Home Historical Novel Mohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

93
0
Mohana Silai Ch 11 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 11. சாம்ராஜ்ய மர்மம்

Mohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

உச்சிவேளை கடந்து முழுக்க ஒரு ஜாம நேரங்கூட ஆகாததால், சற்றே சாய்ந்த கதிரவனின் கிரணங்கள் சில அந்த அரண்மனை அறையின் மேலைச் சாளரத்தின் மூலம் உள்ளே புகுந்து, வாயிற்படியில் குப்புறக் கிடந்த மாரவேளின்
முதுகிலிருந்து பெருகிவந்து தரையை நனைத்த குருதியின் வெப்பை மிகப் பயங்கரமாகக் காட்டியது. மாரவேளைப் பற்றிய பேச்சை எடுத்தவுடனேயே அவர் அங்கு தோன்றியதும் குப்புற விழுந்து விட்டதும் விஜயாலயரையும்,
பணிப்பெண்களுடன் உள்ளே செல்ல முயன்ற கண்ணழகியையும் திகைப்புக் குள்ளாக்கிவிட்டபடியால் யாரும் இருந்த இடத்தை விட்டு ஒரு அடிகூட நகரவில்லை. கண்ணிமைக்கும் நேரம். அடுத்த விநாடி சோழ மன்னனும் அச்சுதரும்
மாரவேளை நோக்கி ஓடி அவரை இரு புறத்திலும் பிடித்துத் தூக்கி வந்து சற்று எட்ட இருந்த பஞ்சணையில் குப்புறவே படுக்க வைத்து காயத்தைக் கவனித்தார். உள்ளே சென்று விட எதிர் வாயிற்படியில் காலை எடுத்து வைத்த
அரசகுமாரியும் ஓடி வந்து மாரவேள் கிடந்த பஞ்சணையின் பக்கத்தில் உட்கார்ந்து குறுவாளை நோக்கி எனாள். அது புதைந்திருந்த இடத்தை நோக்கினாள். பிறகு பணிப் பெண்களை நோக்கி “சுடு நீரும் ஆடுதொடா இலைச் சாறும்
கொண்டுவாருங்கள்” என்று உத்தரவிட்டாள். விஜயாலயன் குறுவாளைத் தொடப்போனான். அதே சமயத்தில் “தொடாதீர்கள் குறுவாளை. அதைப் பிடுங்கினால் அடுத்த விநாடி மாரவேள் மரணமடைந்து விடுவார்” என்று எச்சரித்தாள்
அரசமகள்.
அவள் ஆணையைக் கேட்டு வியந்த விஜயாலயன், “மகளே! அரண்மனை மருத்துவருக்குச் சொல்லி அனுப்புவோம். இது நமது வேலையில்லை” என்று கூறியதன்றி, “நீ உள்ளே செல், இவரை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றும்
சொன்னான்.
ஆனால், அச்சுதர் அதற்கு இசையவில்லை. “மன்னவா அரண்மனையில் அரசகுமாரியைவிட பெரிய மருத்துவர் யாரும் கிடையாது. அவள் இஷ்டப்படி விட்டுவிடுங்கள்” என்றார்.
சோழ மன்னன் தனது முதலமைச்சரை வியப்பு வழிந்த விழிகளில் நோக்கினான். “அரசகுமாரிக்கு மருத்துவமும் தெரியுமா?” என்றும் கேட்டான், வியப்பு குரலிலும் விரிய.
“நன்றாகத் தெரியும். சேர நாட்டின் தலை சிறந்த மருத்துவரிடம் பயின்றவள்” என்று புதிய செய்தி ஒன்றைச் சொன்னார் அச்சுதர்.
“அரசகுமாரிக்கு மருத்துவப் பயிற்சி எதற்கு?” என்று கேட்டான் விஜயாலயன்.
