Home Historical Novel Mohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

98
0
Mohana Silai Ch 21 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 21. மாரவேளின் ரகசியம்

Mohana Silai Ch 21 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

வேறெந்த மனிதனாயிருந்தாலும் அதிர்ச்சியடைந்து விடக்கூடிய அந்த விபரீத நிலையிலும் இதயகுமாரன், தன்னைப் பற்றி நின்ற முரடர்களிடமிருந்து விடுபட எந்தவித முயற்சியையும் எடுக்காமலும், சற்று திமிரக்கூடத் திமிராமலும்,
கண்ணெதிரே இருவர் கண்ணழகியைத் தூக்கியபோதும் எந்தவித உணர்ச்சியைக் காட்டாமலும், இடித்தபுளியென நின்றிருந்தான். அடுத்த இரண்டு விநாடிகளில் எதிரே வந்து பூதாகாரமாக நின்று நகைத்த இளையவேளையோ, உதடுகள்
அசைந்ததால் பயங்கரமாக அசைந்த அவன் தடித்த மீசையையோ இம்மியளவும் லட்சியம் செய்யாமல் இளையவேளின் கண்களோடு தனது ஈட்டிக் கண்களைக் கலக்கவிட்டான். இதயகுமாரன் மேலுக்கு உணர்ச்சிகளை அறவே
காட்டாவிட்டாலும் உள்ளூர அவன் பெரிய கொலைகாரனாக மாறியிருக்கிறான் என்பதை அந்த ஈட்டிக்கண்கள் சொன்ன செய்தியிலிருந்தும், அது தன் கண்களை ஊடுருவிய போது விளைவித்த பயங்கரத்திலிருந்தும் உணர்ந்து
கொண்ட இளையவேளின் உள்ளம் ஓரளவு நடுங்கியதென்றாலும், அதை வெளிக்குக் காட்டாமலே சொன்னான் இளையவேள், “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்” என்று.
இதயகுமாரன், சற்றுத் தூரத்தில் அரசகுமாரியை இருவர் தரையில் படுக்க வைப்பதையும், அவள் சுரணையற்றிருப்பதையும் கவனித்தான். இருபுறமும் தனது கைகளைப் பற்றிநின்ற இரு முரடர்களையும் திரும்பிப் பார்த்தான்.
ஒருமுறை வெகு அலட்சியமாக “மகிழ்ச்சி” என்ற ஒற்றைச் சொல்லை முடி வாகச் சொன்னான்.
இளையவேளின் பெருவிழிகள் இதயகுமாரன் மீது நிலைத்தன சந்தேகத்துடன். “எதற்கு மகிழ்ச்சி?” என்று அவன் தடித்த உதடுகள் ஒரு கேள்வியையும் உதிர்த்தன.
இதயகுமாரன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “உன்னைப் பூனையென்று நீ ஒப்புக்கொண்டதற்கு என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் அவன் புன்முறுவலின் ஊடே.
தான் செய்த தவறு அப்பொழுதுதான் புரிந்தது இளையவேளுக்கு. “பழமொழியைச் சொன்னேன்” என்று சமாளிக்க முயன்ற அவன் குரலில் சினம் துளிர்த்துக் கிடந்தது.
“தமிழ்ப் பழமொழிகளில் பெரும் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில் நம்மை அறியாமலே நாம் அந்த உண்மைகளைக் கூறிவிடுகிறோம்” என்று கூறிய இதயகுமாரன் “இளையவேள்!” என்று அழைத்தான் இரும்புக்
குரலில்.
“என்ன?” என்ற இளையவேளின் கேள்வியில் சீற்றமும் இருந்தது. சிறிது அச்சமும் இருந்தது.
“பெண்களை அபகரிக்கும் நிலைக்கு நீ தாழ்ந்துவிட்டதை நினைத்து வருந்துகிறேன்” என்ற இதயகுமாரன், “உன் முரடர்கள் அரசகுமாரியைத் தொட்டதை மன்னிக்கிறேன். நீ மட்டும் அவளைத் தொடமுயலாதே” என்றும் எச்சரித்தான்.
