Home Historical Novel Mohana Silai Ch 34 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 34 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

73
0
Mohana Silai Ch 34 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 34 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 34 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 34. மன்னனும், இரு செல்வங்களும்…

Mohana Silai Ch 34 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

அச்சுதப் பொற்கொல்லராயிருந்து அச்சுதப் பேரறையராக மாறிவிட்ட சோழநாட்டு முதலமைச்சர் புது முடிச்சு, புதுச் சிக்கல் என்று எதைச் சொல்கிறார் என்பது விஜயாலயனுக்குப் புரியாவிட்டாலும், அதைப் பற்றி அவன்
லவலேசமும் விசாரிக்காமல் புதல்வனான ஆதித்தன் வரவுக்காகக் காத்திருந்தான். உப்பரிகைப் படிகளை அனாயாசமாகக் கடந்து வந்து ஆதித்தன் பெரும் உவகையுடன் அறைக்குள் நுழைந்து “அப்பா!” என்று அன்புடன் அழைத்துக்
கொண்டே விஜயாலயனை அணுகவே அவன் ஆதித்தனை இறுக அணைத்துக் கொண்டார்.
சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட ஆதித்தன் வாலிப வயதை எட்டியுங்கூட அவனை விஜயாலயன் சிறு குழந்தையாகவே பாவித்து வந்ததால் அவன் சில நாட்கள் வெளியூர் போய் வந்தாலும் அவனைக் குழந்தைபோல்
அணைப்பது சோழ தேவனுக்கு வழக்கமாயிருந்தாலும், கண்ணழகிக்குப் புதுமையாயிருந்ததால், “அப்பா! அண்ணன் இன்னும் சிறு குழந்தையல்ல” என்று சுட்டிக் காட்டினாள்.
அதை அப்பனோ மகனோ கவனித்ததாகத் தெரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகே இருவரும் பரஸ்பர அணைப்பிலிருந்து பிரிந்தார்கள். பிரிந்ததும் கண்ணழகியை நோக்கிய ஆதித்தன், “அப்பா! இவள்தானே…” என்று கேட்க
முற்பட்டதும் “உன் தங்கை” என்று கண்ணழகி வார்த்தையை முடித்தாள், சிறிது நகைக்கவும் செய்தாள்.
“எதற்காக நகைக்கிறாய்?” என்று வினவினான் ஆதித்தன்.
“குழந்தையும் தந்தையும் பிரிந்துவிட்டதைக் கண்டு நகைத்தேன்” என்றாள் கண்ணழகி.
“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான் ஆதித்தன்.
“எனக்கும் அவர் தந்தைதான். இதுவரை அவர் என்னை இப்படி அணைத்ததில்லை” என்றாள் கண்ணழகி.
“நீ பெண்…”
“அதனாலென்ன?”
“உன்னை அவர் அணைக்க முடியாது.”
“வயது வந்தபின் உங்களை அணைக்கலாமா?”
“நான் ஆண்.”
“அதனால் தனி உரிமைகள் உண்டு போலிருக்கிறது?”
“ஆம். ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனையோ வித்தியாசமுண்டு.”
இதைக் கேட்ட கண்ணழகி மீண்டும் நகைத்தாள். “அண்ணா! இதை இத்தனை நாள் கழித்துத்தான் புரிந்து கொண்டீர்களா?” என்றும் வினவினாள்.
தனது குழந்தைகள் தர்க்கத்தை அதுவரையில் கேட்டுக் கொண்டிருந்த விஜயாலயன், “ஆதித்தா! கண்ணழகியிடம் வம்பு வைத்துக்கொள்ளாதே. அவளைப் பேச்சில் வெல்ல யாராலும் முடியாது” என்றார், புன்முறுவலும் கொண்டார்.
ஆதித்தன் தனது தந்தையை நோக்கினான் உற்று. “அப்பா! தங்கை இத்தனை அழகாயிருப்பாளென்று நீங்கள் சொல்லவில்லையே?” என்று வினவினான்.
“வஞ்சி நகரில் இவளைச் சந்திக்கு முன்பு எனக்கே தெரியாது” என்றான் விஜயாலயன்.
“வஞ்சி நகர்ப் பெண்களெல்லோருமே வாயாடிகளோ?” என்று வினவினான் ஆதித்தன்.
அதுவரையில் வாளாவிருந்த அச்சுதர் உரையாடலில் கலந்து கொண்டு செயலிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஆதித்தன் சரேலென்று சக்கர வட்டமாகச் சுழன்று அச்சு தரை நோக்கினான். “எங்கேயிருக்கிறார்கள்?” என்று வினவினான்.
அச்சுதர் இளவரசன் திகைக்கும்படியாக பதில் கூறினார், “எங்கும் இருக்கிறார்கள். ஆனால், முத்தரைய பெண்கள் செயலில் மிக வல்லவர்கள் என்று கேள்வி” என்று.
ஆதித்தன் சில விநாடிகள் பேசாமல் திகைத்து நின்றான். “நீங்கள் சொல்வதை விளக்கமாகச் சொல்லலாம்” என்றான் திகைப்பை உதறிக்கொண்டு.
“இப்பொழுது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று அச்சுதர் வினவினார்.
“செந்தலையிலிருந்து.”
“நேராகவா?”
“இல்லை, ஒரு நாள் தாமதித்து வருகிறேன்.”
“ஏன்?”
இளவரசன் சிறிது சிந்தித்தான். “ஒருவர் ஆபத்தில் சிக்காதிருக்கிறாரா என்று அறியவேண்டியிருந்தது” என்று சொன்னான் சிந்தனையின் ஊடே. அவன் சிந்தையில் எழுந்து மோகன நடை நடந்தாள் முத்தரையர் பணிப்பெண். அதனால்
அவன் பார்வை எங்கோ போய்விட்டதாகத் தெரிந்ததால் அடுத்த கேள்வியை வீசினார் அச்சுதர். “யாரவர்?” என்று.
இதற்குப் பதிலில்லை இளவரசனிடமிருந்து. அச்சுதரே சொன்னார், “இளவரசரே! உங்களைத் தப்புவித்தது செயலிலும் வீரத்தைக் காட்டும் ஒரு பெண். அவளை முத்தரையர் தண்டிக்காதிருக்கிறார்களா என்பதை அறிய தங்கினீர்கள்”
