Home Historical Novel Mohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

117
0
Mohana Silai Ch 18 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 18. சிரித்த செண்பகம்

Mohana Silai Ch 18 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

அரண்மனை நந்தவனத்துக்குள் நுழையுமுன்பு விஜயன் மீதிருந்து இறங்கி ஓசைபடாமல் நந்தவனத்தின் மரக்கூட்டத்துக்குள்ளே சென்ற இதயகுமாரன், வாவிக்கரை வந்ததும் முன்னே செல்லாமல் சற்று பின்னடைந்து ஒரு மரத்தின்
மறைவில் நின்றான். வாவியில் அவன் கண்ட காட்சியின் விளைவாக அப்பொழுது முன்னிலவு ஏதுமில்லா விட்டாலும் நட்சத்திரங்கள் வீசிய அல்ப ஒளியே வாவிமீது விழுந்த கிடந்ததென்றாலும், நீரில் யாரோ நீந்தும் ஒலி மட்டும் லேசாகக்
கேட்கவே, கரையையும் நீரையும் உற்றுப் பார்த்த சோழநாட்டு வாலிபன், நீராடுவது கண்ணழகியென்பதைக் கணப்பொழதில் ஊகித்துக் கொண்டான்.
நட்சத்திர வெளிச்சத்தில் நீரில் அமிழ்ந்து நீந்திய கண்ணழகியின் மனோகர உடல் முழுதும் தெரியாவிட்டாலும், அவள் அப்பொழுது நீருக்கு மேலே வந்தபோது அரையும் குறையுமாக வெளிப்பட்ட வெண்மை உடலிலிருந்தும், ஒரே ஒரு
சமயத்தில் தெரிந்த முகத்திலிருந்தும் நீராடுவது கண்ணழகிதானென்பதைப் புரிந்து கொண்ட இதயகுமாரன், ஒரு பெண் தனிப்பட நீராடுவதைப் பார்ப்பது பண்பாடல்ல என்று நினைத்து மரத்து இருட்டில் மேலும் ஒதுங்கினான். ஒதுங்கிய
நிலையிலும் அவன் கண்கள் மீண்டும் மீண்டும் அந்த வாவியை நோக்கலாயின. அதன் விளைவாக ‘மனிதன் உணர்ச்சி மீறும் சமயங்களும் பண்பாடு உடையும் சமயங்களும் உண்டு’ என்பதைப் புரிந்து கொண்டான் அந்த வாலிபன்.
நல்ல இருட்டு இருந்த காரணத்தினால்தான் கண்ணழகி அங்கு நீராட வந்திருக்கவேண்டும் என்று இதயகுமாரன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். நீராடிய அவள் உடல் நீரில் ஊடுருவி வாளைமீன்போல் சென்ற இரண்டொரு
சமயங்களில் “இவளை இப்படிப் பார்க்கத்தான் சங்கரநாராயணன் இங்கு முதலில் என்னை நுழையப் பணித்தாரா?” என்றும். கேட்டுக்கொண்டான். “யாரையும் அவ்வப்பொழுது இருக்கும் நிலையில் வேண்டுமானால் அவர் தீட்டும் மந்திர
மையில் பார்க்கலாம். பின்னாலிருப்பதை அவர் பார்க்க முடியாது. அப்படியிருக்க, அத்தனை திட்டமாக நந்தவனத்துக்குப் போகப் பணித்தாரே சாஸ்திரி, அதெப்படி சாத்தியம்?” என்றும் தன்னை வினவிக்கொண்டான். “ஒருவேளை இவள்
நீராடப்போவது அவருக்குத் தெரிந்திருந்தாலும் அதைப் பார்க்கும்படி என்னைத் தூண்டலாமா?” என்றும் கேள்வியை எழுப்பிக் கொண்டான். சாஸ்திரியைப் பற்றிய இத்தனை ஆட்சேபணை சமாதானத்திலும் உள்ளூர தன் மனம்
இன்பத்தில் சுழல்வதை உணர்ந்ததால் வாவியைக் கண்கொட்டாமல் பார்த்தான் இதயகுமாரன்.
