Home Historical Novel Mohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

81
0
Mohana Silai Ch 7 Mohana Silai Sandilyan, Mohana Silai Online Free, Mohana Silai PDF, Download Mohana Silai novel, Mohana Silai book, Mohana Silai free, Mohana Silai,Mohana Silai story in tamil,Mohana Silai story,Mohana Silai novel in tamil,Mohana Silai novel,Mohana Silai book,Mohana Silai book review,மோகனச்சிலை,மோகனச்சிலை கதை,Mohana Silai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai ,Mohana Silai full story,Mohana Silai novel full story,Mohana Silai audiobook,Mohana Silai audio book,Mohana Silai full audiobook,Mohana Silai full audio book,
Mohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

Mohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

மோகனச்சிலை – சாண்டில்யன்

அத்தியாயம் – 7. வரலாற்றின் வாயிலில்

Mohana Silai Ch 7 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

அரசகுமாரியின் அலறலைக் கேட்டு அதிர்ச்சியுற்ற இதயகுமாரன் சிலையின் சீலையை விட்டுத் திடீரெனத் திரும்பினானேயொழிய, கண்ணெதிரே தோன்றிய விபரீதக் காட்சியைக் கண்டதும் அவன் அதிர்ச்சி, அவசரம் எல்லாமே மறைந்து
விட்டன அவன் மனத்திலிருந்து. மிக நிதானமான பார்வையையே இதயகுமாரன் செலுத்தினான் கதவுக்ககருகில் அரசகுமாரியின் கழுத்துக்குக் குறுக்கே வாளை அழுத்தி நின்றிருந்தவனைப் பார்த்து. அந்த நிதானத்தை வந்தவன் தவறாகப்
புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகையால் சற்றுப் பெரிதாக நகைத்து “சோழநாட்டு வீரம் எங்கோ பறந்துவிட்டதாகத் தெரிகிறது” என்று கூறினான்.
இதயகுமாரன் கோபத்துடன் செயல்படும் சமயங்களை விட அவன் நிதானப்படும் நேரம் மிக அபாயமானதென்பது சோழநாட்டில் சர்வ சகஜமாகத் தெரிந்த விஷயமாயிருந்தாலும், கருவூரில் அது தெரியாததால் அரசகுமாரியைச்
சிறைப்படுத்தியவன், இதயகுமாரன் நிதானத்தை அடக்க மென்றும், கோழைத்தனத்தால் ஏற்பட்ட செய்கையென்றும் மதித்தான். தவிர, வந்தவன் வாலிபனாயிருந்தாலும் அவன் நல்ல உயரமும் பருமனுமாயிருந்ததால் அவனுக்கு உள்ள
வயது சிறிது அதிகமாகவே தெரிந்தது. நன்றாக வளர்ந்து பயங்கரமாக முறுக்கி விடப்பட்ட மீசையின் ஓரங்கள் இரண்டும் குத்தூசிகள் போல் நின்றிருந்ததாலும், கன்னக் கதுப்புகள் அளவுமீறிப் புடைத்திருந்ததாலும் ஏதோ ஒரு சின்ன
ராட்சதன் நிற்பது போலவே தோன்றியது அவன் தோரணை. உருண்ட பெரிய கண்களில் அச்சம் லவலேசமும் இல்லாததால் உண்மையில் அவன் பெரிய வீரனாகத்தானிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த இதயகுமாரன், இத்தனையிலும்
அந்தக் கண்களில் சிறிது சலனமும் இருந்ததால் அவன் பெரிய வஞ்சகனென்பதையும், வஞ்சகம் வீரத்தை ஓரளவு அடக்குகிறதென்றும் தீர்மானித்துக் கொண்டான்.
இதயகுமாரன் நிதானமும் போக்கும் மிக விசித்திரமாயிருக்கவே அரசகுமாரியைப் பிடித்திருந்த வாலிபன் வியப்பு நிரம்பிய கண்களை இதயகுமாரன் மீது நிலைக்க விட்டான். கையில் பாய்ந்த குறுவாளை எடுக்காமலும்,
அரசகுமாரியைக் காப்பாற்ற விரையாமலும் தன்னையே அவன் ஏன் உற்றுப் பார்க்கிறான் என்று நினைத்ததால், தான் எதிரியைப் பற்றி முதலில் போட்ட எடை தவறோ என்ற சந்தேகமும் வந்த வாலிபனுக்கு ஏற்படவே “ஏன் விழிக்கிறாய்?”
