Home Historical Novel Mohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

70
0
Mohana Silai Ch 48 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 48 மனிதனின் முதல் விரோதி

Mohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

விஜயாலயன் மந்திராலோசனையை முடித்த மறுநாள் காலை பெரும்பிடுகு முத்தரையரின் உடல்நிலை முந்திய தினங்களைவிட சிறிது க்ஷணதசை அடைந்திருந்தாலும், அவர் சற்றும் முனகாமலும் யாரையும் தம்மைத் தூக்க
ஒத்தாசைக்கு அழைக்காமலும் கட்டிலின் பக்கங்களைப் பிடித்துக்கொண்டு தாமே எழுந்து உட்கார்ந்தார். அவருக்குப் பணிவிடை செய்ய எதிரே கையில் ஒரு செம்பில் வெந்நீருடனும் இன்னொரு கையில் ஆலங்குச்சியுடனும் நின்றிருந்த
இளவரசி தேவி, முத்தரைய பூபதியின் கஷ்டத்தையும் நோயின் கடுமையையும் புரிந்து கொண்டாலும் அவருக்கு எந்த விதத்திலும் உதவ – முன்வராமல் சிலையென நின்றிருந்தாள், முகத்தில் துன்பக்களை விரிய.
அந்தக் கமல முகத்தில் விரிந்த வருத்தச் சாயையைக் கவனித்த பெரும்பிடுகர் லேசாக நகைத்தார் அத்தனை துன்பத்திலும். இந்தக் கிழவனைப் பார்த்து அனுதாபப்பட இந்த உலகத்தில் ஒரு ஜீவனும் இருக்கிறது” என்று கூறினார் நகைப்
பின் ஊடே.
தேவி தனது வளர்ப்புத் தந்தையின் கையில் ஆலங்குச்சியைக் கொடுத்துவிட்டு, சற்று எட்ட சாளரத்திலிருந்த பித்தளைத் தட்டை எடுத்து வந்து அவருக்கு எதிராகப் பிடித்துக்கொண்டாள். ஆனால், முத்தரைய பூபதி பல்துலக்க
ஆலங்குச்சியை வாயில் வைத்துக் கடிக்கவில்லை. அதைக் கையில் பிடித்த வண்ணம் கேட்டார், “தேவி! ஏனிப்படி பேசாமடந்தையாகி விட்டாய்?” என்று.
அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. “பாவம், என் மீது உனக்கு எத்தனை அனுதாபம்!” என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்துத் தமது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
தந்தையின் அருகில் அமர்ந்த தேவி, “உங்கள் மீது எனக்கு அனுதாபமில்லை” என்று கூறினாள் திடமான குரலில்.
“வேறு என்ன?” என்று வினவினார் முததரையர்.
“வருத்தம், கோபம்.”
“அப்பா! இரண்டா?”
“ஆம்.”
“எதற்காக?”
“உங்கள் உடல்நிலை கண்டு வருத்தம். பிடிவாதத்தைக் கண்டு கோபம்.”
முத்தரைய பூபதி கையிலிருந்த ஆலங்குச்சியை வாயில் செருகிப் பற்களால் கடித்துக்கொண்டு தேவியின் முதுகைத் தடவிக் கொடுத்தார் செல்லமாக. அவருடைய கை ஸ்பரிசத்திலிருந்த ஆதரவு அவள் உடம்பைச் சிலிர்க்க வைத்தது.
அப்படித் தடவிய வண்ணம் வாயின் இடது பக்கத்தில் ஆலங்குச்சியை நகர்த்திக்கொண்டு சொன்னார் பெரும்பிடுகர்: “மகளே! வியாதி எப்படி உடன் பிறக்கிறதோ அப்படியே மனிதன் குணமும் உடன் பிறக்கிறது. வியாதியைக்
குறைக்கலாம் மருந்தால். குணத்தை மாற்ற உலகத்தில் மருந்து கிடையாது.”
இதைக் கேட்ட தேவி பெருமூச்செறிந்தாள். “அப்பா! நீங்கள் ஏன் என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள்?” என்று வினவவும் செய்தாள்.
“உன்னையா! சித்ரவதை செய்கிறேனா! நானா!” என்று வியப்புடன் சொற்களைக் கொட்டினார் முத்தரைய பூபதி.
“ஆம். உங்களைத் தூக்கி உட்காரவைக்க அனுமதி தர மறுக்கிறீர்கள். மருந்தை மருத்துவர் கொடுத்தால் அவர் மீது அதை எறிகிறீர்கள்…” என்றாள் தேவி துன்பம் தோய்ந்த குரலில்.