வானத்திலுள்ள ஆயிரக்கணக்கான நட்சத்திரக் கண்கள் வாவியில் நீந்திய வனிதையின் வனப்பைப் பார்த்துப் பிரமித்துக் கண்களைச் சிமிட்டியதாலோ என்னவோ, தனது அழகிய உடலை அதிகமாக வெளிக்குக் கொண்டுவராமல்
நீருக்குள்ளேயே அமிழ்ந்தும் நீந்தியும் புரண்டும் நீராடித்துளைந்தாள் கண்ணழகி. அன்று மாலைவரை இருந்த சூரிய வெப்பத்துக்கு வாவி நீரின் குளுமை பெரிதும் ஈடுகட்டி இன்பமளித்ததால் நீண்ட நேரம் நீராடினாள் சோழன் மகள்.
அரசகுமாரிகள் நீராடுவதற்காகவே நிர்மாணிக்கப்பட்டு, கோடியிலிருந்த ஒரு சுனையிலிருந்து லேசாகப் பாய்ச்சப்பட்டதால் எப்பொழுதும் நீர் நிரம்பிக்கிடந்த அந்தப் பளிங்கு வாவியின் ஓர் ஓரத்தில் சில ஆம்பல் மலர்கள்
பூத்துக்கிடந்தன. அவற்றின் அருகில் வந்ததும் சற்று மல்லாந்து நீந்திய அரசகுமாரியின் மார்புமீது இரண்டு அல்லி மலர்கள் எழுந்துவிட்டதால் அவள் இரட்டை அழகுக்கு அவை பாதுகாப்பளித்தன. நாலைந்து பச்சைவட்ட ஆம்பல்
இலைகளும் அவள் உடலின் மீதிப் பகுதியை மறைத்ததால் அவள் மனோகர உடலை மற்றவர் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க இயற்கையும் உதவியதாகத் தோன்றியது, மரத்தின் மறைவிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த
சோழநாட்டு வாலிபனுக்கு.
இத்தனையிலும், “அவள் எப்படியும் வாவியிலிருந்து எழுந்து வந்துதானே கரையிலிருந்த புடைவையை எடுக்க வேண்டும்? அப்பொழுது எந்த இயற்கை இவள் அழகுகளை மறைக்கும்?” என்று கேட்டுக்கொண்டதாலும், அவள்
வாவியிலிருந்து எழுந்து வருவதை எதிர்பார்த்ததாலும் உள்ளத்தில் விவரிக்க முடியாத ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் நின்றிருந்த இதயகுமாரனுக்குப் பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.
அவன் எதிர்பார்த்தபடி அவள் வாவியிலிருந்து எழுந்திருக்கவுமில்லை; நடந்து வரவுமில்லை. வாவிக்கரை வரையில் நீருக்குள்ளே கழுத்துவரை உடலை மறைத்து நீந்தி வந்தவள் தனது வலது கையை மட்டும் நீட்டி பளிங்குக்கரை
மீதிருந்த மோகனச்சிலையை அகற்றி, சீலையை மட்டும் குத்தாக எடுத்துக்கொண்டாள். குத்தாக எடுக்கப்பட்ட சீலை சரேலென விரிந்தது மாயாஜாலம்போல். விரிந்த அந்த ஆடை தன்னை மறைக்க சட்டென்று மின்னல் வேகத்தில் வாவி
நீரிலிருந்து எழுந்திருந்த மின்னிடையாள் ஒருமுறை சுழன்று சீலையால் தன் உடலைக் கழுத்திலிருந்து முழந்தாள் வரை மறைத்துக் கொண்டு விட்டதால் சோழ வாலிபன் கனவு காற்றில் பறந்தது.
வாவிக்கரைமீது ஏறிய பின்பும் சேலையை அணியவில்லை சோழன் மகள். நின்ற நிலையிலேயே சேலையின் ஒரு கப் பகுதியை இடுப்பில் சுற்றிக் கொண்டு மார்பில் ஒரு மூலையை இழுத்துச் செருகினாள். அடுத்து சற்றே குனிந்து
சேலையின் இன்னொரு பகுதியால் தலையைத் துவட்டிக்கொண்டு குழலை உதறினாள். இத்தனைக்குப் பிறகு இதயகுமாரன் மறைந்து நின்ற மரத்தை நோக்கினாள்.