இதயகுமாரனின் உணர்ச்சியற்ற குரலில் எல்லை மீறிய எச்சரிக்கை ஒலித்தது.
இளையவேளின் இதயத்தில் அந்த எச்சரிக்கை நெருப்புக் கணைப்போல் புகுந்தது. இருப்பினும், அவன் அச்சத்தை உதறி விட்டுக் கேட்டான். “தொட்டால் என்ன செய்வாய்?” என்று.
இதயகுமாரன் விழிகளில் விவரிக்க இயலாத சாயை ஒன்றுபடர்ந்தது. “தொடவேண்டாம்.துணிவிருந்தால் தொட முயன்று பார்” என்று சொன்ன அவன் குரலிலும் ஏதோ ஒரு பயங்கர ஒலி படர்ந்து கிடந்தது.
இதைக் கேட்ட இளையவேள், தனது நிதானத்தை அடி யோடு கைவிட்டான். “டேய்! அவளைக் கொண்டு வாருங்கள் இங்கே” என்று கூவினான் அவளருகே நின்ற முரடர்களைப் பார்த்து.
கீழே கிடத்தப்பட்ட அரசகுமாரியை மீண்டும் தூக்கிய முரடர்கள் அவளை இளையவேளின் அருகே கொண்டு வந்தார்கள். “யாரங்கே! சிறு பந்தத்தைக் கொளுத்தி இப்படிக் காட்டுங்கள்” என்ற இளையவேளின் ஆசையை ஒட்டி ஒரு சிறு
பந்தம் எங்கோ கொளுத்தப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதைத் தனது இடது கையில் வாங்கி அரசகுமாரியின் முகத்துக் கெதிரே காட்டி, “இந்த முகத்தை நான் தீண்டுவதை யார் தடுக்க முடியும்?” என்று வினவினான் இளையவேள்.
இதயகுமாரன் சிறிதும் நிதானமிழக்காமல் சொன்னான், “உன் சொற்கள் இன்று மிக நியாயமாக வருகின்றன” என்று.
“என்ன சொற்கள்?”
“அரசகுமாரியைத் தீண்டுவதாகச் சொன்னாய்.”
“ஆம்.”
“தீண்டுவது என்ற சொல் பாம்பு முதலிய விஷ ஜந்துக்களுக்குத்தான் உபயோகிக்கப்படுகிறது.”
இதைக் கேட்டதும் இளையவேள் சுயநிலையை அறவே இழந்தான். “உன் தமிழறிவு இவளைக் காப்பாற்றாது. சொற் செறிவு என்னைச் சுடாது. நான் இத்தனை நேரம் இங்கு பேசிக் கொண்டு நிற்கிறேன். ஏன் தெரியுமா?” என்று வினவி
சற்றுக் கடுமையாக நகைத்தான் இளையவேள்.
“ஏன்?”- இதயகுமாரன் கேள்வி வரண்ட குரலில் வெளி வந்தது.
“உன்னைத் தொடர்ந்து நானும் கிளம்பினேன் திருமுக்கூடலிலிருந்து. இன்றிரவு ஏற்கனவே சோழனால் சிறைசெய்யப்பட்ட சேரர் காவலர்களையும் விடுவித்துக்கொண்டேன். அச்சுதக்கொல்லனின் ஆயுதக் கிடங்கிலிருந்து
வாட்களையும் அவர்களுக்குப் பரிமாறினேன். இந்த நந்தவனம் இப்பொழுது என் வீரர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இங்கு சந்தடி செய்யாமல் நுழைந்தோம். சமயத்தில் உன் சரசத்தையும் தடுத்தேன். இவள் கன்னத்தில் என் இதழ்கள்
புதையும். தடுக்க முடிந்தால் தடுத்துப்பார்” என்று கூறி கண்ணழகியின் சுரணையிழந்த மயக்கமுற்ற மதி முகத்தை நோக்கிக் குனிந்தான் இளையவேள்.
