Home Historical Novel Mohana Silai Ch 37 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 37 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

78
0
Mohana Silai Ch 37 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 37 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 37 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 37. இடை புகுந்த நிலை

Mohana Silai Ch 37 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

கண்ணழகியின் பஞ்சணையில், பஞ்சணையை விட மென்மையான அவள் மடியில் தலையை வைத்துப்படுத்துக் கிடந்த இதயகுமாரன் கண்கள் இந்த நேரியாளின் நிலவு முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவளது
கண்களோ அவனை நோக்காமல் இதயக்கட்டைப் பிரித்த பின் காயத்தைக் கவனிப்பதிலேயே இருந்தபடியால் தந்தையும் மற்றோரும் உள்ளே நுழைந்ததை அவளும் கவனிக்கவில்லை, அவனும் கவனிக்கவில்லை.
“காயம் எப்படியிருக்கிறது?” என்று விஜயாலயன் விசாரித்த பின்பே காதலில் கட்டுண்ட நால்வரும் சுரணை வரப்பெற்றதால் சோழ மன்னனைச் சரேலெனத் திரும்பி நோக்கினார். மன்னன் நுழைவும் கேள்வியும் தேவியின் இடைக்கு
விடையளித்ததே தவிர, கண்ணழகியின் மடிக்கு விடுதலையளிக்காததால் கண்ணழகி வெட்கத்தால் குழம்பிய பார்வையைத் தந்தை மீது திருப்பி, “ஓரளவு ஆறியிருக்கிறது. உயிருக்கு பயமில்லை. இருப்பினும் இவர் எழுந்து நடமாட பத்து
நாட்களுக்குக் குறைவில்லை” என்றான்.
அவள் சொற்களைக் கேட்ட முத்தரையர் மருத்துவன் முதலமைச்சரையோ மன்னனையோ லட்சியம் செய்யாமல் கண்ணழகி பஞ்சணையை அடைந்து, கட்டு பிரிக்கப்பட்டுக் கிடந்த இதயகுமாரன் மார்பை நோக்கினான். இரு முறை
காயத்தின் ஓரங்களில் தன் இரு கைப் பெருவிரல்களையும் அழுத்திப் பார்த்தான். பிறகு திரும்பி மன்னனை நோக்கி “மன்னவா! இளவரசியார் மதிப்பீடு மிகவும் சரி. நான் பத்து நாள் இங்கு இருந்து தானாகவேண்டும்” என்றான்.
இம்முறை மன்னனோ அமைச்சரோ பதில் சொல்லவில்லை. கண்ணழகியே பதில் சொன்னாள். “மருத்துவரே! நீங்கள் இங்கு காத்திருக்க அவசியமில்லை; செந்தலைக்குச் செல்லுங்கள். இந்தக் காயத்துக்குச் சிகிச்சை செய்ய எனக்குத்
தெரியும்” என்று.
மருத்துவன் பிரமித்தான். “இந்தக் காயம்…” என்று இழுத்தான்.
“தூர இருந்து எதிர்பாராத சமயத்தில் எறியப்பட்ட குறுவாளால் ஏற்பட்டது. ஆகையால் இதயத்தில் பாயாமல் சற்றுத் தள்ளி மேலிருந்து இரண்டாவது எலும்பில் பாய்ந்திருக்கிறது. எலும்பு மீதுள்ள சதையும் கெட்டியாயிருப்பதால்
எலும்பைத் தடவியிருக்கிறதே தவிர முறிக்கவில்லை. சரியான சிகிக்சை செய்தால் இன்றிலிருந்து மூன்றாவது நாள் இவர் எழுந்து நடக்க முடியும். பத்தாவது நாள் போரிடவும் முடியும்” என்று விளக்கினாள் கண்ணழகி.
