Home Historical Novel Mohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

139
0
Mohana Silai Ch 15 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 15. வான சாஸ்திரி

Mohana Silai Ch 15 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

சேரநாட்டு வரலாற்றில் களப்பிரர் விளைத்த ‘சரித்திர இரவு மறைந்தது’ பொழுது புலர்ந்த காலத்தில் அதாவது சுமார் கி.பி. 800-வது ஆண்டில் மஹோயபுரமென்றும் மஹோதய புர மென்றும் மஹோதயப்பட்டணமென்றும்
மாக்கோட்டையென்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட திருவஞ்சிக்குளத்தில் இரண்டாவது சேர சாம்ராஜ்யத்துக்கு வித்திட்ட குலசேகரவர்மன் என்ற குலசேகர ஆழ்வாரின் பேரனும், ராஜசேகரவர்மன் (கி.பி.80-840) குமாரனும், கி.பி.844ம்
ஆண்டில் சேரச்சக்கரவார்த்தியாக முடி சூட்டிக்கொண்டவனும், மகாவீரனும் பாட்டன்வைணவனானாலும் பெரும் சிவபக்தனாக மாறியவனும், ஒல்லியான சிவந்த மேனியுடனும், நல்ல உயரத்துடனும், நம்பூத்ரிகளைப்போல் முன்குடுமி
வைத்துக் கொண்டவனும், கருத்த தலைமயிரிடையே ஓரிரு நரைகள் தென்பட்டாலும் வாலிபம் மாறாத முகத்துடனும் தோற்ற மளித்த தாணு ரவியின் மூன்றாவது கேள்வியாலும், அதையடுத்த அறிவிப்பாலும் நிலைகுலைந்து போன
இதயகுமாரன், சில விநாடிகள் தனது விழிகளை நிலத்தில் பதியவிட்டான்.
மாரவேளின் பதக்கத்தைக் கண்டதும் சேரமாமன்னன் கண்களில் தோன்றிய தீங்கிழைத்தவனைத் தீர்த்துக்கட்டி விடுவதாகக் கூறிய போது குரலில் தெரிந்த உக்கிர ஒலியும் இதயகுமாரனைத் திக்குமுக்காட வைக்கவே அவன் அதுவரை
செய்யாத குற்றத்தைச் செய்ய முயன்றான். அதாவது பொய் சொல்லுவதென முடிவுகட்டினான்.
சேரமன்னனுக்கிருந்த வேகத்தில் மாரவேளைக் குத்தியது இளையவேள் என்று சொன்னால் இளையவேளின் உயிர் அரைச் சக்கரம் பெறாதென்பதை உணர்ந்திருந்தாலும், இளையவேளைக் கொல்லக்கூடாதென மாரவேள் வேண்டிக்
கொண்டிருந்ததாலும், பொய் சொல்வதைக் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட இதயகுமாரன், நிலத்தை நோக்கியவண்ணமே சொன்னான், “மாரவேளின் உடல்நிலை சரியில்லை” என்று.
அந்தப் பதிலைப் பற்றி அக்கறை காட்டாத சேரர் பெருமான், “அதைக் கேட்கவில்லை உன்னை. அவருக்குத் தீங்கிழைத்தது யார் என்று கேட்டேன்” என்று வினவினான்.
“யாரும் தீங்கிழைக்கவில்லை” என்று இதயகுமாரன் பதில் சொன்னான், தன்னைச் சமாளித்துக்கொண்டு சக்கரவர்த்தியை ஏறெடுத்து நோக்கி.
“பின் எதற்காக இந்தப் பதக்கத்தை உன்னிடம் கொடுத்து அனுப்பினார்?” என்று விசாரித்த சேரர் பெருமான் இதயகுமாரனை அருகில் வரும்படி சைகை செய்தான்.
இதயகுமாரன் மெள்ள நடந்து சக்கரவர்த்தியை அணுகியதும் சக்கரவர்த்தி தமது கச்சையிலிருந்த மாரவேள் பதக்கத்தை எடுத்து அதையும், தமது மார்பில் தொங்கிக் கொண்டிருந்த பதக்கத்தையும் அக்கம்பக்கமாக வைத்து
“இதயகுமாரா! இப்பொழுது இந்த இரண்டையும் பார்” என்று காட்டினார்.