என்று வினவினான் சிறிது சீற்றத்துடன். என் இதயகுமாரன் ஏதோ சிந்தித்தான் ஒரு விநாடி. பிறகு அந்த வாலிப வீரனை நோக்கி “உன் தந்தை யார்?” என்று வினவினான் சர்வ சாதாரணமாக.
இந்தக் கேள்வி அந்த வாலிபனுக்கு விசித்திரமாயிருக்கவே “யாராயிருந்தால் உனக்கென்ன?” என்று வினவினான் எரிச்சலுடன்.
“உங்கள் வீடு சங்கு அறுப்பவர் வீதியிலிருக்கிறதா?”-இரண்டாவது கேள்வி நிதானமாக எழுந்தது இதயகுமாரனிடமிருந்து.
“என்ன உளறுகிறாய்?” சீறினான் அந்த ராட்சத வாலிபன்.
“உளறவில்லை. சங்கறுப்பவர் வீதியிலிருந்தால் நீ சங்கறுக்கும் ஜாதியாயிருக்க வேண்டும்” என்றான் இதயகுமாரன்.
“ஜாதியைப் பற்றி இங்கென்ன பேச்சு?” என்று கேட்டான் சிறிது குழப்பத்துடன் எதிரி.
“தொழிலைப் பொறுத்துத்தான் ஜாதி. அதனால் கேட்டேன்” என்ற இதயகுமாரனை சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி னான் அந்த வீரன். “எதைக்கொண்டு என்னைசங்கறுப்பவனென்று தீர்மானித்தாய்?” என்றும் வினவினான்
உஷ்ணத்துடன்.
“அரசகுமாரியின் கழுத்து வெண்மையான வலம்புரி சங்குபோல் இருக்கிறது. உன் கத்தி அதற்குக் குறுக்கே இருக்கிறது” என்று கூறினான் இதயகுமாரன்.
“வர்ணனையில் ஈடுபடுகிறீர்களோ? நீங்கள் கவிஞர் போலிருக்கிறது!” என்று இகழ்ச்சியுடன் நகைத்த அந்த வாலிபன் “அரசகுமாரி கழுத்தைவிட உங்கள் வலதுகையை நீங்கள் பார்ப்பது நல்லது” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.
இதயகுமாரன் இதழ்களில் குறுநகை விரிந்தது. “அதுவும் நியாயம்” என்று எதிரியை நோக்கி தலைதாழ்த்திய இதயகுமாரன், குறுவாள் பாய்ந்து விட்டதால் குருதி சொட்டிக் கொண்டருந்த தனது வலது கையையும், அதில்
அப்பொழுதும் தொக்கித் தொங்கிக் கொண்டிருந்த குறுவாளையும் நோக்கினான்.
அப்பொழுது சொன்னான் அந்த வாலிபன் “இளைவேள் வைக்கும் குறி என்றும் தவறியது கிடையாது” என்று. அடுத்த விநாடி இளையவேள் சிறிதும் எதிர்பாராத துரித சம்பவங்கள் நிறைவேறின. வலது கைக் குறுவாளைத் தனது
இடது கையால் சட்டென்று இழுத்துவிட்ட இதயகுமாரன் சரேலென்று நிமிர்ந்து அதே குறுவாளை எதிரியின் வாள் பிடித்த கையின் மேற்புறத்தின் மீது வீசினான். மின்னல் வேகத்தில் வீசப்பட்ட அந்தக் குறுவாள் தோளுக்குச் சற்றுக் கீழே
தைத்துவிட்டதால் அரசகுமாரியின் கழுத்தை அழுத்தி நின்ற பெருவாள் நிலத்தில் சட்டென்று விழுந்து விபரீத ஒலிகளை அந்த அறையெங்கும் பரப்பியது. அடுத்த விநாடி காலில் இரும்பு போல் ஏதோ பாயவே ஒரு புறமாகச் சாய்ந்து
விட்ட இளையவேளின் பெரும் கழுத்தின் குரல்வளை இதயகுமாரன் வலது கையின் இரும்புப் பிடியிலிருந்தது. இளைய வேளின் விழிகள் பிதுங்கும் நிலைக்கு வந்ததால் அவனை ஒரு புறமாக இதயகுமாரன் தள்ளவே சட்டென்று தரையில்
சாய்ந்த இளையவேள் பக்கவாட்டிலிருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.
