Home Historical Novel Mannan Magal Part 2 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

128
0
Mannan Magal part 2 Ch 7 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 7 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 ‘வஞ்சகன் நீ!’

Mannan Magal Part 2 Ch 7 | Mannan Magal | TamilNovel.in

பாவலர் பாட்டிசைப்பதற்கும் காதலர் கருத்துக் குலைவதற்கும் காரணமான தன் வெண்ணிறக் கிரணங்களின் பால்வலைய வெண்மதி பாரெங்கும் விரிந்திருந்தாலும், வேங்கி நாட்டின் அரண்மனைப் பூங்காவிலே அதன் சக்தி பன்மடங்கு அதிகப்பட்டுக் கிடந்தது. கோட்டைச் சுவரின் தோட்டக் கதவுக்கு அருகாமையில் அடர்த்தியாக வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களின் முன் வரிசையிலிருந்த பாரிஜாதச் செடிகள் தங்கள் மலர்களை வெள்ளை வெளேரெனத் தரையில் உதிர்த்திருந்தாலும், அந்த வெண்மையைக்கூட வெண்ணிலவு ஓரளவு குறைத்திருந்ததால், அந்த மலர்களின் இதழ்கள் பனியில் வைக்கப்பட்ட வெள்ளிக் கட்டிகளைப்போல் சற்றே ஒளி மங்கியும், அந்த மரங்களின் காரணமாக மித மிஞ்சியே மயக்கும் சக்தியையும் பெற்றும், விண்ணை நோக்கி நகைத்துக் கொண்டிருந்தன. அந்தச் செடிகளுக்குச் சற்று அப்பால், இலந்தை மரத்தின் முட்கிளைகளில் தொத்தி ஏறி, காற்றில் மெல்ல ஆடிக்கொண்டிருந்த நித்திய மல்லிகைக் கொடியின் நீண்ட மலர்கள் மட்டும் சந்திர கிரணங்களால் முன்னிலும் அதிக வெண்மையை அடைந்து, காற்று அதிகமாக வீசும் போதெல்லாம் வெளியே கொத்துக் கொத்தாகத் தலையை நீட்டி, வெண்மையிழந்து தரையில் கிடந்த பாரிஜாத மலர்களை நோக்கிப் பரிகசித்து, பரிகசித்து, மீண்டும் பச்சைக் கொடி களுக்கிடையே பதுங்கிக்கொண்டன. நந்தவனத்தின் அடர்த்தியான அந்தப் பகுதியிலிருந்த செண்பக மரங்கள் சில தங்கள் பொன்னிற மலர்களை ஏராளமாகத் தரையில் உதிர்த்திருந்தன. அந்த மலர்களில் பல கீழேயிருந்த முட்புதர்களில் தொத்திக் கொண்டும், மரத்தின் கீழ்க் கருமைதட்டிக் கிடந்த இருளின் காரணமாக அடியோடு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடந்தாலும், மிக ரம்மியான சுகந்தத்தை நந்தவனம் முழுவதும் பரப்பித் தங்கள் இருப்பிடங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. வசந்த மண்டபத்தின் முகப்பிலே இருந்த கொடிசம்பங்கி மலர்களும் தங்கள் பச்சை உடலைக் காற்றில் அசைத்து மஞ்சள் வாய் திறந்து நகைத்து எத்தனை நறுமணம் எழுப்பினாலும், உயர்ந்த மரங்களில் புஷ்பித்ததால் இறுமாப்படைத்திருந்த செண்பக மலர்கள் சம்பங்கி வாசனையைத் தலை கிளப்பவிடாமல அடித்து, தங்கள் ராஜ்யத்தையே அந்த நந்தவனம் பூராவிலும் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த அரசாட்சிக்குக் கட்டியம் கூறிக் குயிலினங்கள் சில மரங்கிளிலிருந்து ‘கூ கூ’வென இன்னிசை கிளப்பின.