என்று கூறினார்.
திடுக்கிட்டு சுயநிலைக்குத் திரும்பினான் ஆதித்தன். “அச்சுதரே! என் மீதும் வேவு பார்க்கிறீரா?” என்று கேட்டான்.
“அது என் கடமை” என்றார் அச்சுதர்.
“கடமையா!”
“ஆம். இளவரசர் சொல்லாமல் நாட்டைத் துறந்து எதிரி எல்லைக்குச் சென்றுவிடும் போது அவரையும் அவர் நலத்தையும் கண்காணிப்பது எனது கடமை. காணாமற்போன இதயகுமாரனைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை
அனுப்பினேன். அப்பொழுது உங்கள் கதையும் தெரிந்தது” என்ற அச்சுதர் “இனி இந்தக் குடும்பப் பேச்சில் கலந்து கொள்வது தவறு. எதற்கும் சகலத்தையும் ஒளிக்காது தந்தையிடம் சொல்லுங்கள்” என்று அறையிலிருந்து போகத்
திரும்பினார்.
“சகலத்தையும் என்றால் எதைப்பற்றிக் கூறுகிறீர்கள்?” என்று ஆதித்தன் சிறிது கோபத்துடன் கேட்டான்.
அறையிலிருந்து போக முயன்ற அச்சுதர் திரும்பி இளவரசரை நோக்கினார். “புது முடிச்சைப் பற்றி” என்றும் சொன்னார்.
“புது முடிச்சா?” என்று ஆதித்தன் ஏதும் புரியாமல் விழித்தான்.
“உங்களுக்கும் முத்தரையர் மகளுக்கும் ஏற்பட்டிருக்கும் புதுப் பிணைப்பு. அவளை நீங்கள் மறந்துவிடுவது நல்லது. இல்லையேல் சிக்கல்கள் பல ஏற்படும்” என்று சொல்லம்பு களை வீசிய அச்சுதர், மன்னனுக்குத்
தலைவணங்கிவிட்டு அறையை விட்டு அகன்றார்.
அவர் சென்ற பின்பு அந்த அரண்மனையில் மௌனம் நிலவியது. நீண்ட நேர மௌனத்துக்குப் பிறகு அந்த நிலையைக் கண்ணழகியே உடைத்தாள். “அண்ணா! அவள் பேரழகியா?” என்று விசாரித்தாள் மெதுவாக.
ஆதித்தன் பதில் சொல்லவில்லை. கண்ணழகி அண்ணனுக்கு அருகில் வந்து அவன் தோள் மீதுகையை வைத்தாள். “ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய் அண்ணா? வீரர்கள் வெளியிடங்களில் காதல் கொள்வது வரலாற்றில் நிரம்பிக்
கிடக்கிறதே. இதில் மறைவுக்கு ஏதுமில்லையே!” என்று ஆறுதலாகச் சொன்னாள்.
“எதிரி மகள்” என்றான் ஆதித்தன்.
“உன்னிடம் காதல் கொண்ட பின்பு அவள் எப்படி எதிரி மகளாவள்? இந்த வீட்டு எஜமானி அல்லவா?” என்றாள் கண்ணழகி.
“இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த விஜயாலயன், “ஆதித்தா!” என்று மகனை மெதுவாக அழைத்துவிட்டுப் பக்கத்தில் இருந்த பஞ்சணையில் அமர்ந்து கொண்டான்.
அவனை இரு குழந்தைகளும் அணுகி அவன் முன்பாக நின்றுகொண்டார்கள். “அப்பா!” என்றான் ஆதித்தன்.
“நீ எதற்காகச் செந்தலை சென்றாய்?” என்று வினவினான் விஜயாலயன்.
“நீங்கள் வஞ்சியைக் கைப்பற்றச் செல்வதாகச் சொல்லிச் சென்றீர்கள். அடுத்து நாம் கைப்பற்ற வேண்டியது தஞ்சை என்பதால் அங்குள்ள நிலைமையைக் கவனிக்கச் சென்றேன். தஞ்சையை அடைய செந்தலையை அடக்க வேண்டும்
என்பதை உணர்ந்தேன். ஆகவே அதன் நிலையை அறிய அங்கு சென்றேன். செந்லை ஒரு பெரிய இரும்புக் கோட்டை. சுவரால் செய்யப்பட்ட கோட்டை எதுவும் அங்கு இல்லை. ஆனால், பெரும் வீர சமுதாயத்தால் காக்கப்படுகிறது.
கொலை, கொள்ளை எதற்கும் துணிந்து ஒரு பலமான படை அங்கிருக்கிறது. அதை உடைத்தாலொழிய தஞ்சையை நாம் கைவசப்படுத்தினாலும் நிலைக்காது” என்றான் ஆதித்தன்.
ஆதித்தன் புத்தி சூட்சமத்தை உள்ளூர வியந்து கொண்டான் விஜயாலயன். தான் தஞ்சையைக் கைப்பற்றத் தீர்மானித் திருப்பதை மைந்தன் முன்கூட்டியே புரிந்துகொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டதை நினைத்துப்
பெருமகிழ்ச்சியும் கொண்டான். முடிவில் கேட்டான், “ஆதித்தா! அத்தகைய இரும்புக் கோட்டையில் எத்தனை நாள் தங்கினாய்?” என்று.
எதற்காகத் தந்தை அதைக் கேட்கிறார் என்பதை உணராமலே சொன்னான் ஆதித்தன், “பதினைந்து நாட்களுக்கு மேல்” என்று.
விஜயாலயன் புரிந்தகொண்டதற்கு அடையாளமாகச் சிரத்தை ஆட்டினான். “அதாவது” என்று ஏதோ சொல்ல முற்பட்டதும், “தாங்கள் வஞ்சியைக் கைப்பற்றியதாகச் செய்தி கிடைத்ததும் செந்தலை சென்றேன்”- இடைமறித்துக்
கூறினான் ஆதித்தன்.
விஜயாலயன் அடுத்த கேள்வியை வீசினான், “எப்படித் தங்கினாய்?” என்று.
“மாறு வேடத்தில். முத்தரைய காவல் வீரர்களில் ஒருவனாக” என்றான் மகன்.
“எப்படித் தப்பினாய்?”
“உதவி கிடைத்தது.”
“அப்படியானால்?”
“சிறையில் அடைக்கப்பட்டேன்.”
விஜயாலயன் முகத்தில் கவலைக் குறி படர்ந்தது. “சாகசச் செயல்” என்றான் கவலை குரலிலும் ஒலிக்க.
இந்தச் சமயத்தில் இடைபுகுந்தாள் கண்ணழகி. “அண்ணா! நீ அங்கிருக்கும்போது யாராவது வந்தார்களா?” என்று வினவினாள், நிலத்தை நோக்கினாள்.
ஆதித்தன் கண்கள் குழப்பத்துடன் நோக்கினசகோதரியை. “வந்தான் நமது படைத்தலைவன்” என்றான்.
“இதயகுமாரனா?” என்று வியப்புடன் வினவினான் விஜயாலயன்.
“ஆம்.”

