Home Historical Novel Mohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

82
0
Mohana Silai Ch 49 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 49 இரும்புச் சுவர்கள் நகர்ந்தன

Mohana Silai Ch 49 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

வயதேறிய நிலையிலும் கிழச்சிங்கம் போல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த பெரும்பிடுகு முத்தரையரின் உத்தரவுப்படி உள்ளே நுழைந்த படைத்தலைவர் மூவரும் அவருக்கு மட்டுமின்றி அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளவரசிக்கும்
தலைவணங்கி நின்றனர். மூவரில் சற்று முதியவராயிருந்த படைத்தலைவர் கூறினார், “நமது முப்பிரிவும் போருக்குச் சித்தமாயிருக்கின்றன” என்று.
அவருக்கு அடுத்தபடி நின்ற நடுத்தர வயதாயிருந்தவர், “வழக்கப்படி ஆயுதங்கள் ஆலைகளில் செப்பனிபடப்பட்டுவிட்டன. தேவைக்கு மேல் மூன்று பங்கு ஆயுதங்கள் தாங்கள் கூறியபடி சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.
இளைஞராயிருந்த மூன்றாவது படைத்தலைவர், “செந்தலையின் மூன்று பக்கங்களும் படைவீரரால் மூடப்பட்டுவிட்டன. யாரும் உள்ளே நுழையவோ, வெளியே செல்லவோ முடியாது” என்று தாம் செய்துள்ள பணியை விளக்கினார்.
தனது மூன்று படைத்தலைவர்களையும் பார்த்த பெருமை பிடுகர் முகத்தில் பெருமைக்குறி பெரிதும் படர்ந்தது. அந்த சமயத்தில் உள்ளே கையில் ஒரு மதுக்குவளையுடன் நுழைந்த மாறன் பரமேசுவரன், “இந்த ஏற்பாடுகள் எத்தனை
நாட்களாக நடக்கின்றன?” என்று கடுமை நிரம்பிய குரலில் கேட்டான்.
“பத்து நாட்களாக” என்று கூறிய முதிய படைத்தலைவர், மாறனுக்குச் சிரம் தாழ்த்தி வணங்கினார்.
மாறன் முகத்தில் கோபம் அதிகமாகத் துளிர்த்தது. “இதைப் பற்றி ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று வினவினான் சீற்றம் தணியாத குரலில்.
முதிய படைத்தலைவர் பதில் சொல்லவில்லை. பெரும்பிடுகரை நோக்கினார். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட மாறன் பரமேசுவரன் “தந்தையே!” என்று கர்ஜித்தான்.
“என்ன மாறா?” சர்வ சாதாரணமாகக் கேட்டார்.
“என்னிடம் இந்த ஏற்பாடுகளைச் சொல்லவேண்டாமென்பது தங்கள் உத்தரவா?” என்று வினவினான் மாறன். அவன் விழிகள் பெரிதாக உருண்டன.
பெரும்பிடுகர் இதழ்களில் இளநகை அரும்பியது. தமது இரண்டு விரல்களால் அடிஉதட்டைப் பிடித்துக்கொண்டு விஷமமாக ஏதோ சிந்தித்தார். பிறகு, “உன்னிடமென்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. யாரிடமும் சொல்ல
வேண்டாமென்று உத்தரவிட்டேன். தேவியிடம்கூட இதைப் பற்றிச் சொல்லவில்லை” என்று கூறி தேவியைத் தனக்கு அருகில் இழுத்துக்கொண்டார்.
“தேவியிடம்கூட என்றால் என்ன அர்த்தம்?”
“எப்பொழுதும் என்கூட இருக்கிறாள். பணிவிடை செய்கிறாள். எதையும் ஊகிக்கும் சக்தியுள்ளவள். தவிர நீ இள வரசன். அவள் இளவரசி. இருவருக்கும் வித்தியாசம் காட்டு வது மன்னனுக்கு அழகல்ல”- இப்படிச் சொன்ன
பெரும்பிடுகர் மகனை விஷமக் கண்களுடன் நோக்கினார்.
மாறன் தீ விழி விழித்தான். “அப்படியானால் இவளை வைத்துக்கொண்டு போரை நடத்துங்கள்” என்றான் இகழ்ச்சி ததும்பிய குரலில் தா அந்த இகழ்ச்சியைப் பெரும்பிடுகர் கவனிக்கத் தவறவில்லை. அதைவிட இகழ்ச்சியுடன் அவர் பதில்
சொன்னார், “அது பயனுள்ளதாயிருக்கும். ஆனால், எதிரி ஒப்புக்கொள்ளமாட்டான்” என்று.