இதயகுமாரன் இரண்டையும் ஊன்றிக் கவனித்தான் சில விநாடிகள்.” இரண்டும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கிறது” என்று பிரமிப்புடன் சொன்னான். அக்கம் பக்கத்தில் வைக்கப்பட்ட இரண்டு பதக்கங்களிலுமுள்ள கற்களின்
ஜ்வாலை குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து பெரும் பிரமையை ஊட்டியதால் மேலும் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தான் இதயகுமாரன் பல விநாடிகள்.
அவன் காட்டிய பிரமையால் மீண்டும் தாணு ரவியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “இவை சேரர்களின் பரம்பரைச் சொத்து. என் பாட்டனார் காலத்தில் செய்யப்பட்டவை. இம் மாதிரி பதக்கங்கள் மூன்றைச் செய்தார்” என்று
குறிப்பிட்டான் தாணு ரவி.
“மூன்று!’-இதயகுமாரன் கேள்வியில் வியப்பு ஒலித்தது. மூன்றாவது எங்கே என்ற கேள்வியும் அதில் மறைமுகமாக ஊடுருவி நின்றது.
“ஆம், மூன்றுதான். ஒன்று என் பாட்டனாரால் பெரிய பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. மற்ற இரண்டும் பெருமாள் திருவடியில் சமர்ப்பிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டது. அவற்றை என் தந்தை எங்கள் குலதனப்பெட்டியில்
வைத்திருந்தார். அவர் கடைசி காலத்தில் ஒன்றை என் கழுத்தில் போட்டார். இன்னொன்றை நான் மாரவேளுக்குக் கொடுத்தேன். ஒரு ஒப்பந்தத்தின் பேரில்…” என்ற சேரன் வாசகத்தை முடிக்கவில்லை.
“ஒப்பந்தமா?” இதயகுமாரன் வினவினான். ஒப்பந்தத்தை ஊகித்தாலும் ஊர்ஜிதம் செய்து கொள்ள.
“ஆம். எங்கள் இருவரில் ஒருவருக்கு ஆபத்து நேர்ந்தால் இன்னொருவரிடம் அதை அனுப்பிவிடவேண்டும் என்பது ஒப்பந்தம்.”
“ஏன்?”
“சேரர் குலதனம் வேறொருவரிடம் போகக்கூடாது.”
“அப்படியானால் மாரவேள் சேரர் குலமா?”
“ஒரு வகையில் அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.”
அடுத்து ஏதோ கேட்கப்போன இதயகுமாரனைக்கையசைப் பினால் தடுத்த சக்கரவர்த்தி தாணு ரவி, “அது ஒரு பெரிய கதை. பின்னால் பேசிக்கொள்வோம். வா என்னுடன்” என்றுகூறி உள்ளே செல்லத் திரும்பியவரைத் தடுத்த
இதயகுமாரன், “சேரர் பெருமானே! என்னைப் பெயர் சொல்லி அழைத்தீர்கள்” என்று மெள்ளப் பேசினான்.
“ஆம். அழைத்தேன். அதனாலென்ன? உன் பெயர் அதுதானே?” என்று சக்கரவர்த்தி கேட்டார். உள்ளே செல்ல முயன்றவர் சற்று நின்று திரும்பி.
“என்னை இதற்கு முன்பு பார்த்ததில்லை நீங்கள்.”
“பார்த்ததில்லை.”
“அதனால்?”
“பார்த்துத்தான் யார் யார் எது எது என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் நாட்டை ஆள்பவனுக்கு ஒரு ஆயுட்காலம் போதாது.”
“வேறு எப்படி?”
“வழிகள் பல இருக்கின்றன. சோழநாட்டில் ஒரு பெரிய வீரன், துணிவிலும் செயலிலும் நிகரற்றவன், அழகிகளையெல்லாம் பார்த்த மாத்திரத்தில் இளகச் செய்பவன், அவனைப் பற்றிய விவரங்களை அறியாமலிருக்க முடியுமா?” என்ற
தாணு ரவி இதயகுமாரா! நீகூட சிந்திக்கலாம், இத்தனை தெரிந்த சேர மன்னனுக்குத் தனது இரண்டாவது தலைநகரம் சோழ வீரர்களால் நிரப்பப்பட்டதும், தீடீரெனக் கைப்பற்றப்பட்டதும் எப்படித் தெரியாதிருந்தது என்று. எதற்கும்
காரணமுண்டு. என் அறியாமையாலோ பலவீனத்தாலோ விஜயாலயன் கரூர்வஞ்சியைப் பிடித்து விட்டதாக நினைக்கவேண்டாம்” என்றும் சொன்னான். அத்துடன் திரும்பி நடந்தான் உட்புறமாக.
