Home Historical Novel Mohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

83
0
Mohana Silai Ch 47 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 47 ஆதித்தன் பாதுகாப்பு

Mohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

வாழ்க்கையில் அசாதாரணமான காரியங்களைப் புரிபவர்கள் வீண் ஆலோசனையில் காலம் கழிப்பதில்லை. இது நடக்கவேண்டிய விஷயம் என்று தீர்மானித்ததும் முடிவுகளை உடனடியாக எடுக்கிறார்கள்; உடனடியாக
நிறைவேற்றுகிறார்கள். விஜயாலயன் அப்பேர்ப்பட்ட திடமான, எதிலும் சந்தேகக் கலப்பில்லாத, நிர்ணயமான புத்தியை உடையவனாதலால் இருந்த அறையிலேயே அமைச்சருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
“அமைச்சரே! இன்றிரவு நமது படை செந்தலை நோக்கி நகருகிறது. அதன் புரவிப் பிரிவுக்கு இதயகுமாரனும், ரதப் பிரிவுக்கு என் மகன் ஆதித்தனும் தலைமை வகித்துச் செல்கிறார்கள். இரண்டு பிரிவுகளும் இயங்க வேண்டியதற்கான
பொது உத்தரவுகளை நான் நமது பட்டத்து யானையிலிருந்து அறிவிப்பேன். நீர் கண்ணழகியை அழைத்துக்கொண்டு நாளைக் காலையில் கருவூர் வஞ்சிக்கு நூறு வீரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு செல்லும். கருவூர்
சென்றதும் அதன் கோட்டை வாயிலில் அதிகக் காவல் வேண்டாம், அதிகத் தடைகளும் வேண்டாம். சுமாரான பாதுகாப்புப் போதும்” என்று கட்டளையிட்டான்.
மிதமிஞ்சிய வியப்புடனும் பயபக்தியுடனும் கட்டளைகளைக் கேட்டுக்கொண்ட அச்சுதப் பேரறையர் இரண்டு சந்தேகங்களைக் கேட்டார். “யானைப் படையை ஏன் அழைத்துப் போகவில்லை? கருவூர் பாதுகாப்பை ஏன் வலுப்படுத்தக்
கூடாது?” என்று வினவினார் அச்சுதர்.
சோழ தேவன் தனது சிந்தனைக் கண்களை அமைச்சர் முகத்தில் பதியவிட்டான். “முத்தரையர்களிடம் யானைப் படையில்லை. புரவிப்படைதான் இருக்கிறது. ஆகவே அவர்களை சமபலத்தால் வெற்றிகொள்வதுதான் நீதி. தவிர,
செந்தலையில் பலமான கோட்டை கொத்தளங்கள் கிடையாது. யானைகளைக் கொண்டு கதவுகளைப் பிளக்கும் வேலை இல்லை. இரண்டாவது, நான் செந்தலையைத் தாக்கும்போது முத்தரையர் இரண்டாவது யுத்தரங்கமொன்றை
அமைக்க, கருவூரை ஒரு படைப் பிரிவைக்கொண்டு தாக்கலாம். அப்படி ஏதாவது ஏற்பட்டால் அதை சமாளிக்கத்தான் உங்களைக் கருவூர் அனுப்புகிறேன்” என்றான் விஜயாலயன்.
மன்னன் சொற்களில் சிறிது முரண்பாடு இருப்பதை அச்சுதர் கவனித்தார். ஆகையால் கேட்டார், “கருவூரை முத்தரையர் தாக்கக் கூடும் என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்க, அதன் பாதுகாப்பைப் பலவீனமாக வைக்கச்
சொல்கிறீர்கள்” என்று.
மன்னன் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. “முத்தரையர் கருவூரைத் தாக்கமாட்டார்கள். ஒரு வேளை தாக்கினால் நீர் அங்கிருப்பது நல்லது என்று நினைத்தேன். கருவூர் படைகளைப் போருக்கு சித்தமாக வைத்திருங்கள்
வெளிக்கு சன்னத்தம் தெரியவேண்டாம். தேவையானால் கதவுகளை அடைத்துத் தற்காப்பு செய்துகொள்ள அதிக நேரமாகாது” என்று மன்னன் சப்பைக்கட்டு கட்டினான் முதல் உத்தரவுக்கு.
மன்னன் மனத்தில் அவன் வெளியிடும் சொற்களைத் தவிர, வேறு சிந்தனைகள் உறைந்து கிடப்தைப் புரிந்து கொண்டதால் அச்சுதர் விடவில்லை. “மன்னவா! வர வர என் புத்தி மந்தமாகிக்கொண்டு வருகிறது” என்றார் பொய்
வருத்தத்தை முகத்தில் காட்டி.
மன்னன் புன்முறுவல் கொண்டு, “அப்படியா!” என்று என்று கேட்டான்.
“ஆம் மன்னவா.”
“உதாரணம் சொல்லுங்கள்.”