கரிகாலன் கருத்தை மயக்க இயற்கையின் இந்த அஸ்திரங்களே போதுமே; அப்படியிருக்க, விதி எதற்காக அந்தப் பெரிய மோகனாஸ்திரத்தை எடுத்து அவன் கண் முன்பாக வீச வேண்டும்? அழகுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்த அந்த இன்பச் சூழநிலையிலே, நந்தவனத்தின் நடுவிலேயிருந்த அல்லித் தடாகத்தின் கரையிலே பசும்புல் விரித்திருந்த மரகதப் பாயிலே, இயற்கை வீசிய மோகனாஸ்திரம் போலும், சற்றே அப்பால் தோகையை விரித்துப் படுத்துத் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த ஆண் மயிலுக்குப் பெரும் போட்டி போலும், சேலையின் அடிப்பாகம் லேசாக அலைந்து கிடக்கப் பேரெழிலுடன் படுத்திருந்தாள் விமலாதித்தன் மகள் நிரஞ்சனாதேவி.

இடது கையைத் தலைக்குக் கொடுத்துத் தூக்கி உடலை ஒருக்களித்து அல்லிக் குளத்திலே கண்களை நாட்டிப் படுத்திருந்ததன் விளைவாக, அவள் உடல் எழிலின் பாகுபாடுகளைக் கவனித்த கரிகாலன், உலகத்தை அழகுபடுத்த மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் இயற்கை சிருஷ்டித்திருக்கும் காரணத்தை நன்றாகப் புரிந்து கொண்டான். அவளையும் அவளுக்கு அப்பால் அல்லித் தடாகத்தின் மற்றொரு வளைவிலே படுத்திருந்த மயிலின் விரிந்த தோகையிலிருந்த கண்களையும் பார்த்த கரிகாலன், மன்னன் மகளின் கருமை பாய்ந்த மலர் விழிகளுக்கு முன்னால், இத்தனை கண்களும் என்ன செய்ய முடியும் என்றே எண்ணினான். ‘தோகையில் கண்கள் ஏராளமாக இருக்கின்றனவே என்று இறுமாப்புக் கொள்ளாதே மயிலே! மன்னன் மகளின் எழிலை ஆராயும் திறனுள்ளவனுக்கு இந்த மாதிரி வண்ணச் சுழிகள் ஆயிரமிருப்பது புலப்படும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

அவள் படுத்திருப்பதைத் தூரத்தில் கண்டதால் மெள்ள ஓசைப்படாமல் அவள் பின்புறத்தே கரிகாலன் வந்து நின்றதாலும், உள்ளத்தே ஏதோ எண்ணங்கள் ஓடியதால் சித்தத்தை எங்கோ அலையவிட்டுக் கொண்டிருந்ததாலும், பின்னால் ஓர் ஆண்மகன் நிற்பதை அறவே அறியாமலும், அவன் தன்னை உற்று உற்றுப் பார்த்து அலசி ஆராய்ந்து விநாடிக்கு விநாடி உன்மத்தம் ஏறி, கருத்து அடியோடு குலையும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறான் என்பதை உணராமலும், இரண்டு விநாடிகளுக்கொரு முறை உடலை அசைத்துக் கொடுத்துக் கொண்டும், தரையில் புற்களுக்கிடையில் கிடந்த சிறு கற்களை வலது கையில் எடுத்து அவ்வப்பொழுது அல்லிக் குளத்தில் எறிந்து கொண்டும் படுத்திருந்தாள் அந்தப் பேரழகி. அவள் அழகிய உடல் சில வேளைகளில் அசைந்தும் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாகப் புரண்டும் கீழேயிருந்த பசும்புல் தரையில் லாவண்ய அம்சங்களை அடிக்கடி படிய விட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்த கரிகாலன், அந்தப் புற்றரையாகத் தானிருக்கக் கூடாதா என்று எண்ணிப் பரிதவித்தான். அந்தப் பரிதவிப்பிலிருந்து விடுதலையை அடைய அதன் மீதிருந்த கண்களை அகற்றி, அல்லி தடாகத்திலே கண்களைப் பதியவிட்ட கரிகாலனுக்கு சாந்தியை அளிப்பதற்குப் பதிலாக அல்லிக்குளம் அல்லலையே அளித்தது. அந்தத் தடாகத்திலே படர்ந்திருந்த பல அல்லி மலர்களிடமிருந்து பிரிந்து நின்று கரையின் ஓரத்திலே பச்சைப் பசேலெனப் படர்ந்திருந்த பாசியின் மத்தியிலே கதிரவன் மறைவால் முகங்குவித்து நின்றிருந்த இரு தாமரைகளையும், கரையிலே பாசியை விடப் பச்சையாகப் படர்ந்திருந்த பசுந் தரையிலே படுத்துக் கிடந்த எழிலுடலிலே வளைந்திருந்த வனப்பின் பகுதிகளையும் கவனித்த கரிகாலன், ‘இந்த அழகுக்கு அது எப்படி ஈடாகும்’ என்று எண்ணினான். அந்த உவமையும் உவமைக்குக் காரணமும் தன் கண்ணெதிரே நின்றதாலும், தன் மனத்தைப் பெரிதும் அலைக்கழித்ததாலும் பெருமூச்சொன்றையும் விட்டான்.

