பேசத் தொடங்கி, “முத்து! வாளை உறுதியாகச் சுவாமிகள் மார்பில் அழுத்திவை. சற்று அசைந்தாரானால், வாள் இவருடைய இதயக் குருதியை ருசி பார்க்கட்டும். நாம் அயருவோமா என்று பார்ப்பதற்கே நம்மிடம் பேச்சுக் கொடுக்கிறார் சுவாமிகள்” என்று கூறி விட்டுச் சைவத்துறவியை நோக்கி, “சாமியாரே! துறவிக்கு வாள் எதற்கு? கீழே எறிந்துவிடுங்கள். உமக்குப் பின்புறமும் முன்புறமும் நிற்பவர்கள் வேங்கி நாட்டு வீரர்களல்ல; எங்களை ஏமாற்றுவதும் அவ்வளவு எளிதல்ல” என்றான்.

சற்று நேரம் ஏதோ யோசித்த சைவத்துறவியும், வாளைக் கீழே எறிந்துவிட்டு, “இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்று குரலில் கோபம் கொந்தளிக்க வினவினான்.
துறவியாரே! தங்களுக்குத் துணையாக வந்திருக்கும் வீரர்களைக் கீழே அனுப்பிவிடுங்கள். நாம் சாவதானமாகப் பேசுவோம்” என்றான் கரிகாலன், ஏதோ பழைய நண்ப னொருவனைத் திடீரெனச் சந்தித்தவன், ஆசையுடன் பேச முற்படும் பாணியில்.

கரிகாலன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சைவத் துறவி யாரின் கோபத்தைப் பெரிதும் கிளப்பிவிட்டாலும், வேறு எதுவும் வழியில்லாதவராய் அவன் விருப்பப்படியே நடக்கத் தொடங்கி, தமது வீரர்களைக் கீழே சென்று மாடிப்படிக்கு அருகில் காவல் புரியுமாறு கட்டளையிட்டார். வீரர்கள் கீழே சென்றதும், கதவைத் தாளிட்ட கரிகாலன், விளக்கை மீண்டும் ஏற்றுமாறு முத்துத் தேவனுக்கு உத்தரவிட்டான். முத்துத்தேவனும் அறை மூலையில் கிடந்த வன்னிமரத் துண்டுகளைத் தேடியெடுத்து, இரண்டு முறை நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்துப் பொறிகளைக் கிளப்பி விளக்கை ஏற்றவே, அறையில் மீண்டும் ஒளி நாற்புறமும் சூழ்ந்தது. அந்த விளக்கொளியில் சைவத் துறவியின் முகத்தைக் கூர்ந்து நோக்கி அதில் ஆச்சரியம் பரிபூரணமாகப் படர்ந்திருப் பதைப் பார்த்து, “துறவியாரே! நீர் வியப்பில் ஆழ்ந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும்!” என்றான்.

“என்ன காரணம்?” என்று கேட்டார் சைவத்துறவி.

விளக்கை ஏற்ற வேண்டுமானால், எப்படியும் யாராவது ஒருவன் நெருப்பு எடுத்துவரக் கீழே போய்த் தானாக வேண்டும். அங்கு உமது வீரர்கள் எங்களில் ஒருவரைப் பிடித்துக்கொண்டால், மற்றொருவரை சிறை செய்வது சுலபம் என்று மனப்பால் குடித்தீர்கள். ஆனால் நெருப்பு இங்கேயே உற்பத்தியாவது உமக்கு வியப்பாயிருக்கிறது!” என்று கூறிய கரிகாலன், சைவத்துறவியை ஏற இறங்க நோக்கினான்.

சைவத்துறவியும் அவன் கண்களோடு தமது கண்களைத் தைரியமாகவே கலக்கவிட்டு, ஆமாம் கரிகாலா; அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இங்கேயே நெருப்பைக் கொண்டு வந்துவிட்டாயே!” என்று பதில் கூறியதுமல்லாமல், “அதென்ன மரத்துண்டுகள்? எவ்விதம் நெருப்பைக் கக்குகின்றன?” என்று கேட்டார்.

“துறவியாரே! வன்னி மரத்தின் கர்ப்பத்திலே நெருப்பு இருக்கிறது. இதைக் காளிதாசனே ரகுவம்ச மகா காவியத்தில் சொல்லியிருக்கிறான். வன்னி மரத்தை உராய வைத்து நெருப்புப் பொறிகளைக் கிளப்புவதும் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். சாளுக்கியர் நாட்டில் நெருப்பை அப்படி உற்பத்தி செய்வது மிக சகஜம். சாளுக்கியர்களிடம் சேவைக்கு அமர்ந்த உமக்கு இந்த அல்ப விஷயம் தெரியவில்லையே!” என்று சொல்லி நகைத்தான் கரிகாலன்.

