Home Historical Novel Mannan Magal Part 2 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

120
0
Mannan Magal part 2 Ch 8 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 8 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 இருளில் மறைந்த இருவர்

Mannan Magal Part 2 Ch 8 | Mannan Magal | TamilNovel.in

ஆயிரம் சந்தேகங்கள் அகத்தே எழுந்து அலைமோத அரசகுமாரி கரிகாலனைப் பின்தொடர்ந்து நந்தவனத்தின் மரங்களிருந்த அடர்த்தியான பகுதிக்குள் நுழைந்தாள். மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்ததால் இருள் மண்டிக் கிடந்தாலும், மரக்கிளைகளிலிருந்து இலைகளின் இடுக்குகளின் வழியாக உள்ளே நுழைந்த சந்திரக் கிரணங்கள், மெல்ல நடந்து சென்ற நிரஞ்சனாதேவியின் அழகிய உடலின் மீது வட்ட வட்டமாக நாணயங்களைப் போல் விழுந்து விழுந்து நகர்ந்து கொண்டிருந்ததன் காரணமாக, சந்திரனே அந்த அழகை ரசித்து அரச குமாரிக்குக் கனகாபிஷேகம் செய்கிறானோ என்ற பிரமை ஏற்பட்டது. அவள் தாங்களிருக்குமிடம் தேடி வருவதை எண்ணிதானோ என்னவோ, மரக்கிளைகளிலிருந்த குயில்கள் முன்னைவிட அதிகமாகக் கீதங்களைப் பாடின. அந்தப் பாடலுக்குப் பக்க வாத்தியங்களைப் போல் அரசகுமாரியின் காற்சிலம்புகளும் ‘ஜல் ஜல்’ என்று கஞ்சிராவின் சலங்கைச் சப்தத்தை எழுப்பின.

மேலே மரக்கிளைகளிருந்து எழுந்த குயில்களின் இன்ப கீதமும் தரையிலே தனக்குப் பின்னால் சப்தித்துக் கொண்டு வந்த மன்னன் மகளின் காற்சிலம்புகளின் ஒலியும் காதில் விழுந்ததால், கரிகாலன் மனத்திலே எத்தனையோ இன்ப உணர்ச்சிகள் எழுந்து தாண்டவமாடினாலும், திடீரெனத் திரும்பி அந்த அழகியை வளைத்துத் தழுவ அவன் கரங்கள் துடித்தாலும், அவளுக்குத் தன்மீது ஏற்பட்டிருந்த அருவருப்பு, அவநம்பிக்கை இவற்றின் காரணமாகவும், தன் முன்னே நிற்கும் பெரிய பணியை எண்ணிப் பார்த்ததன் விளைவாகவும் அவன் தன் உள்ளத்திலே எழுந்த உணர்ச்சிகளைச் சிறிதும் வெளியே காட்டாமல் அடக்கிக்கொண்டு எதிரேயிருந்த செண்பக மரத்துக்குச் சென்று, அதன் மீது சாய்ந்து கொண்டு நிரஞ்சனாதேவியை நோக்கித் திரும்பினான்.

