Home Historical Novel Mannan Magal Part 2 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

80
0
Mannan Magal part 2 Ch 6 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 6 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 கண்ணிலே ஒரு காட்சி கருத்திலே ஒரு புரட்சி

Mannan Magal Part 2 Ch 6 | Mannan Magal | TamilNovel.in

புறக்கண் மூடும்போது அகக்கண் விழித்துக்கொள்கிறது. அந்தக் கண் நம் சித்தத்திற்கு முன்னே எழுப்பும் சித்திரங்கள் பல ஊனக்கண்ணால் பார்க்க முடியாத கோளங்களையும் பிண்டங்களையும் சிந்தனைப் பீடத்திலே கொண்டு வந்து நிறுத்தும் சக்தி அகக்கண்ணுக்கு உண்டு. புறக் கண்ணின் விழிப்பினால் உலக மாயையில் அறிவு சிக்கிவிடுவதால், தெளிவாகச் சிந்திக்கும் சக்தியைச் சித்தம் இழந்துவிடுகிறது. ஆனால், புறக்கண் மூடியதும் ஒரு விநாடி சிந்தனையில் இருள் சூழ்ந்து, பிறகு அகக்கண் விழித்து அறிவுப் பொறிகளையும் ஒளிகளையும் வீசும்போது சிந்தனையில் எத்தனை எத்தனையோ மின்னல்கள், எத்தனை எத்தனையோ உண்மைகள், எத்தனை எத்தனையோ இந்திர ஜாலங்கள் எல்லாம், ஒன்றுடன் ஒன்று இணைந்து எழுந்து தாண்டவமாடுகின்றன. ஆகையால்தான் உண்மையை அறியக் கண்களை மூடி தியானத்தில் உட்கார் என்று அறிஞர்கள் பணித்தார்கள். அந்த உபதேசத்தில் தான் எத்தனை உண்மை! அதுவரை கரிகாலன் சிந்தனைக்கு எட்டாத எத்தனை உண்மைகள் கண்களை மூடி நின்ற அந்தச் சில விநாடிகளில் அவன் அறிவுக்கு எட்டின.

“உன்னைச் சிறை செய்யத் தூண்டியது நிரஞ்சனா தேவிதான்” என்று சைவத் துறவியார் கூறிய மாத்திரத்தில், நிலை தடுமாறிக் கண்களை மூடிய அவனுக்கு ஒரு விநாடி உலகமே சுழல்வது போலென்ன, உலகமே இருண்டு விட்டது போலக்கூடத் தோன்றியது. சித்தத்தில் சூழ்ந்து நின்ற அந்தக் காரிருளிலே மெள்ள மெள்ள உதயமாயிற்று நிரஞ்சனாதேவியின் கண்வகர் உருவம் அத்தனை சோகத்திலும் அந்த உருவம். அவன் உடலெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தைப் பாய்ச்சியதால், இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சிகள் எழுந்து அலைமோதவே ‘அடடா! இத்தனை அழகியான உனக்குத்தான் எத்தனை கல்நெஞ்சம்!’ என்று அந்த எழிலுருவத்தை நோக்கி நொந்து கொண்டான் கரிகாலன்.

‘நிரஞ்சனாதேவி! என் உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொண்ட நிரஞ்சனாதேவி! எந்த அரச மகளுக்காக நான் அரையன் ராஜராஜன் படைத்தளத்தையும் யானையின் தந்தத்தைவிட மென்மையான கரங்களைப் படைத்த செங்கமலச் செல்வியையும் உதறிவிட்டு வந்தேனோ அந்த அரசமகள், யாருடைய தம்பியை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்த எத்தனை எத்தனையோ சாகசக் காரியங்களையும் ராஜதந்திரங்களையும் செய்து வருகின்றேனோ அந்தக் கட்டழகி, எவளை என் இதய ராணியாக, எவளுக்காக அரையன் ராஜராஜன் போர்த் திட்டத்தையே தவிடு பொடியாக்கிவிட்டு வருகின்றேனோ அந்த இன்ப அரசி, அவளா என்னை சிறை செய்யச் சொன்னாள்?’ என்று பித்தனைப் போல் திரும்பத் திரும்ப எண்ணமிட்ட அவன், அரசகுமாரி, வேங்கி நாட்டைச் சேர்ந்த உங்களுக்கு நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதோ?’ என்று உள்ளுக்குள்ளேயே வெறுத்துப் பேசிக்கொண்டான்.

