Home Historical Novel Mohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

89
0
Mohana Silai Ch 42 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 42. பட்டமும் திட்டமும்

Mohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

பெரும்பிடுகு முத்தரையரின் பிடிவாதமும் மூர்க்க குணமும் உலகமறிந்ததென்றாலும், அது அத்தனை தூரத்துக்குப் போகமுடியும் என்பதை மாறன் பரமேசுவரனோ, இளையவேளோ, மற்ற தளபதிகளோ சொப்பனத்தில் கூட
நினைக்கவில்லை. யாராவது மந்திரி இருந்தால் அவரையாவது தனது முரட்டு யோசனையில் பெரும்பிடுகர் கலந்துகொண்டிருக்கலாம்.
மந்திரிகளால் எந்தவிதப் பயனும் இல்லையென்றும், தனது புத்திக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைவிட மந்திரி பிரமாதமான யுக்தி எதையும் சொல்லிவிட முடியாதென்றும் திட்டமாக வாழ்க்கையில் நம்பிய பெரும்பிடுகர்,
தாம் செந்தலை அரசுப் பதவியை ஏற்றது மே ஏற்கனவே இருந்த ஓரிரு மந்திரிகளையும் வேலையிலிருந்து நீக்கி விட்டார். அதை ஒரு மந்திரி ஆட்சேபித்தபோது “உமக்கு வாளெடுத்துப் போராடத் தெரியுமா?” என்று கேட்டார் பெரும்பிடுகர்.
மந்திரியிடம் அதுவரை அந்த மாதிரி கேள்வியை யாரும் கேட்காததால் ஒரு விநாடி மந்திரி பிரமை பிடித்து நின்றார். “தெரியாது. அது அமைச்சன் வேலையல்ல” என்று கூறினார்.
“வேறு என்ன வேலை அமைச்சருக்கு?” என்று இடக்காகக் கேட்டார் பெரும்பிடுகர்…
“யோசனை சொல்லுதல்” என்றார் மந்திரி.
“சுய யோசனை இல்லாதவனுக்குப் பிறர் யோசனை தேவைதான்”- பெரும்பிடுகர் மிக விஷமமாகப் பார்த்தார் மந்திரியை.
“பழமொழி தவறல்ல” என்று மந்திரி சுட்டிக் காட்டினார்.
“அது என்னவோ?”
“மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல்.”
அதைக் கேட்ட பெரும்பிடுகர் பெரிதாக நகைத்தார். “நல்ல பழமொழி” என்றும் இகழ்ச்சியாகப் பேசினார் நகைப் பின் ஊடே.
“பூபதி! பழமொழிக்கென்ன?” என்று அமைச்சர் வினவினார்.
“மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்று சொன்னீர்…’
“ஆம்.”
இப்பொழுது என்ன பொருள் செந்தலைக்கு வரக்கூடும்? யார் கொண்டுவரப்போகிறார்கள்?”
இதைக் கேட்ட மந்திரி விழித்தார். பெரும்பிடுகர் மந்திரியைப் பரிதாபத்துடன் நோக்கினார். “மந்திரி! முத்தரையர் இந்த நாட்டில் கும்பலாகப் புகுந்தபோது வாளுடன் வந்தனர். வீரமுள்ள படை வீரர்களுடன் வந்தனர். மந்திரிகளுடன்
வரவில்லை. இங்கு வந்த பிறகு பிற்காலச் சந்ததிகள் வலு இழந்தனர். வாளின் உபயோகத்தை உணராமல் மந்திரிகளை வைத்துக்கொண்டனர். அதனால் நீர் சொன்ன பயன் கிடைத்தது. மந்திரிகள் வரும் பொருள் சொன்னார்கள்.
அதாவது வீரத்தினால் பிறரை வெற்றிகொண்டு பொருள் வரும் மார்க்கத்தைச் சொல்லவில்லை. மக்களுக்குப் புதுப்புது வரிகளை விதித்துப் பொருள் திரட்டும் மார்க்கத்தைச் சொன்னார்கள். இதனால் மக்களுக்கு அவதி.
ஆள்பவனுக்குச் சுகம். வாளைச் சுழற்றாமலே வரும்படி வந்தது. சுகம் கிடைத்தது. சுகம் வாளைப் பலவீனப்படுத்திவிட்டது. என் வீரர்கள் வீரமிழந்ததற்கு மந்திரிகள்தான் பொறுப்பாளி” என்று நீண்ட பிரசங்கத்தைச் செய்தார். “போகும்
போது நமது பொக்கிஷத்திலிருந்து வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ளும்” என்று அவர் வேலைக்கு முடிவும் கட்டினார்.
