Home Historical Novel Mohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

167
0
Mohana Silai Ch 26 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 26. படியில் பரம விரோதி

Mohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

வாளொடு வாள் மோத, உராய, நெருங்கி அவற்றின் நுனிகள் இருவர் கழுத்துக்கருகிலும் பயங்கரத் தோற்றமளிக்க, விரோதிகள் போல் போர் புரிந்த மகனையும் பேரனையும் வியப்பும் பெருமையும் கலந்த விழிகளால் பார்த்துக்
கொண்டிருந்த மகாவீரரான பெரும்பிடுகு முத்தரையர் திடீரென்று, “போதும் நிறுத்தலாம்” என்று சொன்னதும் மாறன் பரமேசுவரன் தனது வாளைத் தாழ்த்தினாலும் இளையவேள் மட்டும் தனது வாளை ஓங்கியதால், கண்ணிமைக்கும்
நேரத்தில் பெரும்பிடுகர் பஞ்சணையிலிருந்து அவனது கையைப் பிடித்து அவன் வாள் நிலத்தில் விழ உதறினார். பிறகு அதைத் தனது காலால் உதைத்து அறை மூலைக்குத் தள்ளிவிட்டு இளைய வேளை நோக்கி, “சிறுவனே! இந்த
அரண்மனையில் நான் இடும் உத்தரவை மீறுபவர்கள் கிடையாது. எத்தனையோ போர்களில் வெற்றிபெற்ற உன் தகப்பனே என் உத்தரவை மீறவில்லை, கவனித்தாயா?” என்று வினவினார்.
இதற்கு இளையவேள் பதில் சொல்லுமுன்பு திகைத்து ஒரு கணம் நின்ற மாறன், “என்ன சொல்கிறீர்கள் தந்தையே?” என்று வினவினான் குழப்பம் தெரிந்த குரலில்.
பெரும்பிடுகர் முகத்தில் மகிழ்ச்சியின் சாயை நன்றாகவே படர்ந்தது. “தந்தையும் மகனும் இந்த அரண்மனையில் வாட் பயிற்சி செய்வது சகஜம்” என்று சுட்டிக்காட்டினார் பெரும்பிடுகர்.
“ஆம்”- மாறன் முகத்தில் குழப்பம் மேலும் பரவியது.
“நீயும் நானும் எத்தனையோ முறை பயிற்சி செய்திருக்கிறோம்.”
“ஆம்.”
“ஆகையால் இப்பொழுது நீயும் உன் மகனும் பயிற்சி செய்ததில் புதுமை ஏதுமில்லை.”
இதைக் கேட்டதும் மாறன் பரமேசுவரன் முகத்தில் வியப்பின் சாயை பெரிதும் விரியவே, “இவன் என் மகனா?” என்று வினவினான் வியப்பொலி குரலிலும் தெரிய.
மகன் சொற்கேட்ட பெரும்பிடுகர், “இளைய தலை முறையில் அறிவு வரவரக் குறைகிறது” என்று விசனப்பட்டுக் கொண்டார்.
மாறன் அவரையும் நோக்கி தன் மகனையும் நோக்கினான். “என் அறிவுக்கு என்ன குறைவு?” என்று வினவினான் எரிச்சலுடன்.
பெரும்பிடுகு முத்தரையர் தன் சுபாவமான இடிச்சிரிப்பை விட்டு மெல்ல நகைத்தார். “மகனையே அறியமுடியாத குறைவு. இவனைப் பார்த்த உடனேயே என் பேரனென்று உணர்ந்துகொண்டேன். உன்னால் பிள்ளையை
அறியமுடியவில்லை. இது அறிவின் குறைவா அல்லது அலட்சியத்தின் விளைவா?” என்று நகைப்பின் ஊடே கேட்ட பெரும்பிடுகர், “மாறா! சொந்த மகனை அறியமுடியாத நீ எதிரிகளைச் சரியாக எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறாய்?”