இப்படிக் கரிகாலன் நீண்ட நேரம் கண்களை மூடி நிஷ்டையிலாழ்ந்து விட்டதைக் கண்ட சைவத் துறவியார் முத்துத்தேவனைப் பார்த்து, “ஏதப்பா, கரிகாலர் நிஷ்டையி லாழ்ந்து விட்டாரே! என்று வினவினார்.

அந்தக் கேள்விக்கு முத்துத்தேவன் பதில் சொல்ல மாட்டாமல் திணறினாலும், அந்தக் கேள்வி ஏற்பட்டதன் காரணமாகக் கண்களைத் திறந்து கரிகாலனே பதில் சொல்லத் தொடங்கி, “போலித் துறவியான உங்களுக்கு நிஷ்டையில் பரிச்சயமில்லாதிருக்கலாம். ஆனால் அதில் உண்மையாகவே ஈடுபடுகிறவர்களும் உலகத்தில இருக்கிறார்களல்லவா?” என்று கேட்டான்.

துறவியின் கண்களில் விஷமச் சிரிப்பு ஒன்று உதய மாயிற்று. அந்த மாதிரி உண்மை நிஷ்டையில் ஈடுபடு கிறவர்களில் தாங்களும் ஒருவர் போலிருக்கிறது” என்று விசாரித்தார் துறவியார். “ஏன் இருக்கக்கூடாது?”

“இருக்கலாம், இருக்கலாம். அதுவும் தேவி உபாசனை என்றால். நிஷ்டை பலமாகத்தானிருக்கும்.” இதைச் சொன்ன துறவியார் சற்று வெளிப்படையாகவே நகைத்தார்.

அவர் பேசுவதன் அர்த்தத்தைக் கரிகாலன் தெளிவாகவே புரிந்து கொண்டாலும், புரியாதவனைப்போல், பாசாங்கு செய்து, துறவியாரே! தேவி உபாசனையா! என்ன உளறுகிறீர்?” என்று கேட்டான், குரலில் சற்றுப் பொய்க் கோபத்தை வரவழைத்துக் கொண்டு.

“கரிகாலா! நான் தான் போலி என்றால், நீ என்னை விடப் பெரிய போலியாயிருப்பாய் போலிருக்கிறதே. இது கூடவா எனக்குத் தெரியாது கரிகாலா? நிரஞ்சனா தேவியின் பெயரைக் கேட்டவுடன் தான் கண்களை மூடி அரைக்கணம் அசைவற்று நின்றுவிட்டாயே” என்று விளக்கிய துறவியார் இன்னொரு கேள்வியும் கேட்டார்: “கரிகாலா அவளிடம் இத்தனை அன்பை வைத்திருக்கும் நீ, அவளுக்கு ஏன் விரோதியாகத் திரும்பினாய்?” என்று வினவிக் கரிகாலனை உற்றுப் பார்த்தார்.

அதுவரை அசட்டையாகப் பேசிக்கொண்டிருந்த கரிகாலன் திடீரென்று சைவத் துறவியை நோக்கித் திரும்பி, “என்ன! நான் அரசகுமாரியின் எதிரியா? பைத்தியமா உமக்கு?” என்று வினவினான்.

“பைத்தியம் எனக்கல்ல கரிகாலா! உனக்கோ அல்லது நிரஞ்சனாதேவிக்கோ? யாருக்கென்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை” என்றார் சைவத் துறவியார்.

“நீர் சொல்வது விளங்கவில்லை.”

“நீ நிரஞ்சனாதேவியிடம் ஆழ்ந்த அன்பு வைத்திருக் கிறாய் என்பது தெரிகிறது. ஆனால், நிரஞ்சனாதேவியோ உன்னைத் தன் பரம விரோதியாக மதிக்கிறாள்.”

“உனக்கெப்படித் தெரியும் அது?”

“என்னிடமே சொன்னாள்.”