“எதிரி படையெடுத்தாலும் படையெடுக்காவிட்டாலும் போர்க் காலங்களில் நகரங்கள் நல்ல பாதுகாப்பில் வைக்கப்படுவதுதான் முறை. எதிரி படையெடுத்த பின் அவசர அவசரமாகப் பாதுகாப்பை இறுக்கும் விந்தையை இதுவரை
நான் பார்த்ததுமில்லை கேட்டதுமில்லை” என்று அமைச்சர் கூறி மன்னனை உற்று நோக்கினார்.
மன்னன் கண்கள் மந்திரியின் கண்களைச் சந்திக்க மறுத்தன. நிலத்தைப் பார்த்துக்கொண்டே பேசினான் சோழ வேந்தன். “எதற்கும் ஒரு ஆரம்பம் உண்டு. நீர் கூறிய விந்தை நமது போரில்தான் ஆரம்பமாகட்டுமே. ஒரு நாடு
எப்பொழுதும் போருக்குச் சன்னத்தமாக இருக்கும் சமயங்களும் உண்டு, சன்னத்தமாக இல்லாத சமயங்களும் உண்டு. அப்படி இல்லாத சமயத்தில் சோழர் படை பலம், நினைத்த மாத்திரத்தில் இயங்கும் திறமை, இவை எப்படி
இருக்கிறதென்று பார்ப்போமே.”
மேற்கொண்டு அமைச்சரைக் கேள்வி கேட்க விடாத விஜயாலயன், அமைச்சரே! என் மகன், இதயகுமாரன், மற்ற படைத்தலைவர்கள் எல்லோரையும் இங்கு வரவழையுங்கள்” என்று உத்தரவிட்டான்.
அமைச்சர் நின்றவண்ணமே விஜயாலயனைச் சில விநாடிகள் உற்று நோக்கினார். பிறகு சிந்தனை வசப்பட்டவராய் வெளியே சென்றார். விஜயாலயன் அந்த அறையை விட்டுநகரவில்லை. அடுத்த சில நாழிகைகளில் அந்த அறைக்கு வந்த
படைத்தலைவன் இதயகுமாரனையும், இளவரசன் ஆதித்தனையும், இதர உபதளபதிகளையும் ஒரு முறை அளவெடுத் தான் தனது கண்களால், “இன்றிரவு நமது படைநகருகிறதென்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்”
என்று எந்தவித உணர்ச்சியுமற்ற குரலில் அறிவித்தான் விஜயாலயன், எதிரே யுத்த சன்னத்தமாய் நின்ற மகனையும் மற்றவர்களையும் நோக்கி.
“மன்னர் சித்தம்” என்றான் மகன்.
“புரவிப்படை அணிவகுத்து நிற்கிறது” என்றான் படைத்தலைவன் இதயகுமாரன்.
“இன்றிரவு நல்ல நிலவு ஆரம்பத்திலேயே இருக்கிறது” என்றான் அரசன்.
“ஆம்.” – அமைச்சர் ஆமோதித்தார்.
“இரவு ஏறி எட்டாவது நாழிகையில் படை நகரும். நான் சித்தமாக வந்துவிடுகிறேன்” என்று கூறிய மன்னன், அமைச்சரை நோக்கி, “அச்சுதரே! நமது சதுரங்கப் பலகையை எடுத்து வாரும்” என்றான். அமைச்சர் எடுத்து வந்து
கொடுத்ததும் அதைத் தனது மஞ்சத்தில் வைத்து வெள்ளிக் குப்பியிலிருந்த காய்களைப் பலகையில் நிரப்பி, தகுந்த இடங்களில் நிற்க வைத்தான். “அமைச்சரே! ஆதித்தா! இதயகுமாரா! கவனியுங்கள்” என்று கூறிவிட்டு, காய்களை
நிதானத்துடன் நகர்த்தலானான். நாலைந்து காய்களை மட்டும் சில கேந்திர ஸ்தானங்களில் நிறுத்திவிட்டு, “படைத்தலைவரே! இந்த நிலை எப்படி?” என்று கேட்டான்.
இதயகுமாரன் பதில் சொல்வதற்குப் பதில் எதிரிலிருந்த காய்களை நகர்த்தி விஜயாலயன் காய்களை நகர முடியாமல் செய்துவிட்டான். அதைக் கண்ட மன்னன் மிகுந்த உற்சாகத்தைக் காட்டினான். “இதயகுமாரா! இத்தகைய இக்கட்டான
நிலையை முத்தரையர் சிருஷ்டித்தால் அதிலிருந்து எப்படித் தப்புவாய்?” என்று வினவினான்.
“நிலையில் எந்த இக்கட்டுமில்லை” என்றான் இதயகுமாரன்.
“இதோ செந்தலையிலிருந்து வெளிவருகிறது முத்தரையர் புயல்வேகப் புரவிப்படை. நமது படையைக் கிழித்துக் கொண்டு வேல் போல் உள்ள புகுந்து விடுகிறது. இதோ இந்தக் காலாட்கள் – காய்கள் – நாம். இவை பிளக்கப்பட்டால்
நமது படையின் கதி என்ன?” என்றுமன்னன் வினவி சதுரங்கப் பலகையில் தான் நிறுத்தியிருந்த காய்களைச் சுட்டிக்காட்டினான்.