கண்ணழகியின் விளக்கத்தால் பிரமிப்பின் உச்சநிலைமை அடைந்துவிட்ட முத்தரையர் மருத்துவன், “அம்மணீ நீங்கள் செந்தலையில் இல்லாததால் என் பிழைப்பு நடக்கிறது. உங்கள் மருத்துவத் திறனை அறிந்தால் என் பதவி
உங்களுக்குக் கிடைக்கும்” என்று பாராட்டினான். அத்துடன் மன்னனை நோக்கித் திரும்பி, “மன்னவா! இனி எனக்கு வேலையில்லை. என்னைவிட இவரை நன்றாகக் கவனிக்கக்கூடியவரிடம் ஒப்படைத்துவிட்டேன். செந்தலை செல்ல
எனக்கு விடை கொடுங்கள்” என்றும் சொன்னான்.
“இத்தனை அபாய நிலையில் இவனை ஏன் கொண்டு வந்தீர்கள் இங்கு?” என்று வினவினான் விஜயாலயன்.
இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை மருத்துவன். சிறிது சிந்தித்தான். நிமிர்ந்து நின்றான் கம்பீரமாக. “முத்தரைய பூபதி உண்மையைச் சொல்ல உத்தரவிட்டதால் சொல்லுகிறேன். அவர் மகனால் இக்காயம் ஏற்பட்டது. அதுவும்
அவர் மகனின் தவறான, வீரமற்ற செய்கையால். அதனால் பெரும்பாலும் தனது அறையிலேயே வைத்து என்னை வைத்தியம் செய்யச் சொன்னார். சிறிது சுரணை வந்ததும் உங்கள் படைத்தலைவர் இங்கு வரத் துடித்தார். அது மட்டுமல்ல;
தனது மகனாலும், அவர் மகன் இளைய முத்தரையராலும் இவருக்கு என்றும் அபாயம் ஏற்படும் என்று பெரும்பிடுகர் நம்பினார். இந்த இரண்டு காரணங்களாலும் இவரைக் காயத்துடன் அனுப்பச் சம்மதித்தார். அதற்காகத் தனது
மகளையும் இவருடன் அனுப்பினார். மகள் உடனடியாகப் புறப்பட்டார். காரணம், இப்பொழுது தெரிகிறது எனக்கு” என்ற முத்தரைய மருத்துவன், கட்டிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜோடியாக நின்ற தேவியையும் ஆதித்தனையும்
நோக்கினான்.
மன்னனும் அத்திசை நோக்கிப் புன்முறுவல் செய்தான். அப்பொழுது மருத்துவன் முத்தரையர் மகளை நோக்கி, “தேவி! நாம் உடனே புறப்படவேண்டும்” என்றும் அறிவித்தான்.
அதுவரை ஏதும் பேசாமலிருந்த ஆதித்தன், “தேவியா! எதற்காகப் புறப்படவேண்டும்? எங்கு?” என்று வினவினான்.
“மகளைத் திருப்பி அழைத்துவர பெரும்பிடுகர் உத்தரவு” என்றான் மருத்துவன். அவன் குரலில் திடமிருந்தது.
“இவள் திரும்பாவிட்டால்?” என்ற ஆதித்தன் தேவியிடம் நெருங்கி நின்றான்.
அப்பொழுது தேவிசொன்னாள் மெதுவாக, “திரும்ப பாதிருக்க முடியாது” என்று.
“ஏன் தேவி?” என்று ஆதித்தன் கேட்டான்.
“தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மனத்திலும் சந்துஷ்டியில்லை. நானில்லாவிட்டால் அவர் தனிக்கட்டை” என்று தேவி சொன்னாள் தழுதழுத்த குரலில். அவள் கண்களில் நீர் திரண்டது.
“அப்படியானால் என் கதி?” என்றான் ஆதித்தன்.
அதுவரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருந்த அச்சுதப் பேரறையர் வெடித்தார் திடீரென்று “சோழநாட்டு இளவரசர் பேசக்கூடிய பேச்சல்ல இது. அதுவும் பலர் முன்னிலையில் இப்படிப் பேசுவது பண்பாடும் ஆகாது”
என்றார் உஷ்ணத்துடன்.