மன்னன் மகள் மனத்திலும் உணர்ச்சி அலைகள் கடலலைகளைவிடப் பெரிதாக எழுந்து, பேரிரைச்சலாகப் போட்டு, அவள் இதயக்கரையிலே தாபநீரை வாரிவாரி இறைத்து, மணலை அரித்து, சின்னஞ்சிறு கற்களால் உறுத்தித் துன்புறுத்திக் கொண்டுதானிருந்தன. சாளுக்கிய வீரர்களுக்கு அஞ்சி, கோட்டையின் ரகசியக் கதவின் மூலமாக ஓடிவந்து தஞ்சம் புகுந்த ஊர்பேர் தெரியாத அந்த வாலிபன் தன் வாழ்க்கையில் எத்தனை தூரம் சம்பந்தப்பட்டுவிட்டான்’ என்பதை நினைக்க நினைக்க அவளுக்கே பேராச்சரியமாயிருந்தது. அவன் செய்த வஞ்சகம், தன் நண்பனாக நடித்து ஜெயசிம்மன் கையாளாக மாறிய விந்தை, அவன் அன்றொரு நாள் இரவில் வசந்தமண்டபத்தில் தன் பள்ளியறைச் சாளரத்தருகே தன் காதில் ஓதிய பொய்யான மொழிகள் ஆகிய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைத்து உள்ளம் வெதும்பினாள் நிரஞ்சனாதேவி. இவனுடைய அயோக்கியத்தனம் இத்தனை தூரம் வெளியாகியும், இவனை நம்பி, இவன் இனிமேலும் சொல்லக்கூடிய பொய்களைக் கேட்க வந்திருக்கிறேன்; இது என்ன பேதமை!’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்ட மன்னன் மகள், ‘இவன் எண்ணம் எதுவாகத்தான் இருக்கும்?’ என்பதை ஆராயும் எண்ணத்துடன் தானே முன்னதாக பேச முற்பட்டு, “சூடாமணி விஹாரத்து வீரரே! இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? என்ன ரகசியத்தைச் சொல்ல இந்த மறைவிடத்துக்குக் கூப்பிட்டீர்கள்?” என்று வினவினாள்.
அவள் குரலிலே இருந்த ஏளனத்தையும் வெறுப்பையும் கவனித்த கரிகாலன், அவள் முகத்தையும் ஆராய முற்பட்டானானாலும், இருளின் விளைவாக அது பூராவாக முடியவில்லை. இருந்தபோதிலும் அவள் முகத்திலே வீழ்ந்து நெற்றியையும் கண்களையும் மாத்திரம் காட்டிக் கொடுத்த சந்திர கிரணமொன்றின் உதவியால் ஓரளவு அவளுக்குத் தன்மீதிருந்த கோபத்தின் ஆழத்தையும் வெறுப்பின் வேகத்தையும் உணர்ந்துகொண்டான். ‘அமுதமும் விஷமும் கலந்த சிருஷ்டிதான் பெண்’ என்று பெரியோர்கள் கூறியிருப்பது எத்தனை உண்மை என்பதை அந்த விநாடியில் புரிந்துகொண்டான் கரிகாலன். தன் எழிலை ஒப்படைத்து, புருஷன் வாழ்க்கையில் அமுத மழை பொழியக்கூடிய ஏந்திழை, கருத்து மாறுபட்ட மாத்திரத்தில் விஷத்தை வார்க்கும் கருநாகமாக மாற முடிகிறது. என்ன விசித்திரம் என்று எண்ணிய கரிகாலன், ‘அமுதம் ஆலகாலம் இரண்டுமே பாற்கடலிலிருந்து தானே பிறந்தன! உற்பத்தி ஸ்தானம் ஒன்றுதானே! ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருக்கத்தானே செய்யும்! இயற்கையின் தன்மை இப்படியிருக்க, இவள் மீது குறைப்பட்டு என்ன பயன்?” என்று தர்க்கரீதியில் தன்னைச் சமாதானம் செய்து கொண்டாலும், கொந்தளிக்கும் மனோ நிலையிலிருக்கும் இவளிடம் நான் சொல்லப்போகும் விஷயம் இன்னும் அதிக அவநம்பிக்கையை விளைவிக்கும். இதற்கென்ன செய்வது?’ என்று தடுமாறிப் பதிலேதும் சொல்லாமலே நின்றான்.

அவன் மௌனத்திலிருந்தே அவன் உள்ளத்தின் நிலையை ஊகித்த நிரஞ்சனாதேவி, “ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்? இரவு ஏறிக்கொண்டே போகிறது; அரண் மனைக்குப் போயிருக்கும் மாலினியும் வரும் நேரமாயிற்று. சொல்ல ஏதாவதிருந்தால் சீக்கிரம் சொல்லுங்கள்” என்றாள்.

“நிரஞ்சனாதேவி! நான் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறேன்” என்றான் கரிகாலன், உணர்ச்சியால் சற்றே அசைந்த குரலில்.

“தர்மம் உங்களிடமிருந்தால் சங்கடப்பட வேண்டிய அவசியமில்லை. தர்மம் தலைகாக்கும்!” என்று கூறினாள் நிரஞ்சனாதேவி.

“தலையைக் காத்துத்தானிருக்கிறது அரசகுமாரி! அதிலொன்றும் சந்தேகமில்லை” என்று சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அழுத்தியே பேசினான் கரிகாலன்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“உங்களுக்கு நன்றாகத் தெரியுமே அரசகுமாரி.”

“எது?”

“என் தலையை தர்மம் காத்திருக்கும் விஷயம்.”

“புரியவில்லையே எனக்கு.”