சைவத்துறவியின் முகத்தில் ஆச்சரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் படர்ந்தது. “என்ன நான் சாளுக்கியர்களிடம் சேவைக்கு அமர்ந்துவிட்டேனா?” என்று வினவினார் சைவத்துறவி, அந்த ஆச்சரியம் குரலிலும் தொனிக்க.

“அமரவில்லையா?”

“அமர்ந்துவிட்டேன்; ஆனால் அது உனக்கெப்படித் தெரியும்?”
“உம்முடன் வீரர்கள் வந்திருக்கிறார்களே!”

“ஏன் அவர்கள் என்னைச் சேர்ந்த சேரநாட்டு ஒற்றர் களாயிருக்கக் கூடாதா?”

“இருக்கலாம்; ஆனால் சாத்தியமில்லை.”

“ஏன் சாத்தியமில்லை?”

கரிகாலன் உதடுகளில் விஷமமான புன்னகையொன்று படர்ந்தது. “துறவியாரே! நான் தர்க்கசாஸ்திரம் படித்தவன் என்று தங்களிடம் எத்தனை முறை கூறியிருக்கிறேன்?” என்று கேட்டான் கரிகாலன்.

“ஆமாம், கூறியிருக்கிறாய். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று சைவத்துறவியாரும் பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டார்.

“தர்க்கசாஸ்திரி எப்பொழுதும் விஷயங்களைத் தொகுத்துப் பார்ப்பான். முதன் முதலாக, சேரநாட்டுக்கும் வேங்கி நாட்டுக்குமிடையே சோழர்களின் பெரும்படை இருக்கிறது. அந்தப் படையைத் தனி ஒற்றனே ஊடுருவித் தப்பி வருவது கஷ்டம். ஆகவே, பல வீரர்களையும் அழைத்துக்கொண்டு தாங்கள் இங்கு விஜயம் செய்து என்னைக் கெளரவப்படுத்துவது முடியாத காரியம். தவிர தங்களுக்கு ஒரு தனிப் பதவியும் இருக்கிறது.”

“என்ன அது, எனக்குத் தனிப் பதவி?”

“தாங்கள் தான் செங்கதிர் மாலையைக் களவாடியவர் என்பது சோழர் படைகளுக்கு நன்றாகத் தெரியும். அல்லும் பகலும் தங்களைப் பிடிப்பதிலேயே நாட்டமுடையவர்களாய் வீரர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆபத்தில் தாங்கள் இங்கு வருவதே சிரமம். அப்படியிருக்க சேரமான் வீரர்களையும் திரட்டிக்கொண்டு வருவதென்பது கனவிலும் நடவாத காரியம். அதுமட்டு மல்ல; இன்னொரு விஷயத்தையும் யோசித்தேன்.”

“யோசனை பலமாகத்தானிருக்கிறது?” என்று பதில் சொன்னார் சைவத்துறவி மகிழ்ச்சியுடன்.

“யோசனை தர்க்கசாஸ்திரத்துக்கு இன்றியமையாதது. தெளிவாகச் சிந்திக்கும் திறன் உள்ளவனுக்கே அந்த சாஸ்திரம் பயனளிக்கும்” என்ற கரிகாலன், மேலும் சொன்னான்: “துறவியாரே! நான் தங்களைப் பிரும்ம மாராயன் சிறையிலிருந்து தப்புவித்தாலும், செங்கதிர் மாலையைக் கொண்டு போகாமல், இந்தப் பிராந்தியத்தை விட்டுத் தாங்கள் நகரமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அத்துடன் நான் வேங்கியை விட்டு அரிஞ்சயனை அழைத்துச் சென்ற விவரங்களையும் அறிந்திருப்பீர். ஆகவே எப்படியாவது என்னைப் பிடித்து, செங்கதிர் மாலையைக் கைப்பற்ற நீங்கள் முயலாமல் இருக்கமாட்டீர்கள் என்பதிலும் எனக்குச் சந்தேகமிருந்த தில்லை. ஜெயசிம்மனிடம் சேவை உமக்கு அந்த வாய்ப்பை அளிக்கும். ஆகவே, அவன் படையில் தாங்கள் சேர்ந்திருக் கிறீர்கள். ஏன், அப்படித்தானே?”

