Home Historical Novel Mohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

115
0
Mohana Silai Ch 28 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 28. பெரும்பிடுகர் இதயம்

Mohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மற்ற மூவர் மனநிலையும் மூன்று திக்குகளில் சென்றதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் மேற்கொண்டு உணவை அருந்துவதில் முனைந்தார் பெரும்பிடுகு முத்தரையர். நிதானமாகவும் சிறிதும் பதட்டப்படாமலும் ஏதும்
நடக்காதது போன்ற தோரணையுடனும் உணவருந்தி பணிமகள் கொண்டுவந்த கிண்ணத்தில் கையலம்பிய முத்தரையர் பூபதி தனது ஆசனத்திலிருந்து எழுந்து மற்ற மூவரையும் நோக்கினார் ஒரு விநாடி. “விழித்துக்கொண்டு
உட்கார்ந்திருக்க வேண்டாம், உணவை முடித்துக்கொள்ளுங்கள். வெளியே அணிவகுப்பைப் பார்க்கிறேன். அங்கு வந்து சேருங்கள்” என்று உத்தரவிட்டுச் சென்றார், தமது அறையை விட்டு.
அரண்மனைப் பெரும் சதுக்கத்தில் வீரர்கள் அணி வகுத்து நின்றனர். சிலர் புரவி வீரர்கள், சிலர் காலாட்படையினர். இவர்களுக்கு முன்பாகப்பட்டத்து யானை சர்வாலங்காரத்துடன் நின்றிருந்தது. பெரும்பிடுகர் படிகளின் முகப்புக்கு
வந்து மேற்படியில் உட்கார்ந்து கொண்டதும் வீரர்களின் அணிவகுப்பு மெள்ள நகர்ந்தது. பிறகு துரிதமாக இயங்க முற்பட்டது. அந்தச் சமயத்தில் உணவை முடித்துக் கொண்டு வந்து விட்ட மாறன் பரமேசுவரனும், இளையவேளாயிருந்து
இளைய முத்தரையனாக மாறிவிட்ட அவன் மகனும், இதயகுமாரனும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவைக் காலடிச் சத்தத்தினாலேயே உணர்ந்த பெரும்பிடுகர் இதயகுமாரனை அழைத்துத் தமது பக்கத்தில் உட்காரும்படி சைகை
காட்டினார்.
பெரும்பிடுகரின் பெருந்தன்மை இதயகுமாரனின் மனத்தைத் தொட்டுவிட்டதால், “மகாராஜா! தங்களுக்குச் சமதையாக நான் உட்காருவது சரியல்ல, பின்னால் நிற்கிறேன்” என்றான்.
பதிலுக்குப் பெரும்பிடுகரின் இரும்பு உலக்கை போன்ற கை பின்னால் வந்து இதயகுமாரனின் கையைப் பற்றி இழுத்து பலவந்தமாக அவனை உட்கார வைத்தது.
“இது…” என்று இழுத்தான் இதயகுமாரன்.
“வீரனுக்கு எந்த இடமும் தகுந்த இடம். தவிர நான் உத்தரவிட்டு அதை மறுத்துப் பிழைத்தவர் சந்திரலேகாவில் கிடையாது” என்றார் பெரும்பிடுகர். அத்துடன் சொன்னார், “சோழ வாலிபனே! இந்த அணிவகுப்பைப் பார். இதுமாதிரி
இன்றுவரை நீ பார்த்திருக்கமாட்டாய்” என்று.
அதற்குப் பிறகு அவர் பேசவில்லை. இரும்பால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பயங்கரப் பதுமைபோல் உட்கார்ந்திருந்தார். அணிவகுப்பு ஏதோ பெரிய யந்திரம் போல் நகர்ந்தது. படையின் முன்னணியிலிருந்த காவல் படையினர்,
வேல்களை எறியும் பாணியில் கைகளை உயர்த்திக் கொண்டும் கண்களை எதிர்ப்புறம் நோக்கிக் கொண்டும் ஒரே சீராக நகர்ந்தனர். அப்படி நகர்ந்தபோது ஒரு வீரனை இன்னொருவன் இடிக்கவில்லை. ஒரு வீரன் பின்தங்கவோ
ஒருவன் அதிகமாக முன்னேறிவிடவோ இல்லை. ஏதோ நூல் பிடித்தது போல் ஒரே மாதிரியாக இடம் விட்டு நகர்ந்தனர். சுமார் நானூறு வேல்கள் அந்தரத்தில் அசைவது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டது.