“புரியும்படி சொல்கிறேன் கேளுங்கள். என்னைச் சிறை செய்யும்படி ஜெயசிம்ம சாளுக்கியனை நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள்.” என்று பதில் சொல்லிய கரிகாலன், அவள் உள்ளத்தில் ஏதாவது சலனம் ஏற்படுகிறதா என்பதை அறிய அவள் அழகிய விழிகளைக் கூர்ந்து நோக்கினான்.
நிலவின் கிரணத்தால் அளவுக்கு மீறிய மயக்கும் சக்தியைப் பெற்றிருந்த நிரஞ்சனாதேவியின் விழிகளில் எந்தவிதச் சலனமுமில்லை. அழகையெல்லாம் அள்ளிக் கொட்டும் அந்த விழிகள், அவன் ஆண்மகன் என்பதால் எத்தனையோ முறை வெட்கத்தால் பக்கவாட்டில் தாழ்ந்த அதே விழிகள், அன்று அவனைக் கூர்ந்து வெறுப்புடன் நோக்கின. அவள் சொன்ன பதிலிலும் அந்த வெறுப்பு நன்றாகப் பிரதிபலிக்கவே செய்தது. “ஆம் கேட்டுக் கொண்டேன்; உங்களைச் சிறை செய்து கோதண்டத்தில் மாட்டி உண்மையைக் கக்க வைக்க வேண்டுமென்று நான் ஜெயசிம்மனைக் கேட்டுக் கொண்டது உண்மைதான்!” என்றாள் நிரஞ்சனாதேவி.

“எந்த உண்மையைக் கக்குவதற்கு?” என்று கேட்டான் கரிகாலன்.

“நீங்கள் யார் பக்கம் என்ற உண்மையை. என் சகோதரன் கட்சியா, அல்லது ஜெயசிம்மன் கட்சியா என்ற உண்மையை.”

“அதை அறிவதால் பலன்?”

“உங்களிடம் எச்சரிக்கையாயிருக்கலாம்; நம்பிக்கை மோசம் போகாதிருக்கலாம்.”

“அப்படியென்ன நம்பிக்கை மோசம் செய்திருக்கிறேன்”

“ஏன் பிரும்ம மாராயர் திட்டம் குட்டிச்சுவராகப் போனதற்கு நீங்கள் தானே காரணம்.”

“ஆமாம்.”

“அரிஞ்சயனைக் கடத்திச் சென்றதும் நீங்கள்தானே?”

“ஆமாம்.”

“நீங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள் விமலாதித்தன் மகள்.

“செய்ய வேண்டியது நிரம்ப இருக்கிறது, அரசகுமாரி!” என்ற பதில் திடமாகவே வந்தது கரிகாலனிடமிருந்து.

அவன் துணிவைக் கண்டு அரசகுமாரி அசந்து போனாள். ‘என்ன துணிவு இவருக்கு? என் குற்றச் சாட்டுகளையெல்லாம் ஒப்புக்கொண்டு, இன்னும் செய்ய வேண்டிய தீமை பாக்கியிருக்கிறதாமே!’ என்று எண்ணி வியந்து, மேற்கொண்டு ஏதும் பேசாமல் திரும்பி வசந்த மண்டபத்துக்குச் செல்ல ஓர் அடி எடுத்து வைத்தாள். இம்முறை அவள் செல்ல முயன்றதைக் கரிகாலன் பேச்சுத் தடுக்கவில்லை. அவன் பலமான கரம் தடுத்தது. இரும்பினும் வலிய அவன் கை அவள் பூக்கரத்தின் மேற் பகுதியை பிடித்திழுத்து, அவளைத் திருப்பிப் பழைய நிலையில் நிறுத்தி வைத்தது. அப்பா! அந்தப் பிடியில்தான் எத்தனை அழுத்தம். ‘இந்த மெல்லிய கரங்களுக்கு இத்தனை பலமா?’ என்று ஆச்சரியப்பட்டுப் போன அரசகுமாரி, அவன் முரட்டுப் பிடியின் காரணமாகக் கன்னிச் சிவந்துவிட்ட கையின் வலி தாளாது சற்று முகத்தையும் சுளித்தாள். அவன் கரத்தினால் ஏற்பட்ட ஸ்பரிசம், ஸ்பரிசத்தினால் ஏற்பட்ட வலி, இரண்டும் அவள் இதயத்துக்குப் பெரும் இதமாயிருந்தன. அவன் அப்படிக் கையைப் பிடித்த நேரத்திலேயே, அதுவரை உணராத பேருண்மையை உணர்ந்துகொண்ட மன்னன் மகள், தன்மீதே பெரும் சீற்றம் கொண்டாள். அவனிடம் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட அன்பு எத்தனை ஆழமாகத் தன் உள்ளத்துள்ளே வளர்ந்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்து, ‘எத்தனை கயவனிடம் என் நெஞ்சத்தைப் பறிகொடுத்துவிட்டேன்’ என்று ஏங்கினாள். அந்த ஏக்கம் பெருமூச்சாகவும் வெளிவந்தது.

