Home Historical Novel Mohana Silai Ch 24 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 24 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

201
0
Mohana Silai Ch 24 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 24 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 24 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 24. சந்திரலேகா

Mohana Silai Ch 24 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

தஞ்சையை அடுத்திருந்த சந்திரலேகா என்ற முத்தரையர் தலைநகரை பெரிய நகரம் கூறமுடியாவிட்டாலும் அது ஒரு இரும்புப் பாசறை என்று சொல்லும்படியாக முத்தரையர் அமைத்திருந்ததால், அந்த ஊருக்குள் புகுவதோ,
வெளியே உயிருடன் வருவதோ நடக்கத் தகாத காரியமாயிருந்தது. அந்த ஊரைச் சுற்றிலும் பெரிய கோட்டை கொத்தளங்கள் இல்லாவிட்டாலும், களப்பிர வீரர்கள் ஆயுதபாணிகளாக இரவும் பகலும் உலாவி வந்ததாலும், அந்த நகருக்குள்
வரும் யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் விசாரணையின்றி அவரைக் கொன்றுவிட வீரர்களுக்கே அதிகாரமிருந்ததாலும், நகரைப் பாதுகாத்த காவலரும் நல்ல உயரம் பருமனாக ராட்சஸர்கள் போலிருந்ததாலும் அந்நகரின் பக்கம் மற்ற ஊர்
மக்கள் எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாதிருந்தது.
அதற்காக அந்த நகரத்துக்குள் யாருமே வரக்கூடாதென்ற கட்டாயம் எதையும் வைக்கவில்லை முத்தரையர்கள். சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை யார் வேண்டுமானாலும், அந்த ஊரின் வெளிவாயிலாக அமைந்திருந்த
இரண்டு பெரிய ஸ்தூபிகளின் பக்கத்திலிருந்த படை வீட்டில் வசித்து வந்த காவலர் தலைவன் உத்தரவு பெற்று உள்ளே வரலாமென்ற விதி ஏற்படுத்தியிருந்தார்கள். சந்திரலேகா நகரத்தில் பொது மக்களென்று யாரும் கிடையாதாகையால்
அங்கிருந்து படைத்தளத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அனைத்தும் பக்கத்திலிருந்த தஞ்சைப் பெருநகரிலிருந்தே வந்து கொண்டிருந்தன.
ஆகையால் விடியற்காலையில் சந்திரலேகாவில் புகும் தயிர்க்காரிகளும் அங்கிருந்த பலசரக்குக் கிடங்குகளைத் திறக்கவரும் வணிகர்களும், அங்கிருந்த பலசரக்குக் கிடங்குகளைத் திறக்க வரும் வணிகர்களும், அங்கிருந்த ஒரே
கோவிலுக்குப் பூஜை செய்யவரும் பூசாரிகளும், முத்தரையர் அரண்மனைப் பெண்களுக்கு மலர் கொண்டுவரும் பூக்காரிகளும் விநோதக் கும்பலாகக் காட்சியளித்தனர்.
சூரியன் கிழக்கே உதித்ததும் உட்புக அனுமதியிருந்தாலும், சீக்கிரத்தில் வேலையை முடித்துக்கொண்டு திரும்பும் எண்ணம் வருபவர்கள் மனத்தில் தீவிரமாகக் குடிகொண்டிருந்ததால், தஞ்சையிலிருந்து வருபவர்கள்
விடியற்காலையிலேயே வந்து சந்திரலேகாவின் இரு ஸ்தூபிகளுக்கு முன்பாகத் தங்கியிருந்து காவலர் தலைவன் வந்து அனுமதி கொடுத்ததும் ஊருக்குள்ளே விரையலாயினர். இப்படி சர்வ கெடுபிடியுடனிருந்த சந்திரலே காவில்
நிமிடப்படி சகல அலுவல்களும் நடந்து வந்தன.
