Home Historical Novel Mohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

80
0
Mohana Silai Ch 41 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 41. பெரும்பிடுகர் பிடிவாதம்

Mohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

சோழர் நந்தவனத்தில் கொடிவீட்டுக்கருகேயிருந்த புல்தரையில் கண்ணழகி இன்பமாக நகைத்த அதே நேரத்தில் செந்தலை அரண்மனை மாடிப்படி உச்சியில் உட்கார்ந்திருந்த பெரும்பிடுகர் சற்றுக் கடுமையாகவே நகைத்தார் எதிரே நின்ற
அடுத்த இரு தலைமுறைகளையும் நோக்கி. அந்த நகைப்பு கிளப்பிவிட்ட தொடர்ச்சியான இருமல்கூட மேற்கொண்டு அவர் நகைப்பதை நிறுத்த சக்தியற்றதாயிற்று.
தந்தை உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே நின்று கொண்டிருந்த மாறன் பரமேசுவரன் தனது ராட்சஸ விழிகளைப் பயங்கரமாக உருட்டினான் ஒருமுறை. உள்ளே எழுந்த கோபத் தின் விளைவாக, ‘தந்தையே! நீங்கள் நகைக்கக்கூடாது”
என்றான் கோபம் துளிர்த்த குரலில்.
அவனுடன் சேர்ந்து நின்றுகொண்டிருந்த இளையவேள், “உடல் நிலையை எண்ணிப் பாருங்கள். நகைக்க இடமிருக்காது” என்று தகப்பனுடன் சேர்ந்து கொண்டு பேசினான்.
பெரும்பிடுகரின் அசுர விழிகளில் ஏளனச் சிரிப்பு தாண்டவமாடியது. அதே சிரிப்பு பருத்த இதழ்களிலும் படர்ந்தாலும் பெரிய மீசை உதடுகளை மூடியிருந்ததால் அந்த இகழ்ச்சி உதடுகளின் மூலம் தெரியவில்லை. ஆனால், சொற்களில்
மிதமிஞ்சிய இகழ்ச்சியை ஒலிக்கவிட்ட பெரும்பிடுகர், “மாறா! நமக்குப் பின்னால் நம்மைப் பற்றிப் பிறர் நகைப்பதைவிட நம்மை எடைபோட்டு நாமே நகைத்துக் கொள்வது நல்லது” என்று மகனை நோக்கிச் சொல்லிவிட்டு பேரனைப்
பார்த்து, “இளையவேள்! உடல் நிலையை எண்ணிப் பார்க்கச் சொல்கிறாய்; நினைத்தால் நகைப்பதற்கு இடமிருக்காது என்று கூறுகிறாய். நான் உடல் நிலையைப் பார்க்கவில்லை. ஊர் நிலையைப் பார்த்தேன், உங்கள் இருவரையும்
பார்த்தேன். நகைப்பை நிறுத்த முடியவில்லை” என்று கூறினார்.
இதற்கு மாறன் ஏதோ பதில் சொல்லுமுன்பு இளையவேளே பேசத்தொடங்கி, “தாங்கள் இன்னும் என்னை உங்கள் பேரனாக, மகனுக்கு அடுத்தபடி செந்தலை அதிபதியாக ஏற்றுக் கொள்ளவில்லை” என்றான் சினம் துளிர்த்த குரலில்.
பெரும்பிடுகர் இதழ்களில் ஏற்கனவேயிருந்த இகழ்ச்சி பெரிதாயிற்று. “யார் சொன்னது அப்படி? அப்பனும் பிள்ளையும் அக்கம்பக்கத்தில் நிற்பதே உன்னை நாங்கள் ஏற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாயிற்றே” என்றார் பெரும்பிடுகர்
இகழ்ச்சியைக் குரலிலும் ஓட்டி.
இளையவேளின் சினம் அதிகமாகவே, “என்னை இளையவேள் என்று அழைத்தீர்கள்” என்று சுட்டிக் காட்டினான்.
பெரும்பிடுகரின் பெரிய விழிகளில் சிரிப்பு உதிர்ந்தது. “ஆம், அதனாலென்ன?” என்று வினவினார்.
“இப்பொழுது நான் வேளிர் குலத்தவனல்ல. முத்தரையர் வம்சத்தவன். ஆகவே இளைய முத்தரையன் என்று அழைப்பதே பொருந்தும்” என்றான் இளையவேள்.
“பெயரில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார் பெரும்பிடுகர்.
“பதவி இருக்கிறது, அந்தஸ்து இருக்கிறது, குலப் பெருமை இருக்கிறது” என்றான் இளையவேள்.