இந்த வார்த்தைகளைக் கேட்ட சைவத்துறவியார் கரிகாலனின் சிந்தனைத்திறனைப் பெரிதும் வியந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஜெயசிம்மன் சேரநாட்டு ஒற்றனை நம்புவானா?” என்று வினவினார்.

“நம்பவைப்பது தங்களுக்கு எளிது. என்னைப் பிரும்ம மாராயன் மாளிகையில் பார்த்ததையும், பிரும்ம மாராயன் தங்களைச் சிறையிட்டு, என்னை மகிழ்ச்சியுடன் மாளி கைக்குள் அழைத்துச் சென்றதையும் விளக்கியிருப்பீர்கள். அதில் தங்கள் சொந்த வியாக்கியானமும் கலந்திருந்ததால் ஜெயசிம்மனை நம்பவைப்பது ஒரு பெரிய காரியமல்ல” என்று கரிகாலன், மேலும் தன் ஆராய்ச்சித் திறனைக் காட்டினான்.

சைவத்துறவியார் நீண்ட நேரம் ஏதோ யோசித்துக் கொண்டே அறையில் சற்று நேரம் உலாவினார். அப்பொழுது அவர் காவி உடை அணிந்திருந்தாலும் அதையும் போர்ப்பாணியிலேயே இழுத்துக் கட்டியிருந்ததால் சற்றுக் கம்பீரமாகவே காணப்பட்டார். அவசிய மில்லாத காரணத்தால் தாடியைக் களைந்துவிட்டிருந்த அவர் முகம் வயதேறியிருந்தாலும், அழகாகவே காணப் பட்டதானாலும், அந்த அழகைச் சதா திருட்டுத்தனத்தைக் கொட்டிக்கொண்டிருந்த கண்கள் பெரிதும் கெடுத்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் தீவிர சிந்தனையுடன் உலாவிய அந்தக் கபட சந்நியாசி, கடைசியாகத் தன் கபடப் பார்வையைக் கரிகாலன் மீது திருப்பி, “கரிகாலா! இப்பொழுதுகூட ஓர் உதவி செய்! உன்னை இங்கிருந்து தப்பவைத்து விடுகிறேன்” என்றார்.

“என்ன உதவி வேண்டும்?”

“செங்கதிர் மாலையை என்னிடம் கொடுத்துவிடு.”

“அது என்னிடமில்லை.”

“எங்கிருக்கிறது? இராஜேந்திர சோழதேவனிடம் சேர்ப்பித்து விட்டாயா?”

இந்தக் கேள்விக்குக் கரிகாலன் உடனே பதில் சொல்ல வில்லை. ஒரு விநாடி யோசித்துவிட்டுப் பிறகு, “துறவி யாரே! அந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தைத் திருப்பிக் கொடுக்க யாருக்காவது மனம் வருமா?” என்றான்.

“வராது கரிகாலா! அப்படியானால் அதை எங்கு வைத்திருக்கிறாய்?”

“பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறேன்.”

“அந்த இடத்தை எனக்குச் சொல்லிவிடு. உன்னை இப்பொழுதே விடுதலை செய்கிறேன்.”

“எப்படி விடுதலை செய்வீர்?”

“நான் தேடிவந்த மனிதன் நீ அல்ல; தவறு நேர்ந்து விட்டது என்று சொல்லிவிடுகிறேன்.”

“துறவியாரே! தாங்கள் அப்படிச் சொன்னால் தற்சமயம் நான் தப்பலாம். ஆனால் தப்ப நான் இஷ்டப் படவில்லை. நான் இப்பொழுது போவதே ஜெயசிம்மனிடம்தான்” என்றான் கரிகாலன்.

தூக்கிவாரிப் போட்டது சைவத்துறவியாருக்கு. “என்ன, ஜெயசிம்மனிடமா?” என்று அதர்ச்சியடைந்தவர் போல் வினவினார்.

“ஆமாம் துறவியாரே! ஜெயசிம்மனிடம்தான்” என்றான் கரிகாலன்.

“உனக்குப் பைத்தியமா?”

“என்னைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறதா உமக்கு?”

“இல்லை. ஆனால் நீ செய்கிற காரியத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. உன்னைக் கோதண்டத்தில் மாட்டத் துடித்துக் கொண்டிருக்கின்றன ஜெயசிம்மனின் கைகள்.”