அசுர வேகத்தில் நிகழ்ந்துவிட்ட அந்தச் சம்பவங்களால் நிலைகுலைந்து போன இளையவேள் மிகுந்த ஆச்சரியத்துடனும் மதிப்புடனும் இதயகுமாரனை நோக்கினான். இதயகுமாரன் அவனை நோக்கி “இளைய வேள்! நீ இரத்தினக்
கொல்லர் பட்டறைக்கதவை இடித்து அதட்டியதுமே அரசகுமாரி அச்சமுற்றாள். அதற்குக் காரணம் இருப்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன். நீ குறுவாளெறிந்த முறையிலிருந்து நீ பெரிய வீரன் என்பதை புரிந்து கொண்டேன்.
அதனால்தான் உன் கழுத்தை நோக்கிக் குறுவாளை நான் வீசவில்லை. வீசியிருந்தால் அது தவறாது. அரசகுமாரியைத் தொட்டதற்கே உன்னைக் கொன்றிருக்கலாம். தொட்டது மட்டுமல்லாமல் அவள் கழுத்துக்குக் குறுக்கே வாளை
அழுத்தியதற்கு நிச்சயமாகக் கொன்றிருக்கலாம். அது உனக்கு சரியான தண்டனையாகும். அதை நான் உனக்கு அளிக்காததற்கு என் வீரம் காரணம். தவறாத என் குறி காரணம். ஆனால் இளைவேள்…” என்ற இதயகுமாரன், வாசகத்தை
முடிக்காமல் விட்டான்.
இளையவேள் வலது கையில் அவனது குறுவாளே பாய்ந்திருந்ததால் அதை எரிச்சலுடன் நோக்கினான். அதன் விளைவாக, “ஆனால் என்ன?” என்று வினவினான் எரிச்சல் குரலிலும் ஒலிக்க.
“உன்னிடம் வீரம் இருக்கிறது. வேகம் இருக்கிறது. விவேகம் இல்லை” என்றான் இதயகுமாரன் வருத்தம் தொனித்த குரலில்.
“என் விவேகத்துக்கு என்ன குறைவு?” இளையவேளின் குரலில் கோபம் மறைந்துவிட்டது. வியப்பு ஒலித்தது.
“என் வலது கையில் உனது குறுவாள் பாய்ந்தவுடன் நீ செய்திருக்கவேண்டியது அரசகுமாரியின் கழுத்தில் வாளை அழுத்தும் அலுவலல்ல. என் இடது கையையும் செயலற்றுப் போகச் செய்திருக்க வேண்டும்” என்ற இதயகுமாரன்
“அர்ஜுனனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று வினவினான்.
“எந்த அர்ஜுனன்?”
“பீமன் தம்பி.”
“அவனுக்குகென்ன இப்பொழுது?”
“அவனுக்கு ஸவ்யஸாசி என்று ஒரு பெயர்.”
“எந்த பெயராயிருந்தால் எனக்கென்ன?”
“இரண்டு கையாலும் வில்லை விடும் திறமையிருந்ததால் அவனுக்கு அந்த பெயர். நானும் ஒரு வகையில்…”
“அர்ஜுனன் போலிருக்கிறது?”-இளையவேளின் கேள்வியில் இகழ்ச்சி ஒலித்தது. வரும்
“தற்பெருமை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் என் குறுவாளை நான் இடது கையால் வீசியதை நீயே பார்த்தாய். இரண்டு கையாலும் நான் போரிட முடியும்” என்று சுட்டிக் காட்டிய இதயகுமாரன், “ஆகையால் நீ என் இடது கையையும்
பயனற்றதாக செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அரசகுமாரியைத் தொட்டாய்…” என்று கூறினான். இதைச் சொன்ன போது இதயகுமாரன் குரலில் லேசாகச் சினமும் ஒலித்தது.
இளையவேள் இந்தக் குற்றச்சாட்டைப் பற்றி இலட்சியம் செய்யவில்லை. “கலியுக அர்ஜுனரே! நீரும் ஒரு தவறு செய்திருக்கிறீர்” என்றான் சினத்துடன்.
“என்ன தவறு இளையவேள்?” என்று கேட்டான் இதயகுமாரன்.