தந்தையின் இகழ்ச்சித் தொனியைக் கவனிக்கவே செய்தான் மாறன் பரமேசுவரன். ஆனால், அவன் நிதானத்தைச் சிறிதும் இழக்கவில்லை. மெள்ள கட்டுப்படாத தனது உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டான். “தந்தையே!
நமக்குள் வீண் தர்க்கம் வேண்டாம்” என்றான் சிறிது பணிவுடன்.
“அது உனக்குப் புரிந்துவிட்டதைப் பற்றி மகிழ்ச்சி. இப்பொழுது கேள். விஜயாலயன் நாளை மறுநாள் தஞ்சையில் பாசறை அமைப்பான். பிற்பகல் அவன் படை நம்மை நோக்கி வரும். அவனை எதிர்கொள்ள நமது மூவாயிரம் புரவி
வீரர்களுடன் நீ சித்தமாயிரு” என்று கூறிவிட்டுப் படைத்தலைவர்களை நோக்கி “சரிதானே?” என்று கேட்டான்.
“முற்றிலும் சரி” என்றார் முதிய படைதலைவர்.
பெரும்பிடுகர் இன்னொரு கேள்வியை வீசினார், “எதிரியின் பலம் எப்படி?” என்று.
இங்கு இடைபுகுந்த மாறன், “விஜயாலயன் யானைப் படை என்ன ஆயிற்று?” என்று வினவினான்.
“உறையூரைக் காத்து நிற்கிறது” என்றார் படைத் தலைவர்.
இங்கு குறுக்கிட்டார் பெரும்பிடுகர். “அதல்ல காரணம்” என்றார்.
“வேறு என்னகாரணம்?’-வியப்பிருந்தது மாறன் குரலில்.
“நம்மிடம் யானைப்படையில்லை” என்று சுட்டிக் காட்டினார் பெரும்பிடுகர்.
“ஆம்” – மாறன் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது.
“அதனால் விஜயாலயன் யானைப் படையைக் கொண்டு வரவில்லை.”
“நம்மிடம் அனுதாபம் போலிருக்கிறது?”
“இல்லை. அவன் சுயசக்தியில் நம்பிக்கை உள்ளவன். தவிர, விஜயாலயன் பெரும்படை பலத்தால் மட்டும் முத்தரையரை வெற்றி கொண்டான் என்று பெயர் எடுக்க விரும்பவில்லை. சோழமன்னன் கூடியவரை சமபலத்தால், யுக்தியால்,
திறமையால் வென்றான் என்று புகழ் சம்பாதிக்கப் பார்க்கிறான்.”
“புகழால் என்ன பயன்?”
“அது வீரர்களுக்குத்தான் புரியும்” என்று முடிவு கட்டினார் முத்தரைய பூபதி.
தந்தையின் பேச்சு பழைய தினுசுக்குச் சென்று விட்டதை உணர்ந்த மாறன், வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டதை உணர்ந்தான். ஆகையால் பேச்சை வளர்த்தாமல், “சரி தந்தையே, நாளைக்கு மறுநாள்
போர்க் களத்தில் எதிரியைச் சந்திக்கிறேன்” என்று கூறித் தலைவணங்கித் திரும்பிச் செல்ல முற்பட்டான். கையிலிருந்த குவளையிலிருந்து சிறிது மதுவையும் அருந்தினான்.
