Home Historical Novel Mohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

93
0
Mohana Silai Ch 43 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 43. இளையவேளின் நாகரீகம்

Mohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

பணிப்பெண்ணாக இருந்த பெருந்தேவி இளவரசியாகி கோப்பெருந்தேவியாகிவிட்டதைக் கண்டு பொருமிய இளையவேள் தன் மனத்தில் பயங்கரமான திட்டமொன்றை உருவாக்கிக் கொண்டிருந்தானென்றால், அதற்கு வித்திட்டது
பெரும்பிடுகர் தான். மாளிகை உச்சிப்படியில் உட்கார்ந்து தகப்பனான மாறன் பரமேசுவரன் முன்னிலையில் இளையவேளைப் பற்றி அவர் இகழ்ச்சியுடன் பேசியதே இளையவேளுக்கு அளவற்ற சினத்தை மூட்டியிருந்தது. தனது வீரத்தைப்
பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பதாகக் கூறியதும், கூறி நகைத்ததும் அவன் உள்ளத்தைச் சுட்டுப் பொசுக்கிக்கொண்டிருந்தது. இதெல்லாம் போதாதென்று தனக்கும் தன் தந்தைக்கும் தெரியாமல் பணிப்பெண்ணை
இளவரசியாக்கியதில் மன முடைந்த இளையவேள், இந்த அவமானத்தைச் சும்மாவிடக் கூடாதென்ற முடிவுக்கு வந்து வெளிப்பகையை உள்ளடக்கி பெரும்பிடுகரைச் சுற்றலானான். அப்படிச் சுற்றிய காரணத்தால் திட்டத்தை நிறைவேற்ற
வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்பை அளித்தவரும் பெரும்பிடுகர்தான்.
தேவி இளவரசியான மறுநாளே அதற்காக வீரர்களின் கொண்டாடத்தை வைத்தார் அணிவகுப்பு சமவெளியில். அதில் செந்தலை மக்கள் அனைவரையும் வரவழைத்துப் பரிசுகள் கொடுத்தார். “செந்தலை முத்தரையர் வம்சத்தில் ஒரு
பெண்ணில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு ஒரு பெண் கிடைத்தாள். உங்களுக்கு ஒரு இளவரசி கிடைத்தாள்” என்று கூறி குழலைச் சுற்றியிருந்த மெல்லிய தங்கக் கிரீடத்துடன் நின்றிருந்த தேவியை ஆசையுடன்
சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். முத்தரைய பூபதிக்கும் இளவரசிக்கும் ‘வாழிப் பாராட்டுதலை விரைந்து வழங்கினார். பிறகு கூத்தாடினார்கள். அந்த சத்தத்திலும் வீரமிருந்தது, வெறியும்
இருந்தது. வெளி ஊர்களிலிருந்து நாடோடிக் கூட்டமாய் தமிழகத்தில் புகுந்து மூவரசர்களையும் அழுத்திவிட்ட களப்பிரர் வம்சத்தின் வாரிசுகள்தான் முத்தரையர் என்பதற்கு அத்தாட்சி கூட்டவே இந்தக் களி நடனம் நடந்தது. எங்கும்
கூத்து, இரைச்சல், பாட்டு, இடையே கிரீச் கிரீச்சென்ற மகிழ்ச்சி ஒலிகள். ஆண்களும் பெண்களுமாக ஆடிய அந்தப் பெரும் கூத்து அணிவகுப்புப் பெருவெளியை ஏதோ போர் பூமிபோல் அடித்தது.
அந்த வெறியைக் கண்ட முத்தரைய பூபதியின் முகத்தில் இணையிலாப் பெருமை விரிந்து கிடந்தது. பக்கத்தில் நின்ற இளவரசியை உட்காரச்சொல்லி தானும் மேல் படியில் உட்கார்ந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் மெய்மறந்தார். மக்கள்
கூத்துக்காகக் கைகளை உயரத்தூக்கிப் போட்ட தாளத்துக்குத் தாமும் தாளம் போடத் துவங்கினார். அவர் பெரும் கைகள் ஒன்றுடன் ஒன்று மோதி ‘பளேர் பளேர்’ என்று தாள ஒலி எழுப்பியது. “தேவி! நீயும் தாளம் போடு. இந்த
வீரகீதத்தைப் பார். முத்தரையர் வீரம் இன்னும் நசிக்கவில்லை” என்று கூறினார் பெரும்பிடுகர் பெருமை துலங்கிய குரலில்.