யாருடைய உள்ளக்கிடக்கையையும் ஊகிக்கவல்ல பேரறிவு படைத்த தர்க்கசாஸ்திரியான கரிகாலன், அவள் கருத்திலே முளைத்து அவளை எரித்துக் கொண்டிருந்த எண்ணப் பொறிகளைத் திண்ணமாக அறிந்து கொண்டானானாலும், மீண்டும் தன் ஸ்பரிசத்தால் அப்பொறிகளை விசிறிப் பெரு நெருப்பாக்கி, அந்த ஏந்திழையின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள இஷ்டப்படாதவனாய்ச் சிறிது விலகி நின்று மீண்டும் மரத்தில் சாய்ந்துகொண்டு அவளை நோக்கி, “அரசகுமாரி! தங்களைத் தீண்டியதற்கு மன்னிக்க வேண்டும்” என்றான்.

“இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் இதுவரை நடந்து கொண்ட முறையின் சிகரம் இது!” என்று சீறினாள் மன்னன் மகள்.

அரசகுமாரி! ஊர் பேர் தெரியாத கரிகாலன், வேங்கி நாட்டு இளவரசியைத் தொட்டு நிறுத்தியது பிசகுதான்” என்று ஏதோ சொல்லப்போன கரிகாலன் பேச்சைப் பாதியிலேயே வெட்டிய நிரஞ்சனாதேவி, “பிசகு என்று தெரிந்தும், அதைச் செய்ய வேண்டிய அவசியமென்ன?” என்று கேட்டாள்.

“அவசியம் இருக்கிறது அரசகுமாரி! வேங்கி நாட்டின் பிற்காலம், அதற்காக நான் செய்ய வேண்டிய பணி. இவற்றைப் பற்றிய அவசியம்.”

“வேங்கி நாட்டின் பிற்காலம்! அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய பணி! ஹும்!” என்று அவன் வார்த்தைகளையே வெறுப்புடன் திரும்பியும் உதிர்த்து, ஒரு ‘ஹும்’ காரத்தையும் கொட்டினாள் நிரஞ்சனாதேவி.

அந்த வெறுப்பையோ ஹூங்காரத்தையோ லட்சியம் செய்யாமல் மீண்டும் சொன்னான் கரிகாலன், “உங்கள் அவநம்பிக்கையை அகற்றுவது கடினம் அரசகுமாரி. ஆனால் காலம் உண்மையை அறிவுறுத்தும்” என்று.

“எந்த உண்மை?”

“நான் ஒருவனே வேங்கி நாட்டில் உங்கள் உண்மை ஊழியன் என்ற உண்மை.”

“உண்மை ஊழியர்தான் என் அந்தரங்க ஊழியனைக் கடத்திச் சென்றாரோ?”

“யார் அந்தரங்க ஊழியன்? அரிஞ்சயனா?”

“ஆமாம். அதுவும் இல்லையென்று சொல்வீர்கள் போல் இருக்கிறது?”

“அதையும் காலம் விளக்கும் அரசகுமாரி. அரிஞ்சயன் ஜெயசிம்மனின் ஒற்றன். உங்கள் சதியை அம்பலமாக்கி உங்களையும் உங்கள் சகோதரரையும் ஒழித்துக்கட்ட ஜெயசிம்மன் திரட்டிய சதுரங்கக் காய்களில் அவன் முக்கியமானவன் என்பதைப் போகப் போக நீங்களே புரிந்துகொள்வீர்கள்.”

“யாரிடம் சொல்கிறீர்கள் இதை?”

“உங்களிடம்தான். உண்மை எது, பொய் எது என்று அறியாமல் தவிக்கும் உங்களிடம்தான் சொல்கிறேன். வேங்கி நாடு இப்பொழுது பெரிய சதுரங்கப் பலகை நிரஞ்சனாதேவி. அதில் எதிரும் புதிருமாக நகரும் பிரதானக் காய்களில் பலியாக வேண்டியது யார்! உங்கள் சகோதரரா அல்லது ஜெயசிம்மனா என்பது தெளிவுபட வேண்டும். என் திட்டம் வெற்றியடைந்தால், ஜெயசிம்ம னுடைய சகாப்தம் வேங்கி நாட்டில் முடிவடைந்துவிடும்.”