சூரியகிரணங்களால் அவற்றின் கூர்மையான நுனிகள் பளபளத்தபோது சூரியனையும் தோற்கடிக்கும் நானூறு நக்ஷத்திரங்கள் கீழே இறங்கிவிட்டன போல் தோன்றியது இதயகுமாரனுக்கு.
காலாட்படை சென்றதும் புரவிப்படை இயங்கியது. முதலில் சிறிது அசைவு, அடுத்து காற்றின் வேகத்தில் நானூறு புரவிகள் சுழன்று சுழன்று சென்றன அந்த சதுக்கத்தில். புழுதி எழும்பக்கூடாதென்பதற்காக சதுக்கத்தில் புல்
அளவோடு வளர்க்கப்பட்டிருந்தபடியால் புரவிகள் சறுக்கவோ மண்ணை
எழுப்பி மன்னன் கண்ணை மறைக்கவோ இல்லை. திடீரென்று புயல் சுழல்வது போல் அணிவகுப்பு சுழன்றது. வீரர்கள் வாட்களை உயர்த்தியது ஒரே சீராகவும் ஒரே சமயத்திலும் இருந்ததாலும், புரவிகளின் வேகம்
அசாத்தியமாயிருந்ததாலும், நானூறு வாட்களும் திடீரென அந்தரத்தில் சுழல்வது போலிருந்தது. அந்த நானூறு வாட்களும் மூன்று முறை சுழன்றபிறகு புரவிகள் படிகளின் அடியில் ஒன்றுக்குப்பின் ஒன்றாகச் செல்ல, வீரர்கள்
வாட்களைத் தாழ்த்தி வணக்கம் தெரிவித்து எதிரிலிருந்த காட்டில் மறைந்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் அசையாமல் நின்ற பட்டத்து யானை பெரிதாகப் பிளிறியது. நேராகப் படிகளின் அடிக்கு வந்து மண்டியிட்டு பெரும்பிடுகரை வணங்கி அப்படியே பின்னால் நடந்து சென்றது.
அணிவகுப்பு முடிந்து படைப் பிரிவுகள் இரண்டும், பட்டத்து யானையும் சதுக்கத்திலிருந்த மறைந்த பின்பும் பெரும்பிடுகர் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. அவர் மனத்தில் சந்துஷ்டி நிறைந்து கிடந்தது. அவர்
தனது கையால் இதயகுமாரன் முதுகைத் தடவினார். “வீரனே, உன் பெயர் என்னவென்று சொன்னாய்?” என்று வினவினார்.
“தங்களுக்குத் தெரிந்ததுதான். இருப்பினும் சொல்கிறேன், இதயகுமாரன்” என்றான் இதயகுமாரன்.
“சரியான பெயர்” என்றார் பெரும்பிடுகர்.
“பெயரில் என்ன இருக்கிறது?” என்று இதயகுமாரன் இடக்கத்தைக் காட்டினான்.
“ஏனில்லை? இதுவரையில் யாரும் ஈர்க்காத என். இதயத்தை நீ ஈர்த்துவிட்டாய்” என்றார் பெரும்பிடுகர்.
அப்பொழுது பின்னாலிருந்து உறுமினான் மாறன் பரமேசுவரன், “ஏன், இவனைத் தத்து எடுத்துக்கொள்வது தானே” என்று.
“செய்யலாம். மகனும் பேரனும் இல்லாதிருந்தால் செய்யலாம். எவ்வளவு வீரர்கள் இருந்தாலும் இந்த நகரத்துக்கு இப்பொழுது தேவை. விஜயாலயன் இதன்மீது பாய சமயம் பார்த்திருக்கிறான்” என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்த
பெரும்பிடுகர், திரும்பி பின்னால் நின்ற மகனையும்
பேரனையும் நோக்கினார்.
இருவர் முகத்திலும் கோபத்தின் குறி அளவற்று இருந்தது. அந்த சினத்துடன் கேட்டான் மாறன் பரமேசுவரன், “இந்த ஊருக்குள் அனுமதியின்றி நுழைவோரை நாம் என்ன செய்வது வழக்கம்?” என்று.
“வெட்டிப் போடுவது வழக்கம்” என்றார் பெரும்பிடுகர் சர்வ சாதாரணமான குரலில்.