சூரியோதயமான அடுத்த பத்து வினாடிகளுக்குள் கோவில் மணி பெரிதாக அடிக்கும். அதைத் தொடர்ந்து அந்த நகர மத்தியிலிருந்த அரண்மனைக் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கப்படும். திறக்கப்பட்ட அரை நாழிகையில்
பெரும்பிடுகு முத்தரையர் அரண்மனை வாயிலின் மேல்படியில் நின்று கிழக்கு நோக்குவார். சூரியபகவானும் அவருக்குப் பயந்திருக்கவேண்டும். தனது இளங்கதிர்களை அவர்மீது மிக மெதுவாக வீசுவான். அந்த வந்தனத்தை
ஏற்றுக்கொண்டவர் போல் முத்தரையர் கோன் தனது தலையைச் சற்றே அரண்மனை வெளியிலிருந்த பெரும் சதுக்கத்தை நோக்கிச் சிறிது அசைப்பார். அடுத்த விநாடி பூர்ணகவசமணிந்த ஆயிரம் களப்பிர வீரர்கள் அணிவகுத்து அந்த
சதுக்கத்தில் நுழைவார்கள். முதலில் புரவிப் படையின் ஒரு பிரிவு நுழையும், அடுத்து காலாட்படை நுழையும். இரண்டும் ஒன்றின்பின் ஒன்றாக அணி வகுத்து சதுக்கத்தில் சுற்றும்.
இப்படி இரண்டு நாழிகை அணிவகுப்புக்குப் பிறகு பட்டத்து யானையொன்று அவர் நிற்கும் படிகளில் ஏறிவந்து மண்டியிட்டு அவர் காலைத் துதிக்கையால் தொட்டு வணங்கும். அப்பொழுதுதான் சுவரன் மாறன் என்று சொந்தப்
பெயரையும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற குடிப்பெயரையும் தாங்கிய முத்தரையர் அதிபதியின் கடுமை முகத்தில் சிறிது சிரிப்பின் சாயையும் தோன்றும். அந்தப் புன்சிரிப்புடன் இரண்டு படிகள் இறங்கிவந்து யானையின்
தலையைத் தட்டுவார் முத்தரைய பூபதி. பிறகு அதன் மத்தகத்தில் உட்கார, பட்டத்து வேழம் மெள்ள பின்புறமாகவே படிகளில் மிக ஜாக்கிரதையாக இறங்கி சதுக்கத்திற்கு வரும். அந்த யானையை நாற்புறமும் செலுத்தி படை
அணிவகுப்பைப் பார்த்த பின்பு மன்னர் மீண்டும் படிகளை நோக்கி வேழத்தை நடத்துவார். அடிப் படியிலேயே யானையைப் படுக்கச் சொல்லி படிகளில் ஏறிச் சென்றுவிடுவார்.
இப்படிக் காலை அணிவகுப்பை மன்னர் முடித்து விட்டதைக் குறிக்க இரண்டு சங்குகள் பலமாக ஊதப்பட்டு முரசுகளுகம் முழங்கியதும் சந்திரலேகா ஜீவனுள்ள நகரமாக மாறும். உணவுப் பொருள் கிடங்குகளிலிருந்து படைவீரர்
விடுதிகளுக்கு உணவை எடுத்துப் போவோரும், பூவை விற்க தெருக்களில் நடக்கும் பெண்மணிகளும், ஆங்காங்கு நடமாடும் காவல் வீரர்களுமாகச் சேர்ந்து எழுப்பும் பலவித ஒலிகளால் சாதாரண ஊராக அந்தத் தலைநகர் மாறும்.
இப்படிப் பகல் முடிந்ததும் சூரியாஸ்தமன சமயத்தில் மீண்டும் சங்குகளும் முரசுகளும் ஆர்ப்பரிக்க செந்தலை (சந்திரலேகா) வந்த தஞ்சைவாசிகள் வேகமாகத் தங்கள் இல்லம் திரும்புவார்கள். இருள் மூண்டதும் காவல் வீரர் ஒலிகளும்,
படைப்புரவிகளின் நடமாட்டம் அளிக்கும் ஓசை களும் தவிர வேறு எந்த சத்தமும் சந்திரலேகாவில் இருக்காது.
