Home Historical Novel Mohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

81
0
Mohana Silai Ch 20 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 20. முரடன்! திருடன்!

Mohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

காமத்துக்குச் கண்ணில்லை என்பதுதான் பழமொழி. அதற்கு அறிவும் இல்லையென்பதற்கு அன்று இதயகுமாரன், அரசகுமாரி இருவருமே அத்தாட்சிகளாக விளங்கினார்கள். சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறவே மறந்துவிட்ட அந்த
இரவில் செண்பக மரத்தடியில் நிலைதடுமாறிக்கிடந்த காட்சியைக் கண்டு ஏதோ இரண்டு சின்னஞ்சிறிய பறவைக் குஞ்சுகள்கூட செண்பகமர உச்சிக் கிளையிலிருந்து தலை நீட்டி கூவென்று இருமுறை கூவின. அப்படிப் பார்ப்பதோ,
கீழே இருந்த இருவருக்கும் இடைஞ்சல் விளைவிப்பதோ தவறென்று எண்ணியதால் அவற்றை ஈன்ற பெரும்பேடை கூண்டுக்கு வெளியிலிருந்து குஞ்சுகளைக் கொத்தி உள்ளே மீண்டும் தள்ளி கூண்டு முகப்பைத் தனது உடலால்
அடைத்துக்கொண்டது. அப்படி அது அடைத்து உட்கார்ந்துவிட்டதை, கூண்டுக்கும் மேல்கிளையில் உட்கார்ந்திருந்த, ஆண்பறவை கண்டு சட்டென்று கீழ்க்கிளையில் குதித்து பேடையை நோக்கி வந்து, அதன் மூக்குடன் தனது
மூக்கையும் இணைத்து உராய்ந்தது.
இயற்கையின் இந்த இந்திரஜாலங்களைப் பார்க்க முடியாவிட்டாலும், அதே சமயத்தில் அதே மாதிரி கண்ணழகியின் செம்பருத்தி இதழ்களை நோக்கிக் குனிந்த இதயகுமாரனின் வலிய உதடுகள் அவற்றை நெருங்கவும் அஞ்சியதால், அவன்
கூரிய நாசி செண்பக மொட்டுப் போன்ற அவள் நாசியுடன் சற்றே இணைந்து உராய்ந்தது. அடுத்த விநாடி இயற்கையின் அஸ்திரங்கள் அந்த வீரனின் எச்சரிக்கையையும் அச்சத்தையும் அடியோடு கிழித்துவிடவே அவன் உதடுகள் ஒரு
விநாடி அவள் உதடுகளைத் தடவி வேகமாகக் கன்னத்துக்குத் தாவி அதில் புதைந்து விட்டன. அவள் தோள் மீதிருந்த தனது கழுத்தை அவன் முன்னதாகவே நீக்கி, மார்பில் சாய்ந்த அவள் முகத்தை சரியாகப் பார்க்க அவளைத் தன்னை
நோக்கித் திருப்பியிருந்ததாலும், திரும்பியதால் அவள் முதுகைத் தாங்கிய இடது கை அரைச் சுற்று இப்புறம் வந்ததாலும், வலது கை மட்டும் அவள் சரியா மலிருக்க அவள் வலது தோளைமட்டும் தாங்கியிருந்ததாலும், உடல்கள்
இரண்டும் பல இடங்களில் பட்டும் படாததுமாக இன்ப இம்சையை விளைவித்துக்கொண்டிருந்தன. அத்தகைய அரைகுறை இணைப்பால் தடுமாறிய உணர்ச்சிகள் இருவரையும் ஏதோ ஒரு கனவுலகத்துக்கு இழுத்துச்
சென்றுகொண்டிருந்தன. அதன் விளைவாக அவன் பிடியில் லேசாகச் சுழன்ற சோழ மகள் பெருமூச்சுவிட்டு சற்றே கண்களை மூடினாள்.
