Home Historical Novel Mohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

96
0
Mohana Silai Ch 5 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 5. இலக்கியக் காட்சிகள்! இரகசியச் சிறை!

Mohana Silai Ch 5 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

வஞ்சிக் காவலர் இரத்தினக் கொல்லன் இல்லத்தை வளைத்துக் கொண்ட செய்தியைக் கேட்ட வஞ்சி நகர்ச் செல்வியின் அஞ்சன விழிகளில் அச்சத்தின் சாயை ஒரு விநாடி படர்ந்ததென்றாலும், அடுத்த விநாடி அது மறைந்து பெரு வியப்பு
அவள் வதனத்தை ஆட்கொண்டது. காவலர் சூழ்ந்து விட்ட கதையை இரத்தினக் கொல்லன் இரத்தினச் சுருக்கமாக, அது ஏதோ நடக்கவேண்டிய விஷயம்போல் சர்வ சாதாரணமாகத் தெரிவித்ததையும், அந்தச் செய்தியைக் கேட்ட புது
மனிதரோ, தன்னைத் துணிகரமாககத் தூக்கிக் கொல்லர் இல்லத்துக்கு அனுப்பி வைத்த இளைய முரடனோ அணுவளவும் கவலைப்படாததையும், போதாக்குறைக்கு அவன் அறைக் கதவையும் தாளிட்டுவிட்டுத் திரும்பியதையும்
கண்ட அரசகுமாரி வியப்பின் உச்சநிலையை அடைந்தாள். கதவைத் தட்டி அதை உடைத்து விடுவதாக மிரட்டியவன் குரலைக் கேட்டதும் அரசகுமாரி சிறிது கவலைக்கும் உள்ளாகி மிரண்ட பார்வையை அறையிலிருந்த மற்ற மூவர் மீதும்
செலுத்தியதன்றி, “கதவைத் தட்டுவது இளையவேள்” என்றும் அறிவித்தாள்
அந்த அறிவிப்பை ஏற்கும் நிலையிலோ அதைப்பற்றி ஆராயும் மனப்பான்மையிலோ இல்லாத மற்ற மூவரில் இதயகுமாரன் மிகத் துரிதமாக இயங்கினான். “அச்சுதரே! உங்கள் அடுத்த அறைக்கு வழி எது?” என்று வினவினான்.
பதிலுக்கு இரத்தினக்கொல்லர், சுவரில் ஒரு வாளுக்குப் பிடிபோலவும், வேங்கையின் கண்கள் போலவும் பதிக்கப் பெற்றிருந்த இரத்தினக் கூட்டத்தைச் சுட்டிக் காட்டினார்.
அதன் மர்மத்தை அவர் பார்வையிலிருந்தே புரிந்து கொண்ட இதயகுமாரன், “அரசகுமாரி! இப்படி வாருங்கள்” என்று தன்னைப் பின்பற்றி வரும்படி அரசகுமாரிக்குச் சைகை காட்டி இரண்டு எட்டில் அந்த வேங்கைப்பிடியை அடைந்து,
இடது கையில் தந்தச் சிலையைப் பிடித்த வண்ணம் இரத்தினக் கற்கள் ஐந்தின் மீதும் தனது வலது கை ஐந்து விரல்களையும் வைத்து அழுத்த சுவர் நகர்ந்தது. ஒருவர் செல்ல இடங்கொடுக்கவே அதற்குள் சென்ற இதயகுமாரன்
அரசகுமாரியையும் துரிதமாக வரும்படி ஜாடை காட்டினான்.
