Home Historical Novel Mohana Silai Ch 32 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 32 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

85
0
Mohana Silai Ch 32 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 32 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 32 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 32. பெருந்தேவி

Mohana Silai Ch 32 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

அன்றாடம் படைகள் அணிவகுத்துச் செல்லும் திடலுக்கு எதிர்ப்புறமுள்ள காட்டிலிருந்து புறப்பட்டுத் தம்மை நோக்கி வந்துகொண்டிருந்த உருவத்தைக் கண்டதும் காலம் வேகமாக மாறிவருகிறது என்று எண்ணமிட்ட பெரும்பிடுகர்
முகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் கலந்து உறவாடின. இந்த நிலை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தால் முத்தரையர் சிற்றரசர்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது என்ற நினைப்பால் சற்றுப் பெருமூச்சும்
விட்டார், செந்தலைச் சிற்றரசின் அதிபதி.
மேலும் அவர் கண்கள் காட்டைக் கடந்து அணி வகுப்புத் திடலையும் கடந்து தானிருந்த அரண்மனைப் படிகளின் மீதும் ஏறத் துவங்கிவிட்டதைப் பார்த்ததும் அவர் இதழ்களில் புன்முறுவல் நன்றாக விரிந்தது. “பெருந்தேவி! வா” என்று
சற்று இரைந்து அவர் அழைத்ததும், அழைத்த பின்பு சிரித்ததும் வந்த பெண்ணுக்கு வியப்பைத் தரவே “பணிப்பெண் எப்பொழுது பெருந்தேவியானாள்?” என்று வினவினாள் அவள்.
பெரும்பிடுகர் தமது ராட்சஸக் கண்களை எதிரே கீழ்ப் படியில் நின்ற பணிப்பெண்மீது ஓட்டினார் இரண்டே விநாடிகள். அதற்குப் பிறகு கேட்டார், “உன் பெயர் என்ன?” என்று.
“தேவி” என்ற பணிப்பெண், “இத்தனை நாள் அந்தப் பெயரைச் சொல்லியே அழைத்ததில்லையே. பெண்ணே என்றுதானே அழைப்பீர்கள். இப்பொழுது பெயர் திடீரென உங்கள் நினைப்புக்கு வந்துவிட்டது. அதற்கு முன்பாக ஒரு ஒட்டும்
போடுகிறீர்கள்” என்றும் சொன்னாள்.
அவள் பேச்சுக்குப் பதிலேதும் கூறாத பெரும்பிடுகர், “இப்படி உட்கார்” என்று தமது பக்கத்தில் இடத்தைக் காட்டினார்.
“நான் உட்காரவேண்டிய இடம் அதுவல்ல” என்று கூறிய பணிப்பெண் அவர் உட்கார்ந்திருந்த படிக்குக் கீழ்ப்படியில் அவர் பாதத்துக்கருகில் உட்கார்ந்து கொண்டாள்.
அப்படி உட்கார்ந்த அவள் தலையை மிகுந்த அன்புடன் தடவிக் கொடுத்த பெரும்பிடுகர், “பெருந்தேவி!” என்று ஏதோ சொல்லத் துவங்கியதும் அவரைக் குறுக்கே மறித்த பணிப்பெண், “நான் பெருந்தேவியல்ல, வெறும் தேவி” என்று
சற்றுக் கோபத்தைக் காட்டினாள்.
“வெறும் தேவிதானா?”- பெரும்பிடுகர் கேள்வியில் விஷமம் இருந்தது.
“ஆம்”- பணிப்பெண்ணின் குரலில் கண்டிப்பு இருந்தது.
“அப்படியானால் வெல்லம் போட்ட தேவியல்ல?” என்ற பெரும்பிடுகர் பெரிதாக நகைத்தார்.
பணிப்பெண்ணின் முகம் சிவந்தது. தமது மனைவி காலமான பிறகு எந்தவித உற்சாகத்தையும் காட்டாத பெரும்பிடுகர் அன்றைக்கு வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் பேச முற்பட்டதைக் கண்டதும் பணிப்பெண் வியப்புக்கும்
வெட்கத்துக்கும் உள்ளானாள். “வெல்லம் போட்ட தேவியா! அப்படியானால் நான் இனிக்கிறேனா உங்களுக்கு?” என்றும் கேட்டாள் குனிந்த தலையுடன்.