“போகுமிடங்களிளெல்லாம் அர்ஜுனன் ஒரு பெண்ணை அபகரிப்பதாகப் புராணம் சொல்கிறது. நீயும் அரசகுமாரியை என் வீரர்கள் எதிரில் கவர்ந்து சென்றாய். ஆனால், இங்கு ஒரு இளையவேள் இருப்பானென்பதை நீ உணரவில்லை.
அதுமட்டுமல்ல. இந்த இளையவேளுக்கு அரசகுமாரி முறைப்பெண் என்பதையும் நீ உணரவில்லை. உணர்ந்திருந்தால் அரசகுமாரியை நான் தொட்டதைத் தவறாக நினைத்திருக்க மாட்டாய்” என்றான் இளையவேள்.
அதுவரை ஏற்பட்ட துரித நிகழ்ச்சிகளையும், பிறகு நிகழ்ந்த அந்த இருவர் உரையாடலையும் கவனித்துக் கொண்டு ஒரு புறமாக ஒதுங்கி நின்றுவிட்ட அரசகுமாரி, இளையவேளை எரிக்கும் கண்களுடன் நோக்கினாள்.
“முறைப்பெண்கள் எல்லோரையும் முறையுள்ளவர்கள் மணம் புரிந்துகொண்டதாக சரித்திரமில்லை. தவிர, திருமணத்திற்கு முன்பு நீ என்னைத் தொட்டது தவறு. அதற்கே உனக்கு மரணதண்டனை உண்டு” என்று சீறவும் செய்தாள்.
எந்த மனிதனும், எப்பேர்ப்பட்ட வீரனும், சில வேளைகளில் அசட்டுத்தனத்தைக் காட்டுகிறான் என்பதை இளையவேள் அப்பொழுது நிரூபித்தான். “நீ இவனிடம் மயங்கியிருக்கிறாய்?” என்று கூறினான் இளையவேள் ஆத்திரத்துடன்.
இந்த இடத்தில் இடைபுகுந்த இதயகுமாரன், “இளையவேள்! அரசகுமாரியைப் பற்றிப் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது” என்று எச்சரித்தான். வந்த இந்த நாட்டு சேனாதிபதியிடம் பேசும்போது நீயும் சிந்தித்துப் பேசுவது
நல்லது” என்று மறைமுகமாகத்தனது பதவியை உணர்த்தினான் இளையவேள்.
இதயகுமாரன் புருவங்கள் வியப்புடன் மேலே எழுந்தன. “நீயா சேரர் சேனாதிபதி” என்று வினவினான் வியப்பின் சாயை குரலில் படர.
“ஆம். மன்னரால் நியமிக்கப்பட்டவன்” என்றான் இளையவேள்.
“மன்னருக்கு எனது அனுதாபங்கள்” என்றான் இதயகுமாரன்.
“இதில் அனுதாபத்திற்கு என்ன இருக்கிறது?” இளையவேளின் கேள்வியில் சினமிருந்தது.
“அவசரக்குடுக்கையான சேனாதிபதியை வைத்துக் கொண்டு சேரமன்னர் என்ன செய்யப் போகிறாரோ?” என்று அனுதாபங் காட்டிய இதயகுமாரன், மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் இளையவேளை அணுகி அவன் கையில்
தைத்திருந்த குறுவாளைப் பிடுங்கினான். அரசகுமாரியை நோக்கி “அரசகுமாரி! நீங்கள் அந்தச் சிலையிடம் சென்று அதன் பின்புறத்திலுள்ள சேலையில் சிறிது கிழித்துக்கொண்டு வாருங்கள். அதற்கு இளையவேளின் குறுவாளையே
எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி குறுவாளை அவளிடம் நீட்டினான். அந்தக் குறுவாளை எடுத்துக்கொண்டு அழகு சிலையை நோக்கிச் செல்ல முயன்ற அரசகுமாரியைப் பார்த்து “அந்தச் சிலையின் மார்பில் புலித்தலைபோல்
மச்சம் இருக்கிறதா என்றும் பார்த்து வாருங்கள்” என்றும் சொன்னான்.