அதேசமயத்தில் அல்லிக்குளத்தைப் பார்த்துக் கொண் டிருந்த நிரஞ்சனாதேவியும் நீண்டதொரு பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சில் சோகம் கலந்திருப்பதைக் கவனித்த கரிகாலன், அவள் முகத்திலும் அந்தச் சோகக்குறி பூரணமாயிருந்ததைக் கண்டான். பெருமூச்சு விட்டதால் அவள் உடல் சற்று அதிகமாகவே எழுந்து தாழ்ந்ததைப் பார்த்த கரிகாலன், அவள் சித்தத்தைச் சோகம் அளவுக்கு அதிகமாகவே ஆட்கொண்டிருந்ததைச் சந்தேமறப் புரிந்து கொண்டான். அப்படிப் புரிந்து கொண்ட போதிலும் அவன் இதயத்திலே அவள் சோகத்தைக் கண்டு பரிதாபம் ஏற்படவில்லை. ஆனால், அவள் உடல் எழுந்து தாழ்ந்ததால் அவள் எழிலிடங்களில் ஏற்பட்ட அசைவுகள் அவன் இதயத்துக்குத் தாபத்தையே அளித்தன.

காமத்துக்கு இலக்காகிறவனுக்குத்தான் எத்தனை கடின இதயம்! ஆனால் தான் கடினப்பட்டுவிட்டதை அந்த இதயம் ஒப்புக்கொள்கிறதா? காதல் சரித்திரத்திலேயே அதுதான் கிடையாதே! அந்தத் தருணத்தில் கரிகாலன் இதயத்திலே அநுதாபமென்னும் போர்வையிருந்ததே யொழிய உண்மையில் காமதாபமே நிரம்பிக் கிடந்தது. அவள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் கண்கள் ஆராய்ந்தன. கண்கள் ஆராய்ந்த விஷயங்களைக் கருத்து அலச முற்பட்டது. இந்த ஆராய்ச்சியாலும் அலசலாலும் உணர்ச்சி வெள்ளம் உடலெங்கும் பாய்ந்து பேரலைகளாக மாறி, கரிகாலனைப் பேயாட்டமாக ஆட்டிக் கொண்டிருந்தது. ஒருக்களித்துப் படுத்த அந்த நிலையில் அவள் உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரை எத்தனை வளைவுகள்! எத்தனை குறுகல் கட்டங்கள்! எத்தனை விஸ்தாரப் பிரதேசங்கள்! எத்தனை மலர்கள்! இயற்கை ஒவ்வொரு புஷ்பச் செடிக்கும் ஒவ்வொரு புஷ்பத்தைத்தான் கொடுத்திருக்கிறது; ஆனால் பெண்களிடம் சகல புஷ்பங்களையும் வாரி இறைத்து அவர்களைப் புஷ்பச் சோலையாக அடித்திருப்பது ஏன்? இப்படியெல்லாம் ஏதோ நினைத்துக் குலைந்திருந்த கரிகாலன் வரவை மன்னன் மகள் அறியாவிட்டாலும், கழுத்தை அப்படியும் இப்படியும் ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மயில் பார்த்துவிடவே, அது தோகையை ஓர் உதறல் உதறிக்கொண்டு எழுந்து புது மனிதனைக் கண்ட காரணத்தாலோ என்னவோ ஒருமுறை இரைந்து கூவியது.