அதே விநாடியில் அவன் இடது கை திடீரென அசைந்து அதில் பிடித்திருந்தசிறு பந்தம் அவன் கண்ணில் அழுந்தியது. அதனால் திகைத்து அவன் திரும்ப முயன்ற சமயத்தில் இதயகுமாரனைப் பிடித்திருந்த இருமுரடர்களும்
அவனைவிட்டுக் குனிந்து வித்தை காட்டுகிறவர்களைப்போல் எதிரே ஓடினார்கள். அடுத்த விநாடி இதயகுமாரன் வாள் இளையவேளின் ஊட்டியைத் தடவிக்கொண்டிருந்தது. “இளையவேள்! அசையாதே! அசைந்தால் இந்த வாளின் நுனி
உன் ஊட்டியில் புதைந்து கழுத்தை ஊடுருவிவிடும். உன் நண்பர்களை மெதுவாக அரசகுமாரியைக் கீழே வைக்கச் சொல்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்தான் இதயகுமாரன். முரடர்கள் இளையவேளின் உத்தரவுக்குக் காத்திராமல்
உடனடியாகக் குனிந்து அரசகுமாரியை நந்தவனத்தின் புல் தரையில் கிடத்தினார்கள்.
“இளையவேள்! உன் வீரர்களுக்கு ஏதாவது சைகை செய்ய முடியுமானால் செய்து அவர்களை நந்தவனத்தை விட்டுப் போகச்சொல். இல்லையேல் சோழமன்னன் அவர்கள் அனைவரையும் இரண்டாம் முறை சிறையிலிடமாட்டான்.
தூக்கிலிடுவான். உம், சீக்கிரம்’ என்று துரிதப்படுத்தினான் இதயகுமாரன்.
எதிரியால் தனது கைப்பந்தம் கண்ணில் அழுந்தியதால் சுட்டுக் கருத்த ஒற்றைக் கண்ணுடன் மிகப் பயங்கரமாகக் காட்சியளித்த இளையவேள், எதிரியின் கத்திமுனை தனது கழுத்தில் அழுந்திக் கிடந்த நிலையிலும் மெள்ள நகைத்தான்.
“என் வீரர்கள் யாரும் அணுகமாட்டார்கள். இரவில் யாரும் நந்தவனத்துக்குள் நுழையும் வழக்கமில்லை. அப்படி நுழைந் தாலும் இந்த நந்தவனம் இங்கிருந்து நெடுந்தூரம் பரவியிருக்கிறது. மரங்களின் அடர்த்தி மிக அதிகம். என் வீரர்களில்
சிலரைத் தவிர, மற்றவர்கள் முன்னமே நகர்ந்து விட்டார்கள். அவர்களில் சிலர் மாரவேள் படுத்திருக்கும் அந்தப்புரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் சோழ வீரர் உடை யணிந்து. இப்பொழுது காவல் மாறும் நேரம். காவலை
இவர்கள் மாற்றுவார்கள். இன்னும் அரை நாழிகைக்குள மாரவேள் இங்கிருப்பார். இங்கு யாராவது என்னைத் தொட்டால் மாரவேள் எமனுலகை எட்டிப் பார்ப்பார்” என்று கூறிய இளையவேள், “பார்த்தாயா இதயகுமாரா! எனது திட்டங்கள்
நாழிகைக் கணக்குப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன” என்றான்.
இதைக் கேட்டதும் இதயகுமாரனும் பொறுமை இழந்தான். “முதலில் இந்த முரடர்களில் ஒருவனை அனுப்பி மாரவேளைத் தொடவேண்டாமென்று கட்டளையிடு. இல்லையேல் எமனுலகில் மாரவேளை வரவேற்க நீ முதலில் போக
வேண்டியிருக்கும்” என்று கூறினான் இதயகுமாரன் கடுமை மிதமிஞ்சி ஒலித்த குரலில். அதைத் தொடர்ந்து இளையவேளின் காலில் ஏதோ ஒரு மர்ம நரம்பு தட்டப்பட்டது இதயகுமாரன் காலால். இளையவேள் வெட்டப்பட்ட மரம் போல்
தரையில் விழுந்தான். அடுத்த விநாடி இதயகுமாரன் கால் இளையவேளின் மார்பு மீது இருந்தது. வாள் ஊட்டியில் அழுந்திக் கிடந்தது. “டேய்! இவன் அனுப்பிய வீரர்களிடம் சொல், மாரவேளைத் தொடக் கூடாதென்று. நான் அரச
காவலர்களை அழைக்கு முன்பு நீங்களும் தப்பி ஓடிவிடுங்கள்” என்று உத்தரவிட்டான் சோழ நாட்டு வாலிபன், இளையவேளின், முரடர்களுக்கு. அவன் உத்தரவினாலும், தங்கள் தலைவனிருந்த அவலநிலையினாலும் அந்த முரடர்கள்
பாய்ந்தார்கள், கண்ணழகியைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு.
