Home Historical Novel Mohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

62
0
Mohana Silai Ch 12 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 12. மாரவேளின் ரகசியம்

Mohana Silai Ch 12 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

கைகளிரண்டும் விரித்து தடுக்க, கமல மொட்டுகள் இரண்டு கண்ணைக் குத்திவிடுவதுபோல் முனிந்து நோக்க, கருவண்டு விழிகள் கனல் கக்க, துடியிடை சிறிதே அசைய, மாரவேளை அணுகமுடியாமல் தன்னைத் தடுத்த
அரசகுமாரியைத் தன் கூரிய விழிகளால் சில விநாடிகள் அளவெடுத்தான் இதயகுமாரன். கோபத்தில், கோபத்தின் துடிப்பில் அவள் அழகு ஆயிரம் மடங்கு உயர்வதை அவன் கவனித்ததால் அடுத்து என்ன செய்வதென்று அறியாமல்
கலங்கினான்.
கைகளை விரித்து நின்றதால் லேசாக நழுவிவிட்ட கண்ணழகியின் மேலாடை கண்ணழகியின் கழுத்தழகை மட்டுமின்றி. அவள் கட்டிய மார்புக் கச்சையின் உச்சிப் பகுதியையும், அவற்றின் மீது வெளேரென்று தெரிந்து கச்சைகளை மீற
முயன்ற பிறை விளிம்புகளின் அழகையும் வெளிப்படுத்தியதைக கண்ட இதயகுமாரன் கண்கள் பிரமை யால் நிலைத்தன சில இடங்களில், பாய்ந்தன மற்றும் பல இடங்களில். கைகள் ஊன்றப்படாமையால் சற்றே விலகி விட்ட மத்திய
ஆடைகூட இடையின் வழவழப்பையும், இறுக்கப்பட்ட ஆடையால் கன்னிவிட்ட சிவப்பையும் வெளிக்காட்டியதாலும், மறைந்த இடங்களைப் பற்றிய ஊகத்துக்கும் அவை இடங்கொடுத்ததாலும், மந்திரத்தால் கட்டுண்டவன் போல்
விழித்த சோழநாட்டு வாலிப வீரன் இந்த சமயத்தில் பெரும் கோழையாகி அவளைத் தாண்டிச் செல்ல முடியாதவனான்.
நிலத்தில் கால்கள் உறுதியாக ஊன்றியதால் யௌவனத்தின் செழிப்பைக் காட்டிய காலின் முழந்தாளுக்கு மேற்பகுதிகள் மிகவும் கடினப்பட்டிருந்த நிலையில், பெண்களின் மலர் உடல் மலராக இருக்கும் சமயத்தைவிட கடினப்படும்
சமயங்களில் கவர்ச்சி அதிகம் என்பதை நிரூபித்தன. அவன் அப்படி ஊன்றிக் கவனித்ததைக் கண்ட அரசகுமாரி, கால்களிரண்டையும் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட இந்திர ஜாலம் இதயகுமாரனின் சித்தத்தை அதிகமாக உலுக்கியதே
தவிர, எண்ணங்களை வேறு வழிகளில் திருப்ப உதவவில்லை.
இத்தகைய மோகனாகாரமான அழகுகளின் எதிர்ப்பால், எதிர்ப்பே அழைப்பாக இருந்த காரணத்தால், இதயகுமாரன் ஒருமுறை பெருமூச்சு விட்டான். அந்தப் பெருமூச்சையும், அந்த வாலிபன் கண்கள் தன் அழகுகளை அலசியதையும்
காணவே செய்த கண்ணழகியின் கருத்தும் சிறிது சிறிதாகக் குலைந்து கொண்டிருந்தது. இதில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்ற நினைப்பில் மெள்ள சுயநிலையை அடைந்த அரசகுமாரி, “மாரவேளை எந்தக் காரணத்தை
முன்னிட்டும் இப்பொழுது எழுப்ப முடியாது” என்று மிக மெதுவாக வார்த்தைகளை உதிர்த்தாள்.