சற்றே நகைத்தார் பெரும்பிடுகர். “பதவி, அந்தஸ்து இவை மனிதனை உயர்த்துவதில்லை. குலப்பெருமைகூடக் கவைக்கு உதவாது. உன்னை நான் தமிழகத்தின் சக்கரவர்த்தி என்று அழைக்க ஆட்சேபணையில்லை. ஆனால், நீ
சக்கரவர்த்தியாக மாட்டாய். உன்னை மகாவீரன் என்று அழைப்பதில் எனக்கு நஷ்டமில்லை. அதனால் நீ மகாவீரனாகி விடமாட்டாய். செயல்கள் மனிதனுக்குப் பதவியையும் அந்தஸ்தையும் அளிக்கின்றன. அதனால் குலத்துக்குப் பெருமை
கூடுகிறது. இதுதான் விஷயம்” என்றார் பெரும்பிடுகர் நகைப்பின் ஊடே.
இருந்த இடத்திலேயே சங்கடத்துடன் அசைந்தான் இளையவேள். “என் செயல்களுக்கு என்ன? எனக்கு வீரமில்லை யென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டான் பாட்டனை சங்கடம் விளைவித்த கோபத்துடன்.
“உன் பிரசித்தி என் காதுகளில் முன்னமே விழுந்திருக்கிறது. பிறகு கண்கள் அவற்றை ஊர்ஜிதம் செய்தன” என்ற பெரும்பிடுகர், “இளையவேள்… இல்லை இல்லை… இளைய முத்தரையா! கருவூரில் உனக்கும் இதயகுமாரனுக்கும் நிகழ்ந்த
பூசல்களைப் பற்றியும் அவற்றின் முடிவைப் பற்றியும் கேள்விப்பட்டேன். இங்கு வந்த பிறகு நமது அரண்மனை வாவிக்கரையில் கண்கூடாகவே கவனித்தேன்” என்றார்.
இளையவேளின் உள்ளம் பெரும் எரிமலையாகியிருந்தது. பாட்டனின் ஏளனம் அவன் சித்தத்தைப் பெரிதும் உலுக்கி விட்டது. அதனால் தனது வாளின்மீது கையை வைக்கவும் செய்தான். அவன் கையைத் தனது கையால் பிடித்து
அடக்கிய மாறன் பரமேசுவரன், “எங்கள் இருவரையும் குறை சொல்வதும் பார்த்து நகைப்பதுமே சில நாட்களாக முத்தரைய பூபதிக்கு வேலையாகப் போய்விட்டது” என்று உறுமினான் தந்தையை நோக்கி.
பெரும்பிடுகர் முகத்தில் இகழ்ச்சி மிக அதிகமாகத் தெரிந்தது. “வேறு நல்ல வேலையிருந்தால் இதை விட்டு விடலாம்” என்றார்.
“ஏனில்லை? உங்கள் உடல்நிலை சரியாயில்லாதபோது இங்கு வந்து அணிவகுப்பைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். படுத்து உறங்கலாம்” என்றான் மாறன் பரமேசுவரன்.
“அந்தப் பணிகளை நீங்கள் இருவரும் மேற்கொண்டு விட்டதால் நான் மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பெரும்பிடுகர்.
“நாங்கள் உறங்குவதாக யார் சொன்னது?” என்று கேட்டான் இளையவேள்.
“உறக்கம் என்று சொல்லவில்லை.” பெரும்பிடுகர் இந்த பதிலைச் சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
“வேறு என்ன சொன்னார்கள்? யார் சொன்னார்கள்?” என்று கேட்டான் இளையவேள்.
“மயக்கம் என்று சொன்னார்கள்” என்றார் முத்தரையர்.
“யார் சொன்னார்கள்?”- மாறன் குரல் இடியென ஒலித்தது.
“பெருந்தேவியார்’ என்றார் பெரும்பிடுகர் மிகுந்த மரியாதையுடன்.
“யார்? தேவியா?”- மாறன் குரல் கடுமையாயிருந்தது.
“என் மகளை, இந்த நாட்டு இளவரசியை, மரியாதையுடன் அழைப்பது நல்லது” என்றார் பெரும்பிடுகர் சர்வ சாதாரணமாக.
“பணிப்பெண்ணையா மரியாதையுடன் அழைக்க வேண்டும்? அவள் எப்பொழுது இந்த நாட்டு இளவரசியானாள்?” என்று மாறன் சீறினான்.