“எனக்கும் என்றும் இனித்தாய். அது பெண் தகப்பனுக்கு இனிக்கும் இனிப்பு. அதிலென்ன சுகமிருக்கிறது? இன்று இன்னொருவனுக்கும் இனித்திருக்கிறாயே, அதில்தான் விஷயமிருக்கிறது” என்றார் பெரும்பிடுகர்.
“யாருக்கு?” என்று பணிப்பெண் வினவினாள் சீற்றத்துடன்
“ஆதித்தனுக்கு” இதைச் சொல்லி பெரும்பிடுகர் இடியென நகைத்தார்.
அதுவரை ஏதோ பேசிக்கொண்டு போன பணிப்பெண்ணின் முகம் குங்குமச் சிவப்பாகச் சிவந்தது. “என்ன உளறுகிறீர்கள்?” என்று கேட்டாள் அவள் தலை குனிந்த நிலையில்.
“நான் உளறும் வழக்கம் கிடையாது” என்றார் பெரும்பிடுகர்.
“வேறு யார், நானா?”
“இல்லை ஆதித்தன்.”
“சோழ தேவர் மகனா?”
“வேறு யார் உன்னிடம் கொஞ்ச முடியும்?”
“அவர் எதற்காக என்னைக் கொஞ்ச வேண்டும்?”
“இதென்ன கேள்வி. உன்னைக் கொஞ்சாமல் என்னையா கொஞ்சுவான்? அவன் விடுவித்தது என்னையா?”
“என்னை அவர் விடுவித்ததாக யார் சொன்னது?”
“யார் சொல்ல வேண்டும்? அவனிடமிருந்து நீ திரும்பியதிலிருந்தே தெரியவில்லையா?”
இதற்குப் பதிலேதும் சொல்லவில்லை பணிப்பெண். முத்தரைய பூபதியே கேட்டார், “ஆதித்தன் உன்னைத் தன்னுடன் வரும்படி அழைத்திருப்பானே?” என்று.
“ஆம், அழைத்தார்” என்றாள் பணிப்பெண், கீழ்ப் படிகளில் கண்களை ஓடவிட்டு.
“மணம் புரிவதாகவும் சொல்லியிருப்பான்” என்றார் பெரும்பிடுகர்.
பதிலேதும் சொல்லவில்லை பணிப்பெண் நடந்ததையெல்லாம் நேரில் பார்த்தது போல் பெரும்பிடுகர் கூறியதை நினைத்துப் பார்த்ததால் வியப்பின் உச்சகட்டத்தை எய்தினாள் அவள். “சோதிடம் உங்களுக்குக் கைவந்த கலை என்பது
தெரிகிறது” என்று முணுமுணுத்தாள் அவள்.
“சோதிடமல்ல, மனோதத்துவம்” என்று திருத்திச் சொன்னார் பெரும்பிடுகர்.
“உண்மையில் மனோதத்துவத்தைப் பெரும்பிடுகர் நன்றாக அறிந்திருக்கிறார்” என்று உள்ளூர எண்ணினாள் பணிப்பெண் தேவி. அதன் விளைவாக அன்று சிறையில் தான் சோழ இளவரசனைச் சந்தித்ததிலிருந்து நிகழ்ந்ததெல்லாம்
அவள் சிந்தையில் உலாவலாயிற்று. ஆதித்தன் சிறையில் தன்னைத் திடீரென்று கட்டிப்பிடித்து மூச்சுத் திணறும்படி அணைத்து, பிறகு மாறனிடமிருந்து தன்னைப் புரவியைப் பாய்ச்சிப் பிடுங்கி புரவி மீது கடத்திப் பறந்தது, ஊரின்
எல்லையைத் தாண்டு முன்பே தன்னை இறக்கியது ஆகிய அனைத்தும் அவள் மனத்தில் வலம் வந்தன.
“இறங்கியதும் அவர் எத்தனை பரிவு காட்டினார். மாறனிடமிருந்து பலவந்தமாகத் தூக்கிய சமயத்தில் கிழிந்த எனது மேலாடையை எத்தனை நாகரீகமாகச் சரிப்படுத்தினார். வேறு யாராயிருந்தாலும் அந்த நிலையைப் பயன்படுத்தி
கொண்டிருப்பார்களே. அப்பா! என்ன லாவகமாகத் தாவணியை இழுத்துப் போர்த்தினார்! கிழிந்த மேலாடைப் பகுதியை உள்ளுக்குள் நன்றாகத் திணித்து மறைத்தபோது அவர் கை… உம்… பட்டதே! அதுகூடத் தெரியவில்லை அவருக்கு.