அவர்கள் சென்ற பின்பு கேட்டான் இதயகுமாரன், இளையவேளை நோக்கி, “நான் இந்த நந்தவனத்துக்குள் வருவேனென்று உனக்கு யார் சொன்னது?” என்று.
“யாரும் சொல்லவில்லை” என்றான் இளையவேள் மல்லாந்து கிடந்த நிலையிலிருந்து. அவன் சொற்களில் விஷம் கலந்திருந்தது. ஒற்றைக்கண் உக்கிரமாகப் பார்த்தது இதயகுமாரனை.
“என்னைத் தொடர்ந்து வந்தாயா முக்கூடலிலிருந்து?”
“இல்லை.”
“பின் எப்படி அறிந்தாய்?”
“ஒட்டுக்கேட்டேன். முதலில் எதுவும் காதில் விழவில்லை. நந்தவனத்துக்குப் போக சங்கரநாராயணன் சொன்னது மட்டும் காதில் விழுந்தது. நீ புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் நானும் புறப்பட்டேன்.”
இதயகுமாரனுக்கு நடந்ததெல்லாம் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. “சேர மன்னர் அறியாமல் இவன் எப்படி முக்கூடலை விட்டுக் கிளம்பமுடியும்?” என்று சிந்தித்துப் பார்த்தான்.
சேரமன்னர் இத்தகைய இழிச்செயலுக்கு ஒருநாளும் உடன்பட மாட்டாரென்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்ததால் அவரும் அறியாமல் இளையவேள் இந்த ரகசிய நட வடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும் என்று தீர்மானித் தான். இனி
காலதாமதம் செய்வதில் பயனில்லையென்பதை உணர்ந்த இதயகுமாரன், சற்றுக்குனிந்து இளையவேளின் கச்சையிலிருந்த வாளை உறையிலிருந்து உருவி இடது கையில் பிடித்துக்கொண்டான். இரு வாளையும் இரு கைகளில் ஏந்திய
நிலையில், “இளையவேள்! உன்னைக் கொல்வதில்லையென்று உறுதி கூறியிருக்கிறேன் மாரவேளிடம். ஆனால், அரசகுமாரியைத் தூக்க உத்தரவிட்ட உன் கைகளை வெட்டலாம். எழுந்திரு” என்று கூறி தனது காலை அவன் மார்பிலிருந்து
எடுத்தான்.
இளையவேள் மிக எச்சரிக்கையுடன் எழுந்தான். அதே சமயத்தில் இரு வாட்களாலும் அவனது கைகளைத் துண்டிக்க வாட்களைச் சரேலென்று வீச முயன்ற இதயகுமாரனை, “வேண்டாம்! இதயகுமாரா வேண்டாம்!” என்ற வேதனைச்
சொற்கள் தடுத்தன.
இதயகுமாரன் கண்கள் இளையவேளை விட்டு அந்தக் குரல் ஒலி வந்த திசையை நோக்கின. மார்பில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டிலிருந்து ரத்தம் ஒழுக மாரவேள் தள்ளாடித் தள்ளாடி வந்தார். இரு வாட்களுடனும் அவரை
இதயகுமாரன் தாங்கிப்பிடிக்க முயன்ற சமயத்தில் இளையவேள் சரேலென ஓடி மறைந்துவிட்டான் மரக்கூட்டத்துள்.