அரசகுமாரி அவனையும் பார்த்து, தனது கையில் திணிக்கப்பட்ட இளைய வேளின் குறுவாளையும் பார்த்தாள். பிறகு இளையவேளை நோக்கினாள் ஒரு வினாடி. அடுத்து ஏதும் பேசாமல் சிலையை நோக்கி நடந்தாள். தன் உடலால்
சிலையை மறைத்துக்கொண்டு அதன் மார்புத் துணியை மெல்ல விலக்கி நோக்கினாள். தன்னை நோக்கிச் சீறுவது போன்ற புலிமுக மச்சமொன்று அதில் இருந்ததால் ஒரு வினாடி பிரமை பிடித்து நின்றாலும் அடுத்த விநாடி இதை
மறைத்துக் கொண்டு சீலையால் சிலையின் மார்பையும் மூடிவிட்டு, அதன் பின்புறத்தில் தொங்கிய சிலையின் ஒரு சிறுபகுதியைக் குறுவாளால் கிழித்து அதைக் கொண்டுவந்து இதயகுமாரனிடம் கொடுக்கவே, அவன் அதைக்
கொண்டு இளையவேளின் கையைக் கட்டி இரத்தத்தை நிறுத்தினான்.
இந்தப் பணிவிடையெல்லாம் இளையவேளுக்குப் பரம விசித்திரமாயிருந்தாலும் இதயகுமாரன் சொற்படி இளவரசி நடந்துகொண்டது அவனுக்கு வேப்பங்காயாயிருந்த நால், “உன் கைக்காயத்துக்கு என்ன செய்வதாக உத்தேசம்?” என்று
வினவினான்.
“என் கையில் குறுவாள் அதிகமாக ஊடுருவவில்லை, லேசாகத்தான் அழுந்தியிருக்கிறது. அதைக் கையாலேயே அழுத்தி ரத்தத்தை நிறுத்திவிட்டேன். அதிக ரத்தச் சேதமில்லாததால் ஆபத்து ஏதுமில்லை” என்று விளக்கிய இதயகுமாரன்,
தனது வலது கையைக் காட்டினான். ரத்தம் அனேகமாக நின்றிருந்ததையும் சிறிது கசிவைத் தவிர, வேறு எதுவுமில்லாததையும் கவனித்த இளையவேள், “அடுத்து நீ என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவினான்.
இதயகுமாரன் ஒரு விநாடி சிந்தித்தான். “நமது விரோதத்தை வாட்போரால் வேறு ஒரு சமயத்தில் தீர்த்துக்கொள்வோம். முதலில் நீ இங்கு எப்படி வந்தாய்? இந்த வழியை உனக்குக் காட்டிக் கொடுத்தது யார்?” என்று விசாரித்தான்.
“இரத்தினக் கொல்லன் அச்சுதன்” என்று மரியாதையின்றிப் பேசினான் இளையவேள்.
“அவரா?”.
“ஆம். கதவு திறக்காததால் கதவை உடைத்து விட ஏற்பாடு செய்தேன். அந்தச் சமயத்தில் கையில் ஒரு பெரிய இரத்தினத்துடனும், சாமணத்துடனும் அச்சுதன் கதவைத் திறந்தான். அவனுடன் வேலை செய்யும் இன்னொரு இரத்தினப்
பணியாளன் பாயில் உட்கார்ந்து குனிந்து இரத்தின மொன்றைப் பரீட்சை செய்துகொண்டிருந்தான். அவனிடம் எனக்கு வேலையில்லாததால் அச்சுதனை மிரட்டி இந்த இரகசிய வழியின் மர்மத்தைக் கக்கவைத்தேன். இங்கு வந்ததும் இங்கு
ஒரு கிழப்பைத்தியம் வழி மறித்தான். அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவன் மடியிலிருந்த சாவியைப் பிடுங்கி இக்கதவைத் திறந்து வந்தேன். அப்பொழுது தான் நீ சிலையைத் துகிலுரிய முயன்று கொண்டிருந்தாய்” என்று
விளக்கினான் இளையவேள். அவன் குரலில் அவன் சாதனை பற்றிய பெருமை விரிந்து கிடந்தது.
இதயகுமாரன் இந்த விவரத்தைக் கேட்டதால் சாந்திக்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டான்.
“நல்லவேளை, இவன் அவரை இரத்தினப் பணியாளனாக நினைத்து விட்டான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு “சேனாதிபதி! தாங்கள் இனி வந்த வழி செல்லலாம். நான் தடை செய்ய மாட்டேன்” என்று கூறினான்.