சாதாரண சமயமாயிருந்தால் அரசகுமாரி மரத்தை நோக்கியதும் இதயகுமாரன் மேலும் மறைவுக்குச் சென்றிருப்பான். ஆனால் இன்று அந்த நட்சத்திர வெளிச்சத்தில் அவள் மார்புக்குக் குறுக்கே இழுத்து மறைத்துக் கட்டியிருந்த
சீலைக்குச் சிறிது மேலே, மார்புகளுக்கு நட்ட நடுவே முன்பு அவன் மாரவேளின் அந்தரங்க அறையின் சிலையில் பார்த்த புலி மச்சத்தைப் போலவே ஒரு மச்சம் தெரிந்தது. மச்சத்தின் தலை சுற்றிலும் பச்சையாகத் தெரிய, புலியின்
கண்களும் மூக்கும் மட்டும் மச்சத்தின் பச்சையால் மறைக்கப்படாதிருக்கவே அவள் பொன்மேனியே கண்களாகவும் மூக்காகவும் தெரிந்ததால், அந்த அல்ப வெளிச்சத்திலும் அவை மிக கம்பீரமாகவும் பயங்கரமாகவும் பளிச் சிட்டன. அந்த
மச்சத்தைப் பார்த்ததாலும், மச்சம் அளித்த அழகைக் கண்டு மயங்கியதாலும் நின்ற இடத்தில் நின்று விட்ட இதயகுமாரன் உணர்ச்சிகளில் இன்பச்சுவை நகர்ந்து அரசியல் எண்ணங்கள் சுழலத் தொடங்கின.
அப்பொழுது கீழே குனிந்து மோகனச்சிலையை எடுத்து மார்பில் அணைத்துக்கொண்ட அரசகுமாரி, இதயகுமாரன் மறைந்திருந்த மரத்தை நோக்கி நடந்து வந்தாள். வந்து மரத்தின் மேலும் கீழும் இருமுறை பார்த்தாள். சாய்ந்த ஒரு
மரக்கிளையிலிருந்து ஒரு செண்பக மலரைப் பறித்து குழலில் முடித்துச் சூடினாள். அப்பொழுதுதான் இதயகுமாரனுக்கே சுரணை வந்து, தான் நின்றிருப்பது நந்தவனத்தின் செண்பகமரம் என்று உணர்ந்து கொண்டான். ஏற்கனவே
செண்பக மலர்களின் வாசனை பரவியிருந்தும் வாவி மீதும் கண்ணழகி மீதும் உணர்ச்சிகள் நிலைத்திருந்த காரணத்தால், மரத்தின் மலர்களிலிருந்த சுகந்தத்தை அவன் உணரமுடியவில்லை. அப்பொழுது கண்ணழகி வாவியில்
இறங்குமுன்பாகவே உடலில் தேய்த்திருந்த வாவி நீரில் கரைந்துவிட்ட சுகந்த ஸ்நானப்பொடியின் சுகந்தத்தையும், செண்பக மலரின் நறுமணத்தையும் அவன் சுவாசித்தான், அவள் மீது தவழ்ந்து வந்த பூங்காற்றிலிருந்து.
அந்த சுகந்தமும் அதற்கு முன்பாகத் தெரிந்த புலிமச்சமும் அவனைத் தீவிர சிந்தனைக்குள்ளாக்கியிருந்ததால், கண்ணழகி மலர் தரித்து இந்த மரத்தடியில் ஆடையை சரியாகப் புனைய வந்ததை அவன் கவனிக்கவில்லை. மரத்தில்
சாய்ந்திருந்த அவன் கண்களைக்கூட மூடிக்கொண்டான் சில வினாடிகள். இந்த மார்பு மச்சத்தைக் காட்டத்தான் சங்கரநாராயணன் தன்னை நந்தவனத்துக்கு முதலில் வரும்படி கட்டளையிட்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான்.
ஆனால், இங்கு சோழன் செல்வி வருவாளென்பதையோ நீராடுவாளென்பதையோ அவர் எப்படி உணரமுடிந்தது என்பது புரியாத விந்தையாயிருந்தது அவனுக்கு. ஒருவேளை மேலே கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள் இந்தக்கதையை
முன்கூட்டிச் சொல்லியிருக்குமோ என்றும் சிந்தித்தான்.