“உங்கள் திட்டமென்ன?”

“வேங்கி நாட்டிலிருந்து சில காலம் உங்களையும் உங்கள் சகோதரரையும் சோழ நாட்டுக்கு அழைத்துச் செல்வது!”

“என்னையும் என் தம்பியையும் வேங்கியிலிருந்து அகற்றுவதுதான் உங்கள் திட்டமா?”

“ஆமாம்.”

“உடனே வேங்கியின் அரியாசனத்தில் விஷ்ணு வர்த்தன விஜயாதித்தன் அமரமாட்டானா?”

“அமருவான்.”

அரசகுமாரியின் உள்ளம் அளவுக்கு மீறி துடித்தெழுந்ததால், அவள் உடல் லேசாக ஆட்டம் கண்டது. உதடுகளும் மெள்ளத் துடித்தன. “எங்களை எங்கள் தாய்நாட்டிலிருந்து அகற்றி, ஜெயசிம்மன் மருமகனை அரியணையில் ஏற்ற எத்தனை பொற்காசுகளை ஜெயசிம்மனிடம் பெற்றிருக்கிறீர்கள்? இல்லை; இங்கே தளபதிப் பதவியை அடைய ஏதாவது வழியிருக்கிறதா?” என்று ஆக்ரோஷத்துடன் வினவினாள் நிரஞ்சனாதேவி.

“உங்கள் நலத்தைக் கோரி, உங்கள் சகோதரர், இந்நாட்டின் மன்னர் இராஜராஜ நரேந்திரன் நலத்தைக் கோரி, ஏன் வேங்கி நாட்டின் நலத்தையே கோரி, உங்களை இங்கிருந்து கொண்டு போய்ச் சோழர்கள் பாதுகாப்பில் சில காலம் வைக்கப் போகிறேன். இதனால் நீங்கள் என்னை வெறுக்கலாம் ஆனால் தங்களுக்கு எது நன்மை, எது தீமை, தங்கள் நண்பர் யார், விரோதி யார் என்று அறியாதவர்களுக்குச் சில சமயங்களில் நன்மையைக் கட்டாயமாகச் செய்ய வேண்டி வரும். அந்தமாதிரிச் சமயமிது” என்று கூறிய கரிகாலனை, மிகக் கம்பீரமாக நோக்கிய நிரஞ்சனாதேவி, “வீரரே! தங்கள் விருப்பப்படி நானும் என் தம்பியும் சோழ நாட்டுக்குப் போக மறுத்தால்?” என்று வினவினாள்.

“இஷ்ட விரோதமாகக் கொண்டு போகப்படுவீர்கள்!”

“மக்கள் சும்மா இருப்பார்களா?”

“இருப்பார்கள். பெரிய வல்லரசுகளின் மோதலில் சின்னஞ்சிறு அரசுகள் துரும்புக்குச் சமானம். மக்களும் அப்படித்தான்.”

“நீங்கள் எந்த வல்லரசைச் சேர்ந்தவர்?”

“சோழப் பேரரசின் பிரதிநிதி.”

“தூதரான பிரும்ம மாராயரைவிட உயர்ந்தவரா?”

“இல்லை; அவருக்குள்ள அதிகாரம்தான் எனக்கு.”

“என்ன உளறுகிறீர்?”

“உளறவில்லை; இப்பொழுது வேங்கி நாட்டின் சோணாட்டுத் தூதன் நான்தான்.”

இதைக் கேட்ட நிரஞ்சனாதேவி ஒருகணம் ஸ்தம்பித்து நின்றாள். மறுகணம் வாய்விட்டு நகைத்தாள். அந்தச் சிரிப்பும் அடுத்த விநாடி உறைந்தது. மரத்துக்குப் பின் ஒளிந்திருந்தவனும் அவளுடன் சேர்ந்துகொண்டு சிரித்து விட்டான். சிரித்ததோடு நிற்காமல், மறைவிடத்தை விட்டு வெளியிலும் வந்தான். கரிகாலன் உணர்ச்சிகளும் உறைந்து தான் போயின. ஆனால் கை மட்டும் வாளை நோக்கிச் சென்றது.

Previous articleMannan Magal Part 2 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here