“அதை சேர மன்னரிடந்தான் கேட்கவேண்டும்” என்று அச்சுதர் பதில் சொன்ன சமயத்தில் பணிப்பெண்கள் ஒரு பாத்திரத்தில் சுடுநீரும், ஒரு வெண்கலக் குப்பியும், வெள்ளை வஸ்திரமும் கொண்டு வரவே அரசனையும் அச்சுதரையும்
பேசாதிருக்கும்படி சைகை செய்தாள் அரசகுமாரி. பிறகு வெள்ளைத் துணியைச் சிறிது கிழித்து வெந்நீரில் நனைத்து நீரை காயத்தின் மீது பிழிந்து மெள்ள ரத்தத்தைத் துடைத்தாள். அடுத்து வெண்கலக் குப்பியிலிருந்த பச்சை
இலைச்சாற்றை குறுவாளைச் சுற்றிலும் ஊற்ற பெருகிவந்த குருதி சட்டென்று நின்று விடவே, குறுவாள் பதிந்த இடத்தைச் சுற்று முற்றும். தனது பஞ்சு விரல்களால் லேசாக அழுத்திப் பார்த்தாள். திருப்திக்கு அடையாளமாகத் தலையை
ஆட்டிக்கொண்ட அரசகுமாரி, தனது அழகிய விழிகளால் அச்சுதரையும் தந்தையையும் நோக்கி, “உயிருக்குப் பயமில்லை. குறுவாள் சுவாசப்பைக்குச் சிறிது கீழேதான் பாய்ந்திருக்கிறது. குத்தியவன் அவசரப்பட்டுக் குத்தியிருக்கிறான்”
என்று சொற்களை யும் மெதுவாக உதிர்த்தாள்.
அமுத தாரையென உதிர்ந்த அவள் சொற்களால் அச்சுதரும் அரசரும் ஆசுவாசப் பெருமூச்சு விடவே அரசகுமாரி மீண்டும் தனது கவனத்தை மாரவேளின் காயத்தை நோக்கிச் செலுத்தினாள். “தந்தையே! அச்சுதரே! மாரவேள் சிறிதும்
அசையாதபடி இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். சிறிது அசைந்தாலும் அவர் உயிருக்கு நான் உத்தரவாதமல்ல” என்று கூறியதும் தலைப்பக்கத்தை அரசரும் கால் பக்கத்தை அச்சுதரும் இறுகப் பிடித்துக் கொள்ள, அடுத்த சிகிச்சையைத்
தொடங்கினாள் அரசகுமாரி. இரு பணிப்பெண்களை மஞ்சத்தின் இருபுறமும் வரச்சொல்லி மீண்டும் வெள்ளைத் துணியின் ஒரு பாகத்தைக் கிழித்து குறுவாளைச் சுற்றி முதுகில் அழுத்திக் கொண்டாள். இந்தக் குறுவாளை நான்
எடுத்ததும் காயத்தின் வாயில் பச்சை இலைச்சாற்றை பத்து சொட்டுக்கள் தொடர்ச்சியாக ஒரே சீராக விடு” என்று ஒரு பணிப்பெண்ணிடம் கூறி விட்டு, சுடுநீரை வைத்துக் கொண்ட பணிப்பெண்ணை அருகில் வர சைகை செய்தாள்.
அவள் வந்ததும் மீண்டும் சுடுநீரை காயத்தின் வாயில் பிழிந்து விட்டுக் குறுவாளை லேசாக சிறிது சிறிதாக எடுக்கலானாள். அவள் குறுவாளை எடுக்க எடுக்க காயத்தின் குமிழியிலிருந்து ரத்தக் கசிவு மிகக் குறைவாயிருந்ததையும்,
அவள் குறுவாளை ஏதோ வாழைப் பழத்திலிருந்து ஊசியை எடுப்பது போல் மிக லாவகமாக எடுப்பதையும் பார்த்த விஜயாலயன், மகளின் மருத்துவத் திறனைக் கண்டு சொல்லொணா வியப்படைந்தான். ஆனால், அச்சுதர் தமது
முகத்தில் எந்தவித வியப்பையும் காட்டவில்லை உணர்ச்சியற்ற கல்லாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். அரசகுமாரி குறுவாளை எடுத்ததும் அவள் கூறியபடி பணிப்பெண் பத்துத் துளிகள் பச்சிலைச் சாற்றை காயத்தில் சொட்ட
விட்டாள்.
குறுவாளை மிக லாவகமாக எடுத்துவிட்ட கண்ணழகி மீண்டும் வெள்ளைத் துணியில் சிறிது கிழித்து அதை பச்சிலைச் சாற்றில் தோய்த்து காயத்துக்குள் மெள்ள மெள்ளத் திணித்தாள். காயத்தை சாறு தோய்த்த துணியால் முழுதும்
அடைத்ததும் மற்றொரு பணிப் பெண்ணை நோக்கி, “என் பெட்டியில் துத்தநாகக் களிம்பு வைத்திருக்கிறேன். அதில் சிறிது வெற்றிலையில் எடுத்து வா!” என்று உத்தரவிட பணிப்பெண் வேகமாகச் சென்றாள்.