“என்ன சொன்னாள்?”

“நீ பெரிய நயவஞ்சகன் என்று.”

“காரணம் சொன்னாளா?”

“சொல்லவில்லை; ஆனால் நானாக ஊகித்தேன்.”
கரிகாலன் அதுவரை கையில் பிடித்திருந்த வாளை உறையில் போட்டு, துறவிக்கு வெகு அருகில் வந்து, கூரிய தன் கண்களை அவர் முகத்தின் மீது பதியவிட்டுக் கேட்டான். “என்ன ஊகித்தாய் ஜெயவர்மா?” என்று, அதுவரை கையாண்டு வந்த போலி மரியாதையை யெல்லாம் காற்றில் பறக்கவிட்டு.

சேரர் நாட்டு ஒற்றனான ஜெயவர்மனும் கரிகாலன் பார்வையைக் கண்டு சிறிதும் தளராமல் தன் கண்களை அவன் கண்களோடு கலக்கவிட்டான். பிறகு தன் தோள் மீதிருந்த கையை எடுத்துக் கீழே எறிந்துவிட்டுச் சற்றுத் தள்ளி நின்று கரிகாலனை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். பிறகு சொன்னான், “கரிகாலா! நீ நிரம்பச் சாஸ்திரங்களைப் படித்திருக்கலாம்; ஆனால் உலக அநுபவம் உனக்கு இன்னும் போதாது. இரண்டும் இரண்டும் நான்கு என்று கூட்டக்கூட உனக்குத் தெரியவில்லையே அப்பா!” என்று. “நீதான் கூட்டிச் சொல்” என்றான் கரிகாலன்.

சைவத் துறவியார் கரிகாலனை நோக்கி, ஓர் இகழ்ச்சிச் சிரிப்பை உதிரவிட்டுப் பேசினார். “சொல்கிறேன் கேள்; வேங்கி நாட்டில் நாம் பிரிந்த பிறகு முதன் முதலாகப் பிரும்ம மாராயன் மாளிகையில் உன்னைச் சந்தித்தேன். அது பெரிய சதிக்கூடம் என்றும், அங்கு நடக்கும் சதியில் வேங்கி நாட்டு அரசமகள் நிரஞ்சனாதேவிக்குப் பங்கு உண்டென்றும் வதந்தி பலமாக இருந்தது. நீ உன் மோதிரத்தைக் காட்டியதும், பிரும்ம மாராயன் என் வார்த்தைகளைப் புறக்கணித்து உன்னை உள்ளே அழைத்துச் சென்றபோது, அவருக்கு உன்னிடத்தில் ஏற் பட்டுள்ள நம்பிக்கையைப் பார்த்தேன். அன்றிரவு நீ என்னைத் தப்புவிக்கச் சிறைச்சாலைக்கு வந்தபோது காவலன் நடந்துகொண்ட முறையைக் கவனித்தேன். சரி, நீ பிரும்ம மாராயன் நம்பிக்கைக்குப் பூரணமாகப் பாத்திர மாகி விட்டாய் என்று உணர்ந்தேன். என்னைத் தவிர இன்னொருவனாயிருந்தால் சிறையிலிருந்து தப்பியபின் வேங்கி நாட்டை விட்டு ஓடியே இருப்பான். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. அங்கிருந்தே நடந்ததை யெல்லாம் விசாரித்தேன். ஜெயசிம்மன் உன்னை அரையன் ராஜராஜன் மகனென்று பறைசாற்றியது, பிறகு உன்னை இஷ்டப்படி அரண்மனையில் உலாவவிட்டது எல்லாவற்றையும் அறிந்தேன். அதிலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.” “ஓகோ!”

“ஆம்! நீ ஜெயசிம்மன் நம்பிக்கைக்கும் மட்டுமின்றி, பிரும்ம மாராயன் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருக்கிறாய். பிரும்ம மாராயனோ அரசகுமாரியுடன் சேர்ந்து ஜெயசிம்மனை ஒழிக்கச் சதியிலிறங்கியிருக்கிறான். ஆகவே எதிர்ப்பட்ட இரு கட்சியின் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் இருப்பவன் ஒன்று பெரிய அயோக்கியனாய் இருக்க வேண்டும்; அல்லது ஒரு பக்கத்துக்கு நன்மை செய்ய அயோக்கியனாய் நடிக்க வேண்டும். இந்த இரண்டில் நீ எப்படி என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.”

