Home Historical Novel Mohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

87
0
Mohana Silai Ch 27 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 27. சொந்த வீட்டுச் சிக்கல்

Mohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

முத்தரையர் அரண்மனை நந்தவனச் சிறுகுளப்படியில் இறங்க முயன்று, அதன் முதற்படியிலேயே படுத்திருந்த தனது பரம விரோதியான இதயகுமாரனைக் கண்டதும் இளையவேள் சட்டென்று முன்வைத்த காலைப் பின்வைத்து
நின்றான். இதயகுமாரன் மிக நிம்மதியாகத் தனது சொந்த வீட்டில் உறங்குவதுபோல் உறங்கிக் கொண்டிருந்ததையும், பயங்கர மான எதிரிகள் மத்தியில் இருக்கிறோமே என்ற அச்சம் அவன் முகத்தில் சிறிதளவும் இல்லாததையும், ஓரளவு
புன்முறுவல் கூட இதயகுமாரன் சுந்தர வதனத்தில் படர்ந்து கிடந்ததையும் கண்ட இளையவேள், எதிரிமீது பொறாமையே கொண்டான்.
“எப்படியும் விடியற்காலையில் காவலர் கண்டால், இவனை வெட்டிப் போடுவார்கள்” என்று ஒரு விநாடி நினைத்த இளையவேள், “இவனை எழுப்பி எச்சரித்தாலென்ன?” என்று நினைத்தான். இதயகுமாரனிடம் வாளிருப்பதையும்,
கச்சையில் கட்டப்பட்ட அந்த வாளும் அவன் துணைவனைப் போல அவன் பக்கத்தில் படுத்திருந்ததையும், தான் எழுந்து வந்த அவசரத்தில் வாளை இடையில் கட்டிக்கொள்ளாததையும் எண்ணியதால் அது புத்திசாலித்தனமல்ல என்று
முதலில் முடிவுக்கு வந்தாலும், அந்த முடிவை மாற்றிக் கொண்டு “இதயகுமாரா!” என்று மெதுவாக அழைத்தான்.
அந்த அழைப்பினால் மெள்ளக் கண்விழித்த இதயகுமாரன் மிக நிதானமாக எழுந்திருந்து குளத்தின் படிகளில் உட்கார்ந்திருந்துகொண்டு, “யார், சேரர் படைத்தலைவரா?” என்று வினவினான் இகழ்ச்சியுடன்.
அந்த இகழ்ச்சியை இளையவேள் லட்சியம் செய்யவில்லை. “இல்லை, சேரர் படைத்தலைவனாயிருந்தவன்” என்று திருத்தினான் இளையவேள்.
“இப்பொழுது முத்தரையர் படைத்தலைவரா?” என்று இதயகுமாரன் வினவினான்.
“ஆம்”- இளையவேளின் குரலில் வெறுப்பு இருந்தது.
“அடிக்கடி கட்சி மாறுகிறாற்போல் இருக்கிறது.”
“ஆம்.”
இதயகுமாரன் விழிகள் இளையவேளை நோக்கின வியப்புடன்.
“இதை ஒப்புக்கொள்ள வெட்கமாயில்லை?” என்று வினவினான், முதலில் ஏற்பட்ட வியப்பும் பிறகு உதயமான வெறுப்பும் கலந்த குரலில்.
“எதற்கு வெட்கம்?” என்று வினவிய இளையவேளின் குரலில் இகழ்ச்சி இருந்தது.
“கட்சி மாறியதற்கு.”
“இல்லை, வெட்கமில்லை.”
“ஏனோ?
“இது நாட்டின் குணம்.”
“உனது குற்றத்தை நாட்டின் மீது போட்ப் பார்க்கிறாயா?”
“நான் போடவில்லை. நடப்பதைச் சொல்கிறேன். சோழர்களும் பாண்டியர்களும் மாறி மாறிப் பல்லவரிடம் சேருவதும் படைத்தலைவர்களாகப் பணிபுரிவதும் இயல்பாகி விட்டது” என்று சுட்டிக்காட்டிய இளையவேள் “விஜயாலய
தேவரும் அதற்கு விலக்கில்லை” என்று கூறி நகைத்தான்.