எது எப்படியிருந்தாலும் தன் வாழ்க்கை தன்னையும் மீறிப் பல திசைகளில் திருப்பப்படுவதை உணர்ந்தான் இதயகுமாரன். முதல் நாள் அரங்கன் சந்நிதி பட்டர் தனக்குக் கொடுக்க மறுத்த செண்பக மலரைக் கொடுக்கும் மரத்தினடியில்
தான் வந்த நின்றது, மலரை மன்னன் மகள் சூடியது, இவை அனைத்துக்கும் ஏதோ மனித அறிவால் அறிய முடியாத தொடர்பு இருப்பதை அவன் உணர்ந்தான். அப்பொழுது மரத்தின் மறைவை நாடிய அரசகுமாரியின் உடல் அவன்மீது
இடிக்கவே சட்டென்று நகர்ந்தான் அவன் பின்னுக்கு. அப்பொழுது எழுந்தது அரசகுமாரியின் குரல் “நகராதே! நில்” என்று.
“மன்னிக்க வேண்டும்” என்று பதிலுக்கு ஏதோ உளறினான் இதயகுமாரன்.
அரசகுமாரி சிறிதும் அச்சத்தின் வசப்பட்டவளாகத் தெரியவில்லை. அவள் உணர்ச்சிகள் புரண்டு திடுக்கிட்டதாகவும் தெரியவில்லை. “யார் நீ?” என்று இரண்டாம் முறை அவள் கேட்ட கேள்வியில் அதிகாரத்தின் ஒலி மட்டுமே
பிரதிபலித்தது.
இதனால் சிறிது துணிவுகொண்ட இதயகுமாரன், “நான் தான், தங்கள் அடிமை” என்று மெதுவாகவும் அச்சம் லேசாக ஒலித்த குரலிலும் கூறினான்.
குரலை அவள் கண்டுகொண்டதால் அவள் முகத்தில் வியப்பின் குறி நன்றாகப் புலப்பட்டது. “நீங்களா!” என்று வினவினாள் அவள்.
“ஆம்” என்றான் இதயகுமாரன் மறைவிலிருந்து வெளியே வந்து, மரத்தின் ஒருபுறத்தில் சாய்ந்து கொண்டு.
அவள் மரத்தின் இன்னொரு புறத்தில் சாய்ந்து திரும்பினாள் அவனை நோக்கி. பிறகு அவள் சொற்கள் அவனுக்கு விசித்திரமாகவும் இருந்தன. வியப்பையும் மிதமிஞ்சி அளித்தன. “நீங்கள் இங்கு வருவீர்கள் என்பது எனக்கு முன்பே
தெரியும்” என்று கூறினாள் அரசகுமாரி.
பேச நா எழாமல் நின்றான் பல வினாடிகள், சோழ நாட்டு வாலிபன். பிறகு என்ன சொல்கிறீர்கள் அரசகுமாரி?” என்று தட்டுத்தடுமாறிக் கேட்டான்.
அரசகுமாரியின் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிந்தது. “நீங்கள் இங்கு வரப்போவது எனக்கு முன்னதாகத் தெரியும் என்றேன்” என்றாள் அவள் சொற்களிலும் சிறிது குழப்பம் ஒலிக்க.
“தெரியுமா! முன்னதாகவா!” பிரமிப்பு நிறைந்து கிடந்தது இதயகுமாரன் பதிலில்.
“ஆம்” என்றாள் அரசகுமாரி.
“எப்படி?” என்று கேட்டான் இதயகுமாரன்.
“சொப்பனம் கண்டேன் இன்று விடியற்காலையில். விசித்திரமான சொப்பனம்” என்றாள் அரசகுமாரி. அதைச் சொல்லிக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தாள். அவனையும் உட்காரும்படி சைகை செய்து, தான் சற்றுத் தள்ளி
இடங்கொடுத்தாள். இருவரும் அக்கம்பக்கத்தில் மரத்தின் மீது சாய்ந்து உட்கார்ந்ததும் சொன்னாள் அரசகுமாரி, “நீங்கள் இந்த இரவில் இங்கு வருவீர்கள் என்று யாரோ ஒருவர் சொப்பனத்தில் சொன்னார்” என்று.
இதயகுமாரன் பிரமிப்பு சொல்லத்தரமல்லாததாயிருந்தது. “யாரவர்?” என்று கேட்டான் இதயகுமாரன், பிரமிப்பு குரலிலும் ஒலிக்க.
“என் வளர்ப்புத் தந்தையின் நண்பர் சங்கரநாராயண பட்டர்” என்றாள் அரசகுமாரி. என் இதயகுமாரன் சற்றுத் திரும்பி கண்ணழகியை நோக்கினான். அவர் அடிக்கடி சொப்பனத்தில் வருவதுண்டா?” என்று வினவினான்.
