Home Historical Novel Mohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

159
0
Mohana Silai Ch 10 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 10. கண்ணழகி

Mohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

தாயைப் பற்றிக் கேட்டதும் தந்தை ஏன் அப்படிச் சினத்தின் வசப்பட்டார் என்று சிந்தித்த அரசகுமாரி அடுத்து மௌனமே சாதித்தாள் கேள்வியொன்றும் கேட்காமல். திடீரென்று கண்களில் தோன்றிய சினத்தையும் விஜயாலயன் விநாடி
நேரத்தில் மறைத்துக் கொண்டு அன்பு ததும்பும் கண்களுடன் தனது மகளை நோக்கினான்.
“குழந்தாய்! ஏற்கனவே ஏற்பட்ட நிகழ்ச்சிகளால் சிறிது நிதானம் தவறிவிட்டேன். உன் அன்னையை நினைக்கும் பொழுதெல்லாம் இத்தகைய நிலைக்கு நான் வந்து விடுகிறேன். ஏனென்றால், உன் அன்னையைப் போல் சிறப்பாக வாழ்ந்த
வளும் இல்லை. பயங்கரமாக வீழ்ந்தவளும் இல்லை. உறையூர் அரண்மனைக்கும் நகரத்துக்கும் ஒரு தீபம் போல் இருந்தாள் உன் அன்னை. அவளைப் போன்ற அழகிகள் யாருமில்லையென்பது பல்லவ ராஜ்யத்திலும் பாண்டிய
ராஜ்யத்திலுங்கூட பிரசித்தம். அவள் என் மனையாளாக வந்து மிகக் குறுகிவிட்ட சோழர் சிற்றரசின் ராணியாகும் வரை என் அன்னையைத்தான் அழகிற் சிறந்தவள் என்று மக்கள் நினைத்தார்கள். மருமகள் வந்ததும் மாமியாரின் புகழ்
மறைந்தது.
இருப்பினும், என் அன்னை மிகுந்த அழகுடையவள் உன்னைப் பார்த்தால் அவளைப் பார்க்க வேண்டியதில்லை. அவள் சிலையைத்தான் அச்சுதர் மாளிகை நிலவறையில் பார்த்தாயே! அவளைவிட மிகச் சிறந்த எழிலுடன் உறையூர்
அரண்மனையில் புகுந்த உன் அன்னையை மக்கள் தெய்வமென நினைத்தார்கள். அவள் பொறுமையை முன்னிட்டுத் தானோ என்னவோ அவளுக்குப் பூதேவி என்று அவள் பெற்றோர் பெயரிட்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அவள்
அழகைக் கண்டு பூதேவியுடன் ஸ்ரீதேவியும் இணைந்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். அவள் ரதத்தில் கோவிலுக்குப் போகும்போதெல்லாம். திரளான மக்கள் அவளைப் பார்க்க வருவார்கள். அவளைத் தெய்வமாக நினைத்தார்கள்.
அவள் வந்த இரண்டு வருடங்களில் என் அன்னை காலமாகி விட்டதைக்கூட அபசகுனமாகவோ, அவள் காலடி வைத்ததன் காரணமாகவோ மக்கள் குறை கூறவில்லை. அப்படி மக்களின் மனத்தை ஈர்த்துக் கொண்ட உன் அன்னை
முதன்முதலில் உன் அண்ணன் ஆதித்தனை ஈன்றாள். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து நீ பிறந்தாய்.
“நீ வளர வளர உன் அன்னையின் மகிழ்ச்சி எல்லை மீறியது. அவள் அடிக்கடி உன் முகத்தைப் பார்ப்பாள். உன் கண்ணழகைக் கண்டு அவளே மயங்கினாள். இவள் பிறந்த வேளை சோழ அரசு பேரரசாகும் என்று அவள் அடிக்கடி
கூறுவாள். அவள் உன்னை ஈன்ற எட்டாவது நாள் அவள் கட்டிலுக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அவள் என்னையும் பார்த்து உன்னையும் பார்த்தாள். உங்கள் அன்னையின் கண்கள் இப்படித்தானிருக்கும். ‘உங்கள் அன்னை
மார்பில் இவள் மார்பில் இருப்பதைப் போலவே புலியின் மச்சமுண்டு. நீங்கள் புலியின் வம்சமல்லவா?’ என்று கூறினாள், மகிழ்ச்சிப் புன்முறுவல் காட்டினாள்.