“இந்தக் காலாட் படை இரண்டாகிறது. அந்த இரண்டும் பக்கவாட்டில் திரும்புகிறது. சுவர்போல் வாட்களால் எதிரிப்படையை இருபுறமும் தாக்கிக்கொண்டு நெருக்குகிறது. அந்தச் சமயத்தில் ரதத்திலுள்ள நமது வில்லவர் அம்புகளை
எய்கிறார்கள். அதுவரை எட்ட நிற்கும் நமது புரவிப்படை இயங்குகிறது. எதிரியின் புரவிப்படை நமது காலடாட் படையை ஊடுருவிக் கடைசிப் பகுதிக்கு வந்ததும் சரேலென்று எதிரியின் புரவிப்படையைத் தாக்கும். இதனால் எதிரியின்
முகப்பு தாக்கப்படுகிறது. பக்கவாட்டில் காலாட் படையின் நெருக்கம் ஏற்படுகிறது. அதாவது எதிரியின் இரு விலாப் புறங்கள், முகம், மூன்றும் தாக்கப்படுகின்றன். மேற்புறத்தில் ரத வீரர்களின் அம்புகள் விழுகின்றன.
விளைவைப்பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை” என்று விளக்கினான் இதயகுமாரன்.
மன்னன் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. “ஆதித்தா! நீ என்ன நினைக்கிறாய்?” என்று அபிப்பிராயம் கேட்டான் இளவரசனை.
இளவரசன் சிந்தனை எதிரேயிருந்த சதுரங்கப்பலகையில் இல்லை. எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. ஆகவே மன்னன் கேள்வி கேட்டதும் கனவிலிருந்து விழித்தவன் போல் பிரமை தட்டிய பார்வையைத் தந்தை மீது வீசினான். அவன்
பார்வையிலிருந்த குழப்பத்தைப் புரிந்து கொண்ட மன்னன், ‘ஆதித்தா! நமது போர்த் திட்டத்தை நீ கவனிக்கவில்லைா?” என்று வினவினான்.
“இல்லை” – ஆதித்தன் பதில் சட்டென்று வந்தது.
“ஏன்?”- அரசன் கேள்வியில் சற்றுக் கடுமை இருந்தது.
“முத்தரையரை நாம் வெற்றிகொள்வது நிச்சயம். செந்தலையும் தஞ்சையும் நமது கையில் விழுவது திண்ணம்” என்றான் ஆதித்தன் அலட்சியமாக. “அந்த வெற்றியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வெற்றிக்குப் பிறகு என்ன செய்யப்
போகிறோம்?” என்று கேள்வியையும் தொடுத்தான் இளவரசன்.
மைந்தன் மனத்திலோடியது புரியாமலில்லை விஜயாலயனுக்கு. “ஆதித்தா! நேராகக் கேள். யார் உயிர் உனக்கு வேண்டும்?” என்று வினவிய விஜயாலயன் ஆசனத்திலிருந்து எழுந்தான்.
“பெரும்பிடுகர் உயிர்” என்றான் ஆதித்தன்.
விஜயாலயன் நகைத்தான் பெரிதாக. “ஆதித்தா! நீ ஒரு முட்டாள். பெரும்பிடுகன் வீரன். யார் உயிர்ப் பிச்சை கொடுத்தாலும் வாங்க மாட்டான். போர் செய்து களத்தில் இறப்பான். இதில் சந்தேகம் வேண்டாம்” என்றான்.
“பெரும்பிடுகர் உடல் நிலை சரியில்லை” என்றான் ஆதித்தன்.
“ஆதனால்?”
“போருக்கு வராதிருக்கலாம். அப்படிப் போரிடாமல் அவர் நின்றுவிட்டால் என்ன செய்ய உத்தேசம்?” என்று ஆதித்தன் வினவினான்.
இந்த இடத்தில் அச்சுதர் இடைபுகுந்தார், “சிறை செய்வது வழக்கம்” என்று தெரிவித்தார்.
“அந்த வழக்கத்தை அனுமதிப்பதற்கில்லை. யாரும் பெரும்பிடுகர் மீது கையை வைக்க முடியாது” என்றான் வீரனான ஆதித்தன்.
அவன் குரலில் அதிகாரம் மிதமிஞ்சி ஒலித்தது. விஜயாலயன் மகனை அனுதாபத்துடன் பார்த்தான். மன்னனின் தீர்க்க தரிசனத்தில் பெரும்பிடுகரின் முடிவு என்னவென்று தீர்மானமாயிருந்தது.
ஆதித்தன் முத்தரைய பூபதிக்கு அளிக்க முயலும் பாதுகாப்பு எவ்வளவு அர்த்தமற்றது என்பதை விஜயாலயன் சந்தேகமறப் புரிந்து கொண்டிருந்தான்.

Previous articleMohana Silai Ch 46 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here