அவன் சொல்வதைத் தான் ஏன் பின்பற்ற வேண்டும் என்ற நினைப்பு உள்ளத்தே எழுந்தாலும் அதை அடக்கிக் கொண்ட அரசகுமாரி, இதயகுமாரனைப் பின்பற்றவே செய்தாள். சுவர் அளித்த சிறு இடைவெளி வழிக்குள் அவள்
நுழைந்ததும் அந்தச் சுவர் தானாகவே மூடிக்கொள்ளவே, அத்தனை காலையிலும் சுவருக்கு அடுத்த இடத்தில் இருளே அடித்துக் கிடந்ததையும், அந்த இருளை அகற்ற எதிர்ச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறு தங்க அகலின் சுடர்
அளித்த வெளிச்சமும் மிகவும் சொல்பமாகவே இருந்ததையும் கண்ட அரசகுமாரி அந்த இல்லத்தின் அமைப்பையும் மர்மத்தையுங் கண்டு பெரும் வியப்புக்குள்ளானாள். இரத்தின வாணிபத்தில் தமிழுலகம் புகழும் இரத்தினக்
கொல்லனான அச்சுதன் இப்படியொரு மர்ம மாளிகையைச் சிருஷ்டித்திருப்பானென்பதை அரசகுமாரி அன்றளவும் அறிந்திராததால், அந்த இல்லத்தில் இரத்தினத்தைத் தவிர பெரும் அரசியல் வியாபாரமும் நடப்பதைப் புரிந்து
கொண்டாள். அத்தனையிலும் ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை அவளுக்கு.
யாரும் அனுமதியின்றி புக அஞ்சும் வஞ்சிமாநகரில் புகுந்ததன்றி, இரத்தினக்கொல்லன் வீட்டு மர்மத்தையும் இதயகுமாரன் எப்படிப் புரிந்து கொண்டானென்பதை எண்ணிப் பார்த்து விடை கிடைக்காததால் திணறிய அவளை
மேலும் திணறவைக்கும் நடவடிக்கைகளில் வெகு துரிதமாக இறங்கிய அந்த சோழநாட்டு வாலிபன், அந்தக் குறுகிய இடை. வீட்டின் இரு சுவர்களையும் ஒரு விநாடியே பார்த்ததும் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையை
அசைத்து விட்டு எதிரேயிருந்த தங்க அகல்விளக்கைச் சிறிது பக்க வாட்டில் நகர்த்த, அந்த சுவரும் இடங்கொடுத்து கீழே இறங்கியோடும் படிகளைக் காட்டியதும் அரசகுமாரியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அவற்றில் இறங்க
முற்பட்டான்.
முதல் படியில் இருவரும் காலை வைத்தது மேபடிகளுக்கு மேலிருந்த சுவர் பழையபடி மூடிக்கொண்டதாலும், படிகளும் மிகக் குறுகலாயிருந்ததாலும் அரசகுமாரியின் உடல் இதயகுமாரன் மீது இலேசாக உராயவே சிறிது சலனப்பட்ட
அந்த வாலிபன், “அரசகுமாரி! நான் முன்னால் இறங்கிச் செல்கிறேன், நீங்கள் என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அடுத்த படியில் காலை வைத்து இறங்கினான். ஆனால், அரசகுமாரி அவனைத் தொடராமல் முதல்
படியிலேயே நின்றாள். அந்தப் படிகள் இறங்கியோடிய இடம் முந்திய இடை வீட்டைப் போல் இருளடித்து இல்லை. எங்கிருந்தோ அதில் சிறு வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது. ஓரிரு சூரியக் கிரணங்கள்கூட பக்கத்துச் சுவரொன்றில்
இரண்டடிக்கு அப்பால் பாய்ந்து இரண்டு ஒளிவட்டங்களை அமைத்திருந்தது. அந்த ஒளித்திட்டுகளையும் கவனித்து கீழே இறங்கிய வாலிபனையும் கவனித்த அரசகுமாரி, “இந்த இடத்திலிருந்து ஒரு அடிகூட நான் நகரமாட்டேன்” என்று
கூறினாள் உறுதி நிரம்பிய குரலில்.
இரண்டடிகளே இறங்கியிருந்த இதயகுமாரன் இதைக் கேட்டதும் சட்டென்று அவளை நோக்கித் திரும்பினான். அப்படி அவன் திரும்பியதால் வெளியிலிருந்து வந்த சூரிய கிரணங்களில் ஒன்றை அவன் முகம் மறைத்ததன் விளைவாக
அதன் சக்கிரவட்ட ஒளி அவன் முகத்தில் விழுந்து அந்த வீர முகத்துக்குப் பன்மடங்கு அதிக சோபையை அளித்தது. அப்படி சூரிய கிரண வட்டத்துடன் தேவ புருஷனைப் போல் காட்சி அளித்த சோழநாட்டு வாலிபன் கண்களில் விஷமம்
சிறிது துளிர் விட்டது. இதழ்களிலும் விஷமம் கலந்த புன்னகை விரிந்தது. “இந்த இடத்திலிருந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் அரசகுமாரி?” என்று வினவினான், அவன் சொற்களிலும் விஷமத்தின் ஒலி ஊடுருவ.