“உன்னை வைத்த கண் வாங்காமல் நான் பார்த்துக் கொண்டு நின்றேன். உறையூர் உதயசூரியன் அரண்மனைச் சாளரங்கள் வழியாக இரண்டு கிரணங்களை அனுப்பியிருந் தான். அந்த இரண்டு கிரணங்களும் உன் மார்புப் புலி
மச்சத்தில் விழுந்தன. அதுவும் ஒரு அழகாய்த் தானிருந்தது உனக்கு…” என்று சொல்லிய விஜயாலயன் சிறிது நேரம் அந்தப் பழைய காட்சியை நினைத்து அதில் திளைத்து அறையில் தனது மகள் முன்பாக அப்புறமும் இப்புறமும்
நடந்தான். பிறகு சட்டென்று நின்று மகளை நோக்கினான். இருவர் கண்களும் கலந்தன. அவள் கண்களை நோக்கிய விஜயாலயன், “ஆம், அதே கண்கள்! வசீகரக் கண்கள்! அழகு சொட்டும் அற்புத விழிகள்” என்று சற்று இரைந்தே
சொல்லி விட்டு, “மகளே கேள். இவ்வண்ணம் அன்று நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தபோது உன் அன்னை கேட்டாள் ‘இன்று எட்டாவது நாள் தொட்டிலிட வேண்டும் உங்கள் மகளுக்கு’ என்று.
‘ஆம்’ என்றேன் நான், எதற்காக அவள் கேட்கிறாள் என்பதைப் புரிந்துக்கொள்ளாமல். ‘இப்படி உட்காருங்கள்’ என்று உன் அருகில் என்னை உட்காரச் சொன்னாள். நானும் உட்கார்ந்தேன். ‘உங்கள் பெண்ணுக்கு இன்று பெயர் வைக்க
வேண்டும். என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?’ என்று வினவினாள் உன் தாய்.
‘என்னை எதற்காகக் கேட்கிறாய்’ என்று நான் கேட்டேன்.
‘நீங்கள் பெயர் வைப்பதில் சூரர். திரும்பவும் சங்க காலத்து நிலைக்கு சோழ நாடு உயர வேண்டும் என்று கூறி மகனுக்கு ஆதித்தன் என்று பெயரிட்டீர்கள். தமிழ்ப் பெயராக இல்லையே என்று நான் ஆட்சேபித்தேன்; நீங்கள் என்ன
சொன்னீர்கள்? கரிகாலன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, செங்கணான் என்ற பெயர்கள் மறைந்துவிட்டன களப்பிரர் இருளில்; அந்த இருளைக் கிழிக்க என் மகனுக்கு ஆதித்தன் என்று பெயர் வைக்கிறேன் என்று சொன்னீர்கள். சூரியன்,
கதிரவன் என்று மாற்றுப் பெயர்கள் சொன்னேன். நீங்கள் ஒப்பவில்லை. பெயர்கள் நன்றாயில்லை என்று தள்ளிவிட்டீர்கள். ஆகையால் பெண்ணுக்கு தமிழ்ப் பெயரிடுங்கள்.’ இப்படிப் பேசினாள் “உன் அன்னை…” -இங்கு சிறிது தாமதித்தான்
விஜயாலயன்.
மேலும் பேசினான் : “இப்படிச் சொன்ன உன் அன்னையைத் திருப்தி செய்ய ‘நீயே ஒரு தமிழ்ப் பெயர் சொல்’ என்றேன். உடனே அவள் சொன்னாள். ‘கண்ணகி’ என்று நான் சிந்தித்தேன். ‘என்ன சிந்திக்கிறீர்கள்? சங்க காலப் பெயர், காப்பியப்
பெயர்’ என்றாள் உன் அன்னை. ‘ஆனால்…’ என்று நான் இழுத்தேன்.
‘மனம் விட்டுச் சொல்லுங்கள்’ என்றாள் உன் அன்னை எங்கள் இருவருக்கும் இப்படி விவாதம் நடந்தது.
‘பூதேவி! கண்ணகி சிறந்த பெயர்தான். ஆனால் அவள் அதிர்ஷ்டக் கட்டை’ என்றேன் நான்.
‘எப்படி?’ – இது உன் அன்னையின் கேள்வி.
‘கணவன் தாசியிடம் போய்விட்டான். சொத்து சுதந்திரமிழந்து அவனுடன் மதுரை சென்றாள். அங்கு மாங்கல்யத்தையும் இழந்தாள்’ என்றேன் நான்.