இதயகுமாரன் இதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை. “உயர்வு தாழ்வுகள் அரசுகளில் சகஜம். அவர்கள் மாற்றத்தை கட்சி மாறுவதாகக் கூற முடியாது. ஆனால், உனக்கு அது புரியாது” என்று சமாளித்த இதயகுமாரன், எதிரியின்
இடையை நோக்கினான். “நீ வாளை எடுத்து வரவில்லையா?” என்றும் வினவினான்.
“இல்லை. நீ இங்கிருப்பாய் என்பது எனக்குத் தெரியாது. வாளில்லாவிட்டால் என்ன? கைகள் இருக்கின்றன” என்று கூறினான். கூறியதன்றி, மேலங்கியைக் கழற்றி, ஒரு புறம் எறிந்து விட்டு “நான் சித்தமாயிருக்கிறேன்” என்று
தெரியப்படுத்தவும் செய்தான்.
குளப்படியில் உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்தான் இதயகுமாரன் மிக அமைதியாக. எழுந்து தனது பக்கத்தில் இருந்த நீளமான வாளை எடுத்து குளத்தின் படியில் வைத்தான். இளையவேள் செய்தது போலவே தனது அங்கியையும்
கழற்றி நன்றாக மடித்து ஒருபுறமாக வைத்தான். படியிலிருந்து வெளிப்பட்டு கமதரைக்கு வந்தான்.
சமதரைக்கு அவன் வந்ததும் இரு எதிரிகளும் ஒருவரையொருவர் பல விநாடிகள் நோக்கிக்கொண்டு நின்றனர். அந்தச் சமயத்திலும் போரிட இஷ்டமில்லாமல் “இங்கு எதற்காக வந்தாய்?” என்று இளையவேள் வினவினான்.
“உன்னைக் கொல்வதற்குத்தான். ஆனால், அது முடியாது. உன்னைக் கொல்வதில்லையென்று மாரவேளுக்கு உறுதி கூறியிருக்கிறேன். ஆனால், கண்ணழகியைத் தொட்ட உன் கைகளை முறிப்பதற்கும், பார்த்த கண்களைப் பிடுங்கி
எறிவதற்கும் தடையில்லை” என்று கூறிய இதயகுமாரன், “சரி துவங்கு” என்று சொன்னான்.
அதற்குமேல் இளையவேள் காத்திருக்கவில்லை. தனது பெரிய பயங்கர உடலைக்கொண்டு எதிரியை மோதினான். தடித்து வலுத்த கைகளாலும் இதயகுமாரனை கட்டிப்பிடிக்க முயன்றான்.
சரேலென்று இளையவேள் மோதியவுடன் ஒரு விநாடி நிலைகுலைந்த இதயகுமாரன் வெகு வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு எதிரியின் கைவளையத்துக்குள் நுழைந்தான். அவனை அப்படியே இறுக்கி நசுக்கிவிடத்
தீர்மானித்த இளையவேள் தனது கைகளால் இதயகுமாரனின் உடலை வளைத்தான். ஏதோ இரண்டு இரும்புத்தூண்கள் தன்னைச் சுற்றுவது போன்ற அனுபவத்தைப் பெற்ற சோழநாட்டு வாலிபன் அந்தக் கரங்களுக்குள் நன்றாகவே
நுழைந்தான். மிகச்சுலபமாக எதிரி தன்னிடம் சிக்கிவிட்டதை உணர்ந்த இளையவேள், “இவனுக்கு உயிரிடம் ஆசை போய்விட்டது” என்று சொல்லிக் கொண்டு கைகளை இறுக்கினான்.