பேச்சு மேலும் பலவகைகளில் சுவடு மாறியிருக்கும். அவற்றுக்கு தேவியே முற்றுப்புள்ளி வைத்தாள். நன்றாக நிமிர்ந்து அரச தோரணையில் நின்ற முத்தரையர் மகள் சுடும் விழிகளுடன் அமைச்சரை நோக்கி! “அச்சுதரே! உம்மைப்
பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். பொற்கொல்லராகக் கரூர் வஞ்சியில் வேஷம் போட்டு சோழநாட்டு வீரர்களை வணிகர்களாக நிரப்பி வஞ்சகத்தால் வஞ்சியைக் கைப்பற்றினீரே, அந்தப் பண்பைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
முத்தரையரிடம் அந்த முறை பலிக்காது. வீரத்தால் அவர்களை வெல்லலாம். மாறு வேடத்தால் வெல்ல முடியாது. மகாவீரரான உங்கள் இளவரசரின் மாறுவேடமே அங்கு அம்பலமாகி விட்டது. ஆகையால் பண்பாட்டைப் பற்றி நீர் பேச
வேண்டாம். ஆனால், ஒன்று கூறுகிறேன். இன்று நான் திரும்பத்தான் போகிறேன். இங்கு மீண்டும் திரும்பும் போது உம்மால் தலைவணங்கப்படும் ராணியாக வருவேன். செந்தலை மீது எப்படியும் படையெடுப்பு ஏற்படப்போகிறது.
முத்தரையர்களும் அதற்குத் தயாராயிருக்கிறார்கள். அந்தப் போரில் வெற்றிவாகை சூடி இளவரசர் என்னை அழைத்து வரட்டும். வந்த இடத்தில் பெண்ணைப் பிடித்துக்கொண்டார் என்ற அவமதிப்பு இவருக்கு வேண்டாம்” என்று
சொன்னாள். அத்துடன் அனைவருக்கும் தலைதாழ்த்தி, “மருத்துவரே! வாரும் போவோம்” என்று கூறிவிட்ட மருத்துவர் பின்தொடர அந்த அறையை விட்டு அகன்றாள்.
ஆதித்தன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தான். தனது கையசைப்பினால் சோழமன்னன் மகனைத் தடுத்தான். “ஆதித்தா! ஒரு வீராங்கனை செல்கின்றாள். அவளைத் தடை செய்யாதே. அவள் கூறியபடி போரில் வென்று
வீரனாக அவளை அடையப் பார்” என்று சொன்னான் உறுதியான குரலில். மீண்டும் அமைச்சரை நோக்கித் திரும்பி, “படைத்தலைவனைத் தனி அறைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். என் மகளே அவனுக்கு மருத்துவம்
செய்வாள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு வெளியேறினான் மகளின் அறையை விட்டு.
சோழமன்னன் உத்தரவுப்படி சகலமும் நடந்தது. அடுத்த மூன்றாவது நாள் இதயகுமாரன் நடக்க ஆரம்பித்தான். சில சமயங்களில் அரண்மனைக்குப் பின்புறமிருந்த தாழ்வரையில் கண்ணழகியின் தோளைப் பிடித்துக் கொண்டு
நடந்தான். ஐந்தாவது நாள் யார் துணையுமில்லாமலே உலாவ முற்பட்டான். கண்ணழகியின் இணையற்ற மருத்துவத்தினாலும் அவள் அருகாமை அளித்த சாந்தியாலும் வெகு சீக்கிரம் உடல் தேறிய இதயகுமாரன் தன்னந்தனியே
நந்தவனத்தில் உலாவினான் அடிக்கடி. அங்கு ‘தற்செயலாக’ நாள் தவறாமல் வந்த கண்ணழகியும் அவனுடன் அங்கிருந்த பவழமரத்தடியில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
அப்படி உட்கார்ந்த வேளைகளில் பவழமல்லி மலர்கள் இருவர் தலைமீதும் விழும். அவற்றில் சிலவற்றைக் கண்ணழகி பொறுக்கிக் கையிலும் வைத்துக்கொள்வாள். அப்பொழுது – அவற்றின் காம்பையும். சிவந்த அவள் கையையும்
பார்த்து, “கண்ணழகி! உன் கையின் நிறம் பவழமல்லியின் காம்புக்கு இல்லையே” என்று கூறுவான். பதிலுக்கு அவள் நகைப்பாள். அப்பொழுது அவன் கண்கள் தூரத்தில் படர்ந்திருந்த முல்லைக் கொடியின் மலர்களைப் பார்க்கும்.