என்றும் வினவினார்.
தந்தையின் விளக்கத்துக்குப் பிறகு மாறன் தனது மகனை உற்று நோக்கினான். சினத்தினால் அதுவரை மறைந்திருந்த ரத்த பாசம் மெள்ள மெள்ள அவனது உணர்ச்சிகளை ஈர்க்கவே தனயனை அணுகினான் நிதானமாக. “என்னைத்
தொட வேண்டாம், நில் அப்படியே” என்ற இளையவேளின் சொல் அவன் காலைத் தேக்கியது.
“ஏன் தொடக்கூடாது? நான் உன் தந்தை” என்றான் மாறன் உக்கிரத்துடன்.
“என் தாயின் வாழ்வை அழித்தவர் நீங்கள்?” என்ற இளையவேளின் சொற்கள் மாறன் முகத்தில் துக்கச் சாயையைப் படரவிட்டது. “யார் சொன்னது அப்படி?” என்று வினவினான் மாறன் குரலிலும் துக்கம் தொனிக்க.
“மாரவேள், என் பாட்டனார்” என்றான் இளையவேள் மாறாத சீற்றத்துடன்.
“இந்தப் பாட்டனார் என்ன சொன்னார்?” என்று தந்தையைச் சுட்டிக்காட்டிக் கேட்டான் மாறன். இதைக் கேட்டும் இளையவேள் வாளாவிருக்கவே மாறன் முகத்தில் விவரம் புரியாதகளை ஒன்று படர்ந்தது. “இவரையும் கேட்டுப்
பார்ப்பதுதானே?” என்று சொன்னான் மகனை நோக்கி.
இதனால் சிறிது சந்தேகமும் சஞ்சலமும் அடைந்த இளையவேள், பெரும்பிடுகர் முகத்தை நோக்கினான். பெரும் பிடுகர் என்றுமில்லாத திருநாளாக துன்பப் பெருமூச்சு விட்டார். “இளையவேள், இல்லை, இளையமுத்தரையா…” என்று
துவங்கிய அவர் குரலில் பேரனை முத்தரையா என்று அழைத்ததில் பெருமை துலங்கிற்று. அந்தப் பெருமையுடன் சொன்னார். “சமுதாயங்கள் மோதும்போது போர்கள் நிகழும்போது, கதைகள் பல பிறக்கின்றன. வரலாறு சிறிது
மறைகிறது. வீரசமுதாயத்தில் செயல்களுக்குப் புதுக்கதைகளும் விபரீத எண்ணங்களும் கற்பிக்கப்படுகின்றன. களப்பிரரையும் அவரது சமுதாயத்தையும் குறைகூறும் மனிதர்கள் சமணத்தைப் போற்றி வளர்த்த அச்சுத விக்கிராந்தன்
எனும் களப்பிரனையும் அவன் செய்த நாட்டுப் பணியையும் மறக்கிறார்கள். அவனைத் தமிழ் நாட்டுப் புலவர்கள் போற்றியிருப்பதையும் கவனிப்பதில்லை. களப்பிரரும் அவர்கள் வழிவந்த முத்தரையரும் வீரர்களே தவிர,
காட்டுமிராண்டிகளல்ல. அருகில் உள்ள இரு வர்க்கங்கள் மோதும்போது சிறிது நாசமும், சில அட்டூழியங்களும் ஏற்படுவது இயற்கை. அப்படி ஏதாவது எங்கள் படையெடுப்பிலும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விபரீதம் எதுவும் நாங்கள்
வேண்டுமென்று செய்ததில்லை. உன் தாயை என் மகன் தூக்கி வந்தது உண்மை, அவள் அழகில் ஈடுபட்டு. ஆனால், அவள் இங்கு ராணிபோல் நடத்தப்பட்டாள் அதைப் புரிந்து கொள்ள அவளுக்குச் சக்தியில்லை. உன் தந்தை அவளைத்
திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்ட இரவிலிருந்து இரண்டாவது நாள் ஓடிவிட்டாள். அவளைத் திரும்பவும் அழைத்து வர மாறன் துடித்தான். அதற்குள் உறையூரில் சோழர் பலம் வலுத்துவிட்டது. நாங்கள் உட்புக
முடியவில்லை. அவன் அவளை நினைத்துப் பெரிதும் ஏங்கினான். அதனால் மூளை புரண்டு மூர்க்கனாகக்கூட மாறினான். பெண்ணின் பிரிவு யாரையும் மிருகமாக்கிவிடுகிறது…” என்ற பெரும்பிடுகர் சிறிது நிதானித்தார்.
