Home Historical Novel Mannan Magal Part 2 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

85
0
Mannan Magal part 2 Ch 9 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 9 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 வேண்டாம் இந்த அரசு

Mannan Magal Part 2 Ch 9 | Mannan Magal | TamilNovel.in

அரசகுமாரியின் சிரிப்பொலியோடு இன்னொரு சிரிப்பொலியும் கலந்து காதில் விழுந்த விநாடியிலேயே எச்சரிக்கையடைந்து வாள்பிடியின் மேல் கைவைத்துக் கொண்ட கரிகாலன், இரவின் அந்த நேரத்தில் இருளடர்ந்த மரத்தடியில் ஒளிந்து நின்று தங்கள் பேச்சை கேட்டவன் யாராயிருக்குமென்று அறிய, மரத்தடியிலிருந்து சிறிது விலகி நின்று மறைவிலிருந்து வெளியே வந்தவன் மீது தன் கண்களை ஓடவிட்டானானாலும், அங்கிருந்த மையிருட்டின் விளைவாகவும், மரக்கிளைகளைப் பிளந்து கொண்டு உள்ளே பாய்ந்த வெள்ளிய சந்திரக்கிரணங்களும் அந்தப் பிரதேசத்தில் அதிகமாக விழாததாலும், வந்தவன் யாரென்பதை திட்டமாக அறிய முடியாமல், சற்றே சஞ்சலுத்துக்குள்ளானான். ஒட்டுக் கேட்டவன் அங்கிமீது மட்டுமே விழுந்திருந்த ஓரிரு கிரணங்கள் தகதகவென்று அவன் ஆடையைப் பொலிவுறச் செய்த தாலும், அவன் தளர்ந்த நடையிலும் ஒரு கம்பீரமிருந்ததன் காரணத்தாலும் ஒளிந்திருந்த மனிதன் யாராயிருந்தாலும் அவன் பெரிய பதவியை வகிப்பவனாகவே இருக்க முடியுமென்றும், சாதாரண ஒற்றனாயிருக்க முடியாதென்றும் கரிகாலன் முடிவுக்கு வந்தான். இருந்த போதிலும், திட்டமாக அவன் யாரென்று அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் ஏதோ பேச வாயெடுத்த கரிகாலனிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதற்கு முன்பாக, வந்தவனே பேச ஆரம்பித்து, “அக்கா, தமிழர்களிடம் உறவாடுமுன்பு அவர்கள் பழ மொழிகளை நீ கற்க வேண்டாமா?” என்று சொல்லி, மீண்டும் ஏளன நகையொன்றை இதழ்களிலிருந்து உதிரவிட்டான்.

அங்கு ஒளிந்திருந்து தானும் கரிகாலனும் பேசியதைக் கேட்டவன் தன் தம்பி இராஜராஜ நரேந்திரனைத் தவிர வேறு யாருமில்லையென்பதை அறிந்ததும், உள்ளத்தே கொதித்தெழுந்து கொண்டிருந்த பயங்கர அலைகள் அடங்கியதற்கு அறிகுறியாக நீண்டதொரு பெருமூச்சை விட்ட அரசகுமாரி, “எந்தப் பழமொழியைக் கற்க வேண்டும் தம்பி?” என்று மெல்ல வினவினாள்.

“பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே’ என்று தமிழ்நாட்டில் பழமொழி இருக்கிறதாமே? என் தாயார் சொல்வார்கள்” என்றான் ராஜராஜ நரேந்திரன், ஏதோ சாதாரண சம்பாஷணையில் ஈடுபடு பவனைப்போல்.