இளவரசி மிக இன்பமாகத் தாளம் போட்டாள். அவள் கை வளையல்கள் அணிவகுப்பு அரங்கில் கூத்தாடிய பெண்களின் கைதட்டலுக்குச் சுருதி தட்டுவது போலிருந்தது.
“பெண்ணே! உன் தாளத்தில் கீதமிருக்கிறது, வலு இல்லை” என்றார் பெரும்பிடுகர். “எப்படியிருக்கும்? நீதான் முத்தரையர் வம்சத்தில் பிறக்கவில்லையே” என்றும் கூறினார். இதைச் சொன்னபோதும் அவர் கைத்தாளம் நிற்கவில்லை.
அப்பொழுது கேட்டாள் தேவி, “சரி, முத்தரையர் வம்சத்தில் உதித்த உங்கள் பேரன் என்ன செய்கிறார் பாருங்கள்! கையைக் கட்டிக்கொண்டு நிற்கிறாரே” என்று.
பெரும்பிடுகர் தமது கண்களைக் கீழேயிருந்த அடிப்படியில் செலுத்தினார். அந்தப் படியின் ஒரு ஓரத்தில் பக்கச் சுவரில் கைளை மார்பில் கட்டிய வண்ணம் சாய்ந்து நின்றிருந்தான் இளையவேள். அவன் முகத்தில் எதிரே நடந்த கூத்தைக்
கண்டதால் வெறுப்பு தாண்டவமாடிக்கொண்டிருந்தது. “அவன் முத்தரையர் குலமா என்பது சந்தேகமாயிருக்கிறது எனக்கு. ஆனால், அவன் என் பேரன்தான் என்பதற்கு அத்தாட்சிகள் நிரம்ப இருக்கின்றன. புலியின் கூட்டத்தில்கூட
ஏதாவது ஒரு பூனை நுழைந்து விடுகிறது” என்று அலுத்துக்கொண்டார் பெரும்பிடுகர்.
அன்றிரவு கொண்டாட்டம் முடிந்த பிறகு அந்தக் கேள்வியை நேரடியாகவே கேட்டார் இளையவேளை, “நீ ஏன் இன்று முத்தரையர் வீரக்கூத்தில் கலந்து கொள்ளவில்லை?” என்று.
அப்பொழுது அவருடன் இளையவேளும் மாறன் பரமேசுவரனும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். அவரது கேள்விக்கு பதிலைச் சொல்ல அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை இளையவேள். உணவருந்தியபடி தலைகுனிந்த
நிலையில் சொன்னான், “அந்தக் காட்டுமிராண்டிக் கூத்து எனக்குப் பிடிக்கவில்லை “ என்று.
பெரும்பிடுகர் மெள்ள நகைத்தார் ஆட்டு இறைச்சியை கடித்துக்கொண்டே. “உன் அப்பன் ஆடினானே?” என்று கேட்டார் கையிலிருந்த எலும்பைச் சிறிது வாயிலிருந்து விலக்கி. அவர் கேள்வியில் இகழ்ச்சி கலந்த நகைப்பின் ஒலி இருந்தது.
இளையவேள் உணவை நாகரீகமாக அருந்திக்கொண்டிருந்தான். “அவருக்குப் பழக்கமாயிருக்கலாம்” என்று கூறினான் வெறுப்புடன்.
“உன் அப்பனைக் காட்டுமிராண்டி என்று சொல்கிறாயா?” என்ற பெரும்பிடுகர், இளையவேளையும் நோக்கி மாறன் பரமேசுவரனையும் நோக்கினார்.
மாறன் பரமேசுவரன் தனது உணவுத் தட்டிலிருந்து தலையை உயர்த்தி “அப்பா! அவன் குழந்தை” என்று பரிந்தான் மகனுக்கு.
“உண்மை, மூளை முற்றவில்லை” என்றார் பெரும்பிடுகர். அத்துடன் விட்டிருக்கலாம் அவர். “உடலைப் பற்றியும் சந்தேகமாயிருக்கிறது” என்றும் சொன்னார்.
பாதி உண்ட உணவை அப்படியே நிறுத்தி விட்டு வெளியேற முயன்றான் இளையவேள். “சற்று நில்” என்று முத்தரையர் பூபதி கூறவே வாயிற்படிக்குச் சென்று விட்டவன் திரும்பி நோக்கினான். இந்தக் காட்டுமிராண்டிக்குப் பிறகு நீ
செந்தலையை ஆளவேண்டும். இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத் திற்குத் தலைவனாக நீ விரும்புகிறாயா என்பதையும் யோசித்துக்கொள்” என்று கூறி பக்கத்தில் அமர்ந்திருந்த மாறன் பரமேசுவரனைச் சுட்டிக்காட்டினார்.