அதுவரை மௌனமாக நின்று கொண்டும் அரசகுமாரியின் மருத்துவத் திறனைக் கவனித்துக்கொண்டுமிருந்த விஜயாலயன், “மகளே! மருத்துவத்தின் எல்லையைக் கண்டிருக்கிறாய்” என்று முணுமுணுத்தான். பகல்
கண்ணழகி மெள்ள தன் கண்களை உயர்த்தி தந்தையின் கண்களைச் சந்தித்தாள். “நான் காணவில்லை தந்தையே. நமது பெரியோர்கள் கண்டிருக்கிறார்கள். முக்கியமாக சேர நாடு கண்டிருக்கிறது. அகத்தியர் பொதிய மலையில் அமர்ந்து
கொடுத்தது தமிழ் இலக்கணம் மட்டுமல்ல, மருத்துவ இலக்கணமும் தந்திருக்கிறார். பொதியமலையே ஒரு மருத்துவ மலை. அங்கிருக்கும் ஒளடத மூலிகைகள் கணக்கிலடங்கா. முழுதும் இன்னும் யாரும் கண்டறியவில்லை.
கண்டவரையில் நாம் காணும் விசித்திரங்கள் பல. ஒன்றை நீங்கள் இப்பொழுது கண்டீர்கள்” என்று கூறினாள்.
மன்னர் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். அச்சுதர் மன்னரை வெற்றிக் குறியுடன் நோக்கினார். அவர் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பு பணிப்பெண் வெற்றிலையில் களிம்பு கொண்டுவர, அதைத்
தனது இடது கையில் வாங்கிக்கொண்ட அரசகுமாரி, வலது கை ஆள்காட்டி விரலால் களிம்பை சிறிது சிறிதாக எடுத்து துணி அடைக்கப்பட்டிருந்த காயத்தின் முகப்பில் தடவினாள். மும்முறைகளிம்பு தடவப்பட்டதும்
காயத்திலடைக்கப்பட்ட துணி மறைந்தது, சுற்றிலுமிருந்த பச்சிலைச் சாறும் மறைந்தது. அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்ட களிம்பு சாதாரண சருமத்தைப் போல் விரிந்து காயத்தை அடியோடு மறைத்துவிட்டது.
இதற்குப் பிறகு அரசகுமாரி எழுந்திருந்து மற்றொரு பணிமகள் கொண்டு வந்த சுத்த ஜலத்தில் கைகளைக் கழுவிக் கொண்டாள். ஒரு பணிப்பெண் நீட்டிய துண்டை வேண்டாமென்று கூறி கையிலிருந்த அரைகுறை இரத்தத்தைத்
தனது சீலையின் முந்தானையில் துடைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த விஜயாலயன் கண்களில் எழுந்த கேள்விக்கு கண்ணழகி பதில் சொன்னாள், “எனக்காகச் சிந்தப்பட்ட ஒரு மகானின் ரத்தம், அது எனது முந்தானையில் பட்டதால்
தவறில்லை” என்று. பிறகு பணிப்பெண்களை நோக்கித் திரும்பி, “இரண்டு காவலரை அழைத்து வாருங்கள். இந்த மஞ்சத்தை அப்படியே தூக்கிக்கொண்டு போய் அந்தப்புரத்தில் வையுங்கள். இன்று இரவு பூராவும் நாம் இவரைக்
கவனிக்க வேண்டும்” என்று கூறினாள்.
“மகளே! இவரை மருத்துவரிடம் ஒப்படைத்தாலென்ன? ஆரம்ப சிகிச்சை முடிந்துவிட்டது. பிராண பயமில்லையென்று நீயே சொல்கிறாய்” என்றான் விஜயாலயன்.
“தந்தை செல்வதுதான் சரி அரசகுமாரி. நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று” என்று அச்சுதரும் அரசனுடன் ஒத்துப் பாடினார்.
“இதுவரை நடந்திருப்பது பாதி வைத்தியம். எதையும் நான் அரைகுறையாக விடுவதில்லை. தவிர, மாரவேள் நமது குலச் சொத்து. அவரை நாமே கவனிப்பதுதான் முறை” என்று அரசகுமாரி – அச்சுதர், தந்தை இருவரையுமே நோக்கிக்
கூறினாள்.