இரவு நேரத்தில் மரக்கூட்டத்தின் இருட்டில், தான் இன்னொரு புருஷனைத் தனிமையில் சந்தித்துப் பேசிய அந்தச் சந்தர்ப்பத்திலும் இராஜராஜ நரேந்திரன் பதற்றமில்லாமல் மிகுந்த நிதானத்துடன் பேசியதைக் கண்ட நிரஞ்சனாதேவியே ஆச்சரியப்பட்டுப் போனாள். ‘மிகுந்த பலவீனனும் வாள் போர் விற்போர் கற்றவனுமான இராஜராஜ நரேந்திரன் நிதானத்தைக் கைவிடாதிருக்க யாரிடமிருந்து கற்றான்?’ என்று கரிகாலனும், பிரமிப் படைந்து நின்றான். ‘இத்தனை நிதானத்தைப் படைத் திருக்கும் இந்த இராஜராஜ நரேந்திரனுக்கு மட்டும், சரியான போர்ப் பயிற்சி அளிக்கப்படுமானால், வேங்கி நாட்டு அரச மரபெனும் ஆபரணத்தில் சுடர்விடும் மாபெரும் முகப்பாக இவன் அமைய முடியும்’ என்பதையும் நினைத்துப் பார்த்த கரிகாலன், ‘இந்தப் பயிற்சியை இவனுக்கு அளிப்பது என் பொறுப்பு. அதற்காக நான் கையாள உத்தேசித்திருக்கும் முறைகளில் அரசகுமாரியின் வெறுப்பும் விரோதமும் கிட்டினாலும் சரி’ என்ற முடிவுக்கு வந்து, அரசகுமாரிக்கும் அவள் தம்பிக்கும் மேற்கொண்டு நடந்த சம்பாஷணையைக் கவனிக்கலானான்.

தமிழ்ப் பழமொழியைப் பற்றிப் பிரஸ்தாபித்த தம்பியை நோக்கிய அரசகுமாரி, “தம்பி! தமிழ்ப் பழமொழி நமக்கெதற்கு? சோழ நாட்டு வீரர் வந்திருக்கிறாரே அவருக்குச் சொல்” என்றாள்.

“அவருக்கு எதற்காகச் சொல்ல வேண்டும் அக்கா?”

“அவர்தான் பெரிய ராஜ ரகசியத்தைப் பேச இந்த அழகான இடத்துக்கு அழைத்து வந்தார்.”

“ஓகோ, தூதரின் யோசனைதானா இது?”

“தூதராவது! இதை நம்புகிறாயா தம்பி?”

“ஏன் நம்பினால் என்ன? அவரே சொல்கிறாரே, தான் சோழ நாட்டுத் தூதனென்று!”

நிரஞ்சனாதேவி, இகழ்ச்சியெல்லாம் அள்ளித் தெளிக்கும் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, இராஜராஜ நரேந்திரன் இருந்த திக்கில் கண்களை நாட்டியபடி சொான்னாள், “தம்பி, அவர் சொல்வதால்தான் நம்பக் கூடாது” என்று.

வேங்கி நாட்டு மன்னனும், பொறுப்பைச் சிறிதும் அறியாதவனும், வேடிக்கையாகவே காலத்தைக் கடத்தி வந்தவனுமான இராஜராஜ நரேந்திரன் உடம்பில், இயற்கையாக இருந்த விஷமம் உச்சஸ்தாயியை அடையவே, “அப்படியானால் இவர் வார்த்தையில்…” என்று நீட்டினான்.
“உண்மைக் கலப்பு இருக்காது” என்று முடிவாகச் சொன்னாள் நிரஞ்சனாதேவி.

“இவரைத்தானே அன்றொரு நாள் வசந்த மண்டபத்தில் உனக்கு மிகவும் நம்பிக்கையானவர் என்று எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாய்? இவருக்குத்தானே…” என்று ஏதோ யோசித்துச் சற்றுத் தடுமாறினான் இராஜராஜ நரேந்திரன்.

“உன் அரச உடையையும் அணியக் கொடுத்தேன்” என்று பதில் சொன்ன அரசகுமாரி மேலும் தொடர்ந்து, “அவரேதான் இவர் தம்பி! இவர் சொன்னதெல்லாம் பொய்; செய்ததெல்லாம் துரோகம்! நமது அரிஞ்சயனைக் கடத்திச் சென்று சோழ நாட்டில் சிறை வைத்திருப்பதும் இவர்தான்” என்றாள்.

இராஜராஜ நரேந்திரன் இதற்குச் சொன்ன பதில் அரசகுமாரியை மட்டுமல்லாமல் கரிகாலனையும் தூக்கி வாரிப் போட்டது. சிறிதுநேரம் ஏதோ யோசித்த வேங்கி நாட்டு மன்னன், “அக்கா, அரிஞ்சயனை அகற்றியது இவர் என்பது உண்மையானால், இவர் துரோகியல்ல; நமக்கு நண்பர்தான்!” என்றான்.