அந்தக் கைகளை இதயகுமாரன் தடுக்கவில்லை தனது கைகளால். கைகளுக்கு வேறு அலுவலிருந்ததன் விளைவாக, இதயகுமாரனின் மெல்லிய கரங்கள் முஷ்டியாகப் பிடிக்கப்பட்டு வேகத்துடன் பாய்ந்து இளையவேளின் வயிற்றில்
குத்தின. மற்போர்களில் பழகியவனான இதயகுமாரன், எதிரியின் வயிற்றில் இடம் தெரியாமல் குத்தவில்லை. உள்ளேயிருந்த கல்லீரலைக் குறிவைத்து ஒரு குத்தும், சிறு குடலை நோக்கி ஒரு குத்தும் குத்தவே இளையவேள் திடீரென
அகன்றான் எதிரியை விட்டு. அதற்குள் எதிரியின் முஷ்டி மார்புக்கும் வயிற்றுக்கும் இடையே வலது புறத்திலிருந்த இதய பீடத்தில் இருமுறை பாயவே, நல்ல பருமனான இளையவேளின் உடல் வியர்த்தது, மூச்சுத் திணறியது.
இப்படி மூச்சுத் திணறியதாலும், நல்ல மற்போருக்குப் பருமன் ஒன்றே பலமல்லவென்பதைப் புரிந்துகொண்டதாலும் இளையவேள் சற்றுப் பின்னடைந்து நின்றான். அந்தச் சமயத்தில் எதிரி தனது அவலநிலையைப் பயன்படுத்திக்
கொள்ளாமல் வாளா நிற்பதைக் கண்டதால் சினத்தின் சிகரத்தை எட்டிய அந்த முத்தரைய குமாரன் சரேலென்று சோழ வாலிபன்மீது பாய்ந்தான். அவன் பாய்வதை முன்கூட்டி எதிர்பார்த்த இதயகுமாரன், சிறிது பக்கவாட்டில் ஒதுங்கித்
தனது வலது காலால் எதிரி கால்களை மடக்கவே, நிலத்தில் விழுந்தான் இளையவேள் தடாலென்று. விழுந்ததும் உருண்டான் இதயகுமாரனிடமிருந்து தப்ப. அந்தச் சமயத்தில் இதயகுமாரன் வேகமாக இளையவேளின்மீது பாய்ந்து அவன்மீது
படுத்துக்கொண்டு, அப்படியே இளையவேளை நிலத்தில் அழுத்தி, தனது இரு கைகளாலும் அவன் கழுத்தை நெரித்தான்.
அந்தச் சமயத்தில் மாரவேளுக்குக் கொடுத்திருந்த சத்தியத்தை மறந்தான் இதயகுமாரன். வஞ்சியின் நந்தவனத்தில் கண்ணழகியின் நிலை அவன் கண்ணுக்கெதிரே எழுந்ததால் இளையவேளின் பெருங்கழுத்தைப் பிடித்து ஊட்டியையும்
திருகினான்.
இளையவேளின் கண்கள் அந்த இரும்புப் பிடியில் பிதுங்கிவிடும் நிலைக்கு வந்தன. அதில் மெள்ள அச்சமும் உதயமாயிற்று. தனது அந்திமகாலம் வந்துவிட்டதை உணர்ந்த இளையவேள், அப்பொழுதும் ஒரு தந்திரத்தில் இறங்கினான்.
“மாரவேள்! மாரவேள்!” என்று இரு முறை தனது பாட்டன் பெயரை உச்சரித்தான்.
அதைக் கேட்டதும் இதயகுமாரன் கைகள் அகன்றன, ஏதோ விசையால் அகற்றப்பட்ட யந்திரம்போல. அடுத்த விநாடி இதயகுமாரன் சரேலென்று தள்ளப்பட்டான் இளையவேளின் பெரும் உடலால். அதே உடல் சிறிய மலைபோல
இளையவேளின் மார்பில் உட்கார்ந்தது. அவன் பெரிய கைகள் இதயகுமாரனின் கழுத்தை எமப்பிடியாகப் பிடித்தன. இதயகுமாரன் நினைவை இழந்துவிடும் நிலைக்கு வந்தான். எமலோகத்தின் வாயில் எட்டப் புலப்படுவது போலிருந்தது
அவன் அகக் கண்களுக்கு. அந்தச் சமயத்தில்தான் வந்தது பெரும்பிடுகு முத்தரையர் குரல், “போதும், நிறுத்து” என்று.