இளையவேள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “நான் தகுதியில்லையென்றால் இளவரசிக்குப் பதவியைக் கொடுப்பதுதானே” என்றான் கொதிக்கும் சொற்களில்.
பெரும்பிடுகர் குரல் மிக இன்பமாகத் திரும்பியது. “இளையவேள்!” என்று செல்லமாக அழைத்தார்.
“ஏன்?” இளையவேளின் குரல் அப்பொழுதும் கடுமையாயிருந்தது.
“உனக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறது” என்றார் செந்தலை அதிபதி.
“எப்படிப் புரிந்துகொண்டீர்கள் இதை?”
“தேவிக்கு முடிசூட்டவேண்டுமென்றாயே, அதனால்.”
அதற்குப்பிறகு இளையவேள் வாயிற்படியில் நன்றாகத் திரும்பி நின்றான். “பாட்டனே! உன் ஆட்டமெல்லாம் அதிக நாளில்லை” என்றான்.
“அது எனக்கு ஏற்கனவே தெரியும்.”
“எப்படி?”
“என் முதுகில் குத்த பல பேர் காத்திருக்கிறார்கள், மார்பில் குத்த முடியாத காரணத்தால். அவர்களுக்கு என் முதுகு கிடைக்கவில்லை. ஆனால்…”
“என்ன ஆனால்?”
“உனக்குக் கிடைக்கலாம்.”
“நான் நாகரீகம் படைத்தவன்.”
“கோழைத்தனத்துக்கு அப்படி ஒரு வேஷமும் உண்டு” என்று சொன்ன பெரும்பிடுகர் பெரிதாக நகைத்தார்.
இளையவேள் அடுத்த விநாடி அங்கு நிற்கவில்லை. கதவை வேகமாகச் சரேலென்று சாத்தி விட்டுச் சென்றான். அதைக் கண்ட பெரும்பிடுகர் மகனை நோக்கி, “மாறா!” என்றார்.
“என்ன அப்பா?”
“பையன்…”
“உம்.”
“கதவை உடைக்கிறான்.”
பதில் சொல்லவில்லை மாறன் பரமேசுவரன். பெரும்பிடுகரே பேசினார், “அவன் விறகு வெட்டுவதற்குத் தகுந்தவன். நமது அரண்மனைக்கும் விறகு தேவையாயிருக்கிறது” என்றார்.
மாறன் பதில் பேசவில்லை. உணவை முடித்துக்கொண்டு எழுந்து சென்றான். அதுவரை உள்ளே நுழையாமல் வெளியிலிருந்தே நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேவி, கையில் தண்ணீர் செம்புடன் உள்ளே நுழைந்து
பெரும்பிடுகர் கையிலிருந்த ஆட்டு எலும்பைப் பிடுங்கிக்கொண்டாள். “கை அலம்புங்கள்” என்று கூறி அவர் கை கழுவ ஜலமும் விட்டாள். அவர் கையைக் கழுவி எழுந்திருந்து ஆசனத்தில் சாய்ந்த பிறகு சிறிது மதுவும் கொடுத்தாள்
தேவி. “இதென்னமதுவா, மருந்தா?” என்று பெரும்பிடுகர் கேட்டார்.
“சிறிதளவு சாப்பிட்டால் மருந்து. அதிகமாகக் குடித்தால் விஷம்” என்றாள் தேவி.
அந்தச் சிறு குவளையிலிருந்த மதுவை அருந்திய பெரும்பிடுகர், “தேவி! இன்னும் கொஞ்சம் கொடு” என்றார்.
“முடியாது” என்றாள் தேவி திட்டமாக
ஆயாசப் பெருமூச்செறிந்தார் பெரும்பிடுகர். “யாருக்காக என்னைக் காப்பாற்றுகிறாய் இப்படி?” என்று கேட்டார்
“எனக்காக” என்றாள் தேவி.
“அது தவறு தேவி. நாளை முதல் உனக்கு வாட்பயிற்சியளிக்கிறேன்” என்றார் பெரும்பிடுகர்.