‘அது விதி’ என்றாள் உன் அன்னை.
‘அந்த விதி நமது செல்விக்கு வேண்டாம்.’
‘சரி, வேறு பெயர் என்ன?’
‘தமிழின் ஜீவனா?’
‘தமிழின் ஜீவனை நீ சொன்ன பெயருடன் சேர்த்தாலென்ன?’
‘ஆம் ‘ழ’ என்ற எழுத்துத் தமிழின் ஜீவனல்லவா? வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பெழுத்தல்லவா?”
‘ஆம்.’
அதை கண்ணகியில் நுழைத்துவிடு.’
‘நுழைத்தால்…’
‘கண்ணழகி என்றாகிவிடும்.’
இதை நான் சொன்னதும் உன் அன்னை பெருமிதமடைந்தாள். ‘அடி கண்ணழகி’ என்று உன்னை வாரி அணைத்துக் கொண்டாள். இப்படி ஏற்பட்டது உன் பெயர்.” என்ற பெயரின் வரலாற்றைக் கூறிய விஜயாலயன், உணர்ச்சிப்
பெருக்கால் மீண்டும் மஞ்சத்தில் உட்கார்ந்து விட்டான் “அச்சுதப் பேரறையரே! நீர் சொல்லும் அடுத்த கதையை” என்றான் குரல் தழுதழுக்க விஜயாலயன்.
அச்சுதக்கொல்லராயிருந்து அச்சுதப் பேரறையராக மாறிவிட்ட சோழர் முதலமைச்சர் தமது மஞ்சத்திலிருந்து எழுந்து விஜயாலயனைக் கவனித்தார். அவன் மனநிலை அவருக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது. மகா வீரனும்
திடபுத்தியுடையவனுமான விஜயாலயன், தன் மனைவிக்கு விளைந்து விட்ட துர்க்கதியால் மனம் உடைந்து கிடப்பதைப் புரிந்து கொண்டார். ஆகவே அவன் உத்தரவுப்படி கதையைத் தொடங்கினார்:
“கண்ணழகி! சோழ ராஜகுமாரி! நீங்கள் பிறந்த பின் அரண்மனை அமர்க்களப்பட்டது. உங்களை அரண்மனைப் பணி மக்கள் கீழே இறங்கவிடுவதில்லை. எல்லோரும் கண்ணழகி நாமத்தை ஜபம் செய்தார்கள். மூன்று வயது வரை
உறையூரின் சரித்திரம் உன் பெயரால் சிறந்தது. உன் அண்ணனுக்கு வயது எட்டு. உனக்கு வயது மூன்று. அப்பொழுதுதான் அந்த பயங்கர விளைவு ஏற்பட்டது. சுமார் ஒரு வார காலம் நானும் உன் தந்தையும் பாண்டிய நாடு
போயிருந்தோம்… அப்பொழுது ஒரு நள்ளிரவு களப்பிரர் வம்சத்தில் வந்த முத்தரையர்கள் திடீரென அரண்மனைக்குள் நுழைந்தார்கள் எதிர்ப்பட்டவரை வெட்டினார்கள். உன் அன்னையைத் தூக்கிப் போக முயன்றான், அவளை
மணக்க எண்ணி ஏமாந்த ஒரு முத்தரையன். உன் அன்னைகுறுவாளொன்றைத் தனது மார்பில் புதைத்துக் கொண்டாள். உன் அண்ணனைத் தேடினார்கள். அவனை நாங்கள் அழைத்துப் போயிருந்தோம், பாண்டிய நாட்டுக்கு. அன்னை
மாண்டு கிடந்த சமயத்தில் நீ வந்தாய் அழகு நடை நடந்து உன்னைத் தூக்கிச் சென்று விட்டான் உன் அன்னையின் கொலைக்குக் காரணமான முத்தரையன். எங்களுக்கு மதுரையில் கிடைத்தது செய்தி. உறையூருக்கு விரைந்து வந்தோம்
உடனடியாக. அரண்மனை மருத்துவர் உன் அன்னையைத் தைலப்படுத்தி வைத்திருந்தார். மார்பில் புதைந்து கிடந்த குறுவாளுடன் உன் அன்னையைப் பார்த்தோம். அவள் முகம் மாலையில் குவிந்த தாமரையைப் போலிருந்தது. அந்த
நிலையிலும் உன் தந்தையால் ஏதும் பேச முடியவில்லை. அவர் கண்களில் நீர் வடியவில்லை. ஆனால், இதயத்தில் வடிந்தது ரத்தம் என்பதை முகம் காட்டியது. அன்று பிரதிக்ஞை செய்தார் விஜயாலயச் சோழ தேவர் அவள் உயிரிழக்கக்
காரணமானவனை அதே குறுவாளால் அழித்து விடுவதென்று. குறுவாளை அவள் மார்பிலிருந்து பிடுங்கினார். அந்தக் குறுவாளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூவினார். “பூதேவி! உன்னை அழித்தவனை இதே குறுவாளால்
அழித்து விடுகிறேன். அவனை மட்டுமல்ல, அவன் குலத்தையும் நாசம் செய்துவிடுகிறேன்” என்று.