அவள் கண்களை மூடியதையும் உணர்ச்சிகளால் அவள் உடல் நெளிந்ததையும், மார்பு எழுந்து தாழ்ந்ததையும் ஸ்பரிசத்திலிருந்தே புரிந்து கொண்ட இதயகுமாரன், தனது முகத்தை சற்று நிமிர்த்தி மூடிய கண்களைத் தனது
இதழ்களால் தடவினான். பிறகு சற்றுக்கீழே முகம் தாழ்த்தி முகம் பூரா வையுமே அவள் சங்குக் கழுத்தில் புதைத்துக்கொண்டான். அந்தக் கழுத்தின் வழவழப்பு அவனைப் பழைய சம்பவங்களுக்கு இழுத்துச்சென்று, “இந்தக கழுத்தைக்
காட்டித்தானே இளையவேளை சங்க அறுக்கும் குலத்தானென்று குற்றம் சாட்டினேன்?” என்று தன்னைக் கேட்டுக் கொண்டான் இதயகுமாரன். “இந்தக் கழுத்துக்குக் குறுக்கே வாளை வைத்த வனை வாளால் வெட்டினால்தானென்ன?”
என்று மற்றொரு கேள்வியும் எழுப்பிக் கொண்டான்.
கண்ணழகியின் மனம் எதையும் நினைக்கும் நிலையில் இல்லை. அந்த ஆண்மகன் தனது அழகுக்கு அடிமைப்பட்டு கழுத்தில் குழந்தைபோல் முகத்தைப் புதைத்துப்படுத்திருப்பதை எண்ணி “பாவம்! களைத்திருக்கிறார்!’ என்று
பரிதாபப்பட்டாள் காரணமில்லாமல். களைத்ததற்குத் தான் பிணையில்லையென்பதை உணர்ந்திருந்தும், அப்பொழுது பரிதாபத்திற்குக்
காரணமில்லையென்பதை அறிந்திருந்தும் அவனிடம் அவளுடைய கருணை வரையற்றுக் கிடந்தது. பெண்களுக்கு அடைக்கலம் ஆண் என்பது உலக முறையானாலும் அந்த முறை மாறும் சமயங்களும் உண்டு என்பதை அந்த சில
விநாடிகளில் சோழன் மகள் புரிந்து கொண்டாள். அப்படி முறை மாறும் சமயங்கள்தான் எத்தனை இன்பமானவை என்றும் நினைத்துப் பார்த்ததால் உணர்ச்சியால் சிறிது அசைந்தாள். அசைந்தது மட்டுமில்லாமல் தனது
கையொன்றையும் அவன் கழுத்தின் மீது வைத்தாள். அந்த வலிய முரட்டுக் கழுத்தையும் அதன்மீது கிடந்த வெட்டப்பட்ட முரட்டுக் குழல்களையும் கையால் தடவினாள்.
இந்த சைத்தியோபகாரத்தால் அவள் கழுத்திலிருந்த அவன் முகம் இப்படியும் இப்படியும் அசைந்தது. பிறகு கழுத்திலிருந்து சிறிது இறங்கவும் துணிந்தது. அந்த சமயத்தில் தான் கண்ணழகியின் உணர்ச்சிகள் மீண்டும்
விழித்துக்கொண்டன. “உம்” என்ற எச்சரிக்கை ஒலியும் எழுந்தது அவளிடமிருந்து. அவள் உடலும் சற்றுப் பின்னடைந்து அதுவரையிலிருந்த இணைப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டது. அவள் அழகிய கண்களையும்
அரைகுறையாக விழித்தாள்.
“என்ன ராஜகுமாரி?” என்று கேட்டான் இதயகுமாரன் சற்றே சங்கடப்பட்ட குரலில்.
அந்தக் கேள்வி கண்ணழகியின் பலவீனத்தை அடியோடு அறுத்தெறிந்ததால் அவனிடமிருந்து பிரிந்து உட்கார்ந்தாள் அவள். “நேரமாகிறது… தவிர…” என்று மென்று விழுங்கினாள்.
“ஆம், ஆம். நேரமாகிறது” என்று இதயகுகுமாரனும் சங்கடத்துடன் ஆமோதித்தான்.
அரசகுமாரி அவனை நோக்கவில்லை. வேறுபுறம் பார்த்துக்கொண்டு “என்னைத் தேடுவார்கள்…” என்றாள் சிறிது அச்சம்தொனித்த குரலில்.
இதயகுமாரன் அவள் தோள்களை மீண்டும் பிடித்து அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி, “அரசகுமாரி!” என்று அழைத்தான்.
அவனைப் பார்க்கும் சக்தி அவளுக்கில்லை. நிலத்தை நோக்கி “உம்” என்று கேட்டாள்.
“நீ இங்கு வந்தது…” இதயகுமாரன் வாசகத்தை முடிக்கச் சக்தியற்றவனானான்.