அபசுரத்தின் சக்தி அளவிட முடியாததல்லவா? இயற்கை அதுவரையில் சிருஷ்டித்த இந்திர ஜாலங்களையெல்லாம் மயிலின் அந்த ஓர் அபசுரக் குரல் சிதற அடித்துவிட்டதாலும் அது எதிர்த் திசையை நோக்கிய காரணத்தாலும் சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்ட நிரஞ்சனாதேவி மருண்ட தன் விழிகளைப் பின்புறம் திருப்பினாள். சாதாரணமாகக் கருணை பொங்கி வழியும் அந்த விழிகளில், திரும்பிய சில விநாடிகளுக்குள்ளாகப் பலவிதப் பார்வைகள் பளிச்சுப் பளிச்சென்று தோன்றி மறைந்தன. ஓர் ஆடவன் தன்னைப் படுத்த நிலையில் பார்த்துவிட்டானே என்பதால் வெட்கம்; அப்படிப் பார்த்தவன் கரிகாலன் என்பதால் ஒருகணம் உள்ளூர உவகை; அடுத்தகணம் தன்னை வஞ்சித்த அயோக்கியன் தன் முன்னே வந்து நிற்கிறானே என்பதால் சீற்றம். இத்தனை உணர்ச்சிகளும் மின்னல் வேகத்தில் உள்ளே எழுந்ததால் அவை பார்வையிலும் மாறி மாறி உதயமாகி மறைந்தன. இறுதியில் சீற்றமே கண்களில் தேங்கி நின்றது. ஆனால் உள்ளே எழுந்த சீற்றத்தை மன்னன் மகள் ஓரளவு அடக்கிக்கொண்டதால், கண்களில் அதிகச் சீற்றம் புலப்படாமல், உள்ளே கொந்தளிக்கும் தீப்பிழம்பு இருந்தாலும் லேசாகப் புகையை வெளிக்காட்டும் எரிமலையைப்போல் விளங்கினாள், அவள்.

அவனைக் கண்டதும் அவள் கரங்கள் புடவையை இழுத்து உடலை நன்றாக மூடிக்கொண்டன. அரியாசனத்தில் உட்கார்ந்து எதிரே சிறைப்பட்டு நிற்கும் விரோதியைக் காண்பது போல், புல் தரையில் உட்கார்ந்திருந்த போதிலும், மிகக் கம்பீரமாகவே கரிகாலன் மீது அவள் கண்கள் பதிந்தன. அவள் பார்வையிலிருந்தது சீற்றமா, வெறுப்பா என்பதைத் தீர்மானிக்க முடியாத கரிகாலன், அதை அறிந்துகொள்ள விரும்பி ஏதோ பேச வாயெடுத்தான். ஆனால் வார்த்தைகள் அவன் வாயை விட்டு வெளியே வரும்முன்பாக நிரஞ்சனாதேவியே பேச ஆரம்பித்து, “தன் வாளை எனக்கு அடிமையாக்கிய காவலர், மீண்டும் வேங்கி நாட்டில் காலை வைத்திருக்கிறார் போலிருக்கிறது” என்று மிக இகழ்ச்சியுடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவள் சொற்களின் முழு அர்த்தத்தையும், அவள் குரலில் தொனித்த இகழ்ச்சியையும் விநாடியில் கண்டு கொண்ட கரிகாலனின் மனத்தின் முன்பாகக் கடந்த கால நிகழ்ச்சிகள் எழுந்து தாண்டவமாடவே, ‘அன்று அந்த இரவில் என் வாள் உனக்கடிமை என்று பேசிவிட்டு, ஊரைவிட்டே ஓடிவிட்ட பேடியே! திரும்பவும் வந்து விட்டாயா?’ என்று கேட்பதற்குப் பதிலாகவே, மன்னன் மகள் மரியாதையென்ற வெல்ல மூடிக்குள் விஷமாத்திரையை வைத்துத் தனக்கு அளிக்கிறாள் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டவனாய், ஏதும் பேச வாயெழாமல் நின்றான்.

அவன் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்பதைப் பார்த்த அப்பேரழகி, மீண்டும் தன் சொல்லம்புகளை அவன் மீது வீசத்தொடங்கி, “ஏது சூடாமணி விஹாரத்தில் தர்க்க சாஸ்திரம் படித்த அறிவாளிக்குப் பதில் சொல்லக்கூட நா எழவில்லை?” என்று மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டாள்.