விமலாதித்தன் மகளுடைய முகத்தை மட்டும் அந்தக் கணத்தில் இராஜராஜ நரேந்திரன் காண முடிந்திருந்தால், அதில் எழுந்து தாண்டவமாடிய கோபாவேசத்தின் முழு வேகத்தையும் உணர்ந்திருப்பான். ஆனால் பாதி ஒளியே முகத்தில் தட்டியிருந்த காரணத்தால், அவள் கோப ஜ்வாலையை முழுவதும் காண முடியாவிட்டாலும் அவள் உதட்டிலிருந்து உதிர்ந்த, “நரேந்திரா!” என்ற சொல்லில் தொனித்த அழுத்தமும் வேகமும் அவள் உள்ளத்தே எழுந்த அனல் வீச்சைத் தெளிவாக நிரூபித்தன. தான் சொன்ன சொற்கள் நிரஞ்சனாதேவிக்குச் சொல்லவொண்ணாத கோபத்தை அளித்துவிட்டன என்பதை அறிந்து கொண்ட இராஜராஜ நரேந்திரன், அதற்குமேல் அதிகம் பேசாதது மட்டுமல்லாமல் உள்ள நிலையை ஓரளவு சீர்படுத்தவும் நினைத்து, “அக்கா! பேசுவதைச் சற்று வெளிச்சத்தில் போய்ப் பேசினால் என்ன?” என்று கேட்டான்.

“எதற்காக வெளிச்சத்தில் பேச வேண்டும்?” ஏதோ ஏட்டிக்குப் போட்டியாகக் கேட்டாள் நிரஞ்சனாதேவி.

“உனக்குச் சிரமம் இருக்காது.”

“எனக்கு என்ன சிரமம்?”

“இவ்வளவு அழுத்தமாக, நரேந்திரா’ எனக் கூப்பிட்டுப் பயமுறுத்த வேண்டாம். உன் கண்களில் கோபத்தைக் கண்டாலே நான் அடங்கிவிடுவேனே!”

இதைக் கேட்ட நிரஞ்சனாதேவியின் கோபம் முளைத்த வேகத்தில் மறைந்துவிடவே, தன் தம்பி மீது பரிதாபமான பார்வையொன்றை வீசிவிட்டு, “நரேந்திரா! நீ இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே என்பதால்தான் எனக்குக் கோபம் வருகிறது. சரி, வா. பேச வேண்டியதை வசந்தமண்டபத்தில் பேசிக்கொள்ளலாம்” என்று கூறிவிட்டு தோட்டத்தின் அந்தப் பகுதியை விட்டுச் சந்திர வெளிச்சம் மண்டிக் கிடந்த புல்வெளியை நோக்கி நடந்தாள். இராஜராஜ நரேந்திரன் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்தான். ஏதேதோ எண்ணங்கள் மனத்திலே கிளைத்துக் கொண்டிருந்ததாலும், எப்படி யாவது நிலைமையைச் சமாளித்து அரசகுமாரிக்கு நம்பிக்கையூட்டித் தன் வாழ்க்கையின் முக்கியப் பணியை நிறைவேற்ற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியாலும் அவ்விருவரையும் முன்னால் செல்லவிட்டுச் சற்றுப் பின்னடைந்தே அவர்களைப் பின்பற்றிச் சென்றான் கரிகாலன்.