இளையவேளின் கண்களில் சினம் துளிர்த்தது. “அரச குமாரி?” என்று விசாரித்தான் இளையவேள்.
“இன்னும் சிறிதுநேரம் அவர்களுக்கு இங்கு அலுவல் இருக்கிறது. அவர்களுக்கு எந்த ஆபத்துமில்லை. தாங்கள் சென்று வாருங்கள்” என்ற இதயகுமாரன், அறைக்கதவைத் திறந்து விட்டான்.
இளையவேள் வெளியே செல்ல மறுத்து அரசகுமாரி என்னுடன் வந்தாலொழிய இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்” என்றான்.
அந்தச் சமயத்தில் கிழவனின் வெறிபிடித்த சிரிப்பு மீண்டும் கேட்டது. கதவை அடைத்துக்கொண்டு அவன் நின்றிருந்தான். அவன் கண்களில் வெறியின் சாயை பூர்ணமாக விரவிக்கிடந்தது. அவன் வெறிபிடித்த பார்வை அந்த
அறையை ஒருமுறை அளவெடுத்தது. கடைசியாக இளையவேள்மீது நிலைத்தது. அவன் கையிலிருந்த கட்டைப் பார்த்ததும் இழவன் வெறியுடன் சீறினான். கூனியிருந்த உடலுடன் இளையவேள்மீது வெகுவேகமாகப் பாய்ந்து அவன் குரல்
வளையைத் தனது விரல்களால் பிடித்தான். “ராஜமாதாவின் சீலையை யார் அறுத்தது? அது உன் கைக்கு எப்படி வந்தது?” என்று கூறினான்.
கிழவன் கையில் யாருக்குமில்லாத பலம் இருந்தது. அவன் பிடியால் ஸ்மரணை தப்பியது சேர சேனாதிபதிக்கு. அவன் கால்கள் துவண்டன. மெள்ள மெள்ள தரையை நோக்கி இறங்கினான், சாய்ந்தான். கிழவன் அடுத்து இதயகுமாரன்மீது
தனது வெறிக்கண்களைத் திருப்பினான். மீண்டும் சிலை மீது கண்களை ஓடவிட்டான். சிலையைப் பார்த்தவன் சிலையாகவே ஆகிவிட்டான். ஸ்தம்பித்து நின்றுவிட்டான் பல விநாடிகள். பிறகு மண்டியிட்டு நரைத்ததலையால் தரையைத்
தொட்டு வணங்கினான்.
இதயகுமாரனும் இளவரசியும் சிலையை நோக்கினார்கள். சிலைக்கு இருபுறத்திலும் இரத்தினக் கொல்லரும், இதயகுமாரனை முதலில் அறிமுகப்படுத்திய அந்தப் புதிய மனிதரும் நின்றிருந்தார்கள்.
“அவன் இறந்துவிட்டானா?” என்று கவலையுடன் கேட்டார் அந்த மனிதர்.
‘இல்லை மன்னவா. மூர்ச்சையடைந்திருக்கிறான்” என்றான் கிழ வெறியன்.
அவரை ‘மன்னவா!” என்று கிழவன் அழைத்ததும் அரசகுமாரி சட்டென்று அவரை ஏறெடுத்து நோக்கினாள் தனது விழிகளால். அவரை வணங்குமாறு இதயகுமாரன் இரத்தினக்கொல்லன் அறையில் தனக்கு ஆணையிட்டது
அப்பொழுது அவள் நினைவுக்கு வரவே “இவர் யார்?” எந்த நாட்டு மன்னர்?” என்று வினவிக்கொண்டாள் தனக்குள்.
அவள் முகத்தில் விரிந்த குழப்பத்தை அச்சுதக்கொல்லர் கவனித்தார். “குழந்தாய்! நாம் இப்பொழுது தமிழக வரலாற்றின் முக்கியப் பகுதியின் வாயிலில் நிற்கிறோம். உன்னைச் சூழ்ந்துள்ள பெரிய மர்மம் இன்று இந்த அறையில்
அவிழ்க்கப்படுகிறது” என்றார் உணர்ச்சி மிகுந்த குரலில். “நீ சேரன் புதல்வியல்ல” என்று தமது கதையைத் தொடங்கினார்.

Previous articleMohana Silai Ch 6 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
Next articleMohana Silai Ch 8 | Mohana Silai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here