அதற்குப் பிறகு அவர் யார் யோசனையையும் கேட்கவில்லை. ஆனால் படைபலத்தைப் பெருக்கினார். யாரும் மீறமுடியாத கட்டுப்பாடுகளை விதித்தார். செந்தலையை யாரும் அணுகமுடியாத இரும்பு அரணாக்கிவிட்டார். அதற்குப்
பிறகு அவர் நடத்திய இரண்டொரு போர்களில் ஒரு நிகழ்ச்சியின்போதுதான் தேவியைத் தூக்கி வந்தார். தேவிக்கு வயது வந்து அவள் மங்கைப் பருவமடைந்ததும் பெரும்பிடுகர் மனைவி காலமானாள். இரும்பு மனம் படைத்த
பெரும்பிடுகர் அந்தத் துக்கத்தை வெளிக்குக் காட்டவில்லையென்றாலும் ஆறாத பெரும் காயமொன்று அவர் இதயத்தில் இருந்ததை மாறன் பரமேசுவரன் கவனிக்கவில்லையே தவிர, தேவி உணர்ந்தாள்.
மனைவி காலமான பிறகு சில நேரங்களில் வெறித்த பார்வையைச் சாளரத்தின் மூலம் வெளியே வீசியபடி பெரும்பிடுகர் உட்கார்ந்திருந்ததை தேவி கவனித்தாள். சாப்பாட்டில் கூட அவர் அதிக அக்கறை காட்டாததையும் கவனித்தாள்.
முக்கால்வாசி நேரத்தைப் படைகளுடன் கழித்து வந்ததையும் பார்த்தாள். அவற்றுக்கெல்லாம் மெள்ளப் பரிகாரமும் செய்தாள். தானே வலிய படைத்தளத்துக்கு உணவுடன் சென்றாள் சில வேளைகளில். “உன்னை யார் வரச் சொன்னது
இங்கே? பருவமடைந்த பெண் வரக்கூடிய இடமா இது?” என்று ஒரு முறை சீறினார் பெரும்பிடுகர்.
“நான் பணிப்பெண்தானே” என்றாள் தேவி.
“அதனால்?” என்று கேட்டார் பெரும்பிடுகர்.
“கடமையைச் செய்கிறேன்” என்றாள் தேவி.
அன்று வேண்டா வெறுப்பாக உணவருந்தினார் பெரும்பிடுகர். “நாளை முதல் இங்கு வரக்கூடாது” என்று கட்டளையும் இட்டார் தேவிக்கு.
“நீங்கள் உணவருந்த அரசமாளிகைக்கு வந்துவிட்டால் நான் ஏன் வருகிறேன்?” என்றாள் தேவி.
பெரிய முரடரான பெரும்பிடுகர் தேவியைத் தமது ராட்சஸக் கண்களால் சுட்டுவிடுவதுபோல் பார்த்தார். “உம் உம்” என்று இரு முறை உறுமினார். ஆனால் மறுநாள் உணவு வேளைக்கு மாளிகைக்கு வந்து சேர்ந்தார். இப்படிப்
படிப்படியாகப் பெரும்பிடுகர் மாறினார். அவர் உள்ளத்தை தேவி நிரந்தரமாகப் பிடித்துக்கொண்டாள். அதை நீண்ட நாள் வெளிக்குக் காட்டாவிட்டாலும் சிற்சில சிறு நிகழ்ச்சிகள் அதை வெளிப்படுத்தவே செய்தன.
அவள் பணிப்பெண்தானே என்ற நினைப்பில் உபதளபதியொருவன் அரண்மனைத் தோட்டத்தில் அவளை வழிமறித்தான். இச்சக வார்த்தைகள் பேசினான். காமத்தைக் கண்களால் கொட்டினான். அப்படி அவன் பேசிக்கொண்டிருந்த
போது அவனுக்குப் பின்னால் தூர வந்துகொண்டிருந்த பெரும்பிடுகர் அதைக் கவனித்தார். உபதளபதி தனது இருகைகளையும் இருபுறமும் தூக்கி நீட்டி தேவி மாளிகை செல்ல முடியாமல் தடுத்தான். அவனுக்குப் பின்னால்
புலிபோல் ஓசைப்படாமல் வந்த பெரும்பிடுகர் “உபதளபதி” என்று அன்புடன் அழைத்தார்.