முத்தரைய பூபதி அவனைப் போகவிடவில்லை. “இப்படி வா, உட்கார்” என்று அழைத்து மைந்தனுக்குத் தமக்கு அருகில் உட்கார இடம் காட்டினார். மாறன் உட்கார்ந்ததும், அவன் முதுகையும் செல்லமாகத் தடவிக் கொடுத்தார். பிறகு
சொன்னார்: “மாறா! உன் வீரத்திலோ, படைகளை நடத்திச்செல்லும் திறமையிலோ எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பல வெற்றிகளை அடைந்திருக்கிறாய். உறையூரையே ஒரு முறை சூறையாடியிருக்கிறாய். ஆனால், நீ காரணமின்றி
புரிந்த சில செயல்கள் உன் வாழ்க்கையயைப் பாதித்திருக்கின்றன. உன் வாழ்க்கையை மட்டுமல்ல, வீர சமுதாயமான முத்தரையர்களையும் பாதித்திருக்கிறது. கடந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. வரும் போரின் முடிவு எனக்கு ஓரளவு
தெரியும். ஆனால், வீரனாயிருப்பவன் விளைவுகளைப் பற்றிக் கவனிப்பதில்லை. போர்களத்தில் தனதுகடமையைச் செய்கிறான். நமது படைகளை இம்முறை நீயே இயக்குவாய். இந்த மூன்று படைத்தலைவர்களுக்கு இணையாக
எதிரிப்படையில் யாருமில்லை. ஆனால் விஜயாலயனைப் பற்றி எச்சரிக்கையாயிரு. நாளைக்கு மறுநாள் நமது படைகள் நகரும்போது அவற்றின் முன்னணியில் நீ நிற்பாய் படைகளை நடத்த. பக்கத் தில் நானிருப்பேன்.”
மிக உணர்ச்சியுடன் இப்படிப் பேசிய முத்தரைய பூபதி சிறிது நிதானித்தார். அதுவரை மௌனமாயிருந்த தேவி கேட்டாள், “நீங்களா அப்பா?” என்று.
“ஆம். என் மகன் பக்கத்தில் வேறுயார் நிற்கமுடியும்?” என்று கேட்டார் பூபதி.
“நானிருக்கிறேனே” என்றாள் தேவி. “அண்ணா! நான் வருவதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே?” என்று மாறனையும் கேட்டாள்.
மாறன் விழித்தான் பதில் என்ன சொல்வதென்று. முத்தரைய பூபதியே பதில் சொன்னார். “பெண்களை முன் வைத்து வீரர்கள் போராட முடியாது. அப்படிப் போர் நடந்தால் மாறனுக்கும் இழுக்கு. எனக்கும் இழுக்கு. தவிர போரும்
நடக்காது” என்றார்.
“ஏன்?” தேவியின் கேள்வியில் சினமிருந்தது.
“அந்தக் கிழவன் சும்மா இருக்கமாட்டான்…” என்று கூறிநகைத்தார் பெரும்பிடுகர்.
“எந்தக் கிழவன்?”
“இங்கு சிறையிலிருந்து தப்பினானே அந்த ஆதித்த கிழவன்!”
“அப்பா”
“பிறகு குமாரனாகிவிட்டானே, அவன்.”
“அப்பா!”
“அந்த ஆதித்தன் உன்னைப் பார்த்ததும் வாளைக் கீழே எறிந்துவிட்டு உன்னை நோக்கி ஓடிவருவான். ஓடி வந்து…”
“அப்பா!”
“அப்படியே தூக்கிப் போக முயல்வான்.”
“சும்மா இருக்கிறீர்களா இல்லையா?”-சீறினாள் இளவரசி.
“தூக்கிப் போனால் நாங்கள் ஏதும் செய்ய முடியாது” என்ற முத்தரையர் பெரிதாக நகைத்தார். மாறனும் அவர் நகைப்பில் கலந்து கொண்டான். ஏதோ மேகங்கள் கலந்து இடிப்பது போலிருந்த நகைப்பைக் கண்டு வெகுண்டாள்,
வெட்கமடைந்தாள் தேவி.
“தூக்கிப்போனால் உங்கள் கை பூப்பறிக்குமா?” என்றாள்.
“அவன் கைதான் பூப்பறிக்கும். பறித்து உன் தலையில் சூட்டும்.ஒஹஹோ, ஒஹ்ஹோ…” என்று மீண்டும் நகைப்பு இடிகளை உதிரவிட்டார் பெரும்பிடுகர். மாறனும் அந்த ராட்சஸச் சிரிப்பில் கலந்து கொள்ளவே கட்டிடமே
அதிரும்படியாக இருந்தது. சிரிப்பின் ஊடே முத்தரைய பூபதி சொன்னார், “அப்படி ஏதாவது ஏற்பட்டால் விஜயாலயன் எனக்குச் சம்பந்தி. போர் செய்ய முடியாது” என்று.
படைத்தலைவர் மூவரும், பெரும்பிடுகரும் மாறனும் சிரித்த சிரிப்பில் கலந்து கொள்ளவில்லையானாலும் இதழ்களில் முறுவலைக் காட்டினார்கள். தேவி மிதமிஞ்சிய வெட்கத்தாலும் வெட்கம் கலந்த கோபத்தாலும், “வாயை
மூடுகிறீர்களா இல்லையா?” என்று இரைந்து பெரும்பிடுகர் வாயை மூடினாள் தனது ஒரு கையால், இன்னொரு கையில் பால் குவளை இருந்த காரணத்தால்.