இளையவேளின் கைகளை அந்த அதிகாரக் குரல் நீக்கியது இதயகுமாரன் கழுத்திலிருந்து. இதயகுமாரன் எழுந்து உட்கார்ந்து தனது கழுத்தைத் தடவிக்கொண்டான். பிறகு இளையவேளையும் நோக்கி, சற்று எட்ட நின்றிருந்த
பெரும்பிடுகு முத்தரையரையும் நோக்கினான். இளையவேளின் முகத்துக்கும் பெரும்பிடுகர் முகத்துக்கும் இருந்த ஒற்றுமை பெரும் அதிர்ச்சியைத் தந்தது இதயகுமாரனுக்கு. மாரவேளின் கதையின் மர்மம் மெள்ளப் புரிந்தது
சோழநாட்டு வாலிபனுக்கு.
அடுத்து உட்கார்ந்த நிலையிலிருந்த எழுந்து நின்ற இதயகுமாரன், “மிக்க நன்றி. என் உயிரைக் காப்பாற்றினீர்கள்” என்றான் பெரும்பிடுகரை நோக்கி.
முத்தரையர் பூபதியின் பெரிய இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. வியப்புடன் அவர் கண்கள் இதயகுமாரனை நோக்கின. பிறகு சற்று எட்டக் கிடந்த வாளை நோக்கின. “அது உன்னுடைய வாள்தானே?” என்று வினவின அவர்
உதடுகள்.
“ஆம்” என்றான் இதயகுமாரன், அவர் கேள்வியின் பொருள் புரியாமல்.
“ஆயுதம் இருக்கும்போது இவனை ஏன் கொல்லாமல் விட்டாய்?” என்று வினவினார் இதயகுமாரனை நோக்கி பெரும்பிடுகர்.
“அதற்குக் காரணம்…” என்று சொல்ல முற்பட்ட இளையவேளை பெரும்பிடுகர்கையின் ஒரு அசைப்பு நிறுத்தியது. “அவனே சொல்லட்டும்” என்று அவர் சொன்னார்.
“இளையவேளிடம் வாளில்லை” என்று காரணம் சொன்னான் இதயகுமாரன்.
“அதனால் மற்போரில் இறங்கினாய்?” என்று கேட்டார் பெரும்பிடுகன்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் இதயகுமாரன். பெரும்பிடுகர் நகைத்தார் பயங்கரமாக. “உன்னைக் கொல்ல ஒரு சிங்கம் வருகிறது, என்ன செய்வாய்?” என்று கேட்டார் முத்தரையர் பூபதி.
“வேலெறிந்து கொல்வேன்” இதயகுமாரன் பதில் திட்டமாக வந்தது.
“ஏன்?”
“அது மிருகம்.”
“மிருகத்துக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?”
“மனிதன் பேசுகிறான்…” என்று இதயகுமாரன் வாசகத்தை முடிக்கவில்லை.
“அதுதான் மனிதனின் ஒரே சொத்து. அதனால்தான் அவன் கெட்டுப் போகிறான்” என்ற பெரும்பிடுகர், “இருவரும் என்னுடன் வாருங்கள்” என்று உத்தரவிட்டு முன்னே நடந்தார். இருவரும் பேச வழியின்றிப் பின்தொடர்ந்தனர்.