அவன் கண்களில் பளிச்சிட்ட விஷமச் சாயை, இதழ்களில் விரிந்த விஷமப் புன்முறுவல் இரண்டையும் கவனிக்கவே செய்தாள் அரசகுமாரி. அவன் குரலில் ஒலித்த துஷ்டத்தனம் கூட அவள் செவிகளிலிருந்து தப்பவில்லை.
இத்தனையையும் லட்சியம் செய்யாத அரசகுமாரி கேட்டாள், “என்ன செய்யப் போகிறேனென்பதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை?” என்று.
“கவலை இல்லாமலா உங்களை இரத்தினக் கொல்லன் இல்லம் அனுப்பினேன்? கவலையில்லாமலா உங்களை மேல் அறையிலிருந்து இந்த இடத்துக்கு அழைத்து வந்தேன்?” என்று வினவினான் இதயகுமாரன்.
அவன் சொற்களைக் கேட்ட அரசகுமாரிக்கு அவன் மீது சீற்றங் கொள்வதா, நகைப்பதா என்பது புரியவில்லை. “நீங்கள் கொண்டது என் மீது கவலையா? கதவை இடித்த காவலரைப் பற்றிய அச்சமா?” என்று வினவினாள் அரச குமாரி
இகழ்ச்சியுடன்.
அவள் சொற்களால் அவன் சீற்றமடைவானென்று அரசகுமாரி எண்ணியிருந்ததால் அவள் ஏமாந்தே போனாள். இதயகுமாரன் முகத்தில் வருத்தத்தின் சாயையே படர்ந்தது.
“அரசகுமாரி! இதயகுமாரனுக்கும் அச்சத்துக்கும் சம்பந்தமில்லையென்பதை இதுவரை நடந்த நிகழ்ச்சிகளே நிரூபித்திருக்கும் உங்களுக்கு. உங்களுக்கு ஆபத்து இல்லையென்று நிச்சயமாயிருந்தால் நான் இரத்தினக் கொல்லரின்
பட்டறையைவிட்டு அசைந்திருக்க மாட்டேன். அறைக் கதவை அடைத்திருக்கவும் மாட்டேன்” என்று திட்டமாகச் சொன்ன அவன் குரலிலும் வருத்தம் சிறிதளவு ஒலித்தது.
“எனக்கா! ஆபத்தா! என் வீரர்கள் வந்தால் எனக்கு என்ன ஆபத்து?” என்று வினவினாள் அரசகுமாரி.
“உங்களை என்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றிருப்பார்கள்” என்று சுட்டிக்காட்டினான் இதயகுமாரன்.
“அது ஆபத்தா!” வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது அரச குமாரியின் சொற்களில்.
“ஆம்.” மிகத் திட்டமாக வந்தது இதயகுமாரன் பதில்.
“ஏன்?”
“உங்களை எதற்காக இங்கு அனுப்பினேனோ அந்த உண்மையை அப்புறம் அறிய வழியிருக்காது.”
“எதற்காக அனுப்பினீர்கள் என்னை இங்கு?”
“ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பிறப்பின் மர்மத்தை அறிவதற்கு என்று.”
“என் பிறப்பில் என்ன மர்மம் இருக்கமுடியும்?”
“அது சீக்கிரம் தெரியும்.”
“எப்பொழுது?”
“இரத்தினக்கொல்லரும், நீங்கள் சற்று முன்பு சந்தித்த அந்த மனிதரும் மீண்டும் உங்களை நிதானமாகச் சந்திக்கும் போது.”
“எப்பொழுது சந்திப்பார்கள்?”
“வெகு விரைவில்” என்று கூறிய இதயகுமாரன், “வாருங்கள் அரசகுமாரி” என்று அழைக்கவும் செய்தான்.
அப்பொழுதும் அரசகுமாரி அசையவில்லை. “ஆரம்பத்திலிருந்து நீங்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள்” என்றாள் கோபத்துடன்.
இதயகுமாரன் கண்களில் துன்பச்சாயை படர்ந்தது. “என் வாயில் பொய் வராது அரசகுமாரி” என்றான்.
