Home Historical Novel Mohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

77
0
Mohana Silai Ch 44 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 44 சோதனை

Mohana Silai Ch 44 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

பெரும்பிடுகர் சிரித்த பேய்ச்சிரிப்பு அவர் அறையை மட்டுமின்றி உள்ளறையையும் அதிரச் செய்தது. அத்துடன் அவருக்குச் சற்றுத் தூரத்திலிருந்த அலங்கார விளக்கையும் திகிலடையச் செய்ததால் அந்தப் பதுமை விளக்கின் சுடர்
படபடவென அசைந்தது பல முறை. பெரும்பிடுகர் சிரிப்பில் பயங்கரம் மட்டுமன்றி ஏதோ ஒரு நுட்பமும் கலந்திருந்ததை ஊகித்துக்கொண்ட தேவி, இளையவேளுக்காகப் பரிந்து பேச முற்பட்டு, “அண்ணனை அனாவசியமாக நடுங்க
வைக்கிறீர்கள்” என்று குற்றமும் சாட்டினாள்.
தேவியின் சொற்களைக் கேட்ட பெரும்பிடுகர் சிரிப்பைச் சட்டென்று அடக்கிக்கொண்டார். ஆனால், அடுத்து அவர் முகத்தில் விரிந்த விஷமக்களை பேய்ச்சிரிப்பைவிட பயங்கரமாக இருந்தது. “அண்ணனா!” என்ற அவர் கேள்வியிலும்
அந்த விஷமம் நன்றாக ஊடுருவி நின்றது.
“ஆமாம். அதிலென்ன சந்தேகம்?” என்று தேவி கேட்டாள், பெரும்பிடுகர் உள்ளத்தில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல்.
“உனக்கு அதில் சந்தேகமில்லையே?” என்று மறுபடியும் கேட்டார் பெரும்பிடுகர்.
“இல்லை” என்றாள் தேவி.
“உன்னைப் போல்தானே அவனும் நடந்து கொள்ள வேண்டும்?”
“ஆமாம்.”
“நான் சொல்வதை இவன் மீறுகிறான். அது தவறுதானே?”
“ஆம்.”
“அப்படியானால் அந்தக் குவளையிலுள்ள மதுவைக் குடிக்கச் சொல்” – இதைத் திட்டமாகசச் சொன்னார் பெரும்பிடுகர்.
தேவி, இளையவேளை நோக்கித் திரும்பி அவன் முகத்திலிருந்த கிலியைக் கவனித்தாள். அதற்குக் காரணம் அவளுக்குப் புரியவில்லையாகையால், “அண்ணா! அப்பா சொல்கிறபடி கேட்பதில் உனக்கு என்ன ஆட்சேபணை?” என்று
விசாரித்தாள்.
இளையவேள் தேவியை சுட்டுவிடுவதுபோல் பார்த்தான். “இதை நீதான் குடியேன்” என்று குவளையை ஆத்திரத்துடன் அவளை நோக்கி நீட்டினான்.
“அவளைக் குடிக்கச் சொல்லவில்லை நான்” என்று குறுக்கே புகுந்தார் பெரும்பிடுகர்.
தேவி தனது கண்களால் அன்புடன் நோக்கினாள் இளையவேளை. “அண்ணா! இதென்ன பிடிவாதம். அப்பா சொல்கிற படி சிறிது மதுவைத்தான் குடிப்பதுதானே” என்று கெஞ்சினாள்.
இளையவேள் முகத்தில் அச்சத்துடன் வெறியின் சாயையும் விரிந்தது. “புரிகிறதடி. நீயும் பாட்டனும் சேர்ந்து செய்த சதிதான் இது” என்று கூறினான் இளையவேள்.