தீர்க்காலோசனையிலிருந்த காரணத்தால், அரசகுமாரி மெதுவாகவே நடந்து சென்றதால், சொப்பன உலகத்தில் நடமாடும் ஒரு வனதேவதையைக் காண்பது போல் அவளைப் பார்த்துப் பரவசப்பட்டான் கரிகாலன். இராஜராஜ நரேந்திரன் அவளுக்கு நேர் பின் பகுதியில் செல்லாமல், சிறிது தள்ளியே நடந்ததாலும், மலைபோல் செழித்துக் கிடந்த அவள் வனப்பின் அசைவுகள் கண்ணுக்கு நன்றாகத் தெரிந்ததாலும், அந்த அசைவுகளை அல்லித் தடாகத்திற்கு அருகில் நடந்துகொண்டிருந்த மயிலின் அசைவுக்கு ஒப்பிட்டுப் பார்த்த கரிகாலன், ‘மயிலே உன் சாயலும் நடையும் இந்தப் பெண் மயிலின் நடைக்கும் எழிலுக்கும் உறை போடக் காணுமா?’ என்று மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ‘நன்றாகப் பின்னப்பட்டு நீண்டு கிடந்த அந்த ஜடைக்குத்தான் என்ன கிறுக்கு, அவள் நடக்கும் போது எதற்காக இப்புறமும் அப்புறமும் ஆடி ஆடி அவள் அழகைத் தொட்டுக் காட்ட வேண்டும்?’ என்று எண்ணியது கரிகாலன் கவியுள்ளம்.

இப்படி அவள் நடையழகை ரசித்துக்கொண்டே வசந்த மண்டபத்தை அடைந்த கரிகாலனைச் சிறிதும் திரும்பிப் பாராமலும், உள்ளே வாவென்று அழையாமலும் கதவைத் திறந்துகொண்டு சென்றாள் நிரஞ்சனாதேவி. அவள் அப்படிச் சென்றதை ரசித்ததாலோ, அல்லது கரிகாலனிடமிருந்து பூராத் தகவலையும் அறிய வேண்டுமென்ற காரணத்தாலோ தெரியவில்லை இராஜராஜ நரேந்திரன் மட்டும் லேசாகப் பின்புறம் திரும்பித் தன்னைத் தொடருமாறு கரிகாலனுக்குச் சைகை செய்து, வசந்த மண்டபத்துக்குள் நுழைந்து, அரசகுமாரியின் பள்ளியறையை நாடிச் சென்றான்.

ஒரே உயரம் – கிட்டத்தட்ட ஒரே வயது, அநேகமாக ஒரேவிதமான அங்க அமைப்பு – இவற்றையுடைய கரிகாலனும் இராஜராஜ நரேந்திரனும் அரசகுமாரியின் அதே பள்ளியறையில் மீண்டும் பல நாள்களுக்குப் பிறகு அந்த இரவில் சந்தித்தார்கள்.. ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் எத்தனை மாறுதல்! அன்றைக்கு அநாதையாக அரசகுமாரியின் அபயத்தை நாடி ஓடிவந்தான் கரிகாலன். இன்று பதவி உயர்ந்து, சோழ நாட்டுத் தூதன் என்ற முறையில் ஜெயசிம்மனும் அசைக்க முடியாத அதிகாரத்தைப் பெற்று வந்திருக்கிறான். ஆனால், அன்று வந்த கரிகாலன் அரசகுமாரியின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றவன்; அவளுக்குக் கரும்பாயிருந்தவன். இன்று வந்த கரிகாலன், அவளுக்கு வேம்பு; விரோதி; தம்பியின் நலனை அழிக்க வந்த நமன்!

இத்தகைய எண்ணங்களுடன் அரசகுமாரி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அன்று அவளுக்கு அருகில் நின்றவன் கரிகாலன்; வாயிற்படியில் நின்ற இராஜராஜ நரேந்திரன், அவளுக்கு வெகு அருகில் சென்று நின்று கொண்டு, அக்கா!” என்று ஆசையோடு அழைத்தான். ஆசை வெள்ளம் அகத்தில் புரண்டு கொண்டிருந்த கரிகாலன் உள்ளே காலை எடுத்து வைக்கவும் கூசியவனாய் வாயிற்படியிலே நின்றான்.

அரசகுமாரி ஏதும் பேசாமலே கட்டிலில் உட்கார்ந் திருந்தாள். இராஜராஜ நரேந்திரனே பேச்சைத் துவக்கி, “அக்கா! அரிஞ்சயனை இவர் சோழ நாட்டுச் சிறையில் அடைத்தது உண்மையா?” என்று கேட்டான்.

“உண்மை; மாமாவே சொன்னார்!” என்றாள் நிரஞ்சனாதேவி.

“யார் ஜெயசிம்மனா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நரேந்திரன்.

“ஆம்” என்றாள் அரசகுமாரி.

“அவருக்கு எப்படித் தெரியும்?”