“இல்லை” என்றாள் அரசகுமாரி, சொப்பனத்தில் பேசுவதுபோல்.
“ஆனால், அவர் எதையும் சாதிக்க முடியும். இந்தப் பாரத நாட்டின் பெரிய வான சாஸ்திரிகளில் அவர் ஒருவர். தவிர, சேரநாட்டின் பெரிய மந்திரவாதி. அவர் அறியாதது ஏதுமில்லை” என்றும் சொன்னாள்.
இதயகுமாரன் என்ன செய்கிறோமென்பதை அறியாமல் அரசகுமாரியிடம் நெருங்கி உட்கார்ந்து அவள் கையைப் பற்றினான். “அது கிடக்கட்டும். சொப்பனத்தில் வேறென்ன தெரிந்தது?” என்று கேட்டான்.
கண்ணழகியின் காந்தக் கண்கள் அவன் கண்களைக் கவர்ந்து நின்றன ஒரு விநாடி. “விசித்திரமாயிருக்கிறது” என்றும் சொன்னாள் இன்பம் நிறைந்த குரலில்.
“எது அரசகுமாரி?”
“நீங்கள் இப்பொழுது என் கையைப் பிடிப்பது.
“அதில் விசித்திரமென்ன இருக்கிறது?”
“இப்படித்தான் இன்று பகலில் பிடித்தீர்கள். அது உங்கள் கைதான். இப்பொழுது சந்தேகமின்றித் தெரிகிறது.”
“நீங்கள் சொல்வது விளங்கவில்லை அரசகுமாரி.”
“விளங்காததற்கு ஏதுமில்லை. இன்று காலை மோகனச் சிலையின் பின்பக்கத்தைப் பார்த்தேன்.”
இதைக் கேட்ட இதயகுமாரன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான். “உம்” என்று மட்டும் பதில் கொடுத்தான்.
அரசகுமாரி அவன் உம் கொட்டினதையும் அதில் ஒலித்த பிரமிப்பையும் கவனித்தாள். இருப்பினும் தொடர்ந்தாள். “நான் சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகக்கூட இருக்கும். ஆனால், நடந்தது உண்மை. சிலையின் முதுகில்
மெழுகு தடவியது போலும் தையலிருந்தது போலும் தெரிந்தது. அதைப் பிரிக்க முயன்றேன். அப்பொழுது ஒரு கை என் கையைப் பலமாகப் பிடித்து நிறுத்தியது. அது உங்கள் கைதான். அப்பொழுது யார் கை என்றுகூடத்
தெரியவில்லை. ஏதோ பிரமை என்றுகூட நினைத்தேன். ஆனால், இப்பொழுது தெரிகிறது. அது பிரமையல்ல” என்ற அரசகுமாரி, கனவில் பேசுவது போல் பேசினாள்.
இதயகுமாரன் பேச்சிழந்து உட்கார்ந்தான். அந்த சமயத்தில் அவள் முகத்தை வேறு புறம் திருப்பவே அவள் குழல் அவன் முகத்துக்கு எதிரே தெரிந்தது. அதிலிருந்து செண்பக மலர் அவனைப் பார்த்து நகைத்தது. அவள் உட்கார்ந்திருந்த
நிலை அவனுக்கு உன்மத்தத்தை ஊட்டியது. மரத்தில் சாய்ந்த நிலையிலிருந்த அவள் திரும்பி உட்கார்ந்திருந்ததால் முதுகும், தரையில் அழுந்திய எழிலும் அவனை நோக்கின. தோள்கள், கழுத்து, இவற்றின் வெண்மை, மோகனச்சிலை
செய்யப்பட்ட தந்தத்தைத் தோற்கடித்தன. அவன் அவளை நோக்கி சாய்ந்து அவள் தோள்களைப் பற்றினான். செண்பக மலரை முகரப் போனான்.
“வேண்டாம்” என்று எழுந்தது அரசகுமாரியின் குரல்.

.
செண்பக மலர் பேசவில்லைதான். ஆனால், அவன் ஏமாற்றத்தை, அதிர்ச்சியைக் கண்டு மீண்டும் நகைத்தது.

Previous articleMohana Silai Ch 17 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here