“பிறகு?”

“ஊகித்தவர் இருவர். ஜெயசிம்மன் ஒற்றனான அரிஞ்சயனை நீ கடத்திச் சென்றதால், ஜெயசிம்மனும், உன்னை அயோக்கியனாக நினைக்கிறான். அரிஞ்சயனைத் தன் ஆத்ம நண்பனென்று நினைத்திருப்பதால், அரசகுமாரியும் உன்னை அயோக்கியனாக நினைக்கிறாள்…” என்ற துறவியாரின் பேச்சை, “ஆகவே என்னைச் சிறை செய்வதில் இரண்டு பேருக்கு மகிழ்ச்சி” என்று கரிகாலன் பூர்த்தி செய்தான்.

“ஆம் கரிகாலா! இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய உத்தேசிக்கிறாய்? என்னுடன் சமரசம் செய்துகொண்டு, சுதந்திரப் பறவையாகத் திரிய உத்தேசமா? அல்லது என்னுடன் வேங்கி நாட்டுக்கு வந்து கோதண்டத்தில் பிராணனை விட உத்தேசமா?” என்று மீண்டும் பழைய வியாபாரத்துக்கு வந்தார் துறவியார்.

அவர் கேள்வி கேட்கும் முன்பாகவே அது விஷயமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்ட கரிகாலன், “ஜெயவர்மா, உன்னுடன் என்னை வேங்கி நாட்டுக்கு அழைத்துச் செல்” என்றான்.

சேர நாட்டு ஒற்றனும் கரிகாலனும் பேசிக்கொண் டிருந்ததை மௌனமாக நின்று அதுவரை கேட்டுக் கொண்டிருந்த முத்துத்தேவன், “கரிகாலா! சுவாமியார் சொல்வதுபோல் வேங்கி நாட்டில் கழுத்துக்குக் கயிறு காத்துக் கொண்டிருந்தால் -” என்று ஆரம்பித்தான்.

“உயிர் போகும்! அவ்வளவுதானே முத்து” என்றான் கரிகாலன்.

“போக்கிக்கொள்ள வேண்டியது. அவ்வளவு அவசியமா?” என்று வினவினான் முத்துத்தேவன்.

“அவசியமில்லை. என் உயிரை அவ்வளவு சுலபத்தில் நான் இழக்கமாட்டேன். பயப்படாதே” என்று அவனுக்குத் தைரியம் சொல்லிய கரிகாலன், மீண்டும் சைவத் துறவியாரை நோக்கிப் பழைய முறையில் பேசத் தொடங்கி, “சுவாமி! வேங்கி நாட்டுக்குப் புறப்பட ஏற்பாடு செய்யுங்கள். இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் சித்தமாகி விடுவோம்” என்று கூறினான்.

