Home Historical Novel Mohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

102
0
Mohana Silai Ch 29 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 29. இதயகுமாரன் உளறல்

Mohana Silai Ch 29 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

விரர்கள் தூக்கிவந்த இதயகுமாரனை இரு கைகளிலும் குழந்தையைத் தாங்குவது போல் தாங்கி உள்ளே எடுத்துச் சென்ற பெரும்பிடுகு முத்தரையன், வழியில் நின்றிருந்த மகனை ஏறெடுத்தும் பாராமல் தனது அறைக்கு நேராகச்
சென்று, தான் படுக்கும் பஞ்சணையில் படுக்கவைத்தார். உடனடியாகச் சுடுநீர் கொண்டுவரும்படி அங்கு வந்த பணிப்பெண்ணுக்குக் கட்டளையிட்டு இதயகுமாரன் இதயத்தருகே பாய்ந்திருந்த குறுவாளைப் பிடுங்கிவிட்டு அதே
குறுவாளால் அந்த வாலிபன் அங்கியையும் கிழித்தார். குபுகுபுவென்று வந்திருந்த ரத்தத்தையும் அதே அங்கியால் துடைத்து, குறுவாள் இதயத்தில் பாயவில்லையென்பதைப் புரிந்து கொண்டதால் சிறிது ஆசுவாசப் பெருமூச்சும்
விட்டார். பணிப்பெண் நீர் கொண்டுவந்ததும் காயத்தைக் கழுவி, மேற்கொண்டு ரத்தம் சேதமடையாதிருக்க தனது அங்கியொன்றை எடுத்துக் கிழித்து அதில் வைத்துக் கட்டவும் செய்தார். இவற்றையெல்லாம் அவர் செய்து முடித்த சிறிது
நேரத்துக்குள் மருத்துவரும் வந்து சேர்ந்தார்.
அவரை ஏறெடுத்து நோக்கிய பெரும்பிடுகு முத்தரையர் “இவனைப் பிழைக்க வைக்கவேண்டும்” என்று அவருக்கு உத்தரவிட்டார், இதயகுமாரன் உயிருக்கு அவரே பொறுப்பாளி போல.
இதைக் கேட்ட மருத்துவர் சிறிது நடுங்கினாலும் அதை வெளிக்காட்டாமல், கட்டிலில் உட்கார்ந்து இதயகுமாரன் காயத்தைப் பரிசோதித்தார் கட்டுக்களை அவிழ்த்து. “கத்தி ஆழமாகப் பாய்ந்திருக்கிறது, ஆனால், இதயத்தைத்
தொடவில்லை” என்று அறிவித்துவிட்டு, பணிப்பெண் கொண்டு வந்த நீரைவிட்டு காயத்தை மீண்டும் கழுவி தமது பெரும் பையிலிருந்து ஏதோ ஒரு மருந்தை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, அதை நான்காக மடித்து காயத்துக்குள்
செருகிக் கட்டுப் போட்டார். பிறகு பணிப்பெண்ணை நோக்கி, “தேன் இருக்கிறதா?” என்று கேட்டார்.
பெரும்பிடுகர் முகத்தில் சினம் துளிர்த்தது. இம்மாதிரி காயத்துக்குச் சிகிச்சை செய்ய தேன் வேண்டுமென்பது உமக்கு முன்னதாகத் தெரியுமல்லவா?” என்று கேட்டார் மருத்துவரை.
“தெரியும்” என்று பதில் சொன்னார் மருத்துவர்.
“அப்படியானால் அதையும் நீர் ஏன் கொண்டுவர வில்லை?”- பெரும்பிடுகர் கேள்வியில் மூர்க்கத்தனம் பலமாக ஒலித்தது.
“இங்கு இருக்குமென்று நினைத்தேன்”-மருத்துவர் குரலில் கிலி இருந்தது.
“மருந்தும் இங்கு இருப்பதாக ஏன் நினைத்துக்கொள்ளவில்லை?” என்று வினவினார் பெரும்பிடுகு முத்தரையர்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் விழித்தார் மருத்துவர். “சரி சரி, வேலையைப் பாரும்” என்று உத்தரவிட்ட பெரும்பிடுகர், பணிப்பெண்ணைத் திரும்பி நோக்கினார். அந்த ஒரு நோக்கைக் கண்டதும் பறந்து சென்ற
அவள் விநாடி நேரத்தில் தேன் கொண்டு வந்தாள். மருத்துவர் ஒரு மாத்திரையைத் தேய்த்து இதயகுமாரன் வாயில் புகட்டினார். பிறகு முத்தரையர் தலைவரை நோக்கி, “இன்னும் சில விநாடிகளில் இவன் கண்ணைத் திறப்பான்” என்று
சொன்னார்.
“நல்லது” என்றார் பெரும்பிடுகர்.