தேவிக்கு வாட்பயிற்சியளிக்கப்படுவதையும், குதிரை ஏற்றம், யானையேற்றம் முதலியவற்றில் அவளைப் பெரும்பிடுகர் பழக்குவதையும் பார்த்துக்கொண்டிருந்த இளையவேள் சீற்றம் கொண்டான். அவன் சீற்றத்தைக் கவனித்த மாறன்
பரமேசுவரன் மகனுக்குப் புத்தி சொன்னான். “இளையா! வீணாக பாட்டன் சினத்தைக் கிளறாதே. எனக்குப் பின் நீ அரசனாக விரும்பினால் அவரைத் திருப்தி செய்யப் பார். செந்தலையில் உன் நாகரீகம் செல்லாது. வீரந்தான் செல்லும்”
என்று.
தந்தையை உற்று நோக்கினான் இளையவேள். “அதற்காக மிருகத்தனமாக நான் ஆடவேண்டுமா?” என்றுகேட்கவும் செய்தான்.
“அடிப்படையில் எந்த மனிதனும் மிருகந்தான். அதிலிருந்து அவன் மீளமுடியாது. மிருகத்தனத்தை ஆடைமறைக்கலாம். நாகரீகம் என்ற போர்வை மறைக்கலாம். ஆனால், எதுவும் மிருகத்தனத்தை நீக்கமுடியாது. போரில் நிகழ்வது
நாகரீகமா, மிருகத்தனமா? மிருகத்தனத்தைவிட கேவலமான போர் என்னும் கூட்டுக் கொலையில் நாம் சம்பந்தப்பட வில்லையா? அறிவிருந்தால் ஆழ்ந்து சிந்தித்துப் பார். அரசு ஆசையிருந்தால் பாட்டனைச் சரிக்கட்டிக்கொள்” என்று
மகனுக்கு உபதேசித்தான் மாறன் பரமேசுவரன்.
அன்று உண்மையில் சிந்தித்த இளையவேள் ஒரு முடிவுக்கு வந்தான். அன்றிலிருந்து பெரும்பிடுகரின் அடிமையானான். அவர் தேவிக்கு வாட்போர் கற்றுக் கொடுக்கும் போதெல்லாம் கூட இருந்தான். அடிக்கடி செந்தலையைச்
சுற்றிப் பலரைச் சந்தித்தான். அவன் செயலெல்லாம் பெரும்பிடுகர் காதுக்கு வந்தது. ஆகவே ஏதோ ஒரு முடிவுக்கு வந்து தினந்தோறும் பேரனுடன் உணவருந்தினார். உணவுக்குப் பிறகும் பேரனைத் தன்னுடன் நிறுத்திக்கொண்டு
அளவளாவி வந்தார். அவனைத் தூண்டி தேவிக்குத் தெரியாமல் ரகசியமாக மதுவையும் சற்று அதிகமாக அருந்தினார். அத்தகைய ஒரு நாளிரவில் மதுவை நிரம்பக் குடித்துவிட்டு அது போதா தென்று, “இளைய முத்தரையா! அதோ அந்த
அறையில் ஒரு மஞ்சத்தில் பெரிய மதுக்குப்பி இருக்கிறது. அதை ஒரு குவளையில் ஊற்றிக்கொண்டு வா” என்று கெஞ்சினார்.
அந்த அறைக்குள் சென்ற இளையவேள் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. பிறகு அவன் வந்தபோது கையில் மதுக்குவளை இருந்தது. அதைக் கொண்டுவந்து பெரும்பிடுகரிடம் கொடுத்து “பூபதி! அருந்துங்கள்” என்றான்.
பூபதி குவளையை வாங்கி சிறிது ஆலோசித்தார். பிறகு குவளையை இளையவேளிடம் கொடுத்து “அப்பா! நீ முதலில் குடி” என்றார்.
“எனக்கு வேண்டாம்” என்றான் இளையவேள். அவன் குரலில் ஆட்டமிருந்தது.
“உம் குடி”- இடியென ஒலித்தது பெரும்பிடுகர் குரல். அவர் குரலில் சிறிதும் ஆட்டமில்லை.
அவர் குரலைக் கேட்ட தேவி ஓடி வந்தாள் உள்ளே. “இது என்ன?” என்று வினவினாள் இளையவேளையும் தந்தையும் நோக்கி.

.
“பேரன் நாகரீகத்தைக் காட்டுகிறான்” என்று பெரும்பிடுகர் பேய்ச் சிரிப்பாகச் சிரித்தார்.

Previous articleMohana Silai Ch 42 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here