“இந்த ஊருக்கு நீங்கள் புதியவர் என்றீர்கள்” என்று சுட்டிக் காட்டினாள் அரசகுமாரி.
“உண்மை அரசகுமாரி.”
“அப்படியானால் கோட்டை வாயிலிலிருந்து மூன்றாவது தெருவில் இரத்தினக் கொல்லர் இல்லமிருப்பது எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“இலக்கியம் படித்திருக்கிறேன்.”
“அதனால்?”
“நகர அமைப்பு தெரியும். வஞ்சி மாநகர் பழைய நகரங்களில் ஒன்று. தமிழகத்தின் பழைய நகரங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே அமைப்பு உள்ளவை. பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பல நூல்களிலும் நமது
நகரங்களின் அமைப்பு கூறப்பட்டிருக்கிறது. எதற்கும் ஒரு அகழி, கோட்டை, கோட்டையைச் சூழ்ந்துள்ள புறச்சேரியில் அரண்காவலர், படைக்குடியிருப்புகள், அந்நிய அரசர் தங்கும் மாளிகைகள், கோட்டைவாயிலை அடுத்த தெருவில்
நகர்க் காவலர் வீதி, அடுத்து மீன் வலைஞர், உப்பு வணிகர் முதலியவர் உறையும் வீதி, மூன்றாவது வீதியில் மங்கலம் செய்வோர், செம்புக் கொட்டிகள், வெண்கலக் கன்னார், பொற்கொல்லர், இரத்தினப் பணியாளர், நகர நடுவே அரசரின்
அரண்மனை- இப்படித்தான் நமது நகரங்களின் முக்கால்வாசி அமைப்பு. காலம் இவற்றில் சிலவற்றை அழித்துவிட்டாலும் பொதுவாக சங்ககால அமைப்பு பெரு நகரங்களில் மாறவில்லை. தவிர, இரத்தினக் கொல்லர் புகழ் சேர நாட்டில்
மட்டுமல்ல, தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது” என்று விளக்கிய இதயகுமாரன், “அரசகுமாரி! நாம் இங்கு நின்று கொண்டே பேசுவதில் பொருளில்லை வாருங்கள். இந்தப் படி எங்கு கொண்டு விடுகிறது பார்ப்போம்” என்று கூறி
விட்டுத் திரும்பி படிகளில் இறங்கினான்.
அவன் விளக்கத்தைக் கேட்ட அரசகுமாரி உணர்ச்சி பொங்க நின்றாள் சில விநாடிகள். பிறகு பேசாமல் படிகளில் இறங்கி நடந்தாள். சுமார் இருபது படிகள் இறங்கியதும் எதிரே தெரிந்த ஒரு கதவின் புலிப்பிடியை இதயகுமாரன் திருகவே
அந்தக் கதவு பிரும்மாண்டமான ஒரு அறைக்குள் திறந்தது. அந்த அறையைக் கண்ட இதயகுமாரன் மட்டுமின்றி அரச குமாரிகூட சொல்லொணா பிரமிப்பை அடைந்தாள். இரத்தினக் கொல்லன் பட்டறை அறையைவிட இரண்டு மடங்கு
பெரிதாயிருந்த அந்த அறையின் அமைப்பும் வேலைப்பாடும், சுவரின் சித்திரங்களும் பன்மடங்கு அதிக பிரமிப்பையே அளித்தன. சுவர்களில் சிலப்பதிகாரக் கட்டங்களும் மணிமேகலைக் காட்சிகளும் தத்ரூபமாகத் தீட்டப்பட்டிருந்தன.
ஒருபுறம் மாலை வீசிய மாதவியின் காமக்கண்கள். இன்னொரு புறம் கற்பின் அக்கினியை அள்ளிச் சொரிந்த கண்ணகியின் சீரிய விழிகள். இன்னொருபுறம் மணிமேகலையின் சாந்தம் ததும்பும் அனுதாபம் சொட்டும் கண்கள்
அவர்களை நோக்கின. ஒரு சுவரின் ஓரத்தில் இளங்கோ எழுத்தாணி. பிடித்து சிலப்பதிகாரக் காவியத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு சுவரின் ஓரத்தில் வள்ளுவரே உட்கார்ந்திருந்தார்.காவியமும் ஓவியமும் இணைந்து கலைச்
சோலையாக விளங்கிய அந்தப் பிரும்மாண்ட அறையைப் பார்த்துப் பிரமித்துப் பல விநாடிகள் நின்ற இதயகுமாரன் “அரசகுமாரி” என்றழைத்தான்.