உபதளபதி திடுக்கிட்டுத் திரும்பினான், பூபதிக்குத் தலைவணங்கினான். “தாங்கள் வருவதை நான் கவனிக்கவில்லை” என்று உளறினான்.
அவன் சொன்ன சமாதானத்தைப் பெரும்பிடுகர் காதில் வாங்கிகொள்ளவில்லை. “எதற்காக இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு நிற்கிறாய்?” என்று கேட்டார் சாதாரணமாக.
“காரணம் ஏதுமில்லை…”- மென்று விழுங்கினான் உபதளபதி.
“காரணம் ஏதுமில்லை?”
“இல்லை.”
“மறுபடியும் கைகளைப் பழையபடி நீட்டு” என்றார் பெரும்பிடுகர்.
வேறுவழியின்றி கைகளை முன்பு தேவியைத் தடுத்த தோரணையில் நீட்டினான். பெரும்பிடுகர் அவனை நெருங்கி “கைகள் நீண்டு அழகாக இருக்கின்றன. ஆனால், வலுவில்லை” என்றார்.
உபதளபதி மலைத்தான். “இருக்கிறது பூபதி” என்றான் திகிலுடன்.
“பார்ப்போம்” என்ற முத்தரைய பூபதி தமது இரும்புக் கையால் நீட்டியிருந்த உபதளபதியின் வலது கையைச் சட்டென்று திருப்பினார். இரண்டு மூன்று எலும்புகள் சரேலென்று முறியும் சத்தம் கேட்டது. அந்தக் கையை விட்டார்
பெரும்பிடுகர். உபதளபதியின் கை தொங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அங்கு வந்தான் மாறன் பரமேசுவரன். உபதளபதியின் கையைப் பார்த்துத் திகைத்தான்.
“அப்பா ! அவர் உபதளபதி” என்றான்.
“ஆமாம், ஆனால் உபயோகத் தளபதியல்ல” என்ற பெரும்பிடுகர், “மாறா! அவன் கை எலும்பு முறிந்துவிட்டது. அதற்கு ஏதாவது செய்” என்று கட்டளையிட்டார்.
“மருத்துவரிடம் அனுப்புகிறேன்” என்றான் மாறன்.
மாளிகைக்குச் செல்லத் திரும்பிய பெரும்பிடுகர், “மருத்துவர் ஏதும் செய்ய முடியாது. அந்தக் கையை எடுத்து விடு” என்று சொல்லிப் போய்விட்டார் மாளிகைக்கு, தேவி பின்தொடர்.
மாளிகை சென்றதும் தேவி கேட்டாள், “அவன் கையை எதற்காக வெட்டச் சொன்னீர்கள்?” என்று.
“தலையை வெட்டச் சொல்லியிருப்பேன். அதில் ஏதுமில்லை. அதனால் கையை வெட்டச் சொன்னேன்!” என்று பெரும்பிடுகர் சமாதானம் சொன்னார்.
அதற்குப் பிறகு உபதளபதி ஒற்றைக் கையுடன் படைத் தளத்தில் இருந்தான். “தளத்தைவிட்டு நகரக் கூடாது” என்று பெரும்பிடுகர் உத்தவிட்டிருந்தார்.
அதைப்பற்றியும் தேவி கேட்டாள், “தண்டனைதான் கொடுத்தாகிவிட்டதே. இன்னும் எதற்காக அவனை இருக்கச் சொல்கிறீர்கள்?” என்று.
“அவன் இருப்பது மற்றவர்களுக்குப் படிப்பினை” என்று காரணம் சொன்னார் முத்தரைய பூபதி.
அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு செந்தலை வீரர்கள் யாரும் தேவியைக் கண்ணாலும் காண அஞ்சினார்கள். பெரும் பிடுகருக்கும் மாறனுக்கும் அளித்த அதே மரியாதையை அவளுக்கும் அளித்தார்கள். நாட்கள் ஆக ஆ தேவிதான்
பெரும்பிடுகரின் அந்தரங்க ஆலோசகர் என்பதும் புரிந்தது படைத் தலைவர்களுக்கு. அவளை அவர் சொந்த மகள் போல் நடத்தி வந்ததை அனைவருமே கண்டார்கள். சில வேளைகளில் அவளுக்கு வாட்போரும் அவரே
பயிற்றுவித்ததை வீரர்கள் கண்டு வியந்தனர், “நான் பெண்…” என்று வாட் பயிற்சியை முதலில் எதிர்த்தாள் தேவி.