“அவரிடம் வந்திருக்கும் சேர நாட்டு ஒற்றன் சொன்னான்.”

“எதற்காகச் சொன்னான்?”

“இவரைப் பழி வாங்க.”

“இவர் அவனுக்கு என்ன தீமை செய்தார்?”

“அது தெரியவில்லை.”

ஆனால், ஒரு விஷயம் தெரிகிறதல்லவா?”

“எது தம்பி?”

“சேர நாட்டு ஒற்றனுக்கும் இவருக்கும் விரோதம். அந்த ஒற்றனை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் மாமா. இவருடைய விரோதியைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, இவரை ஒழிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?”

அரசகுமாரியின் கண்களில் திடீரென ஓர் ஒளி பிறந்தது. சட்டென்று தலைதூக்கித் தம்பியை ஏறெடுத்து நோக்கி, “என்ன சொல்லுகிறாய் தம்பி?” என்று வினவினாள்.

“இவர் ஜெயசிம்மன் விரோதியில்லாவிட்டால் இவர் விரோதியை ஜெயசிம்மன் ஏன் வேலையில் வைத்துக் கொள்கிறார்? இவரைப் பிடித்துவர ஏன் அந்த ஒற்றன் தலைமையில் வீரர்களை அனுப்ப வேண்டும்?”

இராஜராஜ நரேந்திரனுடைய வாதத்தின் போக்கு மிகத் தெளிவாகப் புலப்பட்டது அரசகுமாரிக்கும். ஆகவே, அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனம் சாதித்தாள். இராஜராஜ நரேந்திரன் அவள் மௌனத்தை நீடிக்க விடாமல், “ஏன் அக்கா, அரிஞ்சயன் நமது நண்பனாயிருந்தால், நமது சதிக்கு உதவுகிறவனாயிருந்தால், அவன் ஒழிந்ததைப் பற்றி ஜெயசிம்மன் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக இவரை ஏன் சிறைபிடிக்க முயல வேண்டும்?” என்று கேள்வியும் கேட்டான்.

“என்னைத் திருப்தி செய்ய இவரைக் கைது செய்யும் படிக் கூறினார் ஜெயசிம்ம சாளுக்கியன்” என்றாள் நிரஞ்சனாதே வி.

இதைக் கேட்ட இராஜராஜ நரேந்திரன், அந்த வசந்த மண்டபமே அதிரும்படியாக நகைத்தான். அவன் உடம்பில் அவ்வளவு பெரிதாகச் சிரிப்பதற்கும் வலு இருக்கிறதென்பதை அப்பொழுதுதான் அரசகுமாரியும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதிர்ச்சியடைந்த கண்களை அவனை நோக்கி எழுப்பினாள் அரசகுமாரி. “அக்கா! ஜெயசிம்மனை நீ புரிந்து கொண்ட லட்சணம் இதுதானா? இத்தனை சிற்றறிவு படைத்த நீயா, உயிருக்கே உலை வைக்கவல்ல மாபெரும் சதியிலிறங்கியிருக்கிறாய்? உன்னைத் திருப்தி செய்யக்கூடிய ஒரு காரியத்தை ஜெயசிம்ம சாளுக்கியன் செய்வானென்ற ஞானோதயம் உனக்கு என்று ஏற்பட்டது?” என்று சொல்லி மீண்டும் சிரித்தான் இராஜராஜ நரேந்திரன்.

அரசகுமாரியின் முகம் குங்குமமெனச் சிவந்தது. இராஜராஜ நரேந்திரனை அடித்துவிடுபவளைப் போல் திடீரெனப் பஞ்சணையிலிருந்து எழுந்தாள். கோபத்தால் நிதானத்தை அறவே இழந்துவிட்ட விமலாதித்தன் மகளை, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்படியான பேரிடி யொன்றையும் அடுத்தபடி வீசிய இராஜராஜ நரேந்திரன், “அக்கா! நீ இஷ்டப்பட்டாலும் சரி, இஷ்டப்படாவிட்டாலும் சரி, இவர் திட்டத்துக்கு நான் ஒப்புக்கொள்கிறேன். வேங்கி நாட்டு அரியணை எனக்கு வேண்டாம்” என்று கூறினான்.

Previous articleMannan Magal Part 2 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here