அவரை மெள்ள அப்புறம் அழைத்துச் சென்றேன் அடுத்த ஒரு வாரத்தில் காஞ்சி சென்றார் உன் தந்தை. சோழ அரசை பல்லவ ராஜ்யத்தின் சிற்றரசாக்கினார். அவர்களால் படைத்தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவர் அடுத்து
விளைத்த போர்கள் பல. முத்தரையர் இருப்பிடங்களையெல்லாம் அழிக்கத் தொடங்கினார், பல்லவ அரசின் பெயரால், சோழர் அரண்மனையில் பலநாட்டுப் பொருள்களும் வந்து சேர்ந்தன. உன்னைக் கண்டுபிடிக்க சல்லடை போட்டு
சலித்துப் பார்த்தோம். கிடைக்கவில்லை நீ ஆண்டுகள் ஓடின. சேரமன்னன் குமாரியின் அழகு மெள்ள மெள்ள எங்கும் பரவலாயிற்று. நீ கரூரில் இருக்கும் விவரமும் தெரிந்தது. உடனே உன் தந்தை என்னை அனுப்பினார் இங்கே…”
இந்த இடத்தில் அச்சுதர் தமது கதையை நிறுத்திக் கொண்டார். மெள்ளப் பேச முற்பட்ட விஜயாலயன் மெள்ள தலை நிமிர்ந்தான். “உன் படமொன்றை வரைந்து அனுப்பினார் அச்சுதர். உன் பாட்டியின் தத்ரூபமாக நீ அமைந்திருந்தாய்
அந்த சித்திரத்தில். அதற்கு முன்பே கரூர் சேரர்களின் இரண்டாவது தலைநகராகி விட்டது. முதல் தலைநகர் மஹோதய புரமாயிற்று. இந்த இரண்டாவது தலைநகரையும் உன்னையும் கைப்பற்றத் தீர்மானித்தேன். பதினைந்து
ஆண்டுகளுக்குப் பிறகு உன்னை இங்கு சந்தித்தேன். மகளே! நீ கிடைத்தாய். அதுமட்டுமல்ல. சோழ அரசு இனி சாம்ராஜ்யமாகும் நிலையும் துவங்கிவிட்டது” என்று கூறிய விஜயாலயன், “சரி அச்சுதரே! கண்ணழகி சிறிது
இளைப்பாறட்டும்” என்று கூறிக் கைகளைத் தட்டினார். அரண்மனைப் பணிப்பெண்கள் ஓடிவர, அவர்களிடம் மகளை ஒப்படைத்த சோழ மன்னன், “முதலில் இனி நாம் அடுத்த திட்டத்திற்குச் செல்வோம்” என்று கூறினான். “எதற்கும்
மாரவேளையும் அழைத்துக் கொள்வோம் ஆலோசனைக்கு” என்றும் சொன்னான்.
“மாரவேளை அழைத்து வர ஆள் அனுப்புகிறேன்” என்று சொன்ன அச்சுதப்பேரறையர், வாயிற்படியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார். ஆனால், அதற்கு அவசியமில்லாது போயிற்று.
அதே சமயத்தில் அந்த அறை வாயிற்படியில் நின்றார் மாரவேள். திடீரென குப்புற விழுந்தார் அறைக்குள். அவன் முதுகில் குறுவாளொன்று புதைந்து கிடந்தது. அதிலிருந்து பெருகிய குருதி அந்த அறையின் தரையை மெள்ள மெள்ள
நனைத்தது.

Previous articleMohana Silai Ch 9 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here