மாரவேள் தலை சிறிது சுற்றியிருக்க வேண்டும். அவர் தலை சாய்ந்தது மார்புப்புறமாக. அவரை மெதுவாகப் பிடித்து கண்ணழகியின் பக்கத்தில் படுக்கவைத்தான் இதயகுமாரன். பிறகு இரண்டு வாட்களையும் இடைக்கச்சையில்
செருகிக் கொண்டு வாவிக்குச் சென்று இரு கைகளிலும் நீரை எடுத்து வந்து மாரவேள் முகத்திலும் அரசகுமாரி முகத்திலும் தெளித்தான். அரசகுமாரி முதலில் கண்விழித்தாள். மெள்ள எழுந்து உட்காரவும் செய்தாள். அடுத்து
படுத்திருந்த மாரவேளையும் கவனித்தாள். அவரை அணுகிக் கட்டைப் பரிசோதித்தாள். காயத்திலிருந்து ரத்தம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அதைப் பிரித்துக் கட்டுப் போடவும், காயத்தின் தன்மையை ஆராயவும் அதைப் பிரிக்க
முயன்ற சமயத்தில் மெள்ள கண் களை விழித்த மாரவேள், “பயனில்லை அரசகுமாரி! இனி நான் பிழைக்கமாட்டேன். நீயும் இதயகுமாரனும் குணியுங்கள் என் மனத்தில் புதைந்து கிடக்கும் கதையைச் சொல்கிறேன்” என்றார் தீனமான
குரலில்.
“இல்லை மாரவேள்! நீங்கள் இறக்கப்போவதில்லை. அரண்மனை மருத்துவர்களை அழைக்கிறேன்” என்றாள் அரசகுமாரி தழுதழுத்த குரலில்.
மாரவேளின் மூச்சு சிறிது கடுமையாக வந்துகொண்டிருந்தது. “பயனிருந்தால் பிழைப்பதற்கு வழியிருந்தால் நான் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டேன் அரசகுமாரி! எனக்கு அதிக நேரமில்லை. குனிந்து நான் சொல்வதைக்
கவனமாகக் கேள்” என்றுகூற, இருவரும் அவர் முகத்துக்கு அருகில் குனிந்தனர்.
மாரவேளின் பஞ்சடைந்த கண்கள் ஒரு விநாடி பளிச்சிட்டன. அவர் உதடுகள் விரிந்து மெள்ள சொற்களை உதிர்த்தன. “நீங்களிருவரும் இங்கிருப்பது எனக்கு மகிழ்ச்சி. என் மனத்தில் புதைந்து கிடக்கும் பயங்கரக் கதையைக் கேளுங்கள்.
ஒரு மூர்க்கன், இரக்கமற்ற அரக்கன், இரண்டு பத்தினிகளை அழித்தான். ஒரு பருவப் பெண்ணை நேர்முகமாகக் கொல்லவில்லை. மறைமுகமாகக் கொலை செய்தான். இரண்டு பத்தினிகள் உங்கள் இருவரின் தாய்மார்கள். விவாகமாகாமலே
கருவுற்ற அந்தக் கன்னிகை இளைய வேளின் தாய், என் மகள்…” என்ற மாரவேளின் தொண்டை சிறிது அடைத்துக் கொண்டது. பிறகு சமாளித்துக் கொண்டு மெதுவாகப் பேசினார் மாரவேள், அவர் வாயிலிருந்து ஒரு பயங்கரக் கதை.
மூன்று அரசுகளைப் பற்றியது. அவர் கதையைச் சொல்லச் சொல்ல சினத்தின் எல்லையைத் தாண்டிக்கொண்டிருந்தார்கள் இதயகுமாரனும் கண்ணழகியும். விரிந்ததோ, எண்ணவும் முடியாத விபரீதக் கதை. அதனால் ஏற்படக்கூடிய

.
விளைவுகளை எண்ணி, அது தங்கள் இருவர் மீதும் சுமத்திய கடனை எண்ணி உணர்ச்சிப் பெருமூச்சுவிட்டான் இதயகுமாரன்.

Previous articleMohana Silai Ch 20 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 22 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here