இதயகுமாரன் அதற்கு ஏதாவது பதில் சொல்வானென்று சோழ ராஜகுமாரி நினைத்திருந்ததால் ஏமாந்தே போனாள். எதையோ நினைத்துக்கொண்டே அந்த வாலிபன் அக்கம் பக்கம் பார்த்தான் ஒரு முறை. அங்கு யாருமில்லை
என்பதைப் புரிந்து கொண்டதும் சட்டென்று திரும்பி வாயிற்படியை நோக்கிச் சென்று கதவுகளை மூடித் தாளிட்டான் வேகமாக. அதைவிட வேகமாக அரசகுமாரியை அணுகி அவள் இடையில் இடது கையைக் கொடுத்து அகற்றினான்
சற்று. வலது கையிலிருந்த மோகனச்சிலையுடன், கண்ணை மூடிக்கிடந்த மாரவேளிடம் சென்றான். அரசகுமாரி அவனை மீண்டும் தடுக்க முயன்றாள். அவனைத் தீண்டாமல் தடுக்க முடியாவிட்டாலும் ஆபத்தில் தீண்டினால்
குற்றமில்லையென்ற முடிவுக்கு வந்து மஞ்சத்தில் மாரவேளின் பக்கத்தில் உட்கார்ந்துவிட்ட இதயகுமாரன் மீது கைவைக்கப் போனாள் அவரை எழப்ப வேண்டாமென்று தடுக்க.
“அரசகுமாரி! என்னைத் தொடாதீர்கள். தமிழகத்தின் பிற்காலம் மாரவேளின் மனத்தில் புதைந்து கிடக்கிறது. அதை அவர் முடிந்தவரை சொல்லட்டும்” என்று கூறினான்.
“மாரவேள் பேசும் நிலையில் இல்லை” என்ற அரசகுமாரியின் குரலில் அதிகாரம் மிதமிஞ்சி ஒலித்தது.
“மன உறுதியிருந்தால் கண்டிப்பாகப் பேசுவார். கனவிலாவது பேசுவார்” என்றான் இதயகுமாரன்.
“ஏற்கனவே பேசிவிட்டார்.” அரகுமாரி அவசரமாகச் சொன்னாள், அதைக் கேட்டுவிட்டாவது இதயகுமாரன் போய்விடட்டுமென்று.
இதயகுமாரன் இமைகள் மேலே எழுந்தன சிந்தனையுடன். “என்ன பேசினார்?” என்ற அவன் கேள்வியிலும் ஆவலிருந்தது.
“ஏதோ முக்கூடல் என்றார். பிறகு திருமுக்கூடல் என்றார். கவனிக்கச் சொல் என்றார்” என்று அரசகுமாரி கூறினாள்.
இதைக் கேட்டதும் இதயகுமாரன் சட்டென்று எழுந்தான் மஞ்சத்தை விட்டு. எழுந்த வேகத்தில் பக்கத்தில் நின்றிருந்த அரசகுமாரிமீது வேகமாக மோதி விட்டதால் விழ இருந்த அவள் உடலைத் தாங்கிப் பிடித்தான். அப்படிப்பிடித்த
நிலையில் கேட்டான், “இதை ஏன் நீ முன்பே சொல்லவில்லை?” என்று. உதடுகள் கேட்ட முரட்டுத்தனம் அவள் உடலைப் பிடித்த கைகள் அழுந்திய தோள்களிலும் தெரிந்ததால் அரசகுமாரி சற்று முகம்சுளித்தாள்.
அந்த முகச்சுளிப்பையோ, அவள் தோள்களின் வேதனையையோ, வேதனையால் உள்ளத்தில் விளைந்த உவகையையோ, அந்த உவகை கண்களில் பளிச்சிட்ட விந்தையையோ கவனிக்க இதயகுமாரனுக்கு நேரமும் இல்லை, அதற்கான
மனப்பக்குவமும் இல்லை. கர்மவீரனான அவனுக்கு அந்தச் சில விநாடிகளில் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம், சோழ நாட்டின் பிற்காலம், அடுத்து தான் செய்யவேண்டிய கடமை. இவற்றின் விளைவாக, “நல்லது அரசகுமாரி! இதையாவது
சொன்னதற்கு கடமைப்பட்டிருக்கி றேன்” என்ற இதயகுமாரன், அவள் தோள்களைப் பற்றியிருந்த கைகளை விட்டு மீண்டும் மாரவேளை நோக்கினான்.
அந்த சமயத்தில் மாரவேள் கண் விழித்தார் மெதுவாக. இதயகுமாரனைக் கண்டதும் அவர் கண்களில் சிறிது மகிழ்ச்சி படர்ந்தது, ஒளியும் வீசியது. அவனை அருகில் வரும்படி சைகையும் செய்தார். இதயகுமாரன் அவருக்கு வெகு அருகில்
குனிந்தான். மெள்ள மெள்ள மாரவேளின் உதடுகள் அசைந்தன.
“நீ வந்தது… நல்லது…” என்று உதிர்ந்தன சொற்கள் சற்றுச் சிரமத்துடன்.
‘மெள்ளச் சொல்லுங்கள். அவசரம் வேண்டாம். எதையும் நான் செய்கிறேன். கவலை வேண்டாம்” என்று மெதுவாகச் சொன்னான் இதயகுமாரன்.
