Home Historical Novel Mohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

80
0
Mohana Silai Ch 46 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 46 விஜயாலயன் சிந்தனை

Mohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

உறையூர் அரண்மனை மந்திராலோசனை அறைக்கு அடுத்திருந்த தனது அந்தரங்க அறைக்குச் சென்றதும் அங்கிருந்த பஞ்சணையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு தீவிர சிந்தனையில் இறங்கினான் விஜயாலயன். பணிப்பெண் தேவி
இளவரசியாகி விட்டதில் மிகுந்த ஆனந்தம் மனத்துள்ளே பரவியதால் விகசித்த முகத்துடனேயே சிந்தனை வசப்பட்ட விஜயாலயன், “அமைச்சரே! அமைச்சரே!” என்று இரு முறை குரல் கொடுத்தான். அடுத்த அறையில் அவசர அரசாங்க
அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்த அச்சுதர் உள்ளே வந்து, “மன்னவா! என்ன கட்டளை?” என்று வினவினார்.
“செந்தலையிலிருந்து வந்த ஓலையை எடுத்து வாரும்” என்று கூறிய மன்னன், பஞ்சணையில் நன்றாக சாய்ந்து கொண்டான்…
அமைச்சர் தமது இடுப்பிலேயே அந்த ஓலையை வைத்திருந்ததால் அதை எடுத்துவர எங்கும் போக அவசியமில்லாதிருந்தது. கச்சையில் செருகியிருந்த அந்த ஓலையை எடுத்து மன்னன் கையில் கொடுத்தார்.
“கண்ணழகியை இங்கு வரச்சொல்லும் “ என்று மன்னன் இரண்டாவது கட்டளையை இட்டான்.
அச்சுதர் சிறிது யோசித்தார். இளவரசியார் அந்தப் புரத்திலிருக்கிறார்…” என்று சுட்டிக்காட்டினார்.
“எந்தப்புரத்திலிருந்தாலும் இங்கு வரவழையும் அவளை” என்றான் மன்னன்.
“அரசமகளிர் ஆலோசனை மண்டபங்களுக்கு வரும் வழக்கமில்லை”- அமைச்சர் இதைச் சற்று அழுத்தமாகவே சொன்னார்.
அரசன் நகைத்தான் அச்சுதரை நோக்கி. அந்த வழக்கம் இன்று மாறுகிறது” என்று சொன்னான்.
அரசன் பிடிவாதம் அமைச்சருக்குத் தெரிந்திருந்ததால் அவர் மேற்கொண்டு ஏதும் பேசாமல் இளவரசியை அழைத்து வரத்தாமே சென்றார். சிறிது நேரத்தில் இளவரசியுடன் திரும்பிய அமைச்சர் “மன்னவா! இளவரசியார் வந்திருக்கிறார்கள்”
என்றார்.
அதுவரை சிந்தனையில் மூடியிருந்த கண்களைத் திறந்து விஜயாலயன் தனது கையிலிருந்த ஓலையை எடுத்து “கண்ணழகி! இதைப் பார்” என்று அவள் கையில் ஓலையைத் திணித்தான்.
ஓலையைப் படித்த கண்ணழகியின் முகத்தில் பெரும் குழப்பம் தெரிந்தது. இந்தக் கையெழுத்தை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றாள் குரலிலும் குழப்பம் தெரிய.
அரசன் அவள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே கேட்டான், “இது பெண்ணின் கையெழுத்தா?” என்று.
“இல்லை”- கண்ணழகியின் பதில் திட்டமாயிருந்தது.
“அடியில் தேவியின் கையொப்பமிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினான் விஜயாலயன்.
“கையொப்பத்தில் யார் பெயரை வேண்டுமானாலும் போடலாம்” என்றாள் கண்ணழகி.
“சரி, சற்றுச் சிந்தித்துப் பார். இந்தக் கையெழுத்து உனக்கு ஏற்கனவே மிகப் பழக்கமானது. அடிக்கடி இதைப் பார்க்கும் சந்தர்ப்பம் உனக்கிருந்திருக்கிறது” என்று அரையும் குறையுமாக விளக்கினான் விஜயாலயன்.