பெரும்பிடுகர் முகத்தில் சாந்தம் நிலவியது. “செந்தலை இளவரசியை மரியாதைக் குறைவாகப் பேசுவது குற்றம். அப்படிப் பேசுபவர்களின் நாக்கைத் துண்டிப்பது முத்தரையர் சம்பிரதாயம்” என்றார் பெரும்பிடுகர் சாந்தம் குரலிலும்
ஒலிக்க.
இளையவேள் விழித்தான். “உங்கள் தந்திரம் புரிகிறது. இந்த அனாதைக்காக, உங்கள் அபிமானப் புத்திரிக்காக, என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிறீர்கள்” என்று கூவினான் இளையவேள்.
தேவிக்கு ஏதும் புரியாததால், “அப்பா! இது என்ன? எனக்கு ஏதும் புரியவில்லையே!” என்றாள்.
பெரும்பிடுகர் அன்புடன் நோக்கினார் தேவியை. “தேவி அந்தக் குவளை மதுவை வாங்கி நீ ஒரு வாய் குடி” என்றார் சிறிது சிந்தனைக்குப் பிறகு.
“நான் மது அருந்தும் பழக்கமில்லையே” என்றாள் தேவி.
“எனக்காக ஒரு வாய் குடிக்கக் கூடாதா?” என்று கெஞ்சினார் பெரும்பிடுகர்.
தேவி சிறிதும் யோசிக்கவில்லை. “அண்ணா! அந்தக் குவளையை இப்படிக் கொடுங்கள்” என்று இளையவேளிடமிருந்து மதுக்குப்பியை வாங்கி மடமடவென்று இரண்டு வாய் குடித்தாள். அந்தக் குப்பியைப் பெரும்பிடுகர் தமது
கையில் வாங்கிக்கொண்டு, “தேவி! இப்பொழுது அவன் முகத்தைப் பார்” என்று தமது கையால் இளையவேளைச் சுட்டிக் காட்டினார்.
தேவி தனது அழகிய கண்களை இளையவேளின்மீது திருப்பினாள். அவன் முகத்தில் பெரும் பிரமை குடிகொண்டிருந்தது. “சூழ்ச்சி சூழ்ச்சி” என்று கத்திவிட்டு வெளியே ஓடப் பார்த்தான் இளையவேள். அறை வாசலிலிருந்து வந்த இரு
வீரர்கள் ஈட்டிகளால் அவனைத் தடுத்தார்கள்.
கள்ளன் போல் விழித்தான் இளையவேள். “சூழ்ச்சி என்னவென்று சொல்” என்று இடிபோல் குரலை உயர்த்தினார் பெரும்பிடுகர்.
அதுவரை கேட்ட பேய்ச்சிரிப்பாலும் இடிபோல் பெரும்பிடுகர் குரலை உயர்த்தியதாலும் தனது அறையிலிருந்து அங்கு வந்த மாறன் பரமேசுவரன் அங்கிருந்த நிலைகண்டு பிரமித்தான் ஒரு விநாடி. இளையவேளின் முகத்திலிருந்த
பீதியைக் கண்டு, “மகனே! என்ன நடந்தது?” என்று விசாரித்தான்.
இளையவேள் பதிலேதும் பேசவில்லை. “இவர்கள் சூழ்ச்சி நடந்தது. வேறெதுவுமில்லை” என்று இளையவேள், பெரும்பிடுகரையும் தேவியையும் சுட்டிக்காட்டினான்.
தந்தையின் சுபாவத்தை நன்றாக அறிந்திருந்த மாறன் பரமேசுவரன், ‘அப்பா! இவனுக்கு என்ன சோதனை வைத்தீர்கள்?” என்று கேட்டான்.
“பேரன் நாகரீகமுடையவன். நம்மைப் போல் காட்டுமிராண்டி வர்க்கமல்ல. நாகரீகத்தைச் சோதித்தேன்” என்றார் பெரும்பிடுகர்.
“நாகரீகமா!” என்ன் மாறன் வியப்பு நிரம்பபிய குரலில்.