“அப்படியானால் அவன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்”- மாறனின் அடுத்த கேள்வியும் உக்கிரத்துடன் வெளிவந்தது.
“இதை நீ ஏற்கனவே கேட்டாய். பதிலும் சொல்லிவிட்டேன்.”
“இந்த ஊருக்குள் வரும் எதிரி வீரர்களுக்கெல்லாம் இதேமாதிரி உபசாரந்தானா?”
“இவன் சாதாரண எதிரியல்ல.”
“எத்தகைய எதிரி?”
“உன் மகன் உயிரை வாங்காத எதிரி. வாளிருந்தும் அதை இவன் பயன்படுத்தவில்லை. மற்போரில் கொன்றிருப்பான். நான் தடுத்ததால் நிறுத்தினான்.”
இந்த உரையாடல் வரை மௌனமாயிருந்த இளையவேள், “அப்படியானால் அவனை சகல மரியாதைகளுடன் பரிசு கொடுத்து சோழ நாட்டுக்கு அனுப்புங்களேன். உங்கள் ஜன்ம வைரியை அழைத்து வரட்டும்” என்று சீறினான்.
பெரும்பிடுகர் பேரனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது சிந்தித்தார். “அப்படி இவனை அனுப்பி விடுவதற்கில்லை. இவன் வீரத்தைப் பற்றித் திட்டமாக எனக்கு எதுவும் தெரியாது. உன் கழுத்தை நெரித்ததைப் பார்த்தேன்.
ஆனால், நீ இருந்த நிலை சந்தர்ப்பத்தால் அசட்டையால், யாருக்கும் வரும். இன்று மாலை இவன் கதியை முடிவு செய்வோம் நமது வழக்கமான முறையில்” என்று கூறினார்.
“அது வேண்டாம்” என்று தடுக்க முயன்றான் மாறன்.
“ஏன், உன் மகனிடம் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்று வினவினார் பெரும்பிடுகர்.
“இருக்கிறது. இருந்தாலும்…” என்று மாறன் தயங்கினான்.
போதும் என்பதற்கு அடையாளமாகக் கையால் சைகை செய்தார் பெரும்பிடுகர். பிறகு இதயகுமாரனை நோக்கித் திரும்பினார். “இதயகுமாரா! இந்த ஊருக்குள் உத்தரவின்றி நுழைபவன் ஒற்றனாயிருந்தால் வெட்டிப் போடுவோம்.
வீரனாயிருந்தால் என்னிடமுள்ள சிறந்த வீரனுடன் சண்டை செய்து வெற்றிபெற்றால் தப்பவிடுவோம். பின்னால் சொன்ன சந்தர்ப்பம் உனக்கு அளிக்கப்படுகிறது. இன்று மாலை நீயும் இளைய முத்தரையனும் இதே சதுக்கத்தில் என் வீரர்
முன்பு சந்திக்கிறீர்கள்” என்று கூறிவிட்டு மகனையும் இளையவேளையும் வழிவிடச் சொல்லி உள்ளே சென்று விட்டார்.
மற்ற மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். இன்று மாலை உன் வாளின் திறமையைப் பார்க்கிறேன்” என்று சீறிவிட்டுத் திரும்பிச் சென்றான் இளையவேள். அவன் தந்தை அவனைத் தொடர்ந்தான்.
தனித்து விடப்பட்ட இதயகுமாரன் நீண்டநேரம் படியிலேயே உட்கார்ந்துவிட்டான். சுற்றிலுமிருந்த சந்திரலேகாவின் அமைப்பையும் அதுவரை நடந்த அணிவகுப்பையும் எண்ணினான். “இந்த எதிரியிடம் போரிடுவது விஜயாலயருக்குப்
பெருமைதான்” என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டான். பிறகு அவனும் எழுந்து அரண்மனைக்குள் சென்றான். அன்று அவனுக்குப் பணிப்பெண் பணிவிடைகளைச் செய்தாள்.
மாலையும் வந்தது. விளக்குகள் ஆங்காங்கு எரியத் தொடங்கின. அந்தச் சமயத்தில் இதயகுமாரன் அறையை அடைந்த பணிப்பெண், “உங்களுக்காகப் பெரும்பிடுகர் காத்திருக்கிறார் அரண்மனை சதுக்கத்தில்” என்றாள்.