பெரும்பிடுகர் இடியிடியென நகைத்தார். “மகளே! அந்த மருத்துவன் ஒரு முட்டாள். எனக்கு ஏதோ பஸ்பம் கொடுக்க வந்தான். அது என்னைத் தூங்கவைக்கும் என்று சொன்னான். மனிதன் ஆயுளில் பாதி காலம் தூங்குகிறான்! தவிர,
மருந்து சாப்பிட்டு வேறு தூங்கவேண்டுமா? தூக்கம் மனிதனின் விரோதி. அதுவும் எதிரி படையெடுத்து வரும் போது தூங்குவது முட்டாள்தனம்” என்று கூறினார் நகைப்பின் ஊடே.
“படையெடுப்பா!” என்று குரலில் வியப்பு துலங்க வினவினாள் தேவி.
“ஆம். சோழர் படையெடுப்பு” என்றார் முத்தரையன்.
“எப்பொழுது? என்று?” தேவியின் கேள்வியில் கவலை இருந்தது.
“என் ஊகம் சரியானால், நேற்றிரவு சோழர் படை நகர்ந்திருக்கும் தஞ்சை நோக்கி.” முத்தரையர் குரலில் தெளிவும் நிதானமும் அலட்சியமும்கூட இருந்தன. அடுத்து அவர் ஏதும் பேசாமல் ஆலங்குச்சியால் வேகமாகப் பல்துலக்க
முற்பட்டார். அத்தனை வயோதிகத்திலும் அவர் மனம் போலவே உறுதியுடனிருந்த பற்களில் ஆலங்குச்சி கரகரவென்ற ஒலியை எழுப்பிக்கொண்டு வேகமாகச் சென்றது. பிறகு தேவி கொடுத்த நீரால் வாயைக் கொப்புளித்தார், அவள்
எதிரே நீட்டிய தட்டில்! அவர் வாய் கொப்புளித்து முகம் கழுவி முடிந்ததும் தேவி தனது முந்தானையாலேயே அவர் முகத்தைத் துடைத்தாள். பிறகு ஒரு குவளையில் பால் கொண்டுவந்து கொடுத்தாள்.
“அது என்ன? பாலா?” பெரும்பிடுகர் கேள்வியில் வெறுப்பும் கசப்பும் இருந்தன.
“ஆம். உங்கள் உடல் இருக்கும் நிலையில் வேறு என்ன கொடுக்க முடியும்?” என்று கேட்டாள் தேவி.
“மதுவுக்கு என்ன?” என்று வினவினார் பெரும்பிடுகர்.
“காலையில் கொடுக்கக் கூடாதென உத்தரவு” என்றாள் தேவி.
“யார் உத்தரவு?” கடுமையுடன் எழுந்தது பெரும்பிடுகர். கேள்வி.
சிறிது தயங்கினாள் தேவி. “மருத்துவர் உத்தரவு” என்றாள் சிறிது நேரம் கழித்து.
“அவன் வரட்டும். அவனைதலையைத் திருகிவிடுகிறேன். நான் உத்தரவிடுகிறேன். கொடு மதுவை நிரம்ப’ என்று உரக்கக் கூவினார் பெரும்பிடுகர்.
அவர் கூவியதைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை தேவி. “மது கொடுக்க முடியாது” என்று திட்டமாக அறிவித்தாள். அத்துடன் “பாலைக் குடியுங்கள்” என்று உத்தரவும் இட்டாள்.
“தேவி!மகளே! பால் வேண்டாம். மதுவைக் கொடு” என்று குழந்தைபோல் கெஞ்சினார் பெரும்பிடுகர்.
தேவியின் அஞ்சன விழிகளில் நீர் மல்கியது. இரண்டு துளிகள் கன்னங்களிலும் வழிந்து ஓடின. அரசுகளை நடுங்க வைத்த அந்த மகாவீரன் குழந்தை போல் தன்னிடம் கெஞ்சுவதை அவளால் தாங்க முடியவில்லை. அவள் கண்களில்
நீர் தேங்கியபோதே கவனித்த முத்தரைய பூபதி, அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதைப் பார்த்ததும் முரட்டுத்தன மாக பாலைக் கடகடவெனக் குடித்தார். பிறகு தமது கைகளால் அவள் கண்ணையும் கன்னங்களையும்
துடைத்தார். “மகளே! இன்னும் இரண்டு நாளில் செந்தலையை ஆளப்பேகிற பெண் கண்ணீர் விடக்கூடாது” என்றார்.