“ஆம், மாறா! நாம் காட்டுமிராண்டிகள். பிறரைக் கொல்ல கத்தி, கேடயம், வேல் இவற்றை உபயோகப்படுத்துகிறோம். நாகரீகமுள்ளவர்கள் விஷம் வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்” என்ற பெரும்பிடுகர் மகன், பேரன் இருவரையும்
நோக்கி நகைத்தார்.
“என் மகன் தங்களை விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தானா?” என்று வினவினான் மாறன் நேரடியாக.
“எண்ணம் அதுதான். நடந்தது வேறு” என்ற முத்தரைய பூபதி மேலும் சொன்னார்: “மாறா! அந்த உள்ளறையிலிருந்த மதுவை கொண்டு வரச் சொன்னேன் பேரனை. உள்ளே போனவன் லேசில் வரவில்லை. காரணம் எனக்குத் தெரியும்.
அந்த மதுக்குப்பியின் பக்கத்தில் ‘விஷம்’ என்று எழுதி ஒரு குப்பி வைத்திருந்தேன். அதை மதுவில் கலந்துகொண்டுவந்தான். அது விஷமல்லவென்பது அவனுக்குத் தெரியாது. அதை அவனையே குடிக்கச் சொன்னேன். குடிக்க
மறுத்தான், திகிலடைந்தான், கை நடுக்கம் கொண்டான். கள்ளன் போல் விழித்தான். பிறகு தேவியை மரியாதையின்றிப் பேசினான். ஆக குற்றங்கள் மூன்று. ஒன்று எனக்கு விஷம் வைக்க முயன்றது. இரண்டு இளவரசியை மரியாதைக்
குறைவாகப் பேசியது. மூன்றாவது நான் ஏதோ சூழ்ச்சி செய்துவிட்டதாக என்மேல் அவதூறு கூறியது. இந்த மூன்று குற்றங்களுக்கும் என்ன தண்டனை விதிக்கலாம்?” இப்படி விஷயத்தை விளக்கிய பெரும்பிடுகர் புன்முறுவல்
பூத்தார்.
மாறன் அதிர்ச்சியடைந்து நின்றான். “இதெல்லாம் உண்மையா? என்று வினவினான் மகனை நோக்கி.
“இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்” என்ற பெரும்பிடுகர், “அதே குப்பியை தேவியிடம் கொடுக்கச் சொன்னேன் இளையவேளை. கொடுத்தான். அவளைக் குடிக்கச் சொன்னேன். குடித்தாள். விஷமிருந்ததாக நினைத்து தான்
குடிக்க மறுத்த குப்பியை தேவியிடம் கொடுத்ததால் செந்தலை இளவரசியைக் கொலைசெய்ய முயன்ற குற்றமும் பேரனைச் சாரும்” என்று விளக்கவும் செய்தார்.
எவ்வளவு குறையிருந்தாலும் வீரத்தில் குறைவில்லாத மாறன் பரமேசுவரன், “என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள் இவனுக்கு?” என்று வினவினான் எந்தவித சலனமுமின்றி.
“நீதான் எனக்கு அடுத்தபடி முடிசூட வேண்டியவன். தண்டனை என்னவென்று நீயே சொல்” என்றார் பெரும்பிடுகர்.
“தாங்கள் சொன்னதில் எந்த ஒரு குற்றத்துக்கும் மரண தண்டனை உண்டு” என்ற மாறன், “தந்தையே! எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான் பணிவு நிரம்பிய குரலில்.
“எதை வேண்டுமானாலும் கேள்” என்றார் பெரும்பிடுகர்.
“என் மகன் குற்றத்திற்கு தண்டனையை வேறு யாரும் நிறைவேற்றக்கூடாது. என் கையாலேயே இவனை வெட்டிப் போட அனுமதிக்க வேண்டும்” என்றான் மாறன். அவன் பேச்சில் உறுதியிருந்தது. குரலில் அரச தோரணை தெளிவாக
ஒலித்தது.