இத்தகைய மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் மூழ்கியிருந்த சமயங்களில் சோழதேவன் படையெடுப்புக்குச் சித்தம் செய்துகொண்டிருந்தான். தேவி சென்றுவிட்ட கோபத்தில் ஆதித்தன் படைகளைச் சீரமைப்பதிலும், அணிவகுத்துப்
பார்வையிடுவதிலும் காலங் கழித்தான். உறையூரெங்கும் படைகள் நடமாட்டம் பலமாயிருந்தது. படைகளை இயக்கும் முரசுகள் அடிக்கடி சப்தித்தன.
இந்த சப்தங்கள் அடிக்கடி நந்தவனத்திலும் கேட்டதால் இதயகுமாரன் மனம் காதலிலிருந்து பிரிந்தது. பேரிகைகளின் சத்தம் வீரனான அவன் உணர்ச்சிகளைக் கிளப்பவே, கண்ணழகியின் அருகாமையைக்கூட அவன் மறந்தான். அவன்
சித்தமெல்லாம் எங்கோ இருந்ததால் கண்ணழகியின் கேள்விகளுக்குச் சம்பந்தமில்லாமல் பதில் சொன்னான்.
“என் சகோதரன் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு நாள் கண்ணழகி கேட்டபோது திடீரென பேரிகை சத்தம் கேட்டதால், அவனை என் வாளால் வெட்டாமல் விடுவதில்லை” என்று சீறினான்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் கண்ணழகி அவனிடமிருந்து பிரிந்து நின்று.
அவள் விலகியதாலும், அதுவரை தன் கையின் பிடியிலிருந்த அவளுடைய அழகிய தோள் சட்டென்று விடுபட்டதாலும் திடீரென சுய நிலையடைந்த இதயகுமாரன், “ஏன் கண்ணழகி என்ன?” என்று வினவினான்.
“நான் என்ன கேட்டேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“இளையவேளை வெட்டப்போவதாகச் சொன்னேன்.”
“இளையவேளைப் பற்றி நான் எதற்காகக் கேட்க வேண்டும்?”
“உன்னைத்தானே அவன் இம்சை செய்தான், அடைய முயன்றான்” என்ற இதயகுமாரன், “அவனை வெட்டப் போவதில்லை. என் இரு கைகளாலும் அவன் கழுத்தை இப்படிப் பிடித்து அணு அணுவாக அவன் உயிரை உடலிலிருந்து
பிரிப்பேன்” என்று சீறிக்கொண்டு கண்ணழகியின் அழகிய கழுத்தை நோக்கினான்.
கண்ணழகியின் இதயத்தில் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டது. தன்னை அடைய இஷ்டப்பட்ட இளையவேளின் மீது அவனுக்கு ஏற்பட்ட சீற்றத்தைக் கண்டு, “இவர் எனக்குத்தான் சொந்தம்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டு அவனை
அன்புடன் நெருங்கினாள்.
அப்படி அவள் நெருங்க முற்பட்ட சமயத்தில் அவளுக்கும் இதயகுமாரனுக்கும் இடையே ஒரு தலை புகுந்து தடுத்தது. சற்று எட்ட இருந்து ஒருவர் நகைப்பும் கேட்டது. புகுந்த தலை பிரமிப்பை அளித்தது இருவருக்கும். உதிர்த்த சிரிப்பு
நாணத்தை அளித்தது கண்ணழகிக்கு.

Previous articleMohana Silai Ch 36 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 38 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here