என்றாவது ஒரு நாள் முத்தரையர் வெளியூர்களை வேட்டையாடக் கிளம்பும் போது திடீரென ஆயிரம் புரவிகள் பாய்ந்து வெளியே செல்லும் இரவு நேரத்தில். அப்பொழுதுதான் பெருத்த ஓசை சந்திரலேகாவில் கேட்கும். மற்றபடி
சந்திரலேகா மயான அமைதியைக் கொண்ட மௌன நகரமாகவே விளங்கி வந்தது. அப்படியே மீறி சத்தம் ஏதாவது கேட்டால் அவை வெளியிலிருந்து கொணரப்படும் பெண்கள் அலறலாயிருக்கும் அல்லது குடிவெறியில் வீரர் போடும்
கூச்சலாயிருக்கும்.
இந்தக் கூச்சல் பெரும்பிடுகு முத்தரையர் காலத்தில் பெரிதும் அடங்கியிருந்தாலும் அவன் மகன் மாறன் பரமேசு வரன் பெரியவனானதும் மீண்டும் அடிக்கடி தலைகாட்டலாயிற்று. மூர்க்கனாயிருந்தாலும் மகா வீரரும்
அச்சமற்றவனுமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மகன் மாறனின் போக்கு பெரும் தலைலியாயிருந்தது. அதன் விளைவாக மகனை எத்தனையோ முறை அடக்கமுயன்ற பெரும்பிடுகர் தோல்வியே அடைந்தார். மகனுக்கு சுற்று
முற்றும் எழும் எதிரிகளை அறியும் சிந்தனா சக்தி இல்லாததைக் கண்டு பெரும் மனோவியாதிக் குள்ளானார். களப்பிரர் சந்ததிகளான முத்தரையர் ஆட்சி நாலாபக்கத்திலும் ஒடுக்கப்படுவதையும், பல்லவ, பாண்டவ, சோழ, சேரர் பலம்
ஓங்குவதையும் பெரும்பிடுகர் கவனிக்கவே செய்தார்.
அடுத்துவரும் பேராபத்தைப் பற்றிப் பல முறை மகனிடம் சுட்டிக்காட்டியும் மகன் எதையும் காதில் வாங்காததால் பெரும் மனோவேதனைக்கு உட்பட்ட முத்தரைய பூபதியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. அவர் வயது எழுபதைத்
தாண்டியிருந்தது. மகனும் நடுவயதைத் தாண்டியிருந்தான். இருப்பினும், பெண்ணும் குடியும் கொள்ளையுமே பெரிதென அவன் கருதிவந்ததையும் நாட்டை வலுப்படுத்துவதில் சிறிதும் சிந்தனையில்லாததையும் அவர் எண்ணி மனம்
உடைந்திருந்தார். கருவூரில் மாரவேள் காலமான நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பெரும்பிடுகரும் நோய் வாய்ப்பட்டுப் பஞ்சணையில் படுத்திருந்தார். பஞ்சணையும் சோழ நாட்டிலிருந்து கொள்ளையடித்துவந்த உயர்ந்த
பஞ்சணை என்றாலும் சிந்தையில் இருந்த வியாகூலத்தால் அவருக்கு அந்தப் பஞ்சணைகூட சுகத்தை அளிக்கவில்லை. இரவு முற்றி நீண்ட நேரமாகியும் மகன் வராது போகவே சினத்துடன் சிறிது உறுமிய முத்தரைய பூபதியை
அணுகிய பணிப்பெண் “அருந்த மருந்து தேவையா?” என்று வினவினாள்.
பெரும்பிடுகு முத்தரையர் ராட்சஸக்கண்கள் பணிப்பெண்ணை நோக்கி உருண்டன ஒரு முறை. “மது கொண்டுவா” என்று உதடுகள் சொற்களை உதிர்த்தன.
“மருத்துவர். கூடாதென்று சொல்லியிருக்கிறார்” என்றாள் பணிப்பெண்.
முத்தரையர் நகைத்தார் மெள்ள. “நாளைக்கு அவரைக்கொன்று விடுகிறேன்” என்றான்.