அத்தனை துன்பத்திலும் புன்னகை கொட்டினாள் தேவி. “செந்தலையை நான் ஆளப்போகிறேனா!” என்றாள் கேலி ஒலித்த குரலில்.
அவள் கேள்வியில் ஒலித்த கேலியைக் கவனிக்கத் தவறவில்லை பெரும்பிடுகர். “இதில் கேலிக்கு இடமில்லை. பெண்கள் அரசாள்வது வரலாற்றில் புதிதல்ல” என்று சுட்டிக்காட்டினார்.
“இருக்கட்டும். இந்த அரசுக்கென்ன? பிள்ளையில்லையா, பேரன் இல்லையா?” என்று கேட்டாள் தேவி.
பெரும்பிடுகர் சிறிது சிந்தித்தார். “பேரன் இருக்குமிடம் தெரியவில்லை. எதிரியின் படை நகர்ந்துவிட்டதை அறியாமல் பிள்ளை உறங்குகிறான். விழித்திருப்பவர்தான் இந்த அரசை ஆளமுடியும். ஓடாதிருப்பவன்தான் செந்தலையைக்
காக்க முடியும்” என்றார் பெரும்பிடுகர்.
அவர் சொற்களின் உண்மையை, மனத்தில் துளிர்த்ததாபத்தைப் புரிந்து கொண்டாள் தேவி. ஆகவே கேட்டாள், “திரும்பத் திரும்ப சோழர் படையெடுப்பைப் பற்றிச் சொல்கிறீர்களே. அதைப் பற்றி அண்ணனுக்குத் தெரியாமலா
இருக்கும்?” என்று.
“தெரிந்தால் மாறன் தூங்க மாட்டான்” என்றார் பெரும்பிடுகர்.
“சோழர் படை நீண்ட நாளாகத்தான் போருக்குச் சித்தமாயிருக்கிறது.”
“நாம் தூங்கும் சமயத்தில் நகருகிறது. நேற்று விஜயாலயன் புறப்பட்டிருக்க வேண்டும்” என்று திட்டமாகச் சொன்னார் பெரும்பிடுகர்.
“அப்படியானால் இன்னும் நமக்குச் செய்தி வராதிருக்குமா? தஞ்சைக்கும் உறையூருக்கும் மூன்று காத தூரந்தானே. எதிரி படை புறப்பட்டிருந்தால் இன்று மாலை செந்தலை முன்பு தோன்ற வேண்டுமே!” என்று கேட்டாள் தேவி.
“உன் அண்ணன் மாறனாயிருந்தால் அப்படித்தான் செய்வான். ஆனால், சோழன் மிக அறிவாளி. நேராக இங்கு வரமாட்டான். படைகளைச் சுற்றிவளைத்து அழைத்து வருவான். ஒரு நாள் கழித்து தஞ்சையில் தளம் அமைப்பான். பிறகு…”
இந்த இடத்தில் பெரும்பிடுகர் பேய்ச்சிரிப்பாகச் சிரித்தார்.
தேவியின் முகத்தில் கவலை தெரிந்தது. “பிறகு என்ன அப்பா?” என்று கேட்டாள் கவலை குரலிலும் ஒலிக்க.
“என்னன சரணடையும்படி தூது அனுப்புவான்” என்று கூறிய பூபதி இன்னும் அதிகமாக நகைத்தார்.
“வீணாகக் கற்பனை செய்கிறீர்கள்…”
“இல்லை தேவி. இது சோழர் முறை. ஆனால், அந்தத் தூது சம்பிரதாயத்தை ஒட்டித்தான் வரும். உண்மையில் என் குணம் விஜயாலயனுக்குத் தெரியும்.”
இப்படிப் பெரும்பிடுகர் பேசிக்கொண்டிருந்தபோது வெளித்தாழ்வரை அதிர நடந்து வந்து அந்த அறையின் வாயிற்படியில் நின்றான் மாறன் பரமேசுவரன். “காலையில் எதற்காக நகைக்கிறீர்கள் தந்தையே? என்ன விந்தை
நிகழ்ந்துவிட்டது?” என்று வினவினான் மாறன், தனது உறக்கக் கண்களை அகல விரித்து.
“நீ விழித்துக் கொண்டுவிட்டாய்” என்றார் பெரும்பிடுகர் விஷமமாக.
“விழிப்பதில் விந்தையென்ன இருக்கிறது?” என்று வினவினான் மாறன் பரமேசுவரன்.