.
“இதை அச்சுதர் சொல்லவில்லையே!”
“தெரிந்திருக்காது. அது அரண்மனைக்குள்ளே நடந்த கதை.”
கண்ணழகி கேட்டாள், “இப்பொழுது அவர் எங்கிருக்கிறார்?” என்று.
“முத்தரையர் அரண்மனையில்.”
“அவர்கள் அவரைக் கொன்றுவிடுவார்களே.”
“மாட்டார்கள். பெரும்பிடுகர் அவனைத் தனது மகன் போல் பாதுகாத்து வருகிறார்” என்ற ஆதித்தன் “அப்பா! முத்தரையர்களில் நல்லவர்களும் இருக்கிறார்களே” என்றான்.
விஜயாலயன் எழுந்திருந்தான் பஞ்சணையை விட்டு. “எந்த சமுதாயத்திலும் நல்லவர், தீயவர் உண்டு” என்று கூறி விட்டு, “இருப்பினும் அவர்களுக்கும் நமக்கும் ரத்தப் பகை இருக்கிறது. தஞ்சை மீது படையெடுக்க ஏற்பாடுகளைச்
சீக்கிரம் செய்ய வேண்டும். பிற்பகலில் அச்சுதரைக் கலந்து பேசுவோம்” என்றான் சோழதேவன்.
“அவரை விடுவிக்கவேண்டுமே அப்பா. படையெடுத்தால் அவரைக் கொன்றுவிடுவார்களே” என்றாள் கண்ணழகி.
“அவளுக்கும் தீங்கு ஏற்படலாம். கொஞ்சம் நிதானிப் போமா?” என்றான் ஆதித்தன்.
தனது இரு செல்வங்களைவும் நோக்கிப் புன்முறுவல் கொண்டான் விஜயாலயன்.

Previous articleMohana Silai Ch 33 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 35 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here