மகளின் இதயத்தின் அன்பைக் கண்டு, கடமை உணர்ச்சி கண்டு மகிழ்வெய்தினான் மன்னன் விஜயாலயன். அச்சுதப் பேரறையரும் அளவற்ற உவகை அடைந்து “மன்னவா! இவளைப் பெற்றது நீ செய்த பாக்கியம்” என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் காவலர் வந்து மாரவேள் குப்புறக்கிடந்த மஞ்சத்தை அசையாமல் தூக்கிக்கொண்டு உட்புறம் சென்றனர். பணிப்பெண்கள் சென்ற பிறகு அரசகுமாரி சொன்னாள். “தந்தையே! இன்றிரவு இவருக்கு நல்ல
காய்ச்சல் வரும். அது நல்ல அறிகுறி. நாளை தெளிந்து விடுவார். கவலை வேண்டாம். நாளன்றைக்கு இவருடன் நீங்கள் விவரமாகப் பேசலாம்” என்று கூறிச் சென்று விட்டாள் அரசகுமாரி.
அடுத்து விஜயாலயன் அச்சுதரை நோக்கினான். “முதலமைச்சரே! இளையவேள் எங்கிருந்தாலும் அவனைப் பிடித்துவர உத்தரவிடுங்கள்” என்று உத்தரவிட்ட விஜயாலயன் ஆமாம், இந்த இதயகுமாரன் எங்கு தொலைந்தான்?” என்றும்
வினவினான்.
அச்சுதருக்கும் அது விளங்கவில்லை. தங்களுடன் வந்திருக்க வேண்டிய இதயகுமாரன் ஏன் வரவில்லை? எங்கு போயிருக்கிறான்? என்று யோசித்தார். “ஒருவேளை இளையவேள் அவனையும்…” என்று எண்ணமிட்ட அச்சுதர்,
“இருக்காது அது ஒரு நாளும் முடியாது” என்று தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொண்டார்.
அவர் மனத்திலோடிய எண்ணங்களை அவர் முகமாறுதலிலிருந்தே புரிந்து கொண்ட விஜயாலயன், “அது சாத்தியமல்ல அச்சுதரே. இதயகுமாரனை அப்படி யாரும் சுலபத்தில் தீர்த்துக்கட்ட முடியாது. எதற்கும் அவனையும்
அழைத்துவர ஆள் விடுவோம்” என்றான்.
அரசன் இட்ட பணிகளை நிறைவேற்ற வெளியே சென்ற அச்சுதர் காவலரை அழைத்து இளையவேளை எங்கிருந்தாலும் சிறை செய்து அழைத்து வருமாறும், இதயகுமாரனையும் அழைத்து வருமாறும் உத்தரவுகள் பிறப்பித்தார்.
அவற்றை நிறைவேற்ற வீரர்கள் பறந்தனர். அன்று முழுதும் கருவூரைச் சல்லடை போட்டுச் சலித்தும் இளையவேளும் கிடைக்கவில்லை, இதயகுமாரனையும் காணவில்லை.
கதிரவன் மாலையில் தன் மஞ்சள் ஆடையை மெள்ள மெள்ள இழுத்துச் சுருட்டிக்கொண்டு மறைந்துவிட ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். பறவைகள் கூண்டுகளை நோக்கிச் செல்லத் துவங்கின. அரசகுமாரி கண்ணிமைக்காமல்
மாரவேளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். குப்புறப் படுத்திருந்த மாரவேள் சிறிது அசையலானார். அரசகுமாரி பணிப்பெண்களை விளித்து இரண்டு இலவம்பஞ்சுத் தலையணைகளைக் கொண்டு வரச் சொல்லி, அவற்றை முதுகுப்
பக்கத்துக்கு அடைப்பாகக் கொடுத்து மெள்ளத் திருப்பினாள் மாரவேளை இரு பெண்களின் துணைகொண்டு. மாரவேள் ஒருக்களித்துப்படுத்த நிலையில் பஞ்சடைந்த கண்களை லேசாகத் திறந்தார். உதடுகள் மெள்ள அசைந்தன.
அரசகுமாரி எழுந்து சென்று ஒரு பாலாடையில் பால் கொண்டுவந்து இரண்டு சொட்டுகளை அவர் வாயில் புகட்டினாள். மாரவேள் நன்றாகவே கண்களைத் திறந்தார். அப்பொழுதும் அவருக்கு ஜுரப் பார்வைதானிருந்தது. நெற்றியில்
கையை வைத்த அரசகுமாரி, நெற்றி பொறி பறப்பதை உணர்ந்தாள்.
அரசகுமாரியின் கை அவருக்கு மிக இதமாக இருந்திருக்க வேண்டும். “அதே கை, அதே இதம், பூப்போல் இருக்கிறது. அன்னைக்கும் அப்படித்தானிருக்கும்” என்று ஏதோ பேசினார். அதே சமயத்தில் அவர் இதழ்களில் புன்முறுவல் ஒன்று
படர்ந்தது. “அது யாருக்கும் தெரியாது. ஆனால், இப்பொழுது எங்கிருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டார்.