சைவத் துறவியார் அவன் போக்குக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் விழித்தார். “துறவியாரே! விழிக்க வேண்டாம். வேங்கி நாட்டில் எனக்கு எத்தகைய ஆபத்தும் நேரிடாது! புறப்படச் சித்தமாகுங்கள்” என்று மீண்டும் கரிகாலன் வலியுறுத்திக் கூறவே ஏற்பாடுகளைச் செய்யத் துறவியார் கீழே சென்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கோட்டை வாசலில் புரவிகள் சித்தமாக நின்றன. சைவத் துறவியார் கரிகாலனுக்கும் முத்துத்தேவனுக்கும் முன்னும் பின்னும் இரண்டு இரண்டு வீரர்களைக் காவல் புரியவிட்டுத் தான் சில• வீரர்களுடன் பின்னால் சென்றார். சுமார் மூன்று நாள் துரிதமாகப் பயணம் நடந்தது. வழியில் நீராடி உண்டியருந்தச் சிறிது சிறிது நேரத்தைத் துறவியார் வழங்கினாரே யொழிய, எந்த இடத்திலும் தயக்கமில்லாமல் கரிகாலனையும் முத்துத்தேவனையும் வெகு பத்திரமாக வேங்கி நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். மூன்றாவது நாள் அந்தி நேரத்தில் பிரும்மாண்டமான வேங்கி நாட்டுச் சாளுக்கியர்களின் கோட்டை அவர் கண் முன்னே எழுந்தது. துறவியார் அந்தக் கடைசி விநாடியிலும் கரிகாலன் மனத்தைக் கலைக்கப் பார்த்து, “கரிகாலா! வேண்டாம். இந்த இளவயதில் பிராணனை விடாதே. இனிமேல் உன் பொய் ஜெயசிம்மனிடம் பலிக்காது. இப்பொழுது கூடச் செங்கதிர் மாலையை என்னிடம் ஒப்படைப்பதாக ஒரு வார்த்தை சொல். கண்ணிமைக்கும் நேரத்தில் உன்னை விடுதலை செய்கிறேன்” என்று கெஞ்சினார்.
கரிகாலன் கண்கள் கோட்டை வாயிலை ஒருமுறை நோக்கின. பிறகு அவன் பெரிதாகச் சிரித்தான். “எதற்காகச் சிரிக்கிறாய் கரிகாலா?” என்று கோபத்துடன் கேட்டார் சைவத் துறவியார்.

“சுவாமி! விடுதலை யாருக்குத் தேவை?”

“ஏன், உனக்குத்தான்.”

“நான் சிறைப்பட்டிருந்தாலல்லவா எனக்கு விடுதலை வேண்டும்?”

“இப்போது சுதந்திரமாயிருக்கிறாயோ?”

“சந்தேகமென்ன?”

சைவத் துறவியார் கரிகாலனை உற்று பார்த்தார். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட கரிகாலன், “துறவியாரே! எனக்குப் பைத்தியமில்லை. பைத்தியம் உமக்குத்தான்” என்றான்.

“எனக்கா!” ஆச்சரியத்தால் வாயைப் பிளந்தார் துறவியார்.

“ஆமாம் துறவியாரே! உமக்கும் அரசர்கள் வழக்கு தெரியுமல்லவா?” என்று கேள்வியை வீசினான் கரிகாலன்.

அவன் என்ன சொல்கிறானென்பதைப் புரிந்து கொள்ள முடியாத துறவியார், “ஆமாம் தெரியும்!” என்றார், பதில் சொல்லியாக வேண்டும் என்பதற்காக.
“அரசர்கள் வழக்கப்படி தூதனைக் கைது செய்ய முடியுமா?”

“முடியாது.”

“அப்படியானால் என்னைக் கைது செய்ய முடியாது.”

“ஏன்? நீ?”

“சோழ நாட்டுத் தூதன். பிரும்ம மாராயருக்குப் பதில் வேங்கி நாட்டில் இனி நான்தான் தூதன்.”

துறவியார் ஒருகணம் கல்லாய்ச் சமைந்தார். பிறகு ‘இவன் பொய்க்கு எல்லையே இல்லையோ’ என்று வியந்தார்.

“துறவியாரே! நான் சொல்வது பொய்யல்ல, என்னுடன் வாரும். சிறிது நேரத்தில் புரிந்துகொள்வீர்” என்று சொல்லிய கரிகாலன், கோட்டைக்குள் புரவியைத் தட்டிவிட்டான். சைவத்துறவியாரும் மற்ற வீரர்களும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். கோட்டை வாசலிலிருந்து நேராகப் பிரும்ம மாராயன் மாளிகைக்குச் சென்ற கரிகாலன், முத்துத்தேவனை மாளிகைக்குள்ளே அனுப்பிக் காரியஸ்தனை வரவழைத்தான். முத்துத்தேவனால் விஷயத்தை உணர்ந்துகொண்ட காரியஸ்தன், அவசரம் அவசரமாக வெளியே ஓடிவந்து, “பிரபு! வர வேண்டும். பிரும்ம மாராயர் தங்கிய அறை சுத்தமாகத் தானிருக்கிறது. தங்களது நீராட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் ஒரு விநாடியில் செய்து முடித்துவிடுகிறேன்” என்று கரிகாலனை மிகுந்த பணிவுடன் வரவேற்றான்.