“என்று என் வளர்ப்பு மகளானாளோ அன்று முதல்” என்ற பெரும்பிடுகர், “அவள் கண்ணும் கருத்துமாயிராவிட்டால் நான் என்றோ இறந்திருப்பேன்” என்றும் சொற்களைக் கூட்டினார்.
“பணிவிடையைச் சொல்கிறீர்களா?”
“அதையுந்தான்.”
“நான் உறங்கும் போது என்னைக் காப்பாற்ற அவள் விழித்திருக்கிறாள்.”
“யார் உங்களை அப்படிக் கொன்றுவிடுவார்கள்.”
“அரசுக்காகத் தந்தையைக் கொலை செய்வது சரித்திரத்துக்குப் புதிதல்ல.”
இதுவரை பொறுமையுடனிருந்த இளையவேள், மாறனை நோக்கி, “அப்பா! இதைக் கேட்டுக்கொண்டு நாம் நிற்கவேண்டுமா?” என்று வினவினான் கோபம் உச்சநிலைக்குச் செல்ல, உணர்ச்சிகள் வெறியூட்ட.
“சும்மா இருக்கவேண்டியதில்லை. கொல்லலாம். ஆனால், நான் விழித்திருக்கிறேன்” என்ற பெரும்பிடுகர் பெரிதாக நகைத்தார்.
“நாங்கள் இருவர். நீங்கள் ஒருவர்” என்றான் இளையவேள்.
“எந்த விஷயத்திலும் உனக்குத் துணை தேவையென்று புரிகிறது” என்று மீண்டும் நகைத்தார் பெரும்பிடுகர்.
இளையவேளுக்கு அதற்குமேல் அங்கு நிற்க முடியாததால் கடகடவெனப் படிகளில் இறங்கிக் கீழே சென்று விட்டான். ஆனால், மாறன் பரமேசுவரன் நகரவில்லை. நீண்ட நேரம் மௌனமாக நின்றான். பிறகு தகப்பனைத் தாண்டி அரண்
மனைக்குள் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் தேவி அங்கு தோன்றினாள் கையில் ஒரு குவளையுடன். இதைக் குடியுங்கள்” என்று கட்டளையும் இட்டாள் பெரும்பிடுகர் கையில் குவளையைத் திணித்து.
பெரும்பிடுகர் பதிலேதும் சொல்லாமல் குவளையிலிருந்த பானத்தைக் கடகடவெனக் குடித்தார். “தேவி! மீண்டும் கஷாயத்தைக் கொடுக்கிறாய்!” என்றார் அன்புமிகுந்த குரலில்.
தேவி அவர் காலடியில் உட்கார்ந்தாள். அவள் தலையைத் தனது காலில் சாய்த்துக்கொண்ட பெரும்பிடுகர் அவள் குழல்களை அன்புடன் கோதிவிட்டார். அந்த நிலையில் கேட்டாள் தேவி, “கஷாயத்தைக் கொடுக்காமல் வேறு எதைக்
கொடுப்பது?” என்று.
“எது என்பது உனக்குத் தெரியும். மது” என்றார் பெரும்பிடுகர்.
“அதைக் கொடுக்க மருத்துவர் உத்தரவில்லை.”
“மருத்துவர் உத்தரவு போடுகிறாரா? இப்பொழுது செந்தலையில் எல்லோருமே உத்தரவு போடுகிறார்கள் போலிருக்கிறது.”
“எல்லாம் தங்கள் உடல்நிலையை முன்னிட்டுத்தான்.”
இதைக் கேட்ட பெரும்பிடுகர் நகைத்தார். “எல்லோருக்கும் என் உடல் நிலையில் அக்கறை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர் மதுவுக்குத்தடை போடுகிறார். மகனும் பேரனும் நகைப்புக்குத் தடை போடுகிறார்கள்” என்று சொல்லி
மீண்டும் ராட்சஸத்தனமாக நகைத்தார்.
“அப்பா!” மெள்ளக் குரல் கொடுத்தாள் தேவி.
“என்னம்மா!” அன்பு சொட்டியது பெரும்பிடுகர் குரலில்.
“நீங்கள் உங்கள் மகனையும் பேரனையும் இகழ்ந்தது சரியல்ல.”
“ஏன்?”
“என்ன இருந்தாலும் அவர்கள் உங்கள் குழந்தைகள்.”