பாவம்! களங்கமற்றவர் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதருண்டா! அவர் கைபட்டது அவருக்குத் தெரிந்ததோ இல்லையோ, எனக்குத் தான் பிராணனே போய்விட்ட மாதிரி இருந்தது. அதுதான் போகட்டும்; என்னை எதற்காக
மறுபடியும் தூக்கி வைத்து நீரை எடுத்து முகத்தில் தெளித்தார்?
‘இப்பொழுது எப்படியிருக்கிறது என்று எதற்காகக் கேட்டார்?’- என்று நடந்த காட்சிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தாள் பணிப்பெண் தேவி. அடுத்து நடந்ததை அணு அணுவாக எண்ணியதால் அவள் வதனத்தில் ஆனந்தம்
மிதமிஞ்சிப் படர்ந்தது. குளக்கரைக் காட்சிகள் மேலும் தொடர்ந்தன.
முகத்தில் நீர் தெளித்த ஆதித்தன் வினவினான். “உன் மூச்சு பெருமூச்சாக ஏன் வருகிறது?” என்று. அத்துடன் அவள் முந்தானையை எடுத்து முகத்தையும் துடைத்தான். “ஆதித்தன் இருக்கும் போது அச்சப்பட ஏதுமில்லை” என்றும்
சொன்னான்.
“நேரமாகிறது. வீரர்கள் உங்களைத் தொடருவது நிச்சயம்” என்றாள் பணிப்பெண்.
“வீரர்களைக் கண்டு அஞ்சவில்லை. உன்னைக் கண்டு தான் அஞ்சுகிறேன்” ஆதித்தன் மெள்ள முறுவல் கொண்டான்.
“என்னைக் கண்டா?”
“ஆம்” ஏன்? அத்தனை பயங்கரமாயிருக்கிறேனா?”
“நான் சம்பந்தப்பட்டவரை அப்படித்தான்.”
இதைக் கேட்டதும் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள் அவள்.
“தவறாக நினைக்க வேண்டாம். உன் அழகு பயங்கரமானது. நான் அடியோடு நினையாதது. முத்தரையர் பெண்களுக்கு வீரமுண்டு என்று கேட்டிருக்கிறேன். அப்படியே பார்ப்பவரை விழுங்கிவிடும் பயங்கர அழகு இருக்குமென்று
இன்றுவரை எனக்குத் தெரியாது” என்று சொன்ன ஆதித்தன், அவளுக்கு முன்பு நீரில் இறங்கி கீழ்ப் படியில் நின்று கொண்டான்.
ஆதித்தன் கண்கள் அவள் கண்களுடன் கலந்தன. “உன் பெயரென்ன பெண்ணே?” என்று அவன் உதடுகள் ரகசியமாகக் கேட்டன.
“தேவி!” – அவள் இதழ்கள் விரிந்து பெயரை மெதுவாக உச்சரித்தன.
“தேவி! என்ன அழகான பெயர்! உன் பிற்கால அந்தஸ்தையும் விளக்குகிறது” என்றான் ஆதித்தன்.
அவள் கருவண்டு விழிகளில் ஆச்சரிய ரேகை படர்ந்தது. பிற்கால அந்தஸ்தா!” என்று வியப்புடன் அவள் வினவினாள்.
“ஆம் தேவி” என்றான் ஆதித்தன். அந்த தேவியை மிக அன்பமாக உச்சரித்தான்.
“என்ன அந்தஸ்தோ?”
“ராணியாகும் அந்தஸ்து.”
“யாருக்கு ராணி?”
“எதற்கு என்று கேட்கவேண்டும்.”
“எதற்கு என்றா?”
“ஆம்.”
“சரி; எதற்கு?”
“சோழ நாட்டுக்கு.”
இதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த தேவி குளப்படியின் முனையில் நின்றிருந்ததால் சற்று ஆடி விழப்போனாள் உணர்ச்சி மிகுதியால். கீழ்ப்படியில் நின்ற ஆதித்தன் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அடுத்த விநாடி
அவளை இறுக்கிய வண்ணம் அவள் காதுக்கருகில் குனிந்து “தேவி! சோழ நாட்டு தேவியாக உனக்கு இஷ்டமா?” என்று வினவினான்.