அன்று காலையில் ஏற்பட்ட விநோத சம்பவங்களால் இதயகுமாரன் தனது வாளை எடுத்துக்கொள்ளவும் மறந்து பெரும்பிடுகரைப் பின்தொடர்ந்தான். சுற்று முற்றும் நோக்கவும் செய்தான் சந்திரலேகாவை. அழகிய
நந்தவனத்திலிருந்த மலர்களின் நறுமணம் எங்கும் பரவிக்கிடந்தது. ஆங்காங்கு மரங்கள் அடர்த்தியாயிருந்ததைக் கண்ட இதயகுமரன், முத்தரையர்களின் பாதுகாப்பு முறைகளை உள்ளூர சிலா கித்துக்கொண்டான். “எந்த ஆயுத
வண்டியும் இந்த மரக்கூட்டங்களைத் தாண்டி இந்த அரண்மனைப் பக்கம் வர முடியாது” என்று சொல்லிக்கொண்டான் உள்ளூர.
எங்கும் நடமாடிக்கொண்டிருந்த வீரர் கூட்டம் அந்த ஊருக்கு அளித்த பாதுகாப்பு, சாதாரண மனிதனுக்கு அச்ச மூட்டியிருக்கு மென்றாலும் வீரனான இதயகுமாரனுக்கு சந்துஷ்டியையே அளித்தது. நோய்வாய்ப்பட்டிருந்ததால்
அரண்மனைப் படிகளில் சிரமப்பட்டுப் பெருமூச்சுவிட்டு ஏறிய பெரும்பிடுகு முத்தரையரைக் கண்ட இதயகுமாரன் அவன்மகாவீரன் என்பதைப் புரிந்துகொண்டான். “கொலை, கொள்ளைகளில் ஈடுபடாதிருந்தால் முத்தரையர் பெரும்
அரசைத் தஞ்சையில் நிறுவியிருக்க முடியும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். “இவர்களை முறியடிக்கக்கூடியது இவர்களின் அதர்மமே தவிர, வீரத்தால், போரால் இவர்களை முறியடிக்க முடியாது” என்றும் மனத்துள் முடிவு
கட்டினான் இதயகுமாரன்..
இந்த நிலையில் பாட்டனுடனும் பேரனுடனும் முத்தரையர் மாளிகைப்படியின் உச்சிக்கு வந்த இதயகுமாரன், சுற்றும் முற்றும் நோக்கினான். அப்பொழுது சூரியோதய வேளை வந்துவிட்டதால் அரண்மனைப் பெரும் சதுக்கத்தில்
அணிவகுப்புக்கு வீரர் திரளளாயினர். அந்தப் பெரும் சதுக்கம், அரண்மனை, எல்லாம் தமக்குச் சொந்தமென்பதை எண்ணிய இதயகுமாரன் உள்ளே உரிமையின் வேகம் கொந்தளிக்க சட்டென்று திரும்பி மாளிகைக்குள்ளே நுழைந்தான்.
அங்கு பெரும்பிடுகர் தனது அறைக்கு வந்ததும் பணிப்பெண்ணை அழைத்து, “இவனுக்குச் சகல சௌகரியங்களையும் செய்து கொடு. பிற்பகல் உணவின்போது சந்திக்கிறேன்” என்று உத்தர விட்டான். இளையவேளை மட்டும்
தன்னுடன் நிறுத்திக் கொண்டான்.
இதயகுமாரனுக்கு அந்த அரண்மனையில் ராஜோப சாரம் நடந்தது. அவன் வாவிக்கரையில் விட்டுவந்த அவன் வாளையும் உணவு நேரத்துக்கு முன்பு அவனிடம் சேர்ப்பித்தாள் பணிப்பெண். பிற்பகல் உணவு அனைவருக்கும்
பெரும்பிடுகர் அறையிலேயே பரிமாறப்பட்டது. உணவு அருந்திய சமயத்தில் உள்ளே நுழைந்த மாறன் பரமேசுவரன் இதயகுமாரனை ஒருமுறை உற்றுப்பார்த்து, “இவனைத்தானே சொன்னீர்கள்?” என்று தந்தையைக் கேட்டான்.
“ஆம்” என்றார் பெரும்பிடுகர். “மகனே!தமிழகத்தின் சிறந்த வீரனை, நமது எதிரியைப் பார்” என்று மாறனிடம் கூறினார்.