பணிப்பெண் அவர் அசுரச் சிரிப்பை அலட்சியம் செய்தாள். “உங்கள் நல்லதுக்குத்தான் சொல்லியிருக்கிறார்” என்றாள் கண்டிப்பாக.
பெரும்பிடுகு முத்தரையர் பெரிதாக நகைத்தான் அத்தனை நோயிலும். “இதுவரை என்னை யாரும் அடக்கியதில்லை. நீதான் அடக்குகிறாய்” என்று கூறிவிட்டு மெள்ள எழுந்திருந்து பஞ்சணையை விட்டு இறங்கினார். அதற்கு மேல்
அவனைத் தடுப்பதில் பயனில்லை என்று நினைத்த பணிப்பெண் விடு விடு என்று அடுத்த அறைக்குச் சென்று மதுவைக் கொண்டு வந்தாள். அவள் கொடுத்த தங்கப் பாத்திரத்திலிருந்த மதுவைக் கடகடவெனக் குடித்த முத்தரையன்
பஞ்சணைமீது உட்கார்ந்து அவளை நோக்கினான் சிவந்த பெருவிழிகளால், “மாறன் எங்கே?” என்று வினவினார்.
“தெரியாது.”
“தெரியாதா?”
“தெரியாது. மூன்று நாட்களாக ஊரில் இல்லை.”
அதற்குமேல் கேள்வி ஏதும் கேட்கவில்லை பெரும்பிடுகு முத்தரையர். பணிப்பெண் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்துவிட்டுப் பஞ்சணையில் தொப்பென்று விழுந்தார். போதை தனது ஆட்சியை செலுத்தத்
தொடங்கியது நள்ளிரவில். அதன் விளைவாக பெரும்பிடுகு முத்தரையன் பஞ்சணையிலிருந்து இறங்கி மெள்ள நடந்தான் அறையின் சாளரத்தை நோக்கி. அங்கிருந்து வெளியே எட்டிப்பார்த்தார். எங்கும் கோரமான அமைதி குடி
கொண்டிருந்தது. பிறகு அறைக் கதவைத் திறந்து கொண்டு அடுத்த தாழ்வரையில் நுழைந்து நெடுக நடந்தார்.
தாழ்வரையின் இருபக்கங்களிலும் இரும்பு வளையங்களில் செருகப்பட்டிருந்த பந்தங்கள் அவர் முகத்தின் பளபளப்பையும், பெரிய மீசையின் பயங்கரத்தையும், ஏன், நோயின் உக்கிரத்தையுங்கூட அநேக மடங்கு அதிகப்படுத்திக்
காட்டின. ஆனால், வயதானதாலும், குடியாலும் வலுவிழந்த கால்கள் சிறிது தள்ளாடவே செய்தன. அந்தத் தள்ளாட்டத்தையும் சகித்துக்கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் தாழ்வரைக் கோடியிலிருந்த தனது மகனின் அறையை நாடிச்
சென்றான். அறைக்கதவு திறந்திருந்ததைக் கண்டு சிறிது மகிழ்ச்சியும் அடைந்தார், மகன் திரும்பி விட்டான் என்ற காரணத்தால். அந்த மகிழ்ச்சியுடன் வாயிற்படியைத் தாண்டி உள்ளே நுழைந்தவர், உள்ளே விரிந்த காட்சியைக் கண்டு
பிரமித்தார்.
அங்கு அவர் மகன் நின்றிருந்தான். வழக்கத்துக்கு மாறாக சற்று எட்ட சுவரில் தீட்டப்பட்டிருந்த ஒரு அழகியின் உருவத்தில் அவன் கண்கள் நிலைத்திருந்தன. தந்தை வந்த காலடி ஒலி கேட்டும் அவன் திரும்பவில்லை.
பெரும்பிடுகு முத்தரையர் அறை வாயிற்படியில் சாய்ந்து கொண்டு “மாறா!” என்றழைத்தார்.
அழகு ஓவியத்தில் லயித்திருந்தவன் முகம் சற்றுத் திரும்பியது. திரும்பிய முகம் அவர் மகன் முகமல்ல.

Previous articleMohana Silai Ch 23 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 25 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here