கண்ணழகி ஓலையில் திரும்பவும் கண்களை ஓட்டினாள். திடீரென அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “தந்தையே! புரிகிறது! எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புரிகிறது” என்றாள் சினம் குரலில் பெரிதாக ஒலிக்க.
“இந்தக் கையெழுத்துக்குடையவன் இடும் கட்டளை களுக்கெல்லாம் அடியில் நீ கையொப்பமிட்டிருக்கிறாய் முன்பு” என்று சுட்டிக்காட்டிய மன்னன், பஞ்சணையில் சாய்ந்த நிலையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.
இளவரசி தலையை இரு முறை ஆட்டி! “ஆம் தந்தையே ஆம்” என்றாள்.
அவர்கள் இருவர் உரையாடலிலிருந்தும் ஏதும் புரிந்து கொள்ள முடியாத அச்சுதப் பேரறையர் அமைச்சரும் உங்கள் ரகசியத்தில் கலந்து கொள்வது தவறாகாது” என்று உணர்த்தினார் மன்னனையும் அவன் மகளையும் நோக்கி.
விஜயாலயன் மந்திரியை ஏறெடுத்து நோக்கினான். “இதில் ரகசியத்துக்கு இடம் ஏதுமில்லை. இந்த ஓலையை எழுதியவன் இளையவேள்” என்று ஒரு வெடியை எடுத்து அச்சுதர்மீது வீசினான்.
அச்சுதர் பிரமிப்பில் ஆழ்ந்தார். “அவன் கையெழுத்து எனக்கு நன்றாகத் தெரியுமே. கரூரில் அவன் சேரர் படைத் தலைவனாயிருந்தபோது பல உத்தரவுகளை எனக்கே அனுப்பியிருக்கிறானே” என்று கூறிவிட்டு இளவரசியிடமிருந்த
ஓலையை வாங்கி மீண்டும் பார்த்தார். “ஆம், ஆம் சந்தேகமில்லை. அந்த அயோக்கியன் கையெழுத்துதான்” என்றார் கோபத்துடன். “என்ன துணிச்சல் அவனுக்கு இத்தகைய ஓலையை நமக்கு அனுப்ப?” என்று சீறவும் செய்தார். “மன்னவா!
இந்த ஓலை அவன் எழுதியதென்று தங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்றும் கேட்டார்.
மன்னவன் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. “இதைப் பார்த்ததும் இது பெண் கையெழுத்து அல்லவென்று தீர்மானித்தேன்…” என்ற அரசனை இடைமறித்த அச்சுதர் “அப்படியென்ன பெண் கையெழுத்துக்கும் ஆண்
கையெழுத்துக்கும் வித்தியாசம்?” என்று வினவினார்.
“பெண் கையெழுத்து அவர்களைப் போல அழகாக குண்டு குண்டாக தெளிவாயிருக்கும். கைகளின் மென்மை காரணமாக எழுத்தாணி ஓலையில் ஆழமாகப் பதியாது. ஆண் கையெழுத்து அப்படியல்ல. அநேகமாகக் கிறுக்கு எழுத்தாக
இருக்கும். முரட்டுத்தனமாக எழுத்துக்கள் ஓலையில் ஆழப் பதிந்திருக்கும். சிருஷ்டி சகலத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாட்டைத் தந்திருக்கிறது” என்று விளக்கினான் மன்னன்.
இதைக் கேட்ட அச்சுதர் அசைவற்று நின்றார். எதையும் நொடிப்பொழுதில் கண்டுபிடிக்கும் மன்னன் கூரிய அறிவைக் கண்டு பெரிதும் வியந்தார். மன்னவா! உங்களை யாரும் ஏமாற்ற முடியாது” என்று பாராட்டவும் செய்தார்.