“அதனால்தான் இன்னும் உயிரோடிருக்கிறார்கள்” என்ற பெரும்பிடுகர், “குழந்தாய்! நீ ஏன் என் வயிற்றில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் நாளைக்கே செந்தலையின் ராணியாக்கிவிடுவேன். இங்கு அல்லி ராஜ்யத்தை
நிலைநாட்டியிருப்பேன். அப்படிச் செய்ய முடிந்திருந்தால் முத்தரையர் ஆட்சி இன்னும் சில ஆண்டுகள் இங்கு நிலைத்திருக்கும்” என்று உணர்ச்சியுடன் பேசினார்.
“இப்பொழுது ஏன் நிலைக்காது?” என்று கேட்டாள் தேவி.
“உன் கண்களைச் சுற்றிலும் ஓட்டு பெண்ணே. செந்தலையை விழுங்க விஜயாலயன் சகல ஏற்பாடுகளையும் செய்து வருகிறான். அவன் மகனும் மருமகனும் சூரர்கள். படைகளை அன்றாடம் கவனித்து போருக்குச்
சன்னத்தமாக்குகிறார்கள்…” என்ற பெரும்பிடுகரை இடைமறித்த தேவி, “மருமகனா! சோழ தேவருக்கா? அது யார்?” என்று ஏதும் புரியாதது போல் கேட்டாள்.
பெரும்பிடுகர் புன்முறுவல் கொண்டார். “இன்னொரு கேள்வி கேட்கவில்லையே தேவி” என்றார் முறுவலின் ஊடே.
“என்ன கேள்வி தந்தையே?” என்றாள் தேவி.
“சோழதேவன் மருமகள் யாரென்று கேட்கவில்லையே நீ” என்றார் பெரும்பிடுகர்.
தேவி தன் முகத்தை பெரும்பிடுகர் முழங்காலில் நன்றாகப் புதைத்துக் கொண்டாள். அவள் பேசவில்லை. பெரும்பிடுகரே பேசினார். “பெண்ணே! ஆதித்தன் மகாவீரன், இந்த செந்தலைக்கு உன்னையே ராணியாக்குவான்” என்று.
“முடியாது” என்றாள் தேவி.

.
“ஏன்?”
“நான் பணிப்பெண். அவர் அரச மகன்.”
“நீயும் அரச மகள்தான்.”
“இல்லை, உங்களால் தூக்கிவரப்பட்டவள். அனாதை. குலம் கோத்திரம் தெரியாதவள். என்னை எப்படி கைப்பிடிப் பார் சோழ இளவரசர். இது வீண் கனவு தந்தையே” என்றாள்.
பெரும்பிடுகர் தீவிர சிந்ததையில் இறங்கினார். நீண்ட நேரம் அவர் பேசவில்லை. கடைசியில் பேசியபோது அவர் குரலில் கடுமை ஒலித்தது. “தேவி! நீ அனாதையல்ல. குலம் கோத்திரம் இல்லாதவளுமல்ல” என்ற பெரும்பிடுகர் அவள்
தலையைப் பலமாகத் தமது முழந்தாள் மீது அமிழ்த்தினார்.
தேவியின் மார்பு படபடவென அடித்துக்கொண்டது. “அப்படியானால் நான் யார்?” என்று கேட்டாள் தேவி தழு தழுத்த குரலில்.
“அது பெரும் கதை.”
“சொல்லுங்கள்.”
“இப்பொழுது முடியாது. ஒரு நாள் சொல்லுவேன்.”
“அது எந்த நாள்?”
“என் மரண நாள். உயிர்போகும் சமயத்தில் சொல்கிறேன்” என்ற பெரும்பிடுகர் குரலில் மரணத்தைப் பற்றிய அலட்சியம் இருந்தது.
தேவி சொன்னாள், “அப்பா! நீங்கள் இறக்கவும் வேண்டாம். எனக்கு குலமும் வேண்டாம். திருமணங்கூட வேண்டாம்” என்று. அத்துடன் உள்ளிருந்த சோகம் உணர்ச்சிப் பெரு மூச்சாக வெளிவந்தது.
“நாளை நிலைமை மாறும்” என்று மட்டும் சொன்னார் பெரும்பிடுகர்.
நிலைமை மாறத்தான் செய்தது. அந்த மாற்றம் மாறனுக்கும் இளையவேளுக்கும் இதய வெறியை ஏற்றியது. தேவி சஞ்சலப்பட்டாள். அந்த மாற்றத்துக்குப் பிறகு பெரும்பிடுகர் உயிர் தங்குவது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தாள்.
அதைப் பற்றி பெரும்பிடுகர் சிறிதும் கவலைப்படவில்லை. அசாத்திய அலட்சியத்தோடு இருந்தார். அவர் பிடிவாதம் எல்லையை மீறி இருந்தது.

Previous articleMohana Silai Ch 40 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here