“எது மகாப் பிரபு?” மருத்துவர் குரலில் சந்தேகம் இருந்தது.
“இவன் கண்ணைத் திறப்பது. இல்லாவிட்டால் நீர் கண்ணை மூடவேண்டியிருக்கும்” என்ற பெரும்பிடுகர் இதயகுமாரனை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றார்.
சுமார் பத்து விநாடிகளுக்குள் இதயகுமாரன் கண்ணைத் திறந்தான். பெரும்பிடுகரைப் பார்த்தபோது அவன் விழிகளில் வியப்பு தெரிந்தது. அவர் குனிந்து “அசங்க வேண்டாம்” என்று எச்சரித்தபோது அவன் வியப்பு பத்து மடங்கு
அதிகமாயிற்று. அதைக் கவனித்தும் கவனிக்காதது போல மருத்துவர் மீது தமது பெரும் விழிகளைத் திருப்பிய பெரும்பிடுகர், “மருத்துவரே! இந்த வாலிபன் எழுந்து நடக்க எத்தனை நாளாகும்?” என்று விசாரித்தார்.
“குறைந்தபட்சம் பத்து நாட்கள்” என்றார் மருத்துவர்.
“சரி. அந்தப் பத்து நாளும் இங்கு வந்த சிகிச்சை செய்யும்” என்று கூறிய முத்தரையர், மருத்துவர் போக அனுமதி கொடுத்தார்.
மருத்துவர் வாயிற்படியைத் தாண்ட முயன்ற சமயத்தில் மாறன் பரமேசுவரன் அங்கு தோன்றி வழியை அடைத்துக் கொண்டு நின்றான். “அவருக்கு வழி விடு” என்று இரும்புக் குரலில் பெரும்பிடுகர் கூறினார். அதனால் சிறிது
அகன்று வழி விட்டு உள்ளே வந்த மாறன் பரமேசுவரன், தந்தையை உக்கிரம் மிகுந்த கண்களுடன் நோக்கினான்.
“முத்தரையர் மன்னர் படுக்கையில் சோழநாட்டவன் படுத்திருக்கிறான்” என்றான் மாறன் கொதித்த உணர்ச்சிகளைச் சொற்களில் கொட்டி.
தமது மகனை மிகுந்த அலட்சியத்துடனும் வெறுப்புடனும் நோக்கினார் பெரும்பிடுகர், “வீரன் படுத்திருக்கிறான்” என்று மகன் வாசகத்தை லேசாகத் திருத்தினார்.
அந்தத் திருத்தத்திலேயே ஏதோ பயங்கரம் இருந்திருக்க வேண்டும் பேயறைத்தது போல் மாறன் முகம் சரேலென மாறியது. “உங்கள் வியாதி உங்கள் புத்தியையும் பிடித்திருக்கிறது” என்றான் மூர்க்கத்தனமாக.
“ஆம்”- பெரும்பிடுகர் குரலில் இகழ்ச்சி மிதமிஞ்சிக் கிடந்தது.
“என்ன ஆம்?”
“புத்தி குழம்பிவிட்டது.”
“நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்!”
“ஆம், புத்தி சரியாயிருந்தால் நீ இன்று செய்த கேவலச் செய்கைக்கு இத்தனை நேரம் உயிருடனிருந்திருக்க மாட்டாய்…” வாசகத்தை முடிக்கவில்லை பெரும்பிடுகர், முடிக்காத வாசகத்தில் தொனித்த இகழ்ச்சி அளவற்றதாயிருந்தது.
“நான் உங்கள் ஒரே மகன்” என்றான் மாறன்.
“அந்தப் பாதுகாப்பு இருப்பதால்தான் உன் உயிர் இன்னும் உடலில் இருக்கிறது” என்றார் பெரும்பிடுகர்.
“உங்கள் பேரனை இவன் கொன்றிருப்பான்.”
“கொன்றிருக்கலாம், கருணை என்ற பலவீனம் இவன் கைகளைத் தேக்கிவிட்டது. சர்வ முட்டாள் இவன்.”
“உங்களுக்கு மகன் வேண்டாம், பேரன் வேண்டாம். இவன் வேண்டுமாக்கும்?”
இதற்குப் பெரும்பிடுகர் பதில் சொல்லவில்லை.
“இவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று மாறன் மீண்டுமொரு கேள்வியை வீசினான்.
“வீரர்களுக்குள்ள சம்பந்தம்” என்ற பெரும்பிடுகர், மகன் போகலாம் என்பதற்குக் கையால் சைகை செய்தார்.
பிறகு இதயகுமாரன் பக்கத்தில் உட்கார்ந்தார். நன்றாகக் குனிந்து, “இதயகுமாரா!” என்று அழைத்தார்.
இதயகுமாரன் மெள்ளக் கண்களை விழித்தான். “உம்” என்று பலஹீனமாகப் பதில் சொன்னான்.
“பேச சக்தியிருக்கிறதா?” என்று கேட்டார் பெரும்பிடுகர்.
“உம்” மெதுவாக வந்தது பதில்.