“தெரியாது.”
“யாருக்கு?”
“யாருக்கும்.”
“தோழிகளுக்கு?”
“ஊஹூம்.”
இதைக் கேட்ட இதயகுமாரன் இதயத்திலும் சிறிது அச்சம் துளிர்த்தது. “அப்படியானால்?” என்று கேட்டான் அச்சத்துடன்.
“எந்த நிமிஷமும், யாரும் தேடி வரலாம்?” என்றாள் கண்ணழகி.
இதயகுமாரன் “இதோ என்னைப் பார்அரசகுமாரி” என்று அவள் முகவாய்க்கட்டையைத் தூக்கி நிமிர்த்தினான். கண்ணழகி மெல்ல தன் மலர்விழிகளை நன்றாகவே திறந்தாள். “இது தவறு…” என்றும் கூறினாள் பவள உதடுகளைத்
திறந்து.
“எது அரசகுமாரி?” என்று வினவினான் இதயகுமாரன்.
“எதையென்று சொல்லட்டும்?” என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்ட கண்ணழகி, அந்தக் கேள்யினாலேயே சற்று முன்பு விளைந்த நிகழ்ச்சிகளை எண்ணினாள். எண்ணியதால் நாணத்தால் முகம் சிவந்தாள், அங்கம், குழைந்தாள்.
இருப்பினும் மேலுக்குச் சொன்னாள், “இது அரண்மனை நந்தவனம்” என்று.
“ஆமாம்.” இதயகுமாரன் ஆமோதித்தான்.
“இங்கு ஆண்கள் யாரும் வரக்கூடாது.”
“ஆம்.”
“வந்தால்…?”
“மரணதண்டனையும் கொடுக்கலாம்,”
“தெரிந்தும் வந்திருக்கிறீர்கள்.”
“நானாக வரவில்லை…” என்று தடுமாறினான் இதயகுமாரன்.
“ஆம்” என்ற அரசகுமாரி புன்முறுவல் கொண்டாள்.
“என்ன ஆம்?” ஏதும் புரியாமல் கேட்டான்.
அரசகுமாரியின் இதழ்களின் புன்முறுவல் அதிகமாக விரிந்தது. “யாராவது தூக்கிக்கொண்டு வந்து இங்கு விட்டிருப்பார்கள்” என்று புன்முறுவலின் ஊடே கூறவும் செய்தாள்.
“என்னையா?”
“ஆம்.”
“என்னைத் தூக்கிவருபவரும் உண்டா?”
“உண்டு.”
“யார் தூக்க முடியும்?”
“விஜயன்” என்ற அரசகுமாரி லேசாக நகைத்தாள்.
இதயகுமாரனும் அவளுடன் சேர்ந்து நகைத்தான். “சரி அரசகுமாரி. அதுதான் சரி. உன்னையும் அவனே தூக்கிச் செல்லட்டும்” என்ற இதயகுமாரனை நோக்கிய அரசகுமாரி “நல்ல லட்சணம்!” என்று கடிந்துகொண்டாள்.
“ஏன் அரசகுமாரி! விஜயன் முரடனல்ல…” என்ற இதயகுமாரனை மறுத்த அரசகுமாரி, “ஆம், ஆம், அல்ல. அவ்வளவு முரடனல்ல” என்றாள்.
“அவ்வளவு என்றால்?” இதயகுமாரன் விவரம் புரியாமல் விழித்தான்.
“எஜமானைப் போல் முரடனல்ல” என்றாள் அரசகுமாரி.
“நான் முரடனா?” என்று இதயகுமாரன் கேட்டான்.
பதில் கூறவில்லை சோழன் மகள். தனது கண்களைத் திருப்பி தனது தோள்களிரண்டையும் பார்த்தாள். இரண்டிலும் தனது கைநகம் பதிந்திருந்ததை இதயகுமாரனும் கண்டான்.
“ஆம் அரசகுமாரி…” என்று மென்று விழுங்கினான்.
அரசகுமாரி பதிலுக்குப் புன்முறுவல் செய்து, “முரடன் மட்டுமல்ல நீங்கள்” என்றாள்.
“வேறு என்ன?”
“திருடன்.”
“திருடனா?”
“ஆம். திருட்டுத்தனமாக இங்கு நுழைந்திருக்கிறீர்கள்.”