“பெண்ணாயிருந்தாலும் ஆணாயிருந்தாலும் தற்காப்புத் தேவை. வாள் பயிற்சி இருந்தால் அன்று அந்த உபதளபதியின் கையை நீயே வெட்டியிருக்கலாம்” என்று பதில் சொன்ன பெரும்பிடுகர் தனக்குத் தெரிந்த வாள் வீச்சுத்
தந்திரங்களையெல்லாம் அவளுக்கும் சொல்லிக் கொடுத்தார்.
இப்படி வீராங்கனையாக வளர்ந்த தேவி முதல் நாள் பெரும்பிடுகர் தமது மகனிடமும் பேரனிடமும் காட்டிய வெறுப்பையும் பிடிவாதத்தையும் கண்டு பெரிதும் துன்பத்துக்கு ஆளானாள். மறுநாள் அவரிடம் அதைப்பற்றிப் பேசவும்
சந்தர்ப்பம் பார்த்திருந்தாள். அவர் மறுநாள் மாலையில் இளைப் பாறும் சமயத்தில் அவர் அந்தரங்க அறைக்குச் சென்றாள். அங்கு பெரும்பிடுகர் தனியாயில்லை. மூன்று படைத் தலைவர்கள், மாறன் பரமேசுவரன், இளையவேள் இவர்கள்
எதிரே வணங்கி நிற்க தமது பஞ்சணையில் உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களிடம் என்ன சொன்னாரோ என்னவோ, தேவி அறைக்குள் நுழைந்ததும் மூன்று படைத்தலைவர்களும் அவளை வணங்கினர். தங்கள் வாட்களை
உறைகளிலிருந்து எடுத்து அவளிடம் கொடுத்தனர்.
வாட்களைப் பெற்றுக்கொண்ட தேவி, “அப்பா! இதற்கென்ன அர்த்தம்?” என்று வினவினாள் குழப்பத்துடன்.
“இன்று முதல் உனக்குப் பணிப்பெண் வேலை போய்விட்டது” என்று கூறிய பெரும்பிடுகர் பயங்கரமாகப் புன்முறுவல் செய்தார்.
“அப்படியானால் அரண்மனையை விட்டு நான் வெளியேற வேண்டியதுதான்” என்றாள் தேவி.
“தனியாக வெளியேற முடியாது” என்றார் பெரும்பிடுகர்.
“ஏன்?” என்று கேட்டாள் தேவி.
“செந்தலையின் இளவரசி தனியாகச் செல்ல முடியாது. எங்கும் மெய்காவலர் இருவர் தொடர்ந்து வருவார்கள்” என்று சொன்ன பெரும்பிடுகர், “இளவரசி! படைத்தலைவர்களின் வாட்களை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு. இது
முத்தரையர் சம்பிரதாயம்” என்று கூறினார். தேவியை அருகே வரச்சொல்லி, ‘தேவி! மாறனுக்கு அடுத்தபடியாக உன் சொல்தான் கட்டளையாகும் செந்தலையில்” என்றும் கூறி அவள் தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார்.
தேவி திகைத்தாள். பெரும்பிடுகர் பேச்சில் இளையவேளைப் பற்றி எந்த பிரஸ்தாபமும் இல்லாததைக் கவனித்தாள். அன்று அவர் செய்த செயல் முத்தரையர் வரலாற்றில் ஒரு புது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, தீராத
விரோதியையும் பெரும்பிடுகருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இளையவேள் உள்ளூரப் பொருமினான். பணிப்பெண்ணுக்கு இளவரசிப் பட்டம் கொடுத்ததைச் சகிக்காத இளையவேள், வேறு ஒரு பயங்கரமான திட்டத்தையும்

.
மனத்தில் உருவாக்கிக்கொண்டிருந்தான். இருப்பினும், அதை வெளிக்குக் காட்டாமல் பாட்டனின் முடிவுக்குத் தலைவணங்குபவனைப் போல் நடந்து கொண்டான். அடுத்த சில நாட்களில் சதா பெரும்பிடுகரைச்
சுற்றிக்கொண்டிருந்தான். அவன் திட்டத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பமும் ஒரு நாள் கிடைத்தது.

Previous articleMohana Silai Ch 41 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here