“பெண்களைத் தூக்கி வந்து கற்பழிப்பதை நியாயம் போல் பேசினீர்களே சற்றுமுன்பு” என்று வினவினான் இளையவேள்.
பெரும்பிடுகர் பேரனை நன்றாக ஏறெடுத்து நோக்கினார். “எந்தப் படையெடுப்பிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றன. எப்பேர்ப்பட்ட மனிதன் மனமும் பெண்களைக் கண்டால் சபலப்படுகிறது. பெண்களைக் கண்டு
பலவீனப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. உன் தந்தை பலவீனப் பட்டான்…” என்ற பெரும்பிடுகன் குரலில் வெறுப்பு இருந்தது இல்லாவிட்டால் உன் தாயின் சித்திரத்தை எதற்காக அந்தச் சுவரில் தீட்டினான்? ஏன் அவன் வேறு யாரையும்
தூக்கிவரவில்லை? ஏன் அவன் இத்தனை ஆண்டுகள் மணங்கூடப் புரிந்த கொள்ளவில்லை?” என்று கேள்விகளை வீசிய பெரும்பிடுகர் மஞ்சத்தை விட்டு எழுந்த தந்தையையும் மகனையும் தனித்து விட்டு வெளியே சென்றார்.
அதுவரை வாயைத் திறந்துகொண்டு நின்ற பணிப்பெண்ணையும் உடன் வரச்சொல்லி அழைத்துக் கொண்டு நடந்தார்.
தனித்து விடப்பட்ட தந்தையும் மகனும் நீண்ட நேரம் மௌனமே சாதித்தனர். பிறகு மாறன் பரமேசுவரன் மஞ்சத்திற்குச் சென்று தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். அந்த நிலையில் சொன்னான், “இளையா!
இப்பொழுது என் தலையை நீ வெட்டிப்போடலாம். நான் தடுக்கமாட் டேன். உன் தாயின்மீது நான் கொண்ட காதல் வேகம் திரு மணத்துக்கு முன்பு அவளுடன் உறவாடவைத்தது. அவள் இன்னும் சில நாட்கள் தாமதித்திருக்கலாம்.
சந்திரலேகாவை ஆண்டிருப்பாள் அதன் ராணியாக” என்று.
இளையவேள் தந்தையை நோக்கினான். மனம் உடைந்து உட்கார்ந்திருந்த மாறனைக் கண்டதும், அவனைக் கொன்று தீர்த்து விடவும் பழிவாங்கவும் வந்த இளையவேளின் கல்மனமும் கரைந்தது. எதற்கும் அஞ்சாத மகாவீரனான தந்தை
ஏதோ அனாதைபோல் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அந்த நினைப்பின் விளைவாகத் தந்தையின் பக்கத்தில் மஞ்சத்தில் உட்கார்ந்தான். “எந்த முரடனிடமும் சில உயர்ந்த குணங்கள் இருக்கும்” என்பதைப்
புரிந்துகொண்டான் இளையவேள் அந்தச் சில விநாடிகளில். அந்த நிலையில் கேட்டான், “நீங்கள் விஜயாலயன் அரண்மனையைத் தாக்கியது உண்மையா?” என்று.
உண்மை என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டினான் மாறன்.