“இல்லை. நேர்வழியாகத்தான் வந்தேன். காவலர் யாரும் தடுக்கவில்லை.”
“தடுக்கவில்லையா? இல்லையா?”
“யாருமே இல்லை.”
“காவலர் இல்லாவிட்டால் எங்கும் நுழையலாமா?” என்று கேட்டுக்கொண்டே அரசகுமாரி எழுந்தாள்..
இதயகுமாரனும் கூடவே எழுந்தான். “அப்படியே நிற்காதீர்கள்” என்றாள் அரசகுமாரி.
“வேறு என்ன செய்யவேண்டும்?”
“சற்று அப்புறம் திரும்பிக்கொள்ளுங்கள்.”
“ஏன்?”
“ஆடை புனையவேண்டும் சரியாக.”
இதயகுமாரன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். அரசகுமாரி செண்பகமரத்தின் மறுபுறம் சென்று சில விநாடிகளில் திரும்பி வந்தாள். வந்து தலைக்குழலைக் கோதிக் கொண்டாள். பழைய செண்பகமலர் சிறிது சிதைந்திருந்ததால்
இன்னொரு மலரையும் பறித்து தலையில் செருகிக்கொண்டாள். “அந்த மலரை இப்படிக் கொடு அரசகுமாரி” என்று கையை நீட்டினான் இதயகுமாரன்.
“எதற்கு?” என்று கேட்டாள் அரசகுமாரி.
“வேண்டும் எனக்கு” என்றான் இதயகுமாரன்.
பழைய மலரைக் குழலின் உட்புறத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள் அரசகுமாரி. அப்படி எடுத்ததால் இரண்டொரு இதழ்களில்லாமல் அது வெளியே வந்தது. அதைக் கையில் வாங்கிக்கொண்ட சோழநாட்டு வாலிபன் அதைத் தனது
கச்சையில் பத்திரப்படுத்திக்கொண்டான்.
“நான் வருகிறேன்” என்று கூறித் திரும்பினாள் அரசகுமாரி அரண்மனையை நோக்கி.
“அரசகுமாரி!” என்ற இதயகுமாரன் அழைப்பு அவளைச் சிறிது தேக்கியது. தலையை மட்டும் திருப்பி அவனை நோக்கினாள் அரசகுமாரி.
“நீ தனியாகப் போகவேண்டாம். நானும் வருகிறேன் துணைக்கு” என்றான் இதயகுமாரன்.
“துணையின்றித்தான் இங்கு வந்தேன்” என்று சுட்டிக் காட்டி விட்டு நடந்தாள் அரசகுமாரி.
“விஜயா!” என்று அழைத்துக்கொண்டு தானும் செல்லத் திரும்பினான் செண்பகமரத்தை நோக்கி. அடுத்த விநாடி அவன் இரு கைகளும் இரண்டு முரடர்கள் கையிலிருந்தன. “அவனைத் திருப்புங்கள் அரசகுமாரியை நோக்கி” என்று
ஒலித்தது இளையவேளின் குரல்.
முரட்டுத்தனமாகத் திருப்பப்பட்டான் இதயகுமாரன். அரசகுமாரி சற்று எட்ட நடந்துகொண்டிருந்தாள் நிலத்தை நோக்கிய வண்ணம். அவள் எதிரிலும் இரண்டு முரடர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலடி ஓசை கேட்டு
சற்றே தலைநிமிர்ந்தாள் அரசகுமாரி. அவள் கைகளும் பற்றப்பட்டன துரிதமாக. வாயும் ஒரு முரட்டுக் கையால் பலமாகப் பொத்தப்பட்டது. கண்களைச் சுழற்றிப் பார்க்க முற்பட்டாள். தன்னை மறித்த முரடர்கள் முகங்களே பார்வைக்குத்
தெரிந்தன. அடுத்த விநாடி முரட்டுக் கரங்கள் இரண்டு தன்னை மேலே தூக்குவதை உணர்ந்தாள் அரசகுமாரி. ஏதோ விவரிக்க இயலாத மலர் வாசனை அவள் நாசியில் நுழைந்தது. அத்துடன் அவள் சுரணை இழந்தாள். “முரடன்! திருடன்!”
என்ற சொற்களை அவள் இதழ்கள் கடைசியாக முணுமுணுத்தன.

Previous articleMohana Silai Ch 19 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here