மன்னன் நகைத்தான். அத்துடன் கேட்டான். “அச்சுதரே! அந்தக் கடிதத்தின் வாசகத்தைப் பார்த்தீரா?” என்று.
“பார்த்தேன். தேவி தங்களைப் போருக்கு வரும்படி அறைகூவியிருக்கிறாள். செந்தலை இளவரசியென்ற முறையிலும், அதன் படைத்தலைவி என்ற முறையிலும் அந்த அறை கூவலிருக்கிறது” என்றார் அமைச்சர்.
“அமைச்சரே! பெரும்பிடுகனைப் போன்ற ஒரு வீரன் தனது மகளைப்போல் வளர்த்து வரும் ஒரு பெண்ணை அறை கூவல் விடச்செய்து அவள் மறைவில் போர் தொடுப்பானென்று நினைக்கிறீரா?” என்று கேட்டான் மன்னன்.
“மாட்டான்” என்று அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.
“பெண் செந்தலை படைத்தலைவியானால் நீர் அவளை எதிர்த்துப் போர் செய்வீரா?” என்று இன்னொரு கேள்வியை அரசன் வீசினான்.
“மாட்டேன்”- அமைச்சர் பதில் திட்டமாயிருந்தது.
“இளையவேள் எப்படியாவது இந்தப் போரைத் தடுக்க முயல்கிறான். ஒரு பெண்ணுக்கு எதிராக நாம் போரில் இறங்க மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியும். இதில் இன்னொரு அந்தரங்கமும் இருக்கிறது. பெண்ணை படைக்குத்
தலைமை வகிக்கச் செய்து ஏன் மறைகிறாய் என்று முத்தரைய பூபதிக்கு நாம் பதில் ஓலை அனுப்பினால் பெரும்பிடுகர் முன்கோபத் தால் விளைவுகளைப் பாராமல் உறையூர் மீது கண்மூடித்தனமாக வருவார். அப்பொழுது அழிந்து
விடுவார் என்ற எண்ணமும் ஓலையை அனுப்பியவனுக்கு இருக்கிறது. என்ன காரணத்தாலோ இவன் பெரும்பிடுகரை அவமானப்படுத்தவும் அழிக்கவும் பார்க்கிறான்” என்ற மன்னன், “இப்பொழுது தூதனை வரவழையுங்கள்,
விசாரிப்போம்” என்றான்.
சில விநாடிகளில் அரசன் சன்னிதானத்துக்கு வரவழைக்கப்பட்ட தூதன் நடுங்கிக்கொண்டு நின்றான். அவனை மன்னனே விசாரிக்கத் தொடங்கி, “நீ எந்த ஊர்?” என்று வினவினான்.
“நான்… நான்…” என்று தயங்கினான் தூதன்.
“உண்மையைச் சொல், தப்பலாம்” என்றார் அச்சுதர்.
“நான் இந்த ஊர்தான்.”
“என்ன வேலை?”-அரசன் கேட்டான் சாதாரணமாக.
“குயவன்.”
“இந்த ஓலையை உன்னிடம் யார், எப்பொழுது கொடுத்தார்கள்?”
“நேற்றிரவு ஒருவர் கொடுத்தார். இதைத் தங்களிடம் கொடுத்து விடும்படி சொன்னார். மிக முக்கியம் என்றார். கைநிறையப் பொற்கழஞ்சுகள் கொடுத்தார்.”
“அவர் எப்படி இருந்தார்?”
“உயரம் பருமனாக இருந்தார், ராட்சதன் மாதிரி பெரும் கண்கள். மீசையும் பயங்கரமாயிருந்தது. ஓலையை ஒழுங்காகக் கொடுக்காவிட்டால் என்னை வெட்டிப் போடுவதாகச் சொன்னார்”-இதைச் சொன்ன தூதன் நடுங்கினான்.
அத்துடன் அவனை மீண்டும் சிறைக்கனுப்பிவிட்ட அரசன், அச்சுதரை நோக்கிக் கேட்டான், “இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது?” என்று.