அதுவரை அவள் எழில் விளைவித்த வலையை அவளது சுடுசொற்கள் ஓரளவு கத்திரித்துவிட்டதால் சற்றே சுயநிலைக்கு வந்த கரிகாலன், “ஆற்றுக்கு அணை போடலாம் நிரஞ்சனாதேவி! ஆனால் ஆத்திரத்தில் பேசும் பேச்சுக்கு அணை போட முடியாது. தர்க்க சாஸ்திரத்தில் கூட அதற்கு வழியில்லை” என்றான் மெதுவாக.
நிரஞ்சனாதேவி உட்கார்ந்திருந்த நிலையிலேயே தலையைத் தூக்கி மீண்டும் அவனை நோக்கினாள். அந்த வீரனுடைய குழந்தை முகத்தில் துயரமே தாண்டவமாடு வதைக் கண்ட அவள் மனத்தில் ஒருகணம் அநுதாபம் உதயமானாலும், உள்ளத்தே சில நாள்களாக வேரூன்றி விட்ட வெறுப்பு அதைச் சட்டென்று அடக்கிவிடவே, “ஆத்திர பேச்சா! யார் ஆத்திரமாகப் பேசுகிறார்கள்? என் பேச்சில் பதற்றம் தெரிகிறதா?” என்று வினவினாள்.

“எரிமலைகூடத் தீப்பிழம்பை வெளியில் காட்டுவ தில்லை, அரசகுமாரி!” என்று வெறுப்புடன் பதில் சொன்னான் கரிகாலன்.

அவன் பதிலில் புதைந்து கிடந்த அர்த்தத்தை ஊகித்துக்கொண்ட அரசகுமாரியும், உவமையில் அவனுக்குத் தான் குறைந்தவள் அல்லவென்று நிரூபிக்கத் தொடங்கி “புல்லில் மறைந்து கிடக்கும் பாம்புகூடத்தான் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், அது எரிமலையை விட மோசமல்லவா?” என்று வினவினாள்.

அவள் அந்த உவமையை எதற்காகச் சொன்னாள் என்று புரிந்தே இருந்தது கரிகாலனுக்கு. இருந்தபோதிலும் அவள் வாயிலிருந்தே அவள் நெஞ்சத்திலிருக்கும் முழு வெறுப்பையும் உணர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் கேட்டான், “அது எப்படி மோசம் அரசகுமாரி?” என்று.

“எரிமலை எப்படியும் தீப்பிழம்பைக்கக்கும்; அது கண்ணுக்குத் தெரியும்…”

“உம்…”

“அதிலிருந்து தப்பியோட மக்களுக்குச் சில சமயங் களில் அவகாசமும் இருக்கும். தப்ப முயற்சியாவது செய்யலாம். ஆனால் “

“ஆனால்?”

“பாம்பு அப்படியல்ல சோழ நாட்டு வீரரே; நாம் அயர்ந்திருக்கும்போது நாம் பக்கத்திலேயே வளைந்து வளைந்து வந்து கடித்துவிடும். நாம் வளர்க்கும் புல்லிலே உறையும். நாம் பால் ஊற்றும் புற்றிலே வளரும். ஆனால் அந்தப் பாலுக்குப்பதில் நமக்கு நஞ்சையே அளிக்கும். பால் வெண்மையானது. வெள்ளை மனத்துடன் நாம் பிறருக்கு அளிக்கும் நம்பிக்கையும் அப்பேர்ப்பட்டதுதான். அதற்குப் பதில் பலர் நம் வாழ்க்கையில் நஞ்சையே கலக்கிறார்கள்.”

“உங்கள் வாழ்க்கையில் யார் நஞ்சைக் கலந்தார்கள் அரசகுமாரி?” என்று கரிகாலன் கேட்டான்.

இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லாத அரசகுமாரி மெள்ள எழுந்து நின்று கரிகாலன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். கல்மிஷம் சிறிதும் இல்லாத கண்கள் அவளைத் திரும்ப நோக்கவே, அவள் கண்களில் சற்று நேரம் குழப்பம் தெரிந்தது. கபடம் சிறிதும் இல்லாத இந்தக் கண்களை உடையவன் எப்படி நச்சுப்பாம்பாக இருக்க முடியும்? ஆனால் இவன்தானே அரிஞ்சயனைக் கடத்திச் சென்று சோழர் சிறைக்கு அனுப்பி வைத்தான்? அப்படியிருக்க, இவன் எப்படி வஞ்சகனாக இல்லாதிருக்க முடியும்? இவன் நிர்மலமான கண்களில் பயத்தின் சாயைய கூட இல்லையே! அகத்தினழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியும் பொய்யா?’ என்று பலவாறாகச் சிந்தித்த அவளை மேலும் குழப்ப பாணங்களைப் போல் வெளிவந்தன கரிகாலன் சொற்கள்: “என்ன சிந்திக்கிறீர்கள் அரசகுமாரி? வெளிப்படையாகத்தான் சொல்லுங்களேன், நீதான் வஞ்சகன், நீ நச்சுப் பாம்பு, உதவுவதுபோல் பாசாங்கு செய்து, என்னை ஏய்த்துவிட்ட கயவன் நீ என்று, இதில் தயக்கம் எதற்கு?”

நேரடியான இந்தத் தாக்குதலுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை அரசகுமாரிக்கு. அவனுடன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் வசந்த மண்டபத்திற்குச் செல்ல ஓர் அடியெடுத்து வைத்தாள். அவள் நடையை “அரசகுமாரி!” என்ற கரிகாலன் சொல் சட்டென்று தடுத்து நிறுத்தியது. அவனுக்கு முதுகுப் புறத்தைக் காட்டி மண்டபத்துக்குச் செல்ல அடி எடுத்து வைத்த மன்னன் மகள் தலையைத் திருப்பி அவனைப் பார்த்து, “அதிகாரம் பலமாயிருக்கிறதே! என்றாள்.

“அநீதியாகக் குற்றம் சாட்டப்பட்டவனுக்குள்ள உரிமை அது!”

“குற்றம் சாட்டியது யார்?”

“நீங்கள் தான் வஞ்சகன் என்றீர்கள்.”

“நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள், அது உண்மை என்று தெரியும்.”

“நெஞ்சைத் தொட்டுத்தான் சொல்கிறேன். அதில் வஞ்சம் தெரியவில்லை.”

“பின் என்ன தெரிகிறது?”

“ஒரு வஞ்சியின் அறியாமை தெரிகிறது. சந்தர்ப்ப சாட்சியத்தால் ஒரு பேதை கருத்திழந்த கதை விளங்குகிறது.”

“அப்படியானால் உண்மை?”

“அந்த மரங்களின் மறைவுக்கு வாருங்கள்.”

அரசகுமாரி நன்றாக அவனை நோக்கித் திரும்பி, அவன் மீது சந்தேகப் பார்வையொன்றையும் நாட்டி, “உண்மையைச் சொல்ல மறைவு எதற்கு?” என்று வினவினாள்.

“அவசியமிருக்கிறது; வாருங்கள் என்னை நம்புங்கள்.” என்றான் கரிகாலன்.

“ஒரு முறை உங்களை நம்பினேன்.”

“நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை.”

“அதற்கு அத்தாட்சி?”

“இங்கு நின்று பேசவேண்டாம். ஜெயசிம்மன் கண்களில் நாம் பட்டுவிட்டால் பேராபத்து. இப்படி வாருங்கள், அரசகுமாரி. பயப்படாதீர்கள்” என்று அவளுக்குத் தைரியமூட்டி மரங்களின் மறைவுக்கு அவளை அழைத்துச் சென்றான். அதேசமயத்தில் மரக் கூட்டத்தின் இருளிலிருந்து வெளியே வர முயன்ற ஓர் உருவம் எதிரே வந்த இருவரைக் கண்டதும் அவசர அவசரமாக மீண்டும் நிழலடித்த இடத்துக்குச் சென்று, ஒரு மரத்தின் மறைவில் பதுங்கிக் கொண்டது. அந்த மரத்தின் அடிக்கே கரிகாலனும் அரசகுமாரியை அழைத்துச் சென்றான்.

Previous articleMannan Magal Part 2 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here