அவன் நிலை பெரும்பிடுகருக்கு நன்றாகப் புரிந்தது. அவன் பேசுவது அபாயம் என்பதைப் புரிந்து கொண்டதால் அசைந்த அவன் உதடுகளை தமது பெரும் கையால் மூடிவிட்டு, “பேசாதே! நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள்.
இந்த அரண்மனையிலிருக்கும் வரை உனக்கு ஆபத்தில்லை. அதற்கு மேல் உனக்கு நான் பாதுகாப்பு அளிக்க முடியாது. உன்னை இந்த செந்தலைக்குள் யார் புக விட்டது என்று பிறகு சொல். அவனுடன் உன்னை அனுப்பி வைக்கிறேன்”
என்று அவன் காதுக்கருகில் ரகசியமாகச் சொல்லிவிட்டு பணிப்பெண்ணை அழைத்தார்.
பணிப்பெண் வந்ததும், “நான் வரும்வரை இவனைக் கவனித்துக்கொள். மாறனையும் அவன் மகனையும் அருகில் நெருங்கிவிடாதே” என்று உத்தரவிட்டு வெளியே சென்றார்.
அவர் உத்தரவு அவளுக்கு வியப்பை அளிக்கவில்லை. அத்தனை முரட்டுத்தனத்திலும் பெரும்பிடுகர் மகாவீரர் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். ஆகவே தலையை மட்டும் அசைத்தாள். கட்டிலில் இதயகுமாரன் அருகில் உட்கார்ந்து
கொண்டாள்.
அவளை நோக்சி முறுவல் செய்த பெரும்பிடுகர் அவன் மயக்கத்திலிருக்கிறான்” என்றார்.
“அதனாலென்ன?” என்று வினவினாள் பணிப்பெண்.
“அழகாகவும் இருக்கிறான். ஆகையால் நீயும் மயங்கி விடாதே” என்று லேசாக நகைத்த பெரும்பிடுகர் வெளியே சென்றார். அங்கிருந்து மீண்டும் அரண்மனையின் படிகளுக்கு வந்து மேற்படியில் உட்கார்ந்து கொண்டார். அப்படி அவர்
இரண்டாம் முறை உட்காரும் பழக்கமில்லாததால் வீரர்கள் நால்வர் படிகளில் ஏறிவந்து, “என்ன கட்டளை மகாராஜா?” என்று கேட்டார்கள்.
“இன்று வாட்போர் செய்தானே ஒரு வாலிபன்.” என்று துவங்கினார் பெரும் பிடுகர்.
“ஆம் மகாராஜா!’
“அவனை யார் சந்திரலேகாவுக்குள் அனுமதித்தது?” என்று பெரும்பிடுகர் வினவினார்.
“தெரியவில்லை மகாராஜா” என்றான் ஒரு வீரன்.
“இதுவரை நமது காவலை மீறி இருவர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார் பெரும்பிடுகர்.
“ஒருவரை இளவரசனென்று நினைத்தோம்” என்றான் இன்னொரு வீரன்.
“அப்படி ஏமாறக் காரணமிருக்கிறது. ஆனால், மற்றொருவன் எப்படி வந்தான்?”
“தெரியவில்லை மகாராஜா.”
“நாளைக் காலைக்குள் தெரிய வேண்டும்.”
“சரி மகாராஜா.”
“தெரிந்தால், உள்ளே விட்டவனை என்னிடம் அழைத்து வாருங்கள். இல்லாவிட்டால் பிரதான வாசல் காவலரைச் சிறையிலடைத்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்” என்ற பெரும்பிடுகர் அத்துடன் அவர்களை அனுப்பிவிட்டு
சிந்தனையில் ஆழ்ந்தார்.
இரவு ஏறிப் பல நாழிகைகள் வரை அங்கேயே உட்கார்ந்திருந்த பெரும்பிடுகர் மீண்டும் அறைக்குள் வந்தார். பணிப்பெண்ணை நோக்கி “எப்படி இருக்கிறான்?” என்று விசாரித்தார்.
“நல்ல ஜுரம் வந்திருக்கிறது” என்றாள் பணிப்பெண்.
“சரி.”
“தவிர, உளறுகிறான் ஜுரவேகத்தில்.”
“என்ன உளறினான்?”
“சொற்கள் புரியவில்லை” என்றாள் பணிப்பெண். அந்தச் சமயத்தில் மீண்டும் உளற ஆரம்பித்தான் இதயகுமாரன். அவன் உச்சரித்த ஆரம்பச் சொல் அப்படியே அசர வைத்தது பெரும்பிடுகரை. உளறலில் பொருளிருப்பதைப் புரிந்து

.
கொண்டார் முத்தரைய பூபதி. கதவைத் தாளிடும்படி பணிப் பெண்ணுக்கு உத்தரவும் இட்டார்.

Previous articleMohana Silai Ch 28 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 30 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here