இதயகுமாரன் ஒரு விநாடி இளையவேளைத் திரும்பி நோக்கினான். அந்த சமயத்தில் இளையவேளின் முகத்தில் அச்சமில்லை. இகழ்ச்சியே நின்றது. அதனால் சற்றுப் பொறுமையை இழந்தாலும் சினத்தை அடக்கிக்கொண்டு சேரமானைத்
தொடர்ந்தான் இதயகுமாரன்.
இரண்டு மூன்று கட்டுகளைத் தாண்டிச் சென்ற சேரமான் கடைசியில் பிரும்மாண்டமான ஒரு அறைவாயிலுக்கு வந்தான். சேரமான் வந்த இடங்களில் எல்லாம் காவல் பலமாயிருந்ததையும், ஒவ்வொரு கட்டைத்தாண்டும்போதும்
சேரமானுக்கு மட்டுமன்றி தனக்கும் காவலர்தலைவணங்கியதையும் கண்ட இதயகுமாரன், அந்த மாளிகை, விருந்து மாளிகை மட்டுமன்றி, சேரனின் பல அலுவல்களுக்கு அந்தரங்க மாளிகையுங்கூட என்பதைப் புரிந்து கொண்டான்.
அந்த உணர்வின் விளைவாக மௌனமாகவே மன்னனைத் தொடர்ந்த இதயகுமாரன், ஒரு அறை வாயிலில் மன்னன் நின்றதும் தானும் நின்றான்.
மன்னன் சில விநாடிகள் அந்த அறை வாயிலிலேயே நின்றிருந்துவிட்டு பிறகு மெள்ள கதவைத் தட்டினான் வலது கையால். “யாரது?” என்று உள்ளேயிருந்து வந்தது ஒரு கேள்வி அதிகாரக் குரலில்…
“தாணு ரவி” என்று சேரமான் மிகுந்த பணிவுடன் பதிலுறுத்தான்.
“வரலாம்” என்று அனுமதிக் குரல் ஒலித்தது.
தாணு ரவி வாயை மூடிக்கொண்டு தன்னைத் தொடரும் படி இதயகுமாரனுக்குச்சைகை செய்துவிட்டுத் தனது பாதுகையை வெளியே விட்டு அந்த அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் மெல்லடி வைத்து.
இதயகுமாரனுக்குப் பாதக்குறடு ஏதுமில்லாததால் சேரமானை பின்பற்றி உள்ளே சென்றவன் திகைத்துப் பல விநாடிகள் பயபக்தியுடன் நின்றான் சிலைபோல.
அந்த அறை மிக விசாலமாயிருந்தது. வினோதமும் விபரீதமுமான பலசித்திரங்கள் அந்த அறையின்சுவர்களை அலங்கரித்தன. அந்த அறையின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடையில் வாலிப வயதைச் சிறிதே தாண்டிய
ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கோபி சந்தனமொன்று மிக அழகாகத் தீட்டப்பட்டிருந்தது. அந்த மேடைக்கு மேலே தெரிந்த மூன்று துவாரங்களிலிருந்து வந்த விடியற்கால வெளிச்சம் மூன்று பட்டைகளாக மேடையில்
விழுந்திருந்தது. அந்த மூன்றுக்கும் நடுவே அமர்ந்திருந்த அந்த மனிதர், உள்ளே வந்த சேரமானை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் கையிலிருந்த ஓலைக்கட்டில் கவனத்தைச் செலுத்தினார். பிறகு எழுந்திருந்து தளத்தின் ஒரு
துவாரத்தின் மூலம் மேலே நோக்கினார்.