அவர்ஜுரத்தில் பேசுகிறாரென்பதைப் புரிந்து கொண்டாள் அரசகுமாரி. ஆனால், அவற்றில் ஏதோ பொருள் புதைந்திருப்பதும் அவளுக்குத் தெரிந்தது. அதை உணர்ந்து கொள்ள அவர் காதருகில் குனிந்து, “என்ன கேட்கிறீர்கள்?”
என்று மெதுவாகக் கேட்டாள்.
ஜுர வேகத்திலும் மாரவேளின் இதழ்கள் அசைந்தன. “அதுதான் மோகனச் சிலை” என்றார்.
“அதற்கு என்ன?” என்று கேட்டாள் அரசகுமாரி.
சிறிது நேரம் பதிலில்லை. பிறகு அவர் இதழ்கள் மீண்டும் அசைந்தன. “அதன் ரகசியம். சாம்ராஜ்ய மர்மம்” என்று சொற்கள் மெதுவாக வந்தன.
அவர் எதையோ சொல்ல முயல்கிறாரென்பதை அரசகுமாரி உணர்ந்து கொண்டாலும் அதற்குத் தேவையான சக்தி அவர் உடலில் இல்லையென்பதையும் புரிந்து கொண்டாள். ஆகவே அவர் காதுக்கருகில் மீண்டும் குனிந்து,
“தூங்குங்கள், காலையில் பேசலாம்” என்றாள். அவர் கண்களை மூடவும் செய்தாள் தன் தளிர் விரல்களால்.
கண்கள் மூடின, வாய் மூடவில்லை. “அவசரம். மோகனச் சிலை இளையவேளிடம்… சிக்ககக்… கூடாது. அதன் மர்மம் வெளிப்பட்டால்… உம்… உம்…” இத்துடன் சொற்களும் நின்றன. மாரவேளின் மூச்சு ஒரே சீராக வந்து கொண்டிருந்தது.
அவர் உறங்கிவிட்டதை அறிந்து எழுந்திருந்தாள் அரசகுமாரி. மறுபடியும் அவர் கண்கள் திறந்தன. உதடுகள் அசைந்தன. அரசகுமாரியின் முகத்தை நோக்கினார் மாரவேள். “நீ… அரசகுமாரி…” என்றார்.
“ஆம்…” அரசகுமாரி மெள்ள பதில் சொன்னாள்.
மாரவேள் சிரமப்பட்டு சொன்னார். “முக்கூடல்… திரு – முக்கூடல்… கவனிக்கச் சொல்…” என்று திணறிப் பேசினார். மீண்டும் தலையணையில் சாய்ந்தார். கண்களை மூடினார்.
அரசகுமாரியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. இளையவேளை எண்ணினாள் முகத்தில் சினம் துளிர்த்தது. இதயகுமாரனை நினைத்தாள் முகம் அந்தி வானம் போலச் சிவந்தது. “இவர் எங்குதான் போயிருப்பார்? ஒருவேளை மாரவேள்
சொன்ன சாம்ராஜ்ய மர்மத்தை அவிழ்க்கப் போயிருப்பாரா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவன் நினைப்பு அவள் துயரத்தைத் துடைத்தது. களைப்பைக்கூட ஓட்டிவிட்டது. அவள் ஏதோ நினைத்துக் கொண்டு

.
நகைத்தாள். அந்த சமயத்தில் இதயகுமாரன் அறை வாயிற்படியில் தோன்றினான். “மாரவேளிடம் நான் உடனடியாகப் பேசியாக வேண்டும்” என்றான். அவன் கையில் அப்பொழுது அந்த மோகனச்சிலை இருந்தது.
அவனைக் கண்ட கண்ணழகியின் கண்கள் மகிழ்ச்சி வெள்ளத்தைக் கொட்டின. உதடுகள், “இப்பொழுது அவருடன் பேச முடியாது” என்று சொற்களை உதிர்த்தன.
“பேசியாக வேண்டும்.”
“முடியாது. நாளைவரை காத்திருக்க வேண்டும்.”
“முடியவே முடியாது” என்ற இதயகுமாரன் மாரவேளின் மஞ்சத்தை நோக்கி நடந்தான். இரு கைகளை விரித்து, “நில்லுங்கள் அப்படியே” என்று தடுத்தாள் அரசகுமாரி.

Previous articleMohana Silai Ch 10 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here