கரிகாலன் சைவத் துறவியாரை நோக்கித் திரும்பி “துறவியாரே! இனி என்ன செய்ய உத்தேசம்? என்னைச் சிறைக்கூடத்தில் அடைக்க உத்தேசமா? அல்லது இங்கேயே விட்டுச் செல்ல உத்தேசமா?” என்று வினவினான்.

இதைக் கேட்ட காரியஸ்தன் பதைபதைத்துப் போனான். “என்ன! சோழ நாட்டுத் தூதரைச் சிறை செய்வதா? அப்படிச் சிறை செய்வதானால் இங்கு நூறு சோழ நாட்டு வீரர்களைக் கொன்ற பிறகுதான் அந்தக் காரியத்தைச் செய்ய முடியும்” என்று கூறியதன்றி கையைத் தட்டி ஏதோ சமிக்ஞையையும் செய்யவே, அடுத்த விநாடி பூரண ஆயுதம் தரித்த பத்துப் பன்னிரண்டு சோழ நாட்டு வீரர்கள் வெகு துரிதமாக வெளியே வந்து, அங்கிருந்தவர்களைச் சூழந்துகொண்டார்கள்.

“துறவியாரே, பார்த்தீரா?”

துறவியார் என்ன சொல்வதென்றறியாமல் மென்று விழுங்கினார். கரிகாலன் சோழ நாட்டு வீரர்களை மாளிகைக்குள் செல்லும்படி கட்டளையிட்டுவிட்டுத் துறவியாரைத் தனியே அழைத்துச் சென்று, “சுவாமி! ஜெயசிம்மனால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராது. நான் இந்த ஊரைவிட்டு ஓடமாட்டேன். பயப்பட வேண்டாம். எந்த நிமிஷமும் தாங்கள் இந்த மாளிகைக்கு வந்து என்னைப் பார்க்கலாம். நாளை நானே ஜெயசிம்மனைச் சந்திக்கிறேன்” என்று உறுதி கூறினான்.

“உன் உறுதியை நான் எப்படி நம்புவது?”

“நம்புங்கள்; அத்துடன் இன்னோர் உறுதியையும் கொடுக்கிறேன். என்னுடைய வாழ்க்கைப் பணி நிறை வேறிவிட்டால், சேரனுடைய செங்கதிர் மாலையையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.”

“உண்மையாகவா?”

“என் வாளின் மேல் ஆணையாக!”

“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?”

“வீரர்களை அனுப்பிவிடும்.”

“சரி.”

“பிறகு என்னை உம்முடன் அழைத்துச் சென்று, அரச குமாரியின் நந்தவனத்தில் விட்டுவிடும்.”

“அது எப்படி முடியும்?”

“என்னை உமது கைதியாக அரண்மனை வாசலுக்குள் அழைத்துச் செல்லும். பிறகு நீர் அரண்மனைக்குள் செல்லும். நான் தோட்டத்திற்குள் செல்கிறேன்.”

“பெரிய ஆபத்து கரிகாலா.”

“நம் இருவர் பிழைப்புமே நித்தியகண்டம் பூர்ண ஆயுசுதானே சுவாமி!”

இறுதியில் அவன் ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்ட துறவியார், வேங்கி வீரர்களைச் சென்றுவிடுமாறு ‘கட்டளையிட்டார். கரிகாலனும் முத்துத்தேவனைத் தான் வரும்வரை மாளிகையில் இருக்கச் சொல்லிவிட்டுத் துறவி யாருடன் சென்றான். கரிகாலன் திட்டப்படியே சகலமும் நடந்தது.

சுவாமியாரை நந்தவனத்தின் முகப்பிலே பிரிந்த கரிகாலன், நேரே வசந்த மண்டபத்தை நோக்கிச் சென்றான். ஆனால், அவன் கடைசிவரை செல்லவில்லை. நந்தவனத்தின் இடையே அல்லித் தடாகத்தின் கரையிலே அவன் கண்முன்னே எழுந்தது ஒரு காட்சி, அதைக் கண்டதும் அவன் கருத்தில்தான் எத்தனை புரட்சி!

Previous articleMannan Magal Part 2 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here