“அவர் ஊரில் இல்லாத சமயத்தில் அவர் மாளிகையைத் தாக்குவது தர்மமா?” என்று இரண்டாவது கேள்வியை வீசினான் இளையவேள்.
“அவர் இல்லையென்பது எனக்குத் தெரியாது. விஜயாலயனை ஒழித்துவிடத்தான் நான் போனேன். அவனில்லாததால் எதிர்ப்பட்ட மற்றவர்களை அழிக்க வேண்டியதாயிற்று” என்று மெதுவாகச் சொன்ன மாறன், “இப்பொழுது நீ
வந்துவிட்டதால் இருவருமாகச் சேர்ந்து விஜயாலயனை எதிர்க்கலாம்” என்று கூறினான்.
“அது அத்தனை சுலபமல்ல” இளையவேளின் சொற்கள் திட்டமாயிருந்தன.
“தெரியும் எனக்கு.”
“தெரிந்துமா புலியுடன் விளையாடப் பார்க்கிறீர்கள்?”
“விளையாடப் பார்க்கவில்லை. வேட்டையாடப் பார்க்கிறேன் புலியை. விஜயாலயன் சாதாரணப் புலியல்ல. புலியின் வேகத்துடன் அதன் தந்திரமும் அவனிடமிருக்கிறது. அவனை மேலோங்கவிட்டால் முத்தரையர் சகாப்தம் இந்த
சந்திரலேகாவில் முடிந்துவிடும்.”
“அதைத் தடுக்க என்ன செய்ய உத்தேசம்?”
“செய்ய உத்தேசமா? செய்து கொண்டிருக்கிறேன். சந்திரலேகா இப்பொழுது சாதாரண ஊரல்ல. படைத்தளம். இங்கு யாரும் நுழைவதோ நுழைந்து பிழைப்பதோ சுலபமல்ல. நீயே எப்படி நுழைந்தாய் என்பது எனக்குத் தெரிய வில்லை”
என்ற மாறன் கண்கள் கேள்வி கேட்பன போல் மகனை நோக்கின பக்கவாட்டில்.
“நேராக வாயில் பக்கம் நுழைந்துதான் வந்தேன். யாரும் தடுக்கவில்லை” என்ற இளையவேள், “ஒரு வேளை என்னை நீங்கள் என்று காவலர் நினைத்துவிட்டார்களோ?” என்று சற்று இரைந்தே சொன்னான். நான்
“அப்படித்தானிருக்க வேண்டும். இல்லாவிட்டால் யாரும் நுழைய முடியாத இந்த நகரத்தில் நீ மட்டும் எப்படி நுழைய முடியும்?” என்று கேட்ட மாறன், தனது மகன் தோளின் மீது ஆசையுடன் பலமான தனது கையைப் போட்டான். “சரி,
படுத்துக்கொள். நாளை பேசலாம்” என்றும் கூறினான். மகன் படுத்துக்கொள்ள ஒரு பஞ்சணையைக் காட்டினான்.
தந்தையின் கட்டளைப்படி படுத்த இளையவேளுக்கு அன்று நித்திரை வரவில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தன. இப்படி உறங்காமலே இரவைக் கழித்த இளையவேள், விடியற்காலையில் விழித்து சற்று
அப்பாலிருந்த பஞ்சணையில் படுத்திருந்த தந்தையைக் கவனித்தான். மாறன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் ஓசைப்படாமல் எழுந்திருந்து அரண்மனை வாயிலுக்கு வந்து படிகளில் இறங்கிச் சென்றான். அடுத்திருந்த நந்தவனம்
அவன் கண்களைக் கவரவே அங்கு சென்றான். அதைச் சுற்றி வருகையில் அங்கிருந்த சிறுகுளத்தைக் கண்டு அதன் படிகளில் இறங்க முயன்றான். ஆனால், காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான் இளையவேள். படியில் அவன்
பரமவிரோதி படுத்து நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.

Previous articleMohana Silai Ch 25 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here