மூடுகிறேன் என்பதற்கு அறிகுறியாக முரட்டுக் குழல்கள் கொண்ட தலையைப் பெரிதாக அசைத்ததார் பெரும்பிடுகர்.
அத்துடன் அன்று மந்திராலோசனை முடிந்தது. அன்று வரை இருந்த அவரது வியாதி எங்கோ பறந்துவிட்டது. அன்றும் மறுநாளும் வெகு சுறுசறுப்புடன் இருந்தார் பெரும்பிடுகர். இருமுறை தேவியை அணைத்து நெற்றியில்
முத்தமிட்டார்.
மறுநாளைக்கு மறுநாள் விஜயாலயன் படை செந்தலை முன்பு தோன்றிய போது பெரும்பிடுகர் பூரண போருடை அணிந்து பட்டையான தமது பயங்கர வாளையும். நீண்ட வேலையும் இரு கைகளில் தாங்கி நின்றார். அந்தக்
கோலத்திலேயே விஜயாலயன் தூதனைச் சந்தித்தார்.
சோழ தேவன் தூதனாக வந்த இதயகுமாரன் நிமிர்ந்த தலையுடன் தூதை அறிவித்தான். “முத்தரைய பூபதி அவர்களே! விஜயாலய சோழதேவர் தாங்கள் பெருவீரர் என்பதை உணருகிறார். இருப்பினும் தங்கள் உடல்நிலை சரியில்லை
என்று கேள்விப்படுகிறார். ஆகையால் வீண் ரத்தக் களறியைத் தடுக்க உங்களைச் சரணடையச் சொல்கிறார்” என்று சுருக்கமாகச் சொன்னான்.
பெரும்பிடுகர் அப்பொழுது தமது புரவியின்மீது அரண்மனைச் சதுக்கத்தில் போருக்குத் தயாராக நின்றிருந்தார். இதயகுமாரனைப் பரிவுடன் நோக்கினார். “தூதனே! உன் உடல் நிலை தேறிவிட்டதைக் காண மகிழ்ச்சியடைகிறேன்.

.
விஜயாலயன் மகளுக்காகவாவது உன்னைக் காப்பாற்றிக் கொள். ஆதித்தனையும் பார்த்துக்கொள். இல்லாவிட்டால் தேவி…” என்றவர் வாசகத்தை முடிக்கவில்லை. திடீரென குரலை மாற்றி, “சொல் சோழனிடம் என் குணம் அவனுக்குத்
தெரியுமென்று. நானிருக்கும் கோலத்தைச் சொல். வீணாகப் போரைத் தாமதிக்கச் சொல்லாதே. இன்னும் ஒரு நாழிகைக்குள் என் படை பாய்ந்து வரும்” என்று கணீரென்ற குரலில் – அதிகாரத் தோரணை சொட்டிய கம்பீர ஒலியில் பதில்
கூறினார் பெரும்பிடுகர்.
அவரை வணங்கித் தனது புரவியைத் திருப்பிக் கொண்டு விரைந்தான் இதயகுமாரன். அவன் சென்றதும் தமது பக்கத்தில் நின்ற மாறனிடம், “படைகள் இப்பொழுதே மெதுவாக நகரட்டும். ஒரு நாழிகையில் போர்க்களச் சமவெளியை
அடையும். உடனே புயல் வேகத்தில் புரவிப்படையின் மூன்று பகுதிகளும் எதிரிமீது பாய்ந்து ஊடுருவட்டும்” என்று உத்தரவிட்டார் பெரும்பிடுகர்.
மாறன் வாளை உயர்த்தினான். மூன்று இரும்புச்சுவர்கள் நகருவது போல் முத்தரையர் படை நகர்ந்தது.
ஒரு நாழிகை கழித்து சமவெளிக்கு வந்ததும் பெரும்பிடுகர் வாளை உயர்த்தி, “ஹோ!” என்று கூவினார். அதே கூச்சலைக் கிளப்பிய முத்தரையரின் படை வாயுவேகத்தில் விஜயாலயன் படைகளை மோதி ஊடுருவிச் சென்றுவிட்டது.

Previous articleMohana Silai Ch 48 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 50 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here