புரிந்ததற்கு அறிகுறியாகத் தலைசைத்த, மாரவேள் அரசகுமாரியைச் சைகை காட்டி அழைத்துத் தனது பின் பக்கத்திலிருந்த தலையணையைச் சிறிது உயர்த்தச் சொன்னார். அரசகுமாரி இதயகுமாரனை நோக்கி “அவரை மெதுவாகச்
சிறிது தூக்குங்கள்” என்று கூறிவிட்டு, அவன் மாரவேளின் உடலை லேசாகத் தூக்கவே, பின்பக்கத் தலையணையைச் சிறிது உயர்த்தினாள். அதனால் கொஞ்சம் வசதியாகச் சாய்ந்த வண்ணம் படுத்த மாரவேள், இதயகுமாரன் பக்கத்தில்
அரசகுமாரியையும் உட்காரச் சொன்னார். அரசகுமாரி சிறிது யோசிக்கவே, “பாதகமில்லை” என்று ஒரு சொல்லை அவர் உதிர்க்க, அரசகுமாரி சற்றே நெளிந்து இதயகுமாரன் பக்கத்தில் உட்கார்ந்தாள். மஞ்சம் பெரிதாயிருந்தாலும் மாரவேள்
சொல்வதை ஊன்றிக் கேட்க வேண்டியிருந்ததால் அவள் சிறிது சாயவேண்டிய அவசியம் ஏற்படவே கொம்பு மீது தொத்தி ஏற கஷ்டப்படும் கொடி போல் இதயகுமாரன் தோள்மீது தனது தோள் பட்டும் படாததுமாகச் சங்கடப்பட்டு
சாய்ந்தாள்.
இருவர் முகமும் தனது முகத்துக்கு அருகில் வந்ததும் மாரவேளின் கண்கள் அவற்றை ஊன்றிப் பார்த்தன. மகிழ்ச்சிச் சாயையை அடைந்தன. “நல்லது” என்ற ஒரு சொல்லும் உதிர்ந்தது அவர் வாயிலிருந்து திருப்திக்கு அடையாளமாக.
மேற்கொண்டு அவ்விருவரையும் நோக்கிய மாரவேள், மெள்ள மெள்ளப் பேசலானார். முக்கியமாக அவர் கண்கள் இதயகுமாரனையே பார்த்தன அதிக நேரம். “இதயகுமாரா… நீ சென்றபோது… இளையவேள்…உம்…உம் மயக்கமில்லை…
நாடகம்” என்று சொன்னார். பிறகு தடுமாறித் தடுமாறிக் கதையைச் சொன்னார்.
“இதயகுமாரா! நாம் பார்த்தபோது அவன் கண் விழிக்காததும், தலை துவண்டு விழுந்ததும் வெறும் நாடகம் நீங்கள் சென்றபின் நான் அவனுக்குச் சிறிது நீர் கொடுக்கலாமென்று குவளையில் நீரைக்கொண்டு அவன் வாயில் ஊற்ற
முயன்றேன். அவனருகே மண்டியிட்டு உட்கார்ந்து வாயில் நீரைப் புகட்ட குவளையைக் கொண்டு போனேன். சட்டென்று அவன் கை என் கழுத்தை வளைத்தது. நான் நிதானிக்கு முன்பு அவன் குறுவாள் என் முதுகில் பாய்ந்துவிட்டது.
உடனடியாக அவன் எழுந்தான். குறுவாளைக்கூடப் பிடுங்கவில்லை. ‘கிழப்பிணமே செத்தொழி, இளையவேளைக் கொல்லக் கூடியவன் இனிமேல்தான் பிறக்கவேண்டும்’ என்று கூறி நகைத்தான். அதற்குப் பிறகு என்ன நடந்ததென்று
எனக்குத் தெரியாது. எனக்குநினைவுதப்பிவிட்டது. அவன் போகுமுன்பு என்னைக் காலால் உதைத்திருக்க வேண்டும். அது மட்டும் நினைவிருக்கிறது. நான் விழித்தபோது இருண்டு விட்டது. மெள்ள மெள்ள விளக்கை ஏற்றினேன்.