“அதே கைகள் என்னை ஆவலுடன் வரவேற்கவும் செய்யும்.”

“ஏன்? உன் மீது கொள்ளை ஆசையா சாளுக்கிய மன்னனுக்கு?”

“என்மீது ஆசையிருக்காது. ஆனால் வேங்கி நாட்டு அரியணை மீது ஆசையிருக்கிறது. அவன் மருமகன் விஜயாதித்தனுக்கு, அந்த அரியணையை அவனிடம் ஒப்புவிக்க என்னால் முடியும்.”

சைவத் துறவியின் கண்கள் மிக அகலமாக விரிந்தன. அவன் விழிகள் வீசிய பார்வையிலே எண்ணற்ற உணர்ச்சிகள் பாய்ந்து நின்றன. நெடுநேரம் வரை அவரிடமிருந்து வார்த்தைகள் எதுவும் வெளியே வரவில்லை. வார்த்தைகள் வெளியே வந்தபோது, கடுமையாகவும் கோபமாகவும் நெருப்பைக் கக்கிக்கொண்டே வந்தன.

“அடப்பாவி! கடைசியில் நீ இத்தனை அயோக்கியனா?” என்று சைவத் துறவி கூவினார்.

அதுவரை மௌனமாக நின்ற முத்துத்தேவன் கண்களில் தீப்பொறி பறந்ததன்றி அவன் வாளும் மெள்ள மெள்ளத் தரைப் பக்கத்திலிருந்து மேலே எழுந்தது. அந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்காத கரிகாலன், தன் பார்வையாலேயே முத்துத்தேவனை அடக்கிவிட்டு, சைவத் துறவியை நோக்கி, “துறவியாரே! தங்களைவிட நான் அயோக்கியனா?” என்று வினவினான்.

“அதில் சந்தேகம் வேறா உனக்கு? நான் ஒற்றன்; அந்த முறையில் என் பணியை நிறைவேற்ற, எத்தனையோ துரோகங்கள் செய்கிறேன்; அப்படிச் செய்யலாம் என்பதற்கு நீ படித்த சாஸ்திரத்திலேயே இடமிருக்கிறது. ஆனால், உன்னைப்போல் நம்பிக்கைத் துரோகம் செய்பவனுக்கு எந்தவிதப் பிராயச்சித்தத்தையும் சாஸ்திரம் அளிக்க வில்லை” என்று, மீண்டும் படபடப்பாகப் பேசினார் சைவத் துறவி.

“யாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தேன்” என்று அமைதியை இழக்காமலே கேட்டான் கரிகாலன்.

ஆனால் அந்த அமைதியை அடுத்த விநாடி சுக்குநூறாக உடைத்தெறிந்த சைவத் துறவி, “யாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தேன் என்பதைவிட உன்னைக் கைது செய்ய உத்தரவிட்டது யார் என்று கேள்” என்று கூறினார்.
“சந்தேகமென்ன? ஜெயசிம்ம சாளுக்கியன்தான்.”

“உத்தரவிட்டது அவன்தான்; ஆனால் அந்த உத்தரவை இடத் தூண்டியது யார்?”

கரிகாலன் நிதானம் மெள்ள மெள்ளக் குலைய லாயிற்று. தெளிவான அவன் சிந்தனையிலும் மெள்ள மெள்ளச் சந்தேகமும் குழப்பமும் சூழ்ந்து கொண்டன. “யார் துறவியாரே?” என்று கேட்ட குரலில், நடுக்கம் தெரிந்தது.

சைவத் துறவி ஆசனத்திலிருந்தபடியே தமது விழிகளை அவன்மீது நாட்டி, “சொல்கிறேன், தைரியப்படுத்திக்கொள் கரிகாலா!” என்றார்.

“சொல்லுங்கள்.”

“நிரஞ்சனாதேவி!”

சைவத் துறவியார் அந்தச் சொல்லை மெதுவாகத் தான் உச்சரித்தார். ஆனால் அந்தச் சொல்லின் ஒவ்வோர் எழுத்தும் அவன் சிந்தனையைப் பல அஸ்திரங்களைப் போல திடீரெனத் தாக்கின. அந்தத் தாக்கு தலைச் சமாளிக்கமாட்டாத கரிகாலன், கண்களைச் சற்றே மூடினான். உலகமே கிறுகிறுவென்று சுழல்வது போலிருந்தது அவனுக்கு.

Previous articleMannan Magal Part 2 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here