“சிலர் விழித்தால் விந்தைதான்…” என்று இழுத்தார் பெரும்பிடுகர்.
மாறன் பரமேசுவரன் முகத்தில் சினம் துளிர்த்தது. “நான் தூங்கவே கூடாதா?” என்று கேட்டான் சினம் குரலில் சுடர்விட.
“தூங்கலாம். எதிரி வராதிருந்தால் பெரும்பிடுகர் குரலில் அதிக இகழ்ச்சி ஒலித்தது.
“எந்த எதிரி?”
“அதுகூட மறந்துவிட்டதா உனக்கு? இப்பொழுதிருப்பது ஒரே எதிரி, மகா வீரன்.”
“யார்?”
“விஜயாலயன்.”
“சோழனா?”
“சோழதேவன்.”
“எதிரிக்கு மரியாதையா?”
“வீரனாயிருக்கும் யார் மீதும் எனக்கு மதிப்பு உண்டு.”
இதைக் கேட்ட மாறன் பரமேசுவரன், “சோழனைக் கண்டு நடுங்குகிறீர்கள்” என்று கூறிக்கொண்டு தந்தையை நெருங்கினான்..
பெரும்பிடுகர் முகத்தில் இகழ்ச்சியின் சாயை பெரிதாக விரிந்தது. “ஆம்; நடுங்குகிறேன்” என்றார் இகழ்ச்சியைக் குரலிலும் படரவிட்டு.
“எதற்காக நடுக்கம்?”
“சோழன் இந்தச் செந்தலையை வெற்றிகொண்டால் நமக்கு தயவு காட்ட முன்வருவான். பிறர் காட்டும் தயவு எனக்கு வேப்பங்காய்.”
“நமக்கு என்றால்?”
“உனக்கு, உன் மகனுக்கு.”
“உங்களுக்கு?”
“அதைப் பெற நானிருக்க மாட்டேன்.”
“ஏன்?”
“நாளைக்கு மறுநாள் போர்க்களத்தில் மடிவேன்.”
“ஏது போர்க்களம்?”
மீண்டும் நகைத்தார் பெரும்பிடுகர். அந்தச் சமயத்தில் தூதன் ஒருவன் அவசரமாக வந்து முத்தரைய பூபதிக்குத் தலை வணங்கி. “நேற்றிரவு சோழர் படை நகர்ந்து விட்டது” என்று அறிவித்தான். “தங்களைக் காண படைத் தலைவர்
மூவர் வந்திருக்கிறார்கள்” என்றும் விண்ணப்பித்துக் கொண்டான்.
இதைக் கேட்ட மாறன் பரமேசுவரன், “இதை ஏன் முன்பே என்னிம் சொல்லவில்லை” என்று வீரனை நோக்கிக் கர்ஜித்தான்.
“இப்பொழுதுதான் சோழ நாட்டிலிருந்து வருகிறேன்” என்றான் தூதன்.
“என் அறைக்கு வராமல் தந்தையை ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று சீறினான் மாறன்.
“நீ உறங்குகிறாய் என்று நினைத்திருப்பான், மகனே! உறக்கம் மனிதனின் முதல் விரோதி” என்று மாறனை நோக்கி அறிவித்த பெரும்பிடுகர் நோயை லட்சியம் செய்யாமல் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, செய்தி கொண்டு வந்த வீரனை
நோக்கி, “படைத் தலைவர்களை வரச்சொல்” என்று உத்தரவிட்டார். அவர் குரலில் கம்பீரமிருந்தது, உறுதியிருந்தது. மகனையும் நோக்கி, “நீயும் சீக்கிரமாக வந்து சேர்” என்று கூறினார்.
மாறன் விரைந்தான் தனது அறையை நோக்கி. தேவியும் போக எழுந்தாள். “நீ இரு” என்று அவளைப் பக்கத்தில் இருத்திக்கொண்டார் பெரும்பிடுகர்.
“நான் எதற்கப்பா?” என்றான் தேவி.
“முடிவுகளை எடுக்க” என்றார் முத்தரையர்.
“நானா?”
“ஆம்.”
“ஏன்?”
“இங்கு எனக்கு அடுத்தபடியாக அறிவு இருப்பது உனக்குத்தான்” என்றார் பெரும்பிடுகர்.
தேவி மௌனம் சாதித்தாள். அவள் உள்ளத்தில் விவரிக்க இயலாத உணர்ச்சிகள் எழுந்து உலாவின.

Previous articleMohana Silai Ch 47 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here