பெரும்பிடுகர் மகனை பெருமை நிரம்பிய கண்களால் நோக்கினார். “மகனே! முத்தரையர் ரத்தம் கலப்பில்லா ரத்தம், உனது உடலில் ஓடுகிறது. அரசநீதி உன் முடிவில் ஒளிவிடுகிறது. இருப்பினும் அவன் உன் மகன். சற்றுக் கருணை
காட்டு என்றார்.
தகப்பன் சொற்களைக் கேட்டதும் பாதி உயிர் போய்விட்ட நிலையிலிருந்த இளையவேள், பாட்டன் பரிதாபத்தைக் கண்டதும் சிறிது உயிர்வரப் பெற்றான். சரேலென்று யாரும் எதிர்பாராத வண்ணம் பாட்டன் முன் மண்டியிட்டு
கட்டிலிலிருந்து தொங்கிய அவர் பாதங்களை முகத்தில் புதைத்துக் கொண்டான். விம்மி விம்மி அழவும் செய்தான். “நான் துரோகி. என்னைக் கொன்றுவிடுங்கள், கொன்றுவிடுங்கள்” என்று கூவினான் விம்மலுக்கிடையே.
“தம்பி! எழுந்திரு” என்று கருணையுடன் கூறினார் பெரும்பிடுகர். மெள்ள எழுந்திருந்தான் இளையவேள். “எதற்கும் இளவரசியின் மன்னிப்பைக் கேள்” என்று ஒரு கணையைத் தொடுத்தார்.
இளையவேள் எழுந்து நின்றான். அவன் அச்சமெல்லாம் தொலைந்து விட்டது. “பாட்டனே! என் தந்தை கையால் சாகிறேன். பெண்ணின் காலைப்பிடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை” என்றான். அவன் குரலில் உறுதியிருந்தது. அந்த
உறுதியுடனும் வீரத்துடனும் தந்தையை நோக்கித் திரும்பிய இளையவேள், “தந்தையே! வாருங்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்றான்.
மாறன், பெரும்பிடுகரை நோக்கினான். பெரும்பிடுகர் முகத்தில் சிறிது மாற்றமிருந்தது. “மாறா! இவனுக்கு உன் இரத்தமும் இருக்கிறது. அதனால் சாவுக்கும் துணிகிறான். அவனை இம்முறை மன்னித்துவிடுவோம். இந்த அறையில்
நடந்தது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம். இது குடும்ப ரகசியமாக இருக்கட்டும்” என்றார்.
மாறன் பரமேசுவரன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. இரண்டு விநாடிகள் பேசாமல் நின்றான். பிறகு மகனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். “நீயும் போகலாம்” என்று இளையவேளை நோக்கிக்
கூறினார் பெரும்பிடுகர். இளையவேள் அறையை விட்டுச் சென்றான் தயக்கத்துடன். அவன் நடையில் அதுவரை காணாத தளர்ச்சியிருந்தது.
தேவி, பெரும்பிடுகர் அருகில் வந்து அவர் தோள்மீது கையை வைத்தாள். “அப்பா! இது எதற்கு இந்த நாடகம்?” என்று வினவினாள் அன்புடன்.
“மனிதர்களை எடைபோடுவது அவசியம். அதுவும் அரசனாயிருப்பவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களை எடை போடுவது மிகமிக அவசியம். இல்லையேல் அரசன் அதிக நாள் ஜீவிக்க முடியாது” என்றார். வேறொன்றும் சொன்னார்.
“இந்த நாடகத்தின் விளைவு நாளைக்குப் புரியும்” என்று.
விளைவு புரிந்தது மறுநாள். விசித்திரமான விளைவு தான். இருப்பினும் எதிர்பாராத விளைவு அல்ல. இளையவேளை மறுநாள் செந்தலையில் காணவில்லை.

Previous articleMohana Silai Ch 43 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 45 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here