மாறன் ராட்சஸ விழிகள் வியப்பால் மலர்ந்தன. “சிறந்த வீரனா! நமது இளையவேளை விடவா?” என்று வினவினான் மாறன் இதயகுமாரனையும் தனது மகனையும் மாறிமாறி நோக்கி.
பெரும்பிடுகர் உணவுத் தட்டிலிருந்த சாதத்தை ஒரு பிடி கையிலெடுத்துக்கொண்டார். வாயில் போடுமுன்பு, இளைய முத்தரையனைக் கொல்ல இருந்தான் சற்று முன்பு” என்று சர்வ சாதாரணமாக அறிவித்துவிட்டு சாதத்தின் பெரு
உருண்டையை வாயில் திணித்துக் கொண்டார்.
மாறன் கண்கள் வியப்புடன் நோக்கின இதயகுமாரனை. பிறகு தந்தையை நோக்கி, “அப்படியானால் இவன் ஏன் உயிருடனிருக்கிறான்?” என்று வினவினான்.
“வீரனாகையால்” என்றார் பிடுகர்.
“இவன் வீரத்தை மெச்சுகிறீர்கள்?” என்று சினத்துடன் கேட்டான் மாறன்.
“ஆம். அது வீரனின் குணம்” என்று தம்மைத்தாமே சிலாகித்துக் கொண்டார் பெரும்பிடுகர்.
“இவன் எப்படி இந்த ஊருக்குள் நுழைந்தான்?” மாறனின் கேள்வி உக்கிரமாயிருந்தது.
“தெரியாது.”
“ஏன் வந்தான்?”
“சொந்த ஊரைப் பார்க்க.”
“சொந்த ஊரா!” மாறன் முகத்தில் உக்கிரம் மறைந்து விவரிக்க இயலாத வியப்பு படர்ந்தது.
“ஆம். ஒரு காலத்தில் சந்திரலேகா இவன் தந்தைக்குச் சொந்தம். யார் தெரியுமா இவன் தந்தை?” என்று கேட்டார் பெரும்பிடுகர் மகனை நோக்கி.
மாறன் தந்தையை நோக்கினான் குழப்பத்துடன். “உங்களுக்குத்தான் சகலமும் தெரியுமே. சொல்வதுதானே” என்று கூறினான.
“நீ கொன்றதாகச் சொன்னாயே, விஜயாலயன் படைத்தலைவன்…” என்ற பெரும்பிடுகர் மெள்ள நகைத்தார்.
“அவனுக்கு இவன்…?” மாறன் வினவினான் சங்கடத்துடன்.
“மகன்” என்ற முத்தரையர் பூபதி, “உன்னைக் கொல்ல வந்திருக்கிறான். பழிவாங்க வந்திருக்கிறான் என்று சொல்வது பொருந்தும்” என்று கூறிப் பெரிதாக நகைத்தார் கட்டிடம் அதிரும்படியாக.
பெரும்பிடுகர் விவரத்தைக் கேட்ட மற்ற மூவர் நிலையும் மூன்று விதமாயிருந்தது. யாரை அழிக்கவும் அஞ்சாத தனது தந்தைக்கு வியாதியால் மூளை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மாறன் நினைத்தான். இளையவேளுக்கு
எல்லாமே புதிதாயிருந்ததால் பிரமையடைந்து உட்கார்ந்திருந்தான். இத்தனையையும் அறிந்தும் தன்னை எதற்காகக் கொல்லாமல் விட்டிருக்கிறார் முத்தரையர் தலைவர் என்று எண்ணிப் பெரும்பிடுகரின் புத்தியில் உலாவும் திட்டத்தை
அவிழ்க்க முயன்று முடியாததால், எது நடந்தாலும் நடக்கட்டும் என்று உணவைச் சுவைத்துச் சாப்பிட முற்பட்டான் இதயகுமாரன்.

Previous articleMohana Silai Ch 26 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here