இதயகுமாரன் மெள்ள மன்னனை அணுகினான். அவன் தன்னை அணுகியதை உணர்ந்த மன்னன் அவன் கையைப் பிடித்து அழுத்தி ஏதும் பேசவேண்டாமென்று குறிப்புக்காட்டினான். அதனால் மீண்டும் ஊமையாகிவிட்ட
இதயகுமாரன், விந்தைக் கண்களுடன் அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
சுமார் அரை நாழிகை நேரத்திற்குப் பிறகு எதிரே நின்ற இரு வரையும் நோக்கிய அந்த மனிதர் இதயகுமாரனைக் கண்டதும் புன்முறுவல் கொண்டார். “இவன் காலில் சூரியரேகை இருக்கிறது. பெரிய சாம்ராஜ்யமொன்றை நிறுவ இவன்
உதவுவான்” என்றார் மிக அமைதியான குரலில்.
அன்றுவரை தன் காலைப் பார்க்காத இதயகுமாரன் அந்த மனிதர் சொன்னதைக் கேட்டதும் கரை கடந்த ஆச்சரியத்தை அடைந்தான். அந்த ஆச்சரியம் பூர்த்தியாகு முன்பு அந்த மனிதர் முன்பு சேரமான் மண்டியிடவே இதயகுமாரனும்
மண்டியிட்டு அவரை வணங்கினான்.
அந்த மனிதர் மேடையிலிருந்து இறங்கிவந்து இருவர்தலை மீதும் தனது வலது கையை வைத்து ஆசீர்வதித்து “எழுந்திருங்கள்” என்று அனுமதிக்கவே, இருவரும் எழுந்து நின்றனர்.
அந்த மனிதர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு மீண்டும். தமது மேடையை அடைந்தார். அந்த சமயத்தில் மிகுந்த மரியாதையுடனும் மெதுவான குரலிலும் சேரமான் அந்த மனிதர் யாரென்பதை இதயகுமாரனிடம் சொன்னான்.
“இதயகுமாரா! இப்பொழுது நீ இந்த சகாப்தத்தின் மிகப் பெரியதபஸ்வியும், வானசாஸ்திரியுமானசங்கர நாராயணன் முன்னிலையில் நிற்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய். அவர் முக்காலமும் அறிந்தவர். என் பாட்டனார் வைணவ
ஆழ்வாரானாலும் சங்கரநாராயண பட்டரின் உபதேசத்தால் நான் சைவத்தைக் கடைப்பிடித்தேன். **’லகு பாஸ்கரீயா’ என்ற மகத்தான வான சாஸ்திரத்தை எழுதியவர் இவர்தான். என்குருநாதர்” என்று விளக்கினான் தாணு ரவி!
அந்த சமயத்தில் மேடைமீதிருந்த வான சாஸ்திரி, இதயகுமாரனை நோக்கி, “திரிவேணியில் நீராடி வா. இன்று ஹோமம் இருக்கிறது” என்று கூறினார்.
அவர்கட்டளைப்படி நடக்க சேரமான் கண்களைக்காட்டியதால் இதயகுமாரன் மெள்ளப் பின்னடைந்து அறைக்கதவை, நோக்கிச் சென்றான். அறைக்கதவை அவன் அடைந்ததும் கதவு தானாகத் திறந்தது. வாயிற்படியைத் தாண்டிச் சென்ற
இதயகுமாரன், தனக்குப்பின்னால் சாத்திக்கொண்டகதவைப் பார்த்தான். பிறகு அங்கு காவல் புரிந்த காலவரைப் பார்த்தான். காவலர் யாருமில்லை. அந்தர்த்தானமாகி விட்டனர். உள்ளிருந்து ஏதோ சக்கரம் சுழலுவது போலும்
தடதடவென்று உருளைகள் தள்ளப்படுவதுபோலும் ஒலிகள் கேட்டன. அந்த சமயத்தில் இளையவேளும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் போக்கு அடியோடு மாறி இருந்தது. இதயகுமாரனுக்குத் தலைவணங்கி “இப்படி வாருங்கள்,
திருமுக்கூடலுக்குச் செல்வோம்” என்று வழிகாட்டி நடந்தான் இளையவேள். இதயகுமாரன் அவனைத் தொடர்ந்தான் பலத்த சிந்தனையுடன்.

Previous articleMohana Silai Ch 14 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 16 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here