அரசகுமாரி பதில் கூறவில்லை. அவள் கனவுலகத்தில் இருந்தாள். சில விநாடிகள் கழித்தே கேட்டாள். “என்னை அழைத்தீர்களா?” என்று.
“ஆம் அரசகுமாரி! இந்த அறையை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினான் இதயகுமாரன்.
“இல்லை” என்றாள் அரசகுமாரி.
“உள்ளத்தை அள்ளுகிறது” என்றான் இதயகுமாரன்.
அதை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தாள் அரசகுமாரி.
“இதை வரைந்த ஓவியன் யார் தெரியுமா?” என்று இதயகுமாரன் கேட்டான்.

.
“தெரியாது” என்றாள் அரசகுமாரி. அத்துடன் “இதை வரைந்தவன் இப்பொழுது இருக்கிறானோ இல்லையோ?” என்றும் கூறினாள்.
“இருக்கிறான்” என்ற ஒலி அந்த அறையின் ஒரு மூலையிலிருந்து வந்ததும் இருவரும் சட்டென்று அந்தத் திசையை நோக்கித் திரும்பினார்கள். அந்த மூலையில் சுவரில் சாய்ந்த வண்ணம் கூனனான ஒரு வயோதிகன் நின்றிருந் தான்.
அவன் தலை பூராவும் நரைந்திருந்தாலும் கண்கள் மட்டும் மிகத் தீட்சண்யமாக ஒளிவிட்டன. ஒரு விநாடி அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்த அந்த மனிதன் தனது பக்கத்தில் ஓவியத்தோடு ஓவியமாகத் தெரிந்த ஒரு சிறிய கதவைத்
திறந்துவிட்டு “அறைக்குள் செல்லுங்கள். ஆனால் அங்குள்ள எதையும் தொடவேண்டாம்” என்று கூறினான்.
இதயகுமாரன் அந்த மனிதனை அணுகி ஏற இறங்கப் பார்த்தான். பிறகு அரசகுமாரியை நோக்கி, “சரி, வாருங்கள் அரசகுமாரி” என்று, அரசகுமாரியையும் அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான். அடுத்த விநாடி அந்த
அறைக் கதவு டக்கென்று மூடப்பட்டது. வெறிபிடித்த பெருஞ்சிரிப்பு ஒன்று. மூடப்பட்ட கதவுக்கு வெளியே கேட்டது. இதயகுமாரன் கன வேகத்தில் திரும்பி கதவின் பிடியைப் பிடித்து இழுத்தான். கதவு திறக்கவில்லை. தானும்
அரசகுமாரியும் அந்த அறையில் சிறைப்பட்டு விட்டதை உணர்ந்தான். அதனால் சினத்தின் வசப்பட்ட இதயகுமாரன் இடது கையிலிருந்த தந்தச் சிலையை அரசகுமாரியிடம் கொடுத்துவிட்டு, கதவை உடைத்துவிட தனது இடையிலிருந்த
வாளை உருவிக்கொண்டு காலையும் உயர்த்தினான்.
“இருங்கள். இப்படிப் பாருங்கள்” என்ற அரசகுமாரியின் அச்சம் கலந்த குரல் அவனைத் திரும்ப வைத்தது. அரசகுமாரி அந்த அறையின் மூலையைச் சுட்டிக்காட்டினாள். அந்த மூலையைக் கண்ட இதயகுமாரன் கண்களில் விவரிக்க
இயலாத பிரமை விரிந்தது. அதிர்ச்சி மிகுந்த உணர்ச்சியின் விளைவாக நின்ற இடத்தில் சிலையென நின்று விட்டான். பக்கத்தில் நின்றிருந்த அரசகுமாரியின் கை ஆதரவைத் தேடி அவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டது. அப்படிப்
பிடித்த கை லேசாக நடுங்கவும் செய்தது.

Previous articleMohana Silai Ch4 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 6 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here