இதயகுமாரன் உடையணிந்து வாளை கச்சையில் கட்டிக் கொண்டு புறப்பட்டு வெளிப்படிகளுக்கு வந்தான். அங்கு காலை போல் பெரும்பிடுகர் மேற்படியில் உட்கார்ந்திருந்தார். சதுக்கத்தில் வீரர்கள் அரைச் சக்கர வட்டமாக
நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில் இளையவேள் நின்றிருந்தான், நீண்ட வாளை இடைக்கச்சையில் கட்டியவண்ணம். அவனிருந்த வட்டத்திற்குப் படிகளில் இறங்கிச் சென்றான் இதயகுமாரன். தரையை அணுகியதும் வாளை
உருவி பெரும்பிடுகரை நோக்கித் தாழ்த்தித் தலையையும் வணங்கினான். இளையவேள் எந்த மரியாதையையும் செய்யவில்லை. ஆத்திரத்துடன் சதுக்கத்தில் போரிடும் இடத்துக்குச் சென்று வாளை உருவிக்கொண்டு நின்றான்.
இதயகுமரன் தங்கள் போருக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் கண்டு பிரமித்தான். சுற்றிலும் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. வீரர்களின் அரைச்சக்கர வளைவும் போர் நிலத்தை அறுதியிட்டுக் காட்டியிருந்தது. அதைப்
பார்த்துக்கொண்டே இளையவேள் இருக்குமிடத்திற்கு வந்தான். அவன் சித்தமாகுமுன்பே உருவிய வாளுடன் அவன்மீது இளையவேள் பாய்ந்து விட்டான். இதயகுமாரன் தொலைந்து விட்டானென்று அனைவரும் எண்ணினர்.
ஆனால், இளையவேளின் வாளை மின்னல் வேகத்தில் தடுத்தது இதயகுமாரன் வாள். அடுத்து வாளுடன் வாள் மோதத் தொடங்கியது. இளையவேள் வெகு உக்கிரமாகப் போரிட்டான். தனது வீரர்களுக்கு முன்னால் அவர்கள் பிற்காலத்
தலைவன் எப்பேர்ப்பட்டவன் என்பதைக் காட்ட தனது சக்தியையும் யுக்தியையும் இணைத்துப் போரிட்டான்.
ஆனால், இதயகுமாரன் வாள் எந்த வேகத்தையும் பதட்டத்தையும் காட்டவில்லை. நிதானமாகவும் திட்டத்துடனும் இயங்கியது. எந்த இடத்தில் இளையவேளின் வாள் தோன்றினாலும் அங்கு அதைத் திருப்பிவிட்டது. இளையவேளின்
மார்புக்கு நேராக இருமுறை கிடைத்த இடை வெளியைக்கூட இதயகுமாரன் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை. நீண்ட நேரம் எதிரியின் வாளை விளையாடவிட்டுச் சரேலென அந்த வாளைத் தனது வாளால் சுழற்றினான்
இதயகுமாரன். அதனால் இளையவேளின் கையைவிட்டு விண்ணில் கிளம்பிய வாள் திரும்பி நிலத்தில் விழ இருந்தபோது அந்த வாளின் பிடியைத் தனது இடதுகையில் பிடித்தான். இரு வாட்களுடன் இளையவேள் முன்பு நின்றான்.
பெரும்பிடுகர் உற்சாகமாகக் கையைத் தட்டினார். அதுதான் தவறாயிற்று. திடீரென மாறனிடமிருந்து பறந்த குறுவாள் இதயகுமாரன் மீது பாய்ந்துவிட்டது. அச்சம் துவங்கிய அதிர்ச்சிக் கூச்சல் அந்த சதுக்கத்தை ஆட்கொண்டது.
அத்தனைக்கும் பதட்டப்படாமல் பெரும்பிடுகர் எழுந்து நின்றார். “அந்த வீரனை அசைக்காமல் எடுத்து வாருங்கள். மருத்துவனுக்கு உடனடியாகச் சொல்லியனுப்புங்கள்” என்று உத்தரவிட்டார்.
இதயகுமாரனை இரு வீரர்கள் தாங்கி வந்ததும் மேற்படியிலிருந்த பெரும்பிடுகன் அவனைத் தனது இரு கைகளிலும் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

Previous articleMohana Silai Ch 27 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here