“இளையவேள் நமது நகரிலிருக்கிறான் என்று தெரிகிறது” என்றார்.
“இல்லை ஒலையைக் கொடுத்ததும் போயிருப்பான்” என்றான் மன்னன்.
“எங்கே?” என்று கேட்டார் அச்சுதர்.
“ஒரு ஊகம் இருக்கிறது. ஆனால், திட்டமாகச் சொல்ல முடியாது” என்ற மன்னன், “அச்சுதரே! ஒன்று திட்டமாகப் புரிகிறது. பெரும்பிடுகர் என்ன காரணத்தாலோ இவனைச் செந்தலையிலிருந்து விரட்டியிருக்கிறார், அல்லது இங்குள்ள
நிலையை வேவு பார்க்க அனுப்பியிருக்கிறார். ஆகையால்…” என்ற விஜயாலயன் பஞ்சணையிலிருந்து எழுந்து நின்றான்.
“ஆகையால்…” என்று அமைச்சர் வினவினார்.
“நமது படை நாளைக்கு மறுநாள் நகரப்போவதில்லை. இன்று இரவே நகரும். அதற்கான ஏற்பாடுகள் நடக்கட்டும்” என்று உத்தரவிட்டான்.
“இத்தனை துரிதம் ஏன்?” என்று கேட்டார் அமைச்சர்.
“சுபஸ்ய சீக்ரம்” என்ற வடமொழி வாக்கியத்தைச் சொன்ன விஜயாலயன், “சுப காரியங்களில் தாமதம் கூடாது” என்றான்.
அரசன் ஏதோ ஆழ்ந்த கருத்துடன்தான் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறானென்ற காரணத்தால் பதிலேதும் பேசாத அமைச்சர் உத்தரவு மன்னவா!” என்று கூறித் திரும்பிச் செல்ல இரண்டடி எடுத்து வைத்தார்.
“இன்னும் ஒரு விஷயம்” என்றான் மன்னவன்.
சற்றே திரும்பி அரசனை நோக்கிய அச்சுதர், “என்ன மன்னவா?” என்று கேட்டார்.
“நீர் உறையூரில் என்ன செய்யப்போகிறீர்?” என்று வினவினான் மன்னன்.
“இதென்ன கேள்வி மன்னவா? அரசாங்க அலுவல்கள் இல்லையா? போருடன் எல்லாம் முடிந்துவிடுகிறதா?” என்று அச்சுதர் கேட்டார்.
அரசன் புன்முறுவல் கொண்டான். “அன்றாட அரசியல் விவகாரங்களைக் கவனிக்க மற்ற அமைச்சர்கள் இருக்கிறார்கள்” என்று சொன்னான் முறுவலின் ஊடே.
“அப்படியானால் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்ற அமைச்சர் விழித்தார்.
“நீங்கள் கருவூருக்குச் செல்லுங்கள். கண்ணழகியையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினான் மன்னன்.
“ஏன் மன்னவா?” அதிர்ச்சியுடன் கேட்டார் அமைச்சர்.
“கருவூர் கண்ணழகிக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அங்குள்ள செண்பகப்பூவில் அவளுக்குள்ள ஆசை சொல்லி முடியாது. தவிர, தை மாதமும் வருகிறது. நாக பூஜையும் செய்யலாம்” என்ற மன்னன், “இல்லையா கண்ணழகி?”
என்று மகளை நோக்கி கேட்டான்.
விஜயாலயன் காட்டிய காரணங்களில் அமைச்சருக்கும் திருப்தியில்லை; மகளுக்கும் திருப்தியில்லை. “தங்கள் உத்தரவு” என்றார் அச்சுதர். கண்ணழகி காரணமின்றித் தலையசைத்தாள். அவள் விழிகளில் சிந்தனை நிரம்பிக் கிடந்தது.

.
விஜயாலயன் சிந்தனை ஓட்டம் இருவருக்குமே விளங்கவில்லை.

Previous articleMohana Silai Ch 45 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here