“இஷ்டமில்லை” என்று அவள் உதடுகள் முணு முணுத்தன.
“ஏன் தேவி?”
“நாடு புருஷனல்ல, பெண். தாய் நாடு என்றுதான் அழைக்கிறோம்.”
ஆதித்தன் அவளைச் சற்றுப் பின்னுக்குச் சாயவிட்டு இடையை மாத்திரம் இரு கைகளால் சுற்றிய நிலையில் “என்னைப் பார்” என்றான் கடுமையான குரலில்..
பார்த்தாள் தேவி. “எனக்கு தேவியாக உனக்கு இஷ்டமா?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை. கண்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும். சரேலென்று ஆதித்தன் பொய்த்தாடி மீசைகளைக் களைத்து எறிந்தான். அவள் கண்கள் சொன்ன பதில் உதடுகளுக்கு அவஸ்தையை அளித்தது. ஆதித்தனின்
இதழ்கள் அவள் மென்மையான உதடுகளில் முரட்டுத்தனமாக அழுந்தின. பிறகு கன்னங்களிலும், கழுத்திலும் மாறி மாறிப் பதிந்தன. அந்த சிகிச்சைக்குப் பிறகு சொன்னான், “புறப்படுவோம்” என்று.
“எங்கு?” உதடுகள் இன்பலாகிரியுடன் அந்த ஒற்றைச் சொல்லை உதிர்த்தன.
“உறையூருக்கு.”
“நான் வரமுடியாது.”
“ஏன்?”
“காரணங்கள் இரண்டு. ஒன்று, முத்தரையர் பெண்ணான தேவி சோழ இளவரசனைக் காப்பாற்றினாள். அதனால் அவன் அவளை மணந்தான் என்ற இரண்டாம்பட்ச மனைவி உரிமையை நான் விரும்பவில்லை. நீங்கள் முத்தரையரை
வெற்றிகொண்டு என்னை அழைத்துப் போக வேண்டும். அப்பொழுதுதான் நம் இருவருக்குமே மதிப்பு.”
“சரி; இன்னொரு காரணம்?”
“பெரிய முத்தரையர் என் தந்தையைப் போன்றவர். அவர் உடல் நிலை சரியில்லை. அவரை விட்டு நான் வர முடியாது.”
ஆதித்தன் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. அவள் இடையைப் பிடித்து அணைத்துக்கொண்டு குளப்படிகளில் ஏறிப் புரவி மீது அவளை ஏற விட்டான். பிறகு தானும் ஏறி கடிவாளத்தைப் பிடித்து புரவியை செந்தலையை
நோக்கித் திருப்பினான். அவள் எத்தனை தடுத்தும் கேட்கவில்லை அவன். அவளை முகப்புக் காட்டில் விட்டபின்பே சென்றான். போகும் போது அவன் தலை கவிழ்ந்திருந்தது. பெரும் கவலையைக் காட்டியது. கவலை தன்னைப் பற்றி
என்பதை உணர்ந்ததால் தேவியும் பெருமூச்சு விட்டாள்.
பெரும்பிடுகர் காலடியில் உட்கார்ந்திருந்தபோது இத்தனையும் அவள் சிந்ததையில் வலம் வரவே பெருமூச்சும் வெளிவந்தது அவள் நாசியிலிருந்து. “பெருந்தேவி!” என்று பெரிய முத்தரையர் மீண்டும் அழைத்து அவள் தலையைக்
கோதி விட்ட போதுதான் அவளுக்குச் சுரணை வந்தது. அவர் பெருந்தேவி என்று அழைத்ததை இம்முறை அவள் ஆட்சேபிக்கவில்லை. தலையைச் சற்றுத் திருப்பினாள். அதைப் பெரும்பிடுகர் தமது முழங்காலில் சார்த்திக்கொண்டார்.
முதுகையும் செல்லமாகத் தடவினார்.
பெரும்பிடுகரின் முரட்டு சுபாவத்தில் இத்தகைய ஒரு மென்மையும் உண்டு என்பதை அன்றுதான் அவள் உணர்ந்தாள். ஆனால் பெரும்பிடுகர் போக்கினால் பெரும் அனர்த் தங்கள் அவர் குடும்பத்தில் விளையக்கூடும் என்பதை
உணர்ந்திருந்ததால் அவள் அழகிய தேகத்தில் சிறிது நடுக்கமும் உண்டாயிற்று.

Previous articleMohana Silai Ch 31 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 33 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here