படிகளில் எறமுடியவில்லை. விஜயாலயன் தாயின் சிலைக்குப் பின்னாலிருந்த ரகசிய வழியாக வெளியில் வந்தேன். அந்த வழி உனக்குத் தெரியாது. ஆனால், அச்சுதரும் மன்னரும் அந்த அறையில் அந்த சிலைக்குப் பக்கத்தில் திடீரெனத்
தோன்றினார்களே நினைவிருக்கிறதா? அவர்கள் அந்த வழியாகத்தான் வந்தார்கள். நானும் அதே வழியாக வெளிப்பட்டு மெள்ள அரண்மனை வந்தேன். யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து நடந்தேன். பிறகு உங்கள் அறையில்
விழுந்தேன்…”
இந்த நிகழ்ச்சிகளை மெதுவான குரலில் மெள்ள மெள்ளச் சொன்னதால் நீண்ட நேரம் பிடித்தது அவர் விஷயத்தை முடிக்க. அதனால் ஆயாசமடைந்ததால் அவருக்கு மீண்டும் குவளையில் சிறிது பாலை எடுத்துவந்து புகட்டினாள் அரச
குமாரி. பிறகு வெகு அதிகாரத்துடனும் ஆணவத்துடனும் பேசினார் மாரவேள்.
“இப்பொழுது திருமுக்கூடலுக்கு விரைந்திருக்கிறான் இளையவேள். அங்கு சேரமன்னன் பாசறை இருக்கிறது. உனக்கு திருமுக்கூடல் தெரியுமல்லவா?” என்று கேட்டார். பிறகு அவரே பதில் சொன்னார்:* இந்த நகருக்கு வட கிழக்கே
அமராவதி, மணிமுத்தா நதி, காவேரி மூன்றும் கூடுமிடத்தில் உள்ளது அந்த ஊர். நேராக அங்கு செல், இம்மூன்று நதிகளும் கலக்குமிடத்தேயுள்ள முக்கூடல் நகரின் மேற்புறத்தில் சேரன் மாளிகையிருக்கிறது. அங்கு சென்று சேரனிடம்
இதைக் கொடு” என்று கூறி தமது இடுப்பைக் காட்டினார். அதைத் தடவிய இதயகுமாரன், அதிலிருந்து ஒரு சிறிய நகையை எடுத்தான். அதைக் கூர்ந்து நோக்கினார் மாரவேள் சில விநாடிகள். “இதை சேர மன்னனிடம் கொடு. அவன்
புரிந்து கொள்வான். அவனை இளையவேள் அடையு முன்பு நீ அவனை அடைய வேண்டும்” என்றும் கூறினார். அந்தச் சிறு நகையை உற்றுப் பார்த்தான் இதயகுமாரன். அது ஒரு சிறு பதக்கம். நான்கு வைரங்களுக்கு நடுவிலிருந்த
பச்சைக்கல் பளீரெனப் பிரகாசித்தது அறை விளக்கில். அரசகுமாரி பிரமை பிடித்த கண்களுடன் அதைப் பார்த்தாள். அவள் கண்களில் விரிந்த பிரமையை மாரவேள் கவனித்துப் புன்முறுவல் கொண்டார். “உன் வசத்தில் அதன் ஜோடி
இருக்கிறது. அதுவும் தெரியும் எனக்கு. இரண்டும் நான் செய்ததுதான்” என்றார். பிறகு இதயகுமாரனை நோக்கி, “நீ கிளம்பு. காலம் தாழ்த்தாதே” என்றார்.
இதயகுமாரன் அவர் படுத்திருந்த மஞ்சத்திலிருந்து எழுந்திருந்தான். மாரவேளுக்குத் தலை தாழ்த்தினான். “வருகிறேன்” என்று கிளம்பினான்.
“ஒரு விஷயம்” என்ற மாரவேளின் குரல் அவனைத் தடுத்தது.
திரும்பி மாரவேளை நோக்கிய இதயகுமாரன், “கட்டளையிடுங்கள்” என்றான்.
“எந்தக் காரணத்தைக் கொண்டும் இளையவேளைக் கொல்லாதே” என்று வேண்டினார் மாரவேள்.
அந்த வேண்டுகோள் விசித்திரமாயிருந்ததால் அரசகுமாரி, இதயகுமாரன் இருவர் கண்களும் வியப்பைக் கக்கின.
கார்ணத்தைச் சொன்னார் மாரவேள். காரணம், அதுவரை அவர் சொன்ன விஷயங்களையும்விட அதிர்ச்சி தரத்தக்கதாயிருந்தால் அரசகுமாரியின் கண்களும் இதயகுமாரன் கண்களும் சந்தித்தன ஒரு விநாடி. “விசித்திரம்! நம்ப
முடியவில்லை” என்ற சொற்கள் கண்ணழகியின் கனி இதழ்களிலிருந்து உதிர்ந்தன. இதயகுமாரன் பேசவில்லை. அவன